இடுப்பு எலும்பு முறிவு (Hip Fracture) என்பது ஒரு பாரதூரமான பிரச்சனை. இது பொதுவாக வயதானவர்களிடையேதான் அதிகம் காணப்படுகிறது.
பொதுவாக 65 வயது முதல் 80 வயது வரையானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிலும் பெண்கள் பாதிப்படைவது அதிகம்.
விழுகைகளே அத்தகைய எலும்பு உடைவுகளுக்கு பெரும்பாலும் காரணமாகிறன.
இடுப்பு எலும்பு உடைவு எனப் பொதுவாகச் சொன்னாலும் உண்மையில் உடைவது தொடை எலும்பின் மேற் பகுதிதான். இடுப்பு மூட்டுப் பகுதிக்குள் இருக்கும் எலும்பின் பகுதியே அதிகம் உடைவதுண்டு.
முதியவர்களில் இது அதிகம் வருவதற்குக் காரணம் அவர்களது எலும்புகள் நலிவடைந்திருப்பதே. அவ்வாறு எலும்பு நலிவடைவதை ஒஸ்டியோபொரோசிஸ் osteoporosis என்பார்கள்.
ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய எனது முன்னைய பதிவைப் பார்க்க
பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்
முதுமையில் விழுகைகள் அதிகமாவதற்கு காரணங்கள் என்ன?
- பலவிதமான மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்,
- முதுமையின் பார்வைக் குறைபாடு,
- அவர்கள் சமநிலையைப் பேணுவதில் படும் சிரமம்
ஆகியனவே அவர்களது விழுகைகளுக்கு காரணமாகின்றன.
கடுமையான வலி ஏற்படுவதும் அவர்களது நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதுமே இடுப்பு எலும்பு முறிவின் முக்கிய பாதிப்புகளாகும்.
எத்தகைய அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதை இடுப்பு எலும்பு உடைவு எனச் சந்தேகப்பட முடியும்.
- இடுப்புபு் பகுதியில் வீக்கமும் கண்டலும் தோன்றலாம்
- இடுப்பின் அந்தப் பகுதியால் உங்கள் உடற் பாரத்தை சுமக்க முடியாததால் எழுந்து நிற்க முடியாது போய்விடும்.
- நடக்க முடியாது போகும்
- இடுப்பில் மட்டுமின்றி அந்தப் பக்க காலிலும் வலி பரவலாம்.
- ஒருங்கே வைத்துப் பார்த்தால் அந்தக் கால் மற்றக் காலை விடக் கட்டையானது போலத் தோற்றமிளிக்கும்.
உடைவினால் படுக்கையில் கிடக்க நேர்ந்தால் படுக்கைப் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீர்த் தொற்று நோய், நியூமோனியா போன்ற பிரச்சனைகள் தொடரலாம்.
மிக ஆபத்தானது குருதி நாளங்களில் இரத்தம் (Deep Vein thrombosis) கட்டிபடுவதாகும்.
சிகிச்சையாக பெரும்பாலும் சத்திரசிகிச்சையே தேவைப்படும் என்பதால் விழுந்து விடாமல் தங்களைப் பாதுகாக்க முதியவர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக இப்படத்தைப் பார்க்கவும்.
விழாமல் பாதுகாப்பாக இருப்பது பற்றி மேலும் அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்
மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?
0.0.0.0.0.0