Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வெற்றிலை’ Category

>”ஐயாவுக்கு வாயிக்கை ஒரு புண். ஒரு மாதமா நாட்டு வைத்தியம் செய்விச்சனாங்கள். ‘மாத்தித்தாறன்’ எண்டு அவர் சொன்னவர். மாறயில்லை. வரவரப் பெருக்குது… உங்களிட்டைக் காட்டிப் பார்க்கலாம் என்று கூட்டிக் கொண்ட வந்தனான்”

வயோதிபரோடு வந்த, அவரது நடுத்தர வயது மகன் கூறினார்.

“வாயை திறவுங்கோ பாப்பம்”

“வாயுக்குள்ளை வெத்திலை. கொப்புளிச்சுப் போட்டு வர்றன்”

டாக்டரிடம் வாயைக் காட்ட வரும்போது கூட வெற்றிலை போட்ட வாயைக் கழுவாது வருமளவிற்கு வெற்றிலை அவரை அடிமையாக்கி இருக்கிறது!

வெற்றிலை போடுபவராக இருப்பதால், அந்தப் புண் புற்று நோயாக இருக்குமோ எனச் சந்தேகம் வந்தது.

வாயைப் பரிசோதித்துப் பார்த்தபோது, அது புற்று நோய் தான் என்பது நிச்சயமாயிற்று.

வெற்றிலை புகையிலை சப்புபவர்கள் புகை பிடிப்பவர்கள், ஆகியோரே பெரும்பாலும் வாய்ப் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

“கனகாலமாக சொக்கின்ரை உள்பக்கத்திலை பால் ஆடை படர்ந்த மாதிரி வெள்ளையாகக் கிடந்தது. பிறகுதான் புண்ணாகினது…நோ வலி ஒண்டும் இருக்காத படியால் கவனியாமல் விட்டிட்டின். பெருகத் தொடங்கத்தான் நாட்டு வைத்தியரட்டைக் காட்டினம்.”

உட்தோல் வெண்மையாக மாறியதும், நோ அற்ற புண் என்பதும் புற்று நோயைக் குறிக்கும் அறிகுறிகள் என்பதை அறியாதது அவர்கள் குற்றம் என்று சொல்ல முடியாது.

ஆனால் இதை அறிந்திருக்க வேண்டிய அந்த வைத்தியர், நோயாளிக்கு நோயின் தன்மை பற்றிக்கூறாது ஒரு மாதத்தைக் கடத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என என் மனம் கொதித்தது.

ஆயினும் காலங்கடந்து விடவில்லை. ‘கரண்ட் பிடிக்கிறது’ என்று பொதுவாகச் சொல்லப்படும் ‘ரேடியம் திரப்பி’ (Raditherapy)செய்தால் நோயைக் குணமாக்கலாம்.

நோயைப் பற்றி அவர்களுக்கு விளங்கப்படுத்தி சிகிச்சையின், அதுவும் உடனடிச் சிகிச்சையின் அவசியம் பற்றி அவர்களுக்குப் புரிய வைத்தேன். அறிமுகக் கடிதங்களையும், வைத்திய அறிக்கைகளையும் கொடுத்து மஹரகம புற்றுநோய் வைத்திய நிபுணரிடம் செல்ல வேண்டிய ஒழுங்குகளையும் செய்து கொடுத்து விட்டு நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன்.

ஒரு சில மாதங்களின் பின்

உப்பி ஊதி ஒரு பக்கம் அழுகிய பூசணிக்காய் போன்ற முகத்துடன் வந்த அவரை அடையாளங் காண எனக்கு வெகு நேரம் பிடித்தது.

“ஐயா, சரியான வேதினை, தாங்க முடியவில்லை. புண் பெருத்துச் சொக்கு ஓட்டையாய் போச்சு… சாப்பிட முடியல்ல.. சாப்பிட்டால் தண்ணீர் குடிச்சால் புண்ணுக்காலை வெளியிலை வருகுது…” அனுக்கத்துடன் கூறினார்.

பசித்தும் சாப்பிட விடாத புண்ணாலும், நோயின் உடல் உருக்கும் தன்மையினாலும் ஒட்டி உலர்ந்து எலும்புந் தோலுமாக மாறிவிட்டார்.

அருகில் சென்று புண்ணைக் கூர்ந்து பார்த்தேன்.

ஏதோ நெளிவது போலிருந்தது.

புழுக்கள்!!!

புண்ணைக் கவனியாது விட்டபடியால் ஈக்கள் மொய்த்துப் புழுப்பிடித்து விட்டது.

பாம்பு போல நெளிந்து நெளிந்து புண்ணைக் குடைந்து கொண்டிருந்தன.

வயோதிபர் வேதனையில் துடித்தார் என்மனம் கொதித்தது.

“ஐயாவை மஹரகமைக்கு கொண்டுபோய் வைத்தியம் செய்ய இல்லையே? நான் கடிதம் தந்தனான்தானே.”

“இப்பத்தைய நிலைமையிலை மஹரகமைக்கு எப்படிப் போறது….”

உண்மைதான்!

இச்சம்பவம் நடந்த 90 களில் போர் உக்கிரமமாக நடந்து கொண்டிருந்தது. கொழும்புப் பிரயாணம் உயிராபத்தான காலம். கிளாலிக் கடலை படகுகள் மூலம்தான் கடக்க வேண்டும். கடற்படையினரின் தாக்குதல் எப்பொழுது உயிரைக் குடிக்கும் என்று சொல்ல முடியாது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பயணம் பண்ண வேண்டும்.

அத்துடன் இனத் துவேசம் மோசமாக இருந்தது.

எனவே அவர் சொல்வதில் சற்று யதார்த்தமான உண்மை இருந்தது. இருந்தபோதும் மருத்துவத் தேவைகளுக்காவும் சொந்தத் தேவைகளுக்காவும் தென்பகுதி சென்று வருவதும் நடந்து கொண்டிருந்தது.

தொடர்ந்த அவரது பேச்சுத்தான் எனது கோபத்தைக் கிளறியது.

”  … இளம் ஆள் எண்டாலும் பரவாயில்லை. வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைப் பெரிசாகக் காணப் போறம் எண்டு பேசாமல் விட்டிட்டம்…”

“வயது போனால், கஷ்டப்பட்டு, வேதினைப்பட்டு சாகவிட்டிடுறதே..”

பொறுக்க முடியாமல் கோபத்தில் வெடித்தேன்.

வயது போனவர்தானே என்ற காரணத்தால், பெற்ற தந்தையின் நோய்க்கு வேண்டிய வைத்தியம் செய்ய முயற்சிக்காமல் நோயினால் துடித்து, வருந்தி, அணு அணுவாகச் சாகவிடும் இவர்கள் காசியப்பனுக்கு எந்தவிதத்தில் சளைத்தவர்கள்.

Read Full Post »