Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வெளிநாட்டு மோகம்’ Category

எமது நாட்டில் தமிழர்களின் இனவிகிதாசாரம் படிப்படியாக குறைந்து வருவது ஏன்
நாம் செய்ய வேண்டியவை எவை?

எமது நாட்டில் தமிழர்களின் இனவிகிதாசாரம் படிப்படியாக குறைந்து வருவது பற்றி இன்றைய தினக்குரலின் ‘குரல்’ பத்தி பேசுகிறது.

முக்கியமான விடயம் தான். ஆனால் அதற்கு கட்டுரையாளர் கொடுக்கும் ஒரே காரணம் எமது பிறப்பு விகிதம் குறைந்து வருவதே ஆகும்.

அதில் உண்மை இல்லாமல் இல்லை. பல படித்த வசதியான குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே வழித்தோன்றல்களாக இருக்கிறார்கள்.

மற்றொரு காரணத்தை அரசியல் வாதிகள் சுயநலத்திற்காக வெளிப்படுத்துவதில்லை. கட்டுரை ஆசிரியர் குறிப்பிடாததற்கு காரணம் தெரியவில்லை .

ஈழத் தமிழ் கிராமங்கள் பலவற்றை பார்த்தால் அங்கு பல வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன. அல்லது வெளியூர் மக்கள் குடியிருக்கிறார்கள்.

காரணம் வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாடு சென்று விட்டதும் அந்நாட்டு பிரஜைகளாகி விட்டதுமே ஆகும்.

ஆம் வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது.

இளம் பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையே வேணும் என்கிறார்கள்.

இளைஞர்கள் பல வழிகளிலும் வெளிநாடு செல்லும் இலட்சியத்தோடு இயங்கிறார்கள்.

பல வயோதிபர்கள் கூட பிள்ளைகளோடு இணைந்து கொள்ள வெளிநாடுகளுக்கு மூட்டை கட்டுகிறார்கள்.

இந்த மனோபாவத்தை களைய வைப்பது இலேசான காரியம் அல்ல.

உள்நாட்டில் வாழத் தூண்ட வேண்டும். அதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

இதற்கு அரசியல் வாதிகள் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

அதற்கு முன்னோடி யாக இங்கு தொழில் வாய்ப்புகள் பெருக வேண்டும். உள்ளூர் கட்டுமானங்களும் வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் அரசுகளுடன் ஒத்துழைப்பது மட்டுமின்றி அவற்றை பெறுவதற்கு முழு முயற்சிகள் செய்ய வேண்டும். நிறைவேற முடியாத வெற்று இலட்சிங்களைப் பேசி மக்களை ஏய்ப்பதை நிறுத்த வேண்டும்.

அரசுகளுடன் இணைந்தாலும் பரவாயில்லை. அடுத்த தேர்தலில் அவர்கள் தோற்றாலும் நமது சமூகத்திற்கு தேவையானதை செய்தோம் என மன நிறைவு கொள்ளலாம்.

இந்த வெளிநாட்டு மோகத்தை களையாவிட்டால்
இனவிகிதாசாரம் குறைவது மட்டுமின்றி குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு
நிலம் பறிபோவதைத் தடுக்கவும் முடியாத இக்கட்டு ஏற்படும்.

எனது பார்வையில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்துகிறேன்.

0.00.0

 

Read Full Post »