>வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும். இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.
பாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.
என்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.
இவை ஒரு வைரஸ் நோயாகும். Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.
எங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.
ஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.
16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.
இதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.
அவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் ஒரு வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.
மற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.
இதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.
பிள்ளைகளிலேயே அதிகம் காணப்படும். ஆயினும் எந்த வயதிலும் தோன்றலாம்.
சிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.
இவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.
ஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.
எந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.
ஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.
சலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.
மற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.
அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.
வைரஸ் வோர்ட் பற்றிய எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்
மோகத்தால் வந்ததா? – வைரஸ் வோர்ட் (Virus Wart)
0.0.0.0.0.0