Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஸ்டெம் செல்’ Category

சூலகம் உண்டு கருமுட்டையில்லை
கருப்பையுண்டு குழந்தைப் பேறில்லை
ஏங்கித் துடிப்போர் கண்ணீர் அகற்ற
வாடகைத் தாய்மார் வேண்டியதில்லை
உங்கள் முட்டையில்
உங்கள் வாரிசு
உங்கள் வயிற்றில் உருவாகும்;

Mouse-pups-created-by-tra-010

இவ் இனிய செய்தி….
எப்போது?

“சுண்டெலிக் குஞ்சுகளை  ஸ்டெம் செல்சிலிருந்து (stem cells – மூலக்கலம் மூல உயிரணு) உருவாக்குவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளார்கள்’ என்ற செய்தியை ஊடகங்கள் வழி நீங்கள் அறிந்திருக்கக்; கூடும். குளோனிங், ஸ்டெம் செல்ஸ் போன்ற இன்றைய அறிவியல் பாய்ச்சல்களுடன் பரிச்சயம் உள்ளவர்கள் கூட பத்தோடு பதினொன்றென அசண்டையாக ஒதுக்கக் கூடிய செய்தியல்ல இது.

ஸ்டெம் செல் என்றால் என்ன?

எமது உடலானது கோடிக்கணக்கான கலங்களால் ஆனாது. மனிதனது மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் அவ்வாறே. உதாரணமாக 200 வகையான சிறப்பான பணிகளை ஆற்றும் கலங்கள் மனித உடலில் உள்ளன. சருமக் கலங்கள், எலும்புக் கலங்கள், நரம்புக் கலங்கள், ஈரல் கலங்கள், நோயெதிர்புக் கலங்கள் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.Mouse_embryonic_stem_cells

இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான சிறப்பியல்புகள் உள்ளன. அவ்வாறே தனித்தனியான விசேட பணிகளும் உள்ளன. நரம்புகக் கலங்கள் செய்திகளைக் கடத்துகின்றன. நோயெதிர்புக் கலங்கள் நோயைக் கொண்டு வரும் கிருமிகளை அழிக்கின்றன. அதேபோல சூலகத்தில் உள்ள கலங்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன.

ஸ்டெம் செல்கள் வேறொரு விதத்தில் விதந்து குறிப்பிட வேண்டிய கலங்கள் ஆகும். இவை நிரந்தரமாக தனியொரு பணிக்கானவை அல்ல. ஆனால் பல்வேறு வகைப்பட்ட கலங்களாக வேறுபாடடைந்து பெருகும் ஆற்றல் பெற்றவை. அதாவது இவை ஈரல் கலங்களாகவோ, எலும்புக் கலங்களாகவே அல்லது வேறெந்தக் கலங்களாகவும் மாற்றமுற்று பெருகக் கூடியவை.
பொதுவாக, ஸ்டெம் செல்கள் இரண்டு முக்கிய ஆதாரங்களில் இருந்து வருகின்றன. இவை பற்றி பின்னர் பார்ப்போம்.

ஸ்டெம் செல்லிலிருந்து கரு முட்டை

விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்லிலிருந்து முதலில் சுண்டெலியின் கரு முட்டையை (நபப) உருவாக்கினார்கள். அதனை ஆண் சுண்டெலியின் விந்தணுவுடன் (ளுpநசஅ) இணைத்து ஆரோக்கியமான சுண்டெலிக் குஞ்சுகளைப் பெற்றெடுக்க வைத்தார்கள்.

250px-Human_embryonic_stem_cell_colony_phaseKyoto University  யில் பணியாற்றும் Mitinori Saitou தலைமையிலான ஜப்பானிய விஞ்ஞானிகளே இந்த புதிய சாதனையைச் செய்தவர்கள் ஆவர். மலட்டுத்தன்மை பற்றிய நுண் அறிவு, நெறிமுறைகளுடன் முரண்படாத தன்மை, இயற்கையுடன் இசைவான நவீன சிகிச்சை முறைகள் போன்ற விடயங்களில் ஆய்வாளர்களுக்கு புதிய எல்லைகளை இந்த ஆய்வு திறந்து விட்டிருக்கிறது.

முட்டை எவ்வாறு உருவாகி வளர்கிறது என்பதன் சூட்சுமங்களைக் கண்டறிந்து குழந்தையில்லா பெண்களில் இதனைப் பயன்படுத்த முடியும். ஸ்டெம் செல்களிலிருந்து அவர்களுக்கான முட்டைகளை உருவாக்கலாம். அதிலிருந்து அவர்களது பாரம்பரிய அம்சங்களுடன், அவர்களது ஊனும் உடலும் போன்ற சொந்தக் குழந்தைகளை உருவாக்குவதற்கான வழிவகைகளை புதிய தொழில் நுட்பங்களுடன் செயற்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

Mitinori Saitou  தலைமையிலான குழுவினர் சுண்டெலியிலிருந்து கலங்களை எடுத்து அவற்றை மரபியல் ரீதியாக மீள் நிரலாக்கம் (Reprogramme) செய்ததன் மூலம், அதனை முட்டையின் முன்னோடிக் கலங்களாக (egg precursor cells) மாற்றினர். பெண் சுண்டெலியின் பொருத்தமான உடற்கலங்களுடன் அவற்றைக் கலப்பதன் மூலம் மாற்றியமைக்கபட்ட சூலகங்களை உருவாக்கினர்.

சுண்டெலியின் உடலிற்குள் இவற்றை உட்செலுத்தியபோது காலகதியில் இவை முட்டைகளாகப் பரிமணித்தன. இவ்வாறு கிடைத்த முட்டைகளை பிரித்தெடுத்து செயற்கை முறையில் ஆய்வகத்தில் கருத்தரிக்க  (invitro fertilisation IVF) வைத்தனர். டெஸ்ட் ரியூப் முறை என்போமே, அது போலக் கருத்தரிப்பு நிகழ்த்தப்பட்டது.

இதன் மூலம் பெற்றெடுத்த சுண்டெலிக் குஞ்சுகள் நல் ஆரோக்கியமானவை.

புதிய முயற்சியல்ல

இவ்வாறு ஸ்டெம் செல்சிலிருந்து முட்டையை உருவாக்கும் முயற்சி இப்பொழுதுதான் புத்தம் புதிதாகச் செய்யப்பட்டது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் ஏற்கனவே 2003ம் ஆண்டளவில் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் (University of Pennsylvania) செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அது குட்டியைப் பெற வைக்கும் அளவிற்கு செல்லவில்லை.

இப்பொழுது செய்யப்பட்ட செயன்முறையின் வளர்ச்சியானது பாலூட்டிகளில் மட்டுமின்றி மனிதர்களிலும் பெண்களின் கரு ஆற்றலை உடலுக்கு வெளியே வளர்த்து உள்ளே வைக்கும் பொறிமுறைக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்த ஆராச்சிய்க்கு சைட்டு குழவினர் இரண்டு வகையான ஸ்டெம் செல்ஸ்களைப் (மூலக் கலங்கள்) பயன்படுத்தினர்.

  1. முதலாவது கருவுரு அல்லது முளையம் என்று சொல்லப்படுவதிலிருந்து பெறப்பட்ட ஆதி ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) ஆகும். இவை உடலின் எந்தப் பகுதியின் கலங்களாகவும் மாற்றமடையக் கூடியவையாகும்.
  2. தூண்டுதலால் பெறப்பட்ட பன்முறை ஆற்றலுள்ள ஸ்டெம் செல்ஸ்induced pluripotent stem cells ஆகும். உதாரணமாக சருமத்திலிருந்து பெறப்பட்ட கலத்தை மறுநிரலாக்கம் செய்து முளையஸ்டெம் செல்களின் நிலைக்கு மாற்றிப் பெறப்படுவை.

குருதிப் புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை 1968 ஆம் ஆண்டு முதலில் செய்யப்பட்டது. இதற்கும் அடிப்படை ஸ்டெம் செல்களே. நீரிழிவு, இருதய நோய்களில் இதைப் பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. பக்டிரியா பங்கஸ் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் ஏற்கனவே ஸ்டெம் செல் பயன்படுகிறது

ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவும்

இதே கியோட்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவை ஒரு வருடத்திற்கு முன்னரே உருவாக்கியுள்ளார்கள். அதனை இயற்கையாக எலியிலிருந்து பெறப்பட்ட முட்டையுடன் செயற்கை முறையில் கருக்கட்டச் செய்து, எலிகளை உருவாக்கியுள்ளனர்.

ஒப்பீட்டளவில் ஸ்டெம் செல்லிருந்து விந்து (Sperm) உருவாக்கல் சுலபமானது. ஏனெனில் விந்தணுவானது எளிமையான கலங்கள் ஆகும். ஆனால் முட்டையினது கலம் (egg) மிகவும் சிக்கலானவை. எனவேதான் இப்புதிய செயன்முறையானது அசாதாரணமான வெற்றியாகக் கருதப்படுகிறது.

பெறுபேறுகளின் விகிதாசாரம் குறைந்தளவே

இருந்தபோதும் ஸ்டெம் செல்லிருந்து பெறப்பட்ட முட்டையிலிருந்து ஆரோக்கியமான சுண்டெலிகளை உருவாக்கிய விகிதாசாரம் விகிதம் குறைவாக இருந்தது. சாதாரண முட்டையிலிருந்து 17.9% விகிதம் உருவாக்க முடிந்தபோது ஸ்டெம் செல் முட்டையிலிருந்து 3.9% சதவிகிதமே உருவாக்க முடிந்தது. ஆனாலும் இதை ஒரு பின்னடைவாகக் கருத முடியாது

குழந்தைப் பேறற்ற பெண்களில் முட்டைகளை உருவாக்கக் கூடிய இம்முயற்சி மிக வரவேற்கத்தக்கது. அறிவியல் பாய்ச்சலுடன் கூடிய மிக முன்னேற்றகரமான தொழில் நுட்ப வளர்ச்சி இதுவாகும். இந்தச் செயல்முறை விகிதாசார ரீதியில் பெரு வெற்றியல்ல என்ற போதும், குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறந்து வளர்ந்தன என்பதும், அவை வளர்ந்த பின்னர் மலட்டுத்தன்மையின்றி கருவளம் கொண்டவையாக இருந்தன என்பதும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும்.

புதிய எல்லைகள் வகுக்கப்படும்

நீண்ட காலம் எடுப்பதும் அர்ப்பணிப்புடன் கூடியதுமான இச்செயன்முறை, புத்தறிவியல் ரீதியில் ஒரு முக்கியமான மைற்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் இவை மேலும் முன்னேற்றம் அடைந்து மனிதர்களில் களஆய்வு ரீதியாகச் செய்யப்படுவதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஸ்டெம் செல்களிலிருந்து ஆய்வகத்தில் முட்டைகளை உருவாக்க முடிவதானது மலட்டுத்தன்மைக்கான காரணங்களைப் புரிந்து கொள்ளவும் புதிய சிகிச்சைமுறைகளை அறிமுகப்படுத்தவும் உதவும். அதற்கு மேலாக முட்டையின் வளர்ச்சி, அவை முதிர்ச்சியடையும் விதம், ஏன் அவை சிலரில் தவறாக உருவாகின்றன, அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி போன்ற விடயங்களில் ஆழமான நுண்ணறிவு பெற உதவும். இது மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையில் பாரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.

இதனால் முட்டைகளை அல்லது விந்தணுவை வேற்று நபரிலிருந்து தானமாகப் பெறுவது போலன்றி, அல்லது வாடகைத் தாய்மார் பெற்றுக் கொடுப்பது போலன்றி, அவர்களுக்கு அவர்களது சொந்த மரபணுத் தொடர்புடைய குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை எதிர்காலத்தில் பெற்றுத் தரும்.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் 2013 ஜனவரியில் வெளியான கட்டுரை

0.0.0.0.0.0.

Read Full Post »