>Buitenspel – காற்பந்தாட்டம் பற்றிய படம் மட்டுமல்ல
கிரிக்கட், புட்போல், ஹொக்கி, கபடி போன்ற விளையாட்டுகளை நினைத்தால் வெண்ணிலா கபடி குழு, லகான்(Lagaan), சாரு ஹானின் Chade India யை போன்ற பல திரைப்படங்கள் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாது.
மேற்குலகத் திரை உலகை எடுத்துக் கொண்டால் ‘Wild Soccer Bunch’ படங்கள் மிகவும் பிரபலமானவை.
அண்மையில் Buitenspel என்ற ஸ்பானிஸ் திரைப்படமானது பார்க்கக் கிடைத்தது. இது காற்ப் பந்தாட்டம் பற்றிய ஒரு படம்.
படம் முழுவதும் ஆரம்பம் முதல் இறுதி வரை புட்போல் ஆக்கிரமித்திருக்கிறது. அதற்கான பயிற்சிகள், அவ் விளையாட்டின் நுணுக்கங்கள், மைதானக் காட்சிகள், விளையாட்டுப் போட்டி என அவ்வாட்டம் பற்றிய பரந்த பார்வையைக் காட்சிப்படுத்துகிறது.
காட்சிகள் மிகவும் உயிரோட்டமாகப் படமாக்கப்பட்டிருப்பதால் ஒரு போட்டியைப் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. சில சிலோமோசன் காட்சிகளும், இயல்பான ஓசைகளும் அதனோடு பின்னிப் பிணையும் இசையும் அற்புதமான மட்ஸ் பார்க்கும் மனநிலையை எம்முள் பரவவிட்டு, அச் சூழலுக்குள் எம்மை கட்டி வைக்கின்றன.
கதை நேரடியாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்றாற் போன்ற ஆரவாரமற்ற இயல்பான படப்பிடிப்பானது அச் சூழலுக்குள் எம்மை ஐக்கியப்பட வைக்கிறது. ஆயினும் அவனது இறுதிப் பயிற்சியான கனவுக் காட்சி மயக்கம் தருவதாக இருக்கிறது. அதன் அரங்க அமைப்பு முற்றிலும் எதிர்மாறாக பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க கால்ப் பந்தாட்டம் பற்றியதாயினும் அது வெளிப்படுத்தும் செய்தி முற்றிலும் வேறானதாகும். உண்மையில் இது தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே நிலவும் நெருக்கமான உறவைச் சொல்கிறது. ஆயினம் சேரனின் தவமாய் தவமிருந்து பாணியில் நினைவிடை தோய்தல் அல்ல.
இவனது தந்தை ஆளுமை மிக்கவர். இவனது ஒவ்வொரு செயற்பாட்டிலும் அவரது முத்திரை இருக்கும்.
12 வயதான கில்ஸ் (Gilles) புற்போல் பிரியன். தான் எதிர்காலத்தில் பெல்ஜியம் தேசிய புட்போல் அணியில் விளையாட வேண்டும் என்பதே அவனது கனவு, கற்பனை இலட்சியம் எல்லாம். அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறான்.
உண்மையில் அதன் இளைஞர் பிரிவான Red Devils ற்கு தேர்ந்தெடுவதற்கான வாய்ப்புக்கள் மிகப் பிரகாசமாகவே இருந்தன.
இதற்கு மிகவும் ஆதரவாக இருப்பது அவனது தந்தையான Bert. நாள் முழுவதும் அவருடன் இது பற்றியே பேசுவான். அவரும் தனது ஆலோசனைகளைக் கூறுவார், வலியுறுத்துவார், விடாப்பிடியாக நிற்பார்.
தனது படுக்கை அறையில் கூட வலை கட்டி அங்கு பயிற்சி எடுத்துக் கொண்டே இருப்பான். அவனது இலட்சிய நாயகனின் படம் சுவரில் தொங்கும். அது புட்போலுக்கான ஒரு கோவில், நூலகம், காப்பகம் எப்படி வேணடுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.
திடீரென தகப்பன் காலமாகிறார்.
அதுவும் இவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்த அரங்கிலேயே.
இவன் நிலை குலைந்து போகிறான்.
அதிலிருந்து விடுபடுகிறானா?, மீண்டும் விiயாடுகிறானா? தேசிய அணியில் சேர முடிகிறதா?
இக் கேள்விகளுக்கான விடையைத்தான் படம் பேசுகிறது. முடிவானது மகிழ்ச்சியளிக்கும் ‘எல்லாம் சுபம்’ இல்லை.
உயிர் காக்கும் மருந்துகள் இனிப்பானவை அல்ல. மிகவும் கசப்பானவை. அதே போல பல உண்மைகளும் கசப்பானவைதான்.
வெறுமனே உணர்வுகளின் பாதையில் செல்லாமல் புத்தி பூர்வமாகச் செயற்பட வேண்டும் என்பதை கிலிஸ் உணர்ந்து கொள்வதை படம் உணர்த்துகிறது.
ஒரு தகப்பனுக்கும் மகனுக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க வைப்பதாகவும் இப்படம் உள்ளது.
Ilya Van Malderghem என்ற பையன் Gilles ஆக நடிக்கிறான். இயல்பான நடிப்பு. முகபாவங்களை கச்சிதமாகக் கொண்டு வரும் ஆற்றல் அவனுக்கு இருக்கிறது.
தகப்பனாக வரும் Fillip Peeters தனது பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளார்.
படத்தை இயக்கியவர் Van Verheyen. வசனங்கள் Ed vanderweyden. தயாரிப்பு Dirk Impens.
கண்டிப்போடு கூடிய இறுக்கமான வழிகாட்டும் உறவு நல்லதா?
அது தான் பிள்ளையைச் சரியான வழியில் தனது பயணத்தை கொண்டு செல்ல வைக்குமா?
அந்த வழிகாட்டுதலானது மகனை தந்தையின் ஆளுமையிலேயே கட்டுண்டு கிடக்க வைத்தால் என்ன நேரும்.
அது அவனது சுய சிந்தனை சுதந்திரத்தைப் பறித்து விடுமா? இப்படிப் பட்ட கேள்விகளை இத் திரைப்படம் எழுப்புகிறது.
எந்த உறவும் அல்லது வழிகாட்டலும் அவனது சுதந்திரத்தைப் பறித்து விடக் கூடாது. தனது காலிலேயே தன்னால் நிற்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
வளரிளம் பருவத்தில் அனர்த்தம், அல்லது எதிர்பாராத துன்பம் வரும்போது அதை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை கில்ஸ் தானாக கற்றுக் கொள்கிறான். மற்றவர்களில் தங்கியிராது தன்னைத் தான் நம்பிச் செயற்பட வேண்டும் என்பதையும் உணர்ந்து கொள்கிறான்.
ஆனால் அதைக் கற்றுக் கொள்வதற்கான பாதை இலகுவானதாக இருக்கவில்லை.
ஆயினும் அவனால் முடிகிறது.
படம் பார்க்கும் ஒவ்வொரு சிறுவர்களும் இதை உணர்ந்து கொள்வார்கள். இதுவே அப்படத்தின் முக்கிய பிளஸ் பொயின்ட் எனலாம்.
ஆயினும் இதை சிறுவர்களுக்கான படம் என முத்திரை குத்திவிடக் கூடாது. ஒவ்வொரு தாயும் தந்தையும் உணர்ந்து கொள்ள வேண்டிய விடயங்களையும் சொல்கிறது. ஆனால் படிப்பினை ஊட்டும் படம் என்று சொல்லவும் முடியாது. எல்லோரும் பார்த்து ரசிக்கவாம். அத்துடன் சிந்திக்கவும் வைக்கிறது
எம்.கே.முருகானந்தன்