>கற்கை ஆற்றலையும் பாதிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்
“தேச்சுத் தேச்சு இவன்ரை மூக்கு வீங்கிப் போச்சு எப்ப பாத்தாலும் தும்மலும் சளியும் தான்’ எனச் சலித்தார் அம்மா.
சினத்து வீங்கிய முகத்துடன் நின்ற சின்னப் பையனின் மூக்கிலிருந்து வழிந்த சளி அசிங்கமாகத் தோற்றமளித்தது. சோர்வு அவனது முகம் முழுவதையும் விழுங்குவது போல அப்பிக் கிடந்தது. உடலின் சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்டவன் போல களைப்புடன் இருந்தான்.
ஆம், ஒவ்வாமை மூக்கால் வடிவது (Allergic rhinitis) என்பது வெறுமனே அரிப்பும், தும்மலும் நிறைந்த மூக்கு மட்டுமல்ல. தானே வழிந்து முடியட்டும் என அலட்சியப்படுத்தக்கூடியதும் அல்ல. உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாகும்.
எந்த வயதினருக்கும் இப்பிரச்சினை ஏற்படக்கூடும். ஆயினும் குழந்தைகளில் இதன் பாதிப்பு அதிகமாகும். இது விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் குழந்தையின் உடல் நலம் சிறப்பாக இருக்காது.
அதன் கற்கை ஆற்றல், கிரகிக்கும் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும். சுலபமாக மூச்சு எடுத்து வெளிவிட முடியாததாலும் அரிப்பு, தும்மல் போன்றவை ஏற்படுவதால் தூக்கத்தையும் கெடுக்கும். தூக்கம் கெட்டால் மறுநாள் உற்சாகமாக செயற்பட முடியாது என்பது வெளிப்படை. இவை காரணமாக பிள்ளை தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த முடியாது. பாடசாலையில் பின்தங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம்.
மூக்கால் ஒழுகும் பிள்ளை என சக மாணவர்களின் ஏளனத்திற்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாவதால் குழந்தையின் மனம் சோர்வடைந்து பள்ளி செல்லுவதற்கும் கற்பதற்குமான ஆர்வத்தைக் கெடுத்து விடலாம்.
அதற்கு மேலாக அழற்சியடைந்த மூக்கின் மென்சவ்வுகள் காரணமாக யூதெசியன் ரியூப், காற்றறைகள் ஆகியவையும் அழற்சியடைவதால், காது அடைப்பு, காதுக் குத்து, சைனசைரிஸ் போன்ற நோய்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
ஆஸ்மா ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஒவ்வாமை மூக்கால் வடியும் நோயாளிகளுக்கு அதிகமாகும்.
எனவே பெற்றோர்களும், பாடசாலை ஆசிரியர்களும் அலட்சியப்படுத்தாது இவர்களது பிரச்சினையை வைத்திய ஆலோசனைக்கு அனுப்புவது நல்லது.
இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
ஒவ்வாமை உள்ள பொருளுடன் தொடர்பு கொள்ளாதிருப்பதே ஒரே வழியாகும். படுக்கைப் பூச்சி, தூசிப் பூச்சி, மகரந்தம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் போன்ற பலவும் காரணமாகலாம். எனவே அவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
தலையணை, படுக்கை, படுக்கை விரிப்பு போன்றவற்றை அடிக்கடி தோய்ப்பதுடன், வாரத்திற்கு இரண்டு தடவையாவது வெயிலில் காயப்போட வேண்டும். நுளம்பு வலை, துணியாலான கால்மிதி, திரைச்சீலை போன்றவற்றையும் அவ்வாறே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ரோமம் உள்ள பொம்மைகள், கதிரை விரிப்புகள் ஆகியவற்றை அகற்றுங்கள் அல்லது வக்கியூம் கிளீனரால் (Vacuum Cleaner) சுத்தப்படுத்துங்கள்.
பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அடிக்கடி குளிக்கவார்த்து சுத்தமாக வைத்திருப்பதுடன், படுக்கை அறைக்குள் நுழைய விடாதீர்கள். பலரும் நினைப்பது போல அவற்றின் ரோமம் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. அவற்றின் உதிர்ந்த சருமத்துகள்களும் எச்சில் மற்றும் காய்ந்த சிறுநீருமே ஒவ்வாமையை ஏற்படுத்தி மூக்கால் வடிவதைத் தூண்டுகிறது.
கரப்பொத்தான் பூச்சியை ஒழியுங்கள். தூசி தட்டுவதற்குப் பதிலாக ஈரத்துணியால் சுத்தப்படுத்துங்கள்.
மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அலர்ஜிக்கு எதிரான (Antihistamine) மாத்திரைகள் உதவும். லொராடடீன், டெஸ்லொராடடீன் போன்ற புதிய பரம்பரை மாத்திரைகள் அதிக தூக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களும் உபயோகிக்கக் கூடியதாகும்.
இவற்றுடன் மூக்கிற்கான விசிறி மருந்துகளும் (Steroid Nasal Spray) மிகுந்த பலன் அளிக்கக் கூடியதாகும்.
இவற்றைத் தனித்தனியாகவோ அன்றி இணைத்தும் உபயோகிக்கலாம். இவற்றை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். இவை பாரிய பக்க விளைவுகள் அற்றவை யாதலால் அவ்வாறு மாதக் கணக்கில் உபயோகிப்பது ஆபத்தற்றது.
இத்தகைய நோயுள்ள பலருக்கும் மூக்கின் உள்ளே இருக்கும் குருத்தெலும்பான Inferior Turbinates வீக்கமடைவது உண்டு. இது கடுமையாக வீக்கமடைந்து சுவாசத்தையும் பாதிப்பதாக இருந்தால் ENT Surgeon யை சந்திக்கவேண்டி நேரலாம்.
எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல்.