>
மறதி, நினைவுத் தடுமாற்றம், வழமையாக முகம் கழுவுதல் ஸேவ் எடுத்தல் போன்ற பணிகளையும் செய்வதில் சிரமம் ஏற்படுதல், இப்படியாகப் பல. அத்தோடு அவர் முன்னரைப் போல மற்றவற்றில் ஈடுபாடின்றி ஒதுங்கிப் போவது போன்றவற்றை அவதானிக்க முடிகிறதா?
வயசானால் இப்படித்தான் என அலட்சிப்படுத்தாதீர்கள். ஏனெனில் அது ஒரு நோயாக இருக்கலாம். உதாரணம் வேண்டுமென்றால் Black என்ற ஹிந்தித் திரைப்படத்தில் அமிதாப் பச்சான் நடித்த பாத்திரத்தை நினைவுறுத்துங்கள்.
அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease) என்பதை வயதான காலத்தில் ஏற்படும் நினைவிழப்பு மற்றும் சிந்தனைத் திறன் இழத்தல் எனவும் சொல்லலாம். ‘முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய்’ எனலாம். இது பொதுவாக 65க்கு மேற்பட்டவர்களுக்கே வரும் நோயாயினும் இது மூளையில் ஏற்படும் நோயே அன்றி, வழமையான வயது முதிர்வதின் தாக்கம் அல்ல.
இது படிப்படியாக ஆரம்பித்து மூளையை நலிவடையச் செய்து மீளமுடியாத நிலைக்குச் செல்கின்றது. ‘மூளை அசதி நோய்’ எனவும் சொல்கிறார்கள் அதுதான் அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease).
இது வரவர தீவிரமடைந்து செல்கிற நோய். மாற்ற முடியாதது. சிகிச்சைகளினால் அது தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியுமே அன்றி, முற்று முழுதாக நிறுத்த முடியாது. எனவே அல்ஸீமர் நோயை ஆரம்பத்தில் கண்டறிய முயலுங்கள்.
அல்ஸீமர் நோயல்லாத வேறு நினைவு மங்கும் நோய்களும் உள்ளன. ‘அறளை பெயர்தல்’ என்ற சொல் அவற்றிக்குப் பொருந்தலாம். முதுமையில் ஏற்படும் மறதி, அறிவாற்றல் இழப்பு, மறதி போன்றவற்றை ஆங்கிலத்தில் (Dementia) என்பார்கள். ‘மூளைத் தேய்வு’ என்ற சொல் Dementia ற்கு பொருத்தமாக இருக்கும். இவை வயதாவதால் ஏற்படுபவை.
இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கு முக்கியமாக அறிகுறிகள் தாம் உதவுகின்றன.ஆனால் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிப்பது மிகவும் சிரமமானது.
நாளாந்த வாழ்க்கை முறையைக் குலைக்கும் நினைவுத் தடுமாற்றம்.
அண்மையில் நடந்த சம்பவங்களையும், அறிந்து கொண்ட, கற்றுக் கொண்ட விடயங்களையும் மறந்துவிடுவதுதான் அல்ஸீமர் நோயின் மிக முக்கியமான ஆரம்ப அறிகுறி எனலாம். மிக நெருக்கமானவர்களின் திருமண நாள், பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களை மறந்து விடுவதும், மிக முக்கிய சம்பவங்களை நினைவில் காப்பாற்ற முடியாததும் இந்நோயின் ஏனைய அறிகுறிகளாகும்;.
மறந்து விடாதிருக்க கலண்டரில் அல்லது டயறியில் குறித்து வைப்பதும், குறித்து வைத்ததையே மறந்துவிடுவதும், மறதியைத் தாண்ட காலத்தோடு சேர்ந்து ஓடும் சில வயதானவர்கள் கணனியை அல்லது வேறு இலத்திரனியல் கருவிகளை நினைவுறுத்துவதற்கு பயன்படுத்துவதுண்டு.
பெயர்களை மறப்பதும், செய்ய வேண்டிய முக்கிய வேலைகளையும், நிகழ்வுகளையும் மறப்பது அல்ஸீமர் நோயின் முக்கிய அறிகுறி எனலாம்.
ஒரு பணியைத் திட்டமிடுவதிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் இந்நோயின் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு சிரமங்கள் ஏற்படலாம். சில்லறைக் கணக்குகள் பார்ப்பதிலும், வழமையான மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதிலும் பிரச்சனைகள் தோன்றலாம். வழமையான பல செயற்பாடுகளை செய்வதற்கு இப்பொழுது முன்பை விட கூடியளவு நேரம் தேவைப்படலாம்.
வீட்டிலோ, வேலைத்தளத்திலோ அல்லது ஓய்வின் போதோ நன்கு பரிச்சயமான வழமையான பணியைச் செய்வதில் சிரமங்களை எதிர் கொள்ளல்.
நாளாந்தக் கடமைகளை செய்து முடிப்பது பல அல்ஸீமர் நோயாளிகளுக்கு கடினமாயிருக்கும். உதாரணத்திற்கு வழமையாகச் சென்று வரும் வங்கி, கோயில், நண்பர் வீடு போன்ற இடத்திற்கான வழியை மறந்து விடுவார். வழமையாக செஸ், சீட்டாட்டம் போன்ற ஏதாவது விளையாடுபவர் அந்த விளையாட்டின் விதிகளை மறந்துவிடக் கூடும்.
காலம், நேரம், இடம் பற்றிய தடுமாற்றம்
பல அல்ஸீமர் நோயாளிகளுக்கு அன்றைய திகதி என்ன?, காலையா, மாலையா அல்லது மாரி, கோடைஇ காலநிலை போன்றவற்றை நினைவுக்கு கொண்டுவருவதில் குழப்பம் ஏற்படலாம். சில தருணங்களில் தாங்கள் எங்கே இருக்கிறோம் அல்லது எவ்வாறு அவ்விடத்திற்கு வந்தோம் என்றவற்றை மறந்து தடுமாறுவர்.
உதாரணத்திற்கு இன்று ஞாயிறா திங்களா எனக் குழம்புவார். ஆயினும் பின்னர் நினைவுக்கு கொண்டு வந்துவிடுவார்.
உருவங்களை சூழலுடன் பொருத்திப் பாரப்பதில் ஏற்படும் சிக்கல்கள்.
ஒரு சிலருக்கு பார்வைக் கோளாறு மட்டுமே அல்ஸீமர் நோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் சிலருக்கு சிரமம் தோன்றும். சிலருக்கு கண்ணில் படும் உருவங்களுக்கு இடையேயான தூரம், நிறவேறுபாடு ஆகியவற்றை வேறுபடுத்தி நிர்ணயிப்பது கஸ்டமாயிருக்கும். உதாரணத்திற்கு முகம் பார்க்கும் கண்ணாடியைத் தாண்டிச் செல்லும் போது அதில் உள்ள விம்பத்தைப் பிரித்தறிய முடியாது வேறு யாரோ அறையில் இருப்பதாக உணரக் கூடும்.
உரையாடுதலிலும் எழுதுவதிலும் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளல்.
மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அதனை புரிந்து கொள்வதிலும் அதில் இணைந்து கொள்வதும் இவர்கள் பலருக்கும் முடியாதிருக்கும். தான் பேசிக்கொண்டிருக்கையில் அதனை எவ்வாறு தொடர்வது எனப் புரியாமல் பேச்சை நிறுத்துவார். அல்லது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லவும் கூடும். சரியான சொற்கள் வேண்டிய நேரத்தில் வராமல் திணறுவர். உதாரணத்திற்கு டோர்ச் லைட் என்பதை விளக்கு என்றோ, புத்தகம் என்பதைப் பேப்பர் என்பதாகவோ சொல்லக் கூடும்.
பொருட்களை அதற்கான இடத்தில் வைக்காமல் வேறு இடங்களில் வைப்பதும், அவற்றைப் பின்பு கண்டு பிடிக்கத் திணறுவதும்.
ஒரு பொருளை அதற்கான இடத்தில் வைக்காது பொருத்தமற்ற இடத்தில் வைப்பது அல்ஸீமர் நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாகும். உதாரணமாக புத்தக அலுமாரியில் வைக்க வேண்டிய புத்தகத்தை வழிபாட்டு மேடையில் வைப்பார், அல்லது பர்சில் வைக்க வேண்டிய பணத்தை மூக்கு கண்ணாடி உறையில் வைப்பார். பிறகு அதனைத் தேடிக் கண்டு பிடிக்க முடியாது திணறுவார். யாராவது அதனைத் திருடிவிட்டதாக குற்றம் சாட்டக் கூடும். காலம் செல்லச் செல்ல
தீர்மானம் எடுப்பதில் சிரமம்
அல்ஸீமர் நோயாளிகள் சரியான தீர்மானம் எடுப்பதில் சிரமப்படுவார்கள். தவறான முடிவு எடுக்கவும் கூடும். உதாரணமாக பெருந்தொகை பணத்தை தவறான நபருக்கு கொடுக்க திடீரென முடிவு எடுக்கக் கூடும். குளிப்பது, முகம் கழுவுவது, சுத்தமான ஆடைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருப்பார். தனது சுத்தத்திலும், வீடு படுக்கை போன்றவற்றின் சுத்தத்திலும் அக்கறையற்று இருப்பார்.
தொழில் மற்றும் சமூகக் கடமைகளில் இருந்து ஒதுங்கக் கூடும்
ரீவீ பார்ப்பது, பத்திரிகை, புத்தகம் படிப்பது, விழாக்களுக்கு செல்வது, நண்பர்களுடன் பொழுது போக்குவது போன்ற தனது வழமையான நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கக் கூடும். தனக்கு விருப்பமான செயற்பாடுகளைக் கூட செய்து முடிக்க முடியாது மறப்பதும் இவர்களுக்கு இயல்பு. கட்டாயம் செல்ல வேண்டிய திருமணம், மரணவீடு ஆகியவற்றிக்கு செல்வதிலும் அக்கறை அற்று இருப்பது சகசம்.
அவரது வழமையான மனநிலை, குணஇயல்பு மாற்றம்.
முன்னரைப் போன்ற மனிதராக இருக்கமாட்டார். மனக்குழப்பம், சந்தேகம், மனச்சோர்வு, பீதி, மனப்பதற்றம் போன்றவை மேலோங்கக் கூடும். மிக அற்பமான விடயங்களுக்கும் நிலை ததும்புவராக மாறுவார். இதனால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொழிலகத் தோழர்கள் இடையே ஆன உறவுகள் விரிசலடையலாம்.
இத்தகைய அறிகுறிகளில் ஒரு சிலவாவது உங்கள் உறவினருக்கு இருந்தால் அது அல்ஸிமர் நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஏதற்கும் நீங்களாக முடிவெடுக்காது நல்ல மருத்துவரை அணுகுங்கள்.
இது முற்று முழுதாகக் குணப்படத்த முடியாத நோய் என்ற போதும், அது மேலும் தீவிரமாகி வாழ்வை நாசமாக்காது தடுக்க முடியும்.
இந்த நோயை முதல் முதலாக இனங்கண்டவர் ஒரு ஜேர்மன் மருத்துவர். Dr.Alois Alzheimer என்பது அவர் பெயர். அவரது நோயாளி Frau Augste என்பராவார்.
வயதான காலத்தில் ஏற்படும் மூளை மங்குதலைத் தடுப்பது பற்றி மேலும் வாசிக்க…மூளை மங்குதலைத் தடுக்க நடைப்பயிற்சி
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.