Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Epistaxis’ Category

>
மார்கழி மாதம். கடும் குளிர். அதிகாலை வந்தவர் ஒரு நடுத்தர வயது மனிதர். நோயாளி, கூட வந்தவர்கள் யாவரும் கடும் பதற்றத்தில் இருந்தனர். அந்தக் குளிரிலும் சிலருக்கு வியர்க்கவும் செய்தது.

‘அப்பாவின் பிரஸரைப் பாருங்கோ’ மகள்’ அந்தரப்பட்டாள்.

‘ஏன் என்ன பிரச்சனை?’ நான்.

‘அப்பாவிற்கு காலையிலை மூக்காலை இரத்தம் கொட்டினது. அதுதான் பிரஸரைப் பாருங்கள்.’

அவர்கள் திருப்திக்காக உடனடியாகவே பிரஸரைப் பார்த்தேன்.


எதிர்பார்த்தது போல அதிகம் இல்லை. அவர்கள் சொல்லாவிட்டாலும் பார்த்தே இருப்பேன். ஏனைய முக்கிய விடயங்களைப் பார்த்த பின்.

மூக்கால் இரத்தம் வடிவது என்பது எல்லோரையும் மிகவும் பயமுறுத்துகிற விடயம்தான். ஆனால் மிகப் பெரும்பாலும் அது பயப்படக் கூடியதோ, மரணத்திற்கு இட்டுச் செல்வது போல ஆபத்தானதோ இல்லை.

மூக்கால் ஏன் இரத்தம் வடிகிறது?

எமது மூக்கானது இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக உள்ள ஒரு உறுப்பாகும். அத்துடன் அது முகத்திலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆதலால் மிகவும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கிறது. எனவே எந்த விபத்தின் போதும் முகம் அடிபடும்படி விழுந்தால் அது காயப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அத்துடன் மூக்கின் மென்சவ்வுகளில் இரத்தக் குழாய்கள் மிகவும் செறிவாக இருப்பதால் சிறிய காயமானாலும் இரத்தப் போக்கு மிக அதிகமாகவே இருக்கும்.

மூக்கைக் குடையும் பழக்கமுள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.


இருந்தபோதும் மூக்கால் இரத்தம் வடிவதற்கு அது முக்கிய காரணமல்ல.

பொதுவாக குளிர் காலத்தில் மூக்கின் மென்சவ்வுகள் காய்ந்து வரண்டு இருக்கும். இதனால் அவை தாமாகவே வெடித்து குருதி பாய்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். குளிர்காலத்தில் உங்கள் சருமம் வரண்டு சிலநேரங்களில் வெடிப்பதைப் போன்றதே இதுவும்.

குளிர்காலத்தில் வைரஸ் கிருமிகள் பரவுவது அதிகம். எனவே தடிமன் வருவதும் அதிகம் இவை காரணமாக மூக்கால் இரத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

ஏனைய காரணங்கள்

  1. தடிமன், சளி போன்ற கிருமித்தொற்று நோய்கள்
  2. ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கு ஒழுகல் (Allergic Rhinitis)
  3. மூக்கு அடிபடுதல், காயம், மூக்கு குடைதல்
  4. அதீத மதுப் பாவனை
  5. உயர் இரத்த அழுத்தம்
  6. குருதி உறைதலைக் குறைக்கும் மருந்துகளான அஸ்பிரின, குளபிடோகிரில் போன்றவை
  7. கட்டிகள், சவ்வுகள் போன்றவை

மேலே காட்டிய Cutanneous horn என்பது வரட்சியான ஒரு வகை தோல் வளர்ச்சி. ஆயினும் இதுவும் அதிகம் காணப்படும் நோயல்ல.

நீங்கள் செய்யக் கூடிய முதலுதவி

காரணம் எதுவானாலும் அது மருத்துவர் கண்டுபிடிக்க வேண்டியதாகும்.

ஆனால் மருத்துவரைக் காணு முன்னரே முதலுதவி மூலம் நீங்களே மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை நிறுத்த முடியும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மூக்கு எலும்பிற்கு கீழே இருக்கும் மூக்கின் மென்மையான பாகத்தை உங்கள் பெருவிரலினாலும் சுட்டு விரலினாலும் அழுத்திப் பிடியுங்கள். அவ்வாறு செய்யும்போது மூக்கின் அந்தப் பகுதியை பிற்பறமாக முகத்து எலும்புகளோடு சேர்த்து அழுங்கள்.


இவ்வேளையில் சற்று முன்புறமாகச் சாய்ந்திருப்பது நல்லது. மாறாக பிற்புறமாகச் சாயந்தால் வழியும் இரத்தம் தொண்டை. சைனஸ் போன்றவற்றுக்குள் உள்ளிட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்திவிடக் கூடும்.

அவ்வாறு தொடரந்து 5 நிமிடங்களுக்கு அழுத்திப் பிடியுங்கள். கையை எடுத்தபின் தொடர்ந்து இரத்தம் வந்தால் மேலும் 5 நிமிடங்களுக்கு அவ்வாறு செய்யுங்கள்.

அமைதியாக உட்கார்ந்திருங்கள். உடனடியாகப் படுக்க வேண்டாம். குனியவும் வேண்டாம். தலையானது இருதயத்தை விட உயர்ந்திருந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவதற்கான சாத்தியம் குறைவாகும்.

மூக்கிற்கு மேலும் கன்னங்களிலும் ஐஸ் வைப்பதும் இரத்தம் பெருகுவதைக் குறைக்கும்.

மீண்டும் வடிவதைத் தடுப்பது எப்படி?

இப்பொழுது இரத்தம் வருவது நின்றாலும் கவலையீனமாக இருந்தால் திடீரென மீண்டும் ஆரம்பமாகலாம். அதைத் தடுக்க வழி என்ன?

மூக்குச் சீறுவதைத் தவிருங்கள். அதே போல மூக்குக்குள் விரலை வைத்துக் குடைய வேண்டாம். வேறு எந்தப் பொருளையும் கூட மூக்கிற்குள் வைக்க வேண்டாம்.

தும்முவது கூடாது. தும்ம வேண்டிய அவசியம் நேர்ந்தால் வாயைத் திறந்து வாயினால் காற்று வெளியேறுமாறு தும்முங்கள்.

மலங்கழிப்பதற்கு முக்குவது கூடாது. அதேபோல பாரமான பொருட்களை தம்மடக்கித் தூக்குவதும் மீண்டும் இரத்தம் கசிய வைக்கலாம்.

வழமையான உணவை உட்கொள்ளுங்கள். அதிக சூடுள்ள பானங்களை 24 மணி நேரத்திற்காவது தவிருங்கள்.

மூக்கால் வடிவதற்கு அதன் மென்சவ்வுகள் வரட்சியாக இருப்பதுதான் காரணம் என்றால் அதனை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கு கிறீம் வகைகள் தேவைப்படலாம். மருத்துவ ஆலோசனையுடன் உபயோகியுங்கள்.

புகைத்தல்

புகைப்பவராயின் அதனைத் தவிருங்கள்.

மூக்கினால் இரத்தம் வடிவதை மேற் கூறிய முறைகளில் உங்களால் நிறுத்த முடியாவிட்டால் மருத்துவரை நாடுவது அவசியம்.

மிக அதிகளவு இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தாலும், அல்லது களைப்பு தலைச்சுற்று போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவ உதவி அவசியமாகும்.

இரத்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு Nasal packing செய்வார்கள்.

ஆயினும் இதுவும் நீங்களாகச் செய்யக் கூடியது அல்ல. பயிற்சி பெற்றவர்களால் செய்ய வேண்டியது.


மிக அரிதாகவே மூக்கால் இரத்தம் வடிபவரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டி நேரிடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »