Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Uncategorized’ Category

இன்றைய உணவு முறையானது இயற்கையிலிருந்து நிறையவே விலகிச் சென்றுவிட்டது.

சமையலுக்கு அதிக நேரம் செலவிடாததாக துரித உணவுகளை நோக்கி நகர்ந்துவிட்டது

தவிடு நீக்காத அரிசி, கோதுமை காய்கறிகள் போன்றவற்றிலிருந்து விலகி துரித உணுவகளையே நாடுகிறது

குத்தரிசி சோறு சாப்பிட்ட நம் இனம் நூடில்ஸ் பர்க்ர், மக்ரோனி, ரோல்ஸ், பற்றிஸ் என துரித உணவுகளை நாடி வருகிறது.

இதனால் எம்மிடையே அதீத எடை, நீரிழிவு, பிரசர், கொலஸ்டரோல், இருதய நோய்கள் எனப் பலவும் இளவயதிலேயே ஆட்டிப்ப டைக்கத் தொடங்கிவிட்டன.

உணவை நம்பி வாழ்ந்த மனிதர்கள் மருந்துகளை நம்பி வாழ வேண்டிய காலமாகிவிட்டது.

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது பக்கற்றில் அடைக்கப்பட்ட பாண் வகைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்,
நொட்டை தீனிகள்
போன்றவற்றை அதிகம் உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது

புற்று நோய்களைக் கொண்டுவரும் ஏனைய காரணிகளான
உடலுழைப்பு அற்ற வாழ்க்கை முறை,
அதிக கொழுப்பு உணவுகளை உட்கொள்ளல். புகைத்தல்
போன்றவற்றை நீக்கி கணக்கிட்டபோதும் இந்தப் பாதிப்பு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

எனவே உங்கள் தேர்வு என்ன?

இயற்கையோடு .இசைந்த உணவுகளா
அதீதமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளா?

எம்.கே.முருகானந்தன்

https://www.jwatch.org/…/ultra-processed-foods-tied-potenti…

Advertisements

Read Full Post »

கண் கவனம் (Foreign body in the eye)
அவதானமாக இருங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர ஓட்டிகளே.

ஹெல்மட் போடுவது பற்றி நான் இங்கு பேசவரவில்லை. கரணம் தப்பினால் மரணம் எல்லோருக்குமே தெரியும்.

இது மாலை மங்கும் நேரத்தில் திறந்த வாகனங்களை ஓட்டுவது பற்றி.

கண்ணுக்குள் பூச்சி அடிப்பது விழுவது எல்லோருமே அனுபவித்திருப்பீர்கள்.

இந்தப் பையனுக்கும்தான் மாலையில் மோட்டார் சைக்கிளில் போகும்போது ஏதாதோ கண்ணில் விழுந்துவிட்டது.

உறுத்திக் கொண்டே இருந்தது. கண்ணீர் ஓடியது.

அம்மா ஊதிப் பார்த்தா அசும்பவில்லை.

தண்ணீர் அடித்துக் கழுவிப் பார்த்தான் அதற்கும் அகலவில்லை.

என்னிடம் வந்தபோது கவனித்துப் பார்த்தபோது ஒரு சிறிய கறுத்தப் புள்ளி போல ஏதோ கருவிழி ஓரமாக ஒட்டிக் கொண்டிருந்தது.

கண்ணை மரக்கச் செய்து கவனமாக அகற்ற நேர்ந்தது.

கருவிழியில் கடுமையான கிருமித் தொற்று ஏற்பட்டால் பார்வை பறிபோகுமளவு பாதிப்பு ஏற்படவாய்ப்பபு உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்தானே

எனவே ஹெல்மட் வைசரால் (visor)அல்லது கண்ணாடியால் உங்கள் கண்களை அவ் வேளைகளில் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Read Full Post »

பார்வைப் பாதிப்பு

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்

அந்தக் காட்சி ஒரு புறத்தில் ஆச்சரியம் தருவதாக இருந்தாலும் மறுபுறத்தில் ஏற்கனவே தெரிந்த விடயத்தை உறைக்கும்படி மீள சொல்வது போலவும் அமைந்திருந்தது.

இரு கைபிடிக்களுக்கும் இடையில் அகப்பட்டு பிதுங்கி சளிந்து விழுமாப்போல அவரது உடல் நாற்காலியில் திணிக்கப்பட்டிருந்தது. இது ஆச்சரிமல்ல. இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள இலக்கியவாதிகளும் கல்விமான்களுமான அவரது அபிமானிகளுக்கு,  அவரது அதீத எடை எப்பொழுதுமே கண்களை உறுத்திக்கொண்டே இருந்திருந்தது.

அருகேயுள்ள நாற்காலியில் இருந்தபடி இளம் பெண்ணொருத்தி ஒரு புத்தகத்தை வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்தாள். இவர் ஊன்றிக் கவனத்திக்குக் கொண்டிருந்தார். இதுவே ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.

அவருக்கு ஏற்பட்டிருந்த பார்வைக் குறைபாடுபாடு பற்றி ஏற்கனவே அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்தபோதும் இந்தளவு மோசமாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. படித்தும் எழுதியும் இன்னும் எவ்வளவோ தமிழ்ச் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய பெருங் கல்விமானின் நிலை கவலை அளித்தது.

வயதாகும்போது பார்வைக் குறைபாடுகள்

வயதாகும்போது பெரும்பாலானோருக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கு பல்வேறு நோய்கள் காரணமாக உள்ளன. கற்றரக்ட் எனப்படும் கண்புரை நோய் சத்திரசிகிச்சை மூலம் பூரணமாகக் குணப்படுத்தக் கூடியதாகும்.

slide_3

கண்ணில் பிரஷர் எனப்படும் குளுக்கோமா, நீரிழிவினால் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பு மற்றும் இங்கு தொடர்ந்து பேச இருக்கும் வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய் ஆகியன அவ்வாறல்ல. அவற்றை முற்று முழுதாகக் குணமாக்குவது சாத்திமல்ல.

glaucoma-vision-loss

ஆனாலும் ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடிப்பதாலும் தொடர்ச்சியான சிகிச்சைகளாலும் ஓரளவு குணமாக்குவதுடன், நோய் மேலும் மோசமடையமல் தடுக்கவும் முடியும்.

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு (age related macular degeneration- ARMD)

மக்கியூலா என்பது எமது கண்ணில் உள்ள ஓரு சின்னஞ்சிறு பகுதியாகும் இதன் விட்டம் 5 மில்லிமீற்றர் அளவு மட்டுமே. இருந்தபோதும் எமது பார்வைக்கு அவசியமான கலங்களான  rods and cones  மிகவும் செறிவாக நிறைந்துள்ள பகுதி இதுவாகும். நுணுக்கமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதி இதுவாகும். வாசிப்பது எழுதுவது முகங்களை இனங் காண்பது போன்ற நுண்ணிய விடயங்களுக்கு அவசியமானதாகும்.

amd

விழித்திரையின் மிகுதிப் பெரும் பகுதி பரந்த பார்வைக்கு உரியதாகும். குறித்த ஒரு பகுதியை என்றல்லாது முழுக் காட்சியையும் உள்வாங்குவதாகும். எனவே மக்கியூலா சிதைவு நோயின் போது பார்வை முழமையக இல்லாது போகாது.

 

மக்கியூலா பகுதியில் உள்ள கலங்கள் சேதமடைவதற்குக் காரணம் விழித்திரை மற்றும் மக்கியூலாவின் பின் பகுதியில் இருந்து அதற்கான போசனைப் பொருட்களை வழங்குவதுடன் அதிலிருந்து கழிப்புப் பொருட்களையும் அகற்றும் பகுதியான retinal pigment epithelium (RPE) சேதமடைவதே ஆகும்.

இதனால் வெளியோறாத கழிவுப் பொருளான drusen என்பது விழித்திரையில் படிந்து விழித்திரைக் கலங்களான rods and cones  ற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே பார்வை பாதிக்கப்படக் காரணமாகும்.

தடுப்பது எப்படி

இவ்வாறு பாதிப்புகள் ஏற்படாதிருக்க தடுப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை.

புகைத்தல் ஒரு முக்கிய  காரணமாகச் சொல்லப்படுகிறது. புகைத்தானது சுவாசப்பையை பாதிப்பதும் புற்றுநோய்களுக்கு காரணமாக இருப்பதும் ஏற்கனவே தெரிந்ததே. எனவே புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது வருவதற்கான சாத்தியம் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. எனவே பிரசர் இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும், பிரஷர் வந்துவிட்டால் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அவசியமாகும்.

பழவகைகள்;, விதைகள் உட்பட ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பது அவசியம்

குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடிய சாத்தியத்தை அதிகரிக்கும். இருந்தபோதும் இது பரம்பரை நோயாகக் கொள்ள முடியாது.

யாருக்கு வரும்

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோயை 60 வயதிற்குக் கீழ்பட்டவர்களில் காண்பது அரிது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 20 பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் வருவதாகச் சொல்லப்படுகிறது. வயது கூடக் கூட இது அதிகரிக்கும். 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.

75 வயதிற்குப் பின்னர் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகத் ஏற்படுகிறதாம்.

அறிகுறிகள்

மிக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுகிற நோய் என்பதால் நோயாளிகளின் கவனத்தை ஈர்ப்பதில்லை.

இருந்தபோதும் 60 வயதை அண்டியவர்கள் சில சாதாரண அறிகுறிகளைக் கவனத்தில் எடுப்பது அவசியம். வாசிப்பதற்கு வழமையை விட அதிக வெளிச்சம் தேவைப்படுவது, பத்திரிகை மற்றும் புத்தகங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவற்றதாகத் தோன்றுவது, வண்ணங்கள் வழமையைவிட மங்கலாகத் தோன்றுவது, முகங்களை அடையாளங் காண்பது சிரமமாக இருப்பது போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் இருக்கலாம்.

அலட்சியம் பண்ணாதீர்கள்

மற்றொரு அறிகுறி முக்கியமானது. பொருட்களைப் பார்க்கும் போது அவற்றில் மாற்றங்கள் தெரியலாம். முக்கியமாக நேர் கோடுகள் வளைவாகவோ தாறுமாறாகவோ தோன்றலாம். உதாரணமாக நிலத்தில் பதித்துள்ள மாபிள் கல்லுகளுக்கு இடையே உள்ள கோடுகள் நெறிந்து முறிந்தோ வளைவாகவோ தோன்றுவது பிரத்தியேக அறிகுறியாகும்.

macular_degeneration_600x255

பார்வையில் கரும்புள்ளிகள் தோன்றலாம். மக்கியூலாவில் உள்ள கலங்கள் தொடர்ந்து சிதைவடையும்போது அவை அளவில் பெரிதாகும்.

பார்வை மோசமாகப் பாதிக்கப்படும்போது மாயத் தோற்றங்கள் ஏற்படலாம். இல்லாத பொருள்கள் இருப்பது போன்ற பிரமைத் தோற்றங்கள் வேறெந்த நோயால் பார்வை பாதிப்புற்றாலும் தோன்றலாம். இந்த நிலை பொதுவாக 18 மாதங்கள் வரை செல்லும்போது படிப்படியாக இல்லாது ஒழிந்துவிடும்.

சிகிச்சை

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோயில் இரண்டு வகைகள் உண்டு ஈரலிப்பான மக்கியூலா சிதைவு நோய் (Wet ARMD ).  வரட்சியான மக்கியூலா சிதைவு நோய் (னுசல யுசுஆனு) என்பனவே அவை.

பெரும்பாலானவர்களைப் பாதிப்பது Dry ARMD ஆகும். இது படிப்படியாக மோசமாகிப் பார்வையைக் கடுமையாகப் பாதிக்க பல வருடங்கள் செல்லலாம். இதற்கெனச் சிறப்பான சிகிச்சை முறைகள் இல்லை. ஆயினும் பாதிப்பு அதிகமாகாதவாறு தடுப்பதற்கு சிகிச்சை அளிக்கபடும்.

மாறாக Wet ARMD  மிகக் குறைந்தவர்களையே பாதிக்கிறது. ஆயினும் ஒரு சில மாதங்களுக்குள் பார்வையை கடுமையாகப் பாதிக்கும். இருந்தபோதும் இதற்கான பல சிகிச்சை முறைகள் உள்ளன. புதிய மருந்துகளும் அறிமுகமாகின்றன. ஆயினும் அவற்றை இங்கு விபரிப்பது சாத்தியமானதல்ல.

இறுதியாக

மக்கியூலா சிதைவு நோயிற்கு தெளிவான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் இல்லை என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே ஒழுங்கான கால இடைவெளியில் கண் மருத்துவரைக் காண்பதன் மூலமே அதை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கலாம்.

அதிலும் முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், குடும்பத்தில் இந்த நோயுள்ளவர்களும் இரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயுள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

வருமுன் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0
Advertisements

Read Full Post »

தினமும் 100 பேருக்குக் குறையாமல் வருகிறார்களாம் வெளிநோயார் பிரிவிக்கு. சிறு சிறு கிளினிக்குகளிலேயே தினமும் 5 முதல் 10 பேர் வருகையில் நாடு பூராவும் நிலைமை எப்படி இருக்கும்?

போதையில் சிவந்தவை அல்ல
கோபத்தில் செந்நிறம் பூத்ததும் இல்லை
எங்கணும் சிகப்பு
தொட்டினால் ஒட்டிவிடுமோ என
கலங்க வைக்கும் நிஜத்தில்.

இவை கொழும்பு கண் வைத்தியசாலையில் தினமும் 100 கணக்கில் வருவது ஆச்சரியமில்லை என்றே சொல்ல வேண்டும்.

வருடா வருடம் இந்தக் காலப் பகுதியில் கண்நோய் பரவுவதுண்டு. ஆயினும் இவ்வருடம் அது மிகத் தீவிரமாகப் பரவி வருவதாகவே தெரிகிறது.

Conjunctivitis

பாடசாலைகள், விடுதிகள், அலுவலகங்கள், சிறைச்சாலைகள், பஸ் புகையிரதம் போன்ற பொது போக்குவரத்து சேவைகளில் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

நோயை சரியாக நிர்ணயம் செய்து, பொருத்தமான மருந்தை உரிய நேரத்தில் ஆரம்பித்தால் இது ஆபத்தான நோய் அல்ல என்பது உண்மை

கண் நோய் என்ற சொல் பொதுவானதாகும். இருந்தாலும் எமது பகுதியில் கண்நோய் என்றால் கண்சிவந்து பீளை வடிகிற தொற்று நோயையே கண்நேய் எனபோம்.

இது கண்ணின் வெளிப் புறத்தில் உள்ள விழி வெண்படலத்தில் ஏற்படுகின்ற ஒரு தொற்று நோயே ஆகும். ஆங்கிலத்தில்(conjunctivitis) என்பார்கள்.

மிக வேகமாகப் பரவும் ஒரு தொற்று நோயாகும். ஒரு கண்ணில் வந்தால் மற்றக் கண்ணிலும் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்.

வெயிலும் வெக்கையும் தீவிரமாக இருக்கும் இந்தக் காலம் இந்நோய் தொற்றுவதற்கு ஏற்ற காலம் ஆகும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயதினரையும் பாதிக்கக் கூடிய நோய் இதுவாகும்.

இந்த அறிகுறிகள் எவை?
கண் சிவந்திருக்கும்
கண்ணால் அதிகம் நீர் வடியலாம்.
கண்ணிற்குள் எதோ விழுந்து அராத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
கண்மடல்கள் வீங்கியிருக்கும்.
பீளை வடிவதுடன்,
சற்று அரிப்பும் இருக்கும்.
காலையில் கண்வழிக்கும்போது கண்மடல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கலாம்

இப்பொழுது பரவுவது பொதுவாக வைரஸ் கிருமியால் தொற்றுவதாகும். ஆனால் பக்றீரியா கிருமியாரல் தொற்றுகின்ற கண்நோய்களும் உண்டு.

தூசி மகரந்தம் போன்றவற்றிற்கு ஒவ்வாமையால் ஏற்படுகின்ற வேறு வகையான கண்நோய்களும் உண்டு. ஆனால் ஒவ்வாமையால் ஏற்படும் கண்நோய்கள் மற்றவர்களுக்கு தொற்றுவதில்லை

பொதுவாக இது ஆபத்தானது அல்ல. தானாகவே 3-4 தினங்களில்; குணமாகிவிடும். நோய் இருக்கும்போது பாடசாலை, அலுவலகம், வங்கி சந்தை, கோவில் போன்ற பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் மற்றவர்களுக்கு உங்களிலிருந்து தொற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் மட்டும் இன்றி வீட்டில் உள்ள ஏனையவர்களுக்கும் இந்நோய் வேகமாகத் தொற்றும்.

தொற்றாமல் தடுப்பதற்கு சுகாதார முறைகளைக் கையாள்வது அவசியமாகும்.

ஒருவர் உபயோகித்த டவல், படுக்கை, தலையணை, கைலேஞ்சி போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கவே கூடாது.
.
நோயுள்ள கண்ணை கைகளால் தொடாதீர்கள். கண்ணில் இருந்து வழிவதைத் துடைப்பதற்கு ரிசூ உபயோகிக்கலாம். உபயோகித்த உடன் அதைக் கழித்து அகற்றிவிட வேண்டும். கைலேஞ்சி, துணி போன்றவற்றை உபயோகித்தால் அவற்றை உடனடியாகக் கழுவிவிட வேண்டும்.

கண்ணைத் தொட்ட கைகளை உடனடியாகவே கழுவிவிட வேண்டும். இல்லையேல் அந்தக் கையால் நீங்கள் கதிரை, கதவுக் கைபிடி, பேனை போன்ற எதனைத் தொட்டாலும் அதில் பரவும் கிருமியானது மற்றவர்களுக்கு அதிலிருந்து பரவிவிடும்.

நீங்களும் உங்கள் கைகளைக் கண்ணைக் கசக்கவோ துடைக்கவே கைகளால் தொடாதீர்கள். கண்களுக்கு மருந்துகள் விடும்போது மருந்துக் குப்பியோ கை விரல்களோ கண்களையோ அருகில் உள்ள பகுதிகளையோ தொடாதபடி சற்று உயரத்தில் பிடித்து விட வேண்டும்.

eye_drops1

மருந்து விடுவதற்கு முன்னரும் பின்னரும் கைகளை நன்கு கழுவுவது அவசியமாகும்.

நோயுள்ளவர்களுடன் மிக நெருங்கிப் பழக வேண்டாம். சற்று எட்டி நில்லுங்கள்

How2_washHands200

மருத்துவர் குறித்த மருந்துகளைத் தவிர வேறு கைமருந்துகளை உபயோகிப்தைத் தவிருங்கள். ஏனெனில் அது சாதாரண கண்நோய்தானா அல்லது வேறு தீவிரமான கண் நோயா என்பதை உங்களால் சுயமாகத் தீர்மானிக்க முடியாது..

வெற்றிலையை சுட்டு வைப்பது நல்லதல்ல. ஏனெனில் அது அருகில் உள்ள ஏனைய பகுதிகளையும் உறுத்தி பார்வையைப் பறித்துவிடவும் கூடும்.

இப்பொழுது பரவும் கண்நோய் பொதுவாக பிரச்சனைகள் இன்றிக் குணமாகக் கூடியதே. இருந்தாலும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனடியாகக் காண்பது அவசியமாகும்.

 • ஒரு கண்ணில் அல்லது இரு கண்களிலும் ஓரளவு அல்லது தீவிரமான வலி இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியமாகும்.
 • வெளிச்சத்தைப் பார்க்க முடியாதபடி கண் கூச்சம் இருந்தால் அவசியம் காண வேண்டும்.
 • அதே போல பார்வை மங்கலாக இருந்தாலும் மருத்துவரைக் காணுங்கள்.
 • சாதாரண கண்நோயின்போது கண்கள் கடுமையான சிவப்பாக இருப்பதில்லை. மங்கலான சிவப்பு அல்லது பிங்க் கலரிலேயே இருக்கும். எனவே கண் கடுமையான சிவப்பாக இருந்தால் மருத்துவரைக் காண வேண்டும்.
 • நோயெதிர்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அவசியம் காண வேண்டும். உதாரணமாக HIV தொற்றுள்ளவர்கள், பிரட்னிசொலோன் போன்ற ஸ்டீரொயிட் மருந்து பாவிப்பவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
 • நோயின் அறிகுறிகள் படிப்படியாகக் குறையாது வர வர தீவிரமாபவர்கள்.
 • வேறு கண் நோயுள்ளவர்களும்; அதற்கான மருந்துகளை கண்ணிற்கு இடுபவர்களும் உட்கொள்பவர்களும்.

எதற்கும் சாதாரண கண்நோய்தானே என எண்ணி பிரச்சனையை விலைக்கு வாங்குவதைவிட மருத்துவரை அணுகுவது புத்திசாதித்தனமானது

எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.00.0

Advertisements

Read Full Post »

நன்னாரி- Indian Sarsaparilla(Hemidesmus indicus)- iramusu in Sinhala

இன்று தேநீர் வெறும் தேநீர் ஆகவா கிடைக்கிறது.

இங்கு பலருக்கு தேநீர் என்றால் பால் ரீ என்றுதான் அர்த்தம்.

பால் ரீயில் பாலின் சுவைதான் இருக்கும். தேயிலையின் சுவை அடங்கிவிடும்.

பிளேன் ரீ மீது எனக்கு தனிப் பிரியம். அதன் சுவையே அலாதியானது. ஒவ்வொரு பிரதேச தேயிலைக்கும் பிரத்யேக சுவை உண்டு.

22275110270_e28ffe8e60_q

 

 

மறைந்த எழுத்தாளர் புலோலியூர் சதாசிவம் பண்டாரவளை யில் வேலை பார்த்தவர். அங்கிருந்து அவர் கொண்டு வந்து தரும் தேயிலை யின் சுவையை என்றும் மறக்க முடியாது.

இன்று தேயிலைக்கு வெவ்வேறு சுவை ஊட்டுகிறார்கள். பல்வேறு flavors சில் வாங்க முடியும்.

முன்பு எனது மனைவி ஏலம், கராம்பு, கறுவா, தேசிப் பழம் என சுவை ஊட்டி தரும் பிளேன் ரீகளின் சுவையை மறக்க முடியாது.

ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இத்தகைய ரீக்கள் கிடைப்பதில்லை.

நன்னாரி தேநீர் தயாரிப்பார்கள்.

படத்தில் உள்ளது தான் நன்னாரி செடி. இன்றும் எனது வீட்டில் இருக்கிறது. ஆனால் நன்னாரி தேநீர் தயாரிக்கத் தான் நேரமில்லை.

நன்னாரி சர்பத் தும் பேர் போனதுதான்.

நன்னாரி பற்றி தமிழ் விக்கிபீடியா சொல்வது கீழே

 நன்னாரி அல்லது கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்:Indian Sarsaparilla) என்பது தென்னாசியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.

நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர்அனாதமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.”

இருந்தபோதும் இந்த மருத்துவ குணங்கள் இருப்பதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்து இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே நான் அவற்றை சிபார்சு செய்ய முடியாது. தகவலுக்காகச் சொன்னேன்.

0.00.0

Advertisements

Read Full Post »

அவள் துடித்துப் பதைத்து ஓடிவந்தது நியாயம்தான். ஒரு தாய்க்கு தன் குழந்தையின் உயிர் பற்றிய பயமும் பதகளிப்பும் இல்லாமல் போய்விடுமா. தாயின் பதற்றத்தைப் புரிந்துகொள்ளமல் சிரித்தபடி நின்றாள் மகள். பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த வயதில் இருக்கப் போவதில்லையே!!

பிரச்சனை பூச்சி உருண்டை வடிவில் வந்தது.

crystalline-naphthalene-balls-250x250

பூச்சி உருண்டை எனச் சொல்லப்படும் இவை பளிச்சிடும் வெள்ளை நிற உருண்டைகளாகும். Naphthalene balls, moth balls  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இனிப்பு வகைகள் போன்ற தோற்றம் கொண்டதால் வாயில் போட்டுவிடலாமா என எண்ணத் தோன்றும்.

மசகு எண்ணெய் மற்றும் நிலக்கரித் தாரிலிருந்து இவற்றைத் தயாரிப்பார்கள்.

6.2smoking

சிகரட் புகையிலும் இது இருக்கிறது. வாகனங்கள் உமிழ்ந்தெறியும் புகையிலும் இருக்கவே செய்கிறது.

பொருட்களையும் உடைகளையும் சேமித்து வைக்கும் அலுமாரி, பெட்டி போன்றவற்றில் பூச்சி கொல்லியான இதைப் போட்டு வைப்பார்கள்.

mothballsincontainer

பல உணவகங்களிலும் கழிப்பறைகளிலும் வாஷ் பேசினில் போட்டு வைத்திருப்பதையும் காணலாம். இதிலிருந்து எழும் மணமானது கரப்பொத்தான் மற்றும் சிறுபூச்சிகளை வெருட்டி அடிக்கும். மணத்தை எழுப்பும் இவை படிப்படியாகக் காற்றிலேயே கரைந்து அற்றுப் போகும்.

ஏனைய பூச்சி கொல்லிகளைப் போலவே இது மனிதர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படலாம்.

உட்கொள்ளும் போது

ஆயினும் இதனை தற்செயலாகவோ வேண்டும் என்றே உட்கொண்டால் பாதிப்பு அதிகமாகும். பாதிப்பின் தீவிரம் உட்கொள்ளப்பட்ட நப்தலீனின் அளவைப் பொறுத்தது ஆகும்.

2gsfktu

இரைப்பையை உறுத்துவதால் வயிற்று வலி, ஓங்களாம், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் ஏற்படும். இவை தானே மாறிவிடக் கூடும்.

ஆயினும் அதிகளவில் உட்கொண்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும். இதந்குக் காரணம் நப்தலீன் ஆனது குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களைப் பாதித்து அவற்றைச் சிதைவடைய வைப்பதே ஆகும். அதிக இரத்தக் கலங்கள் அழியும்போது ஒரு வகை இரத்தசோகை ஏற்றபடும். இதை hemolytic anemia  என்பார்கள். சிதைந்த இரத்தத்தின் ஹீமகுளோபினானது சிறுநீருடன் வெளியேறும். சிறுநீர் செந்நிறத்தில்; வெளியேறும்.

அதிகமாக உட்கொண்டிருந்தால் சிறுநீரகம் ஈரல் போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்புறும்.

நப்தலீனால்  குருதியில் உள்ள இரும்புக் கூறானது  ferrous என்பதற்கு பதிலாக ferric ஆக மாறும்.  இரத்தத்தினால் உடலுக்குத் தேவையான ஒட்சிசனைக் குருதியால் காவிச் செல்ல முடியாது போய்விடும். உடல் நீலம் பாரிக்கும். methemoglobinemia என்ற இது மற்றொரு கடுமையான விளைவாகும். இந் நிலை தொடரும்போது உடலுக்கு வேண்டிய ஒட்சிசன் இல்லாமையால் வலிப்பும் மரணமும் தொடரலாம்.

நப்தலீன் நச்சு பெரியவர்களை விட குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுவது அதிகம்.

உட்கொள்வதால் மாத்திரம் மட்டுமின்றி, அதன் மணத்தைச் சுவாசிப்பதாலும் குழந்தைகளில் பெரும் பாதிப்பு ஏற்படலாம். நப்தலீனால் மாசடைந்த உடைகள் படுக்கை விரிப்புகள் மற்றும் னiயிநசள போன்றவற்றைத் தொடர்ந்து அணியும்போது அதன் நச்சுத்தன்மை சுவாசத்தின் ஊடாக உடலை அடைந்து, இத்தகைய பாதிப்புகளை பாலகர்களில் ஏற்படுத்தி இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

ஏனைய பாதிப்புகள்

இதன் மணம் சிலருக்கு கண்களில் எரிவை உண்டாக்கும். கண்ணில் நேரடியாகப் பட்டால் கண்கள் சிவந்து நோய் conjunctivitis ஏற்படலாம். நீண்டகாலமாக தொடர்பு ஏற்படும்போது வெண்புரை எனப்படும் கற்றரக்ட் ஏற்படவும் கூடும். கண்ணில் பட்டால் உடனடியாக கண்களை நீரினால் நன்கு கழுவுங்கள்.

சருமத்தில் படும்போது சருமத்தை சற்று உறுத்தலாம். உடனடியாகக் கழுவிவிடுதல் போதுமானது. தொடர்ச்சியான தொடர்பு கொண்டிருந்தால் ஒவ்வாமை அழற்சியை ஏற்படுதுவது உண்டு. இதைக் கையாள வேண்டியிருந்தால் வேலை முடிந்ததும் உடனடியாகவே கைகளை நன்கு கழுவுவது முக்கியமானது.

இதன் மணமானது பலரிலும் சுவாசத் தொகுதியில் உடனடிப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதிகளவு எச்சில் சுரப்பது, ஓங்காளம், சத்தி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சிலரில் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

glucose-6-phosphate dehyrogenase  (G6PD) பிரச்சனை உள்ளவர்களில் பாதிப்பு அதிகமாகும்

நப்தலீனானது மிருகங்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் ஒன்று என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் மனிதர்களில் இது பற்றிய தெளிவான ஆய்வு அறிக்கைகளைக் காண முடியவில்லை.

அந்த 5 வயதுக் குட்டிப் பெண் 2-3 பூச்சி உருண்டைகளை முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டாளாம். பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தையின் உடலில் எந்தவித பாதிப்புகளும் தெரியவில்லை. காலையில் சிறுநீர் சற்று இரத்தக் கலரில் போனது என அம்மா கூறினாள்.

உடனடியாகவே சிறுநீரைப் பரிசோதித்தபோது அதில் மாற்றங்கள் எதுவும் இருக்கவில்லை. இருந்தபோதும் இரண்டு நாட்களுக்கு அவதானிப்பில் வைத்திருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

குழந்தைகள் தவறுதலாக உட்கொள்வதை அறிவோம்.

அதேபோல விளையாட்டாக அவற்றை முக்கினுள் அல்லது காதினுள் செலுத்தி விடுவதும் உண்டு. அவ்வாறு நடந்தால் நீங்களாக அதை எடுக்க முயலவேண்டாம். மூக்கினுள் கிடப்பதை எடுக்க முயலும்போது அது பிற்புறமாக விழுந்தால் சுவாசக் குழாயினுள் வீழ்ந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் பாரிய ஆபத்து உள்ளது.

மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அதை உட்கொண்டிருந்தால் அதன் பாதிப்பை குறைப்பதற்கு Activated charcoal  உபயோகிப்பது உண்டு. குருதி சேதமடைந்திருந்தால் குருதி மாற்றீடு செய்ய நேரலாம். நாளம் ஊடாக திரவங்களை ஏற்றவும் தேவை ஏற்படலாம்.

செல்லக் குழந்தைக்காப் பயந்து வந்த தாயானவள் தங்களது செல்லப் பூனைக்காகவோ நாய்க்காகவோ மருத்துவரிடம் செல்ல நேரலாம். ஏனெனில் பாதிப்பு உங்கள் வீட்டில் உள்ள மனிதர்களுக்கு மட்டுமல்ல வளர்ப்பு மிருகங்களிலும் ஏற்படலாம்.

எனவேதான் பூச்சி உருண்டைகளைப் பாவிப்பதில் அவதானம் தேவை என்றோம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (01May 2015) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0..0..0

 

Advertisements

Read Full Post »

“அம்மா ஒரே தூக்கமா இருக்கிறா. கூப்பிட்டால் எழும்புறா இல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ” மகன் சொன்னார்.

அவர் பேசியது லண்டனில் இருந்து.

fainted lady

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டா.

பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா.

பார்த்தவுடனேயே அது சாதாரண தூக்கம் அல்ல எனப் புரிந்தது. மயக்கநிலை. இரத்த குளுக்கோசைப் பார்த்தபோது அது 40 ல் நின்றது. Hypoglycemia என்போம். இரத்தத்தில் சீனியின் அளவு சாதாரண அளவிலும் குறைவது என அர்த்தமாகும்.

மற்றொரு ஐயாவின் நிலை முற்றும் மாறானது.

அண்மையில்தான் நீரிழிவு எனக் கணடறிந்திருந்தோம். “நீங்கள் தந்த குளிசைப் போட்டால் எனக்கு களைக்குது. இரத்தத்திலை சீனி குறைஞ்சபடியால்தான் தலைச் சுத்து வரும் என்று நண்பர் சொன்னர். நான் தலைச்சுத்து வந்தவுடன் சீனியைப் வாயிலை போடுறன்.”

அவரது இரத்த சீனி அளவைப் பார்த்போது அது 300 யைத் தாண்டியிருந்தது. குருதியில் சீனியின் அளவு மிக அதிகமாக இருந்தமைக்கு காரணம் அவரது சீனியன் அளவு குறைவது பற்றிய தவறான கருத்துதான்.

Blood sugar

களைப்பு என்றவுடன் சீனியை தேவையின்றி உபயோகித்திருந்தார்.

களைப்பு தலைச்சுத்து சோர்வு என்ற எந்த அறிகுறிகள் ஏற்பட்டாலும் அது சீனி குறைவதால்தான் என சீனி நோயாளர்கள் பலரும் கருதுகிறார்கள். இவை வேலைப்பளு, நித்திரைக் குறைவு, மனச்சோர்வு போன்ற வேறு காரணங்களாலும் ஏற்படலாம். தனக்கு நீரிழிவு என்று அறிந்தவுடன் ஏற்படும் மனச்சோர்வும் களைப்பாக தோன்றுவதுண்டு.

நீரிழிவும் மருந்துகளும்

நவீன மருந்துகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அபரிதமான நன்மைகளைச் செய்துள்ளன. நீரிழிவு என்பது பயங்கர நோயாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. குறைந்த வயதில் மரணமடைவதற்கு அதுவும் முக்கிய காரணமாக இருந்தது.

மாறாத புண்களுக்காக பலரும் கால்களை இழந்தார்கள். ஆனால் இன்றைய மருந்துகளாலும் நீரிழிவு பராமரிப்பு பற்றிய நவீன அறிவியலாலும் நீரிழிவு நோயாளிகளால் ஏனையவர்களைப் போல மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. முற்காலம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இன்று அவர்களுக்கு இல்லை.

“இந்த மருந்துகளைச் சாப்பிட்டுத்தான் எனக்கு நோய்” எனப் பலர் சொல்வார்கள் ஆனாலும் மருந்துகள் காரணமாகவே நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ முடிகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறு நீரகப் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க முடிகிறது. மரணங்கள் பின்தள்ளப்பட்டு முழுமையான ஆயுசு கிட்டுகிறது.

குருதியில் சீனியின் அளவு குறைதல்

இருந்தபோதும் ஒரு முக்கியமான ஆபத்து இருக்கவே செய்கிறது. முன்னரே குறிப்பட்ட குருதியில் சீனியன் அளவு குறைவதே அது ஆகும். இது பெரும்பாலானவர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சனையாக இங்கு காணப்படுவதில்லை. நோயாளிகள் சரியான முறையில் உணவு முறையைக் கடைப்பிடித்து சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை அளவு மாறாமல், வேளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் இதைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது.

low blood sugar

இருந்தபோதும் Yale School of Medicine and the University of Chicago வில் செய்யப்பட்ட ஆய்வானது குருதியில் இரத்தம் குறைவதானது எதிர்பாராமல் நடக்கக் கூடியது என்கிறது.

தங்களது நீரிழிவின் அளவை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கே இது ஏற்படலாம் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. சீனியின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு சீனியின் மட்டம் திடீரெனக் குறையும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் 10000 Type 2  நீரிழிவாளர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு எதிர்பாராத முடிவைக் கொடுத்தது. ஒரு வருடம் ஆய்வு செய்யப்பட்ட போது அவர்களில் 10 சதவிகிதமானவர்களுக்கு சீனிமட்டம் குறைந்ததைக் கண்டறிந்தார்கள். அதுமட்டுமின்றி சீனியின் அளவு கட்டுப்பாஎன்றி அதிகமாக இருந்தவர்களுக்கே அவ்வாறு சீனி மட்டம் எதிர்பாராது குறைந்ததாம். .

குறைந்த சீனி மட்டம் என்பது எது?

சாதாரண சீனி மட்டம் என்பது 60 mg/dl  முதல் 118 mg/dl வரையாகும்எது? சீனி மட்டமானது 60 mg/dl (3.3 mmol/L) க்குக் கீழ் குறைந்தால் அது Hypoglycemia எனப்படும் குறைந்த சீனி மட்டம் எனப்படும். இந்த நிலையில் அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும் குறைந்தால் கோமா என்று சொல்லப்படும் மயக்கத்திற்கும் இட்டுச் செல்லலாம்.

குறைந்த சீனி மட்டத்தின் அறிகுறிகள் எவை?

ஒருவரின் இரத்தத்தில் சீனிமட்டம் குறைந்திருப்பதை எப்படி அறிவது?

நடுக்கம், பயம், வியர்வை, களைப்பு, கடுமையான பசி, தலையிடி, கண்பார்வை மங்கல், தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, மாறாட்டம், தடுமாற்றம், பேச்சுத் திணறல், கூடுதலான நித்திரைக் குணம், வயிற்று வலி, ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

இவ்வறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்பதில்லை. ஒரு சில அறிகுறிகள் மட்டும் தெரிந்தாலும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

சில தருணங்களில் நோயாளி; உணர்வதற்கு முன்னரே கூட இருப்பவர்கள் அவரில் மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கக் கூடும். நீங்கள் குழப்படைந்திருப்பதையும், கூடுதலாகச் சினமடைவதையும், வெளிறிப் போயிருப்பதையும், வியர்த்திருப்பதையும் அவர்கள் அவதானிக்கலாம்.

இவ்வாறு நேரும்போது குளுக்கோ மீட்டர் இருந்தால் உடனடியாக இரத்தத்தில் சீனி மட்டத்தை அளவிடுவது அவசியம். அதில் சீனி மட்டம் 60 mg/dl (3.3 mmol/L)  க்குக் குறைவாக இருந்தால் உங்கள் இரத்தத்தில் சீனி மட்டம் குறைவிட்ட நிலை(Hypoglycemia)  என நிச்சயமாகச் சொல்லலாம்.

இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது?

உபவாசம், விரதம், அல்லது பட்டினி கிடப்பது, போதிய உணவு எடுக்காதது, காலம் தாழ்த்தி உண்பது, வழமைக்கு மாறான கடும் உடற்பயிற்சி அல்லது கடுமையான உடல் உழைப்பு போன்றவை காரணமாகலாம்.

T2.large

திடீரென வழமைக்கு மாறாக மருந்தின் அளவை அதிகரிப்பதும் காரணமாகலாம். ‘இண்டைக்கு சாப்பாடு கூடிப் போச்சு’ என்று எண்ணி தேவைக்கு அதிகமான இன்சுலின் மருந்தை ஏற்றுவது அல்லது கூடிய அளவு நீரிழிவு மாத்திரைகளை எடுப்பதாலும் இது நிகழலாம்.

நீரிழிவு மருந்துகளில் மெட்போரின் மருந்தை மட்டும் எடுக்கும்போது குருதி குளுக்கோஸ் அளவானது வழமையை விடக் குறைவதி;லை. அதேபோல acarbose, pioglitazone, rosiglitazone போன்றவையும் ஏற்படுத்துவதில்லை. ஏனைய எல்லா மருந்துகளையும் தேவையான அளவிலும் அதிகம் உட்கொண்டால் அந் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

இது ஆபத்தான நிலையாகும். இவ்வாறு நேர்ந்தால் உடனடியாக சிறிது குளுக்கோஸ் (15 கிராம்- -4 தேக்கரண்டி) குடியுங்கள். குளுக்கோஸ் கிடைக்காவிட்டால் ஒரு மேசைக் கரண்டியளவு சீனி கரைத்துக் குடியுங்கள். அல்லது அரைக் கப் பழச்சாறோ இனிப்புச் சேடாவோ குடியுங்கள், அல்லது இரண்டு டொபி உட்கொள்ளவும். 10 நிமிடம் ஓய்வு எடுக்கவும். சுகம் தெரியும். உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுங்கள். ஏனைய இனிப்புகளை விட குளுக்கோஸ் விரைவாக குருதியால் விரைவாக உறிஞ்சப்படும் என்பதாலேயே அது சிறந்தது.

உங்களால் உடனடியாக இரத்த குளுக்கோஸ் நிலையை அளவிட முடியாதிருந்தால், ஆனால் அதே நேரம் அறிகுறிகள் நிச்சயமாக சீனி மட்டம் குறைந்திருப்பதே எனத் தெரிந்தாலும் மேற் கூறிய நடவடிக்கைகளை எடுங்கள்.

முதலில் கூறிய பெண்ணுக்கு நாளம் ஊடாக குளுக்கோஸ் ஏற்றிய பின் மெதுவாக சகச நிலைக்கு வந்தாள். வீட்டில் குளுக்கோமீட்டர் இருந்தது. இருந்தபோதும் தாதிப்பெண் அதை உபயோகித்து சீனியின் அளவை அளவிட்டுப் பார்த்திருக்கவில்லை. விடயம் விளங்கிய மகளும் ஊருக்குப் போயிருந்தாள். மருத்துவ மனையில் கொடுத்த மருந்துகளின் அளவை நீரிழிவின் நிலைக்கு மாற்றவில்லை. அதனால் எற்பட்ட வினை.

நீரிழிவு இல்லாதவர்களிலும் ஏற்படுமா?

நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களில் ஓரு சிலர் குருதியி;ல் சீனியின் அளவு குறைவதற்குரிய அறிகுறிகள் தமக்கு ஏற்படுவதாகக் கூறுவதுண்டு. ஆனால் அவர்களில் உண்மையான சீனி குறைதல் ஏற்படுவது சாத்தியமில்லை.

ஆயினும் நீரிழிவின் முன்நிலையில் (Pre Diabetes) இருப்பவர்களுக்கு அவ்வாறான நிலை ஏற்பட ஓரளவு சாத்தியமுண்டு. அவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து உணவு உட்கொள்ளாதிருந்தால் iளெரடin சநளளைவயnஉந நிலையால் அவர்களது சீனி மட்டம் குறையலாம்.

மிக மிக அரிதாக இன்சுலினை உறபத்தி செய்யும் கட்டிகள் (insulinomas)தோன்றினாலும் அவ்வாறான நிலை தோன்றலாம்.

மேற்கொண்டு செய்ய வேண்டியவை

குருதியில் குளுக்கோஸ் அளவு குறைந்தால் நிச்சயம் உங்கள் மருத்துவரைக் காண வேண்டியது அவசியமாகும். அவர் கீழ் கண்ட விடயங்களில் மேலும் ஆலோசனைகள் வழங்குவார்.

 • மருந்துகளை மாற்றக் கூடும் அல்லது அவற்றின் அளவுகளில் மாற்றம் செய்யவும் கூடும். அவற்றை உணவிற்கு முன்னரா பின்னரா எவ்வளவு நேர இடைவெளியில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விளக்கக் கூடும்.
 • சரியான உணவு முறைகள் பற்றியும் அவற்றை எவ்வளவு கால இடைவெளிகளில் எடுக்க வேண்டும் என்பதிலும் ஆலோசனைகள் வழங்கக் கூடும். உணவுகளை தவிர்ப்பதும், விரதங்கள் பிடிப்பதும் நீரிழிவு ள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. 
 • உடற் பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் இரத்த குளுக்கோஸ் அளவைப் பரிசோதிப்பது சிறந்தது. அது 100 ற்கு கீழாக இருந்தால் சிறிய உணவு உட்கொண்ட பின்னர் பயிற்சியைச் செய்யலாம். நீரிழிவு மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திற்குள் உடற் பயிற்சி செய்வது உகந்ததல்ல. 
 • மதுபானம் நல்லதல்ல. அதுவும் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தினால் சீனியின் அளவு குறையலாம். மது அருந்தி ஓரிரு நாட்களுக்குப் பின்னரும் அவ்வாறு ஏற்படலாம் என்பதால் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

 

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.00.0.0

Advertisements

Read Full Post »

Older Posts »