Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Uncategorized’ Category

“போகுது வருகுது
போகுது வருகுது
போய்ப் போய் வருகிறது……”

” …எத்தனை மருந்துகளைப்பூசிவிட்டேன்
மறைவது போல ஏய்புக் காட்டி
மீண்டும் மீண்டும் வருகிறது..”

நாற்பதை அண்டிய அவள் தனக்கு சீனி கொலஸ்டரோல் பிரஸர் ஏதாவது வந்துவிட்டதா எனப் பாரக்க வந்திருந்தாள்

ரிப்போட்டுகளைக் காட்டி முடிந்து எழுந்து போக முயன்றவள்
மீண்டும் இருந்தாள்.

இதையும் காட்ட வேணும் என்று நினைச்சனான் மறந்து போனன்
என்று மூக்கைக் காட்டினாள்

கறுத்து சொரப்பாக மூக்கின் மேற்பாகம் அசிங்கமாகக் கிடந்தது.

“ஒரு வகை எக்ஸிமா ஒட்டுக் கிரந்தி” என்றேன்

ஆனால் “மருந்து பூசியும் மாறுதில்லையே” என்றாள்

“கண்ணாடி போடுறனீங்கள்தானே ஒருக்கா போடுங்க பார்ப்பம்” என்றேன்.

நான் நினைத்தது சரி

மூக்கில் அழுத்திக் கொண்டிருக்கும் நோஸ்பாட் (nose pad) கண்ணணாடியால் ஆனது எனவே அது காரணமல்ல

கண்ணாடி பிரேமின் ரிம்தான் காரணம் அது மெட்டலால் ஆனது

அந்த மெட்டலுக்கான ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது

அதனால்தான் மீண்டும் மீண்டும் வருகிறது

“கண்ணாடியை மாற்றுங்கள் பிளாஸ்டிக் பிரேம் உள்ளதாக இருக்க வேண்டும்” என்றேன்

அடுத்த முறை அவளைக் கண்டபோது மூக்கு அழகாக இருந்தது

சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஒவ்வாமை ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி ஒட்டுக் கிரந்தி Allergic contact Dermatitis என்பார்கள்.

இப் பிரச்சனை பற்றி மேலும் அறிய எனது புள்கிற்கு விசிட் அடியுங்கள்

http://hainallama.blogspot.com/2012/04/allergic-contact-dermatitis.html

Read Full Post »

பையன்களே அவதானமாக இருங்கள்

ஜிப்பில் மாட்டுப்படுதல்

மருத்துவமனையின் செருப்பொலிகளையும் முணுமுணுப்புச் சலசலப்புகளையும் கண்டு கொள்ளாத அமைதியைக் சுரீரெனக் கிழித்துக்கொண்டு அலறலாக ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்.

‘குஞ்சு மாட்டுப்பட்டுப் போச்சு’

ஏதாவது விபத்தில் அவளது குழந்தை மாட்டுப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் மூளையின் கலங்களை அதிர வைக்க குதிக்கால் பிடரியில் அடிபடும் ஓட்ட நடையில் மருத்துவர் விரைந்தார். கட்டிலில் பையன். வலியின் கனதியில் கண்ணீர் மல்கக் கிடந்தான். அவனது ஒரு கையானது காற்சாட்டையைப் பற்றிக் கொண்டிருப்பதை அவதானித்தவருக்கு கேட்காமலே விசயம் புரிந்தது.

o-PENISES-CAUGHT-IN-ZIPPERS-facebook

‘மாட்டுப்பட்டது குஞ்சு அல்ல. குஞ்சின் குஞ்சு.’

ஆண்குறியின் மொட்டுப் பகுதியை மென்மையான தோல் மூடியிருக்கும். முன்தோல். foreskin என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுதான் மாட்டுப்பட்டிருந்தது. பாடசாலை முடிந்து வீடு வந்த பையனுக்கு அன்று ரியூசன் இல்லை. மகிழ்ச்சி பொங்கியது. விளையாடப் போவதற்காக உடைகளை மாற்றிக் கொண்டிருந்தபோதுதான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. காற்சட்டையின் ஜிப்பில் ஆணுறுப்பின் முன்தோல் மாட்டிக்கொண்டுவிட்டது.

இவ்வாறு ஜிப்பில் மாட்டுப்படுவது அரிதான விபத்து அல்ல. அதே நேரம் அடிக்கடி காணப்படும் பரவலான பிரச்சனை என்றும் சொல்ல முடியாது. எந்த வயதுள்ள ஆண்களிலும் இப் பிரச்சனை ஏற்படக் கூடுமாயினும் பெரும்பாலும் 2 முதல் 12 வயதான பையன்களிடயேதான் அதிகம் ஏற்படுகிறது.

சின்னப் பையன்களும் உள்ளாடை அணிவது பரவலான பழக்கமாக மாறிவிட்டதால் இடையிடையேதான் காண முடிகிறது. அவர்கள் தாங்களாக உடை அணியும் போதுதான் பெரும்பாலும் இத்தகைய விபத்து நிகழ்வதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. பெரும்பாலும் உள்ளாடை அணியாத பையன்கள்தான் இந்தச் சிக்கலில் மாட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்த்த போதும் அணிந்த பலரிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

முன்தோல் மட்டுமின்றி, ஆண்குறியின் மொட்டுப் பகுதி அகப்படலாம். தண்டும் மொட்டும் இணைகின்ற மிதப்பான வளைவுப் பகுதியும் மாட்டுப்படலாம். சில தருணங்களில் தண்டினது தோற்பகுதி மாட்டுப்பட்டிருப்பதும் உண்டு.

எந்தப் பகுதி மாட்டுப்பட்டாலும் உடனடிப் பிரசச்னை கடுமையான வலிதான். நேரம் கடந்தால் வீக்கமும் ஏற்படலாம். மென்மையான உறுப்பு, நரம்புகள் நிறைந்து இருப்பதால் உணர்வுச் செறிவு கொண்டது. இன்ப உணர்வுகளுடன் தொடர்புடைய பகுதி. வலியை அறியாதது என்பதால் வேதனை கடுமையாகத் தோன்றும். அத்துடன் என்ன ஆபத்து ஏற்படுமோ என்ற பயமும், தன்னுடைய உள்ளுறுப்பை வெளியே காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதே என்ற வெட்கமும் கூடி வர உடல் உள வேதனைகள் தாங்க முடியாதிருக்கும்.

நீங்கள் செய்யக் கூடியவை, கூடாதவை

அந்தரப்படாதீர்கள், அவசரப்படாதீர்கள். அமைதி பேணுங்கள். பிள்ளைக்கு பயப்பட வேண்டியதில்லை என ஆறதல் கூறுங்கள்.

ஜிப் கொளுக்கியை கழற்றுவதாக நினைத்து அதை, மேலே கீழே இழுத்துப் பார்த்து நிலமையை மோசமாக்காதீர்கள். அனுபவம் இன்றிச் செய்தால் புண்கள் கீறல்கள் ஏற்பட்டுவிடும்.

தேங்காய் எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு எண்ணையை கொளுவியிருக்கும் ஜிப்பின் மேல் தாராளமாக ஊற்றிவிட்டு பிள்ளையை சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருக்கச் செய்யுங்கள். ஊறிச் செல்லும் எண்ணெயின் வழுவழுப்பு தன்மையால் ஜிப் தானே கழன்றுவிடுவதாக பல மருத்துவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். இதை முதலுதவியாக வீட்டில் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

2423668179

அவசரப்பட்டு காற்சட்டையின் துணியை வெட்டிச் சிதிலமாக்கி அகற்றிவிட்டு ஆணுறுப்பிலிருந்து தொங்கும் ஜிப்போடு குழந்தையை மருத்துவரிடம் அழைத்து வந்தவர்கள் இருக்கிறார்கள். கட்டாயம் வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால் ஜிப்பை ஆடையுடன் இணைக்கும் துணியை மட்டும் வெட்டுங்கள். புதிய ஜிப்பைத் தனியே பொருத்தி பின்னர் அதே ஆடையை உபயோகிக்க முடியும்.

அனுபமற்ற சில மருத்துவர்கள் அவ்விடத்தை மரக்கச் செய்து ஜிப்பை அகற்றுவதற்ற எண்ணி குழந்தையின் உறுப்பில் விறைக்கச் செய்யும் மருந்தை ஊசியால் ஏற்றுவார்கள். அவ்விடத்தில் ஊசி ஏற்ற முனைந்தாலே பிள்ளை கிலிகொண்டு வீரிட்டு அலறி முரண்டு பண்ணும். அது மாத்திரமின்றி அவ்விடம் மரத்தாலும் ஜிப்பைக் கழற்றுவது மேலும் சிரமமாகவாம். அதற்குக் காரணம் குருதிக் கண்டல் ஏற்பட்டு அவ்விடம் மேலும் வீங்குவதால் ஜிப் மேலும் இறுகிவிடும்.

எனவே எண்ணெய் போட்ட பின்தானாக வழுகிக் களன்று போகாது விட்டால் மருத்து ஆலொசனை பெறுவது அவசியம்.

விசேட முறை

மருத்துவர்கள் செய்யும் ஆபத்தற்ற முறை ஒன்றை இங்கு விளக்குகிறேன். துணிவுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளிலும் முயலலாம்.

அதற்கு முன்னர் ஜிப்பினது பகுதிகளை அறிந்து கொள்வது பயனுள்ளது. இரு பக்கங்களிலும் உள்ள ஜிப்புகளை இணைப்பது ஜிப் கொளுக்கி ஆகும். இதில் முற்பக்கத்தில் ஒரு தகடும் பிற்பக்கத்தில் மற்றொரு தகடும் இருக்கும். மேற்பக்கத் தகட்டிலேயே மேலும் கீழும் இழுக்க உதவும் தண்டு (Zip slider)  இருக்கும்.

om1937a

முதலில் மாட்டுப்பட்ட சருமத்திற்கு வெளியே கொளுவுப்படாது இருக்கும் ஜிப்;பின் இரு பக்கங்களையும் குறுக்கு வாட்டாக கப்பி வெட்டியினால் வெட்டிப் பிரியுங்கள். தொடர்ந்து ஜிப்பின் பல்லுகளுக்கு அப்பால் உள்ள ஜிப்பின் துணிகளை வெட்டுங்கள். இதனால் அவை காற்சட்டையுடனான இணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு iகாயள இலகுவாக இருக்கும்.

zipper1

இப்பொழுது ஒரு குறட்டை (Pliers )  எடுங்கள். ஜிப் கொளுக்கியின் முற்பகுதி பிற்பகுதி அடங்கலான பகுதியை படத்தில் காட்டியவாறு பக்கவாட்டில் குறடினால் அழுத்துங்கள். சமாத்திரமாக அழுத்தம் விழுமாறு இறுக அழுத்துங்கள்.

Zipped penis 0

இவ்வாறு அழுத்தும் முன்தோலைப் பற்றியிருக்கும் ஜிப்பின் பகுதி தளரும். உடனடியாகவே மாட்டுப்பட்ட சருமம் விடுபடும். அவ்வாறு அழுத்தும் போது ஜிப் கொளுக்கியின் முற்பகுதிம் பிற்பகுதிக்கும் இடைப்பட்ட இடைவெளி அதிகரிப்பதாலேயே அவ்வாறு நிகழ்கிறது.

Zipped penis 1

வேறு முறைகள்

மற்றொரு முறை பெரும்பாலனவர்களால் முயலப்படுகிறது. அது பல தருணங்களில் பலனளிக்கவே செய்கிறது. இருந்தபோதும் இது மிகுந்த வலியை ஏற்படுத்தக் கூடியது. ஜிப் கொளுக்கியை எந்த பக்கமாக இழுக்கும்போது தோல் மாட்டுப்பட்டதோ அதற்கு எதிர்த் திசையில் இழுத்தால் பெரும்பாலும் சரிவரலாம். ஆயினும் சருமம் மாட்டுப்படதால் ஏற்கனவே தடித்து இருக்கும்போது அவ்வாறு மறுதிசையில் இழுக்கும்போது மேலும் இறுகுவதற்கான வாய்ப்பே அதிகம். ஆத்துடன் புண்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.

மிகச் சிக்கலான தருணங்களில் மாட்டுப்பட்ட தோலின் பகுதியை மரக்க ஊசி போட்டு அகற்றுவது, மரக்கச் செய்து முழமையாக முன்தோலை அகற்றுவது (சுன்னத்து செய்வது என்பார்கள்), முழமையாக மயங்கச் செய்து முன்தோலை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

எவ்வாறாயினும் பயப்பட வேண்டியதில்லை. வேறு பாதிப்புகள் இன்றி அகற்றிவிடலாம்.

இருந்தபோதும் ஜிப்பினில் மாட்டுப்படாது கவனமாக இருப்பதே சிறந்தது.

புகைப்படங்கள் நியூ டில்லி பாலிகா மருத்துமனை சார்ந்த Dr. S.C. Mishra அவர்களின் கட்டுரையிலிருந்து பெறப்பட்டது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

 

Read Full Post »

A generation புகழ் பெற்ற போலந்து நெறியாளர் Andrzej Wajda அவர்களின் திரைப்படத்தை ஞாயிறு பார்க்கக் கிடைத்தது.

1955 ல் வெளிவந்த கறுப்பு வெள்ளை படம். 63 வருடங்கள் கழிந்த பின்னரும் ஆழ்ந்து இரசித்து பார்க்க முடிந்தது.

a-generation-main-review-660x330

நாசி ஆட்சியின் கீழ் போலந்து நாடு அடக்குமுறைக்கு ஆளாகி துன்பப்பட்டது.அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் குழுவும் விடுதலைப் போராளிகளும் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதைப் பற்றிய படம் இது.

சில்லறை திருட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த Stach Mazur நண்பர் ஒருவன் இராணுத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அர்ப்பணிப்பும் செயலூக்கமும் கொண்ட விடுதலைப் போராளி யாக மாறியதை கலை நயத்தோடு சொல்கிறது.

சேரிப்புற காட்சிகள் மிகவும் தத்வரூபமாக காட்சி படுத்தபட்டிருந்து. அதேபோல இராணுவ அதிகாரியை கிளப்பில் வைத்து சுட்டுக் கொல்லும் காட்சி…. இப்படி பல காட்சிகள் மனதில் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

பல குழுக்களாக இயங்கிய அவர்களது ஒரு தலைமை இறந்துவிட்ட போதும் வேறொருவர் பொறுப்பை ஏற்று விடுதலைப் பணியைத் தொடர்வதை மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

காதலும் வருகிறது. ஆனால் அது அவர்களின் இலட்சியத்தை சிதைக்காது விடுதலைப் பணியை முன் நிறுத்துவதைக் காண்கிறோம்.

Generation

கூர்மையான வசனங்கள், அழகான கமரா கோணங்களுடன் கூடிய காட்சிகள், குறியூடுகளான பல சித்தரிப்புகள் என எம்மை படத்துடன் இணைய வைக்கின்றன.

80 களில் எமது விடுதலை போரின் ஆரம்ப காலத்தில் இங்கு இருந்த சூழலையும் மனநிலையையும் அங்கும் காண முடிகிறது.

ஆனால் விடுதலை உணர்வு அங்கு தலைமுறை தலைமுறை ஊடாக கையளிக்கப்படுகிறது. தொடர்ச்சி உறுதிப்படுத்த படுகிறது. ஆனால் இங்கு பிரிவுகளும் உள்ளக மோதல்களும் அழிப்புகளும் மக்கள் இயக்கமாக தொடர முடியாது செய்துவிட்டது.

அருமையான படம். யாழ் பொது நூலக வாசகர் வட்டம் மாதாந்தம் ஒழுங்கு செய்து வரும் தேர்ந்தெடுத்த படக் காட்சிகளில் இதுவும் அடங்குகிறது.

நன்றி வாசகர் வட்ட தலைமை பொறுப்பில் இருந்து அரிய படங்களை தரும் Jesurasa Athanas மற்றும் குழுவினரின் அர்ப்பணிப்புடனான பணிக்கு.

0.00.0

Read Full Post »

computer desk laptop stethoscope

Photo by Negative Space on Pexels.com

கணவன் அமைவதெல்லாம்
எம்.கே.முருகானந்தன்.

மூச்சு இளைத்துக் கொண்டு வந்த அந்தப் பெண்மணியின் முகத்தில் இளைப்பை விட மோசமாகச் சோர்வு அப்பிக் கிடந்தது.

அவள் ஆஸ்மாவிற்கு இன்ஹேலர் உபயோகித்துக் கொண்டு வருகிறாள். ஒழுங்காக உபயோகிப்பதாகவும் சொன்னாள். இருந்த போதும் அவளால் இயல்பாகப் பேச முடியவில்லை. நடக்க முடியவில்லை. ஒரு தள்ளாட்டம்.

அதற்கு மேலாக ஏதோ ஒரு பற்றற்ற தன்மை இருப்பதை உணர முடிந்தது.

ஆனால் அவளது சோர்வு ஆஸ்த்மாவால் வந்த சோர்வு அல்ல என்பதை எனது மருத்துவ அனுபவம்; சொல்லியது.

55 வயதுப் பெண்மணி. மூன்று பிள்ளைகள். கடைசிப் பிள்ளைக்கு வயது 23. மூவரும் மணமுடித்து வேறு வேறு இடங்களில் வசிக்கிறார்களாம். இவளும் கணவனும்தான் வீட்டில் தனியாக.

பிள்ளைகளைப் பிரிந்திருப்பதை இவளால் தாங்க முடியவில்லையா? அதனால்தான் உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாளா என யோசித்தேன்.

பிள்ளைகள் சற்று தூரத்தில் இருந்தாலும் இடையே வந்து செல்வதாகவும் அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்களைப் பற்றி எந்தவித கவலையும் இல்லை என்றாள்.

“கணவன்?”

அவராலும் “பிரச்சனை இல்லை” என்றாள்.

அவளது பதிலிலிருந்து எதுவும் பிடிபடாததால் அவளது மனநிலைப் பாதிப்பின் தீவிரத்தை அறிய முயன்றேன்.

மனம் எந்த நேரமும் சோர்வாக இருப்பதாகவும், எந்த வேலையையும் செய்ய முடியதளவு களைப்பாகவும் விருப்பக் குறைவாகவும் இருக்கிறதாம். நெஞ்சு படபடப்பதாகவும் நித்திரைக் குழப்பம் அதிகம் என்பதையும் அவளது வாயிலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது.

அழுகை வருகிறதா எனக் கேட்டபோது சின்ன விடயங்களையும் தாங்க முடியாது அழுகை பீறிட்டு வருவதாகவும் ஒத்துக் கொண்டாள்.

வாழ்க்கையில் பற்றில்லாத மாதிரியும் ஏன் வாழ வேண்டும் செத்துப் போகலாம் என்பது போன்ற சிந்தனைகள் வருகிறதா என்று கேட்டேன்.

‘ஓம் ஐயா. ‘ இனி என்ன? செத்தே போகலாம் என்றிருக்கு’ என்றாள்.

இவை யாவும் தீவிர மனநிலைத் தாக்கத்தின் அறிகுறிகளாகத் தெரிந்தன.

“ஐயா”

இப்பொழுது அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன்.

அவளது சோர்ந்து கிடந்த முகத்தில் திடீரென ஒரு உறுதி பளிச்சிட்டது. ஏதோ சொல்ல முற்பட்டாள். வார்த்தைகளை தேடி அலைந்தாள். வாய் திணறியது.

“ஐயா’… ‘ஐயா”

நான் மௌனித்து அவளது சத்திய வாக்குகளுக்காகக் காத்திருந்தேன்.

‘உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேணும்.

.. நான்.. நான்.. எனக்கு சின்ன வயசிலிருந்தே ஆஸ்த்மா. குளிசைகள் தான் தருவினம் அந்த நாளிலை. பிறகு குளிசைகளோடு காக் கிளாஸ் சாரயம் மருந்தோடு சேர்த்து தந்தினம். நல்ல சுகம் வரும். ..’

“. முதலிலை ஆஸ்மா வரும்போதுதான் குளிசையோடு சாராயம் எடுத்தது. பிறகு பிறகு ஒவ்வொரு நாளும் இரவிலை மருந்தோடு காக் கிளாஸ் சாரயம் எடுத்தன். காலம் போகப் போக கால் கிளாஸ் சாராயத்திற்கு சுகம் கிடைக்கவில்லை. பிறகு அரைக் கிளாஸ் எடுத்தால்தான் சுகம் கிடைத்தது. ..”

“.. ஒரு நேரம் போதவில்லை. அரைக் கிளாஸ் இரண்டு நேரம் எடுக்க நேர்ந்தது. ..’

இப்ப இரண்டு நேரமும் ஒவ்வொரு கிளாஸ் எடுக்காவிட்டால் ஒரு வேலையும் ஓடாது என்ற நிலையாகிவிட்டது.”

“ஐயாட்டை முந்தியும் ஒருக்கால் வந்து மருந்தெடுத்தனான்.

நான் வன்னி. இஞ்சை சொந்தக்கார வீட்டை நின்றுதான் மருந்து சாப்பிட்டனான்.

 

மனப்பதற்றம் என்று சொல்லி மருந்து தந்தனீங்கள்.

நான் மற்றக் கதை எல்லாம் மறைச்சுப் போட்டன். நல்ல சுகம் வர வன்னிக்கு போனன். அங்கை போக மீண்டும் வருத்தங்கள் வந்திடுத்து.”

“நீங்கள் முதல் என்ரை மருந்து போட்ட நேரம் சாராயம் எடுத்தனீங்களா?” கேட்டேன்.

“இல்லை ஐயா. இஞ்சை சொந்தக்கார வீட்டைதானே நிண்டனான். குடிக்கவே இல்லை. குடிக்காட்டிலும் சுகமாத்தான் இருந்தனான்.”

குடி பிரச்சனை மனச் சோர்வு எல்லாம் இவளது சொந்த வீட்டில்தான்.

கணவன்தான் காரணமாக இருக்கவேண்டும் என மனம் கூறிய போதும், குறிக்கீடு செய்யாமல் காத்திருந்தேன்.

“ஐயா நீங்கள்தான் எனக்கு சுகமாக்கி தரவேண்டும். முந்தியும் சுகமாக்கினீங்கள். உங்களை நம்பித்தான் வன்னியிலை இருந்து உங்களட்டை வந்தனான்.” அவள் கண்கள் கலங்கின.

“..இனியும் இந்த கேடு கெட்ட பழக்கம் வேண்டாம். நீங்கள்தான் இதிலிருந்து நான் முழசாச் சுகமாக வழி காட்ட வேண்டும்.”

“நிச்சயம் செய்வன் அம்மா நீங்களும் ஒத்துழைத்தால் ..”என்றேன்.

‘நான் விட்டிடுவன். ஆனால்….”அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

‘”..இவன் இவன் என்ரை மனுசனாலை வந்தவினை …

… தான் குடிக்கிறது போதாது என்று என்னையும் மருந்து மருந்து என்று சொல்லி நரகத்திலை தள்ளிவிட்டான்.ள”

இவனை விட்டுத் துலைச்சால்தான் சரி”

அவள் தீர்க்கமாகச் சொன்னாள்.

நான் விக்கித்து வாயடைத்து நின்றேன்.

0.0.0

மீண்டும் வந்தாள்.

ஒரு மாதத்தின் பின்னர். அன்றலர்ந்த மலர் போல முகம் பளிச்சென்றிருந்தது.

ஒரு மாத மருந்து கொடுத்திருந்தேன். குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தொடர்ந்து சாப்பிட நேரிடும் என்றும் அறிவுறுத்தியிருந்தேன். அதன்படி வந்திருந்தாள்.

அவள் மதுவைக் கைவிட்டு குணமடைந்தது கண்டு திருப்தி கொண்ட போது அவள் வாய் திறந்தாள்

நான் மீண்டும் வாயடைத்தேன்.

அவள் சொன்னது இவ்வளவுதான்

“அவரும் வந்திருக்கிறார். வெளியிலைதான் நிக்கிறார். கூப்பிடட்டே”

மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி தானா!!

மனம் சோர்ந்தேன்.

“அவர் தனக்கும் மருந்து தரும்படி கேக்கிறார். ஐயா உதவி செய்யுங்கள்.”

0.0.00.0.0

Read Full Post »

நீரிழிவு நோயாளருக்கு குரக்கன் நல்லதா?
குரக்கன் ரொட்டி சாப்பிட்டிருந்தேன்.

எனக்கு நீரிழிவு கிடையாது. கொலஸ்டரோல். பிரஸர், அதீத எடை என எந்தப் பிரச்சனையும் கிடையாது.

இருந்தாலும் குரக்கன் ரொட்டி சாப்பிட்டேன். காரணம் அது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதால்.

சிறு வயதில் அடிக்கடி சாப்பிட்டதுண்டு. ஆயினும் இப்பொழுது அடிக்கடி சாப்பிடக் கிடைப்பதில்லை. அந்த நாட்களில் ஹாட்லிக் கல்லூரிக்கு நடைபவனியில் போகும் போது தோட்ட வெளிகளால் குறுக்குப் பாதையில் செல்லும் போது அறுவடை செய்த பின்னர் காயந்து கிடந்த குரக்கன் செடிகளை தாண்டிச் சென்ற ஞாபகங்கள் வருகின்றன.

இன்று எமது தோட்டங்களில் புகையிலையும் வெங்காயமும் தான் விளைகின்றன. ஆராக்கியத்தை விட பணப் பயிர்கள் எமக்கு முக்கியமாகிவிட்டது.

எமது முன்னோர்களது உணவில் குரக்கன் முக்கிய பங்கு வகித்தது. குரக்கனில் பிட்டு. இடியப்பம், ரொட்டி என பல வகைகளில் தயாரிப்பார்கள்.
யாழ் குடாநாட்டில் இது பயிரிடப்படுவது குறைந்தாலும் அனுராதபுரம், மொனராஹல, ஹம்பாந்தோட்டை, கேகாலை, அம்பாறை போன்ற பகுதிகளில் இன்றும் பயிரடப்படுகிறது.

இது மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும். இதில் புரதம், நார்ப்பொருள், தாதுப் பொருட்கள், விட்டமின்கள் போதிய அளவில் உண்டு. கொழுப்பு குறைவாகவே இருக்கிறது.

புரதம் 7.6%, மாப்பொருள் 74. விகிதமும், நார்ப்பொருள் 1.52 சதவிகிதமும் உண்டு. தாதுப் பொருட்கள் 2.5 சதவிகிதமாகும்.. இதில் மக்னீசியம். மங்கனீஸ், பொஸ்பரஸ் ஆகியவை அடங்கும். கொழுப்பு 1.35 சதவிகிதம் மட்டுமே.

இதிலுள்ள நாரப்பொருளும் பொலிபினோல்ஸ் சும் பல விதத்தில் உடல் நலத்திற்கு நல்லவையாக இருக்கின்றன. முக்கியமாக உணவு விரைவாக அகத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. இதனால் நீரிழிவு நோயாளரின் குருதிச் சீனி அளவு மற்றும் கொலஸ்ரோல் திடீரென ஏறுவதைத் தடுக்கினறன. இதனால் நீரிழிவு மற்றும் கொலஸ்டரோல் நோயாளிகளுக்கு நல்லது.

மலச் சிக்கல் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

இதிலுள்ள மக்னீசியம் இருதயப் பாதுகாப்புக்கு நல்லது. ஆஸ்த்மா மோசமடைவதைத் தடுக்கும் அற்றல் கொண்டது. அத்துடன் மைகிறேன் என்று சொல்லப்டும் கபலா தலைவலி அடிக்கடி ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

நீரிழிவு நோயர்களுக்கு அரிசியை விட குரக்கன் நல்லது என்று சொல்கிறார்களே. அது உண்மையா?

அரிசியில் மாப்பொருளின் அளவு 73.7 சதவிகிதம் குரக்கனில் மாப்பொருளின் அளவு 69 சதவிகிதம். எனவே மேலேட்டமாகப் பாரக்கும்போது குரக்கன் நல்லதாகவே தெரிகிறது.

ஆனால் உணவுகளை ஒரே அளவில் உண்ணும் போது அவை குருதியில் சீனியின் அளவை எவ்வளவு அதிகரிக்கன்றன என்பதை Glycemic Index (GI) கிளைசீமிக் இன்டெக்ஸ் என்ற பெயரில் கணக்கிடுகிறார்கள். இது அதிகமாக இருந்தால் நீரிழிவாளர்களின் சீனி அளவு கூடுதலாக அதிகரிக்கும். குறைவாக இருந்தால் குறைவாக அதிகரிக்கும்.
ஆரிசி, குரக்கன்; இரண்டுமே (GI) அதிகமான உணவுகள்தான்.

ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

அரிசியில் செய்த பிட்டினதும் ரொட்டியினதும் (GI) வருவாறு 52 மற்றும் 64. ஆனால் குரக்கனில் செய்த பிட்டினதும் ரொட்டியினதும் (GI) 71ம் 80ம் உண்பதும் ஆகும்.

இதிலிருந்து இரண்டு விடயங்களை நாம் அறியலாம்.

ரொட்டியை விட பிட்டு நல்லது. குரக்கன் மாவை விட அரிசி மா இத்தகைய உணவுகளை தயாரிக்க நல்லது.

எனவே பொதுவாக அரிசியை விட குரக்கன் போசாக்கான உணவு என்ற போதும் நீரிழிவு நோயாளரைப் பொறுத்த வரை குரக்கனை விட அரிசி நல்லது.

நீங்கள் நீரிழிவு நோயாராக இருந்தால் ஒரு நாளுக்கு அரிசி உணவையும் அடுத்த நாளுக்கு குரக்கன் உணவையும் உண்ட பின்னர் 2 மணித்தியாலயங்களுக்கு பின்னர் உங்கள் இரத்த சீனியின் அளவை குளுக்கோ மீற்டரில் அளந்து பார்த்து தெளிவு பெறுங்கள்.

ஆனால் இரண்டு நாட்களிலும் உண்ணும் உணவின் அளவானது ஒரு அளவாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

இருந்த போதும் நீரிழிவு நோயாளருக்கு குரக்கன் கூடாது அரிசி நல்லது என்று அர்த்தப்படாது. இதை விட அது சற்று நல்லது என்று சொல்லலாம்.

அரிசி குரக்கன் உட்பட எந்த மாப்பொருள் உணவுகளை உண்ணும் போதும் பருப்பு பயறு சோயா காய்கறி என்பவற்றை 25 சதவிகிதம் சேர்த்துச் சாப்பிட்டால் சீனியின் அதிகமாக அதிகரிப்பதைத் தடுக்கலாம்
குரக்கன் அரிசியை சமைப்பதாயின் 24 மணி நேரம் நீரில் ஊறவிட்டு சமைத்தால் விரைவில் சமிபாடு அடையும். அத்துடன் அரிசி சமைப்பதற்கு வீடும் நீரை விட சற்று அதிக நீர் உபயோகிக்க வேண்டியிருக்கும்.

தமிழகத்தில் கேழ்வரகு என்றும் வடநாட்டில் ராகி என்றும் அழைக்கப்படுகிறது.

0.00.0

Read Full Post »

மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள்.

முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது கண்களைக் கூசிக் கொண்டே வந்தாள்.

கருவிழியில் ஏதாவது பிரச்சினையாக இருக்கும் என ஊகித்து கொண்டேன்.

நீங்கள் உற்றுப் பாருங்கள்
ஏதாவது தெரிகிறதா?

கண் கருவிழியின் மூக்கு பக்க ஒரமாக ஒரு சிறிய வெண் அடையாளத்தை அவதானித்தீர்களா?

தையல் வேலை செய்து கொண்டு இருக்கும் போது சீகுயின்ஸ் ஒட்ட வேண்டிய அவசியம் நேர்ந்தது.

புதிய super glue போத்தலை எடுத்து உள் மூடியை ஊசியால் துளைத்த போது அதிலிருந்து சீறிப் பாய்ந்த ஓரு துளி கண்ணைத் தாக்கிவிட்டது.

கருவிழியில் பட்டுவிட்டது. வேதனையுடன் ஓடி வந்திருந்தாள்.

மரப்பதற்கு கண்ணில் மருந்திட்டு எடுக்க நேர்ந்தது.

விழி மடல் முடிகளில் பட்டால் அவை ஒட்டி கண்ணை திறக்க முடியாமல் போகும். அம் முடிகளை வெட்டியே கண்களை திறக்க செய்ய முடியும்.

சருமத்தில் சிலருக்கு அழற்சி ஏற்படும். ஆயினும் வியட்நாம் போர் காலத்தில் சிறு காய்களை ஓட்டுவதற்கு இதனை பயன்படுத்தினார்கள்.

இரு விரல்களில் பட்டு அவை ஒட்டியவர்களும் இருக்கிறார்கள்.

இதைக் கரைக்க acetone உதவும். அவசரத்திற்கு nail polish remover யை பயன்படுத்தலாம். அதில் acetone இருக்கிறது.

இவளைப் போலவே மற்றொருவர் வந்திருந்தார். தனது மோட்டார் சைக்கிளில் ஏதோ உடைந்த பாகத்தை ஒட்ட முயன்ற போது கண்ணில் பட்டுவிட்டது.

முதல் பெண் செய்த அதே தவறைத்தான் இவரும் செய்திருந்தார்.

போத்தலை அழுத்தி பிடித்து கொண்டு மூடியை ஊசியால் துளைத்து திறக்க முயன்றதால் வந்த வினை.

இவ்வாறு தவறான முறையில் திறக்கும் போது போத்தலை பற்றியிருப்பதால் ஏற்படும் உள் அழுத்ததால், போட்ட துளை ஊடாக சூப்பர் குளூ வீச்சுடன் வெளியேறி கண்களைத் தாக்கியது.

எனவே சிபாரிசு செய்யப்பட்ட பாதுகாப்பான முறையிலேயே போத்தலை திறக்க வேண்டும்.

0.00.0

Read Full Post »

ரசனைக் குறிப்பு
பரணீதரனின் ‘அல்வாய் சண்டியன்’

‘சிறுகதை, கவிதை, நாவல் போன்ற புனைவுகளின் மீதான ஆர்வம் குறைந்து செல்கிறது’ என மிகச் சிறந்த கவிஞரும் இலக்கியவாதியுமான நண்பர் அ.யேசுராசா அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்த போதும் தேர்ந்த இலக்கியவாதிவாதியே இப்படி சொல்லும் போது சாதாரண ரசிகனான என் போன்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும் எனச் சிந்திக்கத் தோன்றியது.

20180629_124957

காரணம் என்னவாயிருக்கும்?; எமது வயது காரணமாக இருக்குமா அல்லது பெரும்பலான புனைவுகள் செக்கு மாடுகள் போல சலிக்க வைக்கும் ஒரே பாதையில் சுத்திச் சுத்திச் வருவதால் வாசித்து அலுத்துவிட்டது காரணமாக இருக்குமா தெரியவில்லை.

இருந்தபோதும் அண்மையில் மூன்று புத்தகங்களை ஆர்வத்தோடு படித்து முடித்தேன். ஞானம் பாலசந்திரனின் ‘பொய்மையும் வாய்மையிடத்து’ திருமதி சோமா ஜெயகொடியின் ‘சித்தார்த யசோதரா’ மற்றும் பரணீதரனின் ‘அல்வாய் சண்டியன்’.

பரணீதரனின் நூல் சிறுகதைத் தொகுதி மற்ற இரண்டும் நாவல்கள்.

பரணீதரனின் சிறுகதைத் தொகுதியை ஆர்வமாக படிக்க முடிந்ததற்கான காரணங்கள் எவை?

சிறுகதைகள் என்பவை சிறுகதைகளாக இருக்க வேண்டும். அளவில் மட்டுமல்ல சம்பவக் கோர்வைகளிலும் கூட. நாவல்களின் குட்டிகள் போலவோ காரண காரியங்களை ஆழ்ந்து ஆராயும் கட்டுரைகள் போலவோ வழவழா என்று இருக்கக் கூடாது. பேச வந்த கருவை சுருக்கமாக அழகான மொழியில் நறுக்கென நெஞ்சில் பதியும் வண்ணம் சொல்வதுடன் வாசகனை தன்னுடன் கைகோர்த்து பிணைத்து அழைத்துச் சொல்வது போல சுவார்ஸமானதாக இருக்க வேண்டும். அது இந்தத் தொகுப்பில் உள்ள படைப்புகளில் நிறையவே கிடைக்கிறது.

சுமார் 106 பக்கங்களை மட்டும் கொண்ட இந்தத் தொகுதியில் பத்து சிறுகதைகள் உள்ளடங்கியுளன. ஓவ்வொரு கதையும் சுமார் பத்து பக்கங்கள் மட்டுமே கொண்டுள்ளதாகக் கொள்ளலாம். அளவான சிறுகதைகள். சுருக்கமும் செறிவும் கொண்டவை. முன்னுரை வாழ்த்துரை, ஆய்வுரை. கருத்துரை என வாசகர்களான எங்களின் பொறுமையைச் சோதிக்காது அரைப் பக்க ‘என்னுரை’யைத் தாண்டி நேரடியாக படைப்புகளுடன் கைகோர்க்க முடிகிறது.

இவருடைய கதைகள் பெரும்பாலும் போரின் காரணமான சமூக மாந்தருக்கு ஏற்பட்ட பாதிப்புகளையே பேசுகின்றன. உயிரிழப்பு, உறவிழப்பு, அங்கயீனம், தனிமை, பொருளிழப்பு, வறுமை போன்ற பலவற்றைக் கதைகளுடே தர்சிக்க முடிந்தாலும் அவற்றின் ஊடுபொருளாக பெரும்பாலும் உளவியல் தாக்கங்கள் அமைவதைக் காண முடிகிறது. சகமாந்தரின உள்ளுணர்வுகளையும் மனக்கிடக்கைகளையும் உணர்ந்து கொள்ளக் கூடிய நுண்ணறிவு கொண்ட ஒருவருக்கே இது சாத்தியமாகும். மேலதிகமாக, புத்திபூர்வமான தேடலும் இருந்திருக்கலாம். உளவியலையும் தனது பட்டப் படிப்பில் ஒரு பாடமாக பரணீதரன் எடுத்துக் கொண்டிருந்தாரோ என்பது எனக்குத் தெரியாது .

பரணீதரனின் பாத்திரங்களும் களங்களும் பலதரப்பட்டவை. வாசகர்களில் பெரும்பாலானவர்கள் போலவே இவரது கதை மாந்தர்களும் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆசிரியர்கள் மாணவர்கள், அரச சேவையாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள். இத்தகைய பாத்திரங்களும் களங்களும் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் ஆசிரியருக்கும் நன்கு பரிச்சயமான வாழ்வும் மனிதர்களுமே அவை. அவரது வாழ்வில் காண்பபை கேட்பவை உணர்பவை எனலாம். சொல்லும் மொழியில் சுவை இருந்தால் அனுபவம் சார்ந்த படைப்புகள் உயிரோட்டாக அமைவதில்லை வியப்பில்லை.

ஆயினும் தனக்குச் சற்றேனும் தொடர்பற்ற களங்களில் அமையும் இரு கதைகளான வெட்டியான் மற்றும் நினைந்ததுமற்று நினையாமையுமற்று … ஆகிய இரு கதைகளும் மிகவும் வித்தியாசமானவை. சமூக பொருளாதார நாகரீக நிலைகளில் எட்டாத் துருவங்களில் நிற்பவை.

இருந்தபோதும் அவை இரண்டும் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

நினைந்ததுமற்று நினையாமையுமற்று … மிகவும் வித்தியாசமான கதை. அதன் ஆரம்ப வசனங்களே புதிய சூழலுக்குள் வாசகனை ஈர்த்து ஆர்வமுடன் வாசிக்கத் தூண்டுகின்றன. ‘காலையில் முதலில் எதிர்ப்படுவோரைக் கண்டதும் உதிர்க்கும் பழழன னயலஇ அயவந சூ இதழ்கரையோரம் தோன்றும் சநயனல அயனந புன்சிரிப்பு.’ இவை போதாதா கதையோடு இணைய வைப்பதற்கு.

இக் கதை முழுவதும் வித்தியாசமான புனைவாகவே இருக்கிறது. விசேட அறிவியல் நிபுணத்துவம், முதுமையின் குழந்தைத்தனம், களங்கமற்ற அன்பு, மருத்துவ அறிகுறிகள் இவற்டையே இழையோடும் நுட்பமான புதிர், எனப் பலவும் இச் சிறுகதையில் குறுகப் புனைவாகியுள்ளன. ஆனால் சிறுகதையின் வார்ப்ப்பானது வாசகனை ஒரே மூச்சில் படித்து முடிக்க வைக்கிறது.

மற்றது வெட்டியான் என்ற சிறுகதை. பேராசிரியர் எமில் சமூக அந்தஸ்தில் ஒரு துருவம் என்றால் வெட்டியான் மூர்த்தி சமூக அந்தஸ்தில் மறு துருவம்.

ஒரு குடிகாரன் பற்றிய கதை. குடிப்பவர்களைக் கண்டாலே மருத்துவன் என்ற ரீதியில் எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். உழைக்கும் காசைக் கொட்டி தங்கள் உடலைக் கெடுத்து நோயை வாங்குகிறார்களே என்றதனால். அத்துடன் தங்கள் பொருளாதார நிலையை குழிதோண்டிப் புதைப்பதுடன் மனைவி பிள்ளை குட்டிகளின் குடும்ப மானத்தை வாங்குகிறார்களே என்ற ஆதங்கம்.

ஆனால் எதற்கும் ஒரு மறுபக்கம் இருக்கக் கூடும் என்பதற்கு இக்கதை நல்ல ஒரு உதாரணம். அன்பான மனைவி, குழந்தைகள் இருந்தும் குடிக்கிறான். ஏன் குடிக்கிறான். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். பசியாற்ற வேண்டும், பாடசாலை செல்ல வைக்க வேண்டும் என்பதற்காகக் குடிக்கிறான். கேட்பதற்கு அபத்தமாக தோன்றினாலும் அதுதான் இக்கதையின் அடிப்படையாக இருக்கிறது.

கோபப்பட வேண்டிய பாத்திரத்தை மதிக்க வைக்க வைத்துள்ளமை படைப்பாளியின் திறமையைக் காட்டுகிறது.

மாணவர்களின் உலகம் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் உளவியல் தாக்கங்கள் போன்றவற்றை ‘இடமாற்றம்’ மற்றும் ‘அல்வாய் சண்டியன்’ ஆகிய படைப்புகளில் தரிசிக்க முடிகிறது. நல்லாசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் எவ்வாறு இருக்கக் கூடாது போன்றவை மறைபொருளாக வெளிப்படுகிறது. படமுடியாது இனித் துயரம் சிறுகதையிலும் பாடசாலை வாழ்வின் சில அம்சங்கள் சொல்லப்பட்ட போதும் அது பேசும் உள்ளடக்கம் முற்றிலும் வேறானது.

வெளிநாட்டுக்காரர் நாட்டுக்கு வந்து திரும்புவது பற்றிப் பேசும் படைப்புகள் இரண்டு இருக்கின்றன. வெளிநாடுகளில் எவ்வளவு கஸ்டப்பட்டு உழைத்து சலித்தாலும் இங்கு வந்ததும் தங்கள் பவிசுகளைக் காட்டி உறவுகளை வாய்பிளக்க வைக்கிற பலரைப் போல அல்லாது தனது மண்ணையும் மக்களையும் உறவுகளை நேசிக்கிறவர்கள் பற்றி கதைகளாக இருக்கின்றன. உறவுகளின் நேசத்தில் மனம் நிறையும் மனிதர்களைப் பற்றிய கதைகள் இவை. உறவுகளுக்கு கைகொடுத்து உயர்த்தும் மனம் கொண்ட நல்ல மனதுள்ளவர்கள் முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். மீண்டும் பிரிய நேர்வது அவர்கள் மனத்தை சஞ்சலப்படுத்துகிறது.

உண்மையும் அதுதானே வெளிநாடு சென்னறவர்களின் உதவி இல்லையெனில் இங்கு பலர் நட்டாற்றில் நிற்க வேண்டியிருந்திருக்கும்.

எம் இனத்தின் விடிவிற்காக போராடப் புறப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்பவர்களை எம்மவர்கள் கண்டுகௌ;ளாமலும் புறக்கணித்தும் வருவது வேதனைக்குரியது. அவர்களில் பலர் அங்கயீனர்களாகவும் வறுமையில் உழல்பவர்களாகவும் இருக்கிறார்கள். மீளப் பிறந்தவர்கள் கதை சற்று வித்தியாசமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மாலதி இனத்திற்கான தன் பங்களிப்பை வெளிப்படுத்தி சகாயம் பெற விரும்பாதவளாக இருக்கிறாள். போராளிகளின் கண்ணியத்தையும பெருமையையும் விற்பனைப் பொருளாக்கி அவமானப்படுத்த விரும்பாதவளாக இருக்கிறாள். மனதைத் தொடும் படைப்பு.

சாதீயம் ஒரு கதையில் மட்டுமே கருவாகியுள்ளது.

பரணீதரன் பல்துறை ஆளுமை கொண்டவர். படைப்பாளி, சஞ்சிகை ஆசிரியர், பதிப்பகம், இசை நாடக நடிகர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்து படைப்புகளை ஆவணமாக்கும் பணியில் தன்னை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தியுள்ளார்.

இவ்வளவு பணிகளுக்கும் இடையில்; படைப்புலகில் முழுமையாக ஈடுபடுவது அசாத்தியம் என்றபோதும் படைப்பின் மீதான ஆர்வமும், படைப்புலகில் தனது இருப்பை உறுதிப்பபடுத்தியுள்ளமைக்கு இந்தத் தொகுப்பு சான்றாக அமைகிறது. சிறுகதை உலகில் தனது ஆற்றலை மேலும் மெருகுபடுத்திக் கொண்டால் ஈழத்து முன்னணி படைப்பாளிகளில் ஒருவராக வருவது நிச்சயம்.

20180629_125010

அழகான வடிவமைப்பு. வாசிப்பதற்கு இதமான தமிழ் பொண்ட். ஜீவநதி வெளியீடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் ஜீவநதி பதிப்பகத்தின் நூல்கள் அனைத்துமே அழகான வாசிப்பதற்கு இதமான வடிவமைப்பை கொண்டவையாக இருப்பதுதான்.

இக்கட்டுரையை புதுவிதி வார இதழில் வெளியிட்ட ஆசிரியருக்கு எனது நன்றிகள்

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

« Newer Posts - Older Posts »