Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘இலக்கியம்’

பஞ்சம் பிழைக்க வந்த சீமை

மு.சிவலிஙகம் எழுதிய மலையக மக்களின் வரவாற்று நாவல்.

அண்மையில் வந்த மிக முக்கியமான ஒரு நூல் என நம்புகிறேன்.

ஏனெனில் அந்த மக்கள் இங்கு ஆரம்பத்தில் வந்த வரலாற்றையும் இங்கு அந்நேரத்தில் மலைகளை சுத்தம் செய்து ஆரம்பத்தில் கோப்பி தோட்டங்கள் அமைத்தது பற்றியும், பின்னர் தேயிலை தோட்டங்கள் ஆரம்பித்த போது அவற்றில் வேலை செய்தது பற்றியும் மிக விரிவாகப் பேசுகின்றது.

ஆனால் அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்ல முடியாதவை.

1820-30 காலப்பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக அவர்கள் எங்காவது போய் உழைத்து உயிரைக் காக்க முயல்கிறார்கள்.

திருச்சியிலிருந்து பாம்பனுக்கு காடுகள் வழியே நடையாகவே வருகிறார்.

வழியில் பசியாலும். களையாலும் இறந்து மடிகிறார்கள். பாம்பன் தலைமன்னார் கப்பல் பயணத்தில் கப்பலே தாண்டு மடிகிறார்கள். மன்னாரிலிருந்து மதவாச்சி வரை பாதை காட்டுப்பாதை. அங்கும் பசி பட்டினியாலும் சிநுத்தை போன்ற காட்டு மிருகங்களால் பலர் மடிகிறார்கள். நோய்வாய்ப்பட்டும் மடிகிறார்கள்

இங்கு வந்து அவர்கள் கங்காணிமார்களாலும் துரைமார்களாலும் அடக்கப்படுவது. அவர்களது உழைப்பு சுரண்டப்படுவது. பெண்கள பலாத்காரம் செய்யப்படுவத என மிகவும் விஸ்தாரமாகவும் மனதைத் தொடும்படி சொல்லியுள்ளார்.

உண்மையில் அவர்கள் இங்கு வந்த வரலாற்றை சொல்லும் முதல் படைப்பு என்று சொல்லலாம். அதனால் மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய நூலாக இருக்கிறது. இதற்கான பாரிய தேடல் செய்த அவரது உழைப்பு பாரட்டப்பட வேண்டியதாகும்.

துன்பத்தில் உழலும் மலையக தோட்ட தொழிலாளி மக்கள் பற்றி புதுமைப் பித்தன் தனது துன்பக்கேணியில் எழுதியுள்ளார் தூரத்துப் பச்சையையும் வாசித்திருக்கிறோம்.

ஆனால் இது அவற்றையெல்லாம் விட ஒரு பரந்த பார்வையைத் தருகிறது

கிட்டத்தட்ட 400 பக்கங்கள் நீளும் நூல் இது.

பேராசிரியர் செ.யோகராசா மிகவும் காத்திரமான முன்னுரை தந்திருக்கிறார்.

அதே போல பேராசிரியர்.சோ.சந்திரசேகரம் சிறந்த அணிந்துரையையும் தந்துள்ளார்.

இது ஒரு கொடகே வெளியீடு. விலை ருபா 1000/=
661, 665, 675, மருதானை வீதி கொழும்பு 10
Tel:- 011 2685369, 2686925

Read Full Post »

கவி மீனாவின் சிறுகதைத் தொகுப்பு

இது முடங்கல் காலம். கொரோனா தொற்று காரணமாக வெளியே திரிய முடியாது வீட்டுக்குள் முடங்க வேண்டிய காலமாயிற்று. சினிமா இல்லை. பூங்கா விஜயம் கிடையாது. உறவினர் வீடுகளுக்கும் போக முடியாது. வாசிப்பும், காணொளியும் மட்டுமே வாழ்வாயிற்று.

https://issuu.com/kavi.meena/docs/_________________

அதற்கு ஏற்றாற் போல, காலத்தின் தேவை போல கவி மீனா தனது முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.

கூட்டம் இல்லை, வெளியீட்டு விழா இல்லை: எந்த வித ஆரப்பாட்டமும் இல்லாமல் தனது நூலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதே போலத்தான் ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் சினிமாவும் கூட இணையத்தில்தான் வெளியாகியுள்ளது.

20 பக்கங்கள் நீளும் இந்த தொகுதியில் மொத்தம் 9 சிறுகதைகள் அடங்கியுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தாயக மண்ணின் மாந்தரின் வாழ்வைப் பேசும் அதே நேரம் புலம் பெயர் வாழ்வின் கோலங்களையும் வாசகர் பார்வைக்கு வைக்கின்றன.

முதல் கதை ஆத்ம திருப்தி என்பதாகும்.

பின் நோக்கிச் சொல்லப்படும் கதை இது.

வெளி நாட்டிற்கு சென்ற ஒருவன் (ரவி) அங்கு தங்கியிருக்க விரும்பாமல் மீண்டும் தாய் மண்ணுக்கு வந்து தந்தை உட்பட உறவுகள் நண்பர்களின் பேச்சுக்கும், ஏளனத்திக்கும் ஆளாகிறான்.

அவன் ஏன் திரும்பி வந்தான். அதைச் சொல்வதுதான் கதை. நிச்சயமாக சொல்லப்பட வேண்டிய கதை.

ஒரு பிரபல பாடசாலையில் மதிப்பு மிகு ஆசிரியராக இருந்த அவன் அங்கு, இங்கு செய்யவும் தயங்கும் பல வேலைகளை மனதைக் கடித்துக்கொண்டு செய்வதும், தங்குவுதற்கு ஆமான இடமின்றி துன்பப்படுவதும், இனத் துவேசத்திற்கு முகம் கொடுப்பதும்…. எத்தனை எத்தனை துன்பங்கள்.

யாழ் மண்ணில் தலைவிரித்தாடும் வெளிநாட்டு மோகத்திற்கு சாட்டை அடி கொடுக்கும் அவசியமான படைப்பு.

அடுத்த கதை ஏங்கித் தவிக்குது தாய் மனம் என்பதாகும். தலைப்பே பொருளை உணர்த்தி நிற்கிறது.

யாழ் மண்ணின் கட்டுப்பாடான பண்பாட்டு முறையில் வாழ்ந்த அவள் ஜேர்மனயில் இப்போது வாழும்போது வளர்ந்த தனது மகளும் அதே விதமான பாரம்பரிய முறையில் பண்பாக வாழ வைக்க வேண்டும் என விருப்புகிறாள்.
மகளும் அடங்கி நடக்கிறாள். ஆனால் திடீரென ஒருநாள் யாவும் தலைகீழாக மாறும் நிலைக்கு முகம் கொடுக்க நேர்கிறது.

வாழும் இடம்இ சூழல் போன்றவை எமது வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கின்றன. அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினர் அந்த மண்ணின் சூழலுக்கு ஏற்பவே வாழ்வார்கள். அதைக் கட்டுப்பாடுகள் விதித்து மாற்ற முயல்வது முடியாத காரியமாக ஆகிவிடும் என்பதைச் சொல்கிறது

யாழ் மண்ணின் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சி தருவதாக அமையக் கூடும் ஆயினும் யாதார்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது இக் கதை.

சித்திரையில் சிறுவன் என்பது அடுத்த கதை. சித்திரை மாசத்த்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது என்பது எமது மக்களின் நம்பிக்கை. இது போன்ற எத்தனையோ காலத்திற்கு ஒவ்வாத பல மூட நம்பிக்கைகளை எமது தமிழ் சமூகம்  இன்னமும் சுமந்து வருகிறது. சிறு வயது முதல் பலரும் பல தடவைகள் இவனது பிறப்பை ஒரு தோசமாகச் சொல்லி இவன் மனதைத் துன்ப்பப் படுத்துவதுடன் கோபத்திற்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாக்குவதை கதாசிரியை சம்பவங்கள் ஊடாக சொல்லிக் கதையை நகர்த்துகிறார்

கரு நாக்கு, நாகதோசம் என்ற பேச்சுக்களும் அவனைத் துன்புறுத்தியதை வாசிக்க மனது நோகிறது. இத்தகைய மூட நம்பிக்கைகளிலிருந்து என்றுதான் எமது சமூகம் விடுபடும் என்ற ஏக்கம் தொற்றுகிறது இக் கதையைப் படித்த போது.

ஒரு ஈழக் கறுப்பன் செய்த காதல் என்பது புகுந்து நாட்டில் வெளிறாட்டுப் பெண்ணை ஏமாற்றி வாழ்ந்து விட்டு கைகழுவிவிடும் நயவஞசகத்தை தோலுரித்துக் காட்டும் கதை.

இப்படியாக ஒவ்வொரு கதையும் எமது வாழ்வைப் பேசுகிறது. உன்னதங்களை மட்டும் பேசாமல் ஏமாற்றுகள் நயவஞ்சகங்களையும் பேசுகிறது.

யதார்த்தமான கதைகள். விழங்க முடியா முடிச்சுகள் கிடையாது. எம் மக்களின் மற்றுமொரு முகத்தைக் காட்டும் கதைகள் எனலாம்
நீங்களே படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தையும் பகிரலாமே

Read Full Post »

வாழ்வின் நெருக்கடியான ஒரு தருணத்தின் கதை

இமையத்தின் ‘செல்லாத பணம்’

இரண்டு நாட்களாக அழுது தீர்க்க முடியாத துயரில் மூழ்கித் திணறிக் கொண்டிருந்தேன். ரேவதியின் தகப்பன் நடேசன், தாய் அமராவதி, அண்ணன் முருகன், அண்ணி அருள்மொழி இவர்களுடன் ஜிப்மர் மருத்துவமனையின் எரிகாயப் பிரிவின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வாசலில் பசியையும் தாகத்தையும் மறந்து நின்று, அவர்கள் துயரில் பங்காளியாக இருக்க நேர்ந்தது. அவர்களது கோபமும் ஆற்றாமையும் கூட என்னையும் ஆட்கொண்டிருந்தது. கணவன் ரவியை அவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைக்க வேண்டும் போலிருந்தது.

220 பக்கங்களைக் கொண்ட இமையத்தின் நாவல் செல்லாத பணம். பணம் வாழ்க்கைக்கு அவசியமாக இருந்த போதும் கூட அது எல்லாத் தருணங்களிலும் நித்திய வாழ்வில் பயன்படுவதில்லை என்பதையே நாவலின் தலைப்பு சுட்டுவதாக இருந்தபோதும் அந்த நாவல் எங்களுக்கு கடத்தும் வாசிப்பு அனுபவம் பரந்தது. உள்ளத்தை ஊடுருவி அதிலும் முக்கியமாக வாழ்வின் துயர் மிகு தருணங்களில் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளையே இலக்கியமாக்கியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

தமிழ் சமூகத்தில் பெண்கள் எவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தப்பகிறார்கள், குடும்ப வன்முறைக்கு ஆளாகுகிறார்கள். இருந்தபோதும் குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவற்றையெல்லாம் மூடி மறைத்து மௌனம் காக்கிறார்கள். மன்னித்து தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளையே காப்பாற்றியும் விடுகிறர்கள் என்பதை நித்தம் காணமுடிகிறது. ஆனால் இந்த நாவலானது அதற்கும் அப்பால், தீக்குளிப்பிற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை ஊடாக துயரத்தின் ஆழத்தை ஆணி அடித்தாற்போல காட்சிப் படுத்துகிறது.

எஜ்ஜினியரிங் படித்த வசதியான ஹெட்மாஸ்டரின் மகளான அவள் பர்மா பஜாரைச் சார்ந்த ஆட்டோ ஓட்டினரை காதலிப்பதும், பெற்றோர்கள் மறுப்பதும் அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதும், அதனால் வேறு வழியின்றி அவளை அவனுக்கு கட்டிக் கொடுப்பதுமான கதையின் முன்பகுதி 20 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிறது. மிச்சம் முழுவதும் அவள் மருத்துவமனையில் கிடக்கும் போது நடக்கும் கதைதான். அதுவும் பெரும்பாலும் உரையாடல் ஊடாக. அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல்கள்.

கதையில் திடீர் திருப்பங்கள் கிடையாது. ஆச்சரியங்கள் காத்திருக்கவி;ல்லை. ஆனால் ஒரு சிறிய கேள்வி கதை முழுவதும் தொக்கிக் கொண்டே நிற்கிறது. தீக்குளிப்பு தற்செயலாக நடந்ததா அல்லது கணவன் மூட்டிவிட்டானா என்பதே அது. இதற்கு எந்த முடிவையும் சுட்டிக்காட்டாமலே நாவல் முடிவடைகிறது. ஆனாலும் கூட ரேவதியினதும் அவளது குடும்பத்தினரதும் கண்ணீரோடு எங்களை கண்ணீரையும் கலக்க வைப்பது நாவலின் இறுதிவரை தொடர்கிறது. இதுவே அப் படைப்பின் வெற்றி எனலாம்.

மருத்துமனையின் தீக்காயப் பிரிவின் வேறு வேறு பகுதிகள், எத்தனை பேர்ச்சன்ட் தீக்காயப் பாதிப்பு, அதன் பாதகங்கள் எவ்வாறானவை போன்ற விபரங்கள். அவசரசிகிச்சை பிரிவு, அதன் செயற்பாடுகள். மருத்துவர்கள் தாதியரின் பணிகள்;, நோயாளிகளின் உறவுவினர்களடானான அவர்களது அணுகுமுறைகள் என அந்த மருத்துமனையின் இயக்கத்தை முழுமையாக அறிந்து கொள்கிறோம். அங்கு மரணங்கள் மலிந்து கிடக்கின்றன. அடிக்கடி தீக்குளிப்புக்கு ஆளானவர்களை அம்புலனஸ் வண்டிகள் ஏற்றி வருவது போலவே, இறந்த உடல்களை எடுத்துச் செல்ல பிரேத காவு வண்டிகள் வருகின்றன.

கண்ணீரும் கவலையும் ஆழ்ந்தகன்ற சமுத்திரம் போல நீக்கமற நிறைந்திருந்த போதும் கன்ரீனுக்கு சென்று வந்தே உறவினர்கள் தங்கள் உயிரைத் தக்கவைப்பதையும் உணர முடிகிறது.

நோயாளிகளைப் பார்ப்பதற்கு காத்திருக்கும் உறவினர்களின் உரையடல்கள் ஊடாக பலவித தகவல்கள் வருகின்றன. நோயால் துடிக்கும் பாத்திரங்களின் வாயிலாக அன்றி பார்த்திருப்பவர்களின் கூற்றாக உயிரின் வதை சொல்லப்படும்போது நெருப்பில் போட்ட நெய்யாக மனம் உருகிக் கரைகிறது. இமையத்தின் சொல்லாட்சியால் அந்தக் களத்தில் நாமும் ஒரு பாத்திரமாகவே மாறிவிடும் மாயவித்தை அரங்கேறுகிறது.

கணவனான ரவி, ரேவதியின் மச்சினியான அருள்மொழியுடன் பேசும் பகுதி முக்கியமானது. எல்லோராலும் திட்டப்பட்டு கெட்டவன் என ஒதுக்கப்படும் ரவியின் மனதில் என்ன இருந்தது என்பதைக் காட்டும் அருமையான பகுதி. கெட்டவன் எனத் தூற்றபடுபவன் மனதிலும் பல ஆதங்கங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இமையத்தின் கதை சொல்லும் ஆற்றல் நாம் அறியதது அல்ல. இருந்தபோதும் அதை இந்த நாவலை மிக அடர்த்தியாக அதே நேரம் உணர்வுகள் தோய்ந்ததாக சொல்லியிருப்பது வியக்க வைக்கிறது. காலப்பாய்ச்சல் ஊடாக ஒரு பெரிய களத்தை அங்கும் இங்கும் நகர்த்தி, உயிர்த்துடிப்புடன் வடித்திருப்பது நயக்க வைக்கிறது.

அண்மையில் பல நாவல்கள் மற்றும் சிறுகதை நூல்களைப் படிக்க முடிந்தது. ஆனால் இதற்கு இணையாக எதையும் சொல்ல முடியவில்லை.

நூல்:- செல்லாத பணம் (நாவல்)

நூலாசிரியர்:- இமையம்

வெளியீடு க்ரியா

CreA, No2,17th East Street, Kamaraj Nagar, Thiruvanmiyur,  Chennai 600 041,

Phone 7299905950

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

Read Full Post »

நிகழ்வாழ்வின் கோலங்களாக விரியும் கவிதைகள்
மணற்கும்பி

அட்டைப்படத்தில் உள்ள மணல் மேட்டையும் மணற்கும்பி என்ற நூலின் தலைப்பையும் பார்த்த உடனேயே நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லை. ஆயினும் நூலாசிரியர் ரஜிதா இராசரத்தினம் நூலைத் தந்த போது நோயாளி அருகில் காத்திருந்ததால் அட்டைப்படத்தை ஆசையோடு மிருதுவாகத் தடவுவது மட்டுமே சாத்தியமானது.

நானும் வடமராட்சி மண்ணைச் சார்ந்தவன். வல்லிபுர தீர்த்தக் கடற்கரையிலும், மணற்காட்டிலும் நாகர்கோவிலிலும் பரந்து கிடந்த மணல் மேடுகளில் மாணவப் பருவம் முதல் இளைக்க இளைக்க ஓடி ஏறிய அனுபவங்கள் நிறையவே உண்டு. ‘நாசியேறக் கனிந்திருக்கும் நாவற்பழங்களின் சுவையையும்..’ அனுபவித்தவன் நான். ஆனால் அண்மைக் காலங்களில் சென்ற போது 70 வயதிலிலும் மூச்சிளைக்காது அங்கு நடக்க முடிந்தது. மூச்சளைக்காததற்கு காரணம் எனது நல்ல ஆரோக்கியம் அல்ல.

‘அம்மா சொன்ன அந்த
பனையளவு உயர மணல்கும்பி
இப்போது தேடியும்
கிடைக்கவில்லை…’

ஆம் தொலைத்துவிட்டோம் இயற்கை வளங்களை. மிஞ்சி இருப்பவற்றையும் தொடர்ந்தும் சூறையாடி அழித்துக் கொண்டே இருக்கிறோம்.

மணற்கும்பிகளை மட்டுமல்ல.

‘…ஆசையாய் ஊஞ்சல்
கட்டி ஆடிய – அந்த
வயதான வேப்பமரங்களும்
விறக்குக்காய் வெட்டுண்டு
போனதுவே…’

இயற்கையே நேசிப்பதும், ரசிப்பதும், அதில் ஊறித் திளைப்பதும் கவிஞனுக்கு கிடைத்த வரம். அதை அழிப்பது கண்டு கலங்கும் மனமும் அங்கிருக்கும். ரஜிதா இராசரத்தினம் அவர்களிடம் இத்தகைய பண்புகள் நிறையவே இருப்பதை மேற் கூறிய உதாரணங்களில் மட்டுமின்றி இன்னும் பல கவிதைகள் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது. தான் ரசித்ததை இனிய வரிகளில் சொல்லி அந்த ரசனையை எங்களுக்கும் தொட்டவைக்கவும் முடிகிறது அவரால்.

இன்னொரு கவிதையில் பொலித்தீன் பாவனை பற்றி இவ்வாறு

‘மிச்ச எலும்போடு
இப்பகூட உக்கியிருக்காத
அந்த லஞ்ச்சீட் பையும்…’

ரசனையோடு நின்றுவிடாது பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு வரும் மூடப் பழக்கவழகங்களை கண்டித்துத் திருத்தும் அறிவியல் பார்வையையும் இவரது கவிதைகளில் காண முடிந்தது.

‘வடக்காலயோ
கிழக்காலயோ
இல்ல தெற்காலயோ…’
‘அட கோதாரி விழுவாரே
பல்லி தன்ர பசியிலை கத்திது
அதின்ர வாய்
நீங்கள் பாக்காம – உங்கட
சோலிய பாருங்கோ …’

பொதுவாக கவிதை என்பது உணர்வு நிலை சார்ந்தது. சொல் ஆளுமை, கலைத்துவ வெளிப்பாடு ஆகியன கருத்து வெளிப்பாட்டை மேவிநிற்கும். ரஜிதாவின் படைப்புகளில் இரண்டிற்கும் இடையேயான ஒரு சமநிலையை பேணப்படுவதை அவதானிக்க முடிகிறது. ஆம் அவரது கவிதைகளில் வலுவான செய்தி இருக்கிறது. அதே நேரம் அவற்றை கலைநயத்தோடு வெளிப்படுத்த முனையும் கவிதா மொழியையும் காண்கிறோம்.

இந்தத் தேசம் இந்து சமுத்திரத்தில் மிதக்கும் தீவு அல்ல. குருதிக் கடலில் ருசி தேடும் யம தேசம். 79, 83, முள்ளிவாய்க்கால் பேரழிப்பு, ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்கள் என முடிவில்லாமல் இரத்ததாகம் கொண்ட நாடு.

ரஜிதாவின் குரலில் இவ்வாறு

‘தீச்சுடர் புசித்த தேசமடி
இரத்தவாடையுடனாய்
மூச்சையற்றோம்…
….. மலங்களோடு மாமிசமானோம்
பிண்டமறுந்த நர ஊன்களு10டாய்
ஏதோவென்றைப் பற்றி
குருதிக் கடலில்
எங்கோ வந்தும் சேர்ந்தோம்,…’

குருதிக்கடல் மட்டுமல்ல தொலைத்த உறவுகளும் ஏராளம். அவர்கள் விடும் கண்ணீர் பதவியில் இருப்போர் கண்களில் படுவதில்லை. தற்செயலாக அவர்கள் காதில் விழுந்தாலும் நிறைவேற்றப்பட்டாத பொய் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கும்.

காணமல் ஆக்கப்பட்ட தந்தையைப் பற்றிய ஒரு பிள்ளையின் நினைவுகள் இவ்வாறு .

‘மூன்று வயதில் பார்த்தது
முகங் கூட நினைவில் இல்லை..
தேடி கண்டு பிடிக்கக் கோரி
பல இடம் கொடுத்த நிழற்படங்கள் ஏராளம்’

ரஜிதாவின் கவிதை மொழி இயல்பானது. வாசகனை கைகோர்த்து கூடவே அழைத்துச் செல்வதாகவே இருக்கிறது. மருள வைக்கும் வெற்றலங்கார சொற் சோடனைகள் கிடையாது. திகைத்து ஒதுங்க வைக்கும் மொழியாடல் கிடையாது. வட்டார வழக்குகள் இயல்பாக கலந்து வருகின்றன.

வடமராட்சி கிழக்கு மண்ணின் பேச்சு வழக்கு கவிதைகளில் கலந்து வருவது யதார்த்த வாழ்வைப் பிரதிபலிப்பதுடன் சுகமான அனுபவமாகவும் இருக்கிறது. அளாப்பி, அப்பேக்க, எழுதேக்க, கோதாரி விழுவாரே, எணை, உண்ணான, பிசகாம,… எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம். பக்கம் பக்கமாக நீளும்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவிலா போராட்டம். சவால்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரும். துன்பங்களும் இனிய நிகழ்வுகளும் சங்கிலித் தொடராய் முடிவின்றி நீளும். சலிக்காது வாழ்வது மட்டும் போதாது. அதை ரசிக்கவும் வேண்டும்.

ரஜிதா ஒரு இளம் பெண், இது அவரது கன்னி முயற்சி. ஆயினும் அவர் வாழ்வை ரசிக்கிறார். கடந்தவற்றில் திளைக்கிறார். நிகழ்வாழ்வை ரசனையோடு அனுபவிக்கிறார். எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கிறார். அவரது படைப்பாளுமையின் கூறுகள் கூடாக நாமும் வாழ்வை ரசிக்க முடிகிறது. மனித வாழ்வின் மறைந்திருந்த கோலங்கள் பற்றிய பரந்த பார்வையை நாவற்பழம் என இனிக்கும் மொழில் நாமும் பெறுகிறோம்.

இது அவரது முதல் நூல். புதிய வீச்சுக்களுடன் இன்னும் பல படைப்புகளை அவர் தர வேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கான கீற்றுகளை இப்பொழுதே காண முடிகிறது.

ஜீவநதி ஜீலை 2019 இதழில் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

நான் கனவிலும் நினைத்திருக்க முடியாத ஒரு காரியம் சாத்தியமாயிற்று. அவுஸ்திரேலியா, மலேசியா, தமிழ்நாடு, வடஇந்தியா என முற்றிலும் எதிர்பாராத ஒரு குறுகிய பயணம் சில நாட்களுக்குள் நடந்தேறியது. சாதாரண மக்களை மட்டுமின்றி, சில உயர் அதிகாரிகளையும் பிரமுகர்களையும் கூட சந்திக்க முடிந்தமை என் அதிர்ஸ்டம்தான். அதற்குள் சற்று சுவார்சமான விடயமாக வெள்ளைக்காரி போல தோற்றமளித்த ஒரு இளம் பெண்ணின் கறுத்த முலைகளைக் பார்த்து அவள் ஒரு ஜிப்ஸிப் பெண் என்பதை உறுதிப்படுத்தவும் முடிந்தது.

இவை யாவும் நொயல் நடசேனின் உபயத்தில் அவரது கானல் தேசம் நாவல் ஊடாக கிடைத்தது. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் எழுந்த பல படைப்புகளைப் படித்திருப்பீர்கள். நானும் நிறையவே படித்திருக்கிறேன். நேரடி அனுபவங்களும் நிறையவே உண்டு.

துப்பாக்கி ரவைகளும் எறிகணைத் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுகளும் இலக்கின்றித் தாக்கி அப்பாவி உயிர்களை காவு கொண்ட கொடுரமான அனுபவங்கள் மறக்க முடியாதவை. சிகிச்சை அளிக்க நேர்ந்ததும் உண்டு. நோயாளியாகாமல் மயிரிழையில் தப்பியதும் உண்டு. இதுவரை படித்த ஈழத்து விடுதலைப் போராட்டம் சம்பந்தமான இலக்கியங்கள் யாவுமே நாம் அனுபத்தில் அறிந்த விடயங்களையே அழகியல் முலாம் பூசிய இலக்கியப் படைப்புகளாக ரசிக்க நேர்ந்தது.

ஆனால் நடேசனின் படைப்பு முற்றிலும் மாறுபட்டது. அது பேசும் பொருள் புதிது, அதன் நிகழ்புலங்கள் வேறுபட்டவை. அது வரையும் காட்சிகள் அந்நியமானவை. ஆனால் அது சிந்தும் வார்த்தைகளும் உவமைகளும் எமது மண்ணின் மணம் வீசுபவை.

எமது இனவிடுதலைப் போராட்ட காலத்தில் யாழ் மண்ணிலும், பிற்கூற்றை கொழும்பிலுமாக வாழ்ந்தவன் நான். போரின் உள் ரகசியங்களை, திரைக்குப் பின்னாலான செயற்பாடுகளை ஏனைய பொது மக்கள் போலவே நானும் அறிந்தது இல்லை. குடாநாட்டில் வாழ்ந்த போது புலிகள் சொல்வதையும், கொழும்பில் வாழ்ந்தபோது இலங்கை அரசு சொல்வதையுமே உண்மை என நம்ப நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆனால் நடேசனின் கானல் தேசத்தைப் படித்தபோது நான் அறிந்திராத ஒரு புது உலகம் என் முன் விரிந்தது.

இவ்வாறெல்லாம் நடந்ததா? வெளிநாட்டு அரசுகள் எவ்வாறு இப்போரின் பின்நிலையில் இயங்கின. அவர்களது உளவு நிறுவனங்கள் எங்கெல்லாம், எவ்வாறு ஊடுருவி இருந்தன, எமது பொடியளின் சர்வதேச வலையடைப்பு எவ்வாறு இயங்கியது. உள்நாட்டிலும் எங்களுக்கு தெரியாமல் கண்கட்டி வித்தையாக, இப்படியான காரியங்களை எல்லாம் செய்தார்களா என ஆச்சரியப்பட வைத்தது.

பொடியள் விடுதலைப் போருக்கு தேவையான பணத்தில் ஒரு பகுதியை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து எவ்வாறு திரட்டியனார்கள்,. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அதற்கு எவ்வாறு உதவின போன்ற விடயங்களையும் இந் நாவல் பேசுகிறது. வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட போது அவ்வாறு பணம் சேகரிப்பதற்கு உதவியவர்களுக்கு கொமிசன், இனாம் போன்றவை வழங்கப்பட்டதை அறிந்தபோது எமது இனப் போரும் ஒரு வர்த்தக சந்தையாக மாறியிருந்தது என்ற கசப்புணர்வே ஏற்பட்டது.

மக்கள் தங்கள் இனத்தின் விடுதலைக்காக என்று அவுஸ்திரேலியாவில் கையளித்த பணத்தில் பெரும் பகுதியை ஒருங்கிணைப்புக் குழுவின் சில சுயநலமிகள் எவ்வாறு தங்கள் தங்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைத்து சொந்தத் தொழில் முயற்சிகளை ஆரம்பித்தனர் போன்ற தகவல்களையும் நாவல் பேசுகிறது.

அதே நேரம் அத்தகைய கயவர்களைக் கண்காணிப்பதற்கு விடுதலைப் போராளிகள் இரகசிய கண்காணிப்பாளர்களையும் வைத்திருந்தார்கள். அவர்களைத் தண்டிப்பதற்கு தாங்கள் நேரிடையகத் தலையிட விரும்பவில்லை. வெளிநாட்டு தமிழ் மக்களின் விரோதத்தை அது தூண்டிவிடக் கூடும் என்பதால் அந்த நாட்டு அரசாங்கத்திடமே அவர்களை இரகசியமாக மாட்டிவிடும் கைங்கரியங்கள் நடந்ததை அறிந்தபோது எவ்வளவு சூட்சுமமாக இவை செய்யப்பட்டன என்பதை சுவார்ஸமாக வாசித்தபோதும் எம்மிடையே இத்தகைய கயவர்களும் இருந்திருக்கிறார்களே என்று பெருமூச்சு விடத்தான் முடிந்தது.

எம் இனத்தின் விடுதலைப் போருக்கு உள்நாட்டில் பலவழிகளில் பணம் சேர்த்தை நாம் அறிவோம். உள்ளுரில் கூட்டங்கள் வைத்துச் சேகரிக்கப்பட்டபோது உணர்ச்சி வசப்பட்டு தாம் அணிந்திருந்த நகைகளையே மேடையில் வைத்துக் கழற்றிக் கொடுத்த சில பிரபலங்களின் நகைகள் மேடைக்குப் பின்னே திருப்பிக் கொடுக்கப்பட்டதாம். வேடமணிந்த தியாகங்கள் அவை.

இந்த நூலில் உங்களை கண்ணீரில் நீந்த வைக்கும் பகுதி துணுக்காய் வதை முகாம் ஆகும்.

“மேசையில் நீலம் பச்சையாக இரண்டு வயர்கள் ஒன்றாகப் பின்னப்பட்டு இருந்தன. இதுவே இங்கு பிடித்தமானதும் அதிகம் பாவிக்கப்படுவதுமான ஆயுதம் என அறிந்திருந்தேன். அதைவிட ஒரு கொட்டன் தடி, ஒரு சுத்தியல், மின்சார ஊழியர்கள் பாவிக்கும் ஒரு குறடு என்பனவும் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் எனது இருதயம் மேளமடித்தபடி வாய்வழியாக வருவதற்கு துடித்தது….

மேசையில் இருந்த பொருட்களைக் காட்டி உனக்கு எது பிடிக்கும். ..” என்ற அந்த நக்கலான ஆரம்ப வரிகள் அந்த முகாமின் நிஜமுகத்தைக் காட்டப் போதுமானவையில்லை என்றே நினைக்கிறேன். நீங்களே வாசிக்க வேண்டியவை அவை.

அங்கு தடுக்கப்பட்ட குற்றவாளிகள் மேலே இரும்புக் கதவால் மூடப்பட்ட கிணறு போன்ற குழிகளுக்குள் இறக்கப்படுவார்கள். 4-5 பேர் ஒரு குழிக்குள். சிலர் நீண்டகாலமாக இருந்ததில் ‘உடை உருவ அமைப்பில் ஆதிகால மனிதர்களைப் பார்ப்பதுபோல் இருந்தது’ மதியத்தில் மலம் கழிக்க கயிற்று ஏணியால் ஏற விடுவார்கள். சலம் கழிக்க சாராயப் போத்தல்கள். அதில் ஒருவருக்கு ‘தலையில் அடித்ததால் சித்தசுவாதீனமடைந்து இருந்தார். சிரங்கு வந்தது. உடையணிவதில்லை. வெளியே மலம் கழிக்க செல்லும்போது மட்டும் உடை அணிவார்.

‘ஒரு நாள் உடையற்று மலம் கழிப்பதற்காக மேலே ஏறிவிட்டார். அங்கிருந்த காவலாளி கன்னத்தில் அறைந்து மீண்டும் உள்ளே தள்ளிவிட்டான் குழிக்குள் விழுந்தவர் சுவரில் ஒட்டிய பல்லியாக கால் கைகளை விரித்தபடி நிலத்தில் முகத்தை புதைத்திருந்தார். நீண்டநேரமாக எழவில்லை. இது நான் பார்க்கும் இரண்டாவது சாவு என நினைத்தேன்…. எனது சாவும் இங்கே நடந்துவிடுமோ?’

உடல் ரீதியாக மட்டுமின்றி உளரீதியாகவும் கொல்லும் சித்திரவதை முகாம் என்றே சொல்ல வேண்டும்.

“நான் என்ன பிழை செய்தேன்? என்ற கேள்வியைக் கேட்டபடி இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்தார்கள். பல வருடங்கள் இங்கு இருந்தவர்களுக்கு கூட இதற்குப் பதில் தெரியாது. பலர் செய்த தவறு என்ன என்று தெரியாமலே மரணமானர்கள்…”

இப்பொழுது, காணமல் போனவர்கள் எங்கே என்று கேட்டு அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். அன்று அவ்வாறு காணமல் போனவர்களுக்கு யார் பதில் சொல்வது என்று ஒரு இடக்குக் கேள்வி உங்கள் மனத்தில் எழுந்தால் அதற்கு பதில் சொல்லப் போவது யார்?

இப்படி அடைக்கப்பட்ட ஒருவர் அதிசமாக விடுதலையாகிறார்.

“உங்களது பணம் சரியாக இருக்கிறதா என கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள் என எனது பெட்டியைக் கொண்டுவந்து தந்தார்கள். அதில் எனது உடுப்புகள் மட்டுமின்றி பணமும் அப்படியே இருந்தன.”

அடாவடித்தனமாக நடந்தாலும் வலுக்கட்டாயமாக நிதி சேகரித்தாலும் பண விடயத்தில் விடுதலைப் புலிகள் எவ்வளவு நேர்மையாக இருந்தார்கள் என்பதை அவரது வாக்குமூலம் காட்டுகிறது,

இந்த நாவலின் மிக உச்ச கட்டம் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத் தாக்கிய கர்ப்பணி;யான தற்கொலைப் பெண் போராளி செல்வி பற்றியது. அவள் உண்மையில் கர்ப்பம் தரித்திருந்தாள் என்று நாவல் சொல்கிறது. இல்லை அது வேடம் மட்டுமே என சிலர் இந்நாவல் பற்றிய விமர்சனத்தில் சொல்கிறார்கள்.

அதை விடுங்கள். அவள் எவ்வாறு கர்ப்பணியானாள் என்ற கதை எமது வரலாற்றின் கரும்புள்ளியாகவே தெரிகிறது. நீங்களே படித்துப் பாருங்கள்.

ஆனால் கரும்புலியாக மாறிய அவளது தியாகம் மகத்தானது. அவளது பெண்மை மலினப்படுத்தப்பட்ட போதும், அவளது கணவன் என்றாகியவனால் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் துன்பப்படுத்தப்பட்ட போதும் அவள் தான் கொண்ட இலட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை. தமிழனத்தின் மீட்சிக்கு என நம்பி அவளும் அவளை ஒத்த பலரும் செய்த உயிர்த் தியாகங்கள் வரலாற்றின் அழிக்க முடியாத சுவடிகள் என்றே சொல்ல வேண்டும்.

அண்மைக் காலத்தில் இணையத்தில் அதிகம் பேசப்பட்ட படைப்புகளில இந்த நாவலும் அடங்குகிறது.  பல்வேறு விமர்சனங்கள் கானல் தேசம் பற்றி முன்வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களுக்கு சாத்தானின் நாற்ற வாந்தியாகக் கசந்தது. மாறாக புலிகளுக்கு எதிரானவர்களுக்கு இறைவேதம் போல இனித்தது. என் போன்ற சாதாரண வாசகர்களுக்கு சுவார்ஸ்மான நாவலாக இருந்ததுடன் எமது இனப் போரில் நாம் அறியாத பக்கத்தைக் காட்டும் சாளரமாகவும் இருந்தது.

கானல் தேசம்

காலச்சுவடு பதிப்பக வெளியீடு- டிசம்பர 2018

பக்கங்கள் 399

எம்.கே.முருகானந்தன்

ஞாயிறு தினக்குரலில் வெளியான கட்டுரை

0.00.0

Read Full Post »

இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்

ஞானசேகரனின் ‘எரிமலை’

‘அந்த இளைஞர்களில் ஒருவன் மதிலால் ஏறி உள்ளே குதித்தான். வெளியே நின்ற இளைஞன் தன் தோளின்மேல் சாய்திருந்தவனைத் தூக்கி மதிலின் மேலால் அவன் உள்ளே இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு தானும் உள்ளே குதித்தான்.

டொக்டர் மகேசன் பதற்றத்துடன் ‘ஆர் நீங்கள் என …’

டொக்டர் மகேசனில் என்னை நான் இனங் இனங்கண்டு நாவலில் மூழ்கிப் போனேன்.

எத்தனை கெடுபிடியான நாட்கள். பதற்றமும் சஞ்சலமும் பயத்துடன் கூடவே ஆட்கொள்ள கையறு நிலையில் இயங்கிய பொழுதுகள். இயக்கங்கள் பல பன்றிபோல குட்டிபோட்டு தான் தோன்றித்தனமாக நடந்த காலம், துரோகி, காட்டிக்கொடுப்பவன் போன்ற முத்திரைகளுடன் தெருநாய் போல சுடப்பட்ட அப்பாவிகளின் குருதி வீதிகளில் செங்கம்பளம் போர்த்திய காலம். டிரக்குகளில் செல்லும் அரச ராணுவத்தினர் வீதியால் செல்லும் பொதுமக்களை அடித்து குருதி கக்கவைத்த பொழுதுகள். சுற்றிவளைப்புகள் கைதுகள் போன்ற அடாவடித்தனங்கள் மலிந்து கிடந்தன.

வங்கிக் கொள்ளையுடன் தான் கதை ஆரம்பிக்கிறது. எனது மருத்துவமனைக்கு அரை மைல் தூரத்தில் இருந்த புலோலி ப.நோ.கூ.ச வங்கியில் நடந்த கொள்ளை நினைவில் வந்தது. திகில் நிறைந்த பொழுதுகள்.

ஆம். மருத்துவர்கள் அதுவும் தனியார் வைத்தியர்கள் மத்தளம் போல இரு பக்க இடிகளையும் தாங்கிக் கொண்டு பணி செய்ய வேண்டிய ஆபத்தான காலகட்டமாக இருந்தது.

80 களின் நடுப்பகுதியில் யாழ் குடாநாட்டில் நிலவிய பதற்றமான அரசியல், பாதுகாப்புச் சூழலை மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவல்தான் ஞானசேகரின் எரிமலை. டொக்டர் மகேசன் போராளி ஒருவனின் காயத்திற்கு, இராணுவத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் அது தொடர்பான சம்பவங்களுமே நாவலின் முக்கிய கதைப் பொருளாகும்.

ஆனால் அதற்கு அப்பால் இனப்பிரச்சனையின் அடிமுடி தொடும் விரிந்த நாவல். ‘எரிமலை’ அனல் வீச ஆரம்பித்த வேளை. கதைச் சம்பவங்கள் குடாநாட்டிற்குள் நடப்பவையாயினும் நாடளாவிய அரசியல் பரிமாணம் கொண்ட படைப்பு.

இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, எமது பிரச்சனையில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

ஆயினும் இளைய தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டியது. ஏனெனில் இளைஞர்கள் பலருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணவத்திற்கும் இடையேயான போர் பற்றிய செய்திகளும் அனுபவமும் மட்டுமே உண்டொழிய பிரச்சனையின் ஆணிவேரை கண்டுணரும் வாய்ப்புக் கிட்டியிருக்கவில்லை. இந்த நாவல் அவற்றை வெறும் தகவலாக அன்றி உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக, நாவலின் பேரங்கமாக, வரலாற்று ஆவணமெனத் தருகிறது. அதே நேரம் விறுவிறுப்பாக நகரவும் செய்கிறது. ஆரவாரமற்ற தெளிவான நடையுடன் சுவையாக வாசிக்கத் தூண்டுகிறது

உண்மையில் அவற்றை வெளிபடுத்தும் வண்ணம் சிருஸ்டிக்கப்பட்ட பல்வேறு பாத்திரங்கள் நாவலாசிரியரின் ஆக்கத் திறனுக்கு சான்றாக அமைகிறது. முக்கியமாக செல்லையா மாஸ்டர், மற்றும் சமூகவியல் பேராசிரியையான திருமதி விமல்சிறி, தொழில் முகாமைத்துவ ஆலோசகர் திரு விமல்சிறி ஆகியேருக்கு இடையேயான உரையாடல் முக்கியமானது. செல்லையா மாஸ்டர் தமிழ் அரசியலில் மிகுந்த ஈடுபாடும், சரித்திர ரீதியான அறிவும், அகிம்சை ரீதியான அணுகுமுறையும் கொண்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அபிமானி. திருமதி விமல்சிறி பேராசிரியர் மட்டுமல்ல. எழுத்தாளரும் கூட.

இந்த உரையாடல்கள் ஊடாக இனப்பிரச்சனையின் சரித்திரம் மட்டும் சொல்லப்படவில்லை. அதுவும் ஒரு பக்க பார்வையாகச் சொல்லப்படவில்லை என்பது நாவலின் பலமாக உள்ளது.. தமிழ் மக்களின் விடுதலை ஆர்வமும் அரசியல் சுதந்திர வேட்கையும் வெளிப்படுத்தப்படும் அதே நேரம் சிங்கள மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

48ல் சுதந்திரம் கிடைத்த ஓராண்டுக்குள் கிழக்கு மகாணத்தில் பட்டிப்பளையை கல்லோயா வாக்கி சிங்கள குடியேற்றத்துடன் ஆரம்பித்த தமிழர் மீதான நில ஆக்கிமிப்பு முதல் தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என தொடர்ந்தமை எவ்வாறு தமிழர் மீதான ஒடுக்குமுறையாக விஸ்வருபம் எடுத்தது என்பதை நூலாசிரியர் மாஸ்டர் ஊடாக வரலாற்றுப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு புறம், தீவிரவாத சிந்தனைகளை கொண்ட செல்லையா மாஸ்டரின் மகன் ஊடாக விடுதலைப் போராளிகளின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

வெற்றிலை குதப்பிக் கொண்டிருக்கும் ஒரு முதியவள்- கிழவி பாத்திரம்- மனதோடு ஒட்டிக் கொள்கிறாள். இராணுவத்தினரின் அத்துமீறலுக்கு எதிரான அவளது கோபமும், போராளியை மறைப்பதற்கு அவள் காட்டிய சமோசித புத்தியும் மவைக்க வைக்கிறது. அன்றிருந்த சாதாரண மக்களின் மனஉணர்வுகளுக்கு அவளை ஒரு முன்மாதிரியாகவும் சொல்லலாம் போலிருக்கிறது.

யதார்த்தத்தை மீறி உணர்வு பூர்வமாக சிந்திப்பதால் இனமுரண்பாடு விரிவடையுமே அன்றி மக்களுக்கு நன்மை தராது. எனவே கூடிய வகையில் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்ற நடுநிலைச் சிந்தனை டொக்டர் மகேசன் மற்றும் அவரது மைத்துனரான சந்திரன் ஊடாக வெளிப்படுகிறது.

இன்னொரு விதத்தில் பார்க்கும்போது நாவலின் நாயகனாக சந்திரனை அல்லது டொக்டர் மகேசனையே கொள்ள வேண்டும் என்ற போதும் இனப்பிரச்சனையே நாவலின் பாடுபொருளாக அமைந்துவிடுகிறது.

வாக்கு வேட்டை அரசியல்வாதிகளின் காலத்திற்கு முன்னர் தமிழ் சிங்கள் மக்களிடையே நெருக்கமான உறவு இருந்தது, அந்நிய ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் இனத்துவேசம் இருந்தத்தில்லை. எல்லாளன் துட்டகமுனு போரனது ஆட்சி அதிகாரத்திற்கு ஆனதே ஒழிய இனரீதியானது அல்ல. அதனால்தான் எல்லாளனுக்கு சமாதி அமைத்து மக்களை வணக்கம் செலுத்தச் செய்தான் போன்ற விடயங்களையும் நாவல் உரையாடல் ஊடாக தொட்டுச் செல்கிறது.

தமிழ் சிங்கள் உறவானது திருமண ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததை பற்றி மிக நுணுக்கமாக நூலாசிரியர் வெளிப்படுத்தியிருந்தார். இரசித்து வாசித்தேன். இலங்கையின் கடைசி மன்னன் விக்ரமராஜசிங்கன் ஒரு தமிழன் என்பது முதல் பல சிங்கள அரசர்களின் பட்டத்து ராணிகளாக தென்னிந்திய தமிழ் ராசகுமார்களே இருந்திருப்பதை நாங்கள் அறிவோம்.

அரச மட்டத்தில் மட்டுமல் சாதாரண மக்களிடையே கூட அத்தகைய மண உறவுகள் இருந்திருக்கின்றன.

‘எனது பாட்டியின் படம் ஒன்று வீட்டில் இருக்கிறது. அதில் அவர் தமிழ் பெண்களைப் போலத்தான் சேலை அணிதிருந்தார். சில நகைகள் கூட தமிழ்ப்பெண்கள் அணியும் நகையை ஒத்திருக்கின்றன…..’

‘ஒரு வேளை உங்கள் பாட்டி ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் இருந்திருக்கலாம்…’

ஆசிரியர் தன் கருத்தை வாசகர்களிடம் திணிக்காமல் பாத்திரங்களின் உரையாடல் ஊடாக  நாசூக்காக சொல்லியிருப்பதை கருத்தூன்றி வாசித்தால் நீங்களும் இரசிப்பீர்கள்.

அதே போல கதை நடக்கும் காலகட்டத்திலும் ஏன் இன்றும் கூட, சிங்கள் தமிழ் கலப்புத் திருமண உறவுகள் எவ்வளவு பிரச்சனை மிக்கதாக இருக்கிறது என்பதை வேறொரு இடத்தில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். சந்திரன் அனுலாவை வெளிப்படையாக வைபவரீதியாக திருமணமாகச் செய்யாமல் ரெஜிஸ்டர் ஆபீசில் செய்ய இருப்பதை சொல்வதன் மூலம் அவ்வாறு உணர வைக்கிறார்.

அரசாங்கமும் ஊடகங்களும் ஒரு பக்க பார்வையே கொடுப்பதால் பல சிங்கள் மக்களுக்கு இராணுவத்தினரின் கொடிய முகம் தெரிவதில்லை. கதாநாயர்கள் என்று அவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக அனுபவித்தால்தான் அவர்களின் கொடுர முகத்தை திருமதி விமல்சிறி போல உணர்வார்கள்.

‘அவன் (இராணுவ வீரன்) சூட்கேசை அப்படியே போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் கூடையை கிளறத் தொடங்கினான். அப்போது சுடுதண்ணிப் போத்தல் கூடையிலிருந்து வெளியே நழுவி ரோட்டில் விழுந்து நொருங்கியது. அதனைக் கவனித்த திருமதி விமல்சிறிக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது.

‘இவர்களுக்கு கண் கூடத் தெரியாது போலிருக்கிறது. காட்டுமிண்டித்தனமாக நடக்கிறார்கள்.’ பட்டால்தான் புரிகிறது என்பதை நிகழ்வுகளுடாக சுட்டிக் காட்டுகிறார். நேரடியாகச் தன் கருத்தை வலிந்து புகுத்தவில்லை.

நோயாளிகளில் அக்கறை கொண்ட அவர்களது பிரச்சனைகளை புரிந்து நடக்கும் பாத்திரமாக டொக்டர் மகேசனை படைத்திருக்கும் அதே நேரம் அன்று நிலவிய மருத்துவ முறைகள், அன்று உபயோகிக்கப்பட்ட மருந்துகள் என பதிவு செய்யப்படிருப்பதை பார்க்கும் போது அது அந்த காலகட்டத்து நினைவுகளில் என்னை நீந்தித் திளைக்க வைத்தது.

ஞானசேகரன் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை அவரது ஆரம்ப நாவலான குருதிமலையிலிருந்து அறிந்திருக்கிறோம். இந்த நாவல் ஒரு சிறந்த படைப்பாக உருவாவதற்கு அவரது எழுத்தாளுமையுடன், மருத்துவனாக பெற்ற அனுபவங்களும் உதவியிருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றிகும் மேலாக அவரது நிகழ்கால அரசியல் அறிவும் வரலாற்று ஈடுபாடும் இந்த நாவல் காலத்தைக் கடந்து நின்று நிலைக்க வைக்கின்றது.

இந்த நாவல் சிங்கள மொழிபெயர்ப்பில் வர இருப்பதாக அறிகிறேன். பக்கம் சாராமல் நடுநிலையோடு எழுதப்பட்டிருப்பதால், இப் பிரச்சனையில் அவர்களுக்கு அன்னியமான பல்வேறு முகங்களையும் அறிந்த கொள்ளவும் அவர்கள் பார்வையை விரிவடையவும் செய்யும் என்பதால் வரவேற்கத்தக்கது. துறைசார்ந்தவர்களை மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய படைப்பு.

நீங்களும் கட்டாயம் படியுங்கள். சுவையும் பயனும் இணைந்து கிடைக்கும் இத்தகைய படைப்புகள் அத்திபூத்தாற் போலத்தான் படைக்கப்படுகின்றன.

நாவலைப் படைத்த ஞானசேனரன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

சிறிரஞ்சனியின் ”’உதிர்தலில்லை இனி’

உங்கள் கருத்து என்ன? விடயம் இதுதான்.

ஐம்பது வயதான பெண் அவள். கல்வி அறிவுடன் நல்ல தொழிலும் படைப்பிலக்கிய ஆற்றலும் கைவரப்பெற்றவர். வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவளுடன் ஒத்த உணர்வுகள் கொண்ட வேறு ஒரு ஆடவனுடன் அவளுக்கு நட்பு உண்டாகிறது. அவளது பிள்ளைகளும் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். வெறும் நட்பு என்பதற்கு அப்பால் உடலும் சங்கமிக்கும் உறவாக அது பரிமணிக்கிறது.

சிறிரஞ்சனியின் உதிர்தலில்லை இனி தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் உள்ளடக்கம் இது. கலாசார பாரம்பரியங்களுடன் வாழ்ந்த தமிழரான நீங்கள் பரந்த இலக்கித் தேடலும் கொண்டவரும் என்றே கருதுகிறேன். இந்தப் பின்னணியில் இக்கதை உங்களிடையே எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையே அறிய விரும்பினேன்.

சிறிரஞ்சனியின் பல சிறுகதைகளை உதிரிகளாகப் படித்திருக்கிறேன். ஜீவநதியில் அவர் எழுதிய உள்ளங்கால் புல் அழுகை சிறுகதையை படித்த போது நான் பெற்ற உணர்வுகளை ஒரு சிறு ரசனைக் கட்டுரையாக அதே சஞ்சிகையில் எழுதவும் செய்திருக்கிறேன். ஆயினும் ஒரு தொகுப்பாக படிக்கும் போது அதற்குள் மூழ்கித் திளைப்பது மட்டுமின்றி விசாலமான அனுபவப் பகிர்வு கிட்டுவதை உணரமுடிகிறது.

அவரது நடை வித்தியாசமானது. வேகமாகக் கதையைச் சொல்லிச் செல்வார். சொல்லிக்கொள்ளாமல் பட்டெனக் காட்சிகள் மாறும். நுணுக்கமாக ஒவ்வொரு சொற்களையும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். மேலோட்டமாகப் படித்தால் சில கதைகளைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். உதாரணத்திற்கு ‘பேசலன்றின் கிளியொன்று’ என்ற கதையில் ‘அம்மா’ வா அல்லது அம்மா வா என்பதில் உள்ள குறியீட்டைக் கவனத்தில் எடுக்காவிட்டால் வாசிப்பவனுக்கு குழப்பம் ஏற்படும்.

‘மூன்று நாள் லீவில் நின்றபின் திருமதியாக மீண்டும் வேலைக்குப் போன போது என்னில் இனம் தெரியாததொரு மாறலை என்னால் உணரக் கூடியதாக இருந்தது’ இது ‘யதார்த்தம் புரிந்தபோது.’. என்ற கதையின் ஆரம்ப வரிகள். இதில் திருமதியாக என்ற சொல்லைக் கவனத்தில் கொள்ளாவிட்டால் கதையின் ஆழத்திற்குள் நுளைந்து இரசித்திப் படிப்பதற்குள் கதையின் முக்கால் பங்கைக் கடந்துவிடுவோம்.

இந்தத் தொகுப்பில் உள்ள 16 கதைகளில் ஓரிரு கதைகளே தாயகத்தை களமாகக் கொண்டவை. ஏனையவை யாவும் புலம் பெயர் வாழ்வின் கோலங்களாகவே இருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துக்கு இதுவும் மற்றொரு காரணமாகும். எமது மக்கள் புலம் பெயரத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிறது. தாய் தகப்பனாகச் சென்றவர்கள் பாட்டன் பாட்டீ ஆகிவிட்டார்கள், குழந்தைகளாகச் சென்றவர்கள் பெற்றோர்கள் ஆகிவிட்டார்கள்.

புதிய கலை கலாசார சூழலுக்குள் இளம் வயதினர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். பெரியவர்கள் இணைந்து கொள்ளச் சங்கடப்படுகிறார்கள். புதிய சட்டதிட்டங்களுக்கு ஆட்படுகிறார்கள். முக்கிமாக பிள்ளைகளை சுதந்திரமாக வளர்ப்பது, தண்டனையாக அடிப்பது தவறு போன்றவை பழையவர்களுக்கு புதினமான முறையாகிறது. அதைக் கடைப்பிடிக்க முடியாமையால் குற்றக் கூண்டில் ஏறவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இவை யாவும் சிறிரஞ்சனியின் அவதானிப்புள்ளாகி படைப்புகளாக அவதாரம் எடுக்கின்றன.

கணவனும் மனைவியும் வேலைக்கு செல்வதால் சந்திப்புகள் குறைகின்றன. கணவன் மனைவிக்கு இடையேயான நெருக்கம் குறையக் கூடிய சாத்தியங்கள் ஏற்படுகின்றன. உளநெருக்கீடுகள் ஏற்படுகின்றன. திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் தொடங்கக் கூடிய சூழல் நிலுவுகிறது. இதைத் தவிர மாறுபட்ட இரசனைகளும் ஈடுபாடுகளும் கூட காரணமாகிறது.

‘ஒரு கலைஞனுக்கு, படைப்பாளிக்கு இலக்கிய நாட்டமுள்ள ரசிகன் வாழ்க்கைத் துணையாக அமையாவிட்டால் இலக்கிய தாபத்திற்கு வழிதேடுவது கடினமே..’ என ஒரு பாத்திரம் பேசுவது குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுதற்கான மற்றொரு காரணத்தை கூறிநிற்கிறது. ஆம்! நெருக்கடி மிக்கசூழலின் வெளிப்படுகளாக இத் தொகுப்பின் கதைகள் அமைந்திருப்பதாக கருத முடிகிறது.

‘ஆயுதங்களிலிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தப்பி ஓடிய நாங்கள் இன்னொரு அகழியில் அமிழ்ந்திருகிறோம். … அதன் பின்விளைவாக உடல்நோய்களையும் மனநோய்களையும்தான் பெற்றிருக்கிறோம்..’ (பக்கம் 86) என ஒரு பாத்திரம் பேசுகிறது.

‘இப்போதில்லை’ என்ற கதையில் தலைமுறை இடைவெளியால் பிள்ளைகளின் உணர்வுகளை பெற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாததால் மகள் தனது கையை வெட்டிக் காயப்படுத்திக் கொள்கிறாள். அப்போது தாயின் மனம் அவ்வாறு எண்ணுவதைப் பதிவு செய்கிறார்.

இப் படைப்புகளின் மற்றொரு முக்கிய அம்சம் மனித மனங்களின் உள்ளுணர்வுகளைப் பேசுவதாக இருப்பதேயாகும். முக்கியமாக சிறுவர்களினதும் பெண்களினதும் உணர்வுகள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சிறுவர்கள் குழந்தைகள் பற்றிய தடம் மாறும் தாற்பரியங்கள், உள்ளங்கால் புல் அழுகை ஆகியவை குழந்தை உளவியலைப் பேசும் அருமையான படைப்புகளாகும். அன்பான தாயாகவும் மொழிபெயர்பாளராகவும் இருப்பதால் சிறுவர்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து எழுதுகிறார். இதனால் உளவியல் ரீதியான படைப்புகளாக அமைகின்றன.

பிறழ் நடத்தையை அதுவும் பெண்களின் கதைகளைப் பேசும் முதல் எழுத்தாளர் இவர் அல்ல. தி.ஜா, ஜெயகாந்தன் முதல் இற்றைவரை பல எழுத்தாளர்கள் எழுதியலற்றைப் படித்திருக்கிறோம். சில பெண் எழுத்தாளர்களும் எழுதவே செய்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலாசார தற்காப்புக் கூண்டுக்குள் நிற்கும் ஆண் பார்வைகளாகவே இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றை உடைத்துக் கொண்டு படைப்பவராக இவர் இருக்கிறார்.

‘நான் வாழ்ந்து காட்ட வேண்டும். என்னை நான் மாற்றியாக வேண்டும் எனத் திடீரென என்ரை மனசுக்குள் ஒரு வேகம் வர…. குசினி அலுமாரியில் இருந்த கண்ணாடியில் முகத்தை சரி செய்து கொள்கிறேன்.’ (பக்43)

‘வலிய வலிய இனியும் போய்க் காயப்படப் போவதில்லை என்ற ஆக்கிரோஸமே இப்பொழுது அவள் மனதில் துளிவிட்டதுளது (பக்77)

அவை ஏமாற்றப்பட்டு துயரில் மூழ்கிக் கிடந்த பெண்; பாத்திரங்களின் உணர்வுகளைப் பேசும் சில உதாரணங்கள் மட்டுமே.

இனி கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு வருவோம். ‘உங்கள் கருத்து என்ன?’

‘ஒரு மாதமாக சாப்பாடு தண்ணியில்லாமல் அழுதழுது கிடந்தன். ஏனென்று கேட்க யாருமில்லை. பாவம் எண்டு பார்க்க வந்த ஓண்டு இரண்டு பேரும் நல்ல காலம் தப்பியிட்டாய். அவன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனதாலை நீ தப்பினாய். இல்லையெண்டால் ஊர்உலகத்திலை உன்ரை பேர் நாறியிருக்கும்’ என்றார்கள்.

இவளுக்கு வயது 52. பிள்ளைகள் கட்டி வெளிநாட்டிலை. மனுசன் ஆமி சுட்டு அந்தக் காலத்திலையே செத்துப் போச்சு. தனிய வாழ்ந்த இவளுக்கும் ஊரிலை உள்ள பெண்டாட்டியை இழந்த மனுசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. கூடி வாழ்ந்தார்கள். கலியாணம் கட்டி இருப்பம் என்று இவள் கேட்டாள் மறு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான்.

இது என்னிடம் சென்றவாரம் மனவிரக்தியோடு வந்த ஒரு பெண்ணின் கதை. உள்ளுர்க் கதை. நாகரீகம் முற்றிய மேலைநாட்டில் நடந்தது அல்ல.

அன்புக்கான யாசனை எங்கும் ஒன்றுதான். அன்பு ஆதரவின் வறுமைப் பிடியில் கிடந்தவர்களுக்குதான் அன்பு செலுத்தும் ஒருவரைக் கண்டதும் ஒட்டுதல் ஏற்படுகிறது. அது காதலாகவும் மலரலாம். உடலுறவுக்கும் போகலாம். ஆனால் அடிப்படையில்; அது அன்பு ஆதரவுக்கான ஏக்கம்தான்.

அன்பிற்கான தேடல் கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் கணக்கில் கொள்வதில்லை. அதனால்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பட்ட கதையில் வரும் பெண் ‘உங்களின் காதல் என்னை பதின்மவயதுப் பெண்ணாகவே மாற்றியிருந்தது. வாழ்வின் பிற்பகுதியில் ஒருவர் இவ்வளவு ஆழமான காதல் உறவில் விழலாம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை’ (பக் 93) எனக் கூறுகிறாள்.

உண்மையில் சிறிரஞ்சனி பல சிறப்புகளை இத்தொகுப்பில் படித்து இரசிக்க முடிகிறதாயினும் மிக முக்கியமாகப் பேசப்பட வேண்டியது இதிலுள்ள பெண் மொழிதான். 1984 ல் எழுதி தொகுப்பின் முதற்கதையாக இருக்கும் ‘மனக்கோலம்’ முதல் தொகுப்பின் இறுதிக்கதையாக 2017ல் எழுதிய ‘சில்வண்டு’ வரை இந்தப் பண்பைக் காண முடிகிறது. அம்பையின் படைப்புகளில் கண்டு இரசித்த அந்தப் பண்புகள் இவரது படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

திருமண உறவில் உரசல்களும் விரிசல்களும் பெண் பார்வையாக மட்டுமின்றி ஆண் பார்வையாகவும் சொல்லப்படுவது கதாசிரியரின் விரிந்த மனப்பான்மைக்கும் ஆழ்நத அவதானிப்பிற்கும் சான்றாக அமைகிறது. ‘கனவுகள் கற்பனைகள’; என்ற சிறுகதையில் மருத்துவரான மனைவி தனது தொழிலில் காட்டும் அக்கறையை கணவன் மனைவி உறவில் காட்டுவதில்லை. வீடு வந்தாலும் தனது நோயாளிகளைப் பற்றியே பேச்சு.

‘இது என்ன சாதரண ஆட்கள் மாதிரி சின்னச் சின்ன ஆசையெல்லாம்….’ என இருவாரகாலமாக கூடிப் போவதற்குத் திட்டமிட்டிருந்த திருவிழாப் பயணத்தை இரத்து செய்துவிட்டு மருத்து செமினாருக்கு போகும் போது அவள் அவனுக்கு சொன்னது.

‘ஆகாயத்தில் பஞ்சுப் பொதி போல் மிதந்து செல்லும் மேகத்தைரசிப்பது, இரவில் நிலவொளியில் அமர்ந்து நட்சந்திரங்களை எண்ணுவது, புற்தரையில் படுத்து உருள்வது …. யாவுமே சின்னச் சின்ன ஆசைகள்தான் ஆனால் அவற்றை மனைவியுடன் பகிர்ந்து கொள் நினைப்பதுதான் பெரிய ஆசையா, எனக்கு ஏன் அவை கிடைக்க மாட்டேன் என்கிறது’ ஆதங்கப்படுகிறான்..

ஆம். உள்ளத்தின் அரவணைப்புக்காக ஏங்குகிறது அவன் மனம்.

படித்து முடித்ததும் மூடி வைக்க முடியவில்லை தொகுப்பை. அவரது பாத்திரங்களின் உணர்வுகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறது எமது மனசு.

‘உதிர்தில்லை இனி’ தொகுப்பானது ஒன்றோடு மற்றொன்று போல பேசப்படாது இரசிக்கப்படாது உதிர்ந்து போகப் போகும் சிறுகதைத் தொகுப்பு இல்லை. நிச்சயமாக நிறைய வாசிக்கப்படும் பேசப்படும் விமர்சிக்கப்படும் நூலாக அமையும் என நம்புகிறேன்.

உதிர்தலில்லை அதற்கு.

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

Read Full Post »

தெணியானின் ‘மூவுலகு’ – காதல்களின் கதை, காதல்க் கதை அல்ல

மூவுலகு என்ற பெயரைப் பார்த்தவுடனேயே இது சமயம் சார்ந்த நம்பிக்கையுடையவர்கள் கருதும் மூவுலகு அல்ல. அவர்களது நம்பிக்கையான மேலுலகம், பூவுலுகம், நரகலோகம் என்பது பற்றியதாக இருக்கவே இருக்காது என என் மனம் அடித்துச் சொல்லியது.

வேறு விடயத்தைப் பேசும் என்பது என் மனத்துள் உறுதியாகியது. காரணம் அந்தப் பெயரைச் சூட்டியவர் தெணியான். ஒரு முற்போக்கு எழுத்தாளர். இடதுசாரி அரசியல் வழி வந்தவர். நூலைத் தட்டிப் பார்த்தேன்.

‘மூவுலகு என்பது சாதாரண மக்கள் பேசும் மேலுலகு, பூவுலகு, பாதளவுலகு ஆகிய மூன்றுமல்ல. பூவுலுகிலுள்ள மூன்று வர்க்கங்கள் பற்றியதென்பதை படித்து முடிந்ததும் உணர்வீர்கள்.’ என்று தெணியான் எழுதியிருந்தார்.

நான் நினைத்தது சரிதான். ஆனால் படிக்க முன்னரே உணர்ந்து விட்டேன். என எனக்குள் நானே பெருமைப்பட்டுக்கொண்டேன்.

மற்றொரு விடயத்தையும் குறிப்படவேண்டும். ‘… பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) காதல் நாவல் ஒன்று எழுதுமாறு ஒரு சமயம் என்னிடம் கூறினார் ….’ . ‘பூவுலகில் உள்ள மூன்று வர்க்கங்களின் கதை’ என்ற தலைப்பில் சொல்லப்பட்ட தனது முன்னுரையில் தெணியான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கோரிக்கை விடயத்தில், நந்தி மட்டுமல்ல நானும் சற்று ஏமாந்துவிட்டேன் தெணியானிடம் இந்த நாவலில்.

மூன்று இளம் சோடிகளின் கதைகளைப் பேசும் நாவல் இது.

அவற்றில் இரண்டு காதல் கதைகள். முதலாவதும் பிரதான கதையுமானது மாணவப் பருவத்தில் கிளர்ந்தெழுந்து பல்கலைக்கழகம் தாண்டி, இடர்களுக்கு முகம் கொடுத்து மருத்துவர்களான பின்னரும் தொடரும் காதல். அந்தக் காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்.

மற்றது இரு பாடசாலை ஆசிரியர்களிடையே எழும் காதல் பற்றியது.

காதலே இல்லாமல் காலத்தின் கோலத்தால் இளம் பாராயத் திருமணத்திற்கு தள்ளப்பட்ட சமூகத்தின் அடித்தள மகளின் கதை மூன்றாவது.

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட காதல் நாவல்; பற்றிய நந்தியின் கோரிக்கையில் நந்தியும் நானும் ஏமாந்த விடயம் என்னவெனில் இது காதல் பற்றிய நாவலாகவே இருக்கிறதே ஒழிய காதல் நாவல் அல்ல என்பதுதான்.

காரணம் அவர் ஒரு ஆசிரியர். பாடசாலையில் மட்டுமல்ல ஆரம்ப காலங்களில் ரியுசன் வகுப்புகளிலும் கோலோச்சியவர். அதுவும் குமரப்பருவ மாணவ மாணவிகளுக்கு போதித்தவர். எனவே அவருக்கு ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது. அந்த மாணவர்களை தான் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற கடமை உணர்வு ஆழ ஊன்றியிருந்ததை அறிவேன்.

நாவலின் முதல் பக்கத்தில் வரும் வரி ஒன்றே போதும் அவரது நிலையை தெளிவு படுத்துவதற்கு.

‘குமரப்பருவ மனங்களில் தோன்றும் யௌவனக் கனவுகள், கற்பனைகள், உணர்வுகள் அத்தனையும் அந்தப் பருவத்திற்கு இயல்பானவை. ஆனால் அந்தப் பருவப் புயலில் மனம் அடிபட்டுப் போகாத வண்ணம் மாணவர்கள் தங்களை நெறிப்படுத்தி விழிப்புடன் கல்வியில் அக்கறை காட்ட வேண்டிய காலம்’ என்கிறார்.

ஆம் ஏமாந்து விட்டோம். மாணவப் பருவத்து நினைவுகளிலும் அரச மருத்துமனைகளில் பணியாற்றிய காலங்களில் சக மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், தாதியர்களிடையே இடையேயான ஒளிவு மறைவான கிளுகிளுக்கும் காதல் நிகழ்வுகளைக்; கண்டு அனுபவித்த எங்களுக்கு அடுத்த தலைமுறை பள்ளி மாணவர்களிடையேயான காதல் உணர்வுகளையும் செயற்பாடுகளையும குறும்புகளையும்; படித்து ரசிக்கலாம் என எண்ணத்தில் தெணியான் மண் தூவிவிட்டார்.

விழிகளால் பேசுதல், மறைவிடங்களில் சந்திப்பு, நினைவுகளில் நீந்தல், ஸ்பரிச சுகம் போன்ற யவ்வன லீலைகள் எதுவுமே இந்த நாவலில் இல்லை. அவற்றை தெணியானிடம் எதிர்பார்த்தது எங்கள் தவறே அன்றே தெணியானின் தவறு அல்ல என்பது உண்மையே.

இரண்டு விதமான காதல்கள் இந்த நாவலில் அடிநாதமாக இருக்கிறன.

குமரன் வாணி ஆகியோரின் காதல் ஆழமான காதல். ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவர் ஆற்றலை மற்றவர் கண்டு வியந்து, ஒத்த மனம் கொண்டோரிடையே பிறந்த காதல் அது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல ரியூசன் வகுப்பில் ஆரம்பித்து பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மருத்துவர்களாக பணியேற்ற பின்னரும் தொடரும் காதல். வெளிக் கவர்ச்சிகளால் பிறந்தது அல்ல. ஆழமான அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான காதல். தடைகளை மௌனமாக எதிர்கொண்டு மேவிச் செல்லும் காதல். ஆயினும் சமூகச் சூழல் பெரும் திரையாக விலக்கி வைக்க முனைகிறது.

இரண்டாவது காதல் இரு ஆசிரியர்களுக்கிடையே ஆனது. தனிமையின் வெற்றிடத்தை நிரப்பவும், பாலியில் உணர்வுகளால் உந்தப்பட்டும் எழுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக் காதல். இங்கு ஆத்மார்த்த ஈடுபாடு சந்தேகத்திற்கு உரியது.

மூன்றாவது சோடியின் கதையில் காதலே இல்லாத அவசர கோலத் திருமணம். கடுமையான யுத்த காலப் பகுதியில் வலுக் கட்டாயமாக போராளியாக இழுத்துச் செல்லப்படுவதிலிருந்து தப்புவதற்காக செய்யப்படும நிர்ப்பந்தத் திருமணம்;.

இந்த மூன்று கதைகளையும் இணைத்து மூவுலகு நாவலை சுவார்ஸமாக புனைந்ததில் தெணியானின் அனுபவப்பட்ட எழுத்தாளுமை கைகொடுக்கிறது.

தெணியான் படைப்பு என்றாலே சாதிப் பிரச்சனை பற்றித்தானே இருக்கும் என்று கிண்டலடிக்கும் மேலாதிக்க சிந்தனையுள்ள விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாய்க்கு அவல் போடுவது போல இந்த நாவலிலுள்ள மூன்று சோடிகளின் கதைகளிலும் அடிநாதப் பிரச்சனையாக ஓடிக்கொண்டிருப்பது சாதிப் பிரச்சனைதான்.

ஆனால் பொற்சிறையில் வாழும் புனிதர்கள் நாவலை எழுதியதும் தெணியான்தான் என்பதை மறந்து விடுகிறார்கள். சாதியில் உச்ச இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தால் போலி மரியாதையுடன் அடக்கி ஒடுக்கப்பட்ட பிரமணர்கள் பற்றி எழுதியது அவர்தான்.

இந்த நாவலில் சாதிப் பிரச்சனை வருகிறது. ஆனால் கல்வியும் பொருளாதரமும் வளர்ச்சி பெற்ற இன்றைய காலகட்டத்தில் அதன் சாதீயத்தின் முகம் எவ்வாறு ஒப்பனை போட்டு அலங்கார முகத்துடன் மறைமுகமாக வெளிப்படுகிறது என்பதை காண்பிக்கிறார்.

அதைவிட முக்கிய விடயம் என்னவெனில் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாக இப் பிரச்சனையில் ஏற்பட்டு வருகின்ற சில நம்பிக்கையூட்டும் மாற்றங்களையும் இந்த நாவலூடாக வெளிப்படுத்துகிறார்.

சாதி வேறுபாட்டைத் தாண்டிய காதல் மலர்வதைக் காண்கிறோம். சாதிப் பிரச்சனையின் சமூக ரீதியான பாதிப்பை உணராத பதின்மங்களில் மட்டுமல்ல படித்து பட்டம் பெற்று ஆசிரியர் தொழில் பார்க்கும் வயதுகளிலும் அத்தகைய காதல் ஏற்படுவதை தெணியான் தனது நாவலில் சித்தரிக்கிறார்.

அடுத்த வீட்டுக்காரன் யார் அவன் என்ன சாதி என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாத கொழும்பு போன்ற பெருநகரங்களில் ஏற்படும் காதல் அல்ல இங்கு பேசப்படுபவை. சாதாரண கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் இத்தகைய காதல் பிறந்திருக்கிறது. ஊர் மட்டத்தில் அதன் பின்விளைவுகள் அடிதடி, கொலை, முதல் குடும்பப் பகிஸ்கரிப்பு வரை நீளும் என்பதை அனுபவரீதியாக உணரக் கூடிய கிராமப் பகுதியிலும் பிறக்கிறது என்பது சற்றே ஆச்சரியம் அளிக்கிறது.

அதற்கும் மேலே ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் தெணியான் தனது கதையாடல் ஊடாக சொல்கிறார். மருத்துவர்களான குமரனுக்கும் வாணிக்கும் திருமணம் நடக்கிறது. அதுவும் அவர்கள் ஊரிலேயே நடக்கிறது. அவர்களின் சாதி வேறுபாட்டையும் தாண்டி நடக்கிறது. இரகசிய திருமணம் அல்ல. கோலாகலத் திருமணம். திருமணத்திற்கு அவர்களது தொழில் சார் மருத்துவ நண்பர்கள் மட்டுமின்றி ஊர் நண்பர்களும் சில உறவினர்களும் கூட சமூகம் அளித்துள்ளனர். நிச்சயம் வரவேற்றகத்தக்க மாற்றம்.

சற்றுப் பொறுங்கள். எமது சமூகம் சாதி பாராட்டாத சமூகமாக மாறிவிட்டது எனப் புளங்காகிதம் கொள்ளாதீர்கள்.

‘பிள்ளை பிடிவாதக்காரி. நினைச்சதை செய்து முடிக்கிறவள். இப்பவே விலகித்தான் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகும் விலகி இருப்பம். கீழே உள்ளதுகளுக்கு நாங்கள் சம்பந்தம் செய்ய வேணுமல்லே! எங்களுக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எண்டு கேக்கிறவையளுக்கு சொல்லிப் போட்டு விடுவம்.’
இது அவளது தந்தையின் கூற்று.

ஆம் தெணியான் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

சாதி வேறுபாடு இன்றைய காலகட்டத்தில் பார்க்கப்படுவதில்லை என்று வெளிப் பார்வைக்கு தோன்றினாலும் தீ அணையாமல் உள்ளுரப் புகைந்து கொண்டே இருக்கிறது. சொந்த வாழ்வில் தாண்ட வேண்டிய தேவை தவிரக்க முடியாததாக இருந்தாலும் சமூக்கதிற்கு பயப்பட்டு அடங்க வேண்டி இருக்கிறது என்பதை அழகாகப் சொல்லியுள்ளார்.

ஆசிரியர்களான சுமதி, ஆனந்தராஜனின் காதலும் நிறைவேறாத திருமணமும் இதற்கு மற்றொரு சான்றாக இருக்கிறது.

முற்போக்கு எழுத்தாளரான தெணியான் சாதி முரண்பாட்டுடன் வர்க்க முரண்பாடு பற்றியும் இந்த நாவலில் பேசுவது ஆச்சரியமானதல்ல. சிவமதியை பணபலம் கொண்ட உயர்சாதி ஆண்மகன் சட்டபூர்வமாக திருமணம் செய்த போதும் அவளைத் தன் வீட்டிற்கு அழைக்கவில்லை. அவள் வீட்டிற்குச் சென்று தங்குவதுமில்லை. இருளின் மறைவில் சுகம் கண்டு பகலில் நழுவிடுகிறான் கணவன். வைப்பாட்டி போலானாள் மனைவி. சாதிச் சிக்கலுடன் ஏழ்மையும் சேர்ந்தவுடன் இருபக்கமும் அடிவாங்கும் துர்ப்பாக்கிய நிலையாவதை சித்தரிக்கிறார்.

சாதி ஏற்றத் தாழ்வு எவ்வாறு தனிமனிதர்களைப் பாதிக்கிறதோ அதே போல வர்க்க முரண்பாடும் பாதிப்பதை தெணியான் இந்த நாவல் ஊடாக பதிவு செய்கிறார். சற்று ஆழமாக யோசித்தால் சாதிப் பிரச்சனையை விட வர்க்க முரண்பாட்டின் தாக்கம் அதிகமாக இருப்பதையே இந்த நாவல் சுட்டிக் காட்டுவதாகவே எனக்குபு; படுகிறது.

சுனேத்ரா மறக்க முடியாத பாத்திரம். இன ஐக்கியம் அவளுடாகப் பேசாமல் பேசப்படுகிறது
அழகான தமிழ், சுவார்ஸமான கதையோட்டம், ரசிக்க வைக்கும் நடை. தெணியானின் கைப்பக்குவத்தின் சுவையால் எடுத்த நூலைக் கீழே வைக்காமல் படித்து முடித்தேன்.

எமது மத்தியில் நிலவும் சாதி, சமூக முரண்பாடுகளையும் அவற்றில் ஏற்படுகின்ற வெளிப்படையான மாற்றங்களையும், மாறியது போன்ற சில மாயத் தோற்றங்களையும், மாறாமல் அழுங்குப் பிடியுடன் இருக்கும் சாதீயம் சார்ந்த சில நடைமுறைப் பிரச்சனைகளையும் பேசுவதால் இலக்கியப் பிரியர்கள் மட்டுமின்றி சமூக ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய நூல் ஆகிறது மூவுலகு.

கொடகே வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவல் சுமார் 215 பக்கங்கள் வரை நீள்கிறது. விலை 650 ரூபாக்கள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

மிகுந்த வெக்கமாயிற்று. இலக்கிய வனாந்திரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறேனோ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

20180707_162212இதுவரை இந்த சிறுகதைத் தொகுதியை படிக்காதது மட்டுமின்றி அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இல்லையே என்று மனம் ஆதங்கப்பட்டது.

பிரண்டையாறு ஒரு சிறுகதைத் தொகுதி. 12 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தீவகத்தில் பிறந்த ஒருவன் போரின் வலிய அலைகளால் தூக்கி வீசப்பட்டு நிரக்கதியாகி சொந்த வீட்டை இழந்து சொந்த மண்ணிலிருந்து நீங்கி அகதி முத்திரை குத்தப்பட்டு காற்றின் திசைகளில் அள்ளுண்டு தன் தலைசாய்த்து கண்மூடி ஆறுதல்தேட இடம் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடி அலைந்த நினைவுகளை பதிவு செய்யும் தொகுதி இது என்று சொல்லலாம்.

‘அவனது பயணங்கள் எல்லாம் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் முடிந்தவையாகிப் போயின. தான் பயணிப்பதாகவே பிறந்ததாகவும் தனது பயணத்திற்கு தரிப்பிடங்கள் போதுமானவையாக இல்லை எனவும் நினைத்துக் கொள்கிறான்’ இதை அவரது வாக்குமூலமாகவும் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் யாழ் மண்ணிலும் வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் இவ்வாறு சிதறாதவர்கள் யாரும் உண்டா?. எங்கள் ஒவ்வொருவருக்கும் கூட அத்தகைய அனுபவங்களுக்கு குறைவில்லை. இடப்பெயர்வுகள் பற்றி எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது மெலிஞ்சிமுத்தனின் சிறுகதைகள் பேசப்பட வேண்டி இருப்பது ஏன்?

அது கதையின் உள்ளடக்கத்தில் அல்ல. அது சொல்லப்பட்ட முறையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. பேசப்பட வேண்டியதாக போற்றப்பட வேண்டியதாக என்று கூட சொல்லலாம். மொழியை சாணை தீட்டி உணர்வுகளுக்குள் முக்குளிக்க வைக்கும் அற்புதமான படைப்பாளிகளான கதை சொல்லிகள் எம்மிடையே இருக்கிறார்கள். ஆ.முத்துலிங்கம், ஆ.சி.கந்தராஜா, மு.பொ, உமா வரதரதராஜன் என அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவர் கதை சொல்லி அல்ல. மேம்போக்காக படிப்பவர்களுக்கு அவற்றிற்குள் கதை இருப்பதை கண்டு கொள்ளவது கூட சிரமமாக இருக்கலாம். காரணம் அவரது படைப்புகளிலுள்ள கதை அம்சம் பெரும்பாலும் குறியீடாகவே சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு முதற்கதை ‘புலம்பெயரும் சாமங்களின் கதைளூ’ இவ்வாறு முடிகிறது. ‘பகல் நாய் வீணியூற்றியபடியே சுருண்டு படுத்துக் கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காத்திருக்கிறது ‘மறுகரை’.’. மேலோட்டமாகப் பாரக்கும்போது. வெறும் காட்சிப் பதிவு போல தென்படுகிறது.

ஆனால் தொண்ணுறுகளின் முற்கூறுகளில் யாழ் மண்ணிலிருந்து பெருநிலப்பரப்பிற்கு போவதானால் கிளாலி கடற்பரப்பை கடக்க வேண்டும் அந்த திகிலூட்டும் பயணங்களின் பின்னணியை நினைகூரும்போது ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்லாமல் சொல்லப்படுகின்றன. மெலிஞ்சி முத்தனும் சொல்கிறார். இரவில் படகுகளில் மக்கள் முண்டியடித்து பயணப்படுவதும், படகுகள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து செல்லாது இருக்க கயிறுகளால் பிணைக்கப்படுவதும், கடற்படைக்கு தெரியாதிருக்க வெளிச்சமின்றி படகுகுள் பயணிப்பதும், எப்படியோ மோம்பம் பிடித்த கடற்படை சுட்டுத்தள்ளுவதும், சனங்கள் மரணிப்பதும், பிணங்கள் மிதப்பதும், இவற்றெயெல்லாம் அறிந்திருந்தும் மற்றவர்கள் இறப்புக்களை மறந்து மரணதேவதை கிளாளிக் கடலில் காத்திருக்கிறான் என்பதை மனதில் ஆழப் புதைத்துவிட்டு அடுத்த நாளும் மக்கள் பிரயாணத்திற்கு முண்டியடிப்பதும்…..

கதையை வாசித்துவிட்டு கண்ணை மூடிப்படுத்துக்கிடந்தால் கதைகதையாக விரியும். நானும் அவ்வாறு பயணப்பட்டிருந்ததால் அணுவணுவாக கதையை அர்த்தப்படுத்திப் படிக்க முடிந்தது.

அவரது படைப்பாக்க முறையின் மற்றொரு முக்கிய அம்சம், தன் ஆழ்மனத்து எண்ணங்களை, தாவித் தாவிச் செல்லும் சிந்தனை ஓட்டங்களை சொல்லோவியமாக்குவதே ஆகும். தன ஆழ் மனத்தில் எழும் நினைவுகளை எண்ணங்களை சிந்தனைகளை ஒரு வரையறைக்குள் ஒழுங்குபடுத்தி சிறுகதையாகப் படைக்கிறார். அந்த எண்ண ஓட்டங்களுடன் இணைந்து பயணிக்கும் வாசகனுக்கு தன்னையும் அங்கு இனங்காண முடியும். புதிய சாளரங்களை வாசகனுக்கு திறக்க வைக்கும். தன்னைப் பற்றி மட்டுமின்றி இந்தச் சமூகம் பற்றி, இந்த தேசம் பற்றி தன்னைச் சுற்றி நடப்பவற்றின் உள்ளரசியல் பற்றி பல உண்மைகள் வெளிச்சமாகும்.

இந்த மாற்றுப் பாதையே மெலிஞ்சிமுத்தனது படைப்புகளின் ஆணிவேராக இருப்பதாகப் படுகிறது. கதை எங்கோ தொடங்கி வேறெங்கோ இழுபட்டு நகர்வதாகத் தோன்றினாலும் பூடகமாக தன் கருத்தை வெளியடவே செய்கிறது.

உதாரணமாக கொழுக்கட்டை கள்வர்கள் கதையைச் சொல்லலாம். சவீனா ரீச்சர் வீட்டில் ஒவ்வொரு பெரிய வெள்ளியும் ருசியான கொழுக்கட்டைகள் களவு போவது பற்றி சுவாரஸ்மான கதை சொல்லப்படுகிறது. கதை இப்படி முடிகிறது. ‘கொழுக்கட்டை கள்வர்களின் சடலங்களை ஓலைப் பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள். டக்ளஸ் மட்டும் ‘உயிர்தெழுந்த ஞாயிறைக்’ கொண்டாடிக்கொண்டு கொழும்பில் இருந்தான்’; (பக் 16) எவ்வளவு அழகாக முடித்திருக்கிறார். சொல்லமால் சொல்லப்பட்டவை ஏராளம் தொக்கி நிற்கிறது இந்த ஒரு வசனத்தில்.

போரினதும் அதன் அவலங்களதும் பார்வையாளனாகவும் பாதிப்புக்கு ஆளானவனாகவும் இருக்கும் இந்தப் படைப்பாளி வீர வசனங்கள் பேசவோ இலட்சியங்கள் முழங்கவோ இல்லை. அரசாங்கத்தையும் மாற்று இயக்கங்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுக்கவும் இல்லை. நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி சொல்கிறார். அதனை அர்த்தப்படுத்தும் பணியை வாசகனிடமே விட்டுச் செல்கிறார்.

இல்ஹாம் ஒரு அற்புதமான கதை. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதின் பின்னணியில் பேசப்படுகிறது. அற்புதமான முடிவு. முழு தமிழ் சமூகமுமே குற்ற உணர்வு கொள்ள வேண்டியதை சொல்லாமல் சொல்கிறது.
மீனவக் கிராமம் அவர் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது. அவர்கள் வாழ்வை மொழியை அவர்களது பாடுகளை படைப்புகளில் விரித்துச் செல்கிறார். அங்கு சமூக ஒடுக்குமுறை எவ்வாறு இருந்தது என்பதை சில வரிகளில் அவரால் சொல்லிவிட முடிகிறது.

‘அவருக்கு (தந்தைக்கு) எப்போதுமே தன் முதுகில் மீன் செதில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணர்வே இருந்தது.’

‘நான் பள்ளிக் கூடம்போனபோது என்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோது கூட என் கண்ணீரிர் வெடுக்கு மணத்தபடியே இருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்து போனேன்’; மனதை நொருங்க வைக்கும் வரிகள்.

ரசித்ததில் மற்றொன்று. சமாதான காலம் ஒன்று பற்றியது ….. ‘கொழும்பில் இருந்து வந்த பெண்கள் கல்லு வீதிகளில் குதிக்கால் உணர்ந்த பாதணிகளோடு நொடுக்கு நொடுக்கு என்று இந்தரப்பட்டு நடந்தார்கள். வுன்னியில் இருந்து வந்தவர்கள் போர்த்து மூடீக்கொண்டு திரிந்தார்கள். யுhழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களோ ஏதோ மாய முடிச்சுகளை சோட்டித் துண்டுகளில் முடிந்து திரிந்தார்கள்.

20180707_1622291

‘யாராவது என்னைத் தேடலாம். ‘நாடு கடந்த அரசு பற்றி’ பேச நண்பர்கள் என்னையும் அழைக்கலாம். ஏன் பிரியமான வாசகர்களே, உங்களிடமிருந்து இப்பொழுது பிரிந்து செல்கிறேன். ஏனக்கு வேண்டியது தனிமை. பிணங்களையும் புணரும் மனநிலை கொண்ட மனிதர்களை இந்த நூற்றாண்டு கொண்டிருக்கிறது என்றால்…’ (பக்கம் 64) இதுதான் அவரது படைப்புகளின் அடிநாதமாக வீசிககொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.

வித்தியாசமான பேச்சுத் தமிழ். தீவகத்திற்கே உரியது. அழகாகக் கையாண்டிருக்கிறார். கவிதை மொழியும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கிறது.

இறுதியில் வரும் இரு கதைகள் தப்பிப் பிறந்த வேர்கள் போல இந்த தொகுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் கட்டுரைகளை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. துன் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரத்தில் எழுதியதாகவே படுகிறது.

அவரது இரு கவிதைத் தொகுதிகளும் அத்தாங்கு என்ற நாவலும் வெளிவந்ததாக அறிகிறேன். ஆனால் அவை கைக்கெட்டவில்லை.

கருப்புப் பிரதிகள் வெளியீடாக 2011 மார்களியில் வெளிவந்த அருமையான நூல். இதுவரை படிக்காதது கவலை அளித்தது. நீங்களும் அதே தவற்றைச் செய்யாதீர்கள்.

இந்த நூலின் பிரதியை மட்டக்களப்பு நண்பர் திலீப்குமார் கணேசன் மூலம் பெற்றேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞ்சிகையில் வெளியான கட்டுரை

0.00.0

Read Full Post »

அயர்ச்சியும் சோர்வும் அனாதரவான நிலையும் கொண்ட ஒரு பயணத்தில் சென்றுவந்தது போன்ற உணர்வு நிலை என்னைத் தொற்றிக் கொண்டது.

“ஈழப் போரின் இறுதிநாட்கள்” என்ற வெற்றிச் செல்வியின் நூலை படித்து முடித்த போது ஏற்றபட்ட உணர்வு அது.

இந்த இனத்திற்கு ஒரு விடிவு வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் போராட்டத்தில் இறங்கிய ஒரு உண்மையான போராளிக்கு தனது கனவுகள் சிதைந்தது மட்டுல்ல தனது இனத்தின் மானமே தாரை வா ர்க்கப்பட்டு அவமதிப்பிற்கு ஆளாக்கப்பட்டதான உணர்வு ஏற்பட்டதை இந்த நூலில் உணர முடிந்தது.

பெருங் கனவுகளுடனும் அர்ப்பணிப்புகளுடனும் இறங்கிய விடுதலைக் கனவு கலைந்து படைவீரர்களின் முன் ஒரு போத்தல் தண்ணீருக்கும் பிஸகற்றுக்கும் பிடிசோறுக்கும் கை ஏந்தும் நிலைமை எமது மக்களுக்கு ஏற்பட்டமை மிகப் பெரிய வரலாற்றுச் சோகமாகும்.

எதிரிகளை சுட்டு விழுத்துவதற்கு துப்பாக்கிகளும் ரவைகளும் இல்லாமற் போன ஒரு தருணத்தில் முழு வன்னியிலும் இருந்த பல இலட்சம் மக்கள் முல்லைத்தீவில்  மாட்டுப்பட்டுக் கொள்கிறார்.
குண்டுகளும் ஸெல் வீச்சுகளும் மக்களை வகைதொகை இன்றி கொன்றொழிக்கின்றன. காயப்படுத்துகின்றன

“தப்பியவர்கள் இருக்க இடம் இன்றியும் குடிக்க நீர் இன்றியும் தவித்தனர்…” 

“பிணங்களை புதைக்கவோ எரிக்கவோ வசதியும் இல்லை பொழும் இல்லை.” 
ஒவ்வொருவரும் தமதுஉயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

இவற்றிற்கெல்லாம் நேரடி சாட்சியாக இருந்தவர் வெற்றிச் செல்வி.

அவரது வார்த்தைகளின் வலிமை வாசிப்பவர் மனத்தை உறைந்து போகச் செய்கிறது

“தொட்டிலிற் கிடந்த குழந்தைக்கும் உடல் சிதறும். தாயின் முலையில் பாலருந்தும் மழலைக்கும் தலை பறக்கும்.  சோற்றை அள்ளி வாயில் வைக்கப் போனவரின் கை துண்டாடப்படும்”

“சாவு நடக்காத குடும்பம் எதுவுமில்லை. கதறல் ஒலி கேட்காது நேரம் கழியவில்லை”.
எவர் காயப்பட்டாலும்அவர்களை கண்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கும் அளவு மனிதாதாமானம் மக்களிடம் இருந்தது.
ஆனால் நிலமை மோச அடைய அடைய தான் தப்பினால் போதும் ஓடித் தப்ப வேண்டிய நிலை மக்களுக்கு எற்பட்டது.

 “எரிக்கவோ புதைக்கவோ ஆட்களின்றி பிணங்கள் ஆங்காங்கே வாய் பிழந்து கிடந்தன.” என்பதை வாசிக்கவே மனம் கலங்குகிறது

 மருத்துவ மனைகள் இயங்காது போது. மருத்துகள் இல்லாமல் போயின. மருத்துவர்களும் மருத்து போராளிகளும் கூட மருந்தின்றி அவலமடைய நேர்ந்திருக்கிறது.
இந்த அவலங்களுக்குள்ளும் எண்ணை பொசியும் கடலை வடையை 50 ரூபாவிற்கு விற்று பணம் பண்ணும் காரியத்தையும் சிலர் செய்வதை ஆச்சரியத்தோடு பார்த்தாலும் அத்தகைய சுயநலம்தான் மனிதனின்  உண்மையான குணமோ என அயரவும் வைக்கிறது.

“நேற்றிரவு தலைவர் போயிட்டார்.  எஞ்சிய போராளிகள் சரணடையிறதாக கதை” என்பதும்,

  “யுத்தம் முடிஞ்சுப் போச்சு. பிரபாரன் செத்தாச்சு. இனிப்பயம் வேணாம்” என்பது போன்றவை காதில் விழும் உரையாடல்களாக தகவல்களைத் தருக்கின்றன.

“தயவு செய்து குப்பிகளைக் கடிக்காதீங்க அக்கா. நேற்று பின்னேரம் கூட காயம்பட்ட பிள்ளைகள் இருந்த பங்கருக்கை போய் சொன்னன். விடியப் போய் பாக்கிறன் குப்பி கடிச்சு  செத்து கிடக்குகள்” …….

  “ஒருதருக்கும் பிரயோசனம் அல்லாத சாவுகள் புதைக்கக் கூட இடம் இல்லை…” 

இவ்வாறு சொல்வது ஒரு போராளி. வாழ்வின் நியாயத்தை உணர்ந்த ஒருவன் என்பேன்.

 ஒருவாறு உயிர்தப்பி படையினர் பகுதிக்குள் வந்ததுதம். சனம் அலை மோதுகிறது.

“நிற்கும் இடத்திலிருந்து காலைத் தூக்கினால் தூக்கியபடியே நிற்க வேண்டியதுதான். மீண்டும் இடம் பிடித்து காலை ஊன்ற அரைமணிநேரம் தேவைப்படும்.”

 குளிப்பதற்கு நீரில்லை

உணவில்லை.

 சுட்டெரிக்கும் வெயிலில் அவர்களது மனம் போலவே அவர்களும் கருகிப் போகிறார்கள்.

துவேசமும் மூர்க்கமும் நிறைந்த படையினரிடையே ஓரிரு நல்ல மனம் படைத்தவர்களை போராளிகளால் இனம் காண முடிகிறது.

 நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் இனம் சார்ந்தவை அல்ல. அவை தனிநபர் சார்ந்தவை என்பதை புதிய உலகம் அவர்களுக்கு உணர்த்துவதை காண முடிகிறது
 ஒரு முக்கிய நூல் இது. எமது வரலாற்று ஆவணத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ளலாம்.
 இது தமிழகத்திலிருந்து தோழமை வெளியீடாக வந்திருக்கிறது.

பிரதிகள்  இங்கு சுலபமாகக் கிடைப்பதில்லை

நூலாசிரியரின் நூலை வாங்கியே படிக்க நேர்ந்தது.
இலங்கையில் மீள் பதிப்பு வரவேண்டியது அவசியம்.
இலங்கையில் மறுபதிப்பு வந்திருக்கிறது.
154 பக்கங்களைக் கொண்ட நூல் இது.
(விலை ரூபா 500).
மிகவும் நேர்த்தியான பதிப்பு.
தொடர்புகளுக்கு aanathy10@gmail.com
Phone 0776576807
சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்தால் சகோதர இனமும் முழு உலகமும் எமது மக்களின் ஒரு அவலக் கணத்தை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
ஆசிரியரின் பிற நூல்கள்
சென்ற வருடம் ஜீலை மாதம் எனது மறந்து போகாத சில புளக்கில் வெளியான போது மிக அதிகமான வாசகர்கள் அக்கட்டுரையை படித்திருந்தனர்
இந்த மீள் பதிவு சில சிறிய மாற்றங்களுடன் வெளிவருகிறது,

எனது இக்கட்டுரையை தனது புதிய பதிப்பில் முன்னுரையாக சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
அவருக்கு எனது நன்றிகள்.

நண்பர் சிறீ சிறிஸ்கந்தராசா அவர்களின் கட்டுரையும் முன்னுரையாக வந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி.

“முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னும் உயிரோடு இருக்கும் எனது மக்களுக்கு” இந் நூலை சமர்ப்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

0.00.0

Read Full Post »

Older Posts »