Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘உளவியல்’

வாழ்க்கை என்பது என்றென்றும் தெளிந்த நீரோடை போல சலசலப்பின்றி ஒடுவதல்ல. சங்கடங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் வெறுங்காலில் சுள்ளெனக் குத்தும் நெருமுட்கள் போல திடீரென மனதைத் தைத்து சோர வைக்கும்.

IMG_0005_NEW-001

வாழ்க்கைத் துணையின்; மறைவு, பாசத்தைக் கொட்டி வளர்த்த பிள்ளைகளின் பிரிவு, தொழில் இழப்பு, உயிருக்கு உயிராகக் காதலித்தவரின் கைவிரிப்பு, தொழிலில் பெருநட்டம், பெருநோயின் எதிர்பாராத் தாக்கம், இப்படி எத்தனை எத்தனை ஆழ்துயர்கள் மனித வாழ்வில் சோர்வூட்டுகின்றன?

இவ்வாறு ஆகும்போது உடுக்கை இழந்தவன் கை போல மனம் சோரும், ஆற்றாமை மூழ்கடிக்கும், மனப் பதற்றம் ஏற்படும். எதுவுமே இயலாமற் போனது போன்ற உணர்வு ஏற்படும். இத்தகைய உணர்வுகள் எல்லாமே ஒரே நேரத்தில் ஏற்படும் என்றில்லை. அவற்றில் ஒரு சிலவே மனதைத் துயரில் ஆழ்த்தி வாழ்வில் பற்றின்மையை ஏற்படுத்திவிடலாம்.

S.Bluyer-Deep-sorrow

அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்? எவை ஆகாது?

 • முக்கியமானது மது, போதைப் பொருள் போன்றவற்றை நாடக் கூடாது. தற்காலிகமாக மறக்க வைத்து உங்கள் வாழ்வையே அழித்துவிடும்.
 • தனிமையை நாடாதீர்கள். தனிமையும் உள்ளுக்குள்  மனங் குமைதலும் கூடாது. நண்பர்களுடனும் நெருங்கிய உறவினர்களுடனும் பொழுதுகளைச் செலவழியுங்கள்.
 • உணவைத் தவிர்க்காதீர்கள். நேரத்திற்கு நேரம் போசாக்கான உணவை உண்ணுங்கள். மனம் வேண்டாம் என்று சொன்னாலும் உணவை மறுக்காதீர்கள்.
 • காலாற நடவுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். போதியளவு தூங்குங்கள்.
 • யோகாசனம், சாந்தியாசனம் போன்ற பயிற்சிகள் நல்லது. அல்லது உடலைத் தளரச் செய்யும் பயிற்சிகளை அதற்கான வழிகாட்டலுடன் செய்யுங்கள்.
 • வேலைக்குப் போதல், கடைத்தெருவிற்கு செல்லல், வணக்கத் தலங்களில் வழிபடுதல், கூட்டங்களில் பங்கு பற்றல், நண்பர்களைச் சந்தித்தல் போன்ற உங்களது வழமையான செயற்பாடுகள் எதையும் தவிர்க்க வேண்டாம்.
 • வேலை எதுவும் இல்லையென்றால் சமூகசேவைகளில் இறங்குங்கள்.
 • நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் ஆலோசனைகளைப் பெறத் தயங்காதீர்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.
 • அவசியமானால் மருத்துவரைக் கலந்து ஆலாசியுங்கள். அல்லது உங்கள் ஆன்மீக வழிகாட்டியுடன் பேசுங்கள்.

நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
DSC04603
மீண்டும் வசந்தங்கள் வீசும்.

தினக்குரல் பத்திரிகையின் மருத்துவக் குறுந்தகவல் பத்தியில் அக்டோபர் 3, 2013ல் நான் எழுதிய குறிப்பு

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »

‘இதிலை இருக்கிற அவ்வளவு வருத்தமும் எனக்கு இருக்கு’ என்றவள் தனது கைப்பையைத் திறந்தாள். நீண்ட தூரம் பயணித்து வந்திருந்த பெண் அவள்.

அவளது கைப் பையிலிருந்து வெளிவந்தது பொக்கிசம் போல பொத்தி வைத்திருந்த ஒரு பொருள்.

வேறொன்றும் இல்லை. சென்ற வார வீரகேசரியின் ஒரு பக்கம். ‘கை கால்களில் விறைப்பு எரிவு வலிகள் வருவது எதனால்;?’ என்ற கட்டுரை அதில் இருந்தது.

‘கைகால்களில் எரிவு, மேல் எரிவு, நெஞ்சு எரிவு, வயிற்றெரிவு எரியாத இடமே இல்லை’ என்றாள். மேலும் விசாரித்தபோது ஏற்கனவே பலரிடம் மருந்து எடுத்திருந்தமை தெரியவந்தது.

தலைக்கான சீரீ ஸ்கான், வயிற்றரை ஸ்கான், இரைப்பையில் குழாய் விட்டுப் பார்க்கும் endoscopy பரிசோதனை தைரொயிட் பரிசோதனை, குருதியில் B12 பரிசோதனை என ஏராளமான பரிசோதனைகள் செய்து பல மருந்துகளும் உட்கொள்கிறாள்.

‘நோய்கள் குறைஞ்சு கூடுகிறதே ஒழிய மாறுகிறபாடாக் காணவில்லை’ எனச் சலித்துக் கொண்டாள் கணவன் இறந்து பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிக்கத் தனியே வாழும் பெண். ஓன்று போக மற்றொரு பிரச்சனை மாறி மாறிப் பிறந்து கொண்டே இருக்கிறது.

மற்றவர் நடு வயதுக்காரன். மிக மெலிந்த உடலும் சோர்ந்த முகமுமான அவரை மனைவி அழைத்து வந்திருந்தாள். ‘எதுவுமே ஏலுதில்லை என்று வீட்டோடு கிடக்கிறார். கடைக்குப் போறதில்லை. நான்தான் கடையையும் பார்த்து வீட்டு வேலைகளையும் பார்க்க வேண்டிக் கிடக்கு. சீனி டயபட்டிஸ், ரீபி (TB) என்று எந்த ஒரு சீரியசான பிரச்சனையும் கிடையாது என்று டொக்டர் சொன்னவர்’

ஏதாவது கான்சராக இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு. ஆனால் நல்ல காலம் அவ்வாறு இருக்கவில்லை. ‘ ஒண்டுமே ஏலாமல் கிடக்கு. படுத்துக் கிடக்க வேணும் போலை கிடக்கு. படுத்தாலும் நித்திரை வருகுதில்லை. ஞாபகம் மறதியும் கூடிப்போச்சு’ என அனுங்கினார்.

‘மகளுக்கு கலியாணம் வருகுது. இந்த மனிசன் இடிச்ச புளி மாதிரி மூஞ்சையை நீட்டிக் கொண்டு இருக்குது’ எனக் கணவனை திட்டினாள் மற்றொரு பெண். பிடிக்காத கலியாணம் அல்ல. இவர்களாக மனம் பிடித்து ஏற்பாடு செய்ததுதான். ஆனால் அதிலையும் இவருக்கு சந்தோசத்தைக் காண முடியாதிருக்கிறது. எதுவுமே இவருக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.

மனச் சோர்வு

மேற் கூறிய இவை எல்லாமே மனச்சோர்வின் அறிகுறிகள்தான். மருத்துவத்தில் depressive disorder என்பார்கள். ஆண் பெண் இருபாலாரிலும் ஏற்படும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை. இருந்தபோதும் பெரும்பாலான நோயாளிகளுக்கு தாம் மனச்சோர்வு நோயினால்தான் பாதிக்கப்பட்டிருக்pறோம் என்பது புரிவதில்லை.

கைகால் உழைவு, மேல் எரிவு, வயிற்று எரிவு, சோர்வு, இயலாமை, தூக்கக் குறைபாடு அல்லது அதிகரித்த தூக்கம், பசியின்மை அல்லது கூடுதலான பசி, முதுகுவலி, உடல் வலிகள், தலைக்கனம், மறதி, என உடலில் பல்வேறு துன்பங்களுடன் மருத்துவர்களிடம் வருவார்கள். தீர விசாரிக்காவிடில் மருத்துவர்களும் ஏமாற நேரிடும்.

முக்கிய அறிகுறிகள் மூன்று

 

பல்வேறு அறிகுறிகள் இருந்தாலும் அடிப்படையான மூன்று முக்கிய விடயங்கள் இருக்கிறதா என மருத்துவர்கள் ஆராய்ந்து பார்ப்பார்கள்.

 1. மனநிலை மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும். எந்நேரமும் மிகவும் கவலையோடு இருப்பார். உற்சாகம் அறவே இருக்காது. எதிர்காலம் இருண்டு போனதான உணர்வு ஏற்படக் கூடும்.
 2. எதிலும் மகிழ்ச்சி இருக்காது. ஆர்வம் அற்றுவிடும். எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விடயம் நிகழ்ந்தாலும் அதிலும் மகிழாது விடுபட்டவர் போல இருப்பார். வழமையாக நண்பர்கள் உறவினர்களுடன் மகிழ்ந்திருக்கும் வழக்கமுள்ள அவர் இப்பொழுது அவற்றில் சந்தோசம் அடையமாட்டார். தனிமையை நாட வைக்கும். பாலுறவு பாகற்காயாக் கசந்து ஈடுபடுவது அரிதாகும். இயலாமற் போவதும் உண்டு.
 3. மிகுந்த சோர்வாக இருப்பார். அல்லது களைத்தது போல இருப்பார். உடல் தளர்ந்து இயங்க முடியாதது போல உணர்வார்.

இந்த மூன்றில் குறைந்தது இரண்டு அறிகுறிகள், அதுவும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து இருந்தால்தான் அதை மனச்சோர்வு என மருத்துவர்கள் கணிப்பார்கள்.

ஏனெனில் திடீரென ஏற்படும் நெருங்கியவரது மரணம், பிரிவு, பொருளாதார இழப்பு போன்ற இழப்புகளும் சோகங்களும் இத்தகைய மனநிலையை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் அவை நாளோட்டத்தில் மறந்து மறைந்துவிடும். வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

ஆனால் மனச்சோர்வு அவ்வாறு எளிதில் மாறாது. நீண்ட நாட்களுக்குத் தொடரும்

மேலே கூறிய முக்கிய அறிகுறிகளுக்கு அப்பால் வேறு பல சிறிய அறிகுறிகளும் மனச்சோர்வு நோயாளிகளிடம் ஏற்படலாம்.

ஏனைய அறிகுறிகள்

தூக்கக் குழப்பம் முக்கிய அறிகுறியாகும்.

 • பொதுவாகச் சோர்வாக இருப்பதால் படுக்க வேண்டும் போல இருக்கும்.
 • ஆனால் தொழில் மற்றும் குடும்பக் கடமைகள் காரணமாக அந்நேரம் படுக்க முடியாதிருப்பதால் உற்சாகம் குறையும்.
 • படுத்தாலும் ஆழ்ந்த உறக்கம் கிட்டாது. அதிகாலையில் முழிப்பு வந்துவிடும்.
 • ஆனாலும் எழுந்திருக்க முடியாத சோர்வு படுக்கையில் கிடக்கச் சொல்லும்.
 • சிலர் நித்திரை வராவிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அல்லது எழுந்து நடப்பார்கள். வேறு படுக்கையில் கிடந்து பார்ப்பார்கள்.
 • காலையில் எழுந்திருக்க மனம் வராது. மேலும் படுத்திருக்க வேண்டும் போலவும் இருக்கலாம்.
 • ஆனால் ஒரு சிலருக்கு தூக்கம் அதிகமாவதும் உண்டு.

பொதுவாகச் சிந்தனையை ஒருமுகப்படுத்தவோ எதிலும் கருத்தூன்றிச் செயற்படவோ முடியாதிருக்கலாம். இதனால் திடமான முடிவுகள் எடுக்க முடியாது திணறும் நிலை ஏற்படும். வழமைபோலத் தனது தொழிலில் ஈடுபடுவதைப் பாதிக்கும். வேலை இழப்பு, பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். மறதியும் சேர்ந்து வருவதுண்டு.

தன்னம்பிக்கை குறையும். ஆற்றாமை மிகும். எதுவும் தன்னால் செய்ய முடியாது என்பது போன்ற உணர்வு ஏற்படலாம். உதவியற்று நட்டாற்றில் தான் கைவிடப்பட்டதாகத் தோன்றும்.

மாறாக சிலருக்கு குற்றவுணர்வு எற்படுவதுண்டு, தானே தவறிழைத்தவன், செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத, செய்ய முடியாத பாவி எனத் தன்னைத்தானே பிழை சொல்லி துன்பப்படுவதும் உண்டு..

உணவு விடயத்தில்; 

 • பொதுவாக நாட்டமின்மை ஏற்படும்.
 • பசிக்காது, பசித்தாலும் உண்ண மனம் வராது.
 • இவை காரணமாக உடல் மெலியும் வலு குறையும்.
 • உளச்சோர்வுடன் உடற் சோர்வும் இணையலாம்.
 • மாறாக ஒரு சிலரில் அதீத பசி எற்படுவதுண்டு.
 • தமது இயலாமையை உடற் பலயீனம் எனக் கருதி அதிகம் உண்பவர்களும் உண்டு.
 • தமது மனஉணர்வைப் புரிந்து கொள்ளாமல் எதையாவது வாயில் அடைய வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இதனால் எடை அதிகரிக்கலாம்.

காரணம் புரியாது நீண்ட நாட்களாகத் தொடரும் உடல் உழைவு, கைகால் பிடிப்பு, தசைக் குறண்டல், தலையிடி போன்ற தெளிவற்ற அறிகுறிகளுடனும் மனச்சோர்வு நோயாளர்கள் மருத்துவரை நாடுவதும் உண்டு.

மிக ஆபத்தானது தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதாhகும். வாழ்வின் மீதான பற்றின்மையும் குற்றவுணர்வு போன்றவையும் தற்கொலை எண்ணங்களுக்கு வித்திடுவதுண்டு. உடல் எரிவு என்ற பிரச்சனையுடன் வந்த அந்தப் பெண் ‘ நான் ஏன் உயிரோடை இருக்கோணும் என்ற யோசினை வருகுது’ என்று சொன்னவுடன் நான் உசாரானேன். நோயினால் வரும் உணர்வு அது, அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை அவளுக்கு விளக்கி தீவிரசிகிச்சையை ஆரம்பித்தேன்.

இருந்தபோதும் நேரிடையாகக் கேட்கும்போது தற்கொலை எண்ணங்களை பல நோயாளிகள் மறுத்துவிடுவதுண்டு. அவர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு இடையேயான உணர்வுகளை வைத்து மருத்துவர்கள் நோயை இனங்காண நேரும்.

தமது உடல் நோய்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது போல தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் மற்றவர்களுடன் பகிரும் வழக்கம் எமது சமூகத்தில் இல்லை என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

மனதில் ஏற்படுகிற கவலை, துன்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை வைத்தியர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமே தங்களது பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,

இறுதியாக

 • மனச்சோர்வு என்பது தலையிடி பிரஸர் நீரிழிவு போல மற்றொரு நோய்தான்.
 • சீனி, கொலஸ்டரோல் உப்பு போன்ற இரசாயனங்களால் எவ்வாறு நோய்கள் ஏற்படுகிறதோ அதே போல மூளையில் உள்ள சில இரசாயன மாற்றங்களால் தோன்றுவதுதான் மனச் சோர்வு நோய்.
 • தானே தேடிக் கொண்டது என வெட்கப்பட வேண்டிய வியாதி அல்ல.

இதற்கான நல்ல சிகிச்சைகள் இருக்கின்றன. சிறப்பான மருந்துகள் உள்ளன. பூரண குணம் கிடைக்கும். 

ஆயினும் 

 • இதற்கான சிகிச்சையை குணம் கண்டவுடன் நிறுத்தக் கூடாது.
 • பொதுவாக குணம் கணட பின்னரும் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்தால்தான் மீளவும் வராது தடுக்க முடியும்.
 • எனவே தாங்களாக மருந்தை நிறுத்தக் கூடாது.
 • பொதுவாக மருத்துவர்கள் மனச்சோர்விற்கான மருந்துகளைத் திடீரென நிறுத்துவதில்லை. படிப்படியாகக் குறைத்தே நிறுத்துவார்கள்.
 • எனவே மருத்துவர் சொல்லும் வரை தொடர வேண்டும்.

(இலங்கை குடும்ப மருத்துவர்கள் சங்கத்தின் ஆதரவில் ஹோட்டல் ஜானகியில் நோர்ட்டிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் நடந்த கருத்தரங்கில் களனி பல்கலைக்க கழக விரிவுரையாளரும் மனநல மருத்துவருமான Dr.Shehan Williams ஆற்றிய உரையின் உந்துதலில் எழுதப்பட்ட கட்டுரை இது)

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

“மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது”

மூக்கால் சளி சிந்தவில்லை.

வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குiறாயாகச் சொன்னார் அந்த அம்மணி.

இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது,

“வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார்.

தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் திருப்பதியடையவில்லை.

போதுமென்ற மனசு

போதுமென்ற மனசு பொன் போன்றது என்பார்கள். மாறாக எதிலும் திருப்பதிப்படாத மனசு நரகமாகத்தான் இருக்கும். கோப்பையும் தண்ணீரும் நல்ல உதாரணம்.

“எனது கோப்பையில் தண்ணீர் அரைவாசி நிறைந்திருக்கிறது” 

எனச் நிறைவோடு சொல்பவர்கள் இருப்பார்கள், அல்லது

“அரைக் கோப்பை காலியாக இருக்கிறது”

எனக் கவலைப்படுபவர்களும் இருப்பார்கள்.

இதற்கான மறுமொழியிலிருந்து ஒருவரது வாழ்க்கை பற்றிய எண்ணத்தை அறிந்து கொள்ளலாம் என்பார்கள்.

இவற்றைத்தான் நேர் சிந்தனை (Positive thinking)> எதிர்மறை சிந்தனை (Negative thinking) என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்பிக்கையுள்ள மனது, அவநம்பிக்கையுள்ள மனது என்று புரியும்படி சொல்லலாமா?

இது வாழ்க்கை பற்றிய பார்வை மட்டுமல்ல. உங்கள் நலத்தோடும் தொடர்புடையனவாகும்.

மறுவார்த்தையில் சொன்னால்

 • நேர் சிந்தனையுள்ள மனது உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது.
 • எதிர்மறை சிந்தனையுள்ள மனது நலக்கேட்டுடன் தொடர்புடையது எனலாம்.

நேர் சிந்தனையும் உடல் நலமும்

நேர் சிந்தனையாது உடல் நலம் பல வழிகளில் முன்னேற்றமடைய உதவுகிறது.

 • வாழ்நாள் அதிகரிக்கும்.
 • மனச் சோர்வு நோய்க்கான (Depression) சாத்தியம் குறைவாகும்.
 • நாளாந்த வாழ்க்கை நெருக்கீடுகளின் தாக்கம் குறைவாகும்.
 • உடல் உள ஆரோக்கியங்கள் மேம்படும்
 • சாதாரண தடிமன் காய்ச்சல் அணுகுவது குறையும்.
 • மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறப்பதற்கான சாத்தியம் குறைவாகும்.

இவற்றுக்கான காரணங்கள் என்ன?

நேர்சிந்தனை உள்ளவர்களது உடல்நலம் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணங்கள் என்ன?

 • நேர் சிந்தனையானது, வாழ்வின் நெருக்கீடு நிறைந்த தருணங்களில் மனம் தளர விடாது நம்பிக்கையுடன் செயலாற்ற உதவும். இதனால் நெருக்கீட்டின் தீய விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என நம்பப்படுகிறது.
 • நேர் சிந்தனை உள்ளவர்களுக்கு பொதுவாக வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்கள் பொதுவாக நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

உதாரணமாக

 1. நல்ல உணவுகளை உண்கிறார்கள்.
 2. உடற் பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
 3. புகைத்தல், மது, போதைப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை. இதனால் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்டுகின்றது.

மனதோடு பேசல்

நாங்கள் சதா காலமும் எமது மனதோடு பேசிக்கொண்டே இருக்கிறோம். இதை நாம் உணர்வதில்லை. ஆற்று நீர்போல எமது மூளையினுள் சதா காலமும் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கினறன.

தன்னிச்சையாகத் தோன்றி வற்றாத நீருற்றுப் போல பாய்ந்தோடுபவை நேர் சிந்தனைகளாக அல்லது எதிர்மறை சிந்தனைகளாக இருக்கலாம்.

இந்தச் சிந்தனைகள் பலவும் தர்க்க ரீதியானதாக உண்மையின் அடிப்படையில் தோன்றி இருக்கலாம். அல்லது எமது தவறான நம்பிக்கைகள் காரணமாகவும், போதிய தகவல்கள் கிட்டாததாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு எழுபவை எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் வாழ்க்கை அவநம்பிக்கை சூழ்ந்ததாக மாறிவிடும். மாறாக நேர் சிந்தனைகளாக இருந்தால் ஒளிமயமான எதிர் காலம் சித்திக்கும். உங்கள் சிந்தனையின் போக்கு எத்தகையது என்பதை அடையாளம் காண முயலுங்கள்.

உங்கள் எதிர்மறை சிந்தனைகளை அடையாளம் காண்பது எப்படி?
 • நாள் முழுவதும் பல நல்ல காரியங்களைச் செய்கிறீர்கள். சாதனைகளைப் புரிகிறீர்கள். மற்றவர்களது பாராட்டுகளையும் பெறுகிறீர்கள். ஆனால் ஒரு தவறு நடந்து விடுகிறது. அந்த நாளின் முடிவில் நீங்கள் மிகுதி எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த ஒரு தவற்றை மட்டும் தூக்கிப் பிடித்துக் கவலை கொள்கிறீர்களேயானால் நீங்கள் எதிர்மறை சிந்தனை கொண்டவர் எனச் சொல்லலாம்.
 • ஏதாவது தவறுகள் நேரும் போது அல்லது நடக்க வேண்டிய கருமம் நிறைவேறாத தருணங்களில் அதற்குக் காரணம் நீங்கள்தான் என மனங்கோணுவதும் எதிர்மறை சிந்தனைதான்.
 • எதிலும் நன்மையை எதிர்பார்க்காது இருத்தல். உதாரணமாக காதலியுடன் ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அங்கு போய் ஏதாவது மடைத்தனமாகப் பேசி, நடந்து அவளது உறவையே முறித்துவிடக் கூடும் எனத் தயங்கினால் அதற்கு வாழ்க்கை பற்றிய அவரது நம்பிக்கையீனம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

மாற்ற முடியுமா?

மனதோடு பேசும் உங்கள் உரையாடல்கள் அனைத்தும் எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனிச் செய்வதற்கு எதுவும் இல்லை என மனங்கலங்க வேண்டியது இல்லை.

உங்கள் சிந்தனைகளினது பாதையை நீங்கள் முயற்ச்சித்தால் மாற்றிக் கொள்ளலாம்.

 • நாளாந்த செயற்பாடுகளின் இடையே உங்களை நீங்களே சீர்தூக்கிப் பாருங்கள். உங்கள் சிந்தனைகள் சரியான வழியில் செல்கின்றனவா அல்லது கவலைக்குரிய பாதையில் செல்கிறதா? எதிர்மறை சிந்தனை வழி சென்றால் அதனை இடை மறித்துச் சரியான சிந்தனைக்கு இட்டுச் செல்லுங்கள்.
 • புன்னகைக்கும் சிரிப்பிற்கும் இடம் ஒதுக்கி வையுங்கள். நகைச்சுவை உணர்வு வாழ்வை மலர்ச்சிக்கு உள்ளாக்கும். எத்தகைய நிகழ்வுக்கும் நகைச்சுவை, கிண்டல், முசுப்பாத்தி என இனிமையான பக்கம் இருக்கவே செய்யும். அதைக் கண்டு பிடித்து வாழ்வை நம்பிக்கையாக்குவது அவரவர் கைகளில்தான் தங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக துன்பமான நிகழ்விலும் கூட சிரிப்பை உண்டாக்கக் கூடிய பக்கத்தைத் தேடிக் கொள்ளலாம்.
மனைவியின் இறப்பு

எனது நண்பரின் மனைவி மறைந்தபோது அவரது மறைவிற்கு அனுதாபம் சொல்வதற்காகச் சென்றிருந்தேன்.

“இப்பத்தான் அவளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. எனது சுடுசொற்களிலிருந்து” என்றார்.

ஆழ்மனத்தில் சோகம் மூடியிருந்தபோதும் அதனை மறைக்க அவரது நகைச்சுவை உணர்வு கை கொடுத்தது.

உங்கள் வாழ்வைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக் கொண்டால் அதைவிட பெரிய பேறு எதுவும் இருக்க முடியாது.

 • வாழ்க்கை முறை:- ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும் உதவும். தினசரி உடற் பயிற்சி அல்லது நடை உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் முக்கியமானது. அத்துடன் நொறுக்குத் தீனிகளைத் தவரித்த சத்துள்ள உணவு முறையும் நெருக்கீடுகளை துணிவோடு எதிர் கொள்ள உதவும்.
 • நம்பிக்கையூட்டும் சூழல்:- நீங்கள் நேர் சிந்தனையுள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நல்லவர்களாக மட்டுமின்றி வாழ்வில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் உங்களது நேர்சிந்தனைகளை அவர்கள் மாற்றிவிடக் கூடும் என்ற அபாயம் உண்டு. சந்தேகமும், நம்பிக்கையீனமும், செயற்திறனும் அற்றவர்கள் சூழலில் இருந்தால் உங்கள் வாழ்வில் நெருக்கீடுகள் அதிகரிக்கக் காரணமாகிவிடுவார்கள்.
 • மனதோடு மகிழ்ச்சியாகப் பேசுங்கள்:- உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை மென் மனத்தோடு அணுகுங்கள். அதை நோகடிக்கும் வகையில் உங்கள் மனத்தோடு பேசாதீர்கள். மற்றவர்கள் முகத்துக்கு நேரே சொல்ல முடியாத கடுமையான வார்த்தைகளை உங்கள் மனத்திற்குள் பேசி அதைக் காயப்படுத்தாதீர்கள். இவை உங்கள் சிந்தனைகளை நேர்வழியில் செல்ல வழிவகுக்கும்.
மாற்றங்களுக்கு தயாராகுங்கள்
 1. இது முன்பு நான் ஒருபோதும் செய்யாதது. இப்பொழுது எப்படிச் செய்யப் போகிறேன் எனத் தயங்க வேண்டாம். இதைச் செய்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இதை என்னால் செய்ய முடியும் எனச் சவாலாக எடுங்கள்.
 2. இது சிக்கலானது என எதையும் செய்யத் தயங்காதீர்கள். மாற்று வழியிலாவது இதைச் செய்ய முடியும் என சிந்தியுங்கள்.
 3. இது தீவிரமான மாற்றம். இதில் ஈடுபடுவது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல என புதிய முயற்சிகளில் இறங்கும்போது சிந்திக்காது, முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என எண்ண வேண்டும்.

இவற்றைச் செய்தால் ஒரே நாளில் சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்க வேண்டாம். தொடர்ந்து முயற்சியுங்கள், தொடர்ந்து பயிற்சி  செய்யுங்கள். படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படும்.

நேர்சிந்தனை கொண்ட மனது உங்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், சுபிட்சங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும்.

நம்புங்கள்.

ஹாய் நலமா புளக்கில் வெளியான எனது பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

இன்றைய கல்விமுறையானது மாணவர்களுக்கு முன்னைய காலங்களை விட கூடியதும் பரந்ததுமான அறிவைக் கொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இது உண்மையான போதும் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிப்புகளையும் நெருக்குவாரங்களையும் ஏற்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டுவது அவசியமானதாகும்.

சாதாரண, உயர்தர மாணவர்களுக்கு என இருந்த போட்டிப் பரீட்சைகள் இப்பொழுது சின்னஞ் சிறுவர்களையும் பயமுறுத்துகிறது. இப் பரீட்சைகள் பெற்றோர்களது கௌரவப் பிரச்சனையாகவும் மாறிவிடுவதால் குழந்தைகளுக்கு நெருக்குவாரம் அதிகரிக்றிறது.

படி படி படி என்பதே தாரக மந்திரமாக அவர்களுக்கு ஓதப்படுகிறது.

விளையாட்டும் உடற் பயிற்சிகளும் அவர்களது உடல் உள வளர்ச்சிகளுக்கு முக்கியமானது என்பது சுலபமாக மறக்கிறது.

மாடுகளுக்கு நலங்கடிப்பது போல, குழந்தைகளுக்கு விளையாட்டு மறக்கடிப்பப்படுகிறது. மீறினால் கணனியில் பந்தாடி மனம் மகிழவே முடிகிறது. உடலுக்கு வேலையில்லாத விளையாட்டுகளால் என்ன பலன்?

சந்தோசமாக ஓடி ஆடித் திரிந்து விளையாட வேண்டிய 5ம் வகுப்புக் காலத்தில் அவை எல்லாவற்றையும் மறந்து பள்ளிக்கூடம், ரியூசன், வீடு என எங்கும் புத்தகங்களோடும் படிப்போடும் மட்டும் மல்லுக்கட்டி நிற்கிறார்கள்.

பல பிள்ளைகளுக்கு தலையிடி, உடல் உழைவு, வயிற்று வலிகள் எனப் பல பிரச்சனைகள் வருகின்றன. கோபப்படுகிறான் குளப்படி செய்கிறான் எனப் பெற்றோர்கள் குற்றம் சுமத்துவார்கள்.

சில பிள்ளைகள்

 • தமது தலை முடியை பிடுங்குவதும் உண்டு.
 • அதை வாயில் போடும் குழந்தைகளும் உண்டு.
 • குளியலறையில் நீண்ட நேரம் செலவழிக்கும் குழந்தைகளும் உண்டு.
 • அடம் பிடிக்கும் வேறு சில பிள்ளைகள்
 • படுக்கையில் சிறுநீர் கழிக்கும்

இவை போன்ற பலவும் உள ரீதியான பாதிப்புகளின் மெய்பாட்டு அறிகுறிகளாகும்.

பல குழந்தைககளை  Counseling எனப்படும் உளவளத்துணைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிலருக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்தே சாதாரண நிலைக்குக் கொண்டு வர முடிகிறது.

குழந்தைகள் மட்டுமின்றி பல பெற்றோர்களும் கூட பிள்ளைகளின் படிப்புப் பிரச்சனையால் உள ரீதியாகப் பாதிக்படுவதைக் காண்கிறோம். முக்கியமாகத் தாய்மார் அவர்களது படிப்பிற்கு உதவுவதற்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் தனது சமூக வட்டத்தில் எற்படுத்தக் கூடிய தாக்கங்களை பற்றிய எதிர்பார்ப்பு, மனஅழுத்தமாக மாறுகிறது. பதற்றம், படபடப்பு, எரிச்சல், கோபம் என வெளிப்படுகிறது.

எனவே மன அழுத்தங்களுக்கு வித்திடும் கற்கை முறைகள், பரீட்சைகள் ஆகியவற்றிற்குப் பதிலாக பிள்ளைகளின் ஆளுமை விருத்தியை இலக்காக் கொண்ட கல்வியை இலக்காகக் கொள்வோம்.

Read Full Post »