சாந்தியின் மறு உருவம் பாலா சேர்
வாழ்வின் வசந்தங்கள் சட்டெனக் கருகி விழுந்தது போலாயிற்று. எமது நண்பர்கள் குழுவினரிடையேயான குதூகலங்களும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான சந்திப்புகளும், பகிடிகளோடு இணைந்த அனுபவப் பகிர்வுகளும் திடீரென முற்றுப்புள்ளியிடப்பட்டு முற்றாக முடக்கப்பட்டன. ஒரு இனிமையான சகாப்தத்தின் முடிவு மூர்க்கத்தனமாக எம் மீது திணிக்கப்பட்டது. எமது நட்பு வட்டத்தில் மட்டுமின்றி இன்னும் பல பல நட்பு மற்றும் உறவு வட்டங்களும் அக் கணத்தில் அவ்வாறே நிர்க்கதியான நிலையை அடைந்ததாக உணர்ந்தார்கள்.
அதற்குக் காரணமானவரோ இவை எவை பற்றியும் அலட்டிக்கொள்ளாது தனது வழமையான புன்னகை மறையாத சாந்த வதனத்துடன் அமைதியாகக் கிடந்தார். ஆம். பாலா மாஸ்டர்தான்.
ஆம் மறக்க முடியாத துயர் தினம். ஜனவரி 31ம் திகதி மாலை அந்த துயர் செய்தி எங்களை அடைந்தது.
அது அதீத அதிர்ச்சி அளித்த சம்பவம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் அவரை அவரது வீட்டில் சந்தித்து பலதும் பத்தும் கதைத்து நிறைந்த மனதுடன் வந்திருந்தேன். எந்தவித உடல்நலக் கேட்டுக்கான அறிகுறிகளையும் மருத்துவனான என்னால் அவரில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
‘நேற்று மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததைக் கண்டேன். சிரித்து தலையசைத்து சென்றார். அது இறுதித் தலையசைப்பு ஏன்பதை என்னால் புரிந்துகொள்ளவில்லையே’ எனச் சொல்லி குமுறி அழுதார் நண்பர் ஒருவர்.
‘அன்று கூட வங்கிக்கு வந்திருந்தாரே’ என ஆச்சரியப்பட்டார் வங்கி ஊழியர் ஒருவர்.
மற்றவர்கள் மட்டுமின்றி பாலா சேர் கூட எதிர்பார்த்திருக்காத மரணம் அது. படுக்கை பாயில் கிடக்காமல், நோய் நொடியில் துடிக்காமல், மற்றவர்களுக்கு பாரமாகக் கிடக்காமல் மரணவேவன் அவரை அமைதியாக ஆட்கொண்டான். கள்ளமில்லாத வெள்ளை மனம் கொண்ட அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்றே சொல்ல வேண்டும். ஆனால் எங்களால்தான் அவரது பிரிவை ஜீரணிக்க முடியவில்லை.
பாலா சேர் நண்பர்களான எங்களுக்குத்தான் பிரியமானவர் என்றில்லை. மாணவர்களின் பேரன்பிற்கும், அபிமானத்திற்கும் மரியாதைக்கும் என்றுமே உரியவராக இருந்தார். பாலா சேரின் பாடம் எப்ப வரும் என்று மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். தமிழும் சமூகக் கல்வியும் அவரிடம் மண்டியிட்டு சேவகம் செய்யும். அவர் அவற்றை மாணவர்களுக்கு விளக்கும் முறையில் அவர்கள் வாயில் இலையான் புகுவது கூட தெரியாதவாறு லயித்துக் கிடப்பார்கள்.
கடுமையான தமிழில் இருக்கும் இலக்கியப் பாடல்களை அவர் விளக்கும் முறை அலாதியானது. அந்த நேரத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு சினிமாப் பாடலை உவமானம் வைத்து பாடலுக்கான கருத்தை விளக்கும் போது விளங்காதவை விளங்குவது மட்டுமின்றி வாழ்நாளில் மறக்க முடியாதவாறு ஊறிக் கிடக்கும்.
தான் படித்த, படிப்பித்த ஹாட்லிக் கல்லூரில் மிகுந்த பற்றுடையவர். இளைப்பாறிய பின்னரும் கூட அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு பற்றத் தவறுவதில்லை. அண்மையில் நடந்த சம்பவம் இது. நிகழ்வுகளுக்கு இடையில் உணவு வேளை. ஆனால் உணவு தயாராகவில்லை. ‘சேர் சாப்பாடு தயாராகும் வரை நீங்கள்தான் ஏதாவது பேசி கூட்டத்தை தாக்காட்ட வேண்டும்’ என்ற கோரிக்கை இவரிடம் முன்வைக்கப்பட்டது. ‘தாக்ககாட்ட வந்தவன்’ தான் என்பதையே சொல்லி நகைச்சுவையோடு கூட்டத்தை ஆரம்பித்து கலகலக்க வைத்து பசியை மறக்கடிக்க வைத்துவிட்டார்.
நேரத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பேசுவதில் வல்லவர் அவர். கூட்டம் வயிறு வெடிக்கச் சிரித்து மகிழ்ந்து நிற்கும். யுத்த காலத்தின் போது நண்பர்கள் நாம் இணைந்து நடத்திய அறிவோர் கூடல் நிகழ்வுகள் அவரில்லாவிட்டால் அவ்வளவு கலகலப்பாக இருந்திருக்காது.
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவரே சாந்தியின் மறுஉருவம் அல்லவா?
எம்.கே.முருகானந்தன்.