Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘நூல் அறிமுகம்’

புலோலியூர் இரத்தினவேலோனின் புலவொலி

புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய நூலை அதனை வெளியிட்ட ஜீவநதி ஆசிரியர் பரணீதரனிடமிருந்து பெற்றுக்கொண்டபோது நூலின் அட்டையை என் கண்கள் மேய்ந்தன. பசுமை போர்த்திய வயல் அதன் நடுவே எம் அடையாளமான ஒற்றைப் பனை மரம். நூலின் பெயர் புலோலி என்றிருந்தது. புலோலி தெற்குப் பகுதியில் உள்ள பசும் வயல்களில் ஒன்றின் புகைப்படம் என எண்ணிக் கொண்டேன். சரி புலோலி பற்றிய நூலாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

சற்று சந்தேகம் எழ மீண்டும் அட்டையைப் பார்த்தபோது நூலின் பெயரை நான் தவறாக வாசித்துவிட்டதாகத் தெரிந்தது. புலவொலி என்பதே நூலின் பெயராகும். இருந்தபோதும் புலோலி பற்றிய நூல் என நான் எண்ணியதில் தவறில்லை என்பதை புலோலியூர் ஆ.இரத்தினவேலோனனின் என்னுரையில் உள்ள ஒரு வாசகம் உறுதிப்படுத்தியது

‘புலோலியூர் எனும் எங்களுரின் பெயர் ‘புலவொலி என்பதிலிருந்தே திரிபுற்றதென்பர்.’

‘அந்த வகையில் ‘புலோலியுரின் இலக்கிய கர்த்தாக்கள்’ எனும் கட்டுரையைத் தாங்கி வரும் இந்நூலுக்கு ‘புலவொலி’ என்ற மகுடம் பொருத்தமானதே’ என வேலோன் தொடர்ந்து சொல்கிறார்.

பரணீதரனின் ஜீவநதி வெளியீடாக வந்திருக்கும் 120 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 16 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பெரும்பாலானவை ஞாயிறு தினக்குரலில் வெளியான கட்டுரைகள். ஞானம் மற்றும் மல்லிகை சஞ்சிகைகளில் வெளிவந்தவை ஒரு சில.

நூலின் முதற் கட்டுரையாக அமைந்திருக்கும் ‘புலோலியுரின் இலக்கிய கர்த்தாக்கள்’ இந்த நூலின் மகுடம் என்பேன். தமிழகத்திலும் ஈழத்திலும் தன் மொழி ஆளுயைமால் கோலோச்சிய சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை முதற்கொண்டு இன்றைய இளம் எழுத்தாளரான கமலசுதர்சன் வரையான அனைத்து புலோலி தந்த இலக்கியவாதிகள் பற்றியும் அவர்களது ஆளுமைகள், அவர்கள் இயற்றிய நூல்கள், பெற்ற விருதுகள் என ஏரளமான தகவல்களை 17 பக்கங்கள் விரியும் கட்டுரைக்குள் அடக்கியுள்ளார்.

இவ்வளவு தகவல்களையும் பெறுவதற்கு அவர் எடுத்திருக்கக் கூடிய முயற்சி ஆச்சரியப்பட வைக்கிறது. எவ்வளவு விடயங்களை தன் நினைவுக் கிடங்குளிலிருந்து மீண்டிருக்க வேண்டும், எவ்வளவு நூல்களையும் கட்டுரைகளையும் தேடிப் படித்து குறிப்புகள் எடுத்திருக்க வேண்டும் என்பது மலைக்க வைக்கிறது. புலோலயூர் சார்ந்தவர்கள் மட்டுமின்றி இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என்றென்றைக்கும் பயன்படக் கூடிய எண்ணற்ற தகவல்களை இந்தக் கட்டுரை கொண்டிருக்கிறது.

அதே போன்ற மற்றொரு முக்கிய கட்டுரை ஈழத்துச் சிறுகதை வளரச்சிக்கு உதவிய ஆரம்பகாலம் முதல் 83 வரையான சஞ்சிகைகள் பற்றியதாகும். ஈழத்தின் புகழ்பெற்ற ஆரம்பகால சஞ்சிகையான மறுமலர்ச்சி முதல் அலை வரையான பல சஞ்சிகைகள் பற்றியும் அவை சிறுகதைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புப் பற்றியதும்தான் ‘மறுமலர்ச்சி முதல் மல்லிகை சுடர் அலை வரை சிறுகதை வளர்ச்சிக்கு துணைநி;ன்ற சஞ்சிகைகள்’ என்பதாகும்.

இவற்றைத் தவிர 6 கட்டுரைகள் பத்தி எழுத்துக்களாக தினக்குரல் ஞாயிறு இதழில் வெளிவந்தவை. இவை பெரும்பாலும் நூல் பற்றிய விமர்சனக் கட்டுரைகளாக இருந்தபோதும் அந்தந்த நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களையும் தருக்கின்றன. தெணியானின் சிதைவுகள் குறுநாவல், தி.ஞானசேகரனின் சரித்திரம் பேசும் சாஹித்ய ரத்னா விருதாளர்கள், கலாமணியின் 5 நூல்கள் பற்றிய பார்வை, சுதாராஜின் காட்டிலிருந்து வந்தவன் சிறுகதைத் தொகுதி, கண.மகேஸ்வரனின் சிறுகதைகள், பரணீதரனின் இவர்களுடன் நான் நேர்காணல் தொகுப்பு நூல் ஆகியவை அடங்கும்.

தனது மனங்கவர்ந்த இலக்கியகர்த்தாக்கள் எண்மர் பற்றி மல்லிகை மற்றும் ஞானம் சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகளும் இந்நூலில் அடங்குகின்றன. அவை எமக்கு அவர்கள் பற்றிய புதிய தரிசனங்களைத் தருக்கின்றன. புலோலியூர் சதாசிவம், தெளிவத்தை ஜோசப், கோகிலா மகேந்திரன், மண்டுர் அசோகா, தாமரைச்செல்வி, ச.முருகானந்தன், எம்.கே.முருகானந்தன் மற்றும் சிதம்பரப்பிள்ளை மாஸ்டர் பற்றியவையே அவை.

எனவே புலவொலி என்ற இந்த நூலில் புலோலி பற்றிய ஒரு முக்கிய விரிவான கட்டுரைiயும் புலோலி சார்ந்த சில இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் இருந்தாலும் இது புலோலி மட்டும் உள்ளடக்கும் நூல் அல்ல. ஈழத்தின் சமகால இலக்கியம் பற்றியும் இலக்கிய ஆளுமைகள் பற்றியும் மிகவும் காத்திரமான தகவல்களையும் தருக்கின்ற தவகல் களஞ்சியத் தொகுப்பாக அமைகிறது. . நூலசிரியரின் கடும் உழைப்பின் பயனை அறுவடையாக்கி இலக்கியத் தகவல் விருந்தை எமக்கு அளித்த வேலோனுக்கு எனது நன்றிகள்.

வேலோன் எனது இனிய நண்பர். கடுமையான உழைப்பாளி. ஊடக முகாமையாளர் என்ற கடுமையான வேலைப் பளுவான தொழிலில் கடமையாற்றிய போதும் இலக்கியத்திற்கு சம இடம் அளிப்பராக இருக்கிறார். இதனால்தான் இவரால் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்த அதே நேரம் மீரா பதிப்பகம் ஊடாக 100 ற்கு மேற்பட்ட நூல்களை வெளியிடவும் முடிந்திருக்கிறது. அதில் எனது நீங்கள் நலமாக மற்றும் மறந்து போகாத சில ஆகிய இரண்டும் அடங்குவது பெரு மகிழ்ச்சி.

எந்தப் பணியை எடுத்தாலும் முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடும் அவரின் முயற்சிக்கு புலவொலி என்ற இந்த நூலும் மற்றொரு சான்றாகும்

அவரது இலக்கிய முயற்சிகள் தொடரந்தும் சிறப்புடன் மலர எனது வாழ்த்துகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்

ஞானசேகரனின் ‘எரிமலை’

‘அந்த இளைஞர்களில் ஒருவன் மதிலால் ஏறி உள்ளே குதித்தான். வெளியே நின்ற இளைஞன் தன் தோளின்மேல் சாய்திருந்தவனைத் தூக்கி மதிலின் மேலால் அவன் உள்ளே இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு தானும் உள்ளே குதித்தான்.

டொக்டர் மகேசன் பதற்றத்துடன் ‘ஆர் நீங்கள் என …’

டொக்டர் மகேசனில் என்னை நான் இனங் இனங்கண்டு நாவலில் மூழ்கிப் போனேன்.

எத்தனை கெடுபிடியான நாட்கள். பதற்றமும் சஞ்சலமும் பயத்துடன் கூடவே ஆட்கொள்ள கையறு நிலையில் இயங்கிய பொழுதுகள். இயக்கங்கள் பல பன்றிபோல குட்டிபோட்டு தான் தோன்றித்தனமாக நடந்த காலம், துரோகி, காட்டிக்கொடுப்பவன் போன்ற முத்திரைகளுடன் தெருநாய் போல சுடப்பட்ட அப்பாவிகளின் குருதி வீதிகளில் செங்கம்பளம் போர்த்திய காலம். டிரக்குகளில் செல்லும் அரச ராணுவத்தினர் வீதியால் செல்லும் பொதுமக்களை அடித்து குருதி கக்கவைத்த பொழுதுகள். சுற்றிவளைப்புகள் கைதுகள் போன்ற அடாவடித்தனங்கள் மலிந்து கிடந்தன.

வங்கிக் கொள்ளையுடன் தான் கதை ஆரம்பிக்கிறது. எனது மருத்துவமனைக்கு அரை மைல் தூரத்தில் இருந்த புலோலி ப.நோ.கூ.ச வங்கியில் நடந்த கொள்ளை நினைவில் வந்தது. திகில் நிறைந்த பொழுதுகள்.

ஆம். மருத்துவர்கள் அதுவும் தனியார் வைத்தியர்கள் மத்தளம் போல இரு பக்க இடிகளையும் தாங்கிக் கொண்டு பணி செய்ய வேண்டிய ஆபத்தான காலகட்டமாக இருந்தது.

80 களின் நடுப்பகுதியில் யாழ் குடாநாட்டில் நிலவிய பதற்றமான அரசியல், பாதுகாப்புச் சூழலை மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவல்தான் ஞானசேகரின் எரிமலை. டொக்டர் மகேசன் போராளி ஒருவனின் காயத்திற்கு, இராணுவத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும் அது தொடர்பான சம்பவங்களுமே நாவலின் முக்கிய கதைப் பொருளாகும்.

ஆனால் அதற்கு அப்பால் இனப்பிரச்சனையின் அடிமுடி தொடும் விரிந்த நாவல். ‘எரிமலை’ அனல் வீச ஆரம்பித்த வேளை. கதைச் சம்பவங்கள் குடாநாட்டிற்குள் நடப்பவையாயினும் நாடளாவிய அரசியல் பரிமாணம் கொண்ட படைப்பு.

இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, எமது பிரச்சனையில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

ஆயினும் இளைய தலைமுறையினர் கட்டாயம் படிக்க வேண்டியது. ஏனெனில் இளைஞர்கள் பலருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணவத்திற்கும் இடையேயான போர் பற்றிய செய்திகளும் அனுபவமும் மட்டுமே உண்டொழிய பிரச்சனையின் ஆணிவேரை கண்டுணரும் வாய்ப்புக் கிட்டியிருக்கவில்லை. இந்த நாவல் அவற்றை வெறும் தகவலாக அன்றி உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக, நாவலின் பேரங்கமாக, வரலாற்று ஆவணமெனத் தருகிறது. அதே நேரம் விறுவிறுப்பாக நகரவும் செய்கிறது. ஆரவாரமற்ற தெளிவான நடையுடன் சுவையாக வாசிக்கத் தூண்டுகிறது

உண்மையில் அவற்றை வெளிபடுத்தும் வண்ணம் சிருஸ்டிக்கப்பட்ட பல்வேறு பாத்திரங்கள் நாவலாசிரியரின் ஆக்கத் திறனுக்கு சான்றாக அமைகிறது. முக்கியமாக செல்லையா மாஸ்டர், மற்றும் சமூகவியல் பேராசிரியையான திருமதி விமல்சிறி, தொழில் முகாமைத்துவ ஆலோசகர் திரு விமல்சிறி ஆகியேருக்கு இடையேயான உரையாடல் முக்கியமானது. செல்லையா மாஸ்டர் தமிழ் அரசியலில் மிகுந்த ஈடுபாடும், சரித்திர ரீதியான அறிவும், அகிம்சை ரீதியான அணுகுமுறையும் கொண்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணி அபிமானி. திருமதி விமல்சிறி பேராசிரியர் மட்டுமல்ல. எழுத்தாளரும் கூட.

இந்த உரையாடல்கள் ஊடாக இனப்பிரச்சனையின் சரித்திரம் மட்டும் சொல்லப்படவில்லை. அதுவும் ஒரு பக்க பார்வையாகச் சொல்லப்படவில்லை என்பது நாவலின் பலமாக உள்ளது.. தமிழ் மக்களின் விடுதலை ஆர்வமும் அரசியல் சுதந்திர வேட்கையும் வெளிப்படுத்தப்படும் அதே நேரம் சிங்கள மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

48ல் சுதந்திரம் கிடைத்த ஓராண்டுக்குள் கிழக்கு மகாணத்தில் பட்டிப்பளையை கல்லோயா வாக்கி சிங்கள குடியேற்றத்துடன் ஆரம்பித்த தமிழர் மீதான நில ஆக்கிமிப்பு முதல் தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என தொடர்ந்தமை எவ்வாறு தமிழர் மீதான ஒடுக்குமுறையாக விஸ்வருபம் எடுத்தது என்பதை நூலாசிரியர் மாஸ்டர் ஊடாக வரலாற்றுப் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு புறம், தீவிரவாத சிந்தனைகளை கொண்ட செல்லையா மாஸ்டரின் மகன் ஊடாக விடுதலைப் போராளிகளின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

வெற்றிலை குதப்பிக் கொண்டிருக்கும் ஒரு முதியவள்- கிழவி பாத்திரம்- மனதோடு ஒட்டிக் கொள்கிறாள். இராணுவத்தினரின் அத்துமீறலுக்கு எதிரான அவளது கோபமும், போராளியை மறைப்பதற்கு அவள் காட்டிய சமோசித புத்தியும் மவைக்க வைக்கிறது. அன்றிருந்த சாதாரண மக்களின் மனஉணர்வுகளுக்கு அவளை ஒரு முன்மாதிரியாகவும் சொல்லலாம் போலிருக்கிறது.

யதார்த்தத்தை மீறி உணர்வு பூர்வமாக சிந்திப்பதால் இனமுரண்பாடு விரிவடையுமே அன்றி மக்களுக்கு நன்மை தராது. எனவே கூடிய வகையில் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்ற நடுநிலைச் சிந்தனை டொக்டர் மகேசன் மற்றும் அவரது மைத்துனரான சந்திரன் ஊடாக வெளிப்படுகிறது.

இன்னொரு விதத்தில் பார்க்கும்போது நாவலின் நாயகனாக சந்திரனை அல்லது டொக்டர் மகேசனையே கொள்ள வேண்டும் என்ற போதும் இனப்பிரச்சனையே நாவலின் பாடுபொருளாக அமைந்துவிடுகிறது.

வாக்கு வேட்டை அரசியல்வாதிகளின் காலத்திற்கு முன்னர் தமிழ் சிங்கள் மக்களிடையே நெருக்கமான உறவு இருந்தது, அந்நிய ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலத்தில் இனத்துவேசம் இருந்தத்தில்லை. எல்லாளன் துட்டகமுனு போரனது ஆட்சி அதிகாரத்திற்கு ஆனதே ஒழிய இனரீதியானது அல்ல. அதனால்தான் எல்லாளனுக்கு சமாதி அமைத்து மக்களை வணக்கம் செலுத்தச் செய்தான் போன்ற விடயங்களையும் நாவல் உரையாடல் ஊடாக தொட்டுச் செல்கிறது.

தமிழ் சிங்கள் உறவானது திருமண ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததை பற்றி மிக நுணுக்கமாக நூலாசிரியர் வெளிப்படுத்தியிருந்தார். இரசித்து வாசித்தேன். இலங்கையின் கடைசி மன்னன் விக்ரமராஜசிங்கன் ஒரு தமிழன் என்பது முதல் பல சிங்கள அரசர்களின் பட்டத்து ராணிகளாக தென்னிந்திய தமிழ் ராசகுமார்களே இருந்திருப்பதை நாங்கள் அறிவோம்.

அரச மட்டத்தில் மட்டுமல் சாதாரண மக்களிடையே கூட அத்தகைய மண உறவுகள் இருந்திருக்கின்றன.

‘எனது பாட்டியின் படம் ஒன்று வீட்டில் இருக்கிறது. அதில் அவர் தமிழ் பெண்களைப் போலத்தான் சேலை அணிதிருந்தார். சில நகைகள் கூட தமிழ்ப்பெண்கள் அணியும் நகையை ஒத்திருக்கின்றன…..’

‘ஒரு வேளை உங்கள் பாட்டி ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் இருந்திருக்கலாம்…’

ஆசிரியர் தன் கருத்தை வாசகர்களிடம் திணிக்காமல் பாத்திரங்களின் உரையாடல் ஊடாக  நாசூக்காக சொல்லியிருப்பதை கருத்தூன்றி வாசித்தால் நீங்களும் இரசிப்பீர்கள்.

அதே போல கதை நடக்கும் காலகட்டத்திலும் ஏன் இன்றும் கூட, சிங்கள் தமிழ் கலப்புத் திருமண உறவுகள் எவ்வளவு பிரச்சனை மிக்கதாக இருக்கிறது என்பதை வேறொரு இடத்தில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். சந்திரன் அனுலாவை வெளிப்படையாக வைபவரீதியாக திருமணமாகச் செய்யாமல் ரெஜிஸ்டர் ஆபீசில் செய்ய இருப்பதை சொல்வதன் மூலம் அவ்வாறு உணர வைக்கிறார்.

அரசாங்கமும் ஊடகங்களும் ஒரு பக்க பார்வையே கொடுப்பதால் பல சிங்கள் மக்களுக்கு இராணுவத்தினரின் கொடிய முகம் தெரிவதில்லை. கதாநாயர்கள் என்று அவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக அனுபவித்தால்தான் அவர்களின் கொடுர முகத்தை திருமதி விமல்சிறி போல உணர்வார்கள்.

‘அவன் (இராணுவ வீரன்) சூட்கேசை அப்படியே போட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் கூடையை கிளறத் தொடங்கினான். அப்போது சுடுதண்ணிப் போத்தல் கூடையிலிருந்து வெளியே நழுவி ரோட்டில் விழுந்து நொருங்கியது. அதனைக் கவனித்த திருமதி விமல்சிறிக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது.

‘இவர்களுக்கு கண் கூடத் தெரியாது போலிருக்கிறது. காட்டுமிண்டித்தனமாக நடக்கிறார்கள்.’ பட்டால்தான் புரிகிறது என்பதை நிகழ்வுகளுடாக சுட்டிக் காட்டுகிறார். நேரடியாகச் தன் கருத்தை வலிந்து புகுத்தவில்லை.

நோயாளிகளில் அக்கறை கொண்ட அவர்களது பிரச்சனைகளை புரிந்து நடக்கும் பாத்திரமாக டொக்டர் மகேசனை படைத்திருக்கும் அதே நேரம் அன்று நிலவிய மருத்துவ முறைகள், அன்று உபயோகிக்கப்பட்ட மருந்துகள் என பதிவு செய்யப்படிருப்பதை பார்க்கும் போது அது அந்த காலகட்டத்து நினைவுகளில் என்னை நீந்தித் திளைக்க வைத்தது.

ஞானசேகரன் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை அவரது ஆரம்ப நாவலான குருதிமலையிலிருந்து அறிந்திருக்கிறோம். இந்த நாவல் ஒரு சிறந்த படைப்பாக உருவாவதற்கு அவரது எழுத்தாளுமையுடன், மருத்துவனாக பெற்ற அனுபவங்களும் உதவியிருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றிகும் மேலாக அவரது நிகழ்கால அரசியல் அறிவும் வரலாற்று ஈடுபாடும் இந்த நாவல் காலத்தைக் கடந்து நின்று நிலைக்க வைக்கின்றது.

இந்த நாவல் சிங்கள மொழிபெயர்ப்பில் வர இருப்பதாக அறிகிறேன். பக்கம் சாராமல் நடுநிலையோடு எழுதப்பட்டிருப்பதால், இப் பிரச்சனையில் அவர்களுக்கு அன்னியமான பல்வேறு முகங்களையும் அறிந்த கொள்ளவும் அவர்கள் பார்வையை விரிவடையவும் செய்யும் என்பதால் வரவேற்கத்தக்கது. துறைசார்ந்தவர்களை மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய படைப்பு.

நீங்களும் கட்டாயம் படியுங்கள். சுவையும் பயனும் இணைந்து கிடைக்கும் இத்தகைய படைப்புகள் அத்திபூத்தாற் போலத்தான் படைக்கப்படுகின்றன.

நாவலைப் படைத்த ஞானசேனரன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

தமிழ்நதியின் ‘மாயக் குதிரை’

அண்மைய திருவிழாவின் போது ஆலயத்தில் அலை மோதிய தன் பக்தர்களுக்கு, நல்லூர் கந்தன் தங்குதடையின்றி அருள்பாலித்தார். கோயிலுக்குள் கால் வைக்காது வீதியோடு நின்றுவிட்ட எனக்கும் அந்த அருள்பாலிப்பின் மிச்சமீதி எச்சங்கள் சிந்தவே செய்தன. பல நூல்களை வாசித்துய்யும் படி கடைக்கண் அனுக்கிரகம் செய்தார்.

மாயக்குதிரையில் பயணம் செய்யும் சுவார்ஸமான அனுபவம் அதன் பயனாகக் கிட்டியது. பயணம் செய்தது என்று பட்டும் படாமலும் சொல்லிவிட முடியாது. மாயக்குதிரையின் காற்றளையும் சிறகுகளால் வாரி அள்ளப்பட்டு, கணகணப்பான அதன் அணைப்பில் இருநாட்காளகப் பயணித்தமை முன்னெப்போதும் சித்திக்காத சுகானுபவமாகும்.

பத்தே பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்புத்தான் தமிழ்நதியின் மாயக்குதிரை. சுமார் 170 பக்கங்களைக் கொண்ட தொகுப்பு. தமிழ்நாடு டிஸ்கவரி புக்பலஸ் வெளியீடு.

ஓவ்வொரு சிறுகதையும் வாழ்வின் சுழல் நீரில் சிக்கித் தவிக்கும் நிஜ மாந்தரின் உள்ளங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை ஆழ்ந்து அனுபவித்துபோல சித்தரித்து எம் அனுபவங்களாகவும் நீட்சி கொள்ள வைக்கின்றன. அடர்த்தி நிறைந்ததும் சந்றே அம்மலுமான கருமுகில்கள் மாறுபட்ட சித்திரங்களாக உருக்கொள்வது போல துயர் செறிந்த பிரச்சனைகளில் மூச்சடங்கத் திணறும் மாந்தர்களின் வாழ்வின் கோலங்களை அள்ளித் தெளிக்கின்றன. ஒவ்வொரு கதையும் எங்களை வித்தியாசமான அனுபவங்களுக்குள் மூழ்க வைக்கின்றன.

தமிழ்நதி திருகோணமலை மாவட்டத்தைச் சார்ந்தவர் என்று நினைக்கிறேன். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார். பொதுவாக புலம்பெயர் எழுத்தாளர்கள் என்றாலே நினைவிடை தோய்தலில் திளைப்பவர்கள் என்ற எண்ணமே பெரும்பாலான தாயக வாசகர்களின் எண்ணம். தாம் மகிழ்ந்து வாழ்ந்ததும், போரின் அகோரத்தினால் ஏற்பட்ட பாதிப்பும், யதார்தத்திற்கு அப்பாலான அரசியல் சிந்தனைகளுமே மேலோங்கி நிற்கும். தப்பியோடியவர்களின் ஒப்பாரிகள் என சில விமர்சகர்களின் எள்ளலுக்கு ஆளாவதுமுண்டு. ஆனால் சமகாலத்தின் மிக அற்புதமான படைப்பாளிகள் புலம்பெயர்ந்தவர்களாகவே இருப்பதை மறுப்பதற்கில்லை.

20180929_1141211

தமிழ்நதியின் கதைகளிலும் தாயகத்தில் வாழ்ந்த வாழ்வின் இனிய நினைவுகளும் போரின் அவலங்களும் இடப்பெயர்வும், புலம் பெயர் வாழ்வின் போலி முகங்களும் பேசப்பட்ட போதும் அவை படைப்புகளில் முனைப்புப் படாமைக்கு காரணம் அவரது எழத்தின் வசீகரமாகும். பிரச்சாரத்தன்மை இடையூறு செய்யாத சொல்லாடலும் கவித்துவமான நடையும் ஏனைய பல புலம் எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக நின்று சுகமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன.

ஒவ்வொரு படைப்புமே பேசப்பட வேண்டியவையே. ஆனால் அவ்வாறு செய்வது சிறிய அறிமுகக் கட்டுரையில் முடியாததாகும்.

தாழம்பூவின் காதல் ஒரு வித்தியாசமான படைப்பு. இதுவே இத்தொகுப்பின் முதற்கதையும் கூட. நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்ணை, நவயுகப் பெண் ஒருத்தி எதிர்பாரத கணத்தில் முகங்கொண்ட யுகசந்திப்பில் விலகும் திரையின் பின்னே காட்சிகளாக விரிகிறது. இருவருமே காதலில் வீழ்ந்த பெண்கள் என்பதைக் காண்கிறோம். திகிலும் மர்மங்களும் ஆச்சரியமூட்டும் கணங்களுமான மாய உலகிற்குள் சஞ்சரிக்க வைக்கும் உணர்வைக் கொடுக்கிறது.

மேலோட்ட வாசிப்பில் அந்தப் படைப்பானது அமானுசத்தன்மையும் புதிர் சூழ்ந்ததாகவும் தென்பட்டாலும் அது பேசாமல் பேசும் கருத்தானது பேசப்பட வேண்டியது. பெண்கள் மீது ஆண்வர்க்கம் கொண்டிருக்கும் மேலாதிக்க உணர்வையும் காதலின் பெயரால் பெண்கள் ஏமாற்றி வஞ்சிக்கப்படுவதையும் உணரும்போது எமது சமூகக் கட்டமைப்பின் போலிமுகங்கள் கிழிந்து சிதிலமடைந்து அம்பலமாகின்றன.

இச்சிறுகதையை படித்த பின்னர் யதேட்சையாகப் ‘பியர் பிரேம் காதல்’ திரைப்படத்தில் இதன் கரு மற்றொரு முகமாக வெளிப்படுவது கண்டு ஆச்சரியப்பட்டேன். உண்மைதான் காதல் கற்பு கலாசாரம் போன்ற பெயர்களால் பெண்களை மட்டும் கட்டிவைக்கும் கைங்கரியத்தை எமது சமூகம் நரித்தனமாக இறுகத்துடன் கட்டியமைத்திருப்பதை அப்படம் தெரியாத்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நதியின் கதையில் அது தீர்க்கமாக ஆனால் குறியீட்டு ரீதியாக சொல்லப்படுகிறது.

போதை என்பது மதுவும் போதைப் பொருட்களுமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அரசியல் வாதிகளுக்கு அதிகாரம் ஒரு போதை, ரசிகனுக்கு திரைப்படம் ஒரு போதை, பல பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் ஒரு போதை. நித்திலாவுக்கும் ஒரு போதை உண்டு. உங்களுக்கும் எனக்கும் கூட சற்றே இருக்கலாம் என்ற அபாயச் சங்காகவும் ஒலித்தது நித்திலாவின் புத்தகங்கள் என்ற சிறுகதை.

நித்திலாவின் புத்தகங்களில் ஆழ்ந்திருந்த போது ‘கடதாசியின் மட்கிய மணமும் தூசியும் இருட்டும் குடியிருந்த’ நித்திலாவின் அறையில் நானும் கூடவே இருந்து புத்தகங்களின் ஸ்பரிசத்தில் சுயம் இழந்திருந்தேன்.

‘மழைகாலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பதைப்போல, விவசாயி விதைநெல்லைச் சேமிப்பதைப்போல குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களப் பொதிந்து வைத்திருப்பதைப் போல புத்கங்களைச் சேகரித்தாள்’

மிக அற்புதமான கதை. அதை வாசிக்கும் போது ஆங்காங்கே என்னையும் இனங்கண்டேன். சில தருணங்களில் எட்டி நிற்கும் பார்வையாளனாகவும்; உணர்ந்தேன். நூல்களிலும் வாசிப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் தப்பாமல் படிக்க வேண்டிய படைப்பு அது. அதில் நாம் வாசித்து கண்டுணரும் போதனைக்கு அப்பால் அழகாக வார்க்கப்பட்ட சித்திரமாக மனதை நிறைக்கிறது.

மாயக்குதிரை யும் அதே போல மற்றொரு போதையைப் பேசும் சிறுகதை. தொகுப்பின் சிறப்பான படைப்புகளில் இதுவும் ஒன்று. படிக்கும் போது தமிழ்நதியின் படைப்புகளில் போதை அடைந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் படும் துயர் ஆற்றமுடியாதது. காத்திருப்பு கதையில் பாடசாலையால் வந்த பையனை விசாரணைக்காக இராணுவத்தினர் அழைத்துச் செல்கிறார்கள். தனது மகனுக்காக 32 ஆண்டுகளாக காத்திருக்கிறாள். ஞானம்மாவின் காலத்தால் வற்றாத காத்திருப்பின் தாய்பாசம் அவளுக்கானது மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான தாய்மாரின் துயர்ச் சாகரமாக அலை வீசுகிறது. தன் மகன் தன்னைக் கட்டாயம் வந்து தன்னைப் பார்ப்பான் என்ற நம்பிக்கையோடு காலதேவனை உதைத்துத்தள்ளிக் காத்திருக்கிறாள். எனது மகன் எங்கே என்ற அட்டையுடன் ஆர்பாட்டங்களில் கலந்து கொள்கிறாள். முடிவு ஆச்சரியமளிக்கிறது. அவன் வீரமரணம் அடைந்தான் என்ற பழைய செய்தித்தாள் கைக்கெட்டுகிறது.

அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய படைப்பு இது. அரசின் பொய்பிரசாரத்திற்கு துணை நிற்கிறது என இனப்பற்றாளர்கள் கூக்குரல் இடவும் கூடும். ஆயினும் காணமல் போனவர்கள் பற்றிய பிரச்சனையில் எம்மத்தியில் அதிகம் பேசப்பாத ஒரு உண்மையை வெளிப்படுத்திய துணிவிற்காக படைப்பாளியைப் பாராட்டலாம். அது சொன்ன விடயத்திற்கு அப்பால் தாயின் காத்திருப்பை அற்புதமாகப் பேசும் கதை. மிக அழகாகப் பின்னப்பட்டது.

மலைகள் இடம் பெயர்வதில்லை கதையின் சிதம்பரம் ஆச்சி மறக்க முடியாத பாத்திரம். சிங்கள மக்கள் சுற்றி வாழும் பன்குளம் பகுதி மக்கள் இனக் கலவரத்தில் பட்ட துன்பம் சொல்ல முடியாதது. ஓவ்வொரு இரவும் தங்கள் உயிர்களைக் காப்பாற்ற குழந்தை குட்டிகளுடன் காட்டிற்குள் ஒளிந்து மறைந்து கொள்ளும் அந்த மக்களின் அனுபவங்கள் யாழ்மக்களாகிய நாம் கனவிலும் அனுபவிக்காதவை.

‘வெட்டுறதெண்டா வெட்டட்டும். அவங்களுக்குபு; பயந்து என்ரை வீடான வீட்டை விட்டிட்டு காடு கரம்பையில் போய்ச் சாகோணுமோ’ இது சிதம்பரம் ஆச்சியின் குரல். நுணுக்கமான களச் சித்தரிப்புடன் அழகாகச் சொல்லப்பட்ட படைப்பு.

தோற்றப்பிழை என்ற சிறுகதை ஆரம்பத்தில் சொல்லப்பட்ட தாளம்பூ வைப் போலவே பெண்களுக்கு எதிரான அநீதிகளை சரித்திர பின்னணியுடன் நிகழ் வாழ்வைக் கலந்து புனையப்பட்ட படைப்பு. அதன் ஆயி மறக்க முடியாத பாத்திரம்.

இவருடைய படைப்புகள் வெறும் கதைகள் அல்ல. போரும் அகதி வாழ்வும் புலம்பெயர் அந்நிய கோலங்களுமாக சமகால வரலாற்றின் கதைகளாக அல்லாமல் வர்ண ஓவியங்களாக மனதை நிறைத்து நிற்கின்றன. தர்க்க ரீதியான சில முரண்களை ஓரிரு கதைகளில் காண முடிகிறது. படைப்பாளுமை அவற்றை மூடி நிரவிவிடுகிறது.

கவிதை கட்டுரை சிறுகதை என பலதளங்களில் இவர் இயங்குவதை அறிய முடிகிறது. நூல்களாகவும் வந்துள்ளன. ஆனால் அவற்றோடு உறவாட இன்னமும் வாய்ப்பு கனியவில்லை.

இவருடைய ஒரிரு படைப்புகளை ஏற்கனவே உதிரியாகப் படித்திருக்கிறேன். ஆயினும் இந்தப் பத்துக் கதைகளையும் ஒன்று சேர்த்து படிக்கும் போதுதான் தமிழ்நதியின் மனதை ஒன்ற வைக்கும் பாத்திரப் படைப்புகளும் களச் சித்தரிப்புகளும் கவித்துவ நடையும் என்னை ஈர்த்துக் கொண்டன. தேடிப் படிக்க வேண்டிய படைப்பாளி என்பதை சொல்ல வேண்டியதில்லை.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

நூலும் இலக்கிய ஆளுமையும் – ‘நிழல்கள்’ அ.யேசுராசா
எம்.கே.முருகானந்தன்

41385865_2337750349573977_4098471305257418752_n

ஈழத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான யேசுராசாவின் புதிய நூலான நிழல்கள் வெளியாகியுள்ளது.
அது அவரின் தற்போதைய முழு ஆர்வத்தையும் வேண்டி நிற்கும் துறையான சினிமா பற்றிய நூல் என்பது கவனத்திற்கு உரியது. சினிமாவுடன் நீண்டகாலம் ஈடுபாடுடையவர் யேசுராசா. எனவே அனுபவத்துடன் கூடிய நூல் என்பதால் நல்ல சினிமாவை நாடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

யேசுராசா திரைப்படங்கள் பார்க்கும் வேகமும் அவை பற்றிய நுணுக்கங்களை நினைவில் நிறைத்து வைத்திருப்பதும் அதிசயப்பட வைக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அற்புதமானவை. தினமும் 2-3 திரைப்படங்களை அவரால் பாரக்க முடிகிறது, அவை பற்றிய தேடல்களையும் தொடர்கிறார். இணைய வசதியையும் Youtube பையும் உச்ச அளவில் பயன்படுத்தல்.
எமது வயதொத்த பலருக்கு அந்நியமாக இருக்கும் நேரத்தில் இவர் அதை பயனுறுமுறையில் பயன்படுத்துவது மட்டுமின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் மகிழ்ச்சியானது.

யாழ் நூலக வாசகர் வட்டம் ஒழுங்கு செய்யும் மாதாந்த திரைப்படங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ தெரியாது. மிக அற்புதமான திரைப்படங்கள் மாதாந்தம் திரையிடப்படுகின்றன. தமிழ் ஆங்கில படங்கள் மட்டுமின்றி
ரஸ்ய இத்தாலிய பிரெசூ;சு சீன போன்ற பல்வேறு மொழிப்படங்களையும் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறோம். அவற்றை தேர்ந்தெடுப்பதுடன் அவை பற்றி அவர் கொடுக்கும் சிறிய அறிமுகமும் எங்களுக்கு அந்த
திரைப்படம் பற்றிய புதிய தரிசனங்களைக் கொடுககிறது. ஆர்வத்தோடு அணுவணுவாக இரசித்து பார்க்க வைக்கிறது. நானும் நிறையவே பயன்பெற்றிருக்கிறேன்.

பல பழைய திரைப்படங்கள் பற்றிய தகவல்கள்,  காட்சிப்படுத்தல் நுணுக்கங்கள்,  கூர்மையான வசன அமைப்பு, நெறியாளர்கள்,  அவர்களது ஏனைய படங்கள் போன்ற நிறைய தகவல்களை இந்த திரைப்பட வட்ட படங்கள் மூலமும் யேசுராசாவின் உரைகள் மூலம் பெற்றிருக்கிறேன்.

அங்கு காட்டப்பட்ட சில படங்கள் மற்றும் அவர் பார்த்த ஏனைய திரைப்படங்கள் பற்றிய 10 கட்டுரைகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. இவற்றில் பல கட்டுரைகள் ஜீவநதியில் வெளிவந்த போது நான் ஏற்கனவே படித்ததும் உண்டு.

யாழ் மண்ணில் கலை இலக்கிய சினிமா ஈடுபாடுள்ள இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை அந்த இலவச திரைக் காட்சிகளில் காணவும் கிடைப்பதில்லை. குறும்பட தயாரிப்பில் ஈடுபடும் பலருக்கும் கூட இத்திரைப்படங்கள் நிச்சயம் உதவும். ஆனால் அவர்கள் எவரும் இதனைப் பயன்படுத்துவதில்லை என்பது கவலையே..

திரைப்படம் பார்க்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தேர்ந்தெடுத்த படங்களை தேடிப் பார்ப்பவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் தாம் பார்ப்பது மாத்திரமின்றி மற்றவர்களையும் இரசனையோடு பார்க்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஓரிருவர்தான். அவர்களில் முக்கியமானவர் யேசுராசா. அவற்றை அவருடனான தனிப்படஉரையாடல்கள் மூலம்
பெறமுடிகிறது. பரந்த மட்டத்தில் திரைப்படவட்டங்கள் ஊடான இலவச திரைப்பட காட்சிகள்.மூலமும்,  அவரது கட்டுரைகள் ஊடாகவும்
பயன்பெற முடிகிறது.

எனக்கும் எல்லோரையும் போலவே திரைப்பட ஆவல் இருக்கிறது. சாதாரண பொழுதுபோக்கு திரைப்படங்கள் முதல் – சிவாஜி. கமல். மம்முட்டி எனத் தொடர்கிறது. கலைப்படங்கள்,  ஆங்கில,  சிங்கள மலையாளப் படங்கள் செம்மீன்,  சுயம்வரம், எலிப்பத்தாயம் என ஆரம்பித்தது. ஈழத்து தமிழ் திரைப்படங்களையும் தேடிப் பார்ப்பதுண்டு.

நல்ல திரைப்படங்கள் பற்றிய உணர்வுகளை என்னில் எழுப்பியவர்களில் நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் மற்றும் யேசுராசா,  கேதாரநாதன் ஆகியோரும் அடங்குவர். கொழுப்பில் பல சர்வதேச படக் காட்சிகளை காணும் வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் திரைப்பட கூட்டுத்தாபன திரையில்,  BMICH ல் பார்த்திருக்கிறேன். BMICH ல் படம் பார்த்துவிட்டு ஜேசுராசா கேதாரநாதன் போன்றவர்களுடன் அவை பற்றிப் பேசியபடி நடந்து வந்த ஞாபகங்கள் பசுமையாக இருக்கின்றன.

அ. யேசுராசா (1946ரூபவ் டிசம்பர் 30ரூபவ் குருநகர்ரூபவ் யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை ஆவார். பல்துறை ஆற்றல் மிக்கவர். கவிஞர்ரூபவ் சிறுகதையாசிரியர்ரூபவ் விமர்சகர்,  மொழிபெயர்ப்பு,  பத்தி எழுத்து இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் திரைப்பட ஆர்வலர் என பல தளங்களில் இயங்கிவருகிறார்.

1968 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு இயங்கத் தொடங்கிய அவர் கடந்த 50 வருடங்களாக தீவிரமாக இயங்கிவருகின்றமை குறிப்படத்தக்கது. வருகிறார். ஆனால் 80களின் நடுக் கூறுகளிலிருந்தான் அவருடனான அறிமுகமும் நட்பும் எனக்கு ஏற்பட்டது.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு இயங்கத் தொடங்கிய அந்தக் காலத்திலேயே எனக்கும் நல்ல புத்தகங்கங்கள் சஞ்சிகைகள் நல்ல சினிமா போன்றவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தன. ஆயினும் அந்நேரத்தில் கொழும்பில் இருந்த யேசுராசா,  குப்பிளான் போன்றவர்கள் இணைந்து இயங்கிய கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் பற்றி அறிந்திருக்கவோ அவர்கள் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. காரணம் மருத்துவ மாணவன் என்ற கூண்டுக்குள் அகப்பட்டிருந்ததால் வாசிப்புக்கு அப்பால் இலக்கிய சந்திப்புகள் கூட்டங்கள் எனக்கு எட்டாதவையாகவே இருந்தன.
80 யாழ் வந்த பின்னர்தான் இலக்கிய அறிமுகங்கள் ஏற்பட்டன. அலை வாசகன் ஆனேன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு புதிய வாசல் திறந்திருப்பதாக உணர்ந்தேன். அலையையும் யேசுராசாவையும் அறிமுகப்படுத்தி வைத்தது நண்பர் குலசிங்கம் ஆவார். எனது முதல் நூல்களில் ஒன்றான ‘தாயாகப் போகும் உங்களுக்கு’ பதிப்பிக்கப்பட்டது நியூ ஈரா அச்சகத்தில். அதன் வடிவமைப்பு பற்றிய பல ஆலோசனைகள் எனக்கு யேசுராசா தான் வழங்கினார்.அந்த நேரத்தில் திசை அங்கிருந்துதான் வெளியாகியது. அதன் துணை ஆசிரியராக யேசுராசா பணியாற்றிக் கொண்டிருந்தமை நினைவுக்கு
வருகிறது.

41517400_2337764502905895_2716414759992819712_n

தொழில் ரீதியாக ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரியான இவர் காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்றிருக்கிருந்தார். ஆதன் சூட்சுமம் இப்பொழுதுதான் புரிகிறது. முழுநேர இலக்கியச் செயற்பாட்டளராக வாழ்கிறார். இவ்வாறு தனக்கு பிடித்த வாழ்வைத் தொடரும் வாய்ப்பு பலருக்கும் இருந்தாலும் வேலை வேலை என ஓடித் திரிகிறார்கள். நானும் அவர்களில் ஒருவன். எழுபது வயதாகியும் எனது தொழிலைக் கைவிட முடியவில்லை. எனக்கு ஈடுபாடுள்ள
கலைத் துறைகளில் ஈடுபட முடியவில்லையே என்ற ஏக்கம் நிறைவேறாத கனவாக மாயாஜாலம் காட்டுகிறது.
யாழ் மண் ஏராளமான இலக்கியவாதிகளின் களமாக இருந்து வருகிறது. இவர்களிடேயே யேசுராசா தனித்தன்மை கொண்டவராக
மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராக இருப்பதாக நான் உணர்கிறேன். பொதுவாக இலக்கிய உலகில் நிலவும் கருத்தும் அதுதான். இலக்கியத்தில் செழுமையும் தரமும் பேணப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர். படைப்புகள் அனுபவ வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் முகத்திற்காக பாராட்டுபவர் அல்ல. நல்லனவற்றை நல்லன எனவும் தரமற்றவற்றை தரமற்றவை எனவும் முகத்துக்கு நேரே
சொல்லக் கூடியவர்.

இலக்கியத்துறையில் அவரது முழுமையான பங்களிப்புடன் பல சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. ‘அலை’ ஆசிரியராக அவரது பங்களிப்பு  ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இலக்கியத்தில் தரம் பேணப்படுவதற்கு அலை முக்கிய முன்னுதாரணமாகும். புpன்பு ‘கவிதை’ இதழ், தெரிதல் சஞ்சிகை ஆகியனவும் அவரால் வெளியிடப்பட்டன. ‘திசை’ யின்
துணை ஆசிரியராக பணியாற்றியமையும் முக்கிய பங்களிப்பாகும்.

இதுவரை நிழல்கள் உட்பட 8 நூல்களை வெளியிடுள்ளார்.
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் சிறுகதைத் தொகுதி – 1975ம் ஆண்டு இலங்கை சாஹித்திய மண்டலத்தின் சிறுகதைக்கான
பரிசினைப் பெற்றது.
அறியப்படாதவர்கள் நினைவாக கவிதைத் தொகுப்பு.
பனிமழை மொழியாக்க கவிதை நூல்.
தூவானம் பத்தி எழுத்து தொகுப்பு 2001
பதிவுகள் பத்தி எழுத்து தொகுப்பு 2003
குறிப்பேட்டிலிருந்து இலக்கிய கட்டுரைகள் 2007
நினைவுக் குறிப்புகள் கட்டுரைகள் 2016
திரையும் அரங்கும் கலைவெளயில் ஒரு பயணம் 2013

இதைத் தவிர பல முக்கிய தொகுப்பு நூல்கள் இவரது இலக்கிய பங்களிப்புக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. இவற்றின் தொகுப்பாசிரியர்களில் முக்கிய பங்காளியாக இருந்திருக்கிறார்.

‘பதினொரு ரூடவ்ழத்துக் கவிஞர்கள்’, ‘மரணத்துள் வாழ்வோம’, ‘காலம் எழுதிய வரிகள்’ அகிய கவிதைத் தொகுப்புகள்
தேடலும் படைப்புலகமும் ஓவியர் மார்க்கு பற்றிய நூல்

இவ்வாறு பல்வேறு அறுவடைகளையும் பங்களிப்புகளையும் சினிமா கலை இலக்கிய துறையில் ஆற்றிய யேசுராசாவின் புதிய நூல்தான் நிழல்கள் 104 பக்கங்கள் நீளும் இந்த நூலில் 10 சினிமா கட்டுரைகள் உள்ளங்கியுள்ளன.

முதலாவது கட்டுரையாக அமைவது 2015 ம் ஆண்டு கொழும்பில் நடந்த சிங்கள் தமிழ் குறுப்படவிழா விழா பற்றியும் அங்கு காட்டப்பட்ட முக்கிய குறுப்படங்கள் பற்றியதுமான கட்டுரை.

எல்டர் றியஸனோவ் இயக்கிய ரஸ்ய திரைப்படமான ‘இரக்கமற்ற ஒரு காதல் கதை’,

ஜிறி வொயிஸ் இயக்கிய ‘ரோமியோ ஜீலியற் மற்றும் இருள்’, என்ற செக்கோஸ்லோவாக்கிய திரைப்படம்,

‘சொராயவுக்குக் கல்லெறிதல்’ சைரஸ் நொவ்ரஸ்தெஹ் கின் ஈரானியப்படம்,

லூசினோ விஸ்கொன்ரியின் ‘நிலம் நடுங்குகவிறது’ இத்தாலியப்படம்.

கோவிந் நிஹாலினியின் ‘விருந்து’ ஹிந்தி திரைப்படம்,

அந்த்ரேஜ் வாஜ்தா வின் ‘ஒரு தலைமுறை’ போலந்து திரைப்படம்,

எரான் ரிக்லிஸ் சின் ‘எலுமிச்சை மரம்’ இஸ்ரேலிய திரைப்படம்,

பேர்ன்ஹாட் விக்கியின் ‘பாலம்’ ஜேர்மனிய திரைப்படம்,

அம்ஷன்குமாரின் ‘ஒருத்தி’ தமிழ் திரைப்படம் ஆகியன அடங்குகின்றன.

ஒவ்வொரு கட்டுரையும் நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கொடுக்கிறது. மேலோட்டமான கதையோட்டம் முக்கிய உரையாடல்கள், காட்சி அமைப்பு, கமரா கோணங்கள்ரூபவ் இசை என யாவற்றையும் தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் திரைப்படத்தை பார்த்தது போன்ற உணர்வைக் கொடுப்பதுடன், நாங்களும் நேரடியாகப் பார்த்து இரசிக்க வேண்டும் என்ற ஆசையையும் தூண்டுகின்றன. பல படங்களை நானும் பார்க்க முடிந்ததல் இரசித்து வாசிக்க முடிந்தது.

இதில் பல கட்ரைகளை நூல் உருப்பெறு முன்னரே சஞ்சிகைகளில் படித்ததை ஏற்கனவே குறிபிட்டிருந்தேன். படிக்கப்படிக்க தெவிடாத கட்டுகைள், ஊறித் திளைக்க வைக்கின்றன. திரைப்பட ரசனையும் ஆர்வமும் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

அவரது தேடல்களும் படைப்பு மற்றும் பதிப்பாக்க முயற்சிகளும் தொடர வாழ்த்துகிறேன்

நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்

0.00.0

Read Full Post »

நண்பர் பா.இரகுவரன் அவர்கள் தான் செய்ய ஆய்வுகளின் பலனாகவும் தான் தாயாரித்து மேடை ஏற்றிய செட்டிய வர்தகன் என்ற நாட்டுக் கூத்த அனுவங்களாலும் வடமராட்சிய நாட்டுக் கூத்துக்கள் என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

Scan_20160319
அந் நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துரை இது.

வாழ்த்துரை

நாளந்தம் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கும் நண்பனது நூலுக்கு வாழ்த்துரை வழங்குவது எத்துணை சிரமமானது என்பதை எழுத்தில் வடிக்க முனையும் போதுதான் புரிந்தது. எதை எழுதுவது எதை விடுவது எனத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

பல்துறை ஆற்றல் மிகு ஆசிரியனாக இன்று கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் இரகுவரன் முதன் முதலாக அறிமுகமானது எத்தனையாம் வருடத்தில் என்பது நினைவில் இல்லை. ஆயினும் உயர் வகுப்பு மாணவனாக என்பது மட்டும் நிச்சயம். அறிமுகப்படுத்தி வைத்தது நண்பர் குலசிங்கம் அவர்கள். தீவிர இலக்கிய ஈடுபாடுபாடு கொண்ட மாணவன் என்ற அறிமுகத்தோடு.

முதல் அறிமுகத்திலேயே அவரது அமைதியும் துருவி அறிய முனையும் விஞ்ஞான நோக்கும், பரந்த ஆர்வங்களும், நிறைந்த இலட்சியங்களும் அவர் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தின. ஆசிரிய கலாசாலை மாணவனாக, நாடகத்துறை பட்டதாரியாக, ஆசிரியராக, பலராலும் மதிக்கப்படும் சமூகத் தலைவனாக அவரது வளர்ச்சிக்கு மூன்று தசாப்தங்களாக சாட்சியாக இருக்க முடிந்திருக்கிறது.

‘வடமராட்சியில் கூத்துக் கலை’ எனும் இந்த நூலை எழுதும் இரகுவரன் தனது வாழ்வில் எத்தனை வேறுபட்ட பாத்திரங்களை வகித்திருகிறார், தொடர்ந்தும் வகித்து வருகிறார் என்பதை யோசித்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

ஆற்றல் மிகு விஞ்ஞான ஆசிரியனாக, நூலகப் பொறுப்பாளராக, சிறுகதை ஆசிரியனாக, தேர்ந்தெடுத்து படிக்கும் நல்ல வாசகனாக, கவிஞனாக, நாடக பிரதி எழுத்தாளராக, நாடக நெறியாள்கையாராக, நடிகனாக, சமூக ஆய்வாளனாக, புகைப்படக் கலைஞராக இன்னும் இன்னும் …

Scan_20160319 (3)

எமது சமூகத்தின் பண்பாட்டு பாரம்பரியங்களையும், வரலாற்றையும், வரலாற்று சின்னங்களையும் தேடி அலைந்து கண்டறிவதிலும், ஆராய்வதிலும், அவற்றை ஆவணப்படுத்துவதிலும் இவருக்குள்ள ஈடுபாடு அளப்பரியது.

இதன் பயனாக பல நூல்களையும் கட்டுரைகளையும் ஏற்கனவே எழுதியுள்ளார். ‘பருத்தித்துதறை ஊராம்’, ‘கல்லூரி நாடகங்கள்’, ‘ஊரும் வாழ்வும்’ பண்டைத் தமிழர் நாடகங்கள், சீன யப்பானிய பாரம்பரிய நாடகங்கள் ஆகியன இதுவரை வெளிவந்த நூல்களாகும்.

தனது தாயாரின் அந்தியட்டி மலரை- கல்வெட்டை- ‘பிராமண வீதி சரித்திரம்’ என்ற ஒரு ஆய்வு ஆவணமாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் சில அந்தியேட்டி மலர்களில் பல விடயங்களை ஆவணப்படுத்தியும் வருகிறார்.

உற்றார் உறவினரது புலம்பல்களினாலும், தேவார திருவாசகங்களாலும், வலிந்து நிரப்பப்பட்டு, அந்தியட்டி மண்டப கதிரைகளிலேயே அநாதரவாகக் கைவிடப்படும் கல்வெட்டுகள் நிறைந்த கால கட்டத்தில் இவரது தயாரின் கல்வெட்டானது எதிர்காலச் சந்ததியினரும் தேடிப் பாதுகாக்க வேண்டிய ஆவணமாக அமைந்தமை இவரது ஆழ்ந்த சமூக பற்றின் வெளிப்பாடாகும்.

பேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத்தளம். பெரும்பாலனவர்கள் அதனை வெறும் பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்துகிறார்கள். ஆயினும் இரகுவரன் தனது சமூக உணர்வையும், வரலாற்றை ஆவணப்படுத்தும் ஊடாகக் கருவியாகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறார். இது பெருமைக்குரியது.

‘சூரியனும் கறுத்துப் போச்சு’ என்று சிரித்திரனில் இவர் எழுதிய சிறுகதை இரு தசாப்தங்கள் கடந்துவிட்டபோதும் ஞாபகத்தில் நிற்கிறது.
போர் சூழ்ந்து வாழ்வில் இருள் முடிக் கிடந்த 90களில் பருத்தித்துறை நண்பர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இரகுவரனின் அர்ப்பணிப்பு அளப்பரியது. அறிவோர் கூடல் என்ற மாதந்த இலக்கிய செயற்பாடுகளுக்கு நண்பர் குலசிங்கத்துடன் இணைந்து பங்களிப்பு வழங்கியதுடன் நிற்காது தனது கூத்து முயற்சிகள் ஊடாகவும் ஒளியூட்டினார்.

நண்பர் குலசிங்கத்து வீட்டு முற்றதில் கூத்துக் களரி அமைத்து இரவில் விழா நடத்தியதும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் தேடி வந்து கலந்து கொண்டு பாராட்டியதும் நேற்று நடந்தது போல பசுமையாக இருக்கிறது.

இரகுவரனது இந்த ஆவணப்படுத்தும் நூலாக்க முயற்சிக்கும் என்றென்றும் போல எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

“படைப்பொன்றின் ஒவ்வொரு எழுத்திலும் அதை எழுதியவனுடைய மரபணு ஊர்ந்து செல்லும்” என்கிறார்கள். முருகானந்தன் அவர்களை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான நூல் வெளிவந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.

2004ம் ஆண்டு வெளியான எனது கலை இலக்கிய விமர்சனக் கட்டுரை நூலான  “மறந்து போகாத சில…” ற்கு வெளியீட்டு விழா அன்று நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் ஆற்றிய விமர்சன உரையின் கட்டுரை வடிவம்.

இந்த நூலின் பெயரில்தான் எனது இலக்கிய விடயங்களுக்கான புளக்கான மறந்து போகாத சில 2007 வாக்கில் ஆரம்பித்தேன்.

Maranthu pogatha sila Front

முன் அட்டைப் படத்தில் உள்ள சிலை சிற்பக் கலைஞர் விஸ்வலிங்கம் செய்த மரச் சிற்பம்
இன்றும் எனது பருத்தித்துறை வீட்டில் இருக்கிறது

“மறந்து போகாத சில…” என்ற நூலின் தலைப்பே, அவரது தெரிவின் வகையைச் சொல்கிறது. அவரளவில் மறந்து போகாத அனுபவங்களைச் சுமக்கும் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதைவிட வேறும் அதிகமான கட்டுரைகளை, விமர்சனக் குறிப்புகளை அவர் எழுதியிருக்கிறார். நானே வாசித்தும் கேட்டுமிருக்கிறேன்.

எல்லாவற்றினுள்ளுமிருந்து தன் நினைவில் தங்கிய, எழுதப்பட்ட காலத்தின் பின்னான ஒரு பார்வையில், வெளிப்படுத்தத் தகுந்தவை என்று கருதிய கட்டுரைகளைத் தொகுப்பாக்கியிருப்பதும், அவற்றையே வாசகப் பார்வைக்குத் தருவதென்பதும் ஓர் அக்கறை மிகுந்த செயற்பாடே. ஒரு படைப்பாளிக்கு அவசியம் இருந்தாக வேண்டிய சுயமதிப்பீட்டின் அடையாளம் இது.

வாசக நோக்கில், எம்.கே.முருகானந்தன் என்கிற இலக்கியவாதியின் அருமையான பல கருத்துக்கள் சரியானபடி நினைவில் கொள்ளப்படவில்லை என்று சொல்லலாம். வைத்தியராக நினைவில் நிற்குமளவுக்கு இலக்கியவாதியாக நிறுத்தப்படாமல் மறக்கப்படுபவராகவே தெரிகிறார். இன்றைய வாசக உலகுக்கு மிகத் தேவையான, காத்திரமான விமர்சனக் கருத்துக்களை அவ்வப்போது தந்திருக்கும் முருகானந்தன் அவர்களை, இங்கு எழுதப்படும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் எதிலும் காணமுடிவதில்லை என்பது இந்த மறதியின் விளைவுதான். அல்லது, தன் கட்டுரைகளையோ, கதைகளையோ, கவிதைகளையோ ஒருவர் நூலாகத் தொகுத்துப் போடாவிட்டால் அவர் கண்டு கொள்ளப்பட மாட்டார் என்ற பொதுப் போக்கின் விளைவுதான்!ஈழத்தமிழிலக்கிய வளர்ச்சியில் மற்றும் வாசக ரசனைச் சூழலை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டோரின் அவதானத்தில் இந்நூலின் வருகை, சிறப்பான வரவேற்புக்குரியது.இலக்கிய வாசிப்பு அல்லது கலைகளை ரசிப்பதென்பது மனிதனின் அகவயமான செயற்பாடுதான். ஒரு கலைப் படைப்பு எனக்கு அளிக்கும் அனுபவம் எனக்கு மட்டுமே சொந்தமானது. என் ரசனையை நான் எவரிடமும் பகிர வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் அப்படைப்பு மீது ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு உருவாக வேண்டும் என்று எண்ணும் போதும், என் ரசனையையும் மதிப்பீட்டையும் சமூகத்தில் உரைத்துப் பார்த்துக்கொள்ள விரும்பும் போதும் நான் அவற்றைப் பிறருக்குச் சொல்கிறேன். மற்றவர்கள் தங்கள் ரசனையையும் மதிப்பீட்டையும் வெளிப்படுத்துகிறார்கள். அவற்றை அறிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஒரு பொது விவாதத் தளம் உருவாகிறது. அதன் விழைவாக ஒரு படைப்பைப் பற்றிய சமூக வாசிப்பு, ஒட்டுமொத்த மதிப்பீடு உருவாகிறது.இந்த மதிப்பீட்டில் சில படைப்புகள் முக்கியமாவதும், சில முக்கியத்துவமிழப்பதும் நடைபெறுகிறது. இவ்வாறு படைப்புகளின் தரம் உருவாகிறது. முற்றிலும் அகவயமாக, கலை, அவரவருக்கு அளிக்கும் அனுபவம் மட்டுமே போதுமானதாக இருந்திருந்தால் தரம் பற்றிய கேள்விக்கு இடமில்லை. ஒருவருக்கு பிச்சமூர்த்தி பிடிக்கலாம். இன்னொருவருக்கு வைரமுத்து பிடிக்கலாம். அவரவருக்குப் பிடித்ததை அவரவர் கொண்டாடுவதுடன் நின்றுவிடலாம். இவ்வாறெனில், கலையில் ஏற்றத்தாழ்வு இருக்க வாய்ப்பில்லை ஆனால் நடைமுறையில் அப்படியில்லை. பாரதியையும் பழனி பாரதியையும் நாம் ஒரே தரத்தில் பார்ப்பதில்லை. இவ்வாறான சமூகத்தின் கூட்டு ரசனையை வடிவமைப்பதில் விமர்சனங்கள் மிக முக்கிய ஒரு பங்கை ஆற்றுகின்றன.

“மாங்குடி மருதனைத் தலைவனாகப் பெற்ற, உலகம் உள்ளதுவரை நிலைபெற்ற புகழினை உடைய புலவர் அவை|யும் அன்று இப்பணியைத்தான் செய்திருக்க வேண்டும்.

இந்த விமர்சனங்களின் அல்லது ஒரு படைப்பின் மீது வாசக கவனத்தைக் கொண்டு வருபவர்களின் வலிமையையும் அந்தப் படைப்புகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தையும் நாம் அறிவோம்.

தளையசிங்கம் இன்று முக்கியமானவராக வருவதற்கும், ப.சிங்காரம் முப்பது நாற்பது ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்படுவதற்கும் இதுவே காரணம். தமிழ்ச் சமூகத்தைவிட இலக்கிய விழிப்புணர்வு கொண்ட சமூகங்களில் கூட இத்தகைய புறக்கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஒரு படைப்பின் உயர்வு – தாழ்வு என்பதெல்லாம் அதை மதிப்பிடும் மனிதமனம் சார்ந்ததாகவே அமைகிறது. ஒரு விமர்சகர் குறிப்பிட்ட காரணங்களை முன்னிறுத்தி ஒரு படைப்பின் உயர்வைச் சொல்லக்கூடுமானால், இன்னொருவர் வேறு காரணங்களை முன்னிட்டு அதன் தாழ்வை இனங்காட்டக்கூடும். இங்கு உயர்வு அல்லது தாழ்வு என்பதில்லை, படைப்பின் மீதான விவாதம்தான் முக்கியம். இதுதான் வாசக கவனத்தைப் படைப்பிற்குப் பெற்றுத் தருகிறது. இதை உணர்ந்து கொண்டால் விமர்சகன் – படைப்பாளி முரண்பாட்டிற்கு இடமில்லை. ஆனால், வாசக கவனத்தை எதிர்பார்த்திருக்கும் படைப்பாளிகள், விமர்சன அதிகாரத்திற்கு ஓரளவு அஞ்சுபவர்களாகவே இருக்கிறார்கள். விமர்சகனுக்கும் படைப்பாளிக்குமான முரண்பாடும் இங்கு சகஜமாக இருக்கிறது. இந்த முரண்பாட்டை விரும்பாதவர்கள் அல்லது முரணினால் வீண் லாபமிழப்புதான் என்று கருதுபவர்கள், முருகானந்தன் குறிப்பிடுகிற அந்த விமர்சன வகைகளுக்குள் நின்று வட்டாடுகிறார்கள்.

மற்றவர்களுக்கு நோகாமல், விமர்சனம் செய்வதை ஒரு கலையாக அல்லது கட்டாயக் கடமை போலச் செய்து கொண்டிருக்கும் நமக்கு, எந்தப் பெரிய இலக்கிய ஐஊழு§ ஐயும் எடுத்தெறிந்து அபிப்பிராயங்களை உதிர்த்துவரும் ஜெயமோகன் போன்றவர்கள் வியப்பூட்டுகிறார்கள்.

ஒருவேளை, நம் இலக்கிய ஜாம்பவன்கள் எல்லோரும் இப்படி ஒரு குறுகிய அறைக்குள் எதிரெதிரே அடிக்கடி முகம் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் ஒரேயடியாக எடுத்தெறிந்து முகத்தை முறித்துக்கொள்ள முடியாமலிருக்கிறதோ, என்னவோ! அவர்களுக்கு, சமுத்திரத்தில் மூத்திரம் பெய்கிற சுதந்திரம்!

இங்கேயும் இன்றிருப்போரில் மு.பொ.கறாரான சில விமர்சனங்களைச் செய்திருக்கிறார். கவித்துவத்தில் மஹாகவியை விட நீலவாணனை உயர்வாய் நிறுவியதும், சோலைக்கிளிக்கு வைத்த விமர்சனமும் குறிப்பிட்டுச் சொல்லாத்தக்கன. இருந்தாலும் இளையவர்களின் படைப்புக்கள் என்று வருகிறபோது அவரும் ஊக்குவிப்பு விமர்சனத்தில்தான் இறங்குகிறார். இது எங்கள் இலக்கியச் சூழலின் வறுமை சார்ந்ததும் கூட. சக்கட்டைகளுக்குள் சண்டை வேறென்னத்துக்கு?

இந்த இடத்தில் – முருகானந்தன் வகைப்படுத்திக் காட்டுகிற விமர்சனப் போக்குகளைச் சொல்லிவிடலாம்.

போரும் நெருக்கடியுமிருந்த வெளிநாடுகளில் எல்லாம் ஏற்பட்ட கலாசார விழிப்புணர்ச்சியையும், பிறந்த உயிர் இலக்கியங்களையும் அறிந்த ஆதங்கத்தில் நம்நாட்டு நிலமை அவருக்கும் கவலையளிக்கிறது. சடங்குகளாக நடக்கும் நூல் வெளியீடுகளும், வெற்றுப் பாராட்டுரைகளும், விமர்சனங்கள் பற்றிய அவரது உரத்த சிந்தனையை வெளியிட வைத்திருக்கின்றன.

இன்றைய விமர்சனப் போக்குகளைக் குறிப்பாக ஐந்து வகைகளுக்குள் அடக்கியிருக்கிறார்.

1)தெரிந்தவர்கள், பழக்கமானவர்கள் என்பதற்காக, அவர்களைச் சங்கடப்படுத்தாத விமர்சனம்.

2)பிரபலஸ்தர்கள், செல்வாக்கு மிக்கவர்களுக்காகச் செய்யும் முதுகெலும்பில்லாத அசட்டு விமர்சனம்.

3)எனக்கு நீ செய், உனக்கு நான் செய்கிறேன் என்றவாறான பரஸ்பர முதுகுசொறியும் – நன்றிக்கடன் விமர்சனம்.

4)பிடிக்காதவர்களின் படைப்புக்களைப் பூதக்கண்ணாடி கொண்டு குறை கண்டுபிடித்துக் கொக்கரிக்கும் விமர்சனம்.

5)இளைய சந்ததியைத் தட்டிக் கொடுக்கிறோம் என்ற பாவனையில் அல்லது இன்றைக்கு இதுதான் எடுபடும் என்ற எண்ணத்தில் படைத்தவர் மனம் நோகாமல் தட்டிக் கொடுக்கும் ஊக்குவிப்பு விமர்சனம்.

Maranthu pogatha sila Back

இவையெல்லாம் நமது நலிவுக்குக் காரணமான போக்குகள் என்று குறிக்கிறார் முருகானந்தன். மு.பொ.முன்னுரையில் குறிப்பிடுவது போல இவற்றையெல்லாம் ஒரு பிரகடனமாக நாம் ஏற்றுக்கொள்வதுகூட சிறப்பானதே!

மறுபுறம், புத்தகங்களை வெளியிடுபவர்கள், படைப்பாளிகளின் எதிர்ப்பும் ஒன்றும் சகிப்புத்தன்மையுடையதாக இல்லை. விமர்சனம் என்ற வேண்டுதலின் பின்னாலுள்ள விருப்பம் புகழ்மொழிகள்தான்! விமர்சனம் வேண்டுமென்று கேட்கிறார்கள்@ ஆனால் எல்லோரும் பாராட்டைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கிறது.

நம்மை ஒருவருக்குப் பிடிக்காமல் போக ஏராளம் காரணங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்வது மிக எளிய வழிகளில் ஒன்று. காலம் முழுக்க ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் அவஸ்தைப்படுவதை விட, ~~இவர் விமர்சனத்தை ஏற்பவர்@ புகழ்மொழிகளை விரும்பாதவர்|| என்று கவிழ்த்து விடுவது மகிழ்ச்சிகரமான உறவுக்கு உத்தரவாதம்.

துறவிகள் தவிர்ந்த – மனிதர்களின் இயல்பான குணமாகவே இதைப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொருவரும் தான் சிறந்தது என்று கருதுவதையே தன்னிலிருந்து படைப்பாக வெளித்தருகிறார்கள். அவரவர்க்கு அவரவர் ரசனைகளும் தெரிவுகளும் உயர்வானவையாகவும் நியாயமானவையாகவுமே தோன்றுகின்றன. இதை மற்றொருவர் சிதறடிக்கும்போது, அது ஒன்றும் முக்கியமானதில்லை என்று புறந்தள்ளி விடும் போது, அல்லது தரமற்றது என்று சொல்லிவிடும்போது பெரும்பாலும் அதைத் தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருப்பதில்லை.

விமர்சனத்தை வைப்பவரிலும் உள்நோக்கம் காணத்தோன்றுகிறது. தன் படைப்பைப் பாராட்டிய வேறு பலரையும் துணைக்கழைத்து தன் படைப்பின் தரத்தையும், தன் படைப்பின் மீதான விமர்சகர்களின் அடாவடியையும் நிறுவ முற்பட வேண்டியிருக்கிறது. சமீபத்தில் வைரமுத்துவுக்கு சாகித்ய விருது கிடைத்தது பற்றிய விமர்சனங்களையும் அதற்கு வைரமுத்துவின் எதிர்வினைகளையும் நாம் பார்த்துக் கொள்ளலாம்.

வைரமுத்து தம்மை நோபல் பரிசுக்கும் தகுதியானவர் என்றெண்ணுவது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் நாம் ஒவ்வொருவரும் நமது படைப்பின் தரம் குறித்து நம்மளவிலேனும் திருப்தியான எண்ணமே கொண்டிருக்கிறோம்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருக்கக்கூடிய சிறுகதை, நாவல் வடிவங்களையே இன்னமும் நாம் பிரசுரித்துக் கொண்டிருப்பதும், அவற்றுக்கு வெளியீட்டு விழாக்கள் நடத்திப் பேசிக் கொண்டிருப்பதும் வேறு எதைக் காட்டுகிறது?

ஒன்றிரண்டு விதிவிலக்கான முயற்சிகளை இங்கு சிலாகிப்பதற்கில்லை. யதார்த்தச் சித்தரிப்பின் சாத்தியங்களையே நாம் இன்னும் முயன்று பார்த்து முடிக்கவில்லை.

இந்த யதார்த்தச் சித்தரிப்பு, வாழ்வின் யதார்த்தத்தைத் துலக்குவதில் சரிவடைவதை உணர்வதும், பின்னர் யதார்த்தமற்ற சித்தரிப்புகளினு}டாக வாழ்வின் யதார்த்தத்தை துலக்கும் முயற்சியில் ஈடுபடுவதும், அது இங்கு பொதுப் போக்காக மாறுவதுமான காலம் ஊழஅ¢ரவநச மாற்றங்கள் இங்கு பரவும் பத்திலொரு பங்கு வேகத்தில் கூட வந்து சேரக்காணோம்.

தெணியானின் ‘காத்திருப்பு’ நாவலுக்கு எழுதிய அணிந்துரையில் “தமிழகத்தின் அண்மைய வளர்ச்சிகளோடு ஒப்பிடுகையில் எமது நாவல்கள் எந்த நிலையில் நிற்கின்றன என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம்” என்கிறார் முருகானந்தன்.

விரிவான பரந்த அனுபவங்களை அலை அலையாக வீசிவரும் நாவல் முயற்சி இன்னமும் இங்கு உதயமாகவில்லை, குறுநாவல்களே இங்கு நாவல்களாக நாமம் சூட்டப்படுகின்றன என்கிறார். இதற்கான பின்னணியை – காரணத்தையும் நேரிடையாகத் தொட்டுச் சொல்லிவிடுகிறார்.

“விமர்சகர்கள் முக்கியத்துவப்படுத்திய சமூக அரசியல் வரலாற்று சூழலுக்கு அமைவாக கற்பனை உலகத்திலிருந்து வரட்டுத்தனமாக எழுதித் தம்மையும் விமர்சகர்களையும் மட்டுமே திருப்திப்படுத்தினார்களே அன்றித் தம்மைச் செழுமைப்படுத்தவோ, வாசகர்களின் உணர்திறனை விருத்தி செய்யவோ முனையவில்லை.”| என்ற தம் விமர்சனத்தை வைக்கிறார். நம் கருத்துக்களுக்கிசைவாக வாழ்வை நிரூபித்துக் காட்டிவிட முற்படும் போக்காகவே நமது எழுத்துக்கள் இன்னமும் வட்டமடித்து நிற்கின்றன. சித்தாந்தச் சட்டகங்களுக்குள் அடைபட மறுக்கும், அத்துடன் இதுவரைக்குமான கதை சொல்லல் முறைகளினால் அள்ள இயலாத வாழ்வின் நட்பங்களை எழுத்தினால் அள்ளுவதற்கு நமது எந்த மரபு இன்னமும் தடையாக நிற்கிறது என்று பார்க்க வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் நமது போதாமைகள் குறித்த பிரக்ஞையுடனாவது இருக்கிறோமோ என்று அறிய வேண்டியுள்ளது. அந்தவகையில், முருகானந்தன் மறந்துபோகாத சிலவற்றைத் தொகுத்திருக்கும் இந்த நூல் நமக்கு முக்கியமானது.

“ஈழத்தைப் பொறுத்தவரையில், நாம் பெரும்பாலும் படைப்பாக்க முறைகளில் பழமை பேணுபவர்களாகவே இருந்துள்ளோம்” என்கிறார். இது நவீனத்துவத்தின் படைப்பாக்க நட்பங்களை நாம் நிறைவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே. சில படைப்புகள் உள்ளனதான். ஆனால், எமது போக்காக, தேவையாக அது உணரப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியத் தமிழ்ப்படைப்புலகம் அறுபதுகளின் பிற்பகுதியிலே யதார்த்தப் போக்கின் போதாமைகளை உணர்ந்து, நவீனத்துவத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. நாம் இன்றைக்கும்கூட உதாரணம் சொல்வதற்கு ஓன்றிரண்டு படைப்புகளையே வைத்திருக்கிறோம்.

யதார்த்தச் சித்தரிப்புக்களைப் போலல்லாது நவீனத்துவப் படைப்புகள் வாசகப் பங்களிப்பினைக் கோரிப் பெறுபவை@ வாசகப் பங்களிப்பிலேயே முழுமையடைபவை@ வாசக மனதில் சுயமாக விரியும் பண்பு இவற்றுக்கு இருக்கும். இதனால்த்தான் வெவ்வேறு விதமான வாசிப்புகளுக்கு எப்போதும் நவீனத்துவப் படைப்புகளில் இடமிருந்து கொண்டே இருக்கும்.

வாழ்வின் யதார்த்தத்திற்கும், கதையில் உருக்கொள்ளும் யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளியை நமது படைப்பாளிகளில் பெரும்பாலானோர் இன்னும் கண்டுகொள்வதில்லை என்றே தோன்றுகின்றது.

இதனோடு தொடர்பாக முருகானந்தன், படைப்பாற்றல் என்பது குறித்துச் சொல்லும் கருத்துக்கள் முக்கியமானவை.

“வெறும் அனுபவம் மட்டும் படைப்பாகி விடுவதில்லை. அதேசமயம் அனுபவத்தை இனங்காண்பதும் புரிந்து கொள்வதும் கூட இலகுவானதில்லை…. அனுபவம் – அசடுகள், அசமந்துகள் உட்பட எல்லோருக்கும்தான் வருகிறது. ஆனால் அதை அறியப் புரிய, கலையாக்கமாகப் புனைய தனி ஆற்றல் வேண்டும்” என்று இதை விளக்குகிறார்.

அதுமட்டுமில்லை. “தான் வாழ்கின்ற காலத்தில் தானும் உள்ளிட அடங்கியுள்ள சமூகத்தில் ஏற்படுகிற மாற்றங்களை ஏற்கனவே தானும் தனது சமூகமும் வரித்துக்கொண்ட முன் முடிவுகளுக்கு ஆட்படாமல் திறந்த மனதோடு ஏற்கவும் புரியவுமான மனப்பக்குவமும் அவனுக்கு வேண்டும்” என்றும் தெளிவுபடுத்துகிறார்.

தன் சிந்தனைக்கிசைவாக படைப்பைச் சிறுமைப்படுத்தாது வாழ்வின் உண்மைகள் குறித்தான தேடலுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டியதைச் சொல்கிறார்.

இதன்பொருள், கோட்பாட்டின் தளத்தில் நின்று படைப்புகளை ஆக்க முற்படக்கூடாது என்பதில்லை. தான் நம்புகிற தத்துவத்தை நத்தைக்கூடாக முதுகில் சுமந்தபடி இருப்பதுதான் அந்தப்படைப்புக்கு ஊறு ஏற்படுத்துகிறது. மாறாக, அந்தக் கோட்பாடு படைப்பாளியினுள் கரைந்துவிடும்போது, அதனை நியாயப்படுத்துவதற்கான தந்திங்கள் அவனுக்கு அவசியமற்றுப் போய்விடும்.

அப்படியல்லாமல், கோட்பாட்டினை ஒரு முகமூடியாக, ஒரு சுமையாக சுமந்து திரிபவனுக்குச் சதாகாலமும் அதை நியாயப்படுத்தியபடியே இருக்க வேண்டும்.

இதுதவிர தான் பெற்ற அனுபவத்தை படைப்பிலக்கியமாக்கும் செய்நேர்த்தி ஆற்றலையும் வலியுறுத்துகிறார். வெறும் களிமண்ணை கவினுறு மட்பாண்டங்களாக மாற்றும் குயவன் கை நேர்த்தியுடன் ஒப்பிடுகிறார்.

மூன்றாவாதாக, படைப்பு முழுமையடைவது வாசகப் பங்களிப்பில் என்பதைச் சொல்கிறார். மேலும் மேலும் வாசிப்பினால் ரசனைப் பரப்பை விரிவுபடுத்தியிருத்தலும், வாழ்வூடான அனுபவங்களால் செறிவடைந்திருத்தலும் படைப்புடன் உறவுகொள்ள முக்கியம் என்கிறார். இவ்வாறு படைப்பாளி – வாசக அனுபவங்களின் உறவு மூளையின் நரம்புக் கலங்களில் போதையை விட அற்புதமான உணர்வுகளை உற்பவித்துவிடும் சாகசம் நடந்தேறும் என்கிறார்.

முருகானந்தன், மருத்துவப் பணியோடு இலக்கியத் துறையிலும் ஈடுபாடு காட்டி வருவது குறித்து ஆச்சரியம் கொள்பவர்களுக்கு, மேலும் வியப்பூட்டக்கூடியது, கலையின் பல்வேறு வடிவங்களிலும் அவருக்கிருக்கும் ஆளுமையும் ஆற்றலும், அவற்றிலிருக்கும் ரசனைப் பயிற்சியும். சிறுகதை, கவிதை, நாவல் என்று மட்டுமில்லாது சினிமா பற்றி நுண்ணிய விசேடமான பார்வைகளை முன்வைக்கிறார். அப்படியே ஓவியம் பற்றி, சிற்பக்கலை பற்றி, நாடகங்கள் பற்றி, நடிப்புப் பற்றி, வரலாறு பற்றி, விமர்சனங்கள் பற்றி, உளவியல் பற்றி எல்லாம் கறாரானதும், காலத்தோடு முன்னகர்ந்து வந்ததுமான கருத்துக்களைக் கொண்டவராக இருக்கிறார்.

கே.எஸ்.சிவகுமாரனின் நூலுக்கான அறிமுகத்தில் நல்ல சினிமா என்றால் என்ன, அதனுடைய அம்சங்கள் எவை, அவற்றை நாம் எப்படி ரசிக்க வேண்டும் போன்ற விடயங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை சலிக்காமல் தன்னந்தனியாகத் தொடர்ந்து ஆற்றிவந்த முன்னோடி என்று குறிப்பிடுகிறார்.

இது மட்டுமன்றி, பத்தி எழுத்துக்கள்கூட எப்படி இருக்கவேண்டும் என்று சீரியஸாக யோசித்திருக்கிறார்.

முருகானந்தன் அவர்களின் சினிமா ரசனைக் கட்டுரைகளைப் பார்க்கும்போது, உண்மையில் அந்தப் பணியையும் சிறப்பாகவே தொடரக்கூடியவர் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். தொலைக்காட்சியில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த ஒரு படத்தைக்கூட மற்றவர்களுக்கு அழகுற அறிமுகப்படுத்துகிறார்.

“உங்களுக்கு ஒரு நடிகையின் கணவனாக வரவேண்டும் என்ற ஆவல் எப்பொழுதாவது இருந்திருக்கிறதா? அதுவும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியான அழகும் கவர்ச்சியும் நளினமும் நிறைந்த நடிகையின் கணவனாக வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? இன்றில்லாவிட்டாலும் விசிலடித்துத் திரிந்த கட்டிளம் பருவத்திலாவது இருந்திருக்கிறதா? அப்படியாயின் ஆல றகைந ளை ய¦ யுஉவசநளள என்ற ·பிரெஞ்சுத் திரைப்படத்தை ஒருதடவை பாருங்கள். அது உங்கள் மனத்தைத் தயார்ப்படுத்த உதவும்”| என்று ஆரம்பிக்கிறது அந்தக் கட்டுரை.

மரத்தைச் செதுக்கிச் சிற்பமாக்கும் கலையிலும் மனம் தோய்கிறார். அதையே அட்டைப்படமாகவும் தந்திருக்கிறார். அரூப பாணியிலான சிற்பங்களைக் குறிப்பிடுகின்ற போது, “ஒரு நிகழ்வின் தோற்றத்தை மாத்திரமன்றி, அக்கணத்தில் கிளர்ந்தெழுகின்ற உணர்வலைகளையும் சித்தரிக்கும் அற்புதம்” என்கிறார். “மனதிற்குப் பிடிபட மறுத்து, புரிந்துகொள்ள முடியாது நிற்கும் ஒரு சிந்தனையோ காட்சியையோ கருத்தையோ ஒரு படைப்பிற்குள் அடக்க முயலும் கலைஞனின் தேடலிலும் முயற்சியிலும்தான் உன்னதமான கலைப்படைப்பு உருவாகிறது” என்கிறார்.

சிறந்த கவிதை, சிறந்த ஓவியம், சிறந்த நாவல் என்று ஒன்றை நிறுவும் திட்டவட்டமான விதிகள் எதுவும் முழுமையாக இன்றுவரை உருவாகவில்லை. இலக்கிய விமர்சனத்தின் பலநூறு வருட வரலாற்றில், இலக்கியம் என்பது தொடர்ந்து மாறிமாறிப் பலரால் பலவிதமாக விளக்கப்பட்டு வருவதைக் கண்டுவருகிறோம். அதேபோல் ஓவியம் என்ற வரையறையைத் தொடர்ந்து மீறிய படியே உள்ளது ஓவியக்கலை. இதேபோலவே ஏனைய கலைகளும். ஆனாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரோ பலரோ வைக்கும் விளக்கத்தின் மூலமாக, அந்தக் கலைகுறித்த விளக்கத்தை மேலும் நெருக்கிவிட்டதாக உணர்கிறோம்.

உதாரணமாக, விளக்கத்திற்குப் பிடிபடாமல் நழுவும் ‘கவித்துவம்’ என்பதை முருகானந்தன் இப்படி விவரிக்கிறார். “கவித்துவம் என்பது எந்தக் கட்டுகளுக்குள்ளும் சிறைப்படாத அற்புத அனுபவம். அது வார்த்தைகளால் வரையறுத்துச் சொல்ல முடியாத, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் வாசகனை வசப்படுத்தும் உயர் பண்பாகும். நல்ல கவிதையென்பது, வாசகனின் அக மென்னுணர்வில் எதையாவது, எப்படியாவது, எங்கேயாவது தொட்டுவிட வேண்டிய அனுபவப்பகிர்வாக அமைய வேண்டும். மலருக்கு மணம்போல கவிதைக்கு கவித்துவம் இருக்கிறது…” என்று அதை விளக்கப்படுத்துகிறார்.

அதேசமயம், எல்லா இடங்களிலும் நமது போதாமைகளை வெளிப்படுத்த முருகானந்தன் தயங்குவதில்லை.

நாம் சரியாக இருக்கிறோம் என்ற தன்முதுகுத் தட்டல்கள் ஒருபோதும் நம்மைச் சரிவிலிருந்து எழுப்பப் போவதில்லை. பாராட்டாக எழுதும் முன்னுரைகள் அணி;நதுரைகளில் கூட தன் விமர்சனப் பார்வையையும் அதிருப்தியையும் ஆழுத்திச் சொல்லிய பிறகே பாராட்டைத் தொடர்கிறார்.

தகவத்தின் பரிசுக் கதைகள் பற்றி குறிப்பில் – இக்கதைகளைத் தேர்ந்தெடுக்க உபயோகிக்கப்படும் அளவுகோல்கள் என்ன? அவை யாவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல்கள் தானா? தேர்வாளர்கள் எல்லாருமே எல்லா இலக்கியக் குழுக்களின் படைப்புகளையும் திறந்த மனதோடு பார்க்கக்கூடிய நடுநிலையாளர்கள் தானா? போன்ற சந்தேகங்களை எழுப்புகிறார்.

தெணியான் பொதுவாக ஏதாவது ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துவதற்காகவே கதை எழுதுபவர். அவரது வெற்றிக்கும் தோல்விக்கும் இதுவே காரணம் என்கிறார். தோல்வி என்று முருகானந்தன் கருதுவது பற்றி யோசிக்க வேண்டும்.

கே.ஆர்.டேவிட், வாசகர்களுக்கு எதிர்பாராத, அதிர்ச்சியூட்டும் முடிவைக் கொடுக்க வேண்டும் என்ற தவிப்பில் கதைகளின் உண்மைத் தன்மையைச் சிதைத்து விடுவதாகக் குறிப்பிடுகிறார்.

மக்களின் அவல வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவர்களின் அறியாமையை, அசட்டுத்தனங்களை, அசிங்கங்களையும் கூட கதையாக்கியிருப்பதற்காக ந.சண்முகரத்தினத்தைப் பாராட்டுகிறார்.

மொத்தத்தில் முருகானந்தன் அவர்களின் ஆதங்கங்களும், ஈழத்து இலக்கியம் – நம்மை நாமே ஊதிப் பெருப்பித்துப் பேசிக் கொண்டிருக்குமளவுக்கு உன்னதங்களைத் தொட்டிருக்கிறதா என்னும் கேள்வியும் முக்கியமானவை. எங்கள் போதாமைகள் குறித்து அவர் கவனப்படுத்துகின்ற குறிப்புகள் நம் தீவிர சிந்தனைக்குரியவை.

இன்றைய வாசக மனதின் தேடல்களுக்கு திசைகாட்டி உதவுவதாகவும், கலையின் நுட்பங்களுக்குள் ஊடுருவிச் செல்ல பயிற்சிதரும் அறிமுகமாகவும் இந்தநூல் பயன் கொண்டிருக்கிறது. மிக மென்மையாகவும் மனதைக் கவரும் விதமாகவும் பல விஷயங்களை மனதில் பதிய வைத்துவிட முடிகிறது முருகானந்தன் அவர்களுக்கு.

“நானே அறிந்தவன், பிறருக்கு நிர்ணயிக்கக்கூடியவன், நானே மேலானவன் என்னும் மனப்போக்கு கொண்ட எழுத்தாளர்களோ, அவனது பாத்திரங்களோ சந்தேகத்திற்கு இடமானவர்கள்” என்பார் அமெரிக்க எழுத்தாளரான லெஸ்லி ·பீட்லர். தன்முனைப்புத் தவிர்த்த எழுத்தைக் காண்பது சிரமசாத்தியமான ஒரு சூழலில் னுச. முருகானந்தனின் எழுத்துக்கள், அதிகாரமற்ற நடையாலும், அழகாகச் சொல்லும் முறையாலும் வாசக மனதை மலர்வித்து ஆசுவாசம் தருகின்றன. மென்மை, நுட்பம், இனிமை என்று விரிந்து, உண்மையே கலையின் அழகினை தீர்மானிப்பதென்று வாதிடுகின்றன. இலக்கியம் வெறும் சாய்வுநாற்காலியல்ல, அதேசமயம் நெம்புகோல் ஆவதுமில்லை என்பதை உணர்த்துகின்றன. இலக்கியத்தின் நோக்கம், மானுடவாழ்வு குறித்த உண்மையைச் சென்று தொடுவதாகத்தான் இருக்கும் என்று வலியுறுத்தி நம்பிக்கையளிக்கின்றன. புத்தகமாக்கி அளித்திருக்கும் மீரா பதிப்பகத்தினருக்குப் பாராட்டைச் சொல்ல வேண்டும்.

முன்னட்டை- விஸ்வலிங்கத்தின் “காவடியாட்டம்” மரச்சிற்பத்தின் புகைப்படம். இச்சிற்பம் நூலாசிரியரின் வீட்டை அலங்கரிக்கிறது. பின்னட்டை- தீருவிலில் அமைந்திருந்த போராளிகளின் சிலை. ஓவியரும் சிற்பியுமான ரமணியின் படைப்பு. இது 1996 இலங்கை இராணுவத்தால் நிர்மூலமாக்கப்பட்து.

விமர்சனம்:- சிதம்பரப்பிள்ளை சிவகுமார்.
நூலாசிரியர்:- டொக்டர் எம்.கே.முருகானந்தன்.
0.00.0

Read Full Post »

இது ஒரு கவிதை நூல். கவிதை நு¡ல் என்பதால் இன்று விமர்சனம் எழுதுவது எனக்கு சற்று சங்கடத்தைத் தருகிறது.
நான் கவிஞன் அல்ல. ஆயினும் கவிஞன்தான் கவிதை பற்றிப் பேச வேண்டும் என்றில்லை. அதில் ஈடுபாடுள்ள அதில் ஆழ்ந்து போகிற எவனும் அது பற்றி பேசலாம்.  இருந்தபோதும் அகமும் புறமும் சத்தியம் நிறைந்த, உள்ளொளி கொண்ட படைப்பாளியின் இந்த நு¡ல் என்னைக் கவர்ந்தது.
மு.பொன்னம்பலம்

விமர்சகன் என்ற முறையில் அல்லாது ஒரு இரசிகன் என்ற முறையில் இந்த நு¡லை அணுகினேன். அதையே இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதை என்றால் என்ன?

ஒருவர் தனது எண்ணங்களையோ கருத்துக்களையோ உணர்வுகளையோ கற்பனை நயத்துடன் உணர்ச்சி பூர்வமாக சொல்வதாகும். சிறுகதையில் கூட அவ்வாறு சொல்லலாம்தான். ஆனால் கவிதையில் சொல்லும் போது அது வசன நடையில் அமையாது.

  • கவிதையின் சொல்லமைப்பானது தனித்துவமானது. பொதுவாக சொல்லப்போனால் சுருக்கமாகவும் செறிவாகவும் ஓசை அமைதியும் கொண்டதாக இருந்தாலே அது கவிதையாகிறது.
  • கவிதை என்பது உயர்நிலை வாசிப்பிற்குரிய இலக்கியம் என்று கருதப்படுகிறது.ஆனால் பண்டிதத் தன்மையான இலக்கியமாக இன்றைய காலத்தில் இருக்கக் கூடாது, இருக்கவும் முடியாது.
  • தேடல் மனங்கொண்ட எந்த வாசகனையும் கவரக்கூடியதாக இருக்க வேண்டிய அதேநேரம் மேலோட்டமான பொழுதுபோக்கு வாசிப்பிற்கு உரிய வடிவமுமல்ல என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
  • எது எப்படி இருந்தபோதும் கவிதை என்றால் அதில் கவித்துவம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கவித்துவம் என்றால் என்ன?

கவித்துவம் என்பது எந்த கட்டுகளுக்குள்ளும் சிறைப்படாத அற்புத அனுபவம். அது வார்த்தைகளால் வரையறைத்துச் சொல்ல முடியாத, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் வாசகனை வசப்படுத்தும் கவிதையின் உயர் பண்பாகும். நல்ல கவிதையென்பது வாசகனின் அக மென்னுணர்வில் எதையாவது எப்படியாவது எங்கேயாவது தொட்டுவிட வேண்டிய அனுபவப் பகிர்வாக அமைய வேண்டும். மலருக்கு மணம் போல கவிதைக்கு கவித்துவம் இருக்கிறது. ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்தெடுக்க முடியாது.

சூத்திரர் வருகை

மு.பொ வின் கவிதைகளில் கவித்துவத்தின் வீச்சு பலமுள்ளதாக உள்ளது. சலிப்பூட்டும் உவமைகளையும், வலிந்து திணிக்கப்படும் படிமங்களையும் அவர் உணர்வு பூர்வமாகத் தவிர்க்கிறார். “படிமப் பன்னீர்களும் உவமை ஊதுபத்திகளும், பா¨‘யின் திரவியங்கள் அனைத்தும் .. எங்கள் ஆத்மாவை விடுவிக்கப் போவதில்லை’ எனத் தனது கவிதையிலேயே அவர் தட்டிக் கழிப்பதை இங்கு சுட்டிக் காட்டலாம்.
அவருடைய கவித்துவ வீச்சு இந்த நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஒரு சில உதாரணங்களை எடுத்துக் கூறலாம்.

  • ‘காலம் கருத்தரிக்கும் மூலத்தை ஆயும் ஒவ்வொரு சமயமும் பாழில் விழும் நான்’ (பக்கம்1),
  • ‘விண்மீன்கள் பூக்கும் எம் தலை முகட்டிலும் மரகதப்பச்சை மண்டிய எம்மடி விரிப்பிலும்’ (பக்கம் 11),
  • ‘மலையின் சுவர்கள் அதிர காற்றெடுத்தறைந்தது. மெல்ல நடந்த கிளையின் படுகை செங்கம்பள விரிப்பாய் சிவந்து படர்ந்தது’ (பக்கம் 25),
  • ‘அன்ன ஊஞ்சல் அல்ல நம்மூர் விமானப் பயணங்கள்’ (பக்கம் 27),
  • ‘கூவி மருட்டும் குயிலின் இசை எடுத்து என்னை வேசைப்படுத்த விழையாதே’ (பக்கம் 47),
  • ‘தூமை அகன்ற முதுமையில் துப்பரவுகள் புனிதமல்ல முதுமையிலும் து¡மையே கரைபுரழும்’ (பக்கம் 52)

இவை போன்றவை அவருடைய கவித்துவ வீச்சுக்கு ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.
கவிதையின் உள்ளடக்கம்
கவிதையின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும். உள்ளடக்கம் எதுவுமாக இருக்கலாம்.

  • அது தனிமனிதனின் மெல்லுணர்வுகளின் அழகான வெளிப்பாடாக இருக்க முடியும்,
  • அல்லது இயற்கையன்னையின் எழிலுரு காட்சியாக இருக்கலாம்.
  • சில தருணங்களில் ஆழ்ந்த தத்துவ மணிகளாகவும் இருக்கலாம்.
  • விடயம் எதுவாக இருந்தாலும் அது வாசகனின் உள்ளத்தைத் தொட வேண்டும்.

படைப்பாளி ஆக்கிய அந்தப் படைப்பானது எழுத்தாளனினது பிரதி  என்ற நிலையிலிருந்து விலகி வாசகனின் பிரதியாகக் கூர்ப்புப் பெற வேண்டும். ஆழ்கடலின் அடியில் முத்து மறைந்திருப்பது போல வாசகனின் உள்ளத்துள் உறைந்து விட்ட ஏதாவுது ஒன்றைச் சுண்டி இழுக்க வேண்டும்.என் உள்ளத்துள் உறைந்து விட்ட உணர்வுகள் பலவற்றைச் சுண்டி இழுத்த பல கவிதைகள் மு.பொ வின் இத் தொகுதியில் உண்டு. அவர் கவிதையில் வெளிப்படுத்தியவற்றில் இரு விடயங்கள் முக்கியமாக என் மனத்தைத் தொட்டன.

இடப்பெயர்வும் அதன் துயரும்

முதலாவது விடயம் இடப்பெயர்வும் அதன் துயரும் பற்றிய கவிதைகளாகும். ‘நம்புவதே வழி’, ‘சூத்திரர் வருகைக்காய்’ ‘யாருக்குச் சொல்லி அழ’ ஆகிய கவிதைகளில் இடப்பெயர்வும் அது சார்ந்த உணர்வலைகளும், பிரச்சனையின் வெவ்வேறு அணுகு முறைகளாக அற்புதமாகப் பதிவாகியுள்ளன.
‘நம்புவதே வழியில்’ அந்த அவலம் இவ்வாறு பதிவாகிறது.
கொட்டும் பனியில் குளிரில், பனிக்காற்றில் போகும் வழியெங்கும் ஈர விற(கு) ஊதி யாகம் வளர்க்கும் அகதிப் புது மனிதம்.. இருப்பே சுமையாக, இந்நிலத்தில் கால் எங்கும் தரிக்க முடியாத சாபத்தில் சிக்குண்டு அந்தரிக்கும் இப்புதிய ஹரிஐனங்கள் ..’

இடம் பெயர்ந்து குந்தியிருக்கக் கூட நிலம் இல்லாது தவித்தவர்களுக்குத்தான் இந்த வார்த்தைகளின் சத்தியம் புரியும். இடம் பெயர்தல் பற்றிய மற்றக் கவிதை மேலும் அற்புதமானது.
சூத்திரர் வருகைக்காய் என்ற அந்தக் கவிதையே இந்நூலின் தலைப்பாகவும் அமைந்தது மிகவும் பொருத்தமானது.
‘தெற்கு கடல் செத்துக் கிடக்கிறது. கண்ணகி அம்மன் கோவில் குறாவிப் போய் நிற்கிறது. கோபுரத்தில் மாறிமாறிக் குந்திக் கரையும் காக்கைகளும் இல்லை, முக்காலப் பூசைக்கென்று மூன்றுபொழுது சைக்கிளை மணலில் தள்ளிவரும் பிராமணப் பூசகரும் காணாமல் போய்விட்டார். அப்பொழுது கேவல் எழுகிறது’.

யார் அழுவது நீங்களே படித்துப் பாருங்கள். அதிர்ச்சியில் அதிர்ந்து போவீர்கள்.

‘யாருக்குச் சொல்லி அழ’ (பக்கம் 33) மிக அற்புதமான கவிதை. அகதியாதல் இடப் பெயர்வு ஆகியவற்றை படைப்பிலக்கியமாக்கும் போது பொதுவாக இடம்பெயர்ந்து சென்றவர்களின் அவலம்தான் பாடுபொருளாக அமைவது வழக்கம். ஆனால் சூத்திரர் வருகைக்காய், மற்றும் ‘யாருக்குச் சொல்லி அழ’ ஆகிய இரு கவிதைகளும் மக்கள் இடம் பெயர்ந்து சென்ற பின் மனித வளம் குன்றி வெறிச்சோடி அனாதையாகக் கிடக்கும் மண் பற்றிப் பேசுவது குறிப்பிடத்தக்கது.
‘தலைமாட்டில் விளக்கு வைக்க யாருமில்லை கண்களை மூடிவிட, வாயை பொத்திவிட கால்விரல்களை ஒரு சேரக்கட்டிவிட யாருமில்லை ஏன் இறந்ததை அறிவித்து அழுவதற்கு அருகில் யாருமில்லை செத்தவரோடு ஒட்டிக் கிடந்த பூனை பாய்ந்து வெளியே ஓடுகிறது.’

எத்தனை உயிர்ப்பான வார்த்தைகள். நாம் பலதடவைகள் கண்டு கேட்ட அனுபவங்கள்தான். ஆனால் மு.பொ வின் சொற்களில் மிகவும் அழுத்தமாக வருகிறது. இங்கு அவர் உபயோகிக்கும் சொற்கள் கூட எளிமையானவை. எமக்கு அந்நியமான எங்கிருந்தோ பிடிங்கி வந்து செயற்கையாக நாட்டப்பட்ட கவித்துவச் சொற்கள் அல்ல. நாம் தினம் பேசும் சொற்கள்தான். தனதும் எமதுமான அனுபவ அலைகளை துணிவோடு எடுத்துக் கொண்டு, இயல்பான பேச்சு வழக்கில் தவளும் சொற்களில் கவிதை படைத்திருக்கிறார்.

நண்பனின் மறைவு
எனது உள்ளத்தைத் தொட்ட மற்றுமொரு கவிதை நண்பனின் மறைவு பற்றியது. சசி கிருஷ்ணமூர்த்தி யாழிலிருந்து பயணித்து வந்த விமானம் வீழ்ந்து நொறுங்கிக் கடலில் வீழ்ந்து காணமல் போனது பற்றி இவ்வாறு சொல்கிறார்

‘நண்ப உனக்குத் தெரியும் அன்று நாம் இலக்கியக் கருத்தரங்கு முடிந்து காலி நெடுந்தெருவில் கைகோர்காக் குறையாக கதைத்தபடி நடந்ததை! ஆனால் நமக்கேன் தெரியவில்லை, எம்மைவிட நெருங்கி எமது கதைக்கிடையே காலன் ஒட்டி வந்து உட்செய்தி சொல்லியதை?’
இதேபோல ஒரு சம்பவம் எனது வாழ்விலும் கூட நடந்தேறியது. அந்தத் தேதி கூட மறக்க முடியாதது. 15.07.1991 ஞாயிறு மாலை பருத்தித்துறையில் அறிவோர் கூடல் வழமைபோல் கலகலப்பாக நிறைவுற்றது. அன்று பிரபல எழுத்தாளர் நெல்லை க.பேரனும் எம்மோடு கூடலில் கலந்து மகிழ்ந்தான். படைப்பாளி என்பதற்கு மேலாக மனம்விட்டு இனிமையாகப் பழகுகின்ற, குடும்ப அளவிலான நெருக்கம் கொண்டவன் அந்த நண்பன். கூட்டம் முடிந்த பின்னரும் ஏனைய பல நெருங்கிய நண்பர்ளைப்போல சற்று நேரம் தங்கி நின்று பேசிப்போவான். அன்றும் வழமைபோல் சுணங்கி நின்று பேசிப் போனான்.

ஆனால் அன்றிரவே அவனும், அவனது மனைவி, இரு குழந்தைகள் ஆகிய முழுக் குடும்பமும் ஷெல் வீச்சில் அகால மரணமடைந்தனர். நண்பர்கள் எல்லோரையும் கலங்கி அழவைத்த துயர் மிகு சம்பவமாகும்.
பேரன் போலத்தான் சசி கிருஷ்ணமூர்த்தியும் எனது மற்றொரு இனிய நண்பன். எத்தனை நாட்கள் பெண்கள் ஆய்வு மன்றத்தில் விபவி கூட்டம் முடிய கதை பேசியபடி தர்மராம வீதி வழி நடந்திருப்போம். இது போன்ற போரின் அகோர முகத்தை இன்னும் எத்தனை ஆயிரம் அப்பாவி மனிதர்கள் சந்திக்க நேர்ந்தது.
‘நம் இருப்புக்குள் புகுந்துள்ள மரணத்தின் மூச்சறிய உனக்குள் இருக்கும் உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழி”
எத்தகைய உள்ளொளி கொண்ட ஆத்மீக உணர்வு கொண்ட வார்த்கைள் ‘மரணத்தின் மூச்சறிய உனக்குள் இருக்கும் உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழி’க்க ஞானிகளால் முடியும், உள்ளொளி பெற்றவர்களால் முடியும். ஆனால் எம்மால் உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழித்து ஒளி பெற முடியுமா? நாம் சாதாரண மானிதர்கள். எம்மால் மரணம் வரப்போவதை முற்கூட்டி அறிய முடியாது. மரணத்தைக் கண்டு கண்ணீர் விடத்தான் முடிந்தது.

காலத்தினூடு கடந்து செல்லல்
மு.பொ வின் இன்னொரு தனிச்சிறப்பை காலத்தினூடு கடந்து செல்லும் ஆற்றல் உள்ளவராக ரஞ்சகுமார் இந்த நூலுக்கான பின் அட்டையில் முன்வைக்கிறார். இதன் அர்த்தம் என்ன? படைப்பிலக்கியங்களை காலத்தின் கண்ணாடி என்பர். அந்த வகையில் பெரும்பாலும் காலத்தின் குரலாக, அதன் சாட்சியாக இயங்குபவர்கள் படைப்பாளிகள். தமக்கு முன்னும் தமது காலத்திலும் நிலவிய, நிலவுகின்ற பாரம்பரியத்தையும். புழக்கத்திலுள்ள நடைமுறைகளையும் நன்கு அறிந்து, அதிலுள்ள போதாமைகளையும், குறைபாடுகளையும் இனங் கண்டு மனங் கொதித்து படைப்பவனாக படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதனால் காலதோடு இணைந்து நடப்பவர்கள்.
ஆனால் மு.பொ காலத்தோடு கலந்து செல்கின்ற அதேவேளை அதனைக் கடந்தும் செல்பவர். அதனால்தான் காலத்தினொடு கடந்து செல்பவர் என்றார் ரஞ்சகுமார். காலத்தின் பிரச்சனைகளை, அவற்றால் சமூகத்திற்கு ஏற்படும் தாக்கங்களை அறிந்து கொண்டவர். ஆனால் இன்றுள்ள கொள்கைகளும் கோட்பாடுகளும் இன்றைய உலகில் மாற்றங்களை ஏற்படுத்தப் போதாதவை எனக் கண்டு, ஒரு புத்தம் புதிய தரிசனத்தை உணர்ந்தறிந்து அதன்படி கலைஇலக்கிய ஆக்கத்தை மேற் கொள்பவர்.

புதிய தரிசனம்
அவரது புதிய தரிசனம் என்ன? அரசியல் பொருளாதாரத் துறைகளில் புதிய தரிசனங்களுக்கு மார்க்ஸ் உதாரணமெனில் இலக்கியத்தில் தாகூரையும் பு¡ரதியையும் சொல்லலாம். மு.பொ வும் அவ்வாறே புதிய தரிசனங்களைத் தேடி அலைபவர். இதனால்தான் காலத்தினொடு கடந்து செல்பவர் என ரஞ்சகுமார் கூறினார் போலும்.
அவரது புதிய தரிசனத்திற்கு ஒரு நல்ல உதாரணம் இவரது கடைசி நாவலான ‘நோயில் இருத்தல்’ ஆகும். உண்மையில் ஈழத்து நாவல் வரலாற்றில் இந்த நாவல் ஒரு புதிய அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும். இதுகாறுவரை வந்த நாவல்களினதும் சிறுகதைகளின் போக்கையே மாற்றக் கூடிய ஆழமும் புதுமையும் வீச்சும் கொண்ட வித்தியாசமான படைப்பான அது இருந்தது.
ஏனெனில் இதுவரை காலமும் எந்தப் புனைகதையாக இருந்தாலும் அதற்குள் ஒரு கதை இருக்க வேண்டியது எமக்கு முக்கிய வரையறையாகப் பட்டது. அதாவது கதை சொல்வதுதான் கதாசிரியரின் முக்கியமான கடமையாக எண்ணப்பட்டு வந்தது. கதையின் முக்கிய கரு என்ன? அதில் புதுமையான மாற்றங்கள் ஏதாவது தென்பகிறதா? அதை வெளிக் கொணரும் முக்கிய பாத்திரங்கள் எவை, உப பாத்திரங்கள் எவை? கதையின் கருவைச் சிதைக்காமல் கதாசிரியர் படைப்பை வளர்த்திருக்கிறாரா? கதை மன¨த் தொடுகிறதா? என்ற ரீதியில்தான் நாம் சிந்தித்தோம். வாசகர்களும் அதற்கு அமைவாகவே வாசித்துப் புரிந்து, உணரப் பழக்கப்படுத்தியிருந்தோம். இவற்றை மீறிய சிந்தனைகள் எழவே வாய்ப்பு இருந்திருக்கவில்லை.
ஆனால் தமிழகத்தில் இதை மீறிய சிந்தனைகளும் படைப்புகளும் சிலகாலமாக வெளிவரத் தொடங்கிவிட்டது. நீல.பத்மநாதன், விட்டல்ராவ் போன்றோரது சில படைப்புகளில் இந்த அம்சம் பிரக்ஞை பூர்வமாகவோ அன்றித் அவர்களை அறியாமலோ பல காலங்களுக்கு முன்னரே தலைகாட்டியிருந்தது. இன்று இன்னும் பலரது படைப்புகளில் இந்தப் போக்கு தென்படுகிறது. சில காலத்திற்கு முன் பரவலாகப் பேசப்பட்ட வி–ணுபரம் நாவல் இதற்கு ஒரு நல்ல உதாரணமகச் சொல்லப்பட்டது.
ஆயினும் இவற்றையெல்லாம் து¡க்கி எறியக்கூடிய இலக்கிய வடிவமாக நோயிலிருத்தலை நாம் பார்க்கலாம். ஒரு தனிமனிதனின் உள்நோக்கிய பார்வையூடாக அவனது விடுதலை பற்றியும் அதனு¡டாக ஒரு சமூகத்தின் விடுதலை பற்றியும் அது பேசியது.
மார்க்ஸிய சிந்தனைகள், லோகாதாயச் சிந்தனைகள், இனவழிச் சிந்தனைகள் ஆகியன இன்றைய உலகின் போக்காக இருக்க நோயில் இருத்தல் ஆனது மனிதனின் உள்நோக்கிய பார்வையூடாக ஆத்மீகச் சிந்தனைகளுக்கு உட்படுத்தியது.

வழி நடத்துனன்
இதே போன்றே கவிதைத் துறையிலும் தன்னை ஒரு முன்னோடியாக, வழி நடத்துபவனாக இனங்காண வைக்கின்றார். சங்க காலம் முதல் இன்று வரையான கால ஓட்டத்தில் அஞ்சல் ஓட்டமாகப் பயணித்த கவிதைத்துறையின் கம்பு தன் கையில் வந்து விழுந்தபோது அதன் இன்றைய பண்பையையே கட்டியழும் இயல்பு மு.பொ வுக்கு இல்லை. தன் கவிதையில் தன்னைத் தானே கண்டு பிடித்து, தன்வழி மற்றவர்களை இழுக்கக் கூடிய முன்னோடியாக, தெளிவான ஆளுமையுள்ளவராக தன்னையும் கவிதைத்து¨றையையும் புதுப்பித்துக் கொள்கிறார்.

ஆத்மார்த்தம்
மனிதனின் உள்நோக்கிய பார்வையூடாக ஆத்மீகச் சிந்தனைகளுக்கு உட்படுத்தும் கருத்தை இந்த நு¡லில் உள்ள பல கவிதைகளில் காண்கிறோம்.
அதனை ‘விடுதலை பற்றிய விசாரம்’ என்ற கவிதையிலும் காணலாம்.
எது விடுதலை? சுகத்தை அனுபவிக்கவே விடுதலை கேட்கிறோம். இல்லை விடுதலையே சுகமாக விரிகிறது என்று சொல்லாமா? கண்காணா ஊற்றுச் சுரபியிலிருந்து அருவி பரவி வருவதுபோல் ஸ்பரிசிக்க முடியாத விடுதலை என்னும் உணர்வெளியிலிருந்து சுகம் எம்மைத் தழுவி வருகிறது. கண்கள் அழகில் தோயும்போது பார்வையில் ஒருசுகம் காதில் இசை வழியும்போது பார்வையில் ஓருசுகம். அறுசுவை உண்ணும்போதும், நாவில் கவிதை துள்ளும்போதும் சுகித்தலிலும் யாத்தலிலும் ஒருசுகம் என்றுவரும் தனித்தனிச் சுகங்கள்.

இவற்றிற்கெல்லாம் அடிநாதமான மனம், விரிந்து மேலெழ முடியாது. முடக்கப்படும்போது விடுதலை ஒருவனுக்கு இல்லாது போய்விடுகிறது.
அப்படியானால் விடுதலை என்றால் என்ன? இவ்வாறு கூறுகிறார்.
‘விடுதலை என்பது எல்லோரையும் விரிய வைப்பது.

எல்லோருக்குள்ளும் ஒத்திசைவது எங்குமாய் விரிந்து இன்பூட்டுவது எல்லோருக்குள்ளும் புகுந்து இன்சுகம் மீட்டுவது’
இதை அடைவது எப்படி?
‘நமக்குள்ளே நம்மை அறியாது பதுங்கி இருக்கும் பொதுமைக்கெதிரான தனிநிலக்குணங்கள் ஆக்கிரமிக்கக் கூடும் இது நம் விடுதலையை விரிய விடாது திசை தருப்பக்கூடும் இதனால் நாம் சதா அகமும் புறமும் புதுவித சென்றிகள் போட்டு இவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும் என்றார்.
இந்தக் கவிஞன் பல்வேறு விடயங்களைக் கவிதையாக அவிழ்த்து எம் முன் சிதறப் போட்டிருற்கிறான். அவன் எடுத்தாண்ட விடயங்கள் பல்வகைப்பட்டவை. நாட்டு நடப்புகள், பெண்ணியம், சிங்களப் பேரினவாதத்தின் கொடிய கரங்கள், இடப்பெயர்வு, சூழலைப் பாதுகாத்தல், இன்றைய இலக்கியப் போக்குகள், இப்படி எத்தனையோ.

அன்பு சார்ந்தது
மு.பொ வின் படைப்புலககை இன்னொரு விதத்தில் பார்த்தால் அது அன்பு சார்ந்ததாக இருக்கிறது. தன் அன்புக்குரியோர் முதல் தன் எதிரிகள் வரை அந்த அன்பு விரிகிறது. தனது இனத்துடன் மட்டும் நின்றுவிடாது மனித குலம் முழுவதையும் உள்வாங்கிப் பரவுகிறது. மிருகம், மரம் செடி கொடி என அனைத்து உயிர்களையும் அணைத்துப் பேண வேண்டும் என்று பேராசை கொள்வதாயும் இருப்பதைக் காண்கிறோம்.
‘மனுதர்ம சாஸ்திரம்’ என்ற கவிதையில் அந்த ஆட்டுக்குட்டி பஸ் மோதி,
‘ஒரு மூச்சில்லாமல், மே என்ற பேச்சில்லாமல், இரத்தம் சிந்தி விகாரப்படுத்தாமல்’
மரணித்துப் போவதைக் கண்டு அவர் துயருறுகிறார். மலைமொழி என்ற கவிதையில் மலைகளின் மேலுள்ள மரங்களை ‘கோடரி கொண்டு தறிக்கையில் அவர் அங்கங்கள் ஒவ்வொன்றும் இரக்கத்தால் சிதறித் தெறிக்குது.’
‘படிமப் புஸ்பங்களும் உவமை ஊது பத்திகளும் · பா¨‘யின் வாசனைத் திரவியங்களும் கொண்டு’ கவிதையைச் சிதைக்கும் போது அவரது ஆத்மா ஓலமிடுகிறது. இலக்கியத்தில் ‘தசை மொழியாடல்’ கண்டு கொதிக்கும். ‘சுலோகச் சுமையை ஏற்றி ஏற்றி தொழிலாளர் முதுகில் குதிரை விட்டிருந்தமை’ கண்டு மனம் ஏங்கும். ‘குனிந்து குனிந்து வளைந்தவன் நெஞ்சுப் பொந்தினில் அக்கினிக் குஞ்சு திரள’ வைக்க அவரது மனம் சிறுமை பொறுக்க முடியாமல் துடிக்கும்.
இப்படி இலக்கியம், விஞ்ஞானம், உலக நடப்பு பல பொருள் பற்றி அவர் அங்கும் தாவிச் சென்று ஆழமாகத் தேடி இரசித்துப் பாடினாலும், அவரது கவிதைகள் மனித வாழ்வு பற்றிய கேள்விகளையும் விசாரணகளையும் சதா எழுப்புகிறது. இவ்வுலக வாழ்க்கையின் முடிவுக்கு அப்பாலான இன்னொரு வாழ்வு பற்றியும் நம்பிக்கை கொள்கிறது.

இயல்பான காட்சிச் சித்தரிப்பிற்கும், வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் அப்பால் அவரது கவிதைகள் துள்ளிப் பாயும்போது ஒரு அற்புதம் அரங்கேறி விடுகிறது. எளிய தோற்றத்ததைத் தந்த கவிதைகள் கனத்த ஆகிருதியை, எல்லையற்ற பரிமாணத்தை எட்டி விடுகின்றன. வெறும் காட்சிப் படுத்தல் என்ற படியை தாண்டி ஆழ்ந்த தத்துவப் பார்வைக்குப் பாய்ந்து செல்கிறது.

தவிஞனின் தளம்
இவ்வாறு இவரது கவிதைகள் ஊடாகப் பயணிக்கும்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. இந்தக் கவிஞன் யார்? இவனது தளம் என்ன? இவனது பார்வை எத்தனையது போன்ற கேள்வி எழுகின்றன. இவற்றை நாம் அவனது படைப்புகள் ஊடாகத்தான் நாம் கண்டறிய வேண்டும். ஆனால் எந்த ஒரு படைப்பாளியும் தான் ஒரு குறுகிய எல்லைக்குள் அடைபட்டுப் போவதை விரும்புவதில்லை. கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல இயங்கும் படைப்பாளிகள் தவிர்ந்த ஏனைய படைப்பாளிகள் எல்லையற்ற சுதந்திரத்துடன் சிறகு கட்டிப் பறக்கவே விரும்புவர்.

இது அவர்கள் அவாவாக இருந்தபோதும், அவர்கள் படைப்புகளை ஊன்றிப் படிக்கும் தேடுதல் கொண்ட வாசகனுக்கு படைப்பாளியின் சுயஅடையாளத்தை கண்டு கொள்வது சிரமமானது அல்ல.
‘இயல்தல் ஒன்றே’ கவிதையில் தன்னை இவ்வாறு அடையாளப்படுத்துகிறார்.
‘அயலவர் உறவுகள் என்ற கிளைவிடுதல் இல்லாத சுயநடைபயிலி’
என்று விபரிக்கிறார்.

உண்மைதான் படைப்புலகைப் பொறுத்த வரையில் அவர் ஒரு சுயநடைபயிலி தான். அவரது படைப்புகள் பெரும்பாலும் இதுகாலம் இருந்து வந்த கலைவடிவங்களை உடைத்துக் கொண்டு காலத்தை முந்திக் கொண்ட படைப்புகளைத் தர முனைவதால் இலக்கியக் கூறுகளின் முன்மாதிரி உதாரணங்களை உருவாக்குகிறது.
ஆனால் அக்கவிதை அதற்கு மேலும் சொல்கிறது.
‘நான் பிறந்ததும் இல்லை இறந்ததும் இல்லை! வாழ்ந்ததும் இல்லை பாழ்பட்டதும் இல்லை! இயல்தல் ஒன்றே’
என்கிறார். அதாவது தான் இறப்புப் பிறப்பு அற்ற ஆன்மா என்று கூறுகிறார் போலும். இங்கே மெய்யுள் பேசும் ஆத்மீகத் தளத்தை இனங்காட்டுகிறது.

இறுதியாகச் சொல்வதானால் மு.பொ வின் சூத்திரர் வருகைக்குள் நுழைந்த எனக்கு இனிமையான, மனநிறைவளிக்கும் அனுபவம் கிட்டியது. காரணம் அவரது படைப்புலம் விஸ்தாரம் கொண்டது. அவரது கற்பனைகளும் வார்த்தைகளும் எல்லைகளை மீறிப் பிரவாவிப்பதுடன் புதிய தளங்களுக்குள்ளும் பாய்ந்தோடுகிறது.. தன்னிரு கண்களால் முழு உலகையும் அளக்கிறார், கைகளால் பிரபஞ்சத்தையே துளாவுகிறார்,

ஆனால் எங்கு சென்ற போதும் பூமியிலேயே கால் பதித்து நிற்கிறார். ஆனால் அதற்கு மேலாக தன்னுள் ஆழ்கிறார், தன் சுயத்துள் மூழ்குகிறார். வாசகனான என்னையும் கூடவே கைகோர்த்து இணைத்துச் செல்ல முனைகிறார். என்னை என்னுள் கரைய வைத்து என் இனிய நினைவுகளையும் சோகங்களையும் மீட்டுணர வைத்தது. நீங்களும் மூழ்குங்கள் உங்கள் நினைவில் கரைந்த முத்துக்களை நீங்களும் மீட்டெடுத்து மகிழ்வீர்கள்

எம்.கே.முருகானந்தன் (இலங்கை)
நூலகத்தில் இந்நூலைப் படிக்க
இந்நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

Read Full Post »

புகலிட இலக்கியம் என்றால் என்ன? புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? இவற்றிற்கிடையே வேறுபாடு இருக்கும் என்பதை பலர் சிந்திப்பதே இல்லை. அவற்றிடையே மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

பேராசிரியர் செ.யோகராசா

“அரசியல் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் படைப்பதே ‘புகலிட இலக்கியம்’ (Diasporic literature) எனலாம். தொழில் நிமித்தமான ஈழத்தமிழர் புலப்பெயர்வு செய்தோர் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் (Expatriate literature) இந்த வேறுபாட்டை முதலில் தெளிபடுத்திய பின் “புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு” என்ற தனது நினைவுப் பேருரையின் முக்கிய பகுதிக்குள் நுழைகிறார் செ.யோகராசா.

பருத்தித்துறை வேலாயும்மகாவித்தியாலய ஸ்தாபகரான அமரர் உயர்திரு.வை. வேலாயுதம்பிள்ளை அவர்களின் முன்னோடிப் பணியை கெளரவப்படுத்தப்படும்  நிகழ்வான ‘நிறுவனர் தின நினைவுப் பேருரை’ சென்ற 07.08.2011 ஞாயிறு மாலை கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த உரை சிறு கைநூல்நூலாக அன்று வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டமில்லாமல் அரிய பணிகளைச் செய்பவர்கள் தமிழ் இலக்கிய உலகில் குறைவு என்றே சொல்ல வேண்டும். வெற்றுத் தகர டப்பாக்களின் காதை செவிடுபட வைக்கும் ஓசைகளின் மத்தியில்  மெளனமாக ஆழமான ஆய்வுப் பணிகளை செய்கிறவர்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

இவர்களிடையே வித்தியாசமான ஒருவர்தான் செ.யோகராசா. தப்பு!! பேராசிரியர் செ.யோகராசா என்று சொல்ல வேண்டும். தமிழ்ப் பேராசிரியரான அவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்துறைத் தலைவராகவும் பணிபுரிகிறார்.

200 கட்டுரைகள், 50 ஆய்வுக் கட்டுரைகள், 8 நூல்கள், 6 தொகுப்பு நூல்கள் என இவரது தமிழ் இலக்கியப் பணி பலமானது.

புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு என்ற இந்த நூல் நிறையத் தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்த நூலின் உள்ளடக்கம் அதனைத் தெளிவுபடுத்தும். முன்னணி எழுத்தாளர்களை மட்டுமின்றி இளம் தலைமுறையினர் பலரையும் தேடிக் கண்டுபிடித்துத் தகவல் தந்த அவரது பணி பாராட்டத்தக்கது.

  • புலம்பெயர் இலக்கியமும் புகலிட இலக்கியமும்
  • சிறுகதைத் துறையில்
  • கவிதைத்துறையில்
  • மொழிபெயர்புத் துறையில்
  • கட்டுரைத் துறையில்
  • நாடகத்துறையில்
  • ஓவியத்துறையில்
  • ஒலபரப்புத் துறையில்
  • சஞ்சிகைத் துறையில்
  • நூல் வெளியீட்டுத்துறையில்
  • மதிப்பீடு

ஆகிய தலைப்புகளில் அவரது ஆய்வுத் தகவல்கள் கட்டுரையாகப் பரிணமிக்கின்றன.

கரவெட்டியைச் சேர்ந்த இவர் இளமைக் காலத்தில் கருணை யோகன் என்ற புனை பெயரில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

  • ‘ஈழத்து நவீன கவிதை புதிய உள்ளடக்கங்கள்- புதிய தரவுகள்- புதிய போக்குகள்’  என்ற தனது நூலிற்காக தேசிய சாகித்திய விருது 2007ல் பெற்றுள்ளார்.
  • ‘பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை – பிரதேச சாகித்திய விருது 2007
  • ஈழத்து நாவல் வளர்ச்சியும் வளமும்- பிரதேச சாகித்திய விருது 2008

பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது முழமையான ஆய்வு அல்ல என.செ.யோ ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். காரணம் பூரணமான தகவல்களைப் பெற முடியவில்லை என்ற அவரது ஆதங்கமாக இருக்கலாம்.

புகலிட இலக்கியம் மற்றும் புலம்பெயர் இலக்கியம் படைப்போரும், அதில் ஆர்வமுள்ளோரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. தவறுப்பட்ட படைப்பாளிகள் பற்றிய தகவலறிந்தோர் செங்கல்லடியில் உள்ள கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்துறையிலுள்ள நூலாசிரியருடன் தொடர்பு கொள்ளலாம் என நம்புகிறேன்.

Read Full Post »