‘பிள்ளை உன்ரை வாயையும் ஒருக்கால் டொக்டருக்கு காட்டு’ என அம்மா மகளுக்கு சொன்னாள்.
ஏற்கனவே மகளின் காலில் உள்ள ஒரு தேமலுக்கு காட்டி மருந்து பற்றிய விளக்கங்னளயும் கேட்டுவிட்டு புறப்படும் தருணத்தில், வந்த இடத்தில் இதையும் முடித்துக் கொண்டு போகும் எண்ணத்தில் அம்மா இவ்வாறு கூறினாள்.
கொவ்வை வாய் திறந்த குட்டி அழகியின் உதட்டின் உட்புறத்தில் வெண்மையாக ஒரு கட்டி.

மற்றொரு இளம் பெண் அலறிப்புடைக்காத குறையாக என்னை நாடி வந்திருந்தாள். அவளது வாயினுள்ளும் இது போன்றதொரு கட்டி இருந்தது. வாயின் மென் சவ்வில் தடிப்பமாக வட்ட வடிவில் வெண்மை நிறத்தில் இருந்தது. அரை சென்ரி மீட்டர் அளவு இருக்கலாம்.
பொதுவாக வேதனை எதுவும் இல்லையாம். இறுக்கி அழுத்தியபோது சற்ற வேதனை இருந்தது.
இவற்றை நீர் கட்டி என்று சொல்லலாம். மருத்துவத்தில் Mucous cyst என்பார்கள். சீதச் சுரப்பி என சொல்வது கருத்து ரீதியாக சரியான தமிழ் சொல்லாக இருக்கும்
வெண்மையாக அல்லது வெளிர் நீல நிறத்தில் வாயின் உட்புறமுள்ள மென் சவ்வுகளில் வட்டவடிவாக தோன்றும் கட்டிகள் இவை. சாதாரணமான ஒரு சென்ரி மீற்றருக்கு குறைவான அளவிலேயே இருக்கும். ஆயினும் சில தருணங்களில் 3.5 சென்ரி மீற்றர் வரை பெருக்கக் கூடும்.
இத்தகைய கட்டிகள் எந்த வயதிலும் வர வாய்ப்புண்டு.;. ஆயினும் பொதுவாக 10 முதல் 25 வயதினரிடையேதான் அதிகம் காணக் கூடியதாக இருக்கிறது.
இவை எவ்வாறு தோன்றுகின்றன எனச் சரியாகச் சொல்ல முடியாது.
இருந்தாலும் சொண்டு கடித்தல் சொக்கையை கடித்தல் போன்ற ஊறுகளால் எற்படுவதற்கான வாய்பு அதிகம்.
இதே போன்று வேறு ஏதாவது குத்தியதால் அல்லது காயம் படுதலால் எச்சில் சுரப்பிகளில் காயம் ஏற்படுபட்டும் இவை தோன்றுகின்றன.
எனவே மன அழுத்தங்களால் உதடுகளை கடிப்பவர்களிடையே இவை தோன்றுவது அதிகம்.
சிலரில் இந்த கட்டிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுண்டு.
பல் இடுக்குகளில் காரை (tartar) படிவதைத் தடுப்பதற்கான பற்பசைகளை உபயோகிப்பவர்களிலும் சிலருக்கு தோன்றுகிறது.
மேற் கூறிய இருவரில் ஒருவர் நீர்க்கட்டி பற்றி பெரிதாக அக்கறைப்படவில்லலை. போகும் போக்கில் சொன்னார். மற்றவர் அலறிப் பிடித்து ஓடி வந்தார்.
எது சரி? உண்மையில் இது உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டிய பாரதூர நோயா இல்லையா?
இது சாதாரண நோய்தான். பயப்பட வேண்டியதில்லை. தானே ஓரிரு மாதங்களில் குணமாகிவிடும்.
ஆயினும் இது சாதாரண நீர்க்கட்டிதானா இல்லையா என்பதை நீங்களாக தீர்மானிப்பது சாத்தியமல்ல. மருத்துவர் பார்த்துத்தான் நோயை சரியாக நிர்ணயம் செய்ய முடியும். எனவே மருத்துவரிடம் காட்ட வேண்டிய தேவை நிச்சமாக உள்ளது.
மருத்துவர்களால் பார்த்த மாத்திரத்திலேயே இதை இனங் காண முடியும். ஆயினும் ஒரு சில தருணங்களில் நோயை நிச்சயப்படுத்த பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.
நீர்க்கட்டியானது நீண்ட காலத்திற்கு குணமாகாது இருந்தால் அல்லது அதன் அளவு 2 சென்ரி மீற்றருக்கு கூடுதலாக இருந்தால், வேகமாக வளர்ந்து வந்தால், அல்லது அதன் தோற்றம் புற்று நோய் போன்ற சந்தேகத்தை கொடுத்தால் மருத்துவர் அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்புவார். புற்றுநோய் போன்ற ஆபத்தான நோயல்ல என்பதை நிச்சயப்படுத்தவே இவ்வாறு செய்வார்கள்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல வாயின் மென்சவ்வுகளில் வரும் இந்த நீர்க்கட்டிகள் எந்தவித சிகிச்சையும் இன்றி தாமாகவே குணமாகிவிடும்.
நீங்களாக அதைக் குத்தவோ கீறவோ அகற்றவோ முற்பட வேண்டாம். கிருமித்தொற்றுக்கு ஆளாகக் கூடும் என்பதுடன் மீளவும் வரக் கூடும்.
நீண்ட காலம் குணமாகாது இருந்தால் அல்லது வலி இருந்தால் அல்லது உண்ணும் போது இடைஞ்சலாக இருந்தால் அதை அகற்ற முடியும்.
லேசர் சத்திர சிகிச்சை கூலம் அகற்றலாம். சுpல தருணங்களில் அந்த இடத்தில் ஸ்டிரோயிட் ஊசி மருந்து ஏற்றி அறையச் செய்வதுண்டு.
எதுவானாலும் பயப்பட வேண்டிய நோயோ சிகிச்சையோ அல்ல என்பதை புரிந்து கொண்டால் போதுமானது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (Col)
குடும்ப மருத்துவர்
0.0.0
Read Full Post »