Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘மருத்து’

வயிற்றோட்டம், வயிற்றுழைவு
நீராகாரமும் உணவு கொடுத்தலும்

நீரிழப்பு நிலையை அடைந்திருந்த குழந்தை அது. கண்கள் குழிவிழுந்திருந்தன. நாக்கு வரண்டிருந்தது. தாகம் அதிகமாக இருந்தாலும் வாந்தியால் நீர் அருந்த முடியாது தவித்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர் அன்றுதான்; வயிற்றோட்டத்தால் ஒரு குழந்தைக்கு சேலைன் ஏற்ற வேண்டிய நிலை எனக்கு வந்தது. இப்பொழுதெல்லாம் இவ்வாறான நிலையில் குழந்தைகளைக் காண்பது அரிதாகிவிட்டது.

Dedyrated child

நினைவுகளை பின்நோக்கி நகர்த்தியபோது நான் மருத்துவனாகப் பணியாற்ற ஆரம்பித்த காலங்களில் குழந்தைகள் வார்ட்டுகள் யாவும் வயிற்றோட்ட நோயாளிகளால் (Diarrhoea) நிரம்பி வழியும். சில மருத்துவமனைகளில் வயிற்றோட்டத்திற்கு என்றே தனியாக வார்ட்டுகளை விசேடமாக அமைத்திருப்பார்கள்.

dehydration

வயிற்றோட்ட நோய் அந்த அளவிற்கு அக்காலத்தில் பரவலாக இருந்தது. நோயின் தீவிரமும் அதனால் குழந்தைகள் மரணிப்பதும் திகில் ஊட்டும்.
இன்று அவ்வாறான நிலை ஏன் இல்லை. இதற்கு சில காரணங்களைச் சொல்லலாம்.

  • சுத்தமான நீர் கிடைக்கிறது. கிராமப் புறங்களில் கூட மலசல கூடங்கள் வந்துவிட்டன. வெளியிடங்களில் மலங்கழிப்பது குறைந்து விட்டது. இதனால் நீர் மாசடைவது குறைந்து சுத்தமான நீர் குடிக்கக் கிடைக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டாலும் நீரைக் கட்டாயம் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலானோர் கடைப்பிடிக்கிறார்கள்.
  • ஜீவனி பரவலாக எங்கும் கிடைக்கிறது. ஜீவனி இல்லாவிட்டாலும் அதை ஒத்த மீள நீரூட்டும் பானம் தயாரிப்பதற்கான (Oral Rehydration Solution ORS) பவுடர்கள் வௌ;வேறு பெயர்களில் குட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது. வயிற்றோட்ட நோய் வந்தால் குழந்தையை நீரிழப்பு நிலைக்கு விட்டுவிடக் கூடாது. அவற்றைக் கரைத்துக் கொடுக்க வேண்டும் என்ற அறிவு எங்கும் பரந்திருக்கிறது.
  • அன்ரிபயோடிக் மருந்துகளை (Antibiotic) சாதாரண வயிற்றோட்டங்களுக்கு கொடுப்பதேயில்லை. காரணம் இத்தகைய வயிற்றோட்டங்கள் வைரஸ் கிருமிகளாலேயே ஏற்படுகிறது. இவற்றைக் குணப்படுத்த அத்தகைய மருந்துகள் தேவையில்லை. அத்துடன அவசியமற்ற அன்ரிபயோடிக் சாதாரண வயிற்றோட்டத்தை அதிகரிக்கவே செய்யும். இதனை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

இருந்தபோதும் இலங்கையில் வயிற்றோட்ட நோய் இன்னமும் முற்றாக மறைந்துவிடவில்லை. உலகளாவிய ரீதியில் 1.6 மில்லியன் இறப்புகள் இந்நோயால் மட்டும் 2002 ல் நிகழ்ந்திருக்கி;ன்றன. அதே வேளை இரண்டு பில்லியன் பேர் வருடாந்தம் இதனால் பீடிக்கப்படுகிறார்கள். போஷாக்குக் குறைந்த பிள்ளைகள் இதனால் பீடிக்கப்படுவதும் மரணமுறுவதும் அதிகமாக இருக்கிறது.

புதிய மாற்றங்கள்

ஆரம்ப காலத்தில் (1970 களில்) உபயோகித்த மீள நீரூட்டும் பானங்கள் சற்று செறிவு அதிகமாயிருந்து. இதனால் வயிற்றோட்டம் காரணமான நீரிழப்பைத் தடுக்கக் கூடியதாக இருந்தாலும் வாந்தி தொடர்ந்து கொண்டிருந்தது. பல ஆய்வுகளையும் கருத்தில்கொண்டு சற்று செறிவு குறைந்த பானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் சிபார்சு செய்தது. அதுவே இப்பொழுது பல வருடங்காக பாவனையில் உள்ளது. இது நீரிழப்பைத் தவிர்ப்பது மட்டுமின்றி குழந்தைகளில் வாந்தி ஏற்படுவதையும் குறைக்கிறது.

மீள நீரூட்டும் பானங்கள் பரவலாக உபயோகிக்கப்படுவதால் வயிற்றோட்டம் உள்ள குழந்தைகளை மருத்துவ மனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலை பெரும்பாலும் ஏற்படுவதில்லை. பெரும்பாலான மருத்துவமனைகளில் குழந்தைகளை வெளிநோயாளர் பிரிவுகளில் வைத்து நீரிழப்பு நிலையைச் சரிசெய்த பின்னர் வேண்டிய அறிவுறுத்தல்களுடன் வீட்டில் வைத்துப் பராமரிக்க விடுகிறார்கள். நீரிழப்பை பெரும்பாலும் மீள நீரூட்டும் பானங்களால் சரிசெய்துவிட முடிகிறது. மிகச் சில தருணங்களிலேயே நாளங்களுடாக சேலைன் ஏற்ற நேர்கிறது.

நாகம் (Zinc Suppliment) கொடுப்பது

வயிற்றோட்டத்தின் போது நாகம் (Zinc Suppliment) கொடுப்பதால் நோயின் தீவிரத்தைத் தணிக்கலாம் என்ற புதிய ஆய்வு முடிவும் மாற்றங்களுக்கான காரணங்களில் ஒன்றாகும்.

Zinc-poster-layers2

Zinc யை மருந்தாக வயிற்றோட்டத்தின் போது கொடுப்பதால் தீவிரம் குறைவது மட்டுமின்றி அது குறைந்த நாட்களிலேயே சுகமாகிவிடும். 14 நாட்களுக்கு தொடர்ந்து கொடுப்பதால் அடுத்த 2 முதல் 3 மாதகாலத்திற்குள் நோய் மீண்டும் வருவதற்கான சாத்தியத்தையும் குறைக்கும் என ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியது. கடைப்பிடித்தாலும் நோயின் தாக்கம் குறைந்தது.

உணவு

போதிய நீராகாரம் கொடுப்பதுடன் நிற்காது உணவுகளையும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். வாந்தியால் உணவு உண்ண முடியாத தருணங்களில் போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்ததும் வழமையான உணவுகளைக் கொடுக்கலாம். இலகுவில் சமிபாடடையக் கூடிய மோல்ட், கஞ்சி போன்றவற்றுடன் ஆரம்பிக்கலாம்.

dd522

போதிய நீராகாரம் கொடுப்பதுடன் நிற்காது உணவுகளையும் தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். வயிற்றோட்டம் வந்தால் வயிற்றைக் காயப்போட வேண்டும் என்ற தவறான கருத்திற்கு நிரந்தர விடை கொடுக்கப்பட்டது. வாந்தியால் உணவு உண்ண முடியாத தருணங்களில் போசாக்குள்ள நீராகாரம் கொடுக்கப்பட்டது. உண்ண முடிந்ததும் வழமையான உணவுகளைக் கொடுக்கப்படது. இலகுவில் சமிபாடடையக் கூடிய மோல்ட், கஞ்சி போன்றவற்றைக் கொடுத்தார்கள்.

p076b

இவற்றால் வயிற்றோட்டத்தால் ஏற்பட்ட மரணங்கள் குறைந்தன. இருந்தபோதும் இலங்கையில் வயிற்றோட்ட நோய் இன்னமும் முற்றாக மறைந்துவிடவில்லை. உலகளாவிய ரீதியில் 1.6 மில்லியன் இறப்புகள் இந்நோயால் மட்டும் 2002 ல் நிகழ்ந்திருக்கின்றன. அதே வேளை இரண்டு பில்லியன் பேர் வருடாந்தம் இதனால் பீடிக்கப்படுகிறார்கள். போஷாக்குக் குறைந்த பிள்ளைகள் இதனால் பீடிக்கப்படுவதும் மரணமுறுவதும் அதிகமாக இருக்கிறது.

வயிற்றோட்டம் என்றால் என்ன?

ஒரு நாளுக்கு மூன்று தடவைகளுக்கு மேல் தண்ணீர்போலவோ அல்லது இளக்கமாக மலம் வெளியேறுவதையே வயிற்றோட்டம் என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள்.

dd038

பக்றீரியா, பங்கஸ், அல்லது ஒட்டுண்ணிக் கிருமிகள் உணவுக் கால்வாயில் தொற்றுவதாலேயே இது ஏற்படுகிறது.

பெரும்பாலும் ரொட்டோ வைரஸ் தொற்றுவதாலேயே ஏற்படுகிறது. குழந்தைகளில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இப்பொழுது இதற்கு எதிரான தடுப்பு மருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இலங்கையிலும் கிடைக்கிறது.

மாசடைந்த உணவுகள் மூலம் பக்றீரியா மற்றும் ஒட்டுண்ணிக் கிருமிகள் தொற்றுவதாலும் ஏற்படுகிறது.

காலத்திற்கு காலம் இதனால் பாதிக்கப்படாத மனிதர்களே இருக்க முடியாது.

இருந்தபோதும் சிகிச்சையின்றியே குணமாகக் கூடியது. பெரியவர்களில் பொதுவாக 2-4 நாட்களுக்குள் தானாகவே குணமாகிவிடும். குழந்தைகளில் சற்று அதிக காலம் 5-7 நாட்கள் எடுக்கலாம். சற்றுக் காலம் எடுத்தாலும் கவலைப்பட வேண்டிய நோயில்லை. ஆனால் மேற் கூறியதுபோல நீரிழப்பு நிலை ஏற்படாமல் காப்பது அவசியம்.

வேறு வகைகள்

மேற்கூறிய வைரஸ் கிருமியால் ஏற்படும் வழமையான வயிற்றோட்டம் தவிர வேறு பல வயிற்றோட்டங்களும் உள்ளன.

வயிற்றுழைவு சற்று வித்தியாசமானது. இதை dysentery என்பார்கள். இதன்போது மலம் பொதுவாக தண்ணீர்த்தன்மையாக அதிகளவில் வெளியேறுவதில்லை. குறைந்த அளவில் ஆனால் அடிக்கடி வயிற்றை முறுக்கிக் கொண்டு இரத்தம் அல்லது சளி கலந்து போகும். இது பெரும்பாலும்

Escherichia coli (E. coli), salmonella and shigella போன்ற பக்றீரியா கிருமிகளால் தொற்றும்.

இதில் சல்மனா பக்றீரியா தொற்று முக்கியமானது. காய்ச்சல், தலையிடி, ஓங்காளம், வாந்தி, வயிற்று வலி போனற்வற்றுடன் வயிற்றோட்டம் ஏற்படும். கோழியிறைச்சி, முடடை, ஏனைய இறைச்சி வகைகள், சில வேளைகளில் சொக்கலேட் மூலமும் பரவுவதுண்டு.

கொலாரா. ஒரு காலத்தில் கடுமையான பீதியைக் கிழப்பிய கொலாரா இப்பொழுது எமது நாட்டில் காணப்படுவதில்லை. ஆயினும் வேறு நாடுகளில் இன்னமும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

Vibrio cholerae என்ற பக்றீரியாவில் பரவும். வயிற்று வலியுடன் வாந்தியும் கடுமையான வயிற்றோட்டம் இதன் அறிகுறியாகும். மிக வேகமாகப் பரவி சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடுமையான நீரிழப்பு நிலையாலேயே இறப்புகள் அதிகம் ஏற்படும்.

நாட்பட்ட வயிற்றோட்டங்கள்

பெரும்பாலான வயிற்றோட்டங்கள் சில நாட்களில் குணமாகும். என்றாலும் வேறு நோய்களின் அறிகுறியாக வெளிப்படும் வயிற்றோட்டங்கள் நீண்ட நாட்களுக்குத் தொடரும்.

உதாரணமாக எரிச்சலடையும் குடல் irritable bowel syndrome, Crohn’s disease,  lactose intolerance, Ulcerative colitis போன்ற பலவும் அடங்கும்.
இவற்றைத் தவிர நீரிழிவு, உணவுக் கால்வாய் புற்றுநோய்கள் போன்றவையும் வயிற்றோட்டங்களை ஏற்படுத்தலாம்.

இத்தகைய தீவிர நோய்களால் மட்டுமின்றி பதகளிப்பு மனப் பதற்றம் போன்ற உளவியல் காரணங்களாலும் பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு. காலையில் வேலைக்கு அல்லது பாடசாலைக்கு புறப்படத் தயாராகும்போது அடிக்கடி டொயிலட் செல்வர்களும் இதில் அடங்குவர்.

அதீத மதுபானம், அதிகமாக கோப்பி அருந்துவதும் சிலரில் இப்பிரச்சனையைத் தோற்றுவிப்பதுண்டு.

உணவு ஒவ்வாமைகளாலும் food allergy பலருக்கு வயிற்றோட்டம் ஏற்படுவதுண்டு.

புற்று நோய்களுக்கான ரேடியம் சிகிச்சை பலருக்கு வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும். உணவுக் கால்வாயின் கலங்கள் அம்மருந்துகளால் சேதமடைவதாலேயே இது நிகழும்;. இது தற்காலிகமானது. சில காலத்தில் பழைய ஆரோக்கியம் திரும்பும்.

பலவகை மருந்துகளும் வயிற்றோட்டத்தை ஏற்படுத்துலாம். அன்ரிபயோடிக் மருந்துகள், வலிநிவாரணிகள், வயிற்று எரிவிற்கு உபயோகிக்கும் மக்னீசியம் கலந்த மருந்துகள், புற்றுநோய்கான மருந்துகள், என பலவகையான மருந்துகள் சிலரில் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய நாட்பட்ட வயிற்றோட்டங்களுக்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து அதனை நீக்க நல்ல குணமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

வயிற்றோட்டம், வயிற்றுழைவு தற்போது என்ன?

0.0.0.0.0.0

Read Full Post »