Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘விமர்சனம்’

மிகுந்த வெக்கமாயிற்று. இலக்கிய வனாந்திரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறேனோ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

20180707_162212இதுவரை இந்த சிறுகதைத் தொகுதியை படிக்காதது மட்டுமின்றி அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இல்லையே என்று மனம் ஆதங்கப்பட்டது.

பிரண்டையாறு ஒரு சிறுகதைத் தொகுதி. 12 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தீவகத்தில் பிறந்த ஒருவன் போரின் வலிய அலைகளால் தூக்கி வீசப்பட்டு நிரக்கதியாகி சொந்த வீட்டை இழந்து சொந்த மண்ணிலிருந்து நீங்கி அகதி முத்திரை குத்தப்பட்டு காற்றின் திசைகளில் அள்ளுண்டு தன் தலைசாய்த்து கண்மூடி ஆறுதல்தேட இடம் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடி அலைந்த நினைவுகளை பதிவு செய்யும் தொகுதி இது என்று சொல்லலாம்.

‘அவனது பயணங்கள் எல்லாம் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் முடிந்தவையாகிப் போயின. தான் பயணிப்பதாகவே பிறந்ததாகவும் தனது பயணத்திற்கு தரிப்பிடங்கள் போதுமானவையாக இல்லை எனவும் நினைத்துக் கொள்கிறான்’ இதை அவரது வாக்குமூலமாகவும் கொள்ளலாம்.

கடந்த காலத்தில் யாழ் மண்ணிலும் வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் இவ்வாறு சிதறாதவர்கள் யாரும் உண்டா?. எங்கள் ஒவ்வொருவருக்கும் கூட அத்தகைய அனுபவங்களுக்கு குறைவில்லை. இடப்பெயர்வுகள் பற்றி எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது மெலிஞ்சிமுத்தனின் சிறுகதைகள் பேசப்பட வேண்டி இருப்பது ஏன்?

அது கதையின் உள்ளடக்கத்தில் அல்ல. அது சொல்லப்பட்ட முறையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. பேசப்பட வேண்டியதாக போற்றப்பட வேண்டியதாக என்று கூட சொல்லலாம். மொழியை சாணை தீட்டி உணர்வுகளுக்குள் முக்குளிக்க வைக்கும் அற்புதமான படைப்பாளிகளான கதை சொல்லிகள் எம்மிடையே இருக்கிறார்கள். ஆ.முத்துலிங்கம், ஆ.சி.கந்தராஜா, மு.பொ, உமா வரதரதராஜன் என அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவர் கதை சொல்லி அல்ல. மேம்போக்காக படிப்பவர்களுக்கு அவற்றிற்குள் கதை இருப்பதை கண்டு கொள்ளவது கூட சிரமமாக இருக்கலாம். காரணம் அவரது படைப்புகளிலுள்ள கதை அம்சம் பெரும்பாலும் குறியீடாகவே சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு முதற்கதை ‘புலம்பெயரும் சாமங்களின் கதைளூ’ இவ்வாறு முடிகிறது. ‘பகல் நாய் வீணியூற்றியபடியே சுருண்டு படுத்துக் கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் காத்திருக்கிறது ‘மறுகரை’.’. மேலோட்டமாகப் பாரக்கும்போது. வெறும் காட்சிப் பதிவு போல தென்படுகிறது.

ஆனால் தொண்ணுறுகளின் முற்கூறுகளில் யாழ் மண்ணிலிருந்து பெருநிலப்பரப்பிற்கு போவதானால் கிளாலி கடற்பரப்பை கடக்க வேண்டும் அந்த திகிலூட்டும் பயணங்களின் பின்னணியை நினைகூரும்போது ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்லாமல் சொல்லப்படுகின்றன. மெலிஞ்சி முத்தனும் சொல்கிறார். இரவில் படகுகளில் மக்கள் முண்டியடித்து பயணப்படுவதும், படகுகள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து செல்லாது இருக்க கயிறுகளால் பிணைக்கப்படுவதும், கடற்படைக்கு தெரியாதிருக்க வெளிச்சமின்றி படகுகுள் பயணிப்பதும், எப்படியோ மோம்பம் பிடித்த கடற்படை சுட்டுத்தள்ளுவதும், சனங்கள் மரணிப்பதும், பிணங்கள் மிதப்பதும், இவற்றெயெல்லாம் அறிந்திருந்தும் மற்றவர்கள் இறப்புக்களை மறந்து மரணதேவதை கிளாளிக் கடலில் காத்திருக்கிறான் என்பதை மனதில் ஆழப் புதைத்துவிட்டு அடுத்த நாளும் மக்கள் பிரயாணத்திற்கு முண்டியடிப்பதும்…..

கதையை வாசித்துவிட்டு கண்ணை மூடிப்படுத்துக்கிடந்தால் கதைகதையாக விரியும். நானும் அவ்வாறு பயணப்பட்டிருந்ததால் அணுவணுவாக கதையை அர்த்தப்படுத்திப் படிக்க முடிந்தது.

அவரது படைப்பாக்க முறையின் மற்றொரு முக்கிய அம்சம், தன் ஆழ்மனத்து எண்ணங்களை, தாவித் தாவிச் செல்லும் சிந்தனை ஓட்டங்களை சொல்லோவியமாக்குவதே ஆகும். தன ஆழ் மனத்தில் எழும் நினைவுகளை எண்ணங்களை சிந்தனைகளை ஒரு வரையறைக்குள் ஒழுங்குபடுத்தி சிறுகதையாகப் படைக்கிறார். அந்த எண்ண ஓட்டங்களுடன் இணைந்து பயணிக்கும் வாசகனுக்கு தன்னையும் அங்கு இனங்காண முடியும். புதிய சாளரங்களை வாசகனுக்கு திறக்க வைக்கும். தன்னைப் பற்றி மட்டுமின்றி இந்தச் சமூகம் பற்றி, இந்த தேசம் பற்றி தன்னைச் சுற்றி நடப்பவற்றின் உள்ளரசியல் பற்றி பல உண்மைகள் வெளிச்சமாகும்.

இந்த மாற்றுப் பாதையே மெலிஞ்சிமுத்தனது படைப்புகளின் ஆணிவேராக இருப்பதாகப் படுகிறது. கதை எங்கோ தொடங்கி வேறெங்கோ இழுபட்டு நகர்வதாகத் தோன்றினாலும் பூடகமாக தன் கருத்தை வெளியடவே செய்கிறது.

உதாரணமாக கொழுக்கட்டை கள்வர்கள் கதையைச் சொல்லலாம். சவீனா ரீச்சர் வீட்டில் ஒவ்வொரு பெரிய வெள்ளியும் ருசியான கொழுக்கட்டைகள் களவு போவது பற்றி சுவாரஸ்மான கதை சொல்லப்படுகிறது. கதை இப்படி முடிகிறது. ‘கொழுக்கட்டை கள்வர்களின் சடலங்களை ஓலைப் பாய்களாலும் சாக்குகளாலும் சுற்றிப் புதைத்தார்கள். டக்ளஸ் மட்டும் ‘உயிர்தெழுந்த ஞாயிறைக்’ கொண்டாடிக்கொண்டு கொழும்பில் இருந்தான்’; (பக் 16) எவ்வளவு அழகாக முடித்திருக்கிறார். சொல்லமால் சொல்லப்பட்டவை ஏராளம் தொக்கி நிற்கிறது இந்த ஒரு வசனத்தில்.

போரினதும் அதன் அவலங்களதும் பார்வையாளனாகவும் பாதிப்புக்கு ஆளானவனாகவும் இருக்கும் இந்தப் படைப்பாளி வீர வசனங்கள் பேசவோ இலட்சியங்கள் முழங்கவோ இல்லை. அரசாங்கத்தையும் மாற்று இயக்கங்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுக்கவும் இல்லை. நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி சொல்கிறார். அதனை அர்த்தப்படுத்தும் பணியை வாசகனிடமே விட்டுச் செல்கிறார்.

இல்ஹாம் ஒரு அற்புதமான கதை. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதின் பின்னணியில் பேசப்படுகிறது. அற்புதமான முடிவு. முழு தமிழ் சமூகமுமே குற்ற உணர்வு கொள்ள வேண்டியதை சொல்லாமல் சொல்கிறது.
மீனவக் கிராமம் அவர் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது. அவர்கள் வாழ்வை மொழியை அவர்களது பாடுகளை படைப்புகளில் விரித்துச் செல்கிறார். அங்கு சமூக ஒடுக்குமுறை எவ்வாறு இருந்தது என்பதை சில வரிகளில் அவரால் சொல்லிவிட முடிகிறது.

‘அவருக்கு (தந்தைக்கு) எப்போதுமே தன் முதுகில் மீன் செதில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணர்வே இருந்தது.’

‘நான் பள்ளிக் கூடம்போனபோது என்னில் மீன் வெடுக்கு மணக்கிறதென்று பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சொன்னார்கள். நான் அழுதபோது கூட என் கண்ணீரிர் வெடுக்கு மணத்தபடியே இருந்தது. பின்னர் நான் பள்ளிக்கூடத்தையே மறந்து போனேன்’; மனதை நொருங்க வைக்கும் வரிகள்.

ரசித்ததில் மற்றொன்று. சமாதான காலம் ஒன்று பற்றியது ….. ‘கொழும்பில் இருந்து வந்த பெண்கள் கல்லு வீதிகளில் குதிக்கால் உணர்ந்த பாதணிகளோடு நொடுக்கு நொடுக்கு என்று இந்தரப்பட்டு நடந்தார்கள். வுன்னியில் இருந்து வந்தவர்கள் போர்த்து மூடீக்கொண்டு திரிந்தார்கள். யுhழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களோ ஏதோ மாய முடிச்சுகளை சோட்டித் துண்டுகளில் முடிந்து திரிந்தார்கள்.

20180707_1622291

‘யாராவது என்னைத் தேடலாம். ‘நாடு கடந்த அரசு பற்றி’ பேச நண்பர்கள் என்னையும் அழைக்கலாம். ஏன் பிரியமான வாசகர்களே, உங்களிடமிருந்து இப்பொழுது பிரிந்து செல்கிறேன். ஏனக்கு வேண்டியது தனிமை. பிணங்களையும் புணரும் மனநிலை கொண்ட மனிதர்களை இந்த நூற்றாண்டு கொண்டிருக்கிறது என்றால்…’ (பக்கம் 64) இதுதான் அவரது படைப்புகளின் அடிநாதமாக வீசிககொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.

வித்தியாசமான பேச்சுத் தமிழ். தீவகத்திற்கே உரியது. அழகாகக் கையாண்டிருக்கிறார். கவிதை மொழியும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கிறது.

இறுதியில் வரும் இரு கதைகள் தப்பிப் பிறந்த வேர்கள் போல இந்த தொகுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றை வாசிக்கும் கட்டுரைகளை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது. துன் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரத்தில் எழுதியதாகவே படுகிறது.

அவரது இரு கவிதைத் தொகுதிகளும் அத்தாங்கு என்ற நாவலும் வெளிவந்ததாக அறிகிறேன். ஆனால் அவை கைக்கெட்டவில்லை.

கருப்புப் பிரதிகள் வெளியீடாக 2011 மார்களியில் வெளிவந்த அருமையான நூல். இதுவரை படிக்காதது கவலை அளித்தது. நீங்களும் அதே தவற்றைச் செய்யாதீர்கள்.

இந்த நூலின் பிரதியை மட்டக்களப்பு நண்பர் திலீப்குமார் கணேசன் மூலம் பெற்றேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞ்சிகையில் வெளியான கட்டுரை

0.00.0

Read Full Post »

எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான்.
 Palaya Vethak kovil_0001_NEW
ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது.
மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது.
நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது.
அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.
இருந்தபோதும் 1600 ஆண்டுகளின் போது அல்வாய் வடக்கு வியாபாரிமூலை வீரபத்திரர் ஆலயத்தில் பிராமண ஐயர்கள் இருந்தார்கள் என்ற தகவலில் ஐயம் இருக்கிறது.
நாவலை படித்துச் செல்லும்போது, அது நிகழ் சரித்திரத்தின் வாழ்வியல் பிரதி பிம்பம் என்றதான உணர்வை ஏற்படுத்துகிறது. அந்நியர் ஆட்சி, வேற்றுப் படைகளின் அட்டகாசம், இடப் பெயர்வு போன்றவை நாம் அனுபவித்து உணர்ந்தவை. எமது மூதாதையருக்கும் அதே விதமான அனுபவங்கள் கிட்டின என்பது கவலையைத் தந்தாலும் அவர்களது அடிபணியாத தன்மை பெருமிதம் ஊட்டுகிறது.
 Palaya Vethak kovil_0002_NEW-001
பல சமூகங்களின் பிரதிநிதிகள் அந்நிய நாட்டு மனிதர் போன்ற பல்வேறுபட்ட பாத்திரங்கள் இருந்தபோதும் இன மத சாதி ரீதியான காழ்ப்புணர்வை ஆசிரியர் எந்த இடத்திலும் காட்டவில்லை. இது அவரது பக்கம் சாராத நடுநிலைப் போக்கிற்கு உதாரணமாக இருக்கிறது. மிகவும் நடுநிலையோடும் சமூகங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தாதவாறும் நல்லியக்கம் மற்றும் சௌயன்யத்தை மேம்படுத்தும் வகையான சித்திரிப்பு நாவலின் பலமாக இருக்கிறது.
பள்ளர் சுடுகாடு, கூத்தாடும் பற்றை, கற்கோட்டை(சக்கோட்டை) போன்ற இடப் பெயர்கள் வந்ததற்கான காரணங்களை கதையோடு கதையாக நகர்த்திச் செல்கிறார்.
நானும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் சம்பவங்கள் நடக்கும் இடங்களான சக்கோட்டை, நாவலடி. போன்றவை நடமாடித் திரிந்த இடங்கள். அவற்றினை மையமாக வைத்து கதை நடக்கும் ஏனைய இடங்களையும் தெளிவாக இனங்காண முடிந்தது. பிரதேச வரைபடத்தைத் தந்தமை பாராட்டத்தக்கது.
பல்லி சொல்லுதல் ஆந்தை அலறுதல் போன்றவற்றை துர்க்குறியாகக் கொள்ளும் நம்பிக்கை அன்று இருந்ததை கதையில் அறிகிறோம். இன்றும் அந் நம்பிக்கைகள் இருப்பதால் அது பற்றி சொல்வதில் தவறில்லை. இருந்தபோதும் பல்லி சொல்லுதல் என்பதை மூடநம்பிக்கையாகக் கொள்ளாது அதற்கு வலு சேர்ப்பது போல கதையை நகர்த்துவது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
மாவீரர் என்ற சொல் நாவலின் சொல்லோட்டத்துடன் இசைந்து வரவில்லை.  400 வருடங்களுக்கு முன்னான சரித்திரத்தை பேசும் நாவலில் இச்சொல்லைப் பயன்படுத்தியமை நிகழ் கால வரலாற்றை ஞாபகப்படுத்துவதற்காக வலிந்து புகுத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
மிக தெளிவானதும் வெளிப்படையும் ஆனது ஆசிரியரின் முன்னுரை. கதையைப் படித்து முடித்த பின்னரே வாசியுங்கள். பல சந்தேகங்களுக்கும் முடிச்சுகளும் திறவுகோல் போல அமைந்திருக்கிறது.
அட்டைப்படம் சிதைந்து கிடக்கும் பழைய வேதக்கோயிலின் புகைப்படமாகும்.
புதிய எழுத்தளார் என்ற உணர்வு ஏற்படாதவாறு தங்குதடையின்றி ஓடும் நீரோட்டம் போன்ற நடை. குழப்பத்தை ஏற்படுத்தாத சம்பவக் கோர்வைகள். ஆயினும் நடை சற்று மெருகேற இடம் உண்டு. இரண்டாம் மூன்றாம் பாகங்கள் வர இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் மேலும் செப்பனிடப்படும் என நம்பலாம்.
இடம் பெயர்ந்து பின் சமாதானம் என்ற நம்பிக்கையில் பலதடவைகள் மீண்டும் ஊர் வந்தவன் என்ற ரீதியில் நாவலின் இறுதியில் முருகவாணர் சொல்லும் சுதந்திரம் பற்றிய வார்த்தைகள் மரத்தில் ஆணியாகப் பதிந்து நிற்கின்றன.
Palaya Vethak kovil_0002_NEW
மொத்தத்தில் நமது சரித்திரத்திலும் பழைய பண்பாட்டுக் கோலங்களிலும் அக்கறையுள்ளவர்கள் தப்ப விடக் கூடாத நாவல் இது. ஆசிரியர் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) அவர்களது சிறப்பான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
எனது மறந்துபோகாத சில புளக்கில் (14.08.2014) வெளியான கட்டுரை
நூல் :- பழைய வேதக்கோயில்
நூலாசிரியர் :- கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்)
முகவரி :- ஆனந்தகானம், ஆவரங்கால், புத்தூர்
விலை :- ரூபா 300
எம்.கே.முருகானந்தன்.
0.00.0

 

Read Full Post »

மனதோடு பேசுதல் மனதிற்கு இனியது. மன நிறைவைத் தருவது. நினைவுகளை மீட்பது. மற்றவர் மனம் நோக வைக்காதது. அதே நேரம் மற்றவர்களால் இடையூறு செய்ய முடியாததும் கூட. அத்தோடு வாழ்வின் கடந்த அலைகளில் மீண்டும் நீந்திச் செல்வது போன்ற இனிய சுகம் வேறு எதிலுமே கிட்டாது.

20140919_122517-001

நடா சுப்பிரமணியம் தன் மனதோடு தான் பேசியவற்றை முதலில் முகப் புத்தகத்திலும் இப்பொழுது நூல் ஊடாக சமூகப் பரந்த வெளியில் சஞ்சரிக்க விட்டிருக்கிறார்.

இவரது கவிதைகளின் முக்கிய அம்சம் அவை மென்மையானவையாக இருப்பதுதான். ஆரவாரம், வீர முழக்கங்கள், தூற்றல்கள், நச்சரிப்பு எச்சரிப்பு போன்ற தீவிரங்கள் ஏதுமின்றி அமைதியான நீரோட்டம் போல தனது உணர்வுகளையும், இழந்த வாழ்வின் நினைவுகளைச் சுமப்பவையாகவும் அவை இருக்கின்றன.

‘.. வானில் வட்டமிட்டு பின்

கரணமடிக்கும் பட்டம் என் மனம்

நூலின் நுனியோ..

உன் நினைவுகளின் பிடியில் ….’

இவரது கவிதைகள் சிறிய சம்பவங்களின் கோவை போல பல தருணங்களில் அமைந்திருக்கும். இதனால் இதை வாசிக்கும் பலருக்கு அவை தமது வாழ்வின் பிரதிபலிப்புகள் போலவும் தோன்றலாம்.

“கவிதைகளில் சொல்லப்பட்ட சில நிகழ்வுகளும், நிகழ்ந்த இடங்களும் என் பள்ளிக் காலத்தை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. சென்ரல் தியேட்டர், வல்லிபுர ஆழ்வார் தீர்த்தத் திருவிழா போன்றவை நாம் வாழ்ந்த மண்ணின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வுகள். படிப்பவர்களுக்கும் இதே உணர்வு உள்ளோங்கும்” என்கிறார் மனோ தத்துவ நிபுணரான டாக்டர் வாசுகி மதிவாணன் இந்த நூலுக்கான தனது அணிந்துரையில்.

‘.. வெளிச்சத்தைத்

தொலைத்துவிட்ட

எங்கள் வெளிச்ச வீட்டின் மீது

விண்மீன்களின்

வெளிச்சம்

விழ ஆரம்பித்திருந்தது …..’

பருத்தித்துறை வெளிச்ச வீடு எவ்வாறு அவர் வாழ்வில் கலந்ததுவோ, அதுபோலவே அங்கு வாழ்ந்த எங்கள் ஒவ்வொருவருடனும் நினைவில் பயணிக்கவே செய்கிறது. இது போல ஏராளம் …

“நடாவின் மனதோடு பேசுதல் தொகுதியின் கவிதைகள் எதைப் பற்றிப் பேசினாலும் நட்பினையே முதன்மைப்படுத்துகிறது..” என்கிறார் ரவி கந்தையா தனது வாழ்த்துரையில்.

‘..பள்ளிப் புத்தகத்திற்குள்

மயிலிறகை வைத்துவிட்டு

நிமிடத்திற்கு நூறு தடவை

குட்டி போட்டிருக்கிறதா

என்று எட்டி எட்டி பார்த்திருக்கிறோம்.’

உண்மைதான் நட்புகளின் நிழல் கவிதைத் தொகுப்பு எங்கும் தொடர்வதைக் காண்கிறோம்.

நட்பு முதன்மைப்பட்டிருந்தாலும் அன்பு, காதல், நட்பு, பிரிவு, ஏக்கம், போன்ற உணர்வுகளையும் கூடவே பேசுகின்றன.

‘இந்தக் கவிதைத் தெர்கப்பு நெடுகிலும் வலிகளும், குதூகலமும், மகிழ்வும், துயரமும் காதலாகவும், நட்பாகவும் விடுதலைக்கு ஏங்கும் மனத்தோடு சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறார் ஈஸ்வர சந்தானமூர்த்தி தனது பதிப்புரையில்.

அதே கருத்தை இத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கவிஞர் மேத்தா ‘பிறந்த மண்ணையும் பிரியத்திற்குரிய மனிதர்களையும் பிரிந்து வாழும் ஏக்கம் – உணவில் கலந்த உப்பைப் போல உணர்வில் கலந்து நிற்கிறது.’ எனத் தன் மொழியில் சொல்லுகிறார்.

“எத்தனை

இனிமையான

நாட்கள் அவை ..!

இன்றும்

செவிகளில்

எதிரொலித்து வரும்…”

ஒவ்வொருவரும் தம் வாழ்வின் கடந்து வந்த இனிய காலங்களில் உவகையுறவே செய்வர்.

‘காற்றின்

சீண்டல்களில்

சிணுங்கும் தென்னைகள்..’

ஆம் நிச்சமாக  தென்னையோடும் பனையோடும் கூடவே வாழ்ந்த வாழ்வு இனிமையானதுதான்.

ஆனால் வாழ்க்கையானது இறந்த காலத்துடன் நிறைவுறும் படைப்பாக முற்றுப் புள்ளியிடப்படுவது அல்ல. அது நிகழ்காலத்திலும் தொடர்கிறது. எதிர் காலத்திலும் புதிய காட்சிகளுடன் திரை விலகக் காத்திருக்கிறது.

‘செல்வம்’ என்ற புனை பெயரிற்குள் மறைந்திருக்கும் நடா சுப்பிரமணியம் தனது இனிய கவி மொழியில் அவற்றையெல்லாம் சொல்ல வேண்டும். வாழ்ந்த நாடு மட்டுமல்லாது இப்பொழுது வாழும் மண்ணும் அவரது சொந்தத் தேசம்தான்.

அந்தப் புதிய சூழலில் அவர் இணைவதில் ஏற்பட்ட சவால்களும், அங்கு பெற்ற வெற்றிகளும், கிட்டிய புதிய உறவுகளும், அவற்றுடனான ஒட்டும் ஒட்டாத் தன்மைகளும் படைப்புகளில் வெளிவர வேண்டும். அவை வாசகர்களுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

அதேபோல அவரது படைப்பு வெளியையும் பட்டை தீட்டி புதுப் புதுப் மெருகுகளுடன் வரக் கைகொடுக்கும் என நம்புகிறேன்.

‘.. கற்பாறையினை

பிளந்தவாறு..

பசும் புற்களே துளிர்வ்pடும்போது

எமது மனங்களில்

நட்பு துளிர் விட்டது

ஆச்சரியமானதல்ல…..’

என்ற அவரது வரிகளே, சொர்க்கங்கள் எங்கும் திறக்கலாம் எமது மனது மட்டும் பரந்த வெளிகளில் சிறைவிரிக்கத் தயாராக இருந்தால் என்பதற்கு சான்றாக அமைகிறது.

வாழ்த்துக்கள் நடா.

20140919_122621-001

நூல் :- மனதோடு பேசுதல்

நூலாசிரியர் :- செல்வன்- நடா சுப்பரமணியம்

நூலாசிரியர் தொர்பு :- 0044 7722589359. நுஅயடை :- யெனய2202ளூலயாழழ.உழஅ

பக்கங்கள் :- 152

விலை :- இந்திய ரூபா 100.00

வெளியீடு :- மகிழினி பதிப்பகம்

0.0.0.0.0

 

Read Full Post »

பெயர் சொல்லக் கூடிய ஈழத்துத் தமிழ் சஞ்சிகைகளில் இளையதாக இருந்தபோதும் தரமானதாக வெளிவருவது ஜீவநதி என்றே சொல்லலாம். வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிற சூழ்நிலையிலும் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.

சித்திரை 2014 அதன் 64 வது இதழாகும். வாசிப்பனுபவம் பயனுள்ளதாகவும் இதமளிப்பதாகவும் இருந்தது.

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் நூல் விமர்சனம் எனப் பலவும் இந்த இதழை அலங்கரித்தாலும் காத்திரமானதாகவும் பயனுள்ளதாகவும் பல புதிய தகவல்களை அறியத்தருவதாகவும் அமைத்திருப்பவை கட்டுரைகள் எனத் துணிந்து சொல்லலாம்.

சிக்மண்ட் பிராய்ட் பற்றிய ஈழத்துக் கவியின் கட்டுரை மிக அருமையாக இருந்தது. ‘உளவியல் பகுப்பாய்வின் தந்தை’ எனப் போற்றப்பட்டவர் அவர். உணர்வு மனம் ஆழ்மனம் என மனித மனத்தைப் பிரித்த அவர் உளவியல் நோய்களுக்கு அடிப்படை பாலியலே என்று நம்பினார். அக் கருத்துக்களில் பல மாற்றங்கள் வந்துவிட்டபோதும் மனத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய முனைந்த அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

ஆனால் இக்கட்டுரையில் ஈழத்துக் கவி அவரது பாலியல் கருத்துகளுக்கு அப்பால் போர் பற்றிய அவதானிப்புகளுக்கே முனைப்பு கொடுத்து எழுதியிருகக்கிறார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போர்ச்சூழலில் அழுந்திய எங்களுக்கு போர் ஏன் என்பது முதல் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி வரையாக பல புதிய தரிசனங்களைத் தந்திருக்க்pறார்.

கெகிறாவ ஸீலைஹா வின் நெல்சன் மண்டேலா பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மண்டேலா பற்றிய பல கட்டுரைகள் அவரது மறைவை ஒட்டி அண்மையில் வெளிவந்திருந்தபோதும் இவரது கட்டுரை தனித்துவமானது. அவரது சொந்த வாழ்வு. பொதுவாழ்விற்கான அவரது தியாகங்கள், அத்தகைய வாழ்வு காரணமாக இழக்க நேர்ந்த உணர்வுபூர்வமான விடங்கள், மன வைராக்கியம், அவரது சாதனைகள் எனப் பலதரப்படப் பேசுகிறது. இருந்தபோதும் அவருள் மறைந்திருந்த அன்பு நெஞ்சம் பற்றிய குறிப்புகள் நெகிழவைப்பனவையாக இருந்தது.

மஹாத்மா காந்தியின் பின்னர் அன்பு அஹிம்சை சுயநலம் பேணாமை, மன்னித்தல், தன் தவறுகளையும் பகிரங்கமாக ஏற்கவும் மன்னிப்பு கேட்கவும் தயங்காத ஒரே ஒரு தலைவராக இருந்திருக்கிறார்.

இதே கட்டுரையில் ‘விடுதலையை நோக்கிய நீண்ட நடை’ என்ற அவரது சுயசரிதை நூலிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைச் சிறையில் வாடிய அவரது அக உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக இருந்தது.

இருந்தபோதும் இந்தக் கட்டுரையை அவர் பற்றிய பகுதியை ஒரு இதழிலும், அவரது எழுத்தை மற்றொரு இதழிலுமாக இரு வௌ;வேறு தனித்தனிக் கட்டுரைகளாக வெளியிட்டிருந்தால் கூடிய அவதானிப்பைப் பெற்றிருக்கும் என எண்ணத் தோன்றியது.

ஒரு மருத்துவன் என்ற ரீதியிலும் முதுமையின் வாசற்படியில் நிற்பவன் என்ற ரீதியிலும் முருகபூபதியின் நடைப்பயிற்சிக் கட்டுரையை இரசித்துப்படித்தேன். அவரைப்போலவே சின்னஞ்சிறு வயதில் ரயிலில் சென்று, பெயர் தெரியா ஊரில் இறங்கி இருள் கவ்வும் நேரம் யானை லத்திகளைக் கண்டு பயந்து கொண்டே நீண்டதூரம் நடந்து கதிர்காமத்தை அடைந்தது ஞாபகத்திற்கு வந்தது. செல்லக் கதிர்காமம், கதிரமலை யாவும் அக்காலத்தில் பொடிநடையில்தான் முடிந்தது.

சுவார்ஸமான கட்டுரை. எழுத்தாளனாக மட்டுமின்றி பத்திகையாளாகவும் இருந்தததால் மூன்று பக்கக் கட்டுரையை ஒரே மூச்சில் படிக்க வைக்கும்படியான நடை. ‘மனைவியையும் பேச்சுத் துணைக்கு அழைத்துச் சென்றால் என்ன நடக்கும்’ என்பதை ஒரு வரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

நீங்களே மீண்டும் படித்துப் பாருங்கள்.

இருந்தபோதும் இன்று மனிதர்களின் ஆயுள் குறைந்துவிட்டது என்ற அவரது கூற்றோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அன்றைய சராசரி ஆயுள் 50, 60தைத் தாண்ட முடியாதிருந்தது. ஆனால் இன்று சராசரி ஆயுள் 75 தாண்டிவிட்டது.  80, 90 வயதான பலரைச் நித்தமும் காண்கிறோம். சதம் அடித்தவர்களைக் காண்பதென்பது அரிதானது அல்ல என்றாகிவிட்டது.

அ.யேசுராசாவின் கட்டுரை தமிழக புத்தக்திருவிழா பற்றிய அவரது நேரடி அனுபவத்தை புகைப்படங்களுடன் சிறப்பாகச் சொல்கிறது. புத்தகத் திருவிழாவில் ரவி தமிழ்வாணனின் திருவிளையாடலையும் நாசூக்காகச் சொல்லியிருந்தார்.

‘1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை’ என்ற அம்மன்கிளி முருகதாஸ் அவர்களின் தொடர் பாரதியின் பங்களிப்பு பற்றிச் சொல்கிறது. அருமையான உதாரணங்களுடன் கூடிய உபயோகமான படைப்பாக இருந்தது.

‘கம்பனை நகலெடுத்த திரையிசைப் பாடலாசிரியர்கள்’ என்ற இ.சு.முரளீதரனின் கட்டுரை மிகுந்த தேடலுடன் எழுதப்பட்டது. நாங்கள் இரசித்த பல திரைப்பாடல் வரிகளுக்கு, கம்பனின் கற்பனை வளம் மூலமாக இருந்த செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது.

சிறுகதைகள் இரண்டு. மலையகம் சார்ந்தது ஒன்று. யாழ்மண்ணும் வெளிநாடும் கலந்தது மற்றொன்று. மல்லிகை சி.குமாரின் ‘பாலங்கள்’ கதையானது நல்லவர் போல கதையளந்து மலையக தொழிலாளர்களை கொள்ளையடிக்கும் யாழ்ப்பாணத்து முதலாளியின் சாதித் திமிர் பற்றிப் பேசுகிறது. முதாலாளிக்கு எதிராகவும் சாதீயத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கம் இணைந்து குரல் எழுப்புகிறது.

வி.ஜீவகுமாரனின் ‘நான் அவன் இல்லை’ எதையும் அழுத்தித் தெளிவித்து போதனை செய்யும் கதையல்ல. காதலி இவனை ஏமாற்றி பணக்காரனுக்கு தலைநீட்ட அதைத் தாங்க முடியாது வெளிநாடு சென்று உழைத்த போதும் அவளில் குற்றம் காண முடியாதளவு அவளில் உண்மை அன்பு வைத்தவனின் கதை. மிக அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. அவனின் உணர்வுகளை மட்டும் சிறு சிறு சம்பவங்களின் நினைவலைகளாகப் பேசுகிறது. நேர்த்தியான படைப்பு.

“..:செத்தவன் பெண்டிலைக் கட்டினாலும் விட்டவன் பெண்டிலைக் கட்டக்கூடாது..” என்ற வசனமானது பெண் வாயிலிருந்து வந்தபோதும் ஆணாதிக்க சிந்தனையின் மறைமுக வெளிப்பாடாக உறுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

கவிதைகள் பல இருந்தபோதும் பெரும்பாலானவை மனதில் சலனத்தை எழுப்பவில்லை. பிணங்களையும், புதைகுழிகளையும், குண்டு வீச்சுகளையும் இன்னும் எவ்வளவு நாட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இருந்தபோதும் சித்ரா சின்னராஜாவின் கவிதையின் கடைசி வரிகள் என்னைப் பல கோணங்களில் சிந்திக் வைத்தன என்பது என்னவோ உண்மைதான். ‘எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் யாருக்காக இரத்தம் சிந்தினார்கள்’

அரிதாவின் ‘பிரிவு’ கவிதையின் சொல்லாடல் சற்று வித்தியாசமாக பிரிவின் இயல்புத்தன்மை பற்றிப் பேசுகிறது.

கருணாகரனின் கவிதைகள் மூன்று பிரசுரமாகியுள்ளன. அற்புதமாக எழுதப்பட்ட கவிதைகள். அவை எதையும் எமக்குப் போதிக்க முற்படவில்லை. யாரையும் நோகவில்லை. அறம் பாடவில்லை. ஆனால் அற்புதமான சொற்கோர்வைகள், சிறப்பான குறியீடுகள்.

நான் இரசித்த வரிகளில் ஒன்று ‘.. நிழலைப் பெய்யும் மரம் ஒருபோதும் உறங்குவதில்லை நிழலில்’.

மற்றொரு கவிதையில் ‘ .. அவள் உறங்கிக் கொண்டிருந்தாள் மாத்திரையினுள்ளே…’ அருமை.

நான் ஏற்கனவே படித்திருந்த நல்ல நாவலான ‘குடிமைகள்’ பற்றி நூல் விமர்சனப் பகுதியில் ஜனப்பிரியன் எழுதியுள்ளார். முற்போக்கு சிந்தனைகள், சாதீயத்திற்கு எதிரான தீர்க்கமான குரல், பெண்களின் மன உலகின் வௌ;வேறு கோலங்கள் போன்றவற்றை தெணியான் எவ்வாறு தனது நாவலில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை கட்டுரை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். தெணியானின் பாத்திரச் சித்தரிப்புகளையும், மொழிநடையையும் சிலாகித்துள்ளார்.

மொத்தத்தில் ஜீவநதியின் இந்த இதழ் சிறப்பாக அமைந்திருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

 

Read Full Post »

நிசப்தம் எனும் நாத வெள்ளம் ‘சோக்கவுட்’ (The Silence)

கண்கள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத மடையர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகிலிருந்து எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் தெரியாத கலைஞானம் அற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.

 இருந்த போதும் காலையில் விழித்து எழும்போது எழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதை படைப்புகளுடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை மீட்டெடுத்து சுருதி கூட்ட வேண்டியது அவரவரால்தான் முடியும்.

வீதியில் ஓடும் வாகன இரைச்சலும், தொலைவில் கூவிச்செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்து பலரையும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக வைப்பதில்லை.
அடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஓசையும், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஓசையிலும் ஒரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது, எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா?

நித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் குலைக்கினறன என்று எரிச்சல்படத்தான் பலருக்கும் தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாசடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கும் குறைவில்லை. அதில் விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? எவ்வளவு மந்தமான உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவையாக இருக்கும்.

கண்களால் காணும் காட்சிகளாவன, காதில் விழுபவற்றை விட வேகமாக எமது மூளையில் உறைப்பதால்தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ரசிக்கத் தெரியாது வாழ்கிறோம்.

Sokout 1
குர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்களைப் போல கலாஞானசூனியனாக இல்லை. அவனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்வொரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இருக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் அவனை ஈரப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையில் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால் அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்பவன்.

காலையில் இவனது வீட்டுக் கதவை கோபத்தோடு ஓங்கி அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டு சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஓசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது.

பும் பும் பூம்… பும் பும் பூம்…

இசைக்கு அப்பாலும் அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது.

Sokout 2

ஆனாலும் ஒருவளது பிரட் சற்றுக் காய்ந்ததாக இருந்தபோதும் அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.

10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல்  இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரசியாவிற்கு சென்ற தகப்பனிடமிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால் மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.

அவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிக்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கிறான்.

sokout 4

ஆனால் எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாராவது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு வாங்க வேண்டியவனாகிறான்.

வேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலிருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுகளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவனாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவனது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன் அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான்.

இவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகிறாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட்டும் போது, அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதும் அவள்தான்.

sokout 5

அவன் சுருதி மீட்டும் போது மெல்லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும், பின் தலை முடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்திக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண்.

அவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலையவிடாது கவனமாகக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால்தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஓசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காஙாகாது காப்பாற்றுவது அவள்தான்.

அவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளியைப் புரிந்து வைத்திருக்கிறான்.

குர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஓசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணியில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனீக்களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனீக்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவதும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன்.

ஆனால் அவற்றைப் போலவே இவனும் நெறிப்படுத்தப்படாத தேனீ. பதவி, பணம், அந்தஸ்த்து  போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்பதில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்துவிடுவான். அந்த கானகக் கானமும் இவனை வாவென அழைக்கும்.

நெரிச்சல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக்கும்; ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகிறது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகிறாள். என்னவானானோ என நாமும் கலங்கிவிடுகிறோம்.

ஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கிறாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடியலைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.

படம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலியிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம்.

sokout 6

ஒருதடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர்பிடிக்கிறது. ஓடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கென பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி? மிகுந்த துயரம் ஆட்கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்?

ஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின்றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத்துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளதடமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.

எமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன்களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி. சண்டை, சச்சரவு, குரோதம் ஏதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.

அவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும்போதும் மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர்ந்த ஓவியனின் கன்வஸ் ஓவியம் போல கலைநயம் மிக்கது.

Sokout 3

அதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்காரமான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங்களில். நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாக தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடையாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.

மிகவும் மாறுபட்ட பார்வையில்; மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ளத்தை அள்ளிப்பிடிக்கும் ஓவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.

ஈரானின் புகழ்பெற்ற Mohsen Mahmalbaf  ன் படைப்பு இது. அவர் திரைப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாவார். நெறியாளர் மட்டுமல்ல நல்ல கதாசிரியரும் கூட. ஈரானிய சினிமாவில் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும்.

Mohsen_makhmalbaf_FICA2009

இவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதாயிற்று. 8 வயதிலேயே தந்தை இழந்து பல சின்னசின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதளவில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச்; சூடுபட்டு சிறைப்பட்டவராவார். 4 ½ வருட தண்டனையில் தன்னைப் புடம்போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந்தவர் ஆவார். இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார்.

25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.

ஏன் இது தடைசெய்யப்பட்டது என்பதை படத்தை மனத்துள் மீள்வாசிப்பு செய்தேன்.

குர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்தைக் காண்கிறோம். “அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்” போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறுபாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஓரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கியமான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள்.

தங்கள் கருத்தை ஆயதமுனையில் திணிக்கிறார்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாடமுடியும். நதீரா தெருப்பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். மிக நாசூக்காக தன் கருத்தைத் தெளிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்குக் இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.

படம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப்பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் ஆழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற்கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசாரத்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.

மங்கிய ஒளி, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஓடம், தொலைவிலிருந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ்ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்துகொண்டு வருகிறது.

வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாததால் பொருட்களை தூக்கி எறிந்து அவர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவனது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசைகின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகின்றது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன.

அவனது கையசைவிற்கு ஏற்ப கடைத்தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசை கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தியங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள. சந்தை இசைக் கூடமாகிறது.

M8DSILE EC011

இசையில் மயங்கி மனக்கண் மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்.

ஞானம் சஞ்சிகையில் வெளி வந்த எனது கட்டுரை.

இது மீள் பதிவு. எனது மறந்து போகாத சில புளக்கில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பதிவிடப்பட்ட கட்டுரை

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால் அசைய முடிகின்றது.

ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு இருக்க வேண்டிய திடமும் உறுதியும் இன்றி இயங்கும் அது கோப்பையை நெருங்கிவிட்டது. ஆனால் பற்ற முடியவில்லை. கோப்பை தட்டுப்பட்டு கீழே விழுந்து நீர் சிந்திவிட்டது. மறுகையானது எதுவும் முடியாதவாறு ஏற்கனவே முற்றாகச் செயலிழந்துவிட்டது

படுக்கை நோயாளி. தசைகளின் இயக்கம் குறைந்து வரும் motor neurone disese. நோயிலிந்து முற்றாக அவளை மீட்க சிகிச்;சைகள் எதுவும் உதவாது. நோய் கால ஓட்டத்தில் தீவிரமடைந்து வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாக உணர்விழப்பு இல்லை. வலிகளை உணர முடிவது பெரும் துன்பம். உதாரணமாக கையில் வலி என்றால் அக் கையை அசைத்து வேறு இடத்தில் வைக்கவோ மற்ற கையால் நீவி விடவோ முடியாது. ஆற்றாமை ஆட்கொள்ளும்.

கண் மூளை செவிப்புலன் போன்றவை மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்கும். இதனால் சுற்றிலும் நடப்பவற்றையும் தனக்கு ஏற்படுகிற உடல் வேதனைகளையும் புரிந்து கொள்வார். உள்ளம் வேதனையில் ஆளும். ஆனால் அதிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபட முடியாது. தன் உறுப்புகளை அசைக்க முடியாத வேதனையும் கவலையும் இயலாமையும் பெருகிவர மனவிரக்தி ஆட்கொள்ளும். இவ் வேதனைகள் ஓரிரு நாட்களுக்கானது அல்ல. பல மாதங்கள் தொடரும். அவற்றிலிருந்து விடுதலை மரணம் ஒன்றினால் மட்டுமேயாகும்.

அதுவும் விரைந்து வராது. மரணதேவன் அணைந்து வேதனைகளிலிருந்து விடுதலை கொடுக்க மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகலாம்.

அது வரை நோயாளியும் அவரைப் பராமரிப்பவர்களும் படும் வேதனை சொல்லி மாளாது.

அஞ்சனம் ஒரு குறும் திரைப்படம். கொழும்பு மருத்துவ பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்கம் நடாத்திய போட்டியில் கலந்து முதற் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. தான் சொல்ல வந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக மனதில் பதியும் வண்ணம் தயாரித்துள்ளார்கள். கதை, திரைக் கதை, வசனம் லோகபிரஷாத் பிரேமகுமார். சர்ச்சைக்குரிய விடயத்தை எடுத்தாண்ட துணிவு பாராட்டத்தக்கது. குறைந்த வசனங்களை பொருத்தமான காட்சிகளுடன் வளர்தெடுத்த திறமை நெறியாளர்களான நிசாந்த் சுப்பிரமணியம், பிரணவன் சிவஞானம் ஆகியோராகும்.

அவர்கள் பேச வருகிற விடயம் கருணைக் கொலை பற்றியது. தனது தாயின் வேதனைகளைப் பொறுக்க முடியாத மகன் கருணைக் கொலையை நாடுகிறான். மருத்துவர்கள் கைவிரித்துவிடுகிறார்கள். சட்டமும் இதற்கு இடமில்லை என நிராகரித்துவிடுகிறது.

Mercy killing  அல்லது Euthanasia எனப்படும் கருணைக் கொலை என்பது ஏற்புடையதுதானா?

மருத்துத்தால் மீட்க முடியாத, மரணம் நெருங்கி வரும் ஒருவரின் மரணத்தை சற்று முன்னதாக மருத்துவ உதவியுடன் நிகழ்த்துவதாக இதை விளக்குகிறார்கள். ஒரு கொலையைச் சற்று நாகரீகமான வார்த்தைகளில் விளக்குவதாகவே எனக்குப் படுகிறது.

ஒருவருக்கு மரணத்தை அளிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அது மருத்துவர்களால், மருத்துவக் காரணங்களுக்காக செய்யப்பட்ட போதும், போதும் நியாயமானதுதானா?.

உயிர் என்பது இயற்கை அளித்த வரம் அது. அதைப் பறிப்பது என்ன நியாhயம். அது நோயாளியின் பூரண சம்மதத்துடன் என்று சொன்னாலும் கூட எவ்வாறு நியாயமாகும். கொலைகளைக் கண்டிக்கிறோம். தற்கொலைகள் செய்யக் கூடாது என்கிறோம்.

அவ்வாறு செய்ய முனைபவர்களுக்கு தண்டனையும் கொடுக்கிறோம்.

மரணதண்டனையை இல்லாது ஒழிக்க வேண்டும் என முழங்குகிறோம்.
கருணைக் கொலை என்பது மரணம் நெருங்கிவிட்ட ஒருவருக்கு என்கிறார்கள்.

ஆனால் மரணம் ஒருவருக்கு எப்பொழுது நிகழும் என யாராவது அச்சொட்டாக முன் கூட்டியே சொல்ல முடியுமா? சோதிடர்கள் சொல்வதை விட மருத்துவர்கள் கணிப்பது சற்று அறிவுபூர்வமானதாக இருந்தாலும் கூட அதுவும் துல்லியமாக முன்கூற முடியாததே. மிகத் திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவர்களின் கணிப்புகளையும் தாண்டி எத்தனை பேர் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். மாறாக, நோய் எதுவுமில்லை என சர்ட்டிபிக்கட் வாங்கிய எத்தனை பேர் மறு நாளே தலையைப் போட்டிருக்கிறார்கள்.

“மற்றவர்களை விடுங்கள். துன்பப்படும் நோயாளி தன்னால் இனியும் தாங்க முடியாது, தனக்கு மரணத்தைத் தாருங்கள் என வேண்டும்போது அதைச் செய்வதுதானே நியாயம்” என்று சிலர் சொல்லக் கூடும்.

அவ்வாறு செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டு சுயநினைவோடு முன் கூட்டியே மருத்துவர்களுக்குக் கொடுத்திருந்தபோதும், அதைப் பயன்படுத்தியர்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு மிக மிக குறைவே என்கிறார்கள். இவ்வாறு நடப்பது கருணைக் கொலையை சட்டபூர்வமாக அங்கீகரித்தருக்கும் ஒருசில மேலை நாடுகளிலாகும். இங்கு அவ்வாறு செய்ய முடியாது

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டாலும், நீண்ட நாள் பாதிப்புக்குள்ளாகும் மேற் கூறியது போன்ற நோயாளரை அரச மருத்துவ மனைகளில் வைத்துப் பார்க்கும் வசதி இல்லை. வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.

வீட்டில் வைத்து பராமரிப்பது மிகுந்த மன உளைச்சலைத் தரும். அதற்காகும் மிகுந்த செலவை சமாளிக்கக் கூடிய பொருளாதார வலு பெரும்பாலான குடும்பங்களுக்குக் கிடையாது.

மிக முக்கிய காரணம் அத்தகைய நோயாளரைப் பாராரிக்கும் மருத்துவத் துறையான (Palliative Care) இங்கு வளரவே இல்லை.

அத்தகைய நோயாளரை அன்போடும் ஆதரவோடும் அணுக வேண்டும். உணவு, நீராகாரம், மலசலம் கழித்தல் போன்ற பிரச்சனைகள் இன்றி வாழ வழி செய்ய வேண்டும். அவர்கள் வேதனையால் துன்பமுறாது காப்பாற்ற வேண்டும். அவர்கள் உளநலம் கெட்டு மனச்சோர்விற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும். மனச்சோர்வு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை செய்ய வேண்டும்.

“சாகப்போகிறார்தானே வைத்தியம் செய்து என்ன பயன்” என்ற மறைமனநிலை பராமரிப்பவர்கள் மனதிலிருந்து அகல வேண்டும். தம்மால் முடிந்ததை மருத்துவர்களும் அரசும் மட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். சுற்றியுள்ள சமூகம் கைகொடுக்க முன்வர வேண்டும்.

அதையே மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். முன்மாதிரியாகச் செய்து காட்ட வேண்டும்.

அந்திமகால நோயாளரைப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். இது பற்றிய அனுபவப் பகிர்வின் ஆரம்ப முயற்சியாக இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் எடுத்துள்ளது. மருத்துவர்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் பயிற்சிகளை கொழும்பிலும் காலியிலும் ஏற்கனவே நடாத்தியுள்ளது. விரைவில் யாழ்ப்பாணத்திலும் நடாத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எனது ஹாய் நலமா புளக்கில் உள்ளது.

இசை அமைத்திருப்பது கஸ்தூரி சூர்யகுமார் மற்றும் உமேஸ் ஜெயராஜா ஆகியோராகும். மனதைப் பிழிவதாக இருக்கிறது.  முக்கியமான தாய் பாத்திரத்தில் யுகதர்சனி சிவானந்தன் சிறப்பாக முகபாவங்களை வெளிப்படுத்துகிறார். நோயின் வேதனையை வெளிப்படுத்தும் உடல்மொழிகள் சிறப்பாக இருந்தது. மகன் பாத்திரத்தில் மார்ஸ் முத்துத்தம்பி. முகத்தை வெறிப்பாக வைத்திருக்கிறார். உணர்வுகளை சற்று சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கலாம். தோற்றம் அண்ணன் தங்கை போல இருக்கிறதே ஒழிய தாய் மகன் போலில்லை.

பாடல்கள் டினேஸ்நாந்த் சுந்தரலிங்கம். ஒளிப்பதிவு நிசாந் சுப்பிரமணயம்.

இதே நோயால் மூன்று வருடங்களாத் துன்பமுறும் ஒருவரை அண்மையில் பார்த்தேன். ஒரு சிறு படுக்கைப் புண் தானும் வராது அக்கறையோடு குடும்பத்தவர்கள் பராமரிக்கிறார்கள். அவரால் இப்பொழுது பேசவும் முடியாது. ஏதாவது சொல்ல முயன்றால் அர்த்தம் புரியாத ஓசைகள்தான் எழும் சொற்கள் வராது. சைகை காட்டுவதற்கு கைகள் இயங்காது. அவரது முகபாவனைகளை வைத்துத்தான் மனைவி புரிந்து கொள்கிறாள்.

“எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் அவருக்கு சரியான கோபம் வருகிறது” என மனைவி விம்மலோடு சொன்னாள். பேச முடியாத சைகை காட்ட முடியாத அவரின் கோபத்தை அவரது கண்களிலும் முகத்திலும் பார்த்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அனுபவப்பட்டிருந்தாள். அக்கறைப்படுகிறாள் என்பது மனநிறைவை எனக்குத் தந்தது.

வேறு ஒரு பெண் அவளும் பல வருடங்களாகப் படுக்கை நோயாளிதான். ஆனால் இது வேறு நோய். அவளை அக்கறையோடு பராமரிப்பதற்காக அவளது மகள் தனது அரச உயர் பதவியை உதற்றித்தள்ளிவிட்டு வீட்டோடு இருக்கிறாள்.

எவ்வளவு தியாகங்களைச் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்.
அவசர புத்தியும் நிதானமின்மைனயும், வீட்டு வேலைகளுக்கு பழக்கப்பட்டாத தன்மையும் கொண்ட ஆண் என்பதால்தானா அந்த மகன் கருணைக் கொலையை நாடினான் என எனது மனம் யோசித்தது.

குறும்படம் கருணைக் கொலையை சிபார்சு செய்யவில்லை என்பது உண்மையே. அதற்காக வாதாடவில்லை என்ற போதும் அதை ஒரு தேர்வாகவே கொடுத்திருக்கிறார்கள். திரைப்படம் உணர்வு பூர்வமாக கருவைப் பேசுகிறது. அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த தேர்வு சரியானதுதானா?

அவள் தனக்கு மரணம் வேண்டும் என வேண்டுகிறாள். ஆனால் ‘உனக்கு சாக மருந்து தாறன்’ என்று கேட்டிருந்தால் குடித்திருப்பாளா? நிச்சயம் தவிர்த்திருப்பாள்.

இங்கு அவன் செய்தது ஒரு விதத்தில் கொலையாகவே இருக்கிறது. அது மாத்திரமல்ல தான் செய்த கொலைக்கான பழியை சமூகம் மீதே போட்டுவிடுகிறான்.

“நான் ஒரே ஒரு விசயத்தைதானே சமூகத்திடம் கேட்டேன். அதை தர அது மறுத்துவிட்டது” என்கிறான். எவ்வளவு அபத்தமான கேள்வி. இவ்வாறான விடயத்திற்கு அதாவது ஒரு கொலைக்கு, சமூகம் எவ்வாறு ஒப்புக் கொள்ள முடியும்.

படுக்கையில் கிடக்கும் அவளது தோற்றத்தைப் பார்த்தால் அவள் இன்னமும் பல மாதங்கள் அல்லது ஒரிரு வருடங்கள் வாழ முடியும் போலத் தோன்றுகிறது. அவள் சாக வேண்டும் என விரும்புகிறாள் என்ற போர்வையில் அவளது மரணத்தைத்தானே மகன் தீர்மானிக்கிறான்.

இவ்வாறு கருணைக் கொலைக்கான தீர்மானம் எடுக்கும் உரிமையைக் ஒரு தனிநபரிடம் கொடுப்பது ஆபத்தானது துஸ்பிரயோகம் செய்யக் கூடியது என்பதையே இக் குறும் படம் மூலம் நான் கற்றுக்கொண்டேன.

நிறை குறைகள் இரண்டும் இருந்தபோதும் மிகச் சிறப்பான முன் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

யூ ரியூபில் அஞ்சனம் குறுந் திரைப்படம்  ‘அஞ்சனம்’

0.0.0.0.

அண்மையில் அதன் கதாசிரியர்,தயாரிப்பாளர் லோகபிரஷாத் பிரேமகுமார் மற்றும் தாய் பாத்திரத்தில் நடித்த செல்வி யுகதர்சனி சிவானந்தன் இருவரும் என்னை சந்திக் வந்திருந்தனர்.

பல விடயங்களை அவர்களுடன் கலந்து பேச முடிந்தது.

மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இந்து மன்றத்தின் சஞ்சிகை ஆசிரியராகவும் பின் அதன் தலைவராகவும் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

தமிழ்சங்கம் நடாத்திய கலை விழாவில் மருத்துவ மாணவனாக நான் மேடையில் நடித்ததையும் கவியரங்கில் தலைமை தாங்கியதையும் நினை கூர்ந்து இளமை நினைவுகளில் மகிழ முடிந்தது

அந்தக் காலத்திலேயே இந்து மன்றம் இயங்கிய செய்தி அவர்களுக்கு புதினமாக இருந்தது.
அவர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

விடை பெறும் போது அவர்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

அஞ்சனம் குறுந் திரைப்படம் பற்றி நான் விமர்சன கட்டுரை எழுதியதை இட்டு ஒரு ஞாபகச் சின்னத்தை பரிசாக அளித்தனர்.

நன்றி எனது நாளைய மருத்துவச் சகாக்களே.

20140118_200536_LLS

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

இது தேவமுகுந்தன் அவர்களது சிறுகதைத் தொகுதி. இவர் சுமார் 20 வருடங்களாக சிறுகதைத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவராக இருக்கிறார். இவரது முதலாவது சிறுகதை 1992ல் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. மரநாய்கள் என்பதே அந்தச் சிறுகதையாகும். அதன் பின்னர் நீண்ட அஞ்ஞாதவாசத்தின் பின்னர் 2008 முதல் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார்.


இத் தொகுப்பில் அவரது 10 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்றில் முற்கூறிய மரநாய்கள் உடன் ஏனைய 9 சிறுகதைகள் அடங்குகின்றன. இவை 2008 முதல் 2011 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை.
அண்மைக் காலமாக கடந்த அதாவது 4 வருடங்களாகத் தீவிரமாக எழுதி வருகிறார். அத்தோடு பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். தகவம் பரிசை இருமறை பெற்றிருக்கிறார்.

இருந்த போதும் பரவலான வாசகர்களைக் கொண்டவர் என்று சொல்ல முடியாது. காரணம் இவரது படைப்புகள் ஜனரஞ்கமான பத்திரிகைளிலும் சஞ்சிகைகளிலும் வருபவை அல்ல. குறிப்பிட்ட தரமான சில ஊடகங்களில் மட்டுமே வருபவை. எனவே காத்திமான வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் மேம்போக்கான கிளுகிப்பு வாசிப்பில் உள்ளவர்கள் இவரை அறிந்திருப்பது சாத்தியமில்லை.

இந் நூலில் உள்ள இவரது படைப்புகள் ‘கலைமுகம் (3), ‘காலம்'(3), ‘யுகமாயினி'(1), ‘ஞானம்'(1), ‘ஜீவநதி'(1), ஆகிய சஞ்சிகைகளில் வெளி வந்திருக்கின்றன.
மாணவப் பருவத்தில் இவர் எழுதிய சிறுகதையான மரநாய்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அந்நேரத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. நூலின் முகப்புக் கதையும் நூலின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ தினக்குரல் ஞாயிறு பதிப்பில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைகளில் வெளிவரும் சிறுகதைகள் பொதுவாக தீவிர வாசகர்களைக் கவர்வதில்லை. அத்துடன் என்போன்ற சோம்பேறி வாசகர்கள் பார்வைக்கும் கிட்டுவதில்லை. காரணம் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தும் வாசிக்க ஆரம்பிப்பதற்கிடையில் பழைய பேப்பர்காரனது தள்ளுவண்டியில் பத்திரிகை ஏறியிருக்கும். ஆயினும் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றில் நல்ல பல கதைகள் வெளிவந்துள்ளன.

நல்ல படைப்பாளி

இவர் ஒரு நல்ல படைப்பாளி. குறுகிய காலத்திற்குள் இவரால் எவ்வாறு இவ்வளவு நன்றாகக் கதை எழுத முடிந்திருக்கிறது என யோசித்தால், இவரிடமுள்ள தார்மீகக் கோபமும் ரசனையுர்வும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. அதற்குக் காரணங்கள் பல இருக்கும். பரந்த வாசிப்பு, தேடல், தனது படைப்பில் எளிதில் திருப்தியடையாமல் சீர்திருத்தல் போன்ற பல.
ஆனால் இவற்றிக்கு மேலே வேறு ஒரு ரகசியமும் இருக்கிறது. அதை முகுந்தன் தனது முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார். “முதல் வாசகனாக இருந்து வாசித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்தவர்” திரு.அ.யேசுராசா என்கிறார்.

யேசுராசா இலை இதழின் ஆசிரியாராக இருந்தவர். ஈழத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் சிலரது மிகச் சிறந்த கதைகள் அலையில் வெளி வந்திருக்கின்றன. முதல் வாசகனாகவும் ஆலோசகராகவும் நண்பர் யேசுராசா இருந்ததால்தான் அவ்வாறான சிறுகதைகள் வெளிவந்தன என்பது நினைவிற்கு வருகிறது.

சிறுகதையை புனைகதை என்பார்கள். ஆனால் இவை வெற்றுப் புனைவுகளாக இருப்பது சாத்தியம் அல்ல. பெரும்பாலும் யதார்த்தமானவை. எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்கள். படைப்பாளியின் மனத்தில் ஆழ்மனத்தில் பதிந்தவையாக இருக்கும்.

தார்மீகக் கோபம்

ஒரு உதாரணம் சொல்லலாம். அண்மையில் ஒரு மருத்துவக் கருந்தரங்கு நடைபெற இருந்தது.; உணவு முறைகள் பற்றியது. நோய்களுக்குக் காரணமான உணவு முறைகள், மற்றும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்க, எவ்வாறு சில வகை உணவுகள் உதவ முடியும் என்பது பற்றியது. எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். நோய்களைத் தணிக்க மருந்துகளுக்கு அப்பால் உணவு முறை உட்பட்ட வாழ்க்கை முறைகள் உதவும் என நம்பும் எந்த மருத்துவனுக்கும் பிடித்தமான விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அது ஒரு வேலை நாள். கருத்தரங்கிற்கு நான் சென்றால் தேடிவரும் நோயாளிகள் ஏமாற நேரிடும். ஆனாலும் அங்கு நான் பெறும் அனுபவங்களை பத்திரிகைகளில் பகிர்வதன் மூலம் பல நோயாளர்கள் பயனடைவார்கள் என்பதால் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. மருத்துவர்களுக்காக மருத்துவர்களால் நடாத்தப்படும் கருத்தரங்கு. ஆனால் அங்கு பெருந்தொகையான தாதியர்கள் மற்றும் உணவு லிகிதர்கள் வந்திருந்தார்கள். ஆங்கிலத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கு முற்றுமுழுதாக சிங்கள மொழியில் நடைபெற்றது. இடையிடையே புரஜெக்டரில் காட்டப்பட ஆங்கில சிலைட்டுகளைப் பார்த்து ஆறுதலடைய வேண்டியிருந்தது.

முகுந்தனும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். அது கற்கைச் செயற்பாட்டில் வழிகாட்டிகள் பற்றியது. அது பங்குபற்றுபவர்களுக்கு அரசு பணம் கொடுத்து செய்த கருத்தரங்கு ஆனால் நாங்கள் பணம் கொடுத்து அந்தக் கருத்தரங்கு சென்றிருந்தோம். இருந்தபோதும் நாம் எழுதவில்லை, உரத்துப் பேசவில்லை, மௌமாக இருந்தோம். ஆனால் தார்மீகக் கோபமுள்ள படைப்பாளியான முகுந்தனை அது ஆழமாகப் பாதித்திருந்தது. அவரால் மௌமாக இருக்க முடியவில்லை. அதுவே ‘வழிகாட்டிகள்’ என்ற சிறுகதையாகப் பரிணமித்;தது.

நம்பகத்தன்மை

சிறுகதை என்பது பொதுவாக ஒரு சிறிய படைப்பு. அது அளவில் சிறியது என்பது மட்டுமின்றி மனத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு சிறிய உணர்வை, அல்லது ஒரு சிக்கலை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். அது தனிப்பட்ட ஒரு மனிதர் பற்றியதாகவோ அல்லது ஒரு நிகழ்வு பற்றியதாகவே கூட இருக்க வாய்ப்புண்டு.

சிறுகதையில் இறுக்கமான கட்டுமானத்திற்கு இதுவே காரணமாக அமைகிறது. முகுந்தனின் படைப்புகளில் இந்த இறுக்கத்தைக் காண்கிறோம். தனது படைப்பிற்கு அவசியமானதற்கு அப்பால் எதையும் அவர் எதையும் வளவளவென்று சொல்வதில்லை. தனது மனதை அருட்டுவதைப் பற்றி மட்டும் எழுதும் எந்த எழுத்தாளனும் அவ்வாறே எழுதுவான்.
ஆனால் இங்குள்ள பல படைப்பாளிகளும் வலிந்து கதை கட்டுவதில்தான் வல்லவர்களாக இருக்கிறார்கள். கதைக்குத் தேவையானதா தேவையற்றதா எனச் சீர்தூக்கிப் பார்க்கமல் தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அதில் சொல்லிவிட முனைகிறார்கள்.

பரபரப்பாகப் பேசப்படும் விடயங்கள் பற்றி ரெடிமேட் தாயாரிப்புகள் சுடச்சுட வெளிவரும். சாதீயம், இனப்பிரச்சனை, போர்,பெண்ணியம் என எதைப் பற்றியும் அது பற்றி எந்தப் பட்டறிவு இல்லாதவர்களும் எழுதிவிடுவார்கள்.

அதற்கும் அப்பால் உபாசகர்களாக, போதகர்களாக மாறி நீட்டி முழங்கிப் போதனைகள் செய்ய முனைகிறார்கள். சிறுகதை என்ற வடிவத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் சிறுகதைப் படைப்பாளிகளாக  பத்திரிகைகளையும் மேடைகளையும் நிறைக்கிறார்கள்.
ஆனால் முகுந்தனின் படைப்புகளைப் படிக்கும்போது அவற்றில் நம்பகத்தன்மை நிறைந்து கிடக்கிறது. எதுவும் போலியாக இல்லை.

மாணவனாக, வேலையற்ற பட்டதாரியாக, கொழும்பில் அறையில் வாடகைக்கு தங்கியிருக்கும் வாலிபனாக, அரச ஊழியனாக, வெளிநாட்டிற்கு புலமைக் கல்விக்காகச் செல்பவனாக, நூலகத்தில் ஈயோட்டும் வாலிபனாக, புகழ் பெற்ற எழுத்தாளனின் போலி முகத்தை வெளிப்படுத்தும் உறவினனாக அவரது பாத்திரங்கள் அனைத்தும் உயிரோவியமாக அமைந்துள்ளன. அந்தப் பாத்திரங்களோடு எங்களையும் நெருக்கமாக உலவ விட்டிருக்கிறார்.

முகுந்தன் படைப்புலகில் அதிகம் எழுதியது போர் முனைப்புப் பெற்ற காலமாகும். எனவே இவற்றில் போர் மற்றும் இன முரண்பாடு பற்றியதாகவே இருப்பதில் வியப்பில்லை. கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் குண்டு வீச்சு, செல் அடி என போர் பற்றிய நேரடியான அனுபவங்கள் பற்றிய கதைகள் கிடையாது. மரநாய்கள் விதிவிலக்கு.

யதார்த்தம்

இவரது படைப்புகள் பெரும்பாலும், மாற்று மொழிபேசும் நண்பர்களுடன், சகஊழியர்களோடு பழகும்போது ஏற்படும் அவமானங்களைப், இனப் பாகுபாடுகளை, உதாசீனங்களை, அவற்றால் ஏற்படும் மனப் பாதிப்புகளைப் பேசுகின்றவையாக இருப்பதைக் காண்கிறோம். இருந்தபோதும் மாற்று இனம் மீதான வன்மம் இவரது படைப்புகளில் இல்லை என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

தாய் மொழி, தன் கலை கலாசாரம் பண்பாடு மீதான அதீத பற்றும், ஏனைய இனங்கள் மீதான வெறுப்பும் இளக்காரமும் இன முரண்பாட்டை வளர்க்கவே செய்யும். பல இனங்கள் சேர்ந்து வாழும், தொடர்ந்தும் வாழ வேண்டிய சூழலில் பேனா பிடித்தவர்கள் சற்று நிதானமாக பொறுப்புணர்வோடு எழுதுவது அவசியம். புண்ணை ஆறவிடாது நோண்டிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அல்ல எழுத்தாளன். அதே நேரம் வாக்கு வங்கியை பிடித்து வைப்பதற்காக பிரச்சைனைகளை பூதகாரமாக்கும் அரசியல்வாதி போலவும் இருப்பது நல்லதல்ல.
முகுந்தன் மலினமான புகழுக்காக அதீத இனப் பற்றாளனாக தன்னைக் காட்ட முற்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில் பார்க்கையில் ‘இரட்டைக் கோபுரம்’ கதையின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவனோடு ஒன்றாக வேலை செய்து, உண்டு குடித்து உலாவித் திரிந்த சிங்கள நண்பர்களில் ஒருவன் தனக்கு பாரிய துன்பம் ஏற்பட்ட வேளையில் ‘பற தெமிளு’ என்ற வார்த்தையை உதிர்த்துவிடுகிறான்.

இவனது மனம் நோகிறது. ஏமாற்றம் அடைகிறது. அருகே நின்ற சிங்கள மொழி தெரியாத மற்றொரு நண்பன் அவன் என்ன சொன்னான் என இவனை வினவுகிறான். ‘எல்லாச் சிங்களச் சொற்களுக்கும் எனக்குக் கருத்துத் தெரியாது’ என இவன் பதிலளிக்கிறான். நல்ல பதிலாக எனக்குத் தோன்றியது. முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் உறவுகளை பேண முயலும் ஒருவன் அவ்வாறுதான் பேச வேண்டும். முகுந்தன் தனது பாத்திரத்தை அவ்வாறு பேச வைத்தமை மகிழ்வளிக்கிறது.

இன முரண்பாட்டுக் கதைகளைப் பொதுவாகப் பார்க்கும்போது, வன்னியில் வாழ்ந்தவர்களது பார்வை அதி தீவிரமாகவும், யாழில் வாழ்பவர்களது படைப்புகள் அதில் சற்று காரம் குறைந்து மறைபொருளாகவும், வெளிநாட்டில் வாழ்பவர்கள் அதீத கற்பனைவாதிகளாகவும் படைப்பார்கள். கொழும்பில் வாழ்பவர்களது பார்வை வாழும் சூழலுக்கு ஏற்ப சற்று நீர்த்தலாகவே இருக்கும்.
எவ்வாறாக இருந்தபோதும் இனமுரண்பாட்டை முன்நிலைப்படுத்தும் மற்றும் ஏனைய இனத்தவர்களை விரோதிகளாகச் சித்திரிக்கும் படைப்புகள், எமது தாழ்வுமனப்பாட்டின் வெளிப்பாடா என நான் சிந்திப்பதுண்டு.

அல்லது இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிகைச் செய்திகளும் படைப்புகளும்தான் எங்களை மீளமுடியாத தாழ்வுச் சிக்கலில் ஆழ்த்துகின்றனவா என்பதையிட்டு சமூகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும்.

முகுந்தனின் படைப்புகளில் இனப் பிரச்சனைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் அதிதீவிர உணர்வு இருக்கவில்லை. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாக தொடர்ந்து இருக்காது யதார்த்தத்தை உணர்ந்த படைப்பாளியாக முகுந்தனை அவ்விடத்தில் கண்டேன்.
தொடர்ந்தும் இனமுரண்பாட்டுப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது எமது வாழ்வின் நாளாந்தப் பிரச்சனைகள் பலவற்றையும் முகுந்தன் எழுதுவார் என நம்புகிறேன். இந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சில கதைகள் உள்ளன. சின்ன மாமா, கூட்டத்தில் ஒருவன் போன்றைவை வேறு விடயங்களை முன்னிலைப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையும் சீ என ஒதுக்கக் கூடியவை அல்ல. எல்லாக் கதைகளும் நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளன. 10ல் அரைவாசிக்கு மேற்பட்டவை மிக நல்ல படைப்புகளாக உள்ளன. படித்து முடித்த பின்னரும் அவற்றில் பல கதைகள் எம்மோடு நெடுநேரம் உரையாடுகின்றன. அடுத்த படைப்புக்குள் புகவிடாது தொல்லைப்படுத்துகின்றன. இதனால் என்னால் இத்தொகுப்பை ஓரு மூச்சில் படித்து முடிக்க முடியாது போயிற்று.

இன்றைய விழா தனிச்சிறப்பு வாய்ந்தது. வழமையாக இவரது படைப்புகளை வாசிக்காத ஒருவர் கூட இன்றைய இவரது வெளியீட்டு விழா அழைப்பிதழைக் கண்டால் இக் கூட்டத்திற்கு வரவும், இவரது கதைகளை வாசிக்க விரும்பவும் கூடும். ஏனெனில்

  • இது ஒரு காலச்சுவடு வெளியீடு.
  • இதற்கு பின்னுரை எழுதியிருப்பவர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள்
  • இங்கு கருத்துரை வழங்க வந்திருப்பவர்கள் திரு.அ.யேசுராசா மற்றும் உமா வரதராஜன்

இந்த மூன்று பேரும் காலச்சுவடு பதிப்பகத்தினரும் ஒரு விதத்தில்…. ஒருமைப்பாட்டைக் கொண்டவரகள். படைப்பிலக்கியத்தில் செழுமையை அவாவுபவர்கள். இலக்கியப் படைப்பின் தரத்தில் எந்தவித சமரசங்கங்களுக்கும் இடம் கொடாதவர்கள். முகத்திற்கான இது நல்ல படைப்பு என்ற அங்கீகாரத்தை எவருக்காகவும் கொடுக்க மறுப்பவர்கள்.

இவர்கள் அனைவரும் தாங்கள் இந்த முயற்சியில் பங்கு கொள்வதன் மூலம் முகுந்தனின் படைப்புகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் படைப்பு இலக்கியம் பற்றி லியோ டால்ஸ்டாய் கூறிய ஒரு கருத்ததை நினைவில் கொள்ளலாம்.

“.. எந்த இலக்கிய முயற்சியிலும் நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மிகவும் முக்கியமானது ஆசிரியன் சொல்வதற்கு என்ன வைத்திருக்கிறான் என்பது. அதற்கு அடுத்தது அவனது விஷயத்தின்மீது அவனுக்கு இருக்கிற நெகிழ்ச்சியான பற்று. கடைசியாக ‘டெக்னிக்’. முன் இரண்டிலும் ஒருங்கிணைந்த உடன்பாடு இருந்தால்தான் உன்மையான கலைப்படைப்பு சாத்தியமாகும். அந்த இரண்டும் இருந்தால் ‘டெக்னிக்’ என்பது தானாக வந்துவிடும்…”
முகுந்தனின் முதல் இரண்டும் இருக்கின்றன.

அதாவது சொல்வதற்கு ஏதோ ஒரு விடயமும், அதில் நெகிழ்ச்சியான பற்றும் நிறையவே இருக்கின்றன. அத்துடன் நல்ல கதை சொல்லிக்கான டெக்னிக் அவருக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. இதனால் இலக்கிய உலகில் அவருக்கு வளமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. மேலும் பல சிறப்புகள் அவரை வந்தடைய வாழ்த்துகிறேன்.
இத்தகைய அருமையான கூட்டத்தில் தலைமை தாங்க அழைத்தமைக்கு முகுந்தனுக்கு நன்றிகள்

எனமு மறந்து போகாத சில புளக்கில் வெளியான கட்டுரை ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’ தேவமுகுந்தன் சிறுகதைகள்

எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0

Read Full Post »

மு.பொ அவர்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், விமர்சனம், எனப் பல துறைகளிலும் தனது திறமைகளைக் காட்டியவர். இதழ் ஆசிரியரும் கூட. சுயசிந்தனை அவரது பெரு முதல்.

இலங்கையில் தமிழ் இலக்கியத் துறை முற்போக்கு நற்போக்கு பிரிந்து நின்று வரிந்து கட்டி முரண்பட்டு நின்ற போது, இலக்கியச் சிந்தனை மரபில் இற்றைவரை இல்லாத புது வீச்சைப் பாச்சிய மு.தளையசிங்கத்தின் மரபில் வந்தவர் மு.பொ. கருத்து முதல்வாதம் பொருள் முதல் வாதம் என இரு முனைப்பட்ட சிந்தனை நிலவியபோது ஆத்மார்த்தம் சார்ந்த புதிய சிந்தனை ஊற்றை பிரவாகிக்க விட்டவர் மு.த. மெய்யுள் என்ற அவரது எண்ணக்கரு இலங்கையை விட தமிழகத்தில் கூடிய வரவேற்பைப் பெற்றது.

மு.பொ படைப்புகளிலும் விமர்சனங்களிலும் இந்தக் கருத்து உள்ளுறைந்து நிற்பதை தீவிர வாசகர்கள் அறிவர்.

‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்பது மு.பொன்னம்பலம் அவர்களின் புதிய நூலாகும். அவர் பல வருடங்களாக எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்துள்ளது.

400 பக்கங்களுக்கு மேல் வரும் இந்த நாலில் உள்ள படைப்புகள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  •  அறிமுக விமர்சனம்
  • விமர்சனம்
  • ஆய்வு நிலை சார்ந்த விமர்சனம்
  • எதிர்வினை விமர்சனம்

இந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14.08.2011 ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

மாலை 4.45 மணிக்கு பேராசிரியர்.சோ.சந்திரசேகரன் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகும்.

தலைமையுரை, வரவேற்புரையைத் தொடர்ந்து புரவலர் ஹாசிம் உமர் சிறப்புப் பிரதியைப் பெறுவார்.

நூல் பற்றிய உரைகள்

திரு.குணரத்தினம் செந்தீபன்.

வைத்திய கலாநிதி. எம்.கே.முருகானந்தன்

திரு.க.சண்முகலிங்கம் (ஆசிரியர்- பிரவாதம்)

ஏற்புரையை நூலாசிரியர் மு.பொன்னம்பலம் வழங்குவார்

நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெறும்.

நண்பர்கள் வட்டம் ஒழுங்கு செய்துள்ள இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறார்கள்.

இன்றைய தமிழ் இலக்கியத்தின் புதிய சிந்தனைப் பாய்சல்களை அவாவும் நண்பர்களுக்கு இக் கூட்டம் அாருவிருந்தாக அமையும் என நம்புகிறேன்.

 0.0.0.0.0.0.0

Read Full Post »