Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2009

>முற்போக்கு இலக்கியவாதி சமீம் என்ற நூல் அண்மையில் வெளியாகியுள்ளது. இது இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடு ஆகும்.

சமீமுடன் நான் நெருங்கிப் பழகியவன் அல்ல. ஆயினும் பழகிய அளவில் நட்புக்கும் மரியாதைக்கும் உரிய கல்விமானாகவே அவர் எனது மனத்தில் வீற்றிருக்கிறார். ஆனால் ஒரு நூலை மதிப்பீடு செய்வதற்கு இவை எவையும் தகுதிகளும் அல்ல, தகுதிக் குறைபாடும் அல்ல என்பது உண்மையே.

சமீம் யார்

உண்மையில் சமீம் யார்? அவர் பற்றி ஒரு நூல் வருவதற்கான தேவை என்ன? அதற்கான அவரது அருகதை என்ன? டொக்டர்.எம்.எல்.நஜிமுதீன் (மகப்பேற்று நிபுணர்) இந்நூலில் அவர் பற்றி எழுதிய ‘முகம்மது சமீம்- ஒரு முகவுரை’ என்ற கட்டுரையின் ஆரம்ப வசனம் சமீம் பற்றிய மிகச் சுருக்கமான ஆனால் செறிவான தெளிவான பார்வையை முன் வைக்கிறது

‘முகம்மது சமீம் அவர்கள் கல்வித்துறையில் அரும்பணி ஆற்றியவர். புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர். பன்னூல் ஆசிரியர். பண்பாளர். விமர்சகர், நாடறிந்த எழுத்தாளர். மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடிய சிறந்த பேச்சாளர். பல்துறைகளிலும் தடம் பதித்து அனைத்து மக்களாலும் மதிக்கப்படுபவர்.’

அத்துடன் ‘முற்போக்கு எண்ணக் கருவிலிருந்து இன்றுவரை மாறாது நிலைத்து நின்று தனது கருத்துக்களை துணிவுடன், ஆதாரத்துடன் அளிப்பவர்தான் அறிஞர் முகம்மது சமீம்’ என முன்னைநாள் அதிபர் மஹ்ரூப் கரீம் எழுதிய வார்த்தைகளையும் சேர்த்துக் கொண்டால் மிகத் தெளிவான பார்வை கிட்டும்.

ஆம்! கல்வி அதிகாரி, ஆய்வாளர், பேச்சாளர், எழுத்தாளர், விமர்சகர் போன்ற பல தகமைகளுக்கு மேலாக முற்போக்கான சிந்தனைகளுடன் தளும்பாது நின்ற காரணத்தால்தான் இன்று வரை பேசப்படுகிறார், மதிக்கப்படுகிறார். தொடர்ந்தும் வரலாற்றில் நிற்கப் போகிறார்.

152 பக்கங்கள் நீளும் இந்த நூலில் மொத்தம் 19 கட்டுரைகளும், சில புகைப்படத் தொகுப்பும் காணப்படுகிறது. அவரது பிறப்பு வளர்ப்பு, இளைமைப் பிராயம், முதல் இன்று வரையான அவரது வாழ்க்கைப் பயணத்தின் பல அங்கங்களை இந்த நூல் சொல்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சேர்ந்து பயணித்த உறவினர், நண்பர்கள் அறிஞர்களது கருத்துக்கள் இடம் பெற்றருப்பதால் பல புதிய செய்திகளையும் அறிய முடிகிறது.உள்ளடக்கம்

நூலின் உள்ளடக்கத்தை பார்க்கும்போது எவ்வளவு ஆழமாகச் சிந்திக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும். இந்த நூலைப் படிக்கும் போது நான் அறிந்த பல விடயங்களையும் இரசித்தவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 என் சகோதரனைப் பற்றி – ஆறிபா ஸாகீர். தனது சொந்தச் சகோதரன் பற்றி எழுதுவதால் அவர்களது இளைமைக் காலம் பற்றி மிகத் துல்லியமாக அறிய முடிகிறது.

அந்தக் காலத்தில் எந்த வசதியும் அற்ற பதுளை மாநகரைப் பற்றியும், அக்காலத்தில் பொழுது போக்குக்கான வாய்ப்புகள் இல்லத நிலையையும் கூறி ‘வெளியில் பயணம் என்றால் மீனாம்பிகை புத்தகக் கடைதான். எங்களுக்கிருந்த ஒரே பொழுது போக்கு சாதனம் சஞ்சிகைகளும் புத்தகங்களும்தான். அவற்றை சிறுவயதிலிருந்தே படிக்கவும் வாசிக்கவும் ஊக்கம் தந்தவர் எமது அருமை அண்ணாதான்’ எனப் பெருமையாகச் சொல்கிறார்.

உண்மைதான் இளவயதில் வாசிப்தற்கு ஊக்கம் கொடுக்கும் ஒருவர் கிடைப்பது மிகவும் அரிய வாய்ப்பாகும். இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் எழுத்தோடும் வாசிப்போடும் சம்பந்தப்படவர்கள்தான். எம் எல்லோருக்கும் இவ்வாறான ஒருவர் இருந்திருப்பார்.

சகோதரி ஆறிபாவிற்கு சமீம் கிடைத்தது போல எனக்கு சின்னையா பண்டிதர்.பொன்.கிருஸ்ணபிள்ளை, உறவினர் கவிஞர் யாழ்பாணன். அதேபோல அவர்களுக்கு மீனாம்பிகை புத்தகக் கடை போல எனக்கு பருத்தித்துறை வடலங்கா புத்தகசாலை.

இவ்வாவறே உங்கள் ஒவ்வொருவருக்கும் இனிய நினைவுகளும் இருக்கும். ஆனால் எமக்குக் கிடைத்து வாசிப்புப் பழக்கதை அளம் தலைமுறையினருக்குக் கடத்த முடிகிறதா? இளம் தலைமுறையினரில் பெரும்பாலனவர்கள் ரீவி மற்றும் கணனி முன்னிலையில்தானே.

 ஜனாப். ஆ. முகமது சமீம்: அவர்களைப் பற்றி நான் அறிந்தவை – சித்தி ஸமீனா நஜிமுதீன். இக்கட்டுரை அவரது பொறாமகளால் எழுதப்பட்ட கட்டுரையாகும்.

 About my Father Mr.A.M.Sameem- S.Razna Sameem Imtias– Walking Libray என்கிறார்

 முகமது சமீமுடைய இளமைக்கால இலக்கிய செயற்பாடுகள் – குமரன். பதுளை நகரில் ‘சரஸ்வதி வித்தியாசாலை, தர்மதூதக் கல்லூரி போன்றவற்றில் கல்வி கற்ற காலத்தில் சமிமுடைய கல்வி, இலக்யி செயற்பாடுகளை ஆவணப்படுத்துகிறது. பேச்சுப் போட்டிகளில் பங்கு பற்றியதுடன், ‘திருடன் வீடடைந்தான்’ என ஒரு சிறுகதை எழுதியுள்ளார் என்ற தகவலைப் பெற முடிகிறது.

 சர்வகலாசாலையின் ஓர் சககால மாணவன் திரு சமீம் அவர்களைப் பற்றிய ஓர கண்ணோட்டம் – ஷகீர். ஷாயிரா கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனக்கும் அவருக்கம் இருந்து அறிமுகததைத் தெரிவிக்கிறார். அத்துடன் அக்காலத்தில் கல்விக்கு மேலாக உதைபந்தாட்டம், நீச்சல் போட்டி ஆகியவற்றில் அருந்த ஈடுபாட்டையும் சொல்கிறார். அதன் மூலம் இளமைக் காலத்திலேயே அவருக்கிருந்த பனமுக ஆற்றலைக் காண முடிகிறது.

அத்துடன் சமீம் எழுதிய 9 நூல்களையும் பட்டியல் இட்டுக் காண்பிப்தும் இக் கட்டுரையின் முக்கிய அம்சமாகும். அவையாவன

1. இஸ்லாமிய கலாசாரம்,

2. இஸ்லாமிய தத்துவ ஞானம்,

3. முஸ்லீம் திருமன சம்பிரதாயங்கள்,

4. ஒரு சிறுபான்மை இனத்தின் பிரச்சனைகள் – 4 பாகங்கள்,

5. படைப்பாளிகளும் ஆய்வுகளும்,

6. இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்,

7. எமது இலக்கியத் தேடல்,

8. கைலாசபதி 10 சில்லையூர் செல்வராஜன்,

9. ஒரு விமர்சனப் பார்வை

 எனது நண்பன் சமீம் – தி.சிறினிவாசன். சக பல்கலைக்கழக மாணவனாக இருந்த காரணத்தால் பல்கலைக்கழக வாழ்ககை பற்றி நேரடியான பார்வையைத் தருகிறார். அத்துடன் இன்று சமீம் தலைமை வகிக்கும் Harrow International college ல் சமீமின் தலைமைத்துவத்தில் எவ்வாறு சிறப்பாகக் கல்விப் பணி செய்கிறது என்பதை சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.

இளமைக் காலம் பற்றி மேற்படி கட்டுரைகள் பேச ஏனைய பல கட்டுரைகளும் அவரது பிற்கால வாழ்க்கையும் சாதனைகளையும் பேசுகிறன்றன.

 பன்னூலாசிரியர் அறிஞர் அ.முகமது சமீம் அவர்கள் – மஹ்ரூப் கரீம். இக் கட்டுரையின் முதற் பகுதி சமீமின் டிதாழில் சார்ந்த பணிகள் பற்றிய விபரத்தைத் தருகிறது. ஈயினும் இரண்டாம் பகுதியான 15 பக்கங்கள் நீளும் இலக்கியப் பணி பற்றிய பகுதி மிக முக்கியமானது. என்னைக் கவரந்தது. உங்கள் பலருக்கும் விருப்புடையதாக இருக்கும் ஏனெனில் இது சமீமின் இலக்கியக் கட்டுரைகள் ஊடாக அவர் பற்றிய பார்வையை முன் வைக்கிறது.

நான்கு பாகங்கள் கொண்ட ‘ஒரு சிறுபான்மை இனத்தின் பிரச்சனைகள்’ என்ற நூலைப் பற்றிப் பேசும்போது ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து ஆற்ற வேண்டிய கல்வி, இலக்கியச சேவையை வெளியில் இருந்து ஆற்றுகிறார். உண்மைதான் அந்த நூலை நானும் மேலோட்டமாகப் படித்திருக்கிறேன்.

‘இலங்கையில் பேரினவாதிகளின் – பேரினவாத அரசாங்கங்களின் இனவாதக் கொள்ளைகளாலும், அட்டூழியங்களாலும், அடக்கு முறைகளாலும் அழிவுகளாலும் தமிழ் முஸ்லீம் மக்ள் பட்ட கஷ்டங்களையும் சம்பவங்களையும் திட்டமிட்ட சதிகள் பற்றியும் ஆதாரபூர்வமாக வரலாற்றுச் சான்றுகளுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது’ எனக் கட்டுரையாசிரியர் கூறுவதுடன் நானும் முழமையாக உடன்படுகிறேன்.

அத்துடன் இரண்டாவது சிறுபான்மை இனமாக முஸ்லீம் சமூகம் பட்ட கஸ்டங்கள் பலவற்றையும் உணர முடிகிறது.

இலக்கியக் கட்டுரைகளில் சமீமின் முற்போக்குக் கருத்துகள் முனைப்பாக வெளிப்படுவதை பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார்.

படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் என்ற கட்டுரையில் பேராசிரியர் கைலாசபதி (பக் 40)

திருக்குறள் (பக் 42),

சிலப்பதிகாரம் (பக் 43)

நீர்வை பொன்னையன் (பக் 43),

எஸ்.எஸ்.கார்மேகம் எழுதிய ‘கண்டிய மன்னர்கள்’ (பக் 45),

மூதூர் முகைதீன் எழுதிய ‘இழந்துவிட்ட இன்பங்கள்’ (பக் 46), மு.பொன்னம்பலத்தின் சூத்திரர் வருகை (பக் 47),

என்.கே.ரகுநாதனின் ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி (பக் 47)

 முற்போக்கு கலை இலக்கியம்: சமீமின் செயற்பாடுகள்- நீர்வை பொன்னையன் ஒரு முக்கியமான கட்டுரை. ஐம்பதுகளில் முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் இணைந்த முகமது சமீம் அன்றிலிருந்து இன்றுவரை நிலை தளும்பாமல் எமது முற்போக்கு கலை இலக்கியத்தில் உறுதியாக நின்று அயங்குகிறார் என மனம் திறந்து சொல்கிறார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராக இருந்து ‘பாரதி விழா’, பாரதி நூற்றாண்டு விழா, சோமசுந்தரப் புலவர் விழா, ஆறுமுகநாவலர் விழா போன்ற விழாக்களை ஏற்பாடு செய்வதிலும், அவற்றை வெற்றிகரமாக நடத்துவதிலும் பெரும் பங்களித்துள்ளார்.

தமிழ் நாட்டிலிருந்து நூல் இறக்குமதி

பண்டிதர் குழாமிற்கு எதிரான போராட்டம், புதமை இலக்கிய சஞ்சிகை வெளியீடு.

தன்னைபிரபல்யப்படுத்தி சுயலாபம் பெறுவதற்கு இ.மு.எ.ச நடாத்திய இலக்கிய மகாநாடுகளை பயன்படுத்தியதில்லை என சான்றளிக்கிறார்.

இ.மு.எ.ச இயங்க முடியாத நிலை ஏற்பட்ட போது இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையை உருவாக்குவதில் ஈடுபட்டதுமன் அதன் செயற் குழு உறுப்பினராக செயற்படுகிறார்.

 ஒரு முற்போக்குவாதியின் இலக்கிய வளர்ச்சியின் உச்சம் – ஏ.இக்பால். சமீமின் இலக்கியப் பயணத்தை விபரிக்கிறார்.

வரலாறு கண்ட முஸ்லீம் தலைவரகள், சீனாவில் முஸ்லீம்கள் ஆகிய முக்கிய கட்டுரைகள் இன்னமும் நூல் உருப் பெறாததை இலரது கட்டுரை மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. அவற்றையும் நூலாக்குவது அவசியமாகத் தெரிகிறது.

 ஏனைய கட்டுரைகள்

முகமது சமீம் ஒரு ஞானத் தேடல் – அல்ஹாஜ் எம்.வை.எம்.முஸ்லீம், எம்.ஏ.எம்.சமீம் – கே.சண்முகலிங்கம்,

இலங்கை அரசியல் வரலாற்றின் ஆராச்சி அறிஞர் அ.முகமது சமீம் – அல்ஹாஜ் எஸ்.ஐ.ஆர்.எம்.செயித் ஹஸன் மௌலானா,

அறிஞர் பெருமான் – சாரணா கயூம்,

முகமது சமீம் அவர்களும் எழுத்தும் – த.சிவசுப்பிரமணயம்,

வரலாறு படைக்கும் வரலாற்று நாயகன் – பாலஷண்முகி,

அறிஞர் பெருமான் சமீம் – திருமதி.சண்முகராஜா,

முகமது சமீம் ஒரு முகவுரை – டொக்டர்.எம்.எல்.நஜிமுதீன்,

கல்விமான் சமீம் – ஐ.எல்.எம்.சுஹைப்

ஆகிய கட்டுரைகளும் இடம் பெறுகின்றன.

என்னைப் பற்றி சில குறிப்புகள் முகமது சமீம். தானே தன்னைப் பற்றி எழுதிய கட்டுரை மிக முக்கியமானது.

இதில் பதுளை நகரம் பற்றி எழுதப்பட்ட பகுதிகள் மிகவும் சுவார்ஸமானவை. சுரஸ்வதி வித்தியாலயத்தில் படிக்கும் போது தலை ஆசிரியர் வீட்டிற்கு தோட்டத்தில் வேலை செய்வதற்கு அனுப்பதை எதிர்த்த சம்பவமானது சிறு வயதிலேயே அவரிடத்தில் இருந்து ஒடுக்குமுறைக்கு அடங்காத பண்பைச் சுட்டிக் காட்டுகிறது.

மிகச் சுவார்ஸமான இன்னொரு விடயம் முட்டை வீச்சுச் சம்பவம் பற்றிய அவரது நேரடிப் பங்கு பற்றிய விபரிப்பு. இன்று பேராசிரியர் சிவத்தம்பி முதல் பலரும் அதனை ஒரு தவறான செய்கையாகக் கூறுகின்றனர்.

சிவத்தம்பி கூட்டதிலிருந்து கிளம்பிவிட்டார். முற்போக்கு எழுத்தாளர்கள்தான் செய்தார்கள் என்று சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை’ என்கிறார்.

சூரத் மகாநாட்டில் எப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டதோ அதேபோல இந்தச் சம்பவத்திற்குப் பிறகு முற்போக்கு எழுத்தாளர்களுடைய புதிய பார்வையை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது இலங்கை இலக்கிய வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது. ….. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பண்டிதர்களின் இரும்புப் பிடியில் இருந்த தமிழிலக்கியம் மக்கள் இலக்கியமாக மாறியது’

முடிவாக

மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட நூல். அந்த நூலைத் தொகுத்த ஏ.இக்பால், மற்றும் நூலை வெளியிட்ட இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையும் பாராட்டுக்கு உரியவர்கள்.

ஆயினும் சில குறைபாடுகள்

1. இந்த நூலை மேலும் சிறப்பாகத் திட்டமிட்டு தயாரித்திருக்கலாம்.

2. சொல்வது மீளச் சொல்வது பல இடங்களில் இடம்பெறுகிறது. முக்கியமாக அவரது தொழிற் பணிகள் வாழ்க்கை பற்றி

3. அவரது படைப்புலகம் பற்றிய பார்வைகள் மிகக் குறைவு.

4. ஓவ்வொரு நூலையும் தனித்தனியாக ஒவ்வொரு விமர்சகர் மூலம் ஆய்வு செய்து விமர்சனம் எழுதியிருந்தால் மிக முக்கியமான ஆவணமாகப் பயன்பட்டிருக்கும்.

5. அவரால் எழுதப்பட்டு நூலக வெளிகரா படைப்புகள் பற்றிய தரவுகள் மிகக் குறைவு. இக்பாலது கட்டுரை சில தரவுகளைத் தந்திருப்பது பாராட்டதக்கது.

சமூக முன்னேற்றத்திற்கு உந்து கோலாக இருந்த நபர்களின் பணிகளை ஆய்வு செய்யும் இத்தகைய நூல்களின் வரவு முக்கியமானது.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

‘இவள் எந்த நேரமும் ரீவீக்கு முன்னாலைதான். கண்கெடப் போகுது எண்டு சொன்னாலும் கேக்கிறாளில்லை.’

‘மம்மல் இருட்டுக்கை கிடந்து கொண்டு படிக்கிறான். லைட்டையும் போடுறானில்லை. கண் பூந்தப் போகுது.’

இவை நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான். இவற்றில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு?

கண்கள் எமது புலன்களில் மிக முக்கியமான ஒன்றாகும். கட்புலன் எமக்கு பிறக்கும் போதே இயல்பாகக் கிடைத்து விடுகிறது. நாளாந்தம் அதனுடனேயே வாழ்வதால் அது இல்லாத வாழ்வு பற்றி எவரும் யோசிப்பதே இல்லை. ஆயினும் ஏற்கனவே இருந்த பார்வையை இழந்த பின்னான வாழ்வின் துயரம் அளவிட முடியாததாகும்.

வயதாகும் போது பார்வையின் கூர்மை குறைவதற்கும், கண்நோய்கள் ஏற்படுவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

ஆயினும் பார்வை இழப்பிற்கு வயது மட்டும் காரணமல்ல. எமது கவலையீனமும், அக்கறையின்மையுமே முக்கிய காரணங்களாகின்றன. கண் வைத்தியரிடம் ஒழுங்கான கால இடைவெளியில் காண்பிப்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 சதவிகிதமான பார்வை இழப்புக்களை தடுக்க முடியும்.

எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிடிலும் கூட 40 வயதிற்கு பின் கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். தமது குடும்பத்தில் அல்லது பரம்பரையில் கண் நோயுள்ளவர்களுக்கு இது மேலும் முக்கியமானதாகும்.

உங்கள் பார்வையில் குறைபாடு புலப்படும் மட்டும் கண் மருத்துவரை காண்பதைத் தள்ளிப் போட வேண்டாம். ஏனெனில் ஒரு கண்ணில் கோளாறு இருந்தாலும் மற்றைய கண் அதனை ஈடு செய்துவிடுவதால் நோயாளி அதனை உடனடியாக உணர மாட்டார். எனவேதான் கண்பார்வைக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.முதலில் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பதை எடுத்துக் கொள்வோம். எம் பலரது நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக குறைந்த வெளிச்சத்தில் வாசிப்பதால் பார்வைக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவ்வாறு வாசிப்பதால் கண்கள் விரைவில் களைப்படைந்து விடும் என்பது உண்மையே.வாசிக்கும் போது படிக்கும் ஒளிவிளக்கின் வெளிச்சம் தாளின் மேல் நேரடியாக விழுவதே சிறந்ததாகும். முதுகிற்குப் பின்னிருந்து உங்கள் தோள்களுக்கு மேலாக வெளிச்சம் வாசிக்கும் தாளில் விழுவது சிறந்ததல்ல. அதேபோல ஒளிவிளக்கு உங்களுக்கு முன் இருப்பதும் நல்லதல்ல. சுற்றிவர ஒளி பரவ முடியா மறைப்பினால் (Shade) மூடப்பட்டு, வெளிச்சம் நேரடியாக உங்கள் புத்தகத்தின் மீது மட்டும் விழ வைக்கும் மேசை விளக்கே (Table Lamp) நல்லதெனலாம்.

பார்வைக்கு குறைபாட்டிற்காக கண்ணாடி அணிபவர்களில் பலர் அதனைத் தொடர்ந்து அணிந்தால் மேலும் விரைவாகப் பார்வை பழுதாகிவிடும் என எண்ணுகிறார்கள். இடையிடையே அதனைக் கழற்றி கண்ணுக்கு ஓய்வு அளிப்பது நல்லது என நினைக்கிறார்கள். இதுவும் ஒரு தவறான கருத்தே.

வாசிப்பதற்காக அல்லது தூரப் பார்வைக்காக உங்களுக்கு கண்ணாடி தரப்பட்டிருந்தால் அதனை அணியாதிருப்பது நல்லதல்ல. கண்ணாடி இல்லாது கண்ணைச் சுருக்கி, சிரமப்படுத்தி வாசிப்பதும், தூர உள்ள பொருட்களைப் பார்க்க முயல்வதும் (உதா- ரீவீ பார்ப்பது, பஸ் போர்ட் பார்ப்பது) உங்கள் கண்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்து சோர்வடையச் செய்யும்.

தொடர்ந்து கண்ணாடி அணிந்திருப்பது உங்கள் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கச் செய்யாது. அதேபோல வேறு கண் நோய்களையும் கொண்டு வராது.கரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பது எல்லோரதும் நம்பிக்கையாகும். இது ஓரளவு மட்டுமே உண்மையாகும்.

கரட்டில் விட்டமின் A இருக்கிறது. இது விட்டமின் A குறைபாட்டினால் வரக் கூடிய கண் நோயைத் தடுக்கும் என்பது உண்மையே. கண்ணுக்கு வேறு பல விற்றமின்களும் தேவைப்படுகின்றன. கரும் பச்சை நிறமுடைய கீரை வகைகள், மற்றும் பழவகைகளில் விட்டமின் A யுடன்; ஒட்சினெதிரிகள் (Antioxidents) என்று சொல்லப்படுகின்ற விட்டமின் C, E யும் இருப்பதால் மேலும் நல்லதெனலாம். இவை கட்டரக்ட், வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் பாதிப்பு (cataract and age-related macular degeneration) ஆகியவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

ஆனால் பெரும்பாலும் கண்ணாடி தேவைப்படும் நோய்களான தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை வராமல் தடுக்கவோ அல்லது குணமாக்கவோ எந்த விட்டமினும் உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் கணினி முன் இருப்பது கண்களுக்கு நல்லதல்ல என்பது முழுமையாக உண்மையல்ல.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது கண்களைச் சோர்வடையச் செய்யும். சில பாதுகாப்புகளை எடுத்துக் கொண்டால் நீண்ட நேரம் கொப்பியூட்டர் பாவிப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உதாரணமாக மேசையில் அல்லது அறையில் இருக்கும் ஒளிவிளக்கின் ஒளி கணனித் திரையில் பட்டுத் தெறித்து கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.அத்துடன் நீண்ட நேரம் கணினி முன் இருக்க நேர்கையில், மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது திரையை உற்றுப் பார்பதைத் தவிர்த்து, பார்வையை சற்று நேரம் தூரப் பொருளுக்கு நகர்த்துவதன் மூலம் கண்ணுக்கான வேலைப்பளுவைத் தவிர்க்க முடியும்.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் கண் இமைப்பது எம்மை அறியாது குறைகிறது. இதனால் கண்கள் வரட்சியடைந்து உறுத்தல் ஏற்படக் கூடும். இதைத் தடுப்பதற்கு நாமாக நினைவு கூர்ந்து அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். இதனால் கண்கள் ஈரலிப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.உடலுக்கு பயிற்சி கொடுப்பது போல கண்களுக்கும் பயிற்சி கொடுப்பதன் மூலம் கண்பார்வை குறைவதைத் தடுக்க முடியும் எனப் பலர் எண்ணுகிறார்கள். யோகா போன்றவற்றில் கண் பயிற்சியும் அடங்குகிறது. ஆனால் பயிற்சிகள் மூலம் கண் பார்வை குறைவதைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான பூர்வ ஆதாரங்களும் கிடையாது.

இதன் அர்த்தம் பயிற்சிகளால் உடலுக்கு நன்மை இல்லை என்பதல்ல. யோகா முதலான உடற் பயிற்சிகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, குருதிச் சுற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன, தசைகளைப் பலப்படுத்துகின்றன, மூட்டு நோய்களைத் தடுக்கின்றன என்பது உண்மையே.

ஆனால் பெரும்பாலான கண் நோய்கள் கண்ணின் வடிவமைப்பு, அதைச் சுற்றியுள்ள உறுப்புகளின் நலத்திலேயே தங்கியிருக்கின்றன. எனவேதான் கண் நோய்களைத் தடுக்கவோ குணமாக்கவோ பயிற்சிகளை மட்டும் நம்பியிருப்பதில் பிரயோசனமில்லை.ஆனால் நீங்கள் புகைப்பவராயின் அதனை நிறுத்துவதன் மூலம் கண்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பலவற்றையும் தடுக்க முடியும். முக்கியமாக வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் சிதைவு நோயைத் தடுக்க முடியும்.சன் கிளாசஸ் அணிவதும், தொப்பி அணிவதும் உதவும். பழவகைகள், மரக்கறிகள் ஆகியவற்றை அதிகரிப்பதும், கொழுப்பு உணவுகளை முக்கியமாக ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்த உணவுகளைத் தவிர்ப்பதும் கண்களைக் காப்பாற்ற நிச்சயம் உதவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப மருத்துவர்

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் – பழைய மாணவர் ஒன்றியம்
செயலாளர் அறிக்கை

முதற்கண் எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்தவர்கள் எல்லோரிற்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

அடுத்து எமது பழைய மாணவர் ஒன்றியக் கூட்டங்களை நடாத்த இப்பாடசாலை மண்டபத்தை எமக்கு வழங்கி வரும் இந்துக் கல்லூரி அதிபர் திரு.த.முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கும் ஒன்றியத்தின் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

15.01.2008 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் மு.க.முருகானந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்டு செயலாளர், பொருளாளர், உபதலைவர், உப பொருளாளர், உப செயலாளார், கணக்காய்வாளர், போஷகர், பத்திராதிபர், 11 செயற்குழு உறுப்பினர்கள், 7 ஆலோசகர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பௌர்ணமி தினங்களில் மாலை 4 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் 6 செயற்குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

தலைவர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் பாடசாலைக்காய் உழைக்கும் பழையமாணவர்கள் , பணஉதவிகளை நல்கியோர் , முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அதிபர் போன்றோருக்கு எமது நன்றிகள்.

ஆற்றிய பணிகள்:

இவ்வருட பரிசளிப்பு விழாவிற்கு 12000 ரூபா பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

நினைவுப்பரிசில்களாக பெறப்பட்ட நிதி பாடசாலையின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்து.
இதற்கு
திரு இராஜ் சுப்பிரமணியம்,
திருமதி காசி விசுவநாதர்,
திரு க.மகேஸ்வரன் ,
திருமதி பரமகுருநாதர்,
திரு வேல் நந்தகுமார்,
திரு.கேதீஸ்வரன்,
திருமதி கௌரிமனோகரி,
திரு வர்ணகுலசிங்கம்
ஆகியோர் ரூபா 15 ஆயிரமும் ,
திருமதி பரமேஸ்வரன் திரு இராஜசேகரம் இணைந்து 20ஆயிரமும்,
திரு சு.சிவபாலன் 20ஆயிரமும்,
திரு இரகுநாதன் ஒருலட்சமும் அன்பளிப்புச் செய்தனர்.

இம்முறையும் நா.சண்முகதாசன் 20 ஆயிரம் பரிசளிப்பு விழாவிற்கு வழங்கியிருந்தார். அப்பணமும் அதிபருக்கு அனுப்பப்பட்டது.

நூல் நிலையத் தளபாடங்களிற்காக திரு இராஜ் சுப்பிரமணியம் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அவரின் உறவினர்கள் உதவ முன்வந்துள்ளனர்.

உதவிகளுக்காக யாழ் அரச அதிபர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

கட்டிட உதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.

நினைவுப்பரிசில் வழங்கியவர்களைப் படங்களுடன் விபரங்கள் இட்டு காட்சிப்பலகை ஒன்றை ஆக்கிப் பாடசாலைக்கனுப்பி பொருத்தியுள்ளோம்.

மெல்லக் கற்பவருக்காக செயற்றிட்டம் ஒன்றைத் திட்டமிட்டு பண உதவிகள் கோரினோம். திரு.இ.சுவாமிநாதர் மட்டும் 5000 தந்திருந்தார். போதிய பணமின்மையால் 2009ம் ஆண்டிற்கு ஒத்திப் போட்டுள்ளோம். இதற்கு ஒரு வருடத்திற்கு 40000 தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்ய வேண்டியவை:

கழிவறைகள் சுத்தம் செய்யும் செயற்பாட்டை 2009 இல் இருந்து ஆரம்பித்தல்.

ஆசிரியர்கள் சைக்கிள் நிறுத்துவதற்கு நிறுத்துமிடம் அமைத்தல்.

சிறிய பாடசாலையின் கிணற்றை மூடி வலையடித்தல்.

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான திட்டத்தைத் தொடர்தல்.

எனவே இனிவரும் செயற்குழுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு இங்கு சமூகமளித்தவர்கள் உட்பட இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலையின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி உதவிகளை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏ.எஸ்.சற்குணராஜா
செயலாளர்

Read Full Post »

>பார்த்தாயே ஒரு பார்வை
உன் பார்வையின் பொருள் என்ன?

காலையில் …
படியிறங்கி தலைநிமிர்ந்து
கையசைத்துப் பிரிகையில் ….
இரவு
மணியொலிக்காது
நிழலாட்டமாய்
உடலசைத்து
ஜன்னலருகே
வரவு சொல்கையில் ..
பார்க்கிறாயே ஒரு பார்வை ….

அன்று நீ
சிவப்பு நிக்கர் பொம்மையாக
சின்னஞ்சிறு என்
சிவப்பு சைக்கிள்
மணியோசை சுழன்றடிக்க
மென்பாதம் சிவந்தழ
ஓடோடி வந்து
வெள்ளிப் பூச்சணிந்த
வெளிக்கேற்றின்
கம்பிகள் ஊடறுத்து
பார்த்தாயே ஒரு பார்வை
உன் பார்வையின் பொருள் என்ன?

பின்னொரு நாள்
குறும்பாவாடை ஜக்கற்றில்
கொழும்பு பார்க்க வந்திருந்தாய்
விடுமுறையில்.
வீட்டிலிருந்தாலும் கண்ணிற்குள்
சிறைப்படாதிருந்தாய் …
பயணப்படச் செல்கையில்
பொதி சுமக்கும் மாடாக பின் தொடர்ந்தேன்.
கல்கிஸ்ஸ பஸ்தரிப்பில்
ஐயா சொடுக்கிவிட
படியேறி உள் மறையு முன்
சட்டெனத் திரும்பி
வெட்டெனப்
பார்த்தாயே ஒரு பார்வை
உன் பார்வையின் பொருள் என்ன?

இன்னொன்றும் நினைவுத் தடங்களில் அலைக்கழிக்கிறது.

பட்டுத் தாவணியுடுத்தி,
பந்தங்கள் சூழ்ந்திருக்க
மணமேடை பார்ந்திருந்த
சொந்தங்களுக்கு
குளிர்பானத் தட்டெடுத்து
சுழன்றடித்து
நடந்தும், குனிந்தும், பறந்தும், திரிந்தும் …
சிட்டுக் குருவியென சிறகடித்தாயே

அவ்வழகை
ஸ்டோர் காப்பாளனாய்
அருகிருந்த அறையிருந்து
களவாய் பருகையிலே
சட்டெனத் திரும்பி
வெட்டென …
வெறும் அருட்டல் எனக் கூறாதே
பார்த்தாயே ஒரு பார்வை
உன் பார்வையின் பொருள் என்ன?

தடமழியா நாள் ..

பட்டுச்சேலை, பதக்கங்கள்
நெற்றிச்சரம்
மணவறையில் முகந்தாழ நீ
தோழியாய் பின்நின்ற தங்கையுடன்
பேசும் பாவனையில் தலைதிருப்பி
உன்முகம் பார்க்கையிலே
சிமிக்கிடாது, சில்மிசம் காட்டாது,
சட்டென
கடைக் கண்ணால்
பார்த்தாயே ஒரு பார்வை
உன் பார்வையின் பொருள் என்ன?

பிரசவ அறை,
கட்டிலில் நீ
வேதனையும்,
இரவிரவாய்க் கண்விழித்து
இருபது மைல் பயணித்து
இன்னமும் கைகூடா அயர்ச்சியும்
கைநீவியபடி பதைபதைப்பில் நான்

யுகம் யுகமாய்
உனக்கும் எனக்கும் மட்டுமான உலகு ..

ரம்யமான குழலோசை
உன் உடலிருந்து
பிறந்து வந்த ஜீவனின்
ஜனன கீதம்
கேட்டதுமே
உதிரம் போய் வெளிறிய
முகந் திருப்பி
பார்த்தாயே ஒரு பார்வை
உன் பார்வையின் பொருள் என்ன?

வாழ்க்கையில் வசந்தங்கள்
குழந்தைகள்
கூட்டங்கள்,விழாக்கள்
பயணங்கள்
கூடு கலைந்து புதுவாழ்வு
கூடியிருந்து தொழில்
இன்னும் எத்தனை எத்தனை
இன்பங்கள் எமக்கான
உலகில்.
எழிலும் ரம்யமுமாக
எல்லாமே வளமாக …

கோலங்கள் மாறின
அதிர்ந்தொலித்தன
கேட்டறியா ஓசைகள்
வானம், பூமியெங்கும்.
ஓலங்கள் பெருகின
தேசங்கள் சிதைந்தன
வயதினர் மறைந்தனர்
உறவினர் பிரிந்தனர்
நட்புகள் கலைந்தன
வாழ்வுகள் சிதைந்தன
பிள்ளைகள் புகுந்தனர்
பிறதேசம்

எல்லாமே
கலைந்தனவே
கனவுகள் தாமா?
இன்று சிறு கூட்டில்
நானும் நீயுமாக
தொழில் எனக்கு பொழுதெல்லாம்
சிறை உனக்கு நாளெல்லாம்.

படியிறங்கையில்
தலைநிமிரந்து கை அசைக்கையில் ..
இரவு திரும்பி
நிழலாட்டமாய்
ஜன்னலருகே
உடலசைத்து மணியடிக்காது
வரவு சொல்கையில் ..
பார்க்கிறாயே ஒரு பார்வை

பார்க்கிறாயே ஒரு பார்வை
வாழ்வின் அர்த்தமே
இப்பொழுதான் புரிகிறது.

-: அழகு சந்தோஷ் :-

Read Full Post »

>அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.

இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக இல்லை என அதிருப்திப்படுகிறான்.

மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு, பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத வியர்வை, உடல் உழைவு.

இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?

இவர்கள் வயது 50க்கு சற்று கூட அல்லது குறைய. மாதவிடாய் முற்றாக நிற்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

முதற் பெண்ணுக்கு சிறுநீர்ப் பரிசோதனை செய்தபோது கர்ப்பம் தங்கவில்லை என்பது உறுதியாகிற்று.

மாதவிடாய் முற்றாக நிற்பதற்கு முந்தைய காலங்களில் இவ்வாறு பிந்தி வருவது சகசம். நாற்பது வயதை அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் குழப்பங்கள் சிலரில் ஆரம்பித்து விடும்.

ஆரம்பத்தில் 8 நாள் 10நாள் என முந்தி முந்தி வரும். ஆயினும் நாட் செல்லச் செல்ல பிந்தத் தொடங்கும். 10, 15 நாட்கள் என ஆரம்பித்து 2,3 மாதத்திற்கு ஒரு தடவையென தாமதமாவதுண்டு.

ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. திடீர் என எவ்வித ஆர்ப்பாட்டம் இன்றி நின்று விடுவதும் உண்டு. மோசமாக நிலையில் குருதி இறைத்து சத்திரசிகிச்சை வரை போவதும் உண்டு.

எவ்வாறாயினும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 24 மாதங்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 12 மாதங்களுக்கும் தொடர்ந்து வராதிருந்தால் மட்டுமே மாதவிடாய் முற்றாக நின்று விட்டதென நிச்சயமாகக் கூறலாம். சாத்தியங்கள் குறைவாயினும் அதுவரை கரு தங்காது என அறுதியாகக் கூறமுடியாது. இவ்வயதில் கருத்தடை முறையாக ஆண் உறை பாவிப்பது பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது பெண்ணுக்கு மாதவிடாய் முற்றாக நின்றுவிட்டதால் உறுப்பின் மென்சவ்வுகள் முதிர்ந்து அவளது பிறப்புறுப்பு சற்று இறுகிவிட்டது. அத்துடன் அதற்கு ஈரலிப்பையும் வழவழுப்பையும் தரும் சுரப்பிகளின் செயற்பாடு குறைந்ததால் வரட்சியாகிவிட்டது. இதனாலேயே உறவு சுகமாக இருக்கவில்லை.

இதற்காக கணவனும் மனைவியும் கடுகடுப்பாகி சினத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வரட்சியையும், இறுக்கத்தையும் தணிக்கக் கூடிய கிறீம் வகைகள் இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதின் மூலம் குடும்ப வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசவைக்கலாம்.

மூன்றாவது பெண்ணுக்கு ஏற்பட்ட வியர்வை, பதற்றம், படபடப்பு, தூக்கக் குறைவு, முதலானவை மாதவிடாய் நிற்கும்போது நிகழும் ஹோர்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது. நோhயாளிக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் இவ்வறிகுறிகள் வீட்டில் உள்ள ஏனையவர்களால் பொதுவாக உணரப்படாதவை.
‘என்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய Fuss பண்ணுகிறா’ என அவர்களை எண்ண வைக்கும்.

தினசரி உடற்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, குளிர்ச்சியான சூழல் போன்றவை இவ்வறிகுறிகளைத் தணிக்க உதவும். Evening primrose oil, Soya, மற்றும் சில கிழங்கு வகைகளிலிருந்து பெறப்படும் இயற்கை பொருட்கள் அவ்வறிகுறிகளைத் தணிக்கின்றன என நம்பப்படுகிறது.

இவற்றால் முடியாதபோது ஹோர்மோன் மாத்திரைகளை சில காலம் உட்கொள்ள வேண்டி வரலாம்.

மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன.

மேற்கூறிய மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும் தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச் சிந்துதல், இருமும்போதும், தும்மும்போதும், முக்கும்போதும் தன்னையறியாது சிறுநீர் சிந்துதல் போன்றவை சில்லறைப் பிரச்சனைகள் போல் தோன்றினாலும், நோயாளிக்கும் வீட்டினருக்கும் சிரமங்களையும் மனவிரிசல்களையும் ஏற்றபடுத்தக் கூடியளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எலும்புத் தேய்வு (Osteoporosis), இருதய நோய்கள் போன்ற வேறு சில பாதிப்புகளும் மாதவிடாய் முற்றாக நின்றபின் பெண்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.


தலை முடி உதிர்ந்து மென்மையாகி சோபை இழப்பது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும்.

‘வயதாகிவிட்டது. என்ன செய்வது? போறமட்டும் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்’ என விரக்தியோடு வாழ வேண்டியதில்லை. பெண்ணாய்ப் பிறந்த பாவம் என கழிவிரக்கம் கொள்ள வேண்டியதில்லை.

நீங்களும் மற்றவர்கள் போல மகிழ்வோடு வாழலாம். வசந்தங்கள் மீண்டும் வரும்.

இவற்றைக் குணமாக்க மருத்துவம் இருக்கிறது. ஒரு சிலவற்றை முற்றாகக் குணமாக்க முடியாவிட்டாலும் பிரச்சனைகளின் தாக்கங்களைத் தணித்து நலமாகவும் மகிழ்வாகவும் வாழ வழிகள் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். தயக்கத்தை விட்டு உங்கள் பிரச்சனைகளை மருத்துவருடன் வெளிப்படையாகக் கலந்துரையாடுங்கள். வெளிப்படையாக என்பதை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »