Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2012

“இந்தப் பிள்ளைக்கு சரியான வயிற்று வலி” சிங்களத்தில் சொன்னார்.

நான்கே வயதான குட்டிப் பையனை இரு கைகளாலும் கிடையாகத் தூக்கி கொண்டு வந்தார்.

ஓட்டமா நடையா என்று சொல்ல முடியாத வேகம். அந்தரப்பட்டு  வந்திருந்தார்.


குழந்தை படுக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் வேதனையில் முனங்கியபடி திணறிக் கொண்டிருந்தது.

“ஒண்டுமே சாப்பிடுதும் இல்லை. குடிக்கிதும் இல்லை.” என்றாள் தொடர்ந்து வந்த பெண்.
பின்னால் ஒரு பெரிய கூட்டம்.

எனது கொன்சல்டேசன் அறைக்கு அப்பால், நடைபாதை, வரவேற்பறை எல்லாம் நிறைந்ததால், வாசலில் தெருவோரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

பொது கழிப்பறையில் நிலமெல்லாம் பரவும் மூத்திர வெள்ளம் தோற்றுப்போகும்

தேசத்தின் தென்கோடியிலிருந்து சுற்றுலா வந்திருந்தார்கள். பஸ் நிறையச் சனம். நேற்று இரவு புறப்பட்ட பயணம். இரவிரவாகப் பயணித்து கொழும்பு வந்திருந்தார்கள்.

அதனால்தான் பட்டியிலிருந்து திறந்துவிட்ட மாடுகள் போல, சாலை விதிகளை மதிக்காது சிதறிக் கிடந்தார்கள்.

மிருகக் காட்சிசாலை, நூதனசாலை எனக் காலையில் சுற்றியடிக்கும்போது குழந்தைக்கு வலி தொடங்கிவிட்டது. என்னிடம் வரும்போது மதியம் தாண்டிவிட்டது. குழந்தை வலியால் மயங்காத குறை.

“படுக்கையில் கிடந்துங்கோ. சோதித்துப் பாப்பம்”

தகப்பன் கிடத்த முயன்றபோது சிவபெருமான் கழுத்தில் பாம்பாக குழந்தை கைகளால் சுற்றிக் கொண்டது.

தூக்குக் கயிறாகி தகப்பனை கைலாசத்திற்கு அனுப்பிவிடும் என்ற பயத்தில் பரிசோதிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று.

“குழந்தை என்ன சாப்பிட்டது”

“காலையிலை பணிஸ் சாப்பிட்டு பாலும் குடிச்சது. பிறகு சோடாவும் குடிச்சது. இப்ப இரண்டு மணித்தியாலமாகத்தான் இந்தக் குத்து.”

வந்த இடத்திலை கண்ட சாப்பாட்டையும் பிள்ளைக்குச் சாப்பிடக் கொடுத்திருக்குங்கள். செமியாமல் இருக்கும். அல்லது உணவு நஞ்சானதால் ஏற்பட்டிருக்கும்.

“சத்தியும் இருக்கோ?” எனக் கேட்டேன்.

“இல்லை” எனப் பதில் வந்தது.

காய்ச்சல் இருக்கோ எனத் தொட்டுப்பார்க்க முயன்றேன்.

தொற்றாட் சுருங்கிபோல என்னைக் கண்டதும் சோர்ந்தது குழந்தை.எனது கையில் தனக்கெதிரான ஆயுதங்கள் எதுவும் இல்லை என அறிந்ததும் நிம்மதியடைந்தது. ஊசி, காய்ச்சல் கம்பி, ஸ்டெதஸ்கோப் எதுவும் என் கையில் இருக்கவில்லை!!.

தொட்டபோது உடல் வியர்திருந்ததே ஒழிய காய்ச்சல், குளிர் எதுவும் இல்லை.

கடுமையான வலியாக இருப்பதாலும், குழந்தை படுக்க முடியாமல் குறண்டியபடி தகப்பன் கைகளில் சுருண்டு கிடப்பதால் குடல் கொழுவல், அப்பன்டிசைடிஸ், பெரிடனைடிஸ் என ஏதாவது ஏடாகூடமான நோயாக இருக்கலாம்.

தீவிரமாக யோசிக்க வேண்டியிருந்து.

நோயைப் பற்றி அல்ல! எவ்வாறு குழந்தையை படுக்கையில் விட்டுப் பரிசோதிப்பது என்பதையிட்டு.
அப்பொழுது சுவீப் எனக்கு விழுந்தது.

பிள்ளையைதை் தொடாமலே நோயை ஊகிக்க முடிவதைவிட வேறென்ன சுவீப் எனக்குக் கிடைக்க முடியும்?

குழந்தை சற்று அமைதியாகி தனது தகப்பனின் கைகளில் சற்று உடலை நிமிர்த்திப் படுத்தது. குறண்டிக் கிடந்த உடல் நிமிர அதன் வயிற்று பகுதி தெளிவாகத் தெரிந்தது.

“பிள்ளையை பாத்ரூமிற்கு கொண்டு போய் காலை நன்கு குளிரக் கழுவிட்டு மூத்திரம் கழிக்க விடுங்கோ”
ஆச்சரியம் தகப்பன் முகத்தில் படர்ந்தது.

குழந்தை பரிசோதிக்காமல், வேதனையைத் தணிக்க மருந்தும் தராமல் பாத்ரூமிற்குக் கலைக்கிறாரே என்றதில் சிறிது கோபமும் தெறித்தது போலிருந்தது.

மறுக்க முடியாமல், வெறுப்போடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றார்.

திரும்பி வந்தபோது குழந்தையின் முகத்தில் வேதனையின் சுவட்டையே காண முடியவில்லை.

கட்டிலில் கிடத்தியபோது மறுப்பின்றி நீட்டி நிமிர்ந்து படுத்து, ஆயாசம் அடங்க கண்ணை மூடியது.

வயிற்றைப் பார்த்தேன்.

அடிவயிற்றில் இருந்த முட்டி காணமல் போயிருந்தது. தொட்டபோது வேதனை இல்லை.

வேறொன்றும் இல்லை. இரவிரவாகப் பயணம், பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பொழுதுபோக்கு. முதல் நாள் இரவிலிருந்து சிறுநீர் கழியாததால், அடைத்து வயிறு வீங்கி வலி எடுத்திருந்தது.

காலைக் கழுவி உடலைச் குளிர வைத்ததும் அடைத்த பைப் திறந்துவிட்டது.

திறந்து மூத்திரம் வெளியேற்றியதும் முட்டி போல வீங்கியிருந்த மூத்திரப்பை காலியாகிவிட்டது.

வலி குணமாகிவிட்டது.

அடுத்த முறை இரவு பஸ்சில் யாழ்ப்பாணம் போகும்போது எனக்கு வயிற்றுக் குத்து வந்தால் என்ன செய்வது என்ற பயம் வந்தது.


பாவி பஸ்காரர்!

வெள்ளவத்தையில் வெளிக்கிட்டு ‘நொன் ஸ்டொப் டிரைவிங்’ செய்தால் வயது போன ஆம்பிளையள், அதுவும் புரஸ்ரேட் வீக்கக்காரர் பாடு அதோகதிதான்.


கணவன் கழிப்பதற்கு மனிசிமாரால் தூக்கிக் கொண்டு போக முடியுமா?

எலக்சன் காலத்திலை அரசாங்கக் கட்சி வேட்பாளருக்குத் தெரிந்திருந்தால், வீதி எங்கும் கக்கூஸ் (பாத்ரூம்) கட்டுவதாக வாக்களித்திருப்பார்கள்.

பிறகென்ன?

தோற்றவுடன் காணாமல் போயிருப்பார்.

ஞாயிறு வீரகேசரியில் நான் எழுதிய கட்டுரை

எனது அனுபவப் பகிர்வு புளக்கான Steth இன் குரல் ல் ஏற்கனவே வெளியான கட்டுரை

Read Full Post »

ஏப்பம் தொல்லை மானத்தை வாங்குகிறது

ஏவ்! ஏவ் என்ற பெரிய ஏப்பச் சத்தம் வைத்தியசாலை முழுவதும் எதிரொலிக்குமாற் போல ஓங்காரமாக ஒலித்தது. எனது நோயாளர் சந்திப்பு அறையை நோக்கி அச் சத்தம் நெருங்கவும் நான் தலை நிமிர்ந்து பார்த்தேன்.

உடல் கனத்த பெரியவர் உற்சாகமற்ற முகத்துடன், மிகுந்த சோர்வுடன் உள்ளே நுழைந்தார்.

சேலை அவிண்டு விழ அம்மணமாக நிற்பது போன்ற அவமானம் கூட வந்த பெண் முகத்தில் முகத்தில் தெறித்தது.

“இவருக்கு சரியான வாய்வுத் தொல்லை. பெரிய சத்தமாகப் பறியும். பிளட்ஸ்(Flats) வீடு, அக்கம் பக்கமெல்லாம் சிரிப்பாய் சிரிக்குது. மானம் பறக்குது” என்றாள்.

உண்மையில் வாய்வு, ஏப்பம் போன்றவையெல்லாம் இயற்கையான நிகழ்வுகள்தான். இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை.

ஆயினும் நாலு பேர் மத்தியில் வெளியேறும் போது சற்று அநாகரீகமான, மரியாதைக் கேடான செயலாகத்தான் சமூகத்தில் கணிக்கப்படுகிறது.

மாறாக வேறு சிலர் அதனை மிகுந்த ரசனையோடும் பெருத்த சத்தத்தோடும் வெளியிட்டும் மகிழ்சி கொள்கின்றனர். அது அவர்களுக்கு மனஅமைதியைக் கொடுக்கிறது.

ஏப்பம் என்பதுஎன்ன?

ஏப்பம் என்பது எமது உணவுத் தொகுதியில்சேர்ந்துவிட்ட மேலதிக காற்றை வெளியேற்றும் வழமையான செயற்பாடுதான்.

 • இந்தக் காற்றைத்தான் நாம் வாய்வு என்கிறோம்.
 • காஸ் என்று சொல்லாரும் உளர்.
 • வயிற்றுப் பொருமல், வயிற்று ஊதல் போன்றவையும் இதனோடு தொடர்புடைய விடயங்கள்தான்.

வாய்வு என்பது என்ன? இது எவ்வாறு உணவுத் தொகுதியை அடைகிறது?

 • நாம் உண்ணும் உணவுகள் ஜீரணமடையும் போது நுண்ணங்கிகளின் தாக்கத்தால் வாய்வுகள் இயற்கையாக குடலுக்குள் வெளியேறுகின்றன.
 • அத்துடன் உணவு உண்ணும் போதும், நீராகாரம் அருந்தும் போதும் அவற்றோடு சேர்ந்து உட்செல்லுகின்ற காற்றும் சேர்ந்து விடுகிறது.
 • இவை அதிகமாகச் சேரும்போதே வயிறு ஊதலாகத் தோன்றும். வயிற்றுப் பொருமல், சமியாப்பாடு என்றும் சொல்வார்கள்.

இந்த வாய்வுக்கள் எங்கே சேர்ந்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே ஏப்பமும் வாயு பறிதலும் நிகழ்கின்றன.

 • இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறுகின்றன. ஆங்கிலத்தில் Belching or burping என்கிறார்கள்.
 • இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால் வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஏப்பம் என்பது ஒருவருக்கு தன்னிச்சையாக வாய்வு வெளியேறுவதாக அமையலாம். அல்லது அவர் தானாக விரும்பி வெளியேற்றுவதாகவும் நடைபெறலாம். அதாவது வயிறு உப்பலாக அல்லது வயிற்று முட்டாக இருந்தால் ஒருவர் தானகவே காற்றை ஏப்பமாக வெளியேற்றிச் சுகம் காண முயலுவதுண்டு.

ஏப்பங்கள் பலவிதம்

ஏப்பமானது எப்பொழுதும் பெரிய சத்தமாகத்தான் வெளியேறும் என்றில்லை.

 • சத்தமின்றி அல்லது மிகவும் தணிந்த சத்தத்துடன் வெளியேறும் ஏப்ப வாய்வு எமது கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதே உண்மையாகும்.
 • உணவின் பின் மூன்று நான்கு தடவைகள் ஏப்பம் விடுவது எவருக்குமே சாதாரண நிகழ்வுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 • அதே போல ஒவ்வொருவருக்கும் தினமும் ஆறு முதல் இருபது தடவைகள் வரை வாய்வானது மலவாயில் ஊடாக வெளியேறலாம் என்கிறார்கள்.
 • பெரும்பாலும் மலம் கழிக்கும் போது வெளியேறுவதால் எவரும் கவனிப்பதில்லை. ஆனால் ஓட்டைக் கார் புற்படுவது போன்ற பெரிய சத்தத்துடன் வெயியேறும்போது சங்கடமாகவே இருக்கும்.
 • ஆசூசையான மணத்துடன் குசுவாக வெளியேறுவது குடலில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம்.

தடுக்கும் வழிகள் எவை?

வாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்?

 1. அவசர அவசரமாக உணவுகளையும் நீராகாரங்களையும் உட்கொள்ளாதீர்கள். அவ்வாறு உட்கொள்ளும் போது அவற்றுடன் காற்றும் உட்சென்று வாய்வுத் தொல்லை ஏற்படும்.
 2. சோடா போன்ற மென்பானங்களில் நிறைய காற்று சேர்ந்திருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.
 3. பயறு, கடலை, சோயா, பருப்பு போன்ற உணவு வகைகளில் உள்ள புரதங்கள் சமிபாடு அடைவதற்கு சிரமமானவை. இவற்றை நன்கு வேக வைத்து உண்டால் சுலபமாக சமிபாடு அடைவதுடன் வாய்வு தோன்றுவதும் குறையும்.
 4. இரப்பையிற்கும் களத்திற்கும் இடையேயான வால்வ் சரியாகச் செயற்படாமை மற்றொரு காரணமாகும். Gastroesophageal reflux disease (GERD) என்பார்கள். இது பாரதூரமான நோயல்ல.
 5.  மலக்குடற் சிக்கல், குரொனஸ் நோய் போன்றவையும் வாய்வுத் தொல்லையை உண்டாக்கலாம்.
 6. இவற்றைத் தவிர மனோவியல் காரணங்களாலும் ஏப்பம் வரலாம். உடல் நோயின்றி ஏற்படும் Functional dyspepsia அவ் வகையைச் சார்ந்தது. இந்த நோயாளியின் நோயும் அத்தகையதே. பூரண குணமாவதறடகு நீண்ட கால சிகிச்சை தேவைப்பட்டது.

எத்தகைய உணவுகள்

எத்தகைய உணவுகள் வாய்வை அதிகம் ஏற்படுத்துகி்னறன?

 • பருப்பு, பயறு, சோயா, கடலை, போஞ்சி, பயிற்றங்காய் போன்ற அவரை இன மரக்கறிகள்
 • கோவா (முட்டை கோஸ்), காலிபுளவர், brussels sprout, கார்பனேற்றப்பட்ட பானங்கள் (மென்பானங்கள், கோலா போன்றவை),
 • ஆப்பிள், பியர்ஸ், peaches போன்ற பழங்கள்
 • Lettuce போன்ற இலைவகைகள்
 • சூயிங்கம்
 • கடினமான டொபி வகைகள் (Hard candy)

எண்ணெய், கொழுப்பு, பொரித் உணவு வகைகள் சிலருக்கு வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தும். இவை விரைவில் சமிபாடடையாது கூடிய நேரம் இரைப்பையில் தேங்கி நிற்பதால்தான் வயிற்றுப் பொருமல் ஏற்படுகிறது

பலரும் சொல்வது போல மலச்சிக்கலால் வயிற்று ஊதல் ஏற்படுமே ஒழிய வாய்வுப் பிடிப்பு ஏற்படுவதில்லை. அதாவது உடலில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை வாய்வுப் பிடிப்பு என்று சொல்லிவிடுகிறார்கள். அது தவறான சொல்லாடல் ஆகும்.

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

நீரில் இறங்காமல் நீச்சலா?

பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று.

“நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை… இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது.”

இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை.

ஆனால், நீரில் இறங்காமல் நீந்தப் பழக முடியுமா?

உடற்பயிற்சி எவ்வளவு தேவை?

உடற்பயிற்சி எல்லோருக்கும் அவசியம்தான். ஆனால், எவ்வளவு தேவை?

இதுபற்றிய மருத்துவர்களின் கருத்துகள் கூட காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது.

 • “வாரத்தில் மூன்று நாட்களுக்கேனும் 20 நிமிடங்களாவது ஓடுவது போன்ற கடும் பயிற்சி தேவை” என 70- 80 களில் கூறினார்கள்.
 • ஆனால், 90 களில் கடும் பயிற்சி தேவையில்லை. வேகமாக நடப்பது போன்ற நடுத்தர வேகமுள்ள பயிற்சிகளை வாரத்தில் 5 நாட்களுக்கேனும் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும் என்றார்கள்.
 • இப்பொழுது தினமும் 60 நிமிடங்கள் வரையான நடுத்தர பயிற்சி மீண்டும் என்கிறார்கள்.

எனவே, உடற்பயிற்சி அவசியம் என்பதை வைத்தியர்களும் சரி நோயாளிகளும் சரி ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், வைத்தியர்கள் சொல்லும் அளவிலான பயிற்சியைச் செய்ய பலருக்கும் முடிவதில்லை. உடலால் முடிவதில்லை என்பது ஒரு காரணம், நேரம் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணமாகும்.

ஒரு ஆய்வு

Dr.Timothy S.Church தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். அதன் முடிவுகள் JAMA 2007:297:20812091 இதழில் வெளியாகியிருந்தன. மாதவிடாய் நின்றுவிட்ட, அதீத எடையுள்ள, உடலுழைப்பு அற்ற 464 பெண்களை உள்ளடக்கிய ஆய்வு அது. ஆறு மாதங்கள் செய்யப்பட்டது. உடற்பயிற்சியே செய்யாதவர்கள், வெவ்வேறு அளவிலான பயிற்சிகளைச் செய்தவர்கள் என நான்கு பிரிவினராக வகுத்துச் செய்யப்பட்ட ஆய்வு அது.

தினசரி 10 நிமிடங்கள் அதாவது வாரத்தில் 75 நிமிடங்கள் மட்டும் பயிற்சி செய்தவர்களுக்குக்கூட அவர்களது இருதயத்தினதும் சுவாசப்பையினதும் ஆரோக்கியமானது எந்தவித பயிற்சிகளையும் செய்யாதவர்களை விட அதிகரிக்கிறது என அவ் ஆய்வு புலப்படுத்தியது.

ஆனால், இந்தளவு பயிற்சியானது ஒருவரின் எடையைக் குறைக்கவோ, பிரஸரைக் குறைக்கவோ போதுமானதாக இல்லை என்பது உண்மைதான். ஆயினும், வயிற்றின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கிறது. இது பொதுவான ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குறைந்த அளவிலான பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் மேம்பட்டால் பிற்பாடு கூடியளவு பயிற்சி செய்வதற்கான உடல் நிலையையும் மேலும் தொடர்ந்து பயிற்சிகளைத் தொடர்வதற்கான மன ஊக்கத்தையும் பெறுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது மேலும் கூடிய உடல் ஆரோக்கிய எல்லைகளை எட்டுகிறார்கள் என்பதே முக்கியமானது.

பயிற்சிகள் எத்தகையவை

இரண்டுவிதமான உடற்பயிற்சிகள் அவசியமாகும்

 1. லயவயப்பட்ட அசைவியக்கப் பயிற்சிகள் (Aerobic Exercises)

 • இத்தகைய பயிற்சியை நீங்கள் வேகமாகச் செய்வதானால் வாரத்திற்கு 75 நிமிடங்கள் செய்ய வேண்டும். (ஓடுதல், சீரான துள்ளோட்டம் Jogging, வேகமான நீச்சல், காற்பந்தாட்டம், ஹொக்கி, தனி டெனிஸ், தற்காப்பு கலைகள்(martial arts ), வேகமான நடனம் போன்றவை)
 • ஆனால் நடுத்தர வேகத்தில் (வேகமான நடை, நீச்சல்,கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இரட்டையர் டெனிஸ், சைக்கிள் ஓட்டம்  போன்றவை) செய்வதானால் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
 • ஓரிரு நாட்களில் அத்தனை பயிற்சியையும் செய்து முடிப்பதை விட வாரத்தில் 5 முதல் 7 நாட்களுக்கும் பிரித்துச் செய்வது நல்லது.
 • கடுமையானது மற்றும் நடுத்தரமானது ஆகிய இரண்டையும் கலந்து செய்பவர்களும் உண்டு.

2.  தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் (Strength training)

 • இவற்றை வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது செய்ய வேண்டும்.
 • உதாரணமாக எடை தூக்குதல், மலை ஏறுதல், கொத்துதல் போன்ற கடுமையான தோட்ட வேலை, உடற்பயிற்சி இயந்திரங்களில் பயிற்சி போன்றவை.
 • யோகசனமும் இவ் வகையைச் சேர்ந்ததே.

எனவே, சோம்பிக் கிடக்காதீர்கள். சிறிய அளவிலான உடற் பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். உடல் நலம் நாடி வரும், பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும்.

எடையையும் குறைக்க விரும்பினால் பயிற்சிகளை வாரத்தில் 300 நிமிடங்களாவது செய்ய வேண்டும். அதாவது சராசரியாக தினசரி 45 நிமிடங்கள் தேவைப்படும்.

உடற் பயிற்சி பற்றிய ஏனைய இரு பதிவுகள்

வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல் – நடைப்பயிற்சி

எடையைக் குறைக்க …சில அற்புத வழிகள் (நகைச்சுவைப் பதிவு)

0.0.0.0.0.0.0.0

Read Full Post »