Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘புகைத்தல்’ Category

எனக்கு 30 வயது. புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து மீள எவ்வளவு முயற்சித்தாலும் முடியவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?

கே. கவின் நெல்லியடி

புதில்:- உங்கள் கேள்வியில் உள்ள இரண்டு விடயங்கள் முயற்சி நீங்கள் வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

முதலாவது புகைத்தலுக்கு அடிமையாகிவிட்டதாக நீங்களே உணர்ந்து அதிலிருந்து மீள வேண்டும் என தீர்மானித்ததாகும். புகைத்தலைக் கைவிடமுடியுமா என்ற அவநம்பிக்கையுடன் பலர் தயங்கிக் கொண்டிருக்கும் போது விடுபட வேண்டும் என்ற தீர்மானமானமானது நிச்சயம் நம்பிக்கை ஊட்டுவதாகும். உங்கள் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான முதல் வெற்றி அதிலேயே நிச்சயமாகிவிட்டது.

புகைத்தலிருந்து விடுபட வேண்டும் என்ற தீர்மானாமானது மீள்வதற்கான முதற்படி மட்டுமல்ல உங்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய அடி எனலாம். நீங்கள் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் அத்தகைய முதலடியுடன் ஆரம்பித்தே புகைத்தலைக் கைவிடுகிறார்கள்.

இரண்டாவது விடயம் நீங்கள் பலமுறை முயன்றும் விடுபட முடியவில்லை என்பதாகும். நீங்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் மீண்டும் புகைக்க நேர்வதால் கைவிட முடியவில்லை என நினைக்கிறார்கள். அதையிட்டு அவநம்பி;கை கொள்கிறார்கள். ஆனால் முக்கியமான விடயம் என்வென்றால் இவற்றையெல்லாம் தாண்டியே பெரும்பாலானவர்கள் முற்றாகக் கைவிடுகிறார்கள் என்பதாகும்.

எனவே அவநம்பி;க்கை கொள்ளாதீர்கள். நிச்சயம் கைவிடுவீர்கள் உங்கள் தீர்மானம் உறுதியாக இருந்தால்.

முதலில் செய்ய வேண்டியது யாதெனில் நீங்கள் புகைத்தலை நிறுத்துவதற்கென ஒரு குறிப்பிட்ட தினத்தைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் அந்தக் கால இடைவெளிக்குள் புகைத்தல் இல்லாத காலத்தை பற்றிய ஒரு மனநிலையை உங்களால் உருவாக்க முடியும். சிலர் குறிப்பிட்ட அந்த தினத்தில் புகைத்தலை திடீரென நிறுத்துவார்கள். வேறு சிலர் இந்தக் கால இடைவெளிக்குள் தினமும் தாங்கள் புகைக்கும் சிகரட்டின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து அத் தினத்தில் முற்றாகக் கைவிடுவார்கள்.

நீங்கள் பொதுவாக எந்த நேரத்தில் புகைப்பீர்கள். பலருக்கு மது அருந்தும் போது புகைக்க வேண்டும். வேறு சிலருக்கு சாப்பிட்ட பின்னர் தம் அடித்தால்தான் சரிப்படும். சிலருக்கு கோப்பி குடிக்கும்போது கூட புகைக்க வேண்டியிருக்கும். டென்சனாகும் போது, மன அழுத்தம் ஏற்படும் போது புகைப்பவர்கள் பலர். வாகனம் செலுத்தும்போது புகைப்பவர்கள் இருக்கிறார்கள்.

இப்பொழுது; சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக எத்தகைய தருணங்களில் நீங்கள் பெரும்பாலும் புகைப்பீர்கள் என்பதை நினைவுபடுத்துங்கள். புகைத்தலை நிறுத்திய பின்னர் உங்களுக்கு புகைத்தலை தூண்டும் அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்க முயலுங்கள். ஆனால் பல சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் புகைக்கத் தோன்றுபவர் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அவ்வாறு எனின் அந்த நேரத்தில் உங்கள் மனதுக்கு இதமான வேறு ஏதாவது ஒரு விடயத்தில் ஈடுபட முனையுங்கள்.

புகைத்தலை நீங்கள் கைவிட இருப்பதை இரகசியமாக உங்களளவில் செய்யாதீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஒருவர், உங்கள் அன்புக்கு உரிய ஒருவர் அல்லது நீங்கள் மதிக்கும் ஒருவரிடம் நீங்கள் கைவிட இருப்பதை சொல்லுங்கள். இந்த ஆலோசனையை நான் ஒருவருக்கு கூறியபோது அவர் தன் பாசத்திற்குரிய மகளின் தலையில் கைவைத்து சத்தியம் செய்து கைவிட்டார். 20 வருடங்களாகப் புகைத்த அவர் அதன் பின்னர் புகைக்கவே இல்லை. இப்பொழுது 75 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்.

புகைக்கும் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டாக புகைத்தலை நிறுத்துவதும் உண்டு. அதுவும் நல்ல பலனைத் தரக்கூடிய முறையாகும்.

ஒரு சிலருக்கு புகைத்தலை நிறுத்துவதற்கு மருத்துவ உதவி தேவைப்படும். அது பல வகைப்படலாம்.

புகையிலையில் உள்ள நிக்கரின் என்ற பதார்த்தமே புகைத்தலுக்கு அடிமையாக்குகிறது. எனவே அதை மூக்கில் அடிக்கும் ஸ்ப்ரேயாக. தோலில் ஒட்டும் மருந்தாக, வாயில் போடும் லொசென்சாக என ஏதாவது ஒரு விதத்தில் மருத்துவர்கள் கொடுத்து அதையும் படிப்படியாக நிறுத்துவதன் மூலம் கைவிட வைப்பார்கள்.

வாயினால் உட்கொள்ளும் மருந்துகளும் உள்ளன. இவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே செய்ய வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

நீங்கள் புகை பிடிப்பவரா?

தினமும் உங்கள் முதலாவது சிகரட்டை எந்த நேரத்தில் புகைப்பீர்கள்?

Young-woman-smoking-cigar-010

தினமும் எத்தனை சிகரட்டுகளைப் புகைப்பீர்கள்.

இவற்றை மனதில் கணக்கிட்டு வைத்துக் கொண்டு மேலே  படியுங்கள்.

உங்களது முதலாவது சிகரட்டை எப்பொழுது புகைக்கிறீர்கள் என்பதற்கும் வாய்ப் புற்றுநோய் மற்றும் சுவாசப்பை புற்றுநோய் எதிர்காலத்தில் வருவதற்கும் நிறையத் தொடர்பிருக்கிறதாம்.

TSNA (tobacco-specific n-nitrosamines) என்பது புகையிலைக்கே உரித்தான இரசாயனப் பொருட்களாகும். அதில் 4-(methylnitrosamino)-1-(3-pyridyl)-1-butanone (NNK)    என்பது முக்கியமானது அது புற்றுநோயைத் தூண்டக் கூடியது. அதாவது புற்றுநோய்த் தூண்டி carcinogen எனலாம். இது உடலில் சேர்ந்து மாற்றமுறும்போது NNAL என்பதாக மாறுகிறது.

எனவே குருதியில் அதிகளவில் NNAL இருப்பவர்களுக்கு புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கருதலாம் அல்லவா? புகைப்பதால்தான் இதன் செறிவு குருதியில் அதிகரிக்கும்.
இந்த பற்றிய மற்றொரு விடயத்தை கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன்.

காலை எழுந்தவுடன் …

அண்மையில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அது சொல்வதுதான் இது.
காலையில் விழித்தெழுந்தவுடன் புகைப்பவர்களுக்கே குருதியில்  NNAL குருதியில் மிக அதிகமாக இருந்ததாம். விழித்தெழுந்தவுடன் எனும்போது கட்டிலில் இருந்தே புகைப்பது என அர்த்தம் அல்ல. விழித்தெழுந்த அரை மணி நேரத்திற்குள் புகைக்க ஆரம்பிப்பவர்களுக்கு இதன் செறிவு மிக அதிகமாம்.

images

காலை எழுந்தவுடன் படிப்பவர்கள் அல்ல அவர்கள். காலை எழுந்தவுடன் புகைப்பவர்கள்.

இதில் ஆச்சரியமான அம்சம் என்னவெனில் அவர்கள் எத்தனை சிகரெட்டுகள் புகைக்கிறார்கள் என்பதை விட காலையில் விழித்தெழுந்த ½ மணி நேரத்தில் புகைப்பதுதான் குருதியில் NNAL லை அதிகம் அதிகரிக்கிறதாம்.

Public health sciences Professor  Joshua Muscat, Asst Prof Steven Branstetter ஆகியோரால் செய்யப்பட்ட இந்த ஆய்வு Cancer, Epidemiology, Biomarkers and Prevention என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

அந்த ஆய்வின் பிரகாரம் ஆய்வற்கு உட்பட்ட 1945 போரில்

  • 32 சதவிகிதமானவர்கள் காலை எழுந்து 5 நிமிடங்களுக்குள்ளும்
  • மேலும் 31 சதவிகிதமானவர்கள் காலை எழுந்து 6 முதல் 30 நிமிடங்களுக்குள்ளும் புகைத்தார்கள்.
  • 18 சதவிகிதமானவர்கள் 31 முதல் 60 நிமிடங்களுக்குள்ளும் புகைத்தார்கள்.
  • மிகுதி  19 சதவிகிதமானவர்கள் மட்டுமே காலை எழுந்து ஒரு மணி நேரத்தின் பின் புகைத்தார்களாம்.

விழித்தெழுந்தவுடன் புகைப்பவர்களுக்கு குருதியில் NNAL அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?.
மிக ஆழமாக உள்ளெடுத்தும் புகைப்பதும் சிகரட்டை முழுமையாகப் புகைப்பதும் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

காலை எழுந்தவுடன் அவசரங்கள் நெருக்கீடுகள் என எதுவும் கிடையாது. மனம் அமைதியாக இருக்கும். ஆற அமர இருந்து ஆழப் புகையை உள்ளெடுத்து முழுமையாகப் புகைத்ததால் புற்றுநோய்த் தூண்டிகளை கூடுதலாக உள்ளெடுத்திருப்பார்கள்.

சிலருக்கு ஆனந்தமாக கொமேட்டிலிருந்து இதை ஒரு பிடி பிடித்தால்தான் மலம் கழியும் என்பதைப் பற்றி ஆய்வு கிடையாது.

மற்றொரு ஆய்வு

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இந்த NNAL பற்றிய மற்றொரு தகவலை இங்கு குறிப்பிடுவது அவசியம். ஒருவரது உடலில் NNAL இருப்பதை அறியவும் அளவிடவும் முடியும். இரத்தப் பரிசோதனை தேவையில்லை. சிறுநீர்ப் பரிசோதனை செய்தால் போதும். சிறுநீரில் கலந்துள்ளதைக் அளவிடுவதன் மூலம் குருதியில் கலந்துள்ளதைக் கணக்கிட்டு அறிய முடியும்.

இதன் மூலம் புகைப்பவர்களை மட்டுமின்றி வேறுவகைகளில் புகையிலையின் தாக்கத்திற்கு உள்ளானவர்களையும் கண்டறிய முடியும்.

அதாவது மூக்குத்தூள் போடுபவர்கள், வெற்றலையோடு புகையிலை சப்புபவர்கள் போன்றோரில் இந்த நச்சு எவ்வளவு கலந்திருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.

இவற்றைத் தவிர தமது சூழலிலிருந்து புகையிலையின் தாக்கத்துக்கு ஆளானவர்களின் பாதிப்புகளையும் கணித்தறிய முடியும்.

அதாவது புகையிலையை அறுவடை செய்பவர்கள், புகையிலையோடு தொடர்புடைய தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றவர்கள் புகைக்கும்போது அருகில் இருப்பவர்கள் எனப் பலவாகும்.

ஆனால் புகைப்பவர்களில் NNAL செறிவானது புகைக்காதவர்களை விட 50 முதல் 150 மடங்கு கிடுகிடுவென அதிகரித்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீட்டில் புகைப்பது, தொழிலகத்தில் புகைப்பது போன்றவற்றால் அருகில் உள்ளவர்கள் பாதிப்படைகிறார்கள்.

  • வீட்டில் கணவன் புகைத்தால் அதிலிருந்து வரும் நச்சு வீட்டில் உள்ள மனைவி பிள்ளைகள் என அனைவரையும் பாதிக்கும்.
  • ஆனால் பெரியவர்களை விட 2-3 மடங்கு அதிகமாக குழந்தைகளைச் சென்றடைகிறது என்கிறது ஆய்வு.

அது மாத்திரமல்ல கர்ப்பணியாக இருந்தால் நச்சுக் கொடி ஊடாக கர்ப்பப்பையிலுள்ள கருவையும் இந்த NNAL நச்சுப் பொருள் சென்றடைகிறது என்பதையும் ஆய்வில் கண்டறிந்தார்கள்.

கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

ats61100_electronic-cigarette

இந்த ஆய்வு சொல்வதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?
‘புகைக்கலாம், எவ்வளவும் புகைக்கலாம், ஆனால் காலையில் எழுந்தவுடன் மட்டும் புகைக்கக் கூடாது என்பதா?’

நிச்சயமாக இல்லை.

புகைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பல வருடங்களாகவே பல ஆய்வுகள் ஏற்கனவே வந்து அவற்றின் ஆபத்துக்களை எமக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டன. புகைப்பதால் புற்றுநோய்கள் மட்டுமின்றி இருதய நோய்கள், மாரடைப்பு, ஆஸ்த்மா, சிறுநீரக நோய்கள், ஆண்மைக் குறைபாடு என பல்வேறு ஆபத்தான நோய்கள் ஏற்படும்.

Risks_form_smoking-smoking_can_damage_every_part_of_the_body

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் – Smoking 

தாய் புகைத்தலும் குழந்தையின் எதிர்கால உளநோய்களும்

எனவே அவை அதைப் பற்றிப் பேசவில்லை.
எந்த நேரத்தில் புகைப்பதால் ஆபத்துகள் அதிகம் என்பதைப் பற்றி மட்டுமே ஆராய்ந்தது. அதுவும் NNAL லால் ஏற்படக் கூடிய ஆபத்தை மட்டுமே பேசியது.

இரண்டாவது ஆய்வானது புகைப்பவருக்கு மட்டுமின்றி அருகில் இருக்கும் இச்சையின்றிப் புகைத்தோருக்கும் (passive smoking)) ஆபத்து ஏற்படும் என்பதைத் தெளிவுறுத்துகிறது.

அதுவும் குழந்தைகளையும் கர்ப்பப்பையில் உள்ள கருவையும் பாதிக்கும் என்கிறது.

ஆகவே புகைக்காதீர்கள்.

எந்த நேரமானாலும் புகைக்காதீர்கள்.

உங்களுக்காக மட்டுமின்றி உங்கள் அருகில் உள்ள உங்கள் அன்பிற்குரிய மனைவி, குழந்தைகள் நண்பர்கள் போன்ற அனைவரது நலத்திற்காகவும் புகைக்க வேண்டாம்.

என்றும் எப்பொழுதும் புகைக்கவே வேண்டாம்.

எனது ஹாய் நலமா புளக்கில் (13.11.2014) வெளியான கட்டுரை

0.0.0.0..0.0.0

 

Read Full Post »

புகைத்தலா HIV யா? எயிட்ஸ்  நோயாளிகள் உயிரை விரைவில் பறிக்கும்?

smoking

இது பற்றிய ஆய்வு அண்மையில் நடைபெற்றது. அத பற்றிய தகவல் Journal Watch மருத்துவப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அவர்களைப் பொறுத்த வரையில் புகைத்தலானது அவர்களது வாழ்நாளில் பெருமளவை HIV விட அதிகம் பறிக்கும் எனத் தெரிகிறது.

இது எங்களுக்கான விடயம் அல்ல என எண்ணாதீர்கள்.

எயிட்ஸ் இல்லாத சாதாரண மனிதர்களிலும் புகைப்பவர்களின் வாழ்வானது புகைக்காதவர்களை விட 10 முதல் 17 வருடங்கள் வரை குறைவு என்பதை முன்னைய ஆய்வுகள் எடுத்துக் கூறியிருக்கின்றன.

மற்றொரு ஆய்வின் பிரகாரம் 30 வயதுள்ள புகைப்பவர் மேலும் 35 வருடங்கள் வாழக் கூடும். அதே நேரம் 30 வயதுள்ள புகைக்காதவர் மேலும் 53 வருடங்கள் வாழ முடியும் என்கிறது.

தீர்மானம் உங்கள் கையில்..

HIV-infected smokers lose more life-years to smoking than to HIV, according to a study in Clinical Infectious Diseases.

In an HIV-infected cohort, analyses adjusted for HIV-related and other clinical variables revealed that all-cause mortality was more than fourfold higher, and non–AIDS-related mortality was more than fivefold higher, among current smokers than among never smokers. Some 12.3 life-years were lost from smoking, compared with 5.1 life-years lost from HIV infection.

For HIV-Infected Patients, Smoking Is Deadlier Than HIV

Read Full Post »

>எமது நாட்டில் பெண்கள் புகைப்பது குறைவு. ஆயினும் முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.

சமூகத்தின் உயர்தட்டிலும் கீழ்மட்டத்திலும் பல பெண்கள் புகைக்கவே செய்கிறார்கள். மத்தியதர வர்க்கத்திலும் இலைமறைகாயாக இருக்கக் கூடும்.

வயதான பெண்கள் மட்டும் புகைப்பதில்லை

புகைத்தல் ஆபத்தானது. பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது என்பதை அறிவோம்.

பெண்கள் கரப்பமாயிருக்கம்போது புகைத்தால் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில்

  • ஆஸ்த்மா, 
  • சுவாசநோய்கள், 
  • செவியில் கிருமித்தொற்று 

போன்ற பல பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுக்க நேரிடும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
அண்மையில் பின்லாந்து தேசத்தில் செய்யப்பட்ட ஆய்வானது கர்ப்பமாயிருக்கும் போது புகைத்த பெண்களின் குழந்தைகள் தமது குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் உளநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகலாம் என்கிறது.

அத்துடன் அவர்கள் வளரும் போது அதற்கான சிகிச்சையாக மருந்துகள் (Psychiatric Drugs) உட்கொள்ள வேண்டி நேரிடலாம் எனக் கூறுகிறது.

முக்கியமாக

  • மனச்சோர்வு (Depression) 
  • கவனக்குறைவு, 
  • அதீத துடியாட்டம் 

போன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை செய்ய நேரலாம் என்கிறது.

மனநோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளும் இளவயதினரின் மருத்துவக் கோவைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவர்களில் 19.2 சதவிகிதத்தினர் தாயின் கருவில் இருக்கும்போது புகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது தாய் கர்ப்பமாயிருக்கும்போது புகைத்திருக்கிறாள் என்பதாகும்.

அந்த ஆய்வின் பிரகாரம் தினமும் பத்து சிகரட்டுக்கு மேல் புகைத்தவர்களின் குழந்தைகள் கூடியளவு பாதிப்புக்கு ஆளாயினராம்.

இதன் அர்த்தம் என்ன? கர்ப்பமாயிருக்கும்போது பத்து சிகரட்டுக்கு குறைவாகப் புகைக்க வேண்டும் என்பதா?

இல்லை. புகைக்காது இருப்பதே நல்லது.

கர்ப்பமாயிருக்கும் தாய் புகைக்கும்போது அதன் நச்சுப் பொருட்கள் தாயின் இரத்தத்தில் சேர்ந்து தொப்புள் கொடி ஊடாக கருவிற்குப் பரவி அதன் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதனால்தான் அத்தகைய குழந்தைகள் உளநலக் குறைபாடுகளுக்கு ஆளாவது அதிகமாகிறது.

எனவே கர்ப்பாயிருக்கும் பெண்கள் தமது குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு புகைக்காது இருப்பது அவசியம்.

அத்துடன் தனது ஆரோக்கியத்திற்காகவும் புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கணவனும் வீட்டில் உள்ள ஏனையவர்களும் தன்செயலின்றிப் புகைத்தலால் மனைவிக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து என்பதால் தவிர்க்க வேண்டும். அத்துடன் தனது நலனுக்காகவும் புகைக்காதிருப்பது அவசியம்.

தன்செயலின்றிப் புகைத்தலால் பற்றிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணவும்.

தன்செயலின்றிப் புகைத்தல்

ஒட்டு மொத்தத்தில் எல்லோரும் எக்காலத்திலும் புகைத்தலைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான செயலாகும்.

Sourse:- Presented at the Pediatric Academic Societies (PAS) annual meeting, Vancouver, British Columbia, Canada. May4, 2010.

தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>புகைத்தல் ஆபத்தானது என அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

புகைத்தலும் புற்றுநோய்களும்

அதனால் ஏற்படும் மிக முக்கிய பாதிப்பு நுரையீரல் புற்றுநோயாகும். புகைப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கும், அதனால் மரணமடைவதற்குமான சாத்தியம் புகைக்காதவர்களை விட 10 முதல் 20 மடங்கு அதிகமாகும்.

அமெரிக்க புள்ளிவிபரங்கள் படி அங்கு நுரையீரல் புற்றுநோயால் மரணமடையும் ஆண்களில் 90 சதவிகிதமும், பெண்களில் 80 சதவிகிதமும் புகைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

நுரையீரல் புற்றுநோயைத் தவிர, குரல்வளை, களம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சதையம், இரைப்பை, கருப்பைக் கழுத்து, குருதிப் புற்றுநோய் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் புகைத்தலே முக்கிய காரணமாகிறது. 

தன்செயலின்றிப் புகைத்தல்

நீங்கள் புகைக்காதவராக இருந்தபோதும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் புகைப்பதாலும் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

மற்றவர்கள் புகைத்து வெளிவரும் புகையில் 4000 ற்கு அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 50 புற்றுநோயை ஏற்படுத்துவையாகும்.

அவ்வாறான தன்செயலின்றிப் புகைத்தல் காரணமாக வருடாந்தம் 3000 பேர் அமெரிக்காவில் மரணமடைகிறார்கள்.

தன்செயலின்றிப் புகைத்தல் என்பது ஒருவரது சுற்றாடலிலுள்ள புகையிலையின் புகையால் Enviromental tobacoo smoke (ETS)  ஏற்படுகிறது.

இது இரண்டு வழிகளில் நேர்கிறது.

  • புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டின் எரியும் முனையிலிருந்து வெளிவரும் புகை. 
  • இரண்டாவது புகைப்பவர் வெளிவிடும் சுவாசக் காற்றோடு கலந்து வரும் புகையாகும். 

          புற்றுநோயைக் கொண்டு வருவது மாத்திரமின்றி வேறும் பல உடல் நலக் கேடுகளை இது ஏற்படுத்துகிறது.

          • மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
          •   தன்செயலின்றிப் புகைத்தல் காரணமான நெஞ்சில் சளி, இருமல், நெஞ்சு இறுக்கம், நுரையீரலின் செயற்பாடு குறைந்து இளைப்பு ஏற்படுதல் ஆகியனவும் ஏற்படும்.
          •  நுரையீரலில் கிருமி தொற்றி நியுமோனியா, புரங்கைட்டிஸ் ஆகியவை அதிகம் ஏற்படும்.
          • ஆஸ்த்மா வருவதற்கும், ஏற்கனவே உள்ளவர்களுக்கு மோசமடைவதற்கும் தன்செயலின்றிப் புகைத்தல் முக்கிய காரணமாகும்.
          • குழந்தைகளில் உட்காதில் கிருமித்தொற்று (Middle Ear Infections) அதிகளவு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
          • தன்செயலின்றிப் புகைத்தலால் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் ஆபத்துண்டு. அவர்கள் நிறை குறைந்த குழந்தைகளாகப் பிறப்பர்.
          • ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் திடீர் மரணம் அடைவதற்கு (Sudden Infant death Syndrome -SIDS அத்தகைய தன்செயலின்றிப் புகைத்தல் மற்றொரு காரணமாகும்.
          • குழந்தைகளிலும் வளர்ந்தவர்களிலும் காலத்திற்கு முந்திய மரணம் ஏற்படுவதற்கு தன்செயலின்றிப் புகைத்தலும் ஒரு காரணமாகும்.
          எவ்வாறு

          எவ்வாறு நீங்கள் தன்செயலின்றிப்  புகைத்தலுக்கு ஆளாகிறீர்கள்.

          • வேலைத்தளம், 
          • பொது இடங்கள், 
          • வீடு ஆகியனவே அதற்கான சாத்தியமுள்ள இடங்களாகும். 

          இலங்கையில் சினிமா அரங்கு, பஸ் போக்குவரத்து ஆகியவற்றில் புகைத்தலைத் தடை செய்திருப்பது முன்னேற்ரகரமான செயலாகும்.

          ஆயினும் வியாபார ஸ்தலங்களில் தடை செய்யப்படவில்லை.

          வீட்டினுள் புகைக்காதிருப்பது மிக முக்கியமாகும். வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் காற்றில் புகையின் செறிவு அதிகமாகும். இதனால் ஒருவரது மனைவி, குழந்தைகள், வீட்டில் உள்ள முதியவர்கள் என எல்லோரையும் பாதிக்கும்.

          தப்புவதற்கு வழி

          இதிலிருந்து நீங்கள் தப்புவதற்கு வழி என்ன?

          • வீட்டினுள் புகைப்பதைத் தவிருங்கள். 
          • நீங்கள் புகைக்காவிட்டாலும் வரும் விருந்தினர்கள் புகைப்பதை ஊக்குவிக்க வேண்டாம். 
          • வரவேற்பறையில் சாம்பல் கிண்ணம் வைக்காதீர்கள். 
          • காரில் பயணம் செய்யும்போது புகைக்கவே வேண்டாம்.

          நீங்கள் முன்மாதிரியாக இருந்து உங்கள் குடும்பத்தினர் புகைக்காதிருக்க வழி காட்டுங்கள். அது புகைக்காத சமூகத்தை நோக்கி முன்நகர்வதற்கான முதல் படியாகும்.

          புகைத்தல் பற்றிய எனது மற்றொரு கட்டுரையான   ‘வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல்’ பற்றிப் படிக்க கிளிக் செய்யுங்கள்

          டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

          தினக்குரல் பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்

          Read Full Post »

          >புகைத்தலை கைவிட சில ஆலோசனைகள்.

          புகைத்தலைக் கைவிடும்படி மருத்துவர் நோயாளிக்கு ஆலோசனை கூறிக் கொண்டிருந்தார்.

          புகைத்தலின் தீய விளைவுகளை விளக்க ஆரம்பித்தார்.

          நோயாளிக்கு கேட்டுக் கொண்டிருப்பதில் இஷ்டம் இல்லை.  பேச்சை நிறுத்த எண்ணினார்.

          எனவே  “இறுதியாக என்ன நடக்கும்” எனக் கேட்டு வைத்தார்.

          “சவப் பெட்டி”

          என்றார் மருத்துவர்.

          000000000

          “புகைத்தலை விட வேண்டும் என எத்தனையோ தடவைகள் முயற்சித்துவிட்டேன். ஆனால் முடியவில்லை” என ஒருவர் கவலைப்பட்டார்.

          “ஆனால் நீ பட்ச்சை (Patch- Nicotine Patch) முயற்சித்துப் பார்த்தாயா” நண்பர் ஆலோசனை கூறினார்.

          ” பரீட்சிக்கவில்லை. ஆனால் வேலை செய்யும் என்று நான் நம்பவில்லை”

          “நிச்சயம் வேலை செய்யும். அதை வாய்க்குக் குறுக்காக ஒட்டினால்..”  என்றார் நண்பர்.

            0000000

          000000000

          0.0.0.0.0.0.0

          0.0.0.0.0.0

          0.0.0.0.0.0.0

          புகைப்பவன் வாழ்வு புகைந்து போகும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

          0.0.0.0.0.0

          Read Full Post »

          >அண்மையில் மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது.



          மனைவி பேயடித்தவள் போல விச்ராந்தியாக நின்றாள்.

          பட்டப் படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மகளும், ஏ எல் படித்துக் கொண்டிருக்கும் மகனும் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது.



          அறுபது வயதையும் எட்டாத அவன் விபத்தில் சாகவில்லை. திடீர் நோய் தாக்கவில்லை.

          தானே தேடிக் கொண்ட வினை. புகைப்பவர்களின் இருமல் (Smokers Cough) என அலட்சியம் பண்ணிய அவனது எடையும் குறைய ஆரம்பித்த போதுதான் சுவாசப்பை புற்றுநோய் எனத் தெரியவந்தது.

          மரணத்துடனான ஓட்டப் போட்டியில் அவனால் முந்த முடியவில்லை.

          புகைத்தலின் ஆபத்துகள் பற்றி அறியாதவர்கள் இன்று இருக்க முடியாது.

          அச்சு, இலத்திரனியல் ஊடகம் என எல்லாமே தாராளமாகப் பேசிவிட்டன.

          சொல்வதற்கு நிறைய உண்டு.

          கேட்பவர் அதிகமில்லை.

          அதிலும் கேட்க வேண்டியவர்கள் காதில் விழுத்துவதே இல்லை.



          எனவே சில தகவல்களை மட்டும் மனத்தில் அசை போடுவதற்காக முன் வைக்கிறேன்.

          புற்று நோய்கள், மாரடைப்பு, பிரசர், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற மிகக் கடுமையான ஆபத்துக்கள் பற்றி இங்கு மீண்டும் சொல்லப் போவதில்லை.

          நாளாந்தம் ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இவை.

          • புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.

          • புகைத்தலால் ஆஸ்த்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால்ஆஸ்த்மாவைத் தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத்தன்மையையும் குறைக்கிறது.

          ஆர்பாட்டமில்லாமல் படிப்படியாக நோயாளி உணரா வண்ணம், கண்பார்வையை முற்றாகச் சிதைக்கும் மக்கியூலர் டிஜெனரேசன் (macular degeneration) என்ற நோய் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகம் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.

          • கண் பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரை நோய் (cataract) வருவற்கான வாய்ப்பும் புகைப்பவர்களுக்கு அதிகமாகும்.

          • மற்றவர்கள் முன் நாணி நிற்க வைக்கும் கறை படிந்த பற்களுக்கும், அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புகைத்தல் முக்கிய காரணமாகிறது.

          • முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகிறது.

          • புகைப்பவர்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.

          • மனைவி சமிக்கை காட்டினாலும் கணவன் புறமுதுகிட்டு ஓடுவதற்கு, அதாவது ஆண்குறி விறைப்படுவதில் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் புகைத்தலும் முக்கியமானதாகும்.



          30 முதல் 40 வயதுகளிலேயே அவ்வாறான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாகும். சிகரெட்டில் உள்ள நிகொடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்கிறது. ஏனைய பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களைப் போல ஆணுறுப்பில் உள்ளவையும் சுருங்குகின்றன. நாட் செல்ல மேலும் சுருங்கி அது விறைப்படைவதற்கு வேண்டிய இரத்தம் செல்லத் தவறுவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.

          • வேலைக்கு செல்ல முடியாது அதிக சுகவீன லீவு எடுக்க வேண்டிய நிலையும் புகைப்பவர்களுக்கு நேர்கிறது. மற்றவர்களைவிட 25 சதவிகிதம் அதிகளவு நாட்களை இவர்கள் அவ்வாறு எடுக்கிறார்கள்.

          • புகை கண்களை அதிகம் உறுத்துகிறது. வாய்க்கு அருகில் இருப்பதால் புகைக்கும்போது வெளிவரும் வெப்பமும், நச்சுப் பொருட்களும் கண்ணின் மென் திசுக்களைப் பாதித்து, கண் கடித்தல், உருட்டுதல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

          • புகைக்கும் ஓவ்வொரு சிகரெட்டும் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிறி சுருக்கங்கள் வேளையோடு ஏற்பட்டு வயதான தோற்றத்தையும் கொடுக்கின்றன.



          • ஒருவர் நாளாந்தம் போதிய உடற் பயிற்சி செய்தல், காய்கறிகள் பழவகைகளை அதிகம் உண்ணல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், புகைத்தலும் செய்தால் நன்மைகள் யாவும் கரியாகிவிடும்.

          டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

          நன்றி:- தினக்குரல்

          Read Full Post »