Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘COPD’ Category

>

பாடுங்கள் பாடுங்கள் நெஞ்சு நிறையப் பாடுங்கள். சுவாச நோய்கள் பறந்தோடும்.

இசையின் நோய் தீர்க்கும் ஆற்றல் பற்றி நிறையவே பேசப்பட்டிருக்கின்றன. பல திரைப் படங்களில் மயங்கிக் கிட்ககும் நோயாளி மனக்குப் பிடித்தமான பாடலைக் கேட்டவுடன் விழித்தெழுவதைக் கண்டிருக்கிறோம். அது உண்மையாக இருக்க முடியாது என்பதை மூளை சொன்னாலும் மனங் கேட்பதில்லை. இசை எங்கள் உணர்வுகளோடு ஒன்றியது.

பாடுவதானது, மூச்செடுப்பதில் சிரமப்படும் நோயாளிகளது துன்பத்தைக் குறைத்து சுவாசத்தை இலகுவாக்கும் என அண்மையில் ஒரு ஆய்வு கூறுகிறது.

மூச்செடுப்பதில் சிரமம் என்பது நோயாளியின் நாளந்த வாழ்வைப் பாழடிக்கக் கூடிய சிரமமான நோயாகும். நாம் எந்த நேரமும் சுவாசித்துக் கொண்டே இருக்கிறோம். அனால் அதை உணர்வதில்லை. அது இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரும்போதுதான் சுவாசிப்பது சிரமம் என்பதை உணர்கிறோம். ஆனால் ஆஸ்த்மா தணிந்ததும் சுவாசம் இலகுவாகிறது.

ஆனால் நாட்பட்ட சுவாசத் தடை நோய் Chronic obstructive pulmonary disease (COPD), என்பது வெறுமனே மூச்செடுப்பதில் சிரமம் அல்ல. அது வர வர மோசமாகிக் கொண்டு போகும் ஒரு நோயாகும். அத்துடன் ஆஸ்த்மாவின் வரட்சியான இருமல் போல்லல்லாது இருமம்போது நிறையச் சளி கொட்டும். ஆனால் ஆஸ்த்மா போலவே நெஞ்சை அடைப்பது அல்லது இறுக்குவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
 
இது பொதுவாக புகைப்பவர்களிடையே தோன்றும் ஒரு நோயாகும்.

புகைத்தலைத் தவிர சுவாசப்பையை உறுத்தக் கூடிய பலவும் இந்நோய் வருவதற்குக் காரணமாகலாம். உதாரணமாக சூழல் மாசடைதல், வேறு புகைகள், இராசாயன மணங்கள், தூசி போன்றவையும் COPD ஏற்படுவதற்குக் காரணமாகலாம்.

இந் நோயுள்ளவர்களுக்கு சுவாசிப்பது என்பது பெரும்பாடாக இருக்கும். நாம் சுவாசிக்கும்போது மூக்கு வழியாக உள்ளே செல்லும் காற்றானது மூச்சுக்குழல் வழியாகச் சென்று அதன் கிளைக்குழாய்கள் ஊடாகப் பயணித்து இறுதியாக மூச்சுச் சிற்றறைகளை அடையும். திராட்சைப் பழக் கொத்துகள் போல சுவாசப்பையை நிறைத்திருக்கும் இந்த மூச்சுச் சிற்றறைகள் ஊடாகவே நாம் சூழலிருந்து பெறும் காற்றில் உள்ள ஒட்சிசன் வாய்வு எமது உடலுடன் இணைகிறது.

இரத்தக் குழாய்களின் மிக நுண்ணிய பகுதியான மயிரிழைக் குழாய்கள் மேற் கூறிய மூச்சுச் சிற்றறைகளின் சுவரில் இணைந்திருக்கின்றன. நாம் சுவாசக்கும் காற்று மூச்சுச் சிற்றறைகளை அடைந்ததும் காற்றில் உள்ள ஒட்சிசானது மயிரிழைக் குழாய்களில் நிறைந்திருக்கும் குருதியால் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அதே நேரம் கழிவுக் காற்றான காபனீர் ஒட்சைட் குருதியிலிருந்து மூச்சறைச் சிற்றறைகளுக்குள் கடத்தப்பட்டு சுவாசக் குழாய்கள் ஊடாக வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு நடைபெறுவதற்கு எமது மூச்சுச் சிற்றறைகள் நெகிழ்வுத் தன்மையுடையவையாக இருக்க வேண்டும். அதாவது காற்றை ஊதினால் பலூன் விரிவடைவது போல விரிவடைந்து காற்று வெளியேறியதும் சுருங்க வேண்டும்.

ஆனால் மேலே கூறிய நாட்பட்ட சுவாசத் தடை நோயின் போது மிகக் குறைந்தளவு காற்று மாத்திரம் சுவாச தொகுதியூடாக பயணிக்க முடிகிறது. இதனால் குறைந்தளவு ஓட்சிசன் மட்டுமே எமது உடலுக்குக் கிடைக்கிறது. மூச்சுத் திணறலுக்கு இதுவே காரணமாகிறது. படிப்படியாக மோசமாகிக் கொண்டு செல்லும் இந்நோயிலிருந்து மீட்டு எடுப்பது முடியாத காரியமாகவே இருந்தது.

இந்தகைய சூழலில், நாட்பட்ட சுவாசத் தடையுள்வர்கள் மூச்சு எடுப்பதில் சிரமப்படுவதை பாடுவதானது குறைக்கும் என அண்மையில் நடந்த மருத்துவர்கள் American College of Chest Physicians) கூட்டத்தில் எடுத்துரைக்கப் பட்டதானது நம்பிக்கை ஊட்டும் செய்தியாகும்.
பாடுவது எவ்வாறு சுவாசத்தை இலகுவாக்குகிறது?

பாடுவதானது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை, துல்லியமாக நாம் எமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம். எம்மையறியாமலே இது நிகழ்கிறது. தன்னிச்சையாக இயங்கும் எமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் எமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் எமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இப்பொழுது இசைவாக இயங்குகின்றன.

31 பேரைக் கொண்ட சிறிய ஆய்வுதான் இது. 12 வாரப் பாடற் பயிற்சியின் பின் அத்தகைய நோயாளர்களின் சுவாசத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாம். 84 சதவிகிதமான நோயாளர்கள் இது ஆறதல் அளிப்பதாகக் கூறினர். 64 சதவிகிதமானவர்கள் இது அசௌகரியமான பயிற்சியாக இல்லை என்றனர். மிகவும் முக்கியமான விடயம் 64 சதவிகிதமானவர்கள் தாம் இதனைத் தொடர்ந்து செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

அவர்களது உடல் நலமும், சிரமமான சுவாசமும் தேறியதற்கு உளவியல் காரணங்களும் இருக்கக் கூடும். இசை கொடுக்கும் இதமான உணர்வுகளுக்கு அப்பால் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ததும் காரணமாக இருக்கலாம்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாடுவது நல்லது. அது மன நிறைவைக் கொடுக்கும், மனச்சிறைகளிலிருந்து விடுபட உதவுகிறது. நோயைத் தணிக்கும் ஆற்றலும் இருக்கிறது.

பிறகென்ன பாடுங்கள். தினசரி பாடுங்கள். இறைவனைத் துதிக்கையில் பாடுங்கள். குளிக்கும்போது குளியலறையிலும் பாடுங்கள். வானொலியில் தொலைக்காட்சியில் பாட்டுகள் வரும்போது சேர்ந்து பாடுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக்கொண்டே இருங்கள்.

வீட்டிலுள்ளோர்களும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் காட்டிலுள்ள நரிகள் எல்லாம் வீட்டிற்குள் வந்திடப்போகுதுகள் என கதவையும் யன்னல்களையும் அடைத்து வைத்தால் நான் பொறுப்பாளி அல்ல.

பாடுவதில் பிரச்சனையில்லை, ஆனால் தான் அறியாப் பாசையில் சொல்லப் போவதின் சிக்கல்கள் பற்றி சற்று சிரிப்போடு படிக்க எனது அனுபவப் பதிவான

கிளிக் பண்ணுங்கள்.

தமி்ழ் நாடெங்கும் எலக்சன் கீதம் ஒலிக்கிறது. கவிதை பாடிக்கொண்டே அரசியல் வாதிகளிடையே பிழைத்து வாழ தேட ஒரு கவிதை

கற்பனைச் சொர்க்கங்களும் கையிருக்கும் வாழ்வும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ‘ஹாய் நலமா’ பத்தியில் வெளியான கட்டுரை

Read Full Post »