Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘நகத்தடி இரத்தக் கண்டல்’ Category

நகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)

‘ஐயோ’ வலியால் துடித்துக் கத்தியவர் கீழே விழவில்லை.

விழ முடியாது. கைவிரல் கார்க் கதவினுள் அகப்பட்டுவிட்டதே!!

காரிலிருந்து இறங்கியதும் தானேதான் கதவை மூடினார். இவர் எதிர் பார்த்ததை விட வேகமாகக் கதவு மூடிக் கொண்டது. கார் சற்று சரிவான இடத்தில் நின்றதால் அவ்வாறு ஆயிற்று.

16921781011_bc56a4185e_k-001

வெளிக்காயம் எதுவும் இல்லை. ஓரளவு வலிதான் பொறுத்துக் கொண்டார். ஆயினும் இரவு பொறுக்க முடியாத வலி. தூங்கவே முடியவில்லை

நகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)

கை அல்லது கால் விரல்களின் நகத்தின் உட்புறத்தே குருதி பரவி உறைந்து கட்டிபடுவதையே  நகத்தடி இரத்தக் கண்டல் என்று சொல்ல முடியும். இது பொதுவாக தற்செயலாக நடக்கும் சிறு விபத்து மூலமே ஏற்படுகிறது. இதன் போது நகமானது கடும் ஊதா அல்லது கருப்பு நிறமாக மாறும். உண்மையில் நகத்தின் நிறம் மாறுவதில்லை. நகத்தின் அடியிலுள்ள உறைந்த குருதி கருமையாகத் தோன்றும்.

மேற் கூறியவருக்கு கார்க் கதவினுள் விரல் நசுங்குண்டது. நகத்தின் அடிப்புறம் முழுவதும் கருமை ஆகிவிட்டது. ஆனால் தாக்கம் குறைவாக இருந்தால் நகத்தின் அடியில் ஒரு சிறு பகுதியில் மட்டுமே இரத்தம் உறையவும் கூடும். கார்க் கதவில் அடிபபட்டது போலவே வீட்டுக் கதவு, அலமாரிக் கதவு போன்றவற்றினுள்ளும் அவ்வாறு அகப்படக் கூடும். சுவரில் ஆணி அடிக்கும்போது தவறுதலாக விரலின் மேல் அடிப்படுவதும் உண்டு.

மாறாக பாரமான பொருள் கீழே விழும்போது அதற்குக் கீழ் நகம் அகப்பட்டு நசுங்குப்படுவதும் உண்டு.

ஆனால் மிக அரிதாக ஒருவரது நகத்தின் அடிப்புறத்தில் கட்டி வளர்வதாலும் நகத்தில் கருமை நிறமாகத் தோன்றலாம்.

கட்டியா இரத்தம் கண்டியதா?

கட்டி வளர்வதால் ஏற்பட்டதா அல்லது இரத்தம் உறைந்ததா என்பதை பிரித்து அறிவது எப்படி?

இரத்தம் கண்டுவதால் ஏற்பட்டதாயின் அதற்கு முன்னர் அடிபட்டிருக்கும் என்பது நிச்சயம். இரத்தம் உறைந்ததால் ஏற்பட்டதாயின் நகம் வளரும்போது இதுவும் முன் நகர்ந்து மறைந்து விடும்.

ஆனால் அது ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்குமாயின் அது இரத்தம் கண்டியதால் அல்ல என்பதை நிச்சயம் கூறலாம். அவ்வாறு எனில் மருத்துவரிடம் அதைக் காட்டி ஆNலூசனை கெற வேண்டியது அவசியமாகும்.

அறிகுறிகள் என்ன

கண்ணால் பார்த்தாலே தெரிவதைத் தவிர வேறு என்ன அறிகுறி இருக்கக் கூடும் என்கிறீர்களா?

உண்மைதான். நகத்தின் அடியில் கருப்பாக, கருநீலமாக அல்லது சிகப்பாக நிறம் மாறியிருக்கும். நகத்தின் அடியில் முழமையாக இது பரவி இருக்கலாம். அல்லது ஒரு பகுதியில் மட்டுமே தோன்றவும் கூடும்.

கடுமையான வலி இருக்கும். மிக இறுக்கமாக நகத்தின் அடியில் இரத்தம் உறையும்போது அதனால் ஏற்படும் அழுத்தமே கடுமைiயான வலியை ஏற்படுத்துகிறது.

கண்டல் நகத்தின் மீது தட்டுப்பட்டாலே அடிபட்டாலோ வலி பொறுக்க முடியாதளவு மோசமாக இருக்கும்.

ஆனால் அடி கடுமையாகப் பட்டிருந்தால் இரத்தம் உறைவது மட்டுமல்லாது அடியில் விரல் எலும்பு உடைந்திருக்கவும் கூடும். அருகில் உள்ள தசைகளில் சேதம் ஏற்பட்டிருக்கவும் கூடும்.

விரல் எலும்பு உடைந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவர் எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்ப்பார்.

சிகிச்சை

நகக் கீழ் இரத்தக் கண்டலால் கடுமையாக வலி இல்லாவிடின் எந்தவித சிகிச்சையும் தேவைப்படாது. ஐஸ் வைத்து மேலும் இரத்தம் உறைவதைத் தடுக்கலாம் இதனால் வலி குறையவும் கூடும். வலியைத் தணிக்க பரசிட்டமோல் மாத்திரை எடுத்தால் போதுமாக இருக்கும்.

வலி கடுமையாக இருந்தால் நகத்தின் அடியில் உள்ள இரத்தத்தை வெளியேற்றுவது அவசியமாகலாம்.

விரலை மட்டும் மரக்கச் செய்யத பின் மின்னால் இயங்கும் ஊசி போன்ற கருவி மூலம் இரத்தம் உறைந்துள்ள நகத்தின் பகுதியில் சிறுதுளை இடுவதன் மூலம் இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இதனால் வலி குணமாகும்.

மாறாக கூரான ஊசி மூலம் துiளியிடுவதும் உண்டு. கிருமித் தொற்று ஏற்படாது இருப்பதை உறுதி செய்வதற்கு துளையிட்ட நகத்தை பண்டேஸ் பண்ணுவார்கள். சில தருணங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட துளைகள் தேவைப்படலாம். துளையிட்ட பின்னர் ஒரு சில மணி நேரத்திற்கு கையை கீழே தொங்கவிடாது உயர்த்தி வைத்திருப்பதன் மூலம் மேலும் இரத்தம் வெளியேறுவதை தடுக்க முடியும்.

நகத்தின் பெரும் பகுதியை (more than 50%)  உள்ளடக்கும் வண்ணம் இரத்தம் உறைந்திருந்தால், அல்லது நகத்தின் ஓரங்கள் அருகில் உள்ள  தசைப் பகுதியில் இருந்து பிரிந்திருப்தாகத் தோன்றினால் நகத்தை முழுமையாக அகற்ற நேரும். இதுவும் முன்பு கூறியது போல விரலை மரக்கச் வைத்தே அகற்றப்படும்.

நகத்தை மருத்துவர் அகற்றவிட்டால் கூட நகக் கீழ் கண்டலானது நகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்குவதாக இருந்தால் நகம் சில காலத்தில் தானாகவே கழன்றுவிடவே செய்யும். விழுந்த பின்னர் சுமார் இரு மாதங்களுக்குள் புதிய நகம் அரும்புவதைக் காணக் கூடியதாக இருந்தாலும் முழுமையாக வளர்வதற்குக் 6 மாதங்கள் வரை செல்லக் கூடும்.

மேலே குறிப்பிட்டவரின் நகம் அகற்றபடவில்லை. பரசிற்றமோல் மற்றும் ஐஸ் வைப்பதன் மூலம் வலி தணிக்கப்பட்டது. சில வாரங்களில் நகம் தானாகவே விழுந்து விட்டது.

புது நகம் வளர்வதை அக்கறையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

எனது ஹாய்நலமா புளக்கில் (26.04.2015) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0

Read Full Post »