Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2013

வலிகளுக்கும் மூட்டுகளுக்குமான உறவு அண்ணன் தம்பி போல மிக நெருக்கமானவை. விட்டுப்பிரியாதவை. வலியைத் தணிக்க நாளாந்தம் மருந்து சாப்பிட்டு பலருக்கு அலுத்துவிடுகிறது.

இத்தகைய மூட்டு நோய்களைக் குணமாக்க உணவுமுறையில் மாற்றங்கள் செய்வது உதவுமா என்ற தேடல் ஏற்படும்.

இதன் காரணமாக மூட்டுவலிகளினால் துன்பப்படுவோர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்கள் எதைப் பற்றிக் கேள்விப்படாலும் அதனைப் பரீட்சித்துப் பார்க்காது விடமாட்டார்கள். வேறும் ஏதாவது இருக்கிறதா எனத் தேடியலைவார்கள்.

மூட்டுகளுக்கான எளிமையான பயிற்சிகள் மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும்.
மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

மூட்டு நோய்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அது தனி ஒரு நேயால்ல. மூட்டுகளில் வலி, வீக்கம், அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய பல நோய்கள் யாவற்றையும் (Arthritis) என்றுதான் சொல்லுவார்கள். சுமார் 100க்கு மேற்பட்ட அத்தகைய நோய்கள் இருக்கின்றன.

அத்தகைய நோய்களைக் குணப்படுத்த உணவுப் பத்தியம் உதவுமா என்று கேட்டால்

 • நிச்சயமாக இல்லை.
 • ஆயினும் மூட்டு நோயுள்ளவர்களது பொதுவான உடல்நலத்தைப் பேணுவதற்கு சமச்சீர் வலுவுள்ள ஆரோக்கிய உணவுமுறை உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சமச்சீரான உணவு உதவும்
எவ்வாறான உணவுமுறை உதவும்
 • சமச்சீரான உணவு. உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், உடலுக்கு ஏற்ப எடையை சரியான அளவில் பேணவும் உதவும். பொதுவான உடல் நிலை நல்ல நிலையில் இருந்து எடையும் சரியான அளவில் பேணப்பட்டால் மூட்டு நோய்களின் தாக்கம் குறைவடையும்.
 • எடையைச் சரியான அளவில் பேணுவது மிக முக்கியமாகும். எடை அதிகரித்தால் முழங்கால். இடுப்பு போன்ற எடை தாங்கும் மூட்டுகளுக்கு சுமை அதிகமாகி நோய் தீவிரமடையும்.
 • எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் திடீரென கடுமையாக உணவுகளைக் குறைப்பதும் பட்டினி கிடப்பதும் நோயின் தீவிரத்தை அதிகரிக்குமே அன்றிக் குறைக்காது.
 • தாராளமாக நீராகாரம் எடுங்கள். ஆனால் மதுபானம் கூடாது. இனிப்பு அதிகமுள்ள மென்பானங்களையும் அதிகம் உட்கொள்ளக் கூடாது.
 • கல்சியம் செறிவுள்ள உணவுகள் அவசியம் தேவை. பால், யோகொட், தயிர், கீரை வகைகள், சிறுமீன்கள், பயறின உணவுகளில் கல்சியம் அதிகம் உண்டு.
தவிர்க்க வேண்டியவை உள்ளனவா?

‘மூட்டு நோயெனற்றால் வாதம்தானே?

 • அப்படியென்றால் தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்ற குளிர்ச்சாப்பாடுகள் கூடாதுதானே’ என்று பலர் கேட்பார்கள்.
 • வேறு சிலர் ‘தேசிப்பழம், உருளைக்கிழங்கு கூடாது என்பர்.

இவை தவறான நம்பிக்கைகள். உண்மை கிடையாது. மாறாக இவற்றில் பல நல்ல போசாக்குப் பொருட்கள் உள்ளன. எனவே அவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

ஒரு சில நோய்களில்

கவுட் (Gout)
ஆயினும் கவுட் (Gout) என ஒரு மூட்டு வருத்தம் உண்டு. இது இலங்கையில் காணப்படுவது குறைவு. இந்நோய்க்கும் குருதியில் யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிப்பதற்கும் தொடர்புண்டு.

இந்நோயுள்ளவர்கள் இறைச்சியில் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றையும், நண்டு போன்ற கடலுணவுகளையும், ஈஸ்ட் அதிகமுள்ள மாமைட், பியர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால் ஏனைய மூட்டுவலிக்காரருக்கு அவற்றைத் தவிர்ப்பதால் பயன் ஏதும் இல்லை.

ரூமரெடியிட் ஆத்திரைடிஸ்

ரூமரெடியிட் ஆத்திரைடிஸ் என்பது இங்கும் பரவலாக உள்ளது.

இவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு உதவலாம் எனத் தெரிகிறது. வலிநிவாரணிகள் போல நல்ல சுகத்தைக் கொடுக்காது என்ற போதிலும் பக்கவிளைவுகள் இல்லாதததால் உட்கொள்வதில் பயமில்லை.

ஒமேகா 3 கொழுப்பானது கொலஸ்டரோல் குறைப்பிற்கும், இருதய நோய் சிலவற்றைத் தடுப்பதற்கும் உதவும். சல்மன், சார்டீன் போன்ற மீன்களிலும் எள்ளிலும் இருக்கிறது. மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.

தவறான கருத்து

உங்களது நோயை ஏதாவது ஒரு உணவு அதிகரிக்கிறது என நீங்கள் கருதினால் உடனடியாக அதை நிறுத்திவிடாதீர்கள்.

 • தினமும் உண்ணும் உணவு பற்றிய நாட்குறிப்பை ஒரு மாதத்திற்கு குறித்து வாருங்கள்.
 • உங்கள் நோயின் நிலை, குறித்த உணவு ஆகியவை பற்றி உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள்.
 • நீங்களாக நிறுத்த வேண்டாம்.

ஏனெனில் பொதுவாக மூட்டு வலிகள் காலத்திற்குக் காலம் காரணம் எதுவுமின்றி தீவிரமாவதும் தானாகவே மறைவதும் உண்டு. எனவே நீங்கள் அது திரும்ப வருதற்குக் காரணம் ஒரு உணவு அல்லது ஒரு உணவு வகை என நம்புவது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம்.

ஏனெனில், எந்த ஒரு உணவையும் தவிர்ப்பதன் மூலம் எந்தவொரு மூட்டு நோயையும் தணிக்கலாம் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இதுவரை கிடையாது. (ஏற்கனவே குறிப்பட்ட கவுட் தவிர).

 • குறிஞ்சா இலை,
 • முடக்கொத்தான்

எனப் பல பயன்படுகின்றனவே என்கிறீர்களா.

இவற்றை எந்த அளவில் எத்தனை நாட்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி யாராவது தெளிவாகச் சொல்லவார்களா? பக்க விளைவுகள் எவை என்பது பற்றி தெளிவான ஆய்வுகள் உள்ளனவா. சரியாகத் தெரியாத பொழுது இதனை எமது உடலுக்குக் கொடுத்து எமது உடலைப் பரீட்சைப் பொருளாக்குவதா??

உணவாக உட்கொள்வதில் பெரிய பிரச்சனை ஏதும் இருக்காது. ஏனெனில் அது சிறிய அளவிலேயே உடலில் சேர்கிறது. ஆனால் மருந்தாக அவித்துக் குடிக்கும்போது பாதிப்புகள் இருக்கலாம் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும்.

இவை பற்றி ஆய்வுகள் நடந்ததாக அறியவில்லை. அத்துடன் வேறெந்த மருந்தும் பயன்படுத்தாமல் இவற்றை மட்டும் பயன்படுத்தி குணமடைந்தவர்கள் இருக்கிறார்களா?

இருந்தால் அது பற்றி விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் தேவை.

வலிநிவாரணி வெளிப் பூச்சு மருந்துகள் உதவலாம்

எனவே

 • குளிர், சூடு, பித்தம் எனச் சொல்லி எந்த ஒரு உணவையும் தள்ளி வைக்க வேண்டாம்.
 • சமசீர் வலுவுள்ள (Balanaced Diet) நல்ல உணவாக உண்டு உங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள்.

இவற்றைக் கடைப்பிடித்தால் மூட்டு நோய்களோடு வாழ்தல்  சிரமமானது அல்ல

எனது ஹாய் நலமா புளக்கில் 29th October 2011ல் வெளியான கட்டுரை

தினக்குரலின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதியது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

தைப் பனி இன்னமும் முழுமையாகக் குறைந்தபாடில்லை. ஆஸ்த்மாவின் தொல்லை இன்னமும் பலரைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும்.

inflammed-airways-complex

 • எந்த வயதினரையும் தாக்கக் கூடியது என்பதுடன்
 • நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும்.
 • தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது.
 • அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

அறிகுறிகள்

The-Asthma-Symptom

 • இருமல்
 • இழுப்பு
 • மூச்சு எடுப்பதில் சிரமம்
 • நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல்

போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

அடியோடு அறுத்தல்

நோய் அறிகுறிகள் இருப்பவருக்கு, ‘உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கு’ என மருத்துவர் சொன்னவுடன் நோயாளியின் உடனடிப் பிரதிபலிப்பு ‘இதை அடியோடு அறுக்க என்ன செய்யலாம்?’ என்பதுதான்.

ஆனால் அடியோடு அறுக்க முடியாது என்பது கசப்பாக செய்தியான போதும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.

 • இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது.
 • அவற்றைக் கொண்டு நோயை நன்கு கட்டுப்படுத்தலாம்.
 • ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.
 • ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும். அன்றி மருந்துவத்தின் செயற்பாட்டால் அல்ல.

‘ஆங்கில மருத்துவம் செய்து வேலையில்லை’ என்று எண்ணி சித்த, ஆயர்வேத, யுனானி, அக்யூபங்கசர் என நாடுபவர்கள் இருக்கிறார்கள்.

 • அவை எவற்றினாலும் நோயை முற்றாக அறுக்க முடியாது.
 • அது மட்டுமல்ல, கடுமையான பத்தியங்கள் இருந்தாலும் அவற்றால் கிட்டும் பயன் மிகக் குறைவே.
 • அவற்றால் பெருமளவு பலனில்லை என்பதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையும் (FDA) கூறுதிப்படுத்துகிறது.

மாற்று மருத்துவ முறைகளும் ஆஸ்த்மாவும்

அக்யூபங்கசர்

Treatment by acupuncture. The doctor uses needles for treatment of the patient.

அக்யூபங்கசர் ஆஸ்தாவுக்கு ஏற்ற சிகிச்சை என்று சொல்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது என்கிறது அந்த ஸ்தாபனம்.

 • அக்யூபங்கசரால் ஒரு சிலரில் மருந்துகளின் அளவை குறைக்க முடிந்திருக்கிறது,
 • அறிகுறிகள் குறைந்திருந்தன, சுகமாக இருப்பதாக உணர்ந்தனர் என ஓரிரு ஆய்வுகள் கூறிய போதும்,
 • பெரும்பாலான ஆய்வுகள் அக்யூபங்கசரால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கின்றன.

சுவாசப் பயிற்சிகள்

asthma-breathing-exercises-yoga-meditation

பலவிதமான சுவாசப் பயிற்சிகள் உள்ளன. எமது பாரம்பரிய யோகசனம் முதலாக சீன, மேலைநாட்டு முறைகள் (Papworth Method and Buteyko Breathing Technique) எனப் பல.

 • இவை நோயின் தீவிரத்தை குறைப்பதாகத் தெரிகின்றபோதும்,
 • நல்ல பலன் அளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

ஆயினும் இது உடலுக்கு எந்தப் பாதகாமான விளைவுகளையும் ஏற்படுத்தமாட்டாது என்பதால் வழமையான மருந்துகளுடன் இணைத்துச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

மூலிகைகள் சார்ந்த மருந்துகள்

சுதேச மருத்துவ முறைகளான சித்த, ஆயள்வேத, யுனானி, சீன மருத்து முறைகளில் பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள சில வேதியல் பொருட்கள் ஆஸ்மாவின் அறிகுறிகளைக் குறைக்கக் கூடும்.

Asthma and Complementary Health Practices: What the Science Says

உதாரணமாக Ma huang என்ற சீன மூலிகையில் ephedrine என்ற வேதியல் பொருள் இருக்கிறது. இது ஒரு காலத்தில் ஆஸ்த்மாவிற்கு சிகிச்சையாக மாத்திரைகளாக உபயோகிக்கப்பட்டபோதும் அதன் இருதயம் சார்ந்த பக்கவிளைவுகள் காரணமாக பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தேயிலையில் தியோபிலின் (theophylline) எனும் வேதியில் பொருள் சிறிதளவு உண்டு. இது இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள ஒரு மருந்து ஆகும். மருந்து இதில் இருக்கிறது என எண்ணி தேநீரை அண்டாக் கணக்கில் குடித்தால் என்னவாகும்? சுகம் கிடைக்காது! வேறு நோய்கள்தான் தேடி வரும்.

இதேபோல வேறு பல மூலிகைகளில் ஸ்டிரொயிட் (Steroid) வகை மருந்துகள் உள்ளன. எதில் எந்த மருந்து எந்தளவு இருக்கிறது என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. எனவே மூலிகை மருந்துகளைத் தனியாகவோ அல்லது வழமையான மருந்துகளுடன் சேர்த்தோ பயன்படுத்தும்போது ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இவற்றைத் தவிர boswellia, tylophora indica, magnesium supplements, omega-3 fatty acids, Radix glycyrrhizae, vitamin C, and butterbur போன்ற மூலிகைகள், தாதுப்பொருட்கள், விற்றமின்கள் பலன் கொடுக்கும் எனப் பலர் நம்புகிறபோதும் அவற்றால் எந்தப் பயனுமில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

Complementary remedies for asthma

எனவே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக உங்களுக்காக மருத்துவர் கொடுக்கும் மருந்துகளைக் கைவிட்டு, மூலிகைகளையும் ஏனைய முறைகளையும் உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.

உங்களுக்கான மருத்துவம்

இன்றைய நிலையில் ஆஸ்த்மாவுக்கான சிறந்த மருத்துவம் உள்ளுறுஞ்சும் (Inhaler) மருந்துகள்தான். இவற்றில் பல வகைகள் உள்ளன. எது ஒருவருக்குப் பொருத்தமானது என்பதை மருத்துவர்தான் சிபார்சு செய்ய முடியும்.

asthma_2312065b

ஒழுங்காக மருந்துகளை உபயோகித்தபோதும் சில வேளைகளில் ஆஸ்த்மாவின் தீவிரம் அதிகரிக்கலாம். இதைத் தடுக்க தூண்டும் காரணிகளை அறிந்து அவற்றைத் தவிர்பபது அவசியம். அதன் மூலமே நலமாக வாழலாம்.

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?

அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் கீழ்கண்டவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால் ஒருவருக்கு தூண்டியாக இருப்பது மற்றவருக்கும் தூண்டியாக அமையும் எனச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தமது அனுபவத்தின் மூலமே கண்டறிய வேண்டும்.

 • ஓவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சணங்கள்
 • தடிமன் போன்ற வைரஸ் நோய்கள் தொற்றாமல் தம்மைப் பாதுகாத்தல்
 • சூழலில் உள்ள வளியை மாசுபடுத்தும் சிகரட் புகை, இரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.
 • விறகு எரித்தல். விறகு எரிக்கும்போது பல நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் வெளியேறுகின்றன. இவை சிலருக்கு தூண்டியாக அமையலாம்.
 • கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும்.
 • சைனஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகாதிருத்தல்.
 • நெஞ்செரிப்பு, வயிற்றெரிவு சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
 • கடும் குளிர் காற்றுகளும் நோயைத் தூண்டிவிடுவதுண்டு
 • கடுமையான உடற் பயிற்சிகள் தூண்டக் கூடும். ஆயினும் அதன் அர்த்தம் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது என்பதல்ல. மருத்துவ ஆலோசனையுடன் இன்ஹேலர்களை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டும்.
 • கடுமையான மனஅழுத்தங்களும் உணர்ச்சிவயப்படலும் தீவிரமாக்கும்.

இவை ஒருவருக்குத் தூண்டியாக அமைந்து நோயை தீவிரப்படுத்தலாம் என்பதால் அவற்றில் இருந்து விலகியிருங்கள். ஆனால் மற்றவருக்கு தூண்டியாக இருப்பது உங்களுக்கும் இருக்க வேண்டும் என்றல்ல.

எனவே மற்றவர்கள் சொல்லதைக் கேட்டு தேவையற்ற பலவற்றையும் தவிர்த்து உங்கள் வாழ்வைச் சப்பென்று ஆக்கிவிடாதீர்கள். உங்களுக்கானதைத் அனுபவத்தில் தேடிக் கண்டுபிடியுங்கள்.

உங்களால் உங்களால் மட்டுமே உங்கள் ஆஸ்த்மாவைக் கட்டுப்பாடினுள் வைத்திருக்க முடியும் என்பதை மறவாதீர்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

மழை பெய்தது. இப்பொழுது பனி மூடுகிறது. யாரைப் பார்த்தாலும் மூக்கைச் சிந்திக் கொண்டும் தும்மிக் கொண்டும் திரிகிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம்?

bigstock_Common_Cold_4109390

‘சும்மா தடிமனும் மேல் உழைவும்தானே. போர்த்திக் கட்டிக் கொண்டு படு. இரண்டு நாளிலை சுகமாகிவிடும்’ என்பார்கள் அந்தக் காலத்தில் எமது அப்பா அம்மாக்கள்.

சுகமானது.

‘மகனுக்கு தடிமன். காய்ச்சலும் வாற மாதிரிக் கிடக்கு. வாறகிழமை ரெஸ்;ட் வருகுது. நல்ல மருந்தாக் குடுங்கோ.’ இன்றைய அம்மாவின் கோரிக்கை.

மருத்துக்கும் குணமாகியது.

இரண்டிற்கும் குணமாகியது எனில், மருந்தா?, ஆறுதல் எடுப்பதா? எது பொருத்தமான சிகிச்சை என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இரண்டுமே தேவையற்றவை. சாதாரண தடிமனும் அதனோடு வரக்கூடிய சாதாரண காய்ச்சதுமானது வைரஸ் கிருமி தொற்றுவதால் ஏற்படுகிறது. இதனைக் குணமாக்கக் கூடிய அன்ரி வைரஸ் மருந்துகள் எதுவுமே கிடையாது. பலரும் தான்தோன்றித்தனமாக உபயோகிக்கும் அன்ரி பயோரிக் மருந்துகள் இந்த வைரஸ் கிருமிகளை ஒழிக்காது.

Common-cold-remedy_2003-03-26 Mystery disease cousin of common cold .5

இருந்தபோதும் இத்தகைய வைரஸ் தொற்றுக்கள் எத்தகைய மருந்துகளும் இன்றி தாமாகவே குணமாகக் கூடிய சாதாரண நோயாகும்.

தாமாகவே குணமாவதற்குக் காரணம் எமது உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்திதான். அந்த நோயெதிர்புச் சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால் உடல் உழைப்பில் ஈடுபடுவது அவசியம். எனவே போர்த்துக் கட்டிக் கொண்டு முடங்கிக் கிடப்பதும் அவசியமல்ல. அதே நேரம் நோயுற்ற போதும் இயன்றளவில் இயங்க வேண்டும். தேவையற்ற மருந்துகள் கூடாது.

மருத்துவ ஆராய்வுகள்

மனதை அடக்கி அமைதிப்படுத்தும் தியானம் போன்ற மன அடக்கப் பயிற்சிகள் உதவும். நடுத்தர அளவிலான உடற் பயிற்சிகளை தொடர்ச்சியாகச் செய்துவருவதும் உடலுக்கு நல்லதைச் செய்கின்றன.

Meditation-Exercise-Help-Fight-Flu-Common-Cold-SS

 • சாதராண காய்ச்சல் நோய்கள் உடலைக் கடுமையாகத் தாக்காது இவையிரண்டும் பாதுகாக்கின்றன.
 • நீண்ட நாள் தொடர்ந்து தொல்லை கொடுக்காது தடுக்கின்றன.
 • வேலைக்குப் போகாது லீவு எடுக்க வேண்டிய நாட்களைக் குறைக்கின்றன

என்று மருத்துவ ஆய்வுகள் எடுத்துச் சொல்கின்றன.

அதன் அர்த்தம் என்ன உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருந்தால் நோய்கள் அடிக்கடி தாக்காது என்பதுடன், நோய்களின் தாக்கம் தீவிரமாக இருக்காது என்பதுதானே?

இது எப்படி நடக்கிறது?

உடல் பயிற்சியும் மன அமைதியும் எமது உடலிலுள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும் பாதுகாக்கும் கலங்களின் (T Cells) எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. 50 முதல் 300 சதவிகிதம் வரை அதிகரிக்கின்றனவாம். அதனால் நோய் தடுக்கும் ஆற்றல் வலுப்பெறுகிறது.

master.w.m.us.ExerciseToOutDistancejpg

American Journal of Medicine  ல் வெளிவந்த ஒரு ஆய்வின் பிரகாரம் தினமும் அரைமணி நேர நடைப் பயிற்சியில் ஈடுபட்ட பெண்களுக்கு, எதுவித பயிற்சிகளும் அற்றுச் சோம்பிக் கிடந்த பெண்களiவிட 50சதவிகிதம் குறைவாகவே தடிமன் நோய்த் தொற்றுக்கு ஆளானார்களாம்.

மற்றொரு ஆச்சரியமான முடிவும் இந்த ஆய்வில் காத்திருந்தது. பொதுவாக வயதாகும்போது நோயெதிர்புச் சக்தி குறைவடையும். ஆனால் தொடர்ச்சியாக உடற் பயிற்சியில் ஈடுபட்ட 65 வயதுப் பெண்களில் உள்ள பாதுகாக்கும் கலங்களின் (T-cells) எண்ணிக்கையானது 30வயதுப் பெண்களினது அளவு இருந்ததாம். உடற் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்த இது போதுமானது என நினைக்கிறேன்.

நோயுடன் உடற் பயிற்சி செய்யலாமா?

 • உடற் பயிற்சியானது நோயெதிர்ப்பச் சக்தியை வலுவாக்குதால் சாதாரண தடிமல் காய்ச்சல் போன்ற நோயுள்ளபோதும் அதைத் தொடர்வது நல்லதென்றே சொல்லலாம்.
 • ஆயினும் கடுமையான உடற் பயிச்சிகளை நோயுற்றிருக்கும்போது செய்வதால் உடல் சோர்வடையக் கூடும். எனவே உடல் என்ன சொல்கிறதோ அதற்குச் செவியாயுங்கள். வலுக் கட்டாயமாக உடல் பயிற்சியில் இறக்காதீர்கள். முடிந்தளவிற்கு செய்யுங்கள். அது போதுமானது.
 • ஆஸ்த்மா நோயுள்ளவர்களுக்கு தடிமன் வரும்போது இருமல், மூச்செடுப்பதில் சிரமம் அல்லது இழுப்பு ஏற்படக் கூடும். அல்லது ஏற்கனவே இருந்தது சற்றுத் தீவிரமடையக் கூடும். அத்தகைய தருணங்களில் நீங்கள் உபயோகிக்கும் உள்ளுறுஞ்சும் மருந்துகளின் (Inhaler) அளவை அதிகரிக்க வேண்டி நேரலாம். அவ்வாறான நிலைமைகளில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
 •   மாறாக தடிமனுடன் காய்ச்சலும் சேர்ந்திருந்தால் அதனுடன் உடற் பயிற்சி பொருத்தமாக இருக்காது. ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வழமையான உடற் பயிற்சிக்கு திரும்புங்கள்.
 • சாதாரண வேலை செய்பவராயின் என்றால் அதைத் தொடர்வதில் தவறு ஏதும் இல்லை. மாறாக கடுமையான உடல் உழைப்புடன் கூடிய வேலை எனில் ஒருரிநாள் ஓய்வு எடுப்பது நல்லது.

விற்றமின் சீ தடுக்குமா?

விற்றமின் சீ மாத்திரைகளை தொடர்ந்து எடுப்பதால் தடிமன் சளி நோயை தடுக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடமும் வலுவாக இருக்கிறது. ஆயினும் 2007ம் ஆண்டு பிரித்தானியாவில் குடும்ப மருத்துவ கழகத்திற்காக Dr Hasmukh Joshiதலைமையில் செய்யப்பட்ட ஆய்வில் தினசரி இது உறுதிப்படுத்தவில்லை.

vitamin_d_immune

இருந்தபோதும் நோயிருக்கும்போது எடுத்தால் அதன் கடுமையை ஓரளவு தணிப்பதுடன் அது நீண்டநாள் தொடர்வதையும் தடுக்கும்.

மழையில் நனைவதும் குளிரில் அலைவதும்

மழையில் நனைவதாலும் குளிரில் அலைவதாலும் தடிமன் பிடிக்கும் எனப் பலர் சொல்வார்கள். இது உண்மையா?

The Rain Room Is Unveiled At The Curve Inside The Barbican Centre

தடிமன் என்பது ஒரு தொற்று நோய். வைரஸ் கிருமியால் வருகிறது என ஏற்கனவே பார்த்தோம். எனவே மழை குளிரால் வருமென்பது தவறான கருத்தாகவே இருக்கும். ஆனால் பலருக்கு அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன?

பலரது நாசித் துவாரத்தில் அக் கிருமி இயல்பாகவே இருக்கக் கூடும். குளிரான சூழலில் நாசியில் உள்ள இரத்தக் குழாய்கள் சுருங்குவதால், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைகிறது. அதனால் ஏற்கனவே இருந்த கிருமிகள் பெருகி நோயை உண்டாக்குகிறது என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »