Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Unda உண்ட மலையாளப் படம்

கொரோனா தந்த கட்டாய ஓய்வில் இணையத்தில் பார்த்த மற்றொரு படம் இது.

வட இந்திய சத்தீஸ்கரில் நடக்கும் தேர்தலின் போது மம்முட்டி தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று பாதுகாப்பு பணிக்காக கேரளாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதிக் கிராமம் ஒன்றிலுள்ள வாக்களிப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகி, இவர்கள் பணி செய்ய நேர்கிறது.

இவர்களிடம் போதிய ஆயுதங்கள் கிடையாது. மாவோயிஸ்ட் கள் எப்போது தாக்குவார்கள், ஆயுதங்கள் போதிய அளவு இல்லாததால் அதை எதிர்கொள்வது எப்படி என்ற மன உளைச்சல் இவர்களை ஆட்கொள்கிறது.

திருவிழாவில் வெடி வெடித்தால் கூட அதனை மாவோயிஸ்ட் தாக்குதல் என எண்ணிப் பயந்து, உள்ள துப்பாக்கி ரவைகளைக் கூட வீணடித்து விடுகிறார்கள்.

மொழி தெரியாத ஊர், நீருக்குக் கூட தட்டுப்பாடான பகுதி, வறிய மக்கள். அதற்கிடையே இந்த பொலிஸ் குழுவில் உள்ளவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள், முரண்பாடுகள். இவற்றை எதிர்கொள்ள மம்முட்டி எடுக்கும் முயற்சிகள் என ஒரு விரிந்த பரிமாணத்தை காட்சிப்படுத்து கிறார்கள்.

அவர்களது குடும்ப பிரச்சினை களின் மன உழைச்சல்களால் கடமையில் தாக்கத்தை ஏற்படுத்துவது மற்றொரு புறம்.

தேர்தல் அமைதியாக நடக்கிறது. ஆனால் அது தேர்தலைக் குழப்புவார்களோ என எதிர்பார்த்த மாவோயிஸ்டுகளால் அல்ல என்பது எதிர்பாராத திருப்பம்.

இது ஒரு அக்சன் ்படம் அல்ல. சாகச கதாநாயகனாக இன்றி, சராசரி மனிதனாக மம்முட்டி நடிக்கிறார். ஆரவாரமற்ற அமைதியான நடிப்பு.

கானகக் காட்சிகள், இரயில் பிரயாணம் என அனைத்தும் ரசிக்கும்படி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. சுஜித் புருஷன் ஒளிப்பதிவும் , பிரசாந்த் பிள்ளையின் இசையும் எங்கிருந்து, எப்போது மாவோயிஸ்ட் கள் தாக்குவார்கள் என்ற பயம் உணர்வை தொடர வைக்க உதவுகின்றன.

காலித் ரஹ்மானின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது.

காதல், சண்டை, திகில் என்ற வழமையான வாய்ப்பாடுகளில் இருந்து சற்று விலகி நின்று ரசிக்க வைக்கிறது.

வாழ்வின் நெருக்கடியான ஒரு தருணத்தின் கதை

இமையத்தின் ‘செல்லாத பணம்’

இரண்டு நாட்களாக அழுது தீர்க்க முடியாத துயரில் மூழ்கித் திணறிக் கொண்டிருந்தேன். ரேவதியின் தகப்பன் நடேசன், தாய் அமராவதி, அண்ணன் முருகன், அண்ணி அருள்மொழி இவர்களுடன் ஜிப்மர் மருத்துவமனையின் எரிகாயப் பிரிவின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வாசலில் பசியையும் தாகத்தையும் மறந்து நின்று, அவர்கள் துயரில் பங்காளியாக இருக்க நேர்ந்தது. அவர்களது கோபமும் ஆற்றாமையும் கூட என்னையும் ஆட்கொண்டிருந்தது. கணவன் ரவியை அவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைக்க வேண்டும் போலிருந்தது.

220 பக்கங்களைக் கொண்ட இமையத்தின் நாவல் செல்லாத பணம். பணம் வாழ்க்கைக்கு அவசியமாக இருந்த போதும் கூட அது எல்லாத் தருணங்களிலும் நித்திய வாழ்வில் பயன்படுவதில்லை என்பதையே நாவலின் தலைப்பு சுட்டுவதாக இருந்தபோதும் அந்த நாவல் எங்களுக்கு கடத்தும் வாசிப்பு அனுபவம் பரந்தது. உள்ளத்தை ஊடுருவி அதிலும் முக்கியமாக வாழ்வின் துயர் மிகு தருணங்களில் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளையே இலக்கியமாக்கியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

தமிழ் சமூகத்தில் பெண்கள் எவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தப்பகிறார்கள், குடும்ப வன்முறைக்கு ஆளாகுகிறார்கள். இருந்தபோதும் குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவற்றையெல்லாம் மூடி மறைத்து மௌனம் காக்கிறார்கள். மன்னித்து தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளையே காப்பாற்றியும் விடுகிறர்கள் என்பதை நித்தம் காணமுடிகிறது. ஆனால் இந்த நாவலானது அதற்கும் அப்பால், தீக்குளிப்பிற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை ஊடாக துயரத்தின் ஆழத்தை ஆணி அடித்தாற்போல காட்சிப் படுத்துகிறது.

எஜ்ஜினியரிங் படித்த வசதியான ஹெட்மாஸ்டரின் மகளான அவள் பர்மா பஜாரைச் சார்ந்த ஆட்டோ ஓட்டினரை காதலிப்பதும், பெற்றோர்கள் மறுப்பதும் அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதும், அதனால் வேறு வழியின்றி அவளை அவனுக்கு கட்டிக் கொடுப்பதுமான கதையின் முன்பகுதி 20 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிறது. மிச்சம் முழுவதும் அவள் மருத்துவமனையில் கிடக்கும் போது நடக்கும் கதைதான். அதுவும் பெரும்பாலும் உரையாடல் ஊடாக. அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல்கள்.

கதையில் திடீர் திருப்பங்கள் கிடையாது. ஆச்சரியங்கள் காத்திருக்கவி;ல்லை. ஆனால் ஒரு சிறிய கேள்வி கதை முழுவதும் தொக்கிக் கொண்டே நிற்கிறது. தீக்குளிப்பு தற்செயலாக நடந்ததா அல்லது கணவன் மூட்டிவிட்டானா என்பதே அது. இதற்கு எந்த முடிவையும் சுட்டிக்காட்டாமலே நாவல் முடிவடைகிறது. ஆனாலும் கூட ரேவதியினதும் அவளது குடும்பத்தினரதும் கண்ணீரோடு எங்களை கண்ணீரையும் கலக்க வைப்பது நாவலின் இறுதிவரை தொடர்கிறது. இதுவே அப் படைப்பின் வெற்றி எனலாம்.

மருத்துமனையின் தீக்காயப் பிரிவின் வேறு வேறு பகுதிகள், எத்தனை பேர்ச்சன்ட் தீக்காயப் பாதிப்பு, அதன் பாதகங்கள் எவ்வாறானவை போன்ற விபரங்கள். அவசரசிகிச்சை பிரிவு, அதன் செயற்பாடுகள். மருத்துவர்கள் தாதியரின் பணிகள்;, நோயாளிகளின் உறவுவினர்களடானான அவர்களது அணுகுமுறைகள் என அந்த மருத்துமனையின் இயக்கத்தை முழுமையாக அறிந்து கொள்கிறோம். அங்கு மரணங்கள் மலிந்து கிடக்கின்றன. அடிக்கடி தீக்குளிப்புக்கு ஆளானவர்களை அம்புலனஸ் வண்டிகள் ஏற்றி வருவது போலவே, இறந்த உடல்களை எடுத்துச் செல்ல பிரேத காவு வண்டிகள் வருகின்றன.

கண்ணீரும் கவலையும் ஆழ்ந்தகன்ற சமுத்திரம் போல நீக்கமற நிறைந்திருந்த போதும் கன்ரீனுக்கு சென்று வந்தே உறவினர்கள் தங்கள் உயிரைத் தக்கவைப்பதையும் உணர முடிகிறது.

நோயாளிகளைப் பார்ப்பதற்கு காத்திருக்கும் உறவினர்களின் உரையடல்கள் ஊடாக பலவித தகவல்கள் வருகின்றன. நோயால் துடிக்கும் பாத்திரங்களின் வாயிலாக அன்றி பார்த்திருப்பவர்களின் கூற்றாக உயிரின் வதை சொல்லப்படும்போது நெருப்பில் போட்ட நெய்யாக மனம் உருகிக் கரைகிறது. இமையத்தின் சொல்லாட்சியால் அந்தக் களத்தில் நாமும் ஒரு பாத்திரமாகவே மாறிவிடும் மாயவித்தை அரங்கேறுகிறது.

கணவனான ரவி, ரேவதியின் மச்சினியான அருள்மொழியுடன் பேசும் பகுதி முக்கியமானது. எல்லோராலும் திட்டப்பட்டு கெட்டவன் என ஒதுக்கப்படும் ரவியின் மனதில் என்ன இருந்தது என்பதைக் காட்டும் அருமையான பகுதி. கெட்டவன் எனத் தூற்றபடுபவன் மனதிலும் பல ஆதங்கங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இமையத்தின் கதை சொல்லும் ஆற்றல் நாம் அறியதது அல்ல. இருந்தபோதும் அதை இந்த நாவலை மிக அடர்த்தியாக அதே நேரம் உணர்வுகள் தோய்ந்ததாக சொல்லியிருப்பது வியக்க வைக்கிறது. காலப்பாய்ச்சல் ஊடாக ஒரு பெரிய களத்தை அங்கும் இங்கும் நகர்த்தி, உயிர்த்துடிப்புடன் வடித்திருப்பது நயக்க வைக்கிறது.

அண்மையில் பல நாவல்கள் மற்றும் சிறுகதை நூல்களைப் படிக்க முடிந்தது. ஆனால் இதற்கு இணையாக எதையும் சொல்ல முடியவில்லை.

நூல்:- செல்லாத பணம் (நாவல்)

நூலாசிரியர்:- இமையம்

வெளியீடு க்ரியா

CreA, No2,17th East Street, Kamaraj Nagar, Thiruvanmiyur,  Chennai 600 041,

Phone 7299905950

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

சாந்தியின் மறு உருவம் பாலா சேர்

 

வாழ்வின் வசந்தங்கள் சட்டெனக் கருகி விழுந்தது போலாயிற்று. எமது நண்பர்கள் குழுவினரிடையேயான குதூகலங்களும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான சந்திப்புகளும், பகிடிகளோடு இணைந்த அனுபவப் பகிர்வுகளும் திடீரென முற்றுப்புள்ளியிடப்பட்டு முற்றாக முடக்கப்பட்டன. ஒரு இனிமையான சகாப்தத்தின் முடிவு மூர்க்கத்தனமாக எம் மீது திணிக்கப்பட்டது. எமது நட்பு வட்டத்தில் மட்டுமின்றி இன்னும் பல பல நட்பு மற்றும் உறவு வட்டங்களும் அக் கணத்தில் அவ்வாறே நிர்க்கதியான நிலையை அடைந்ததாக உணர்ந்தார்கள்.

அதற்குக் காரணமானவரோ இவை எவை பற்றியும் அலட்டிக்கொள்ளாது தனது வழமையான புன்னகை மறையாத சாந்த வதனத்துடன் அமைதியாகக் கிடந்தார். ஆம். பாலா மாஸ்டர்தான்.

ஆம் மறக்க முடியாத துயர் தினம். ஜனவரி 31ம் திகதி மாலை அந்த துயர் செய்தி எங்களை அடைந்தது.

அது அதீத அதிர்ச்சி அளித்த சம்பவம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் அவரை அவரது வீட்டில் சந்தித்து பலதும் பத்தும் கதைத்து நிறைந்த மனதுடன் வந்திருந்தேன். எந்தவித உடல்நலக் கேட்டுக்கான அறிகுறிகளையும் மருத்துவனான என்னால் அவரில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

‘நேற்று மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததைக் கண்டேன். சிரித்து தலையசைத்து சென்றார். அது இறுதித் தலையசைப்பு ஏன்பதை என்னால் புரிந்துகொள்ளவில்லையே’ எனச் சொல்லி குமுறி அழுதார் நண்பர் ஒருவர்.

‘அன்று கூட வங்கிக்கு வந்திருந்தாரே’ என ஆச்சரியப்பட்டார் வங்கி ஊழியர் ஒருவர்.

மற்றவர்கள் மட்டுமின்றி பாலா சேர் கூட எதிர்பார்த்திருக்காத மரணம் அது. படுக்கை பாயில் கிடக்காமல், நோய் நொடியில் துடிக்காமல், மற்றவர்களுக்கு பாரமாகக் கிடக்காமல் மரணவேவன் அவரை அமைதியாக ஆட்கொண்டான். கள்ளமில்லாத வெள்ளை மனம் கொண்ட அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்றே சொல்ல வேண்டும். ஆனால் எங்களால்தான் அவரது பிரிவை ஜீரணிக்க முடியவில்லை.

பாலா சேர் நண்பர்களான எங்களுக்குத்தான் பிரியமானவர் என்றில்லை. மாணவர்களின் பேரன்பிற்கும், அபிமானத்திற்கும் மரியாதைக்கும் என்றுமே உரியவராக இருந்தார். பாலா சேரின் பாடம் எப்ப வரும் என்று மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். தமிழும் சமூகக் கல்வியும் அவரிடம் மண்டியிட்டு சேவகம் செய்யும். அவர் அவற்றை மாணவர்களுக்கு விளக்கும் முறையில் அவர்கள் வாயில் இலையான் புகுவது கூட தெரியாதவாறு லயித்துக் கிடப்பார்கள்.

கடுமையான தமிழில் இருக்கும் இலக்கியப் பாடல்களை அவர் விளக்கும் முறை அலாதியானது. அந்த நேரத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு சினிமாப் பாடலை உவமானம் வைத்து பாடலுக்கான கருத்தை விளக்கும் போது விளங்காதவை விளங்குவது மட்டுமின்றி வாழ்நாளில் மறக்க முடியாதவாறு ஊறிக் கிடக்கும்.

தான் படித்த, படிப்பித்த ஹாட்லிக் கல்லூரில் மிகுந்த பற்றுடையவர். இளைப்பாறிய பின்னரும் கூட அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு பற்றத் தவறுவதில்லை. அண்மையில் நடந்த சம்பவம் இது. நிகழ்வுகளுக்கு இடையில் உணவு வேளை. ஆனால் உணவு தயாராகவில்லை. ‘சேர் சாப்பாடு தயாராகும் வரை நீங்கள்தான் ஏதாவது பேசி கூட்டத்தை தாக்காட்ட வேண்டும்’ என்ற கோரிக்கை இவரிடம் முன்வைக்கப்பட்டது. ‘தாக்ககாட்ட வந்தவன்’ தான் என்பதையே சொல்லி நகைச்சுவையோடு கூட்டத்தை ஆரம்பித்து கலகலக்க வைத்து பசியை மறக்கடிக்க வைத்துவிட்டார்.

நேரத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பேசுவதில் வல்லவர் அவர். கூட்டம் வயிறு வெடிக்கச் சிரித்து மகிழ்ந்து நிற்கும். யுத்த காலத்தின் போது நண்பர்கள் நாம் இணைந்து நடத்திய அறிவோர் கூடல் நிகழ்வுகள் அவரில்லாவிட்டால் அவ்வளவு கலகலப்பாக இருந்திருக்காது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவரே சாந்தியின் மறுஉருவம் அல்லவா?

எம்.கே.முருகானந்தன்.

எறி குண்டு வீசி
நீசர்களை அழிப்பதில்
ஏன் இன்னும் தயக்கம்
அரச யந்திரத்துடன்
வம்பு ஏனெனத் தயக்கமோ?

ஒடுக்கபட்டுக் கொண்டே
இருப்பவர்களின்
ஈனக் குரல் கேட்கவில்லையா
அன்றி
கேட்காதது போல
பாவனையோ !

சம்பந்தரும் சுந்தரரும்
பாடினர் பதிகம்
சரித்திர நாயகன் இராவணன்
துதித்த தலமும் அதன்
சூழலும்,
கிழக்கு மண்ணும்
கபளீகரமாகிறதே
மாற்று இனத்தவரிடம்..
அரச அனுசரணையுடன்..

மண்ணின் அரசியல்வாதிகளும்
கண் பொத்தி காதடைத்து
வாழா மடந்தையானரே
கடைசி மனிதனும்
ஓரடி நிலமும் பறிபோன பின்தான்
வாய் திறப்பாயோ.

பொறுத்து போதும்
வீசி எறி
கணைகளை
நீசர்களை அழி
மண்ணின் மைந்தர்களை
வாழ வை
தலை நிமிர்ந்து முன் செல்ல
பாதையைத் திற…
நீசர்களை அழித்து…..

( கோணேசர் கோவிலுக்கு செல்லும் வழியில் கோட்டை வாயிலில் எடுத்த படம்.)

எம்.கே.முருகானந்தன்

விரைவில் உயிர் நீக்க விருப்பமா

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்தினால் விரைவில் மரணம் ஏற்படும் என அண்மையில் பிரசுரமான ஒரு ஆய்வு கூறுகிறது.

மென்பானத்தில் உள்ள இனிப்பானது சீனியாக இருந்தால் மட்டும் இந்த ஆபத்து ஏற்படும் என்றில்லை. செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தினாலும் அதே போல மரணம் ஏற்படுமாம்.

452000 பேரைக் கொண்ட இந்த ஆய்வானது டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி,நோர்வேஈ இங்கிலாந்து, சுவீடன், ஸ்பெயின், நெதர்லன்ட, கிறீஸ் ஆகிய நாடுகளில் செய்யப்பட்டது

மாதம் ஒரு முறை மட்டும் மென்பானம் அருந்துபவர்களோடு தினமும் இரண்டு கிளாஸ் இருந்துபவர்களை ஒப்பட்டுப் பார்த்தபோதே இந்து ஆபத்து இருப்பது தெரிய வந்தது.

மாதம் ஒரு முறை மட்டும் மென்பானம் அருந்துபவர்களோடு தினமும் இரண்டு கிளாஸ் இருந்துபவர்களை ஒப்பட்டுப் பார்த்தபோதே இந்து ஆபத்து இருப்பது தெரிய வந்தது. அந்த மரணமானது பல்வேறு நோய்களால் வந்திருந்தது.

தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துபவர்களது மரணமானது பெரும்பாலும் இரத்தக் குழாய் சாரந்த நோய்களால் ஏற்பட்டிருந்தது. மாரடைப்பு மற்றும் முளையில் இரத்தக் குழாய் வெடித்தல் போன்றவை உதாரணங்களாகும்.

மாறாக தினமும் ஒரு கிளாஸ் மென்பானம் மட்டும் அருந்துபவர்களது மரணமானது பெரும்பாலும் உணவுக் கால்வாய் சார்ந்த நோய்களால் ஏற்hட்டிருந்தததாக அந்த ஆய்வு மேலும் சொல்கிறது.


மென்பானங்களில் உள்ள எந்தப் பொருள் காரணமாக இருக்கிறது என்றோ, என்ன காரணத்தால் அவ்வாறு மரணம் விரைகிறதோ என்பவையிட்டு அந்த ஆய்வு எதையும் கண்டறியவில்லை.


எனவே இந்த ஆய்வானது மென்பானம் அருந்துவதற்கும் முன்கூட்டிய மரணத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை  எடுத்துக் காட்டி ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது எனக் கொள்ளலாம்.


எனவே மென்பானங்களைத் தவிருங்கள். தண்ணீரை அருந்துங்கள். வாழ்வு நீளும்.


இந்த ஆய்வானது Jama Internal Medicine மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

0.00.0

புலோலியூர் இரத்தினவேலோனின் புலவொலி

புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய நூலை அதனை வெளியிட்ட ஜீவநதி ஆசிரியர் பரணீதரனிடமிருந்து பெற்றுக்கொண்டபோது நூலின் அட்டையை என் கண்கள் மேய்ந்தன. பசுமை போர்த்திய வயல் அதன் நடுவே எம் அடையாளமான ஒற்றைப் பனை மரம். நூலின் பெயர் புலோலி என்றிருந்தது. புலோலி தெற்குப் பகுதியில் உள்ள பசும் வயல்களில் ஒன்றின் புகைப்படம் என எண்ணிக் கொண்டேன். சரி புலோலி பற்றிய நூலாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

சற்று சந்தேகம் எழ மீண்டும் அட்டையைப் பார்த்தபோது நூலின் பெயரை நான் தவறாக வாசித்துவிட்டதாகத் தெரிந்தது. புலவொலி என்பதே நூலின் பெயராகும். இருந்தபோதும் புலோலி பற்றிய நூல் என நான் எண்ணியதில் தவறில்லை என்பதை புலோலியூர் ஆ.இரத்தினவேலோனனின் என்னுரையில் உள்ள ஒரு வாசகம் உறுதிப்படுத்தியது

‘புலோலியூர் எனும் எங்களுரின் பெயர் ‘புலவொலி என்பதிலிருந்தே திரிபுற்றதென்பர்.’

‘அந்த வகையில் ‘புலோலியுரின் இலக்கிய கர்த்தாக்கள்’ எனும் கட்டுரையைத் தாங்கி வரும் இந்நூலுக்கு ‘புலவொலி’ என்ற மகுடம் பொருத்தமானதே’ என வேலோன் தொடர்ந்து சொல்கிறார்.

பரணீதரனின் ஜீவநதி வெளியீடாக வந்திருக்கும் 120 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 16 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பெரும்பாலானவை ஞாயிறு தினக்குரலில் வெளியான கட்டுரைகள். ஞானம் மற்றும் மல்லிகை சஞ்சிகைகளில் வெளிவந்தவை ஒரு சில.

நூலின் முதற் கட்டுரையாக அமைந்திருக்கும் ‘புலோலியுரின் இலக்கிய கர்த்தாக்கள்’ இந்த நூலின் மகுடம் என்பேன். தமிழகத்திலும் ஈழத்திலும் தன் மொழி ஆளுயைமால் கோலோச்சிய சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை முதற்கொண்டு இன்றைய இளம் எழுத்தாளரான கமலசுதர்சன் வரையான அனைத்து புலோலி தந்த இலக்கியவாதிகள் பற்றியும் அவர்களது ஆளுமைகள், அவர்கள் இயற்றிய நூல்கள், பெற்ற விருதுகள் என ஏரளமான தகவல்களை 17 பக்கங்கள் விரியும் கட்டுரைக்குள் அடக்கியுள்ளார்.

இவ்வளவு தகவல்களையும் பெறுவதற்கு அவர் எடுத்திருக்கக் கூடிய முயற்சி ஆச்சரியப்பட வைக்கிறது. எவ்வளவு விடயங்களை தன் நினைவுக் கிடங்குளிலிருந்து மீண்டிருக்க வேண்டும், எவ்வளவு நூல்களையும் கட்டுரைகளையும் தேடிப் படித்து குறிப்புகள் எடுத்திருக்க வேண்டும் என்பது மலைக்க வைக்கிறது. புலோலயூர் சார்ந்தவர்கள் மட்டுமின்றி இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என்றென்றைக்கும் பயன்படக் கூடிய எண்ணற்ற தகவல்களை இந்தக் கட்டுரை கொண்டிருக்கிறது.

அதே போன்ற மற்றொரு முக்கிய கட்டுரை ஈழத்துச் சிறுகதை வளரச்சிக்கு உதவிய ஆரம்பகாலம் முதல் 83 வரையான சஞ்சிகைகள் பற்றியதாகும். ஈழத்தின் புகழ்பெற்ற ஆரம்பகால சஞ்சிகையான மறுமலர்ச்சி முதல் அலை வரையான பல சஞ்சிகைகள் பற்றியும் அவை சிறுகதைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புப் பற்றியதும்தான் ‘மறுமலர்ச்சி முதல் மல்லிகை சுடர் அலை வரை சிறுகதை வளர்ச்சிக்கு துணைநி;ன்ற சஞ்சிகைகள்’ என்பதாகும்.

இவற்றைத் தவிர 6 கட்டுரைகள் பத்தி எழுத்துக்களாக தினக்குரல் ஞாயிறு இதழில் வெளிவந்தவை. இவை பெரும்பாலும் நூல் பற்றிய விமர்சனக் கட்டுரைகளாக இருந்தபோதும் அந்தந்த நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களையும் தருக்கின்றன. தெணியானின் சிதைவுகள் குறுநாவல், தி.ஞானசேகரனின் சரித்திரம் பேசும் சாஹித்ய ரத்னா விருதாளர்கள், கலாமணியின் 5 நூல்கள் பற்றிய பார்வை, சுதாராஜின் காட்டிலிருந்து வந்தவன் சிறுகதைத் தொகுதி, கண.மகேஸ்வரனின் சிறுகதைகள், பரணீதரனின் இவர்களுடன் நான் நேர்காணல் தொகுப்பு நூல் ஆகியவை அடங்கும்.

தனது மனங்கவர்ந்த இலக்கியகர்த்தாக்கள் எண்மர் பற்றி மல்லிகை மற்றும் ஞானம் சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகளும் இந்நூலில் அடங்குகின்றன. அவை எமக்கு அவர்கள் பற்றிய புதிய தரிசனங்களைத் தருக்கின்றன. புலோலியூர் சதாசிவம், தெளிவத்தை ஜோசப், கோகிலா மகேந்திரன், மண்டுர் அசோகா, தாமரைச்செல்வி, ச.முருகானந்தன், எம்.கே.முருகானந்தன் மற்றும் சிதம்பரப்பிள்ளை மாஸ்டர் பற்றியவையே அவை.

எனவே புலவொலி என்ற இந்த நூலில் புலோலி பற்றிய ஒரு முக்கிய விரிவான கட்டுரைiயும் புலோலி சார்ந்த சில இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் இருந்தாலும் இது புலோலி மட்டும் உள்ளடக்கும் நூல் அல்ல. ஈழத்தின் சமகால இலக்கியம் பற்றியும் இலக்கிய ஆளுமைகள் பற்றியும் மிகவும் காத்திரமான தகவல்களையும் தருக்கின்ற தவகல் களஞ்சியத் தொகுப்பாக அமைகிறது. . நூலசிரியரின் கடும் உழைப்பின் பயனை அறுவடையாக்கி இலக்கியத் தகவல் விருந்தை எமக்கு அளித்த வேலோனுக்கு எனது நன்றிகள்.

வேலோன் எனது இனிய நண்பர். கடுமையான உழைப்பாளி. ஊடக முகாமையாளர் என்ற கடுமையான வேலைப் பளுவான தொழிலில் கடமையாற்றிய போதும் இலக்கியத்திற்கு சம இடம் அளிப்பராக இருக்கிறார். இதனால்தான் இவரால் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்த அதே நேரம் மீரா பதிப்பகம் ஊடாக 100 ற்கு மேற்பட்ட நூல்களை வெளியிடவும் முடிந்திருக்கிறது. அதில் எனது நீங்கள் நலமாக மற்றும் மறந்து போகாத சில ஆகிய இரண்டும் அடங்குவது பெரு மகிழ்ச்சி.

எந்தப் பணியை எடுத்தாலும் முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடும் அவரின் முயற்சிக்கு புலவொலி என்ற இந்த நூலும் மற்றொரு சான்றாகும்

அவரது இலக்கிய முயற்சிகள் தொடரந்தும் சிறப்புடன் மலர எனது வாழ்த்துகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது.  கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டொக்டர்?

வி. சுகி நெல்லியடி

பதில்:- இனிப்பு உணவுகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்வதற்கு முன்னர் அதற்கு அடிமையாகிவிட்டேன்  என்று நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.

இனிப்புக்கு அடிமையாவது என்பது வெறும் பேச்சுச் சொல்ல அல்ல. அது ஒரு நோய் போல பலரைiயும் பீடித்துள்ளது. ஏனெனில் நாம் இனிப்பை உட்கொள்ளும் போது எமது குருதியில் அபின் சார்ந்ததும் டோபமின் போன்றதுமான இரசாயனங்கள் கலக்கின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

குருதியில் அதிகளவு டோபமின் சேரும்போது எம்மையறியது ஒரு இன்ப உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை தொடர வேண்டுமாயின் உடலானது இனிப்பை மேலும் உட்கொள்ளத் தூண்டுகிறது. நாட்செல்லச் செல்ல அதே அளவு இன்பத்தைப் பெற கூடியளவிலான இனிப்பை உட்கொள்ள நேர்கிறது. மது மற்றும் போதைப் பொருள்களும் அவ்வாறுதான் அடிமையாக்குகின்றன.

இனிப்பானது கொகேயினை விட அதிகமாக ஒருவரை அடிமைப்படுத்த வல்லது என Cassie Bjork என்ற ஆய்வாளர் கூறுகிறார். அத்துடன் அதிக இனிப்பை உட்கொள்வதால் எடை ஏறுகிறது. இதன் தொடர்ச்சியாக பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவை வரும். எனவே நீங்கள் விரும்பியவாறு அதிக இனிப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்தான்.

இனிப்பு என்பது சீனி சர்க்கரை ஆகியவற்றிலும் அவை சேர்க்;கப்பட்ட உணவுகளிலும் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. பழங்களிலும் இருக்கிறது. பழங்களில் உள்ள இனிப்பு தனியாக வருவதில்லை. பழங்களிலுள்ள இனிப்பானது நார்ப்பொருள் மற்றும் ஏனைய போசணைப் பொருட்களுடன் கலந்து வருகிறது. இதனால் அவற்றில் சீனியின் அடர்த்தி குறைவு. எனவே அவற்றை உண்ணும் போது குருதியில் சீனியின் அளவு திடீரென ஏறுவதில்லை என்பதையும் குறிப்பிடலாம். எனவே அவற்றில் அடிமையாகும் நிலை ஏற்படுவதில்லை.

இதிலிருந்து விடுபடுவது எப்படி?

முதல் வேலையாக உங்களது வீட்டிலிருந்து சீனியையும் சீனி சார்ந்த பொருட்களை வீசிவிடுங்கள். அலுமாரிகளிலிருந்து அகற்றுவதுடன் உங்கள் முயற்சி நின்றுவிடக் கூடாது. அவற்றை உண்பதில்லை என திடசங்கற்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓவ்வொரு நேர உணவையும் சரியான நேரத்தில் போதியளவாகவும் போசாக்கு நிறைந்ததாகவும் உட்கொள்ள வேண்டும். காலை உணவிலிருந்து இதை ஆரம்பிப்பது முக்கியம். இப்பொழுது பலர் வேலை அவசரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு பின்னர் பசி எடுக்கும் போது திடீர் உணவுகளை கடையில் வாங்கித் திணிக்கும் போதே இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது. எனவே மாப் பொருள் புரதம் கொழுப்பு போன்ற போசணைகள் சரியான அளவில் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஏதாவது காய்கறி பழவகைகள் சேர்ந்திருப்பது அவசியம்.

போதிய நீர் அருந்துங்கள். தினமும் 6 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது. அவை இனிப்பூட்டப்பட்ட பானங்களாக இருக்கக் கூடாது.

பசி இருப்பது கூடாது. பசி இருந்தால் இனிப்பு சேர்ந்த உணவுகளுக்கான அவா அதிகரிக்கும். எனவே பிரதான உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் சிறு உணவுகள் உட்கொள்ளலாம். ஆனால் கேக் பிஸ்கற், ரோல்ஸ், பற்றிஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தொடவும் கூடாது. பழங்களாகவோ காய்கறிகள் அதிகம் சேர்ந்தவையாகவும் இருப்பது நல்லது.

மாறாக வறுத்த கடலை, கச்சான் எண்ணெய் சேர்க்காத கரட் வறுவல் போன்ற ஏதாவது ஒரு இனிப்பற்ற போசாக்கு சிற்றுணவை தயாராக வைத்திருங்கள். வீட்டில் இருக்கும் போது மட்டுமல்ல வேலைக்கு போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பசி எடுக்கும்போது இவற்றை உண்ணுங்கள். கடை நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே வேண்டாம்.

தினசரி ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் குருதியில் சீனியின் அளவை அதிகரிக்க விடாமல் தடுப்பதால் இனிப்பு மீதான நாட்டத்தையும் குறைக்கும். அத்துடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பதாலும் வெற்றுப் பொழுதுகள் இல்லாததாலும் இனிப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.

மனம் மகி;ழ்சியாக இருப்பது அவசியம். மறை சிந்தனைகளில் மூழ்காதீர்கள். தேவையற்ற உணர்வுச் சிக்கலகளில் மூழ்க வேண்டாம். மகிழ்சிசான பொழுதுபோக்குளில் ஈடுபடுங்கள்.

மனஅழுத்தம் இருந்தால் அதை மறக்க பலர் மதுவை நாடுகிறார்கள். உங்களைப் போன்ற இனிப்பிற்கு அடிமையானவர்கள் இனிப்பையே நாடுவார்கள். எனவே மனஅழுத்தத்தை தூண்டும் விடயங்களில் ஈடுபடாதீர்கள். உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, தியானம், யோகாசனம், மந்திர உச்சாடனம் போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபடுவதும் நன்மை தரும். அதே போல போதிய உறக்கமும் அவசியம்.

இக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு சும்மா இருக்காதீர்கள். உடனடியாக எழுந்து உங்கள் வீட்டிலுள்ள சொக்லேட், ஐஸ்கிறீம் முதற்கொண்டு எல்லா இனிப்புகளையும் குப்பைக் கூடையில் வீசுவதிலிருந்து உங்கள் முயற்சியை ஆரம்பியுங்கள். இனிப்பிலிருந்து விடுதலை நிச்சயம்.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்