Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஒட்டுண்ணி மருட்சி’ Category

கேட்ட மாத்திரத்தில் நான் அதிசயித்துப் போனேன். எனது 37வருட மருத்துவத்தில் இப்படி ஒரு பிரச்சனையை நான் கேள்விப்பட்டதே இல்லை.

ஆனால் அடுத்த கணமே இது உண்மையானது அல்ல என்பது புரிந்தது.

செய்தியைப் பகுந்தறிந்த எனது மூளை தெளிவாகக் கூறிவிட்டது.

இருந்தபோதும் அவள் வேண்டும் என்று பொய் சொல்கிறாள் என்று நான் கருதவேயில்லை.

“மலம் போகும் போது அட்டை அட்டையாகப் போகுது…சின்னஞ் சின்னனா கணக்கு வழக்கின்றிப் போய்க்கொண்டே இருக்கு… வருடக் கணக்கில்..”

அட்டை என அவள் கூறியது சாதாரண அட்டைப் பூச்சியை அல்ல.

இரத்தம் குடிக்கும் அட்டையை.

கூறியது உண்மையாக இருந்தால் அவளது உடலிலுள்ள கடைசித் துளிவரை அட்டைகள் உறிஞ்சிக் குடித்திருக்கும். இரத்த சோகையால் உடல் வெளிறிப்போய் நடக்க முடியாது மூச்சிரைக்க வந்திருப்பாள். இவள் உசாராகத்தான் வந்திருந்தாள்.

அவள் ஒரு மலையகப் பெண். பல வருடங்களாக கொழும்பில்தான் வசிக்கிறாள். வயது சரியாக 56 இன்னும் ஒரு மாதத்தில். வசதியானவள் அல்ல. நடுத்தரத்திலும் சற்றுக் குறைவான சமூகத் தராதரம் கொண்டவள்.

நைந்து போன பழைய ஸ்கேட்டும் பிளவுசும் அணிந்திருந்தாள். சற்று அழுக்கான ஆடைகள். குளித்து வரவில்லை. வியர்வை மணம் நாசியை உறுத்தியது. உடை அலங்காரத்தில் அசண்டையீனமும், சுகாதாரம் பேணுவதில் அக்கறையின்மையும் வெளிப்படையாகத் தெரிந்தன.

இந்த அவதானிப்புகள் அவளது நோய் பற்றிய முடிவுக்கு வருவதற்கு எனக்கு அவசியமானவை.

“..எத்தனையோ தரம் அரசாங்க ஆஸ்பத்திரில் மருந்து எடுத்து விட்டேன். அவங்கள் பூச்சிக் குளிசையைத்தான் அள்ளி அள்ளித் தாராங்கள். ஒரு சுகமும் இல்லை”.

அவளைப் போல நானும் அரசாங்க ஆஸ்பத்திரி மருத்துவர்களை குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இவள் தமிழில் சொல்லியது புரிந்திருக்காது. இவளுக்கு அவர்களுக்கு புரியும்படி விளக்க முடியாது. நீண்ட கியூ காத்து நிற்கையில் இவள் புழு என்றால் என்ன பூச்சி என்றால் என்ன றழசஅள என்றுதான் அவர்கள் மனத்தில் பதிந்திருக்கும்.

நல்ல காலம் புளுக் காச்சல் என நினைத்து காய்ச்சல். சளிக் குளிசைகளைக் கொடுக்கவில்லையே என்பதை நினைத்து ஆறுதல் கொள்ளலாம்.

‘மலத்தை எடுத்துக் கொடுங்களேன். என்ன பூச்சி என்று பரிசோதித்துப் பார்க்கலாம்.’

இது அவசியமற்ற போதும் அவளது நம்பிக்கையை தவறென்று எடுத்துக் காட்ட உதவும் என்பதால் கேட்டேன்.

அவளுக்கு அதில் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘அதைப் பிறகு பாப்பம். இப்ப ஏதாவது மருந்து தந்து இந்தப் பிரச்சனையை உடனை தீருங்கோ’ தீர்க்கமாகச் சொல்லிவிட்டாள்.

“மலத்தோடு போனது இப்ப தலையிலையும் வந்திடுத்து. ஊந்து ஊந்து தலையெல்லாம் திரியுது”.

தலையை மூடியிருந்த மொட்டாக்குத் துணியை விலக்கி உச்சந் தலையைச் சுட்டிக் காட்டினா.

மொட்டையாக வெட்டியிருந்த தலையில் கறுப்பும் பளுப்புமாக முளைத்திருக்கும் நரைத்த முடிகளைத் தவிர வேறொன்றும் என் கண்களுக்குப் படவில்லை.

“இஞ்சை இஞ்சை..” அவள் என் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள்.

தனது வலதுகைப் பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து தனது முன்னங்கைகளில் எதையோ பிடிக்க முயன்றாள்.

எனக்கு எதுவும் புலப்படவில்லை!

“அறுபது தாண்டிய பூஞ்சைக் கண்ணுக்கு என்ன தெரியப் போகுது” என நக்கல் அடிக்காதீர்கள்.

அண்மையிலும் கண் மருத்துவரைப் பார்திருந்தேன். தடித்த கண்ணாடிதான். ஆயினும் ‘கற்றரக்ட் இன்னமும் இல்லை. பார்வை நன்றாக இருக்கிறது’ என்று சேர்டிபிகற் கொடுத்துள்ளார்.

இப்படியாக உடலில் பூச்சி ஊர்வதாக சொல்லிக் கொண்டு வருபவர்கள் பலரை எனது கிளினிக்கில் பாரத்திருக்கிறேன். பொதுவாக அவர்கள் அனைவரும் வயதானவர்கள். வயதினால் மூளை நரம்புகள் பாதிப்புற்று ஒரு கலங்கலான மனநிலையில் இருப்பவர்கள்.

மாயத்தோற்றங்கள் (Delusions) ஏற்படுவது அவர்களில் ஏற்படுவது அதிசயமானது அல்ல. புழுக்கள் நெளிவதாகவும், பூச்சிகள் ஊர்வதாகவும், சிலந்திகள் அசைவதாகவும், அட்டைகள் தவழ்வதாகவும், பக்றீரியாக்கள் குடைவதாகவும் அவர்கள் சொல்வதுண்டு.

Man-Bug

ஆனால் இது வயதானவர்களின் நோய் மட்டுமல்ல. ஏனைய வயதினரிடையேயும் தோன்றலாம். தமது உடல் நலத்தைப்பற்றிய தப்பான எண்ணங்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள்.

மனப் பிறழ்வு நோயுள்ளவர்கள் போல இவர்களுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பான மாயத் தோற்றங்கள் எழுவதில்லை. பூச்சி, புளு, வண்டு போன்ற ஏதாவது ஒன்று பற்றிய மாயத் தோற்றமே (Monosymptomatic hypochondrial psychosis) இவர்களுக்கு உண்டாகிறது.

இந்த ஒரு விடயத்தைத் தவிர அவர்கள் சாதாரணமானவர்கள் போலவே இருப்பார்கள். வேறெந்த மன நோய்கள் இருப்பதில்லை. இதனை மருத்துவத்தில் delusions of Parasitosis என அழைப்பார்கள். ஒட்டுண்ணி மருட்சி எனலாமா

இவர்களுள் ஒருத்தி ஒரு சிறிய போத்தலில் தன் மீது ஊரும் பூச்சியைக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். தோல் நிறத்தில் ஒரு சிறிய வஸ்து இருந்தது. அது என்னவென்று புரியாததால் நுணுக்குக் காட்டியில் வைத்துப் பரிசோதித்தபோது அது ஒரு சருமத்துகள் என்பது தெரியவந்தது.

சிலர் இவ்வாறு பூச்சிகளைப் பிடிப்பதாகச் சொல்லி சருமத்ததைக் கிள்ளி கிள்ளி புண்ணாக்கிக் கொண்டு வருவதும் உண்டு.

பல மருத்துவர்களிடம் ஒருவர் மாறி மற்றவர் என சென்று கொண்டிருப்பது இவர்கள் வழக்கம். திருப்பதியின்மையே காரணம்.  மருத்துவர்களால் அவர்களது எண்ணத்தை மாற்றுவது சிரமமாக இருப்பதால் அவர்களது பிரச்சனை தீருவதே இல்லை. இதனால் மருத்துவர்களைக் குறை கூறுவதும் புதிய மருத்துவரை நாடுவதுமாக அலைந்து கொண்டிருப்பார்கள்.

இவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பவர்களுக்கு இவர்களோடு அலைவதும் இவர்கள் பிரச்சனையை தினமும் கேட்டுக் கொண்டிருப்பதும் சலிப்பையும் சினத்தையும் ஏற்படுத்திவிடுவதும் உண்டு.

மருந்துகள் கிடையாதா எனக் கேட்கிறீர்களா? சில psychotic drugs இருக்கவே செய்கின்றன.

வீரகேசரி ஞாயிறு வாரவெளியீட்டில் நான் எழுதிய அனுபவக் கட்டுரை.

0.00.0

Read Full Post »