Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பூச்சிக் கடிகள்’ Category

“என்ன மரங்களையும் ஆகாயத்தையும் பார்த்துக் கொண்டு வாறியள். விழுந்தால் போச்சு. சிகிரியா பார்க்க வேண்டும் எவ்வளவு காலமா ஆசைப்பட்டு வந்திட்டு இப்படி ஏமலாந்திறதே?” மனைவி திட்டாத குறையாகச் சொன்னாள்.

SDC15076-001

அவள் சொன்னதைக் கேட்டதும் பழைய நினைவுகளில் மிதக்கத் தொடங்கியது அவரது மனசு. அந்தக் காலத்திலை பல்கலைக் கழகத்திலிருந்து சுற்றுலா வந்தபோது நேரம் பிந்திவிட்டது. மாலை 4 மணி. இனி ஏறினால் வர இராப்பட்டுப்போகும் என்று சொல்லி ஏறவிடயில்லை. பின் ஒரு முறை வந்தபோதும் கடும் மழை பிடித்துக்கொண்டது. அன்றும் ஏற முடியவில்லை. இனியும் விட்டால் வயசு போயிடும் ஏறமுடியாது என்ற ஏக்கத்தில் இப்பொழுது வந்திருக்கிறார்.

wasp-cage-sigiriya-rock-fortress

இன்று காலை நேரம். நல்ல சுவாத்தியம். வெய்யிலும் ஏறவில்லை. வாய்ச்சுப் போட்டுது என்று பார்த்தால் காலன் பாசக்கயிற்றை நீட்டுறானே எனக் கதிகலங்கினார்

வேறொன்றும் இல்லை ஆங்காங்கே ரீங்காரச் சத்தம். குளவி எங்கே சுத்துது என்று விடுப்புப் பார்த்துக்; கொண்டே வந்ததில்தான் ஏச்சு வாங்க நேர்ந்தது.

1340173119wasp3

குளவிகள் சிகிரிய மலையில்தான் கொட்டும் என்றில்லை. வீட்டுக் கூரைகளிலும், மரங்களிலும் கூடு கட்டியிருப்பவை உங்களிலும் கை வைக்கலாம். தேனீக்களும் கொட்டுவது உண்டு. அதைத் தவிர தௌளு, நுளம்பு, மூட்டைப்பூச்சி போன்ற பூச்சிக் கடிகளுக்கும் ஒருவர் ஆளாகலாம்.

குளவி, தேனீ போன்றவை தமது கூரினால் கொடுக்கினால் Stinger குத்துகின்றன.

ஆனால் ஏனைய பூச்சிகள் வாயினால் கடிக்கின்றன. நுளம்பும் கொட்டுகிறதாயினும் நாம் கடிப்பதாகவே சொல்லிப் பழகிவிட்டோம்.

குளவி தேனீ

Bee

குளவி தேனீ போன்றவை கொட்டியதும் அவ்விடத்தில் வலியும் சிறிய வீக்கமும் தோன்றும். வலி என்பது பொதுவாக எரிவது போன்ற வேதனையாக இருக்கலாம். தோலில் தடித்தது போன்ற வீக்கம் ஏற்படும். அது சற்று செம்மை படர்ந்த நிறத்தில் இருக்கும். வீக்கம் சுமார் 1 செமி அளவானதாக இருக்கலாம். அதைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் பெரும்பாலானோரில் இருக்காது. ஆயினும் சிலரில் அவை ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தும். ஒரு சிலரில் அவ் அறிகுறிகள் தீவிரமாகவும் இருக்கலாம்.

அவை குத்திய கூர் சருமத்தில் இருப்பது தென்பட்டால் அதை விரலாலோ அல்லது forceps போன்றவற்றாலோ பிடுங்கி எடுக்க முனையாதீர்கள். ஏனெனில் பிடுங்க முனையும்போது அது அமுக்கப்பட்டு அதிலிருந்து மேலும் நஞ்சு சருமத்தில் பாய்ந்துவிடும்.

wasp-0071

அப்படியானால் எதுவும் செய்யாது அப்படியே விடுவதா? இல்லை எதுவும் செய்யாது விட்டாலும் நஞ்சு ஊற வாய்ப்பு உள்ளது. எனவே சுரண்டி எடுப்பதே உசிதமானது. பிளேட், கத்திக் கூர், கிறடிட் காட் போன்ற எது கிடக்கிறதோ அதைப் பயன்படுத்திச் சுரண்டி எடுங்கள். காலம் தாமதம் செய்யாது அகற்ற வேண்டும்.

மிக அரிதாக அவை கொட்டிய இடத்தில் பெரிய வீக்கம் தோன்றலாம். நேரம் செல்லச் செல்ல வீக்கம் அதிகரிக்கக் கூடும். கொட்டுப்பட்ட கை அல்லது கால் முழவதும் அது பரவுவதுண்டு. பாரக்கப் பழப்படித்தினாலும் இவை தானே மறைந்துவிடும். இருந்தபோதும் சிலவேளை அவை கொப்ளங்கள் போலாகி உடைப்பதும் உண்டு. இவ்வாறு ஏற்படுவதற்குக் காரணம் கொட்டிய நஞ்சில் உள்ள பொருட்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாலாகும்.

இத்தகைய வீக்கங்களால் பாரிய ஆபத்து ஏற்படாது. இருந்தபோதும் சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்படுமாயின் மூச்சுத் திணறல் ஏற்படும். அது ஆபத்தானது உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும்

பூச்சிக் கடி

பூச்சிகடி என்று சொன்னபோதிலும் பெரும்பாலோனோர் அவை கடிப்பதைக் காண முடிவதில்லை. ஆயினும் திடீரென வலி தோன்றுவதே பூச்சிக் கடியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். ஆயினும் அவற்றின் உமிழ்நீரினால் சருமத்தில் சில மாற்றங்கள் தோன்றும்.

முதலில் அரிப்பு எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றும். அதைத் தொடர்ந்து சருமத்தில் சிறிய தடிப்பு அல்லது வீங்கம் தோன்றும். வீங்கம் தோன்ற சற்று காலதாமதமாகலாம். சிலவேளைகளில் 24மணி நேர தாமத்திலும் வீக்கம் தோன்றலாம். வீக்கத்தைச் சுற்றி சற்று செந்நிறம் பரவுவதுண்டு. இவ் வீக்கம் மறைவதற்கு பல நாட்கள் எடுக்கக் கூடும்.

பூச்சி கடித்த இடத்தில் வீக்கத்திற்குப் பதிலாக சிறிய நீர்க் கொப்பளங்கள் தோன்றுவதும் உண்டு. இவை மிகுந்த அரிப்பைக் கொடுக்கும். இவை ஓரிரு மணி நேரத்தில் உடைந்துபோக அந்த இடத்தில் சருமம் தடித்து சிறிய தடிப்புப் போன்ற வீக்கம் ஏற்படக் கூடும். இவையும் மறைய பல நாட்கள் எடுக்கலாம்.

இருந்தபோதும் பூச்சிக்கடிகளால் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவதில்லை

உடலளாவிய ஒவ்வாமை generalised (systemic) allergic reaction

குளவி அல்லது தேனீ கொட்டிய நச்சுப் பொருளானது உடலின் நோயெதிர்பு தொகுதியை தூண்டி ஒவ்வாமையை ஏற்படுத்தி, கடுமையான உடலளாவிய பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம்.

அதாவது கடித்த இடத்தில் மட்டும் அரிப்பு தடிப்பு என்றில்லாமல் உடலின் ஏனைய இடங்களுக்கும் பரவலாம்.

அது முகத்திற்கு வரவுவதும் உண்டு. உதடுகளும் நாக்கும் தடித்து வீங்கலாம். தொண்டை சுவாசக் குழாய்களுக்கும் பரவுமே ஆனால் அதனால் மூச்சுத் திணறல் ஏற்படும்.

ஆஸ்த்தா இழுப்பும் வரக் கூடும்.

ஓவ்வாமை உணவுத் தொகுத்யைத் தாக்குமெயானால் வயிற்று வலி ஏற்படும். ஓங்காளம் வாந்தி போன்றவை தொடரலாம்.

குருதிக் குழாய்களை ஒவ்வாமை தாக்குமே ஆயின் அவை திடீரென விரிவடையும். ஆதனால் சருமம் செம்மை நிறமாகலாம். இருதயத் துடிப்பு வேகமாகும். இரத்த அழுத்தம் வீழ்ச்சியடையும். இதன் தொடர்ச்சியாக தலைசுற்று மயக்கம் போன்றவையும் தொடரலாம்.

அவ்வாறு மயக்கம் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான அறிகுறிகளுடன் கூடிய உடலளாவிய ஒவ்வாமை ஆபத்தானது. உடனடி மருத்துவ உதவி தேவைப்படும்.

ஒன்றில்லாது பல தேனீக்களோ குளவிகளோ கொட்டினால் விளைவு மோசமாக இருக்கும். இதற்குக் காரணம் அதிகளவு நச்சு உடலில் சேருவதாலேயே ஆகும். ஒவ்வாமை விளைவாக அது இருக்காது.

சிகிரியாவில் பல குளவிகள் ஒன்றடியாகக் கொட்டுவதாலே பிரச்சனை பலருக்கு ஏற்படுகிறது. குளவிகள் கொட்டிய களோபரத்தால் எற்படும் பயப்பீதியும் பலரை மருத்துவமனைக்கு விரட்டியிருக்கலாம்.
சிகிச்சை

தேனீ அல்லது குளவி கொட்டியிருந்தால் அதன் கூரை சுரண்டி எடுப்பது பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். பிடுங்கி எடுக்க முனைய வேண்டாம்.

குடித்த இடத்தில் வீங்கியிருந்தால் மருத்துவ ஆலோசனையுடன் ஒவ்வாமைக்கு எதிரான மாத்திரை (Antihistamine) போட நேரும். மிகக் கடுமையான வீக்கம் எனில் ஸ்டிரொயிட் மாத்திரைகள் தேவைப்படலாம்.
வீக்கம் அதிகமெனில் ஐஸ் வைப்பது உதவும்.

வலி கடுமையாக இருந்தால் பரசிட்டமோல் மாத்திரை பருகுங்கள்
குரொடமின் அல்லது ஹைரோகோட்டிசோன் கிறீம் வகைகள் சரும வீக்கம் குறையாவிடில் உதவும்.

அரிப்பு இருந்தாலும் அதைக் குறைக்க மேலே கூறிய கிறீம் வகைகள் உதவும். கடுமையாக அரித்தாலும் நகங்களால் சொறியவோ கூரான பொருட்களால் பிராண்டவோ வேண்டாம்இ அவ்விடத்தில் கிருமி தொற்றிச் சீழ் பிடித்துவிடும்.

தடுப்பது எப்படி?

சிகிரியா போன்ற இடங்களுக்கு மட்டுமின்றி குளிவிகள் அதிகம் இருக்கும் காட்டுப் பிரதேசங்கள் மரச் சோலைகள் உள்ள இடங்களுக்கு சுற்றுலவோ அல்லது வேறு தேவைக்களுக்கோ போகும் போது அவதானிக்க வேண்டியவை எவை?

அவை உங்கள் பால் கவரப்படுவதைத் தடுக்க வேண்டும். எவ்வாறு?

கடுமையான வர்ணமுள்ள ஆடைகள் அணிவதைத் தவிருங்கள்.

கடுமையான மணமுள்ள வாசனைத் திரவியங்கள் உபயோகிக்கக் கூடாது.

அதேபோல கடும் மணமுள்ள சம்பூக்கள் போட்டுத் தலை கழுவிய பின்னர் அவ்விடங்களுக்குச் செல்லாதீர்கள்.

அவையுள்ள இடங்களில் வேலை செய்யும் போது உங்கள் உடலை முழமையாக மூடியிருங்கள். தொப்பி, நீண்ட கைகளைக் கொண்ட மேலுடை, கால்களை மூடுமாறான உடைகள், சப்பாத்து,

பழங்களைப் பொறுக்குவது, பழங்களைப் பறிப்பது போன்ற செய்ககைகள் அவர்களை உசாராக்கிவிடும்.

திறந்த பாத்திரங்களில் வைத்து பழச்சாறுகள், மணமுள்ள பானங்களை அருந்துவதைத் தவிருங்கள். அவற்றால் கவரப்பட்டு பற்தோடி வரும் அவை உங்களைக் கடிக்கலாம். வாயினுள்ளும் புகுந்து கடித்துவிடக் கூடும். உள்ளி சாப்பிட்டால் அவை அணுகாது என்ற நம்பிக்கைக்கு தோரம் கிடையாது.

அதேபோல வாசனையுள்ள உணவுகளை உண்ணும்போதும் அவதானமாக இருக்க வேண்டும். சாப்பிட்ட கைகளில் உணவின் மணம் முழுமையாக நீங்குமாறு நன்றாக கழுவுங்கள்.

குளவிக் கூடுகளை நீங்களாக அழிக்க முனையாதீர்கள். அனுபவம் உள்ளவர்களை உதவிக்கு அழையுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் (Dec 12, 2014) வெளியான கட்டுரை

0.0.0..0.0.0

Read Full Post »