Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கலைமணி சனசமூக நிலையம்’ Category

எனது ஊர் வியாபாரிமூலை ஆகும். பருத்த்திததுறையில் இருந்து மேற்குப்புறமாக சுமார் ஒரு மைல் தூரத்திலிருந்து இருக்கிறது.அருகே கடற்கரை. ஆழமற்ற பாக்குத் தொடுவாய்.முருங்கைக் கற்கள் கடலில் வேலியடைத்தது போலப் பரந்திருக்கும்.

எமது ஊரையும் கடற்கரை வீதியையும் பிரித்து நிற்கும் தோட்டக் காணிகள். வெங்காயம், புகையிலை, மிளகாய் எனப் பசுமை போர்த்தியிருக்கும். தோட்டக் காணிகளின் நடுவே நின்று பார்த்தால் அதன் கிழக்கு எல்லையில் தெணியம்மன் கோவில் தெரியும்.

இளமைக்காலம் முழுவதும் ஆடிப்பாடித் திரிந்த தாய் மண் அது.

தொழில் நிமித்தமாக நீண்ட காலம் பருத்தித்துறை நகரிலும், பின்னர் கொழும்பில் வசிக்க நேர்ந்தபோதும் எமது சொந்த மண்ணின் நினைவுகளில் மூழ்குவது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்று திடீரென எனது ஊர் பற்றிய எண்ணவும் அது பற்றி எழுதவும் நேர்ந்ததற்குக் காரணம் வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம்தான்.

அண்மையில் நடைபெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவாகியுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

தலைவர் திரு.V.K.இரத்தினவடிவேல்
செயலாளர் திரு கயானந்தன் குணாதரன்
பொருளாளர் திரு செ.இரகுநாதன்

ஆகியோர் உட்பட செயற்திறன் மிக்க செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன்.

அனுபவ முதிர்ச்சியுள்ள தலைமையும், செயலூக்கம் கொண்ட இளைய தலைமுறையினரான பொருளாளர் செயலாளர் ஆகியோரைக் கொண்ட புதிய நிர்வாகக் குழு சிறப்பாக எமது நிலையத்தைக் வழி நடாத்துவதற்கு திடசங்கற்பம் கொண்டிருக்கிறார்கள்.

புதிய தலைவருக்கும் நிர்வாக சபையினருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு எமது ஊர் மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பது திண்ணம்.

சென்ற 24.02.2013 அன்று பாடசாலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொள்ளச் சென்ற போது எமது சனசமூக நிலையப்பக்கம் செல்ல நேர்ந்தது.

அதிகாலை 7-7.30 மணியளவில் வீதிக்குசென்ற போது நிலையத்தின் வாயில் திறக்கப்படவில்லை. ஆயினும் அன்று நடைபெற இருந்த மருத்துவ முகாம் பற்றிய அறிவித்தல் அங்கு பார்வைக்கு வைக்கபட்டிருந்தமை மகிழ்ச்சியளித்தது.

மீண்டும் அரை மணி நேரத்தில் அதே வழியால் திரும்பி வரும்போது வாயிற் கதவு திறந்திருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அன்றைய பத்திரிகைகள் வந்திருந்தன. அவை ஒழுங்கான முறையில் வாசிப்பு மேசையில் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன.

பழைய நினைவுளில் மூழ்குவது இன்பம். மாணவப் பருவத்தில் நீண்ட காலமாக அதன் செயற்குழுவில் இடம்பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது.

திரு வைத்திலிங்கம், திரு.வே.க.கந்தையா, திரு.மகாதேவன்பிள்ளை போன்ற பல பெரியோர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று வாசிகசாலையை சிறப்பாக இயங்க வைத்தனர்.

புதிய மேல்மாடி கட்டிடத் திறப்பு விழா நேற்று நடந்தது போல பசுமையாக மனதில் நிறைந்து இருக்கிறது. இன்றும் அதே கட்டிடம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வசதியான வாசிப்பறை. வாசலில் மணல் பரப்பிய தரை. காலாற அமர்ந்திருக்க ஏற்றது. வெயிலி்ன் கொடுமையைத் தணித்து குளிர்மை வீசும் பெரு மரம். கிளை விரித்து பரந்த அது கொடுக்கும் தண்மை பத்திரிகை படிக்க வருபவர்களை ஆசுவாசப்படுத்தும்.

ஊரிலுள்ள 10-12 இளைஞர்கள் முறை வைத்து மாறி மாறி வாசிகசாலைக்கு
பத்திரிகைகளை அன்பளிப்பாக வாங்கித் தருகிறார்களாம். அவர்களது தன்னலமற்ற பணி மகிழ்ச்சியளிக்கிறது

தற்காலிகமாக மூடிக் கிடக்கும் நூலகத்தின் lending பகுதிக்கு புதிதாக நூல்களைச் சேர்க்கவும் அங்கத்துவர்களுக்கு மாறி மாறி வாசிக்கக் கொடுக்கவும் முயற்சிக்கிறார்கள். வேறு பல திட்டங்களும் உள்ளதாகத் தெரிகிறது.

ஊரவர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என அனைவரும் புதிய நிர்வாகக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கி நிலையம் சிறப்பாக இயங்க உதவுவார்கள் என்பது திண்ணம்.

‘மறந்து போகாத சில’ புளக்கில் வெளியான கட்டுரை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம்

0.0.0.0.0.0.0

Read Full Post »