Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2019

புலோலியூர் இரத்தினவேலோனின் புலவொலி

புலோலியூர் இரத்தினவேலோனின் புதிய நூலை அதனை வெளியிட்ட ஜீவநதி ஆசிரியர் பரணீதரனிடமிருந்து பெற்றுக்கொண்டபோது நூலின் அட்டையை என் கண்கள் மேய்ந்தன. பசுமை போர்த்திய வயல் அதன் நடுவே எம் அடையாளமான ஒற்றைப் பனை மரம். நூலின் பெயர் புலோலி என்றிருந்தது. புலோலி தெற்குப் பகுதியில் உள்ள பசும் வயல்களில் ஒன்றின் புகைப்படம் என எண்ணிக் கொண்டேன். சரி புலோலி பற்றிய நூலாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

சற்று சந்தேகம் எழ மீண்டும் அட்டையைப் பார்த்தபோது நூலின் பெயரை நான் தவறாக வாசித்துவிட்டதாகத் தெரிந்தது. புலவொலி என்பதே நூலின் பெயராகும். இருந்தபோதும் புலோலி பற்றிய நூல் என நான் எண்ணியதில் தவறில்லை என்பதை புலோலியூர் ஆ.இரத்தினவேலோனனின் என்னுரையில் உள்ள ஒரு வாசகம் உறுதிப்படுத்தியது

‘புலோலியூர் எனும் எங்களுரின் பெயர் ‘புலவொலி என்பதிலிருந்தே திரிபுற்றதென்பர்.’

‘அந்த வகையில் ‘புலோலியுரின் இலக்கிய கர்த்தாக்கள்’ எனும் கட்டுரையைத் தாங்கி வரும் இந்நூலுக்கு ‘புலவொலி’ என்ற மகுடம் பொருத்தமானதே’ என வேலோன் தொடர்ந்து சொல்கிறார்.

பரணீதரனின் ஜீவநதி வெளியீடாக வந்திருக்கும் 120 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 16 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பெரும்பாலானவை ஞாயிறு தினக்குரலில் வெளியான கட்டுரைகள். ஞானம் மற்றும் மல்லிகை சஞ்சிகைகளில் வெளிவந்தவை ஒரு சில.

நூலின் முதற் கட்டுரையாக அமைந்திருக்கும் ‘புலோலியுரின் இலக்கிய கர்த்தாக்கள்’ இந்த நூலின் மகுடம் என்பேன். தமிழகத்திலும் ஈழத்திலும் தன் மொழி ஆளுயைமால் கோலோச்சிய சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை முதற்கொண்டு இன்றைய இளம் எழுத்தாளரான கமலசுதர்சன் வரையான அனைத்து புலோலி தந்த இலக்கியவாதிகள் பற்றியும் அவர்களது ஆளுமைகள், அவர்கள் இயற்றிய நூல்கள், பெற்ற விருதுகள் என ஏரளமான தகவல்களை 17 பக்கங்கள் விரியும் கட்டுரைக்குள் அடக்கியுள்ளார்.

இவ்வளவு தகவல்களையும் பெறுவதற்கு அவர் எடுத்திருக்கக் கூடிய முயற்சி ஆச்சரியப்பட வைக்கிறது. எவ்வளவு விடயங்களை தன் நினைவுக் கிடங்குளிலிருந்து மீண்டிருக்க வேண்டும், எவ்வளவு நூல்களையும் கட்டுரைகளையும் தேடிப் படித்து குறிப்புகள் எடுத்திருக்க வேண்டும் என்பது மலைக்க வைக்கிறது. புலோலயூர் சார்ந்தவர்கள் மட்டுமின்றி இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் என்றென்றைக்கும் பயன்படக் கூடிய எண்ணற்ற தகவல்களை இந்தக் கட்டுரை கொண்டிருக்கிறது.

அதே போன்ற மற்றொரு முக்கிய கட்டுரை ஈழத்துச் சிறுகதை வளரச்சிக்கு உதவிய ஆரம்பகாலம் முதல் 83 வரையான சஞ்சிகைகள் பற்றியதாகும். ஈழத்தின் புகழ்பெற்ற ஆரம்பகால சஞ்சிகையான மறுமலர்ச்சி முதல் அலை வரையான பல சஞ்சிகைகள் பற்றியும் அவை சிறுகதைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புப் பற்றியதும்தான் ‘மறுமலர்ச்சி முதல் மல்லிகை சுடர் அலை வரை சிறுகதை வளர்ச்சிக்கு துணைநி;ன்ற சஞ்சிகைகள்’ என்பதாகும்.

இவற்றைத் தவிர 6 கட்டுரைகள் பத்தி எழுத்துக்களாக தினக்குரல் ஞாயிறு இதழில் வெளிவந்தவை. இவை பெரும்பாலும் நூல் பற்றிய விமர்சனக் கட்டுரைகளாக இருந்தபோதும் அந்தந்த நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களையும் தருக்கின்றன. தெணியானின் சிதைவுகள் குறுநாவல், தி.ஞானசேகரனின் சரித்திரம் பேசும் சாஹித்ய ரத்னா விருதாளர்கள், கலாமணியின் 5 நூல்கள் பற்றிய பார்வை, சுதாராஜின் காட்டிலிருந்து வந்தவன் சிறுகதைத் தொகுதி, கண.மகேஸ்வரனின் சிறுகதைகள், பரணீதரனின் இவர்களுடன் நான் நேர்காணல் தொகுப்பு நூல் ஆகியவை அடங்கும்.

தனது மனங்கவர்ந்த இலக்கியகர்த்தாக்கள் எண்மர் பற்றி மல்லிகை மற்றும் ஞானம் சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகளும் இந்நூலில் அடங்குகின்றன. அவை எமக்கு அவர்கள் பற்றிய புதிய தரிசனங்களைத் தருக்கின்றன. புலோலியூர் சதாசிவம், தெளிவத்தை ஜோசப், கோகிலா மகேந்திரன், மண்டுர் அசோகா, தாமரைச்செல்வி, ச.முருகானந்தன், எம்.கே.முருகானந்தன் மற்றும் சிதம்பரப்பிள்ளை மாஸ்டர் பற்றியவையே அவை.

எனவே புலவொலி என்ற இந்த நூலில் புலோலி பற்றிய ஒரு முக்கிய விரிவான கட்டுரைiயும் புலோலி சார்ந்த சில இலக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் இருந்தாலும் இது புலோலி மட்டும் உள்ளடக்கும் நூல் அல்ல. ஈழத்தின் சமகால இலக்கியம் பற்றியும் இலக்கிய ஆளுமைகள் பற்றியும் மிகவும் காத்திரமான தகவல்களையும் தருக்கின்ற தவகல் களஞ்சியத் தொகுப்பாக அமைகிறது. . நூலசிரியரின் கடும் உழைப்பின் பயனை அறுவடையாக்கி இலக்கியத் தகவல் விருந்தை எமக்கு அளித்த வேலோனுக்கு எனது நன்றிகள்.

வேலோன் எனது இனிய நண்பர். கடுமையான உழைப்பாளி. ஊடக முகாமையாளர் என்ற கடுமையான வேலைப் பளுவான தொழிலில் கடமையாற்றிய போதும் இலக்கியத்திற்கு சம இடம் அளிப்பராக இருக்கிறார். இதனால்தான் இவரால் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்த அதே நேரம் மீரா பதிப்பகம் ஊடாக 100 ற்கு மேற்பட்ட நூல்களை வெளியிடவும் முடிந்திருக்கிறது. அதில் எனது நீங்கள் நலமாக மற்றும் மறந்து போகாத சில ஆகிய இரண்டும் அடங்குவது பெரு மகிழ்ச்சி.

எந்தப் பணியை எடுத்தாலும் முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடும் அவரின் முயற்சிக்கு புலவொலி என்ற இந்த நூலும் மற்றொரு சான்றாகும்

அவரது இலக்கிய முயற்சிகள் தொடரந்தும் சிறப்புடன் மலர எனது வாழ்த்துகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »