Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2018

ரசனைக் குறிப்பு
பரணீதரனின் ‘அல்வாய் சண்டியன்’

‘சிறுகதை, கவிதை, நாவல் போன்ற புனைவுகளின் மீதான ஆர்வம் குறைந்து செல்கிறது’ என மிகச் சிறந்த கவிஞரும் இலக்கியவாதியுமான நண்பர் அ.யேசுராசா அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்த போதும் தேர்ந்த இலக்கியவாதிவாதியே இப்படி சொல்லும் போது சாதாரண ரசிகனான என் போன்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும் எனச் சிந்திக்கத் தோன்றியது.

20180629_124957

காரணம் என்னவாயிருக்கும்?; எமது வயது காரணமாக இருக்குமா அல்லது பெரும்பலான புனைவுகள் செக்கு மாடுகள் போல சலிக்க வைக்கும் ஒரே பாதையில் சுத்திச் சுத்திச் வருவதால் வாசித்து அலுத்துவிட்டது காரணமாக இருக்குமா தெரியவில்லை.

இருந்தபோதும் அண்மையில் மூன்று புத்தகங்களை ஆர்வத்தோடு படித்து முடித்தேன். ஞானம் பாலசந்திரனின் ‘பொய்மையும் வாய்மையிடத்து’ திருமதி சோமா ஜெயகொடியின் ‘சித்தார்த யசோதரா’ மற்றும் பரணீதரனின் ‘அல்வாய் சண்டியன்’.

பரணீதரனின் நூல் சிறுகதைத் தொகுதி மற்ற இரண்டும் நாவல்கள்.

பரணீதரனின் சிறுகதைத் தொகுதியை ஆர்வமாக படிக்க முடிந்ததற்கான காரணங்கள் எவை?

சிறுகதைகள் என்பவை சிறுகதைகளாக இருக்க வேண்டும். அளவில் மட்டுமல்ல சம்பவக் கோர்வைகளிலும் கூட. நாவல்களின் குட்டிகள் போலவோ காரண காரியங்களை ஆழ்ந்து ஆராயும் கட்டுரைகள் போலவோ வழவழா என்று இருக்கக் கூடாது. பேச வந்த கருவை சுருக்கமாக அழகான மொழியில் நறுக்கென நெஞ்சில் பதியும் வண்ணம் சொல்வதுடன் வாசகனை தன்னுடன் கைகோர்த்து பிணைத்து அழைத்துச் சொல்வது போல சுவார்ஸமானதாக இருக்க வேண்டும். அது இந்தத் தொகுப்பில் உள்ள படைப்புகளில் நிறையவே கிடைக்கிறது.

சுமார் 106 பக்கங்களை மட்டும் கொண்ட இந்தத் தொகுதியில் பத்து சிறுகதைகள் உள்ளடங்கியுளன. ஓவ்வொரு கதையும் சுமார் பத்து பக்கங்கள் மட்டுமே கொண்டுள்ளதாகக் கொள்ளலாம். அளவான சிறுகதைகள். சுருக்கமும் செறிவும் கொண்டவை. முன்னுரை வாழ்த்துரை, ஆய்வுரை. கருத்துரை என வாசகர்களான எங்களின் பொறுமையைச் சோதிக்காது அரைப் பக்க ‘என்னுரை’யைத் தாண்டி நேரடியாக படைப்புகளுடன் கைகோர்க்க முடிகிறது.

இவருடைய கதைகள் பெரும்பாலும் போரின் காரணமான சமூக மாந்தருக்கு ஏற்பட்ட பாதிப்புகளையே பேசுகின்றன. உயிரிழப்பு, உறவிழப்பு, அங்கயீனம், தனிமை, பொருளிழப்பு, வறுமை போன்ற பலவற்றைக் கதைகளுடே தர்சிக்க முடிந்தாலும் அவற்றின் ஊடுபொருளாக பெரும்பாலும் உளவியல் தாக்கங்கள் அமைவதைக் காண முடிகிறது. சகமாந்தரின உள்ளுணர்வுகளையும் மனக்கிடக்கைகளையும் உணர்ந்து கொள்ளக் கூடிய நுண்ணறிவு கொண்ட ஒருவருக்கே இது சாத்தியமாகும். மேலதிகமாக, புத்திபூர்வமான தேடலும் இருந்திருக்கலாம். உளவியலையும் தனது பட்டப் படிப்பில் ஒரு பாடமாக பரணீதரன் எடுத்துக் கொண்டிருந்தாரோ என்பது எனக்குத் தெரியாது .

பரணீதரனின் பாத்திரங்களும் களங்களும் பலதரப்பட்டவை. வாசகர்களில் பெரும்பாலானவர்கள் போலவே இவரது கதை மாந்தர்களும் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆசிரியர்கள் மாணவர்கள், அரச சேவையாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள். இத்தகைய பாத்திரங்களும் களங்களும் உயிரோட்டமாக இருப்பதற்கு காரணம் ஆசிரியருக்கும் நன்கு பரிச்சயமான வாழ்வும் மனிதர்களுமே அவை. அவரது வாழ்வில் காண்பபை கேட்பவை உணர்பவை எனலாம். சொல்லும் மொழியில் சுவை இருந்தால் அனுபவம் சார்ந்த படைப்புகள் உயிரோட்டாக அமைவதில்லை வியப்பில்லை.

ஆயினும் தனக்குச் சற்றேனும் தொடர்பற்ற களங்களில் அமையும் இரு கதைகளான வெட்டியான் மற்றும் நினைந்ததுமற்று நினையாமையுமற்று … ஆகிய இரு கதைகளும் மிகவும் வித்தியாசமானவை. சமூக பொருளாதார நாகரீக நிலைகளில் எட்டாத் துருவங்களில் நிற்பவை.

இருந்தபோதும் அவை இரண்டும் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

நினைந்ததுமற்று நினையாமையுமற்று … மிகவும் வித்தியாசமான கதை. அதன் ஆரம்ப வசனங்களே புதிய சூழலுக்குள் வாசகனை ஈர்த்து ஆர்வமுடன் வாசிக்கத் தூண்டுகின்றன. ‘காலையில் முதலில் எதிர்ப்படுவோரைக் கண்டதும் உதிர்க்கும் பழழன னயலஇ அயவந சூ இதழ்கரையோரம் தோன்றும் சநயனல அயனந புன்சிரிப்பு.’ இவை போதாதா கதையோடு இணைய வைப்பதற்கு.

இக் கதை முழுவதும் வித்தியாசமான புனைவாகவே இருக்கிறது. விசேட அறிவியல் நிபுணத்துவம், முதுமையின் குழந்தைத்தனம், களங்கமற்ற அன்பு, மருத்துவ அறிகுறிகள் இவற்டையே இழையோடும் நுட்பமான புதிர், எனப் பலவும் இச் சிறுகதையில் குறுகப் புனைவாகியுள்ளன. ஆனால் சிறுகதையின் வார்ப்ப்பானது வாசகனை ஒரே மூச்சில் படித்து முடிக்க வைக்கிறது.

மற்றது வெட்டியான் என்ற சிறுகதை. பேராசிரியர் எமில் சமூக அந்தஸ்தில் ஒரு துருவம் என்றால் வெட்டியான் மூர்த்தி சமூக அந்தஸ்தில் மறு துருவம்.

ஒரு குடிகாரன் பற்றிய கதை. குடிப்பவர்களைக் கண்டாலே மருத்துவன் என்ற ரீதியில் எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். உழைக்கும் காசைக் கொட்டி தங்கள் உடலைக் கெடுத்து நோயை வாங்குகிறார்களே என்றதனால். அத்துடன் தங்கள் பொருளாதார நிலையை குழிதோண்டிப் புதைப்பதுடன் மனைவி பிள்ளை குட்டிகளின் குடும்ப மானத்தை வாங்குகிறார்களே என்ற ஆதங்கம்.

ஆனால் எதற்கும் ஒரு மறுபக்கம் இருக்கக் கூடும் என்பதற்கு இக்கதை நல்ல ஒரு உதாரணம். அன்பான மனைவி, குழந்தைகள் இருந்தும் குடிக்கிறான். ஏன் குடிக்கிறான். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். பசியாற்ற வேண்டும், பாடசாலை செல்ல வைக்க வேண்டும் என்பதற்காகக் குடிக்கிறான். கேட்பதற்கு அபத்தமாக தோன்றினாலும் அதுதான் இக்கதையின் அடிப்படையாக இருக்கிறது.

கோபப்பட வேண்டிய பாத்திரத்தை மதிக்க வைக்க வைத்துள்ளமை படைப்பாளியின் திறமையைக் காட்டுகிறது.

மாணவர்களின் உலகம் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் உளவியல் தாக்கங்கள் போன்றவற்றை ‘இடமாற்றம்’ மற்றும் ‘அல்வாய் சண்டியன்’ ஆகிய படைப்புகளில் தரிசிக்க முடிகிறது. நல்லாசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் எவ்வாறு இருக்கக் கூடாது போன்றவை மறைபொருளாக வெளிப்படுகிறது. படமுடியாது இனித் துயரம் சிறுகதையிலும் பாடசாலை வாழ்வின் சில அம்சங்கள் சொல்லப்பட்ட போதும் அது பேசும் உள்ளடக்கம் முற்றிலும் வேறானது.

வெளிநாட்டுக்காரர் நாட்டுக்கு வந்து திரும்புவது பற்றிப் பேசும் படைப்புகள் இரண்டு இருக்கின்றன. வெளிநாடுகளில் எவ்வளவு கஸ்டப்பட்டு உழைத்து சலித்தாலும் இங்கு வந்ததும் தங்கள் பவிசுகளைக் காட்டி உறவுகளை வாய்பிளக்க வைக்கிற பலரைப் போல அல்லாது தனது மண்ணையும் மக்களையும் உறவுகளை நேசிக்கிறவர்கள் பற்றி கதைகளாக இருக்கின்றன. உறவுகளின் நேசத்தில் மனம் நிறையும் மனிதர்களைப் பற்றிய கதைகள் இவை. உறவுகளுக்கு கைகொடுத்து உயர்த்தும் மனம் கொண்ட நல்ல மனதுள்ளவர்கள் முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். மீண்டும் பிரிய நேர்வது அவர்கள் மனத்தை சஞ்சலப்படுத்துகிறது.

உண்மையும் அதுதானே வெளிநாடு சென்னறவர்களின் உதவி இல்லையெனில் இங்கு பலர் நட்டாற்றில் நிற்க வேண்டியிருந்திருக்கும்.

எம் இனத்தின் விடிவிற்காக போராடப் புறப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்பவர்களை எம்மவர்கள் கண்டுகௌ;ளாமலும் புறக்கணித்தும் வருவது வேதனைக்குரியது. அவர்களில் பலர் அங்கயீனர்களாகவும் வறுமையில் உழல்பவர்களாகவும் இருக்கிறார்கள். மீளப் பிறந்தவர்கள் கதை சற்று வித்தியாசமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மாலதி இனத்திற்கான தன் பங்களிப்பை வெளிப்படுத்தி சகாயம் பெற விரும்பாதவளாக இருக்கிறாள். போராளிகளின் கண்ணியத்தையும பெருமையையும் விற்பனைப் பொருளாக்கி அவமானப்படுத்த விரும்பாதவளாக இருக்கிறாள். மனதைத் தொடும் படைப்பு.

சாதீயம் ஒரு கதையில் மட்டுமே கருவாகியுள்ளது.

பரணீதரன் பல்துறை ஆளுமை கொண்டவர். படைப்பாளி, சஞ்சிகை ஆசிரியர், பதிப்பகம், இசை நாடக நடிகர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்து படைப்புகளை ஆவணமாக்கும் பணியில் தன்னை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தியுள்ளார்.

இவ்வளவு பணிகளுக்கும் இடையில்; படைப்புலகில் முழுமையாக ஈடுபடுவது அசாத்தியம் என்றபோதும் படைப்பின் மீதான ஆர்வமும், படைப்புலகில் தனது இருப்பை உறுதிப்பபடுத்தியுள்ளமைக்கு இந்தத் தொகுப்பு சான்றாக அமைகிறது. சிறுகதை உலகில் தனது ஆற்றலை மேலும் மெருகுபடுத்திக் கொண்டால் ஈழத்து முன்னணி படைப்பாளிகளில் ஒருவராக வருவது நிச்சயம்.

20180629_125010

அழகான வடிவமைப்பு. வாசிப்பதற்கு இதமான தமிழ் பொண்ட். ஜீவநதி வெளியீடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் ஜீவநதி பதிப்பகத்தின் நூல்கள் அனைத்துமே அழகான வாசிப்பதற்கு இதமான வடிவமைப்பை கொண்டவையாக இருப்பதுதான்.

இக்கட்டுரையை புதுவிதி வார இதழில் வெளியிட்ட ஆசிரியருக்கு எனது நன்றிகள்

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

தேடிப் படியுங்கள்
‘சித்தார்த்த யசோதரா’ நாவல்

அண்மையில் நான் படித்த புனைவு நூல்களில் மிகவும் நிதானமாகவும் ஆழமாகவும் சற்று நீண்ட நாட்கள் எடுத்தும் படித்த நூல் சித்தார்த்த யசோதரா. இது ஒரு நாவல் சிங்களத்தில் எழுதப்பட்டது. இப்பொழுது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Sithrtha

சிங்களத்தையும் பௌத்தத்தையும் ஒன்றிணைத்து பார்த்து விசனிக்கும் பலர் எம்மிடையே இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நூல் பற்றிய தகவல் சற்று எரிச்சலையும் மூட்டக் கூடுமாயினும் வேறு பலருக்கு ஆர்வம் ஊட்டக் கூடியதாக இருக்கும். ஏனெனில் இந்த நூலின் வரவு பற்றியோ அதன் உள்ளடக்கம் பற்றியோ தமிழ் வாசகப் பரப்பில் பேசப்பட்டது குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் பேசப்பட வேண்டிய நூல் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நூலின் முக்கியத்துவம் என்னவென்றால் அது சித்தார்த்தரின் அதிகம் பேசப்படாத பக்கத்தைப் பேசுகிறது. அவரது வாலிப்பருவத்தை அதிலும் முக்கியமாக யசோதரா மீது காதல் வயப்பட்டிருந்த காலத்தைப் பேசுகிறது.

யசோதர மீதான காதல் அதற்கு ஏற்பட்ட இடையூறுகள், அதனை அவர் தாண்டிய விதம் போன்றவற்றை சித்தார்த்தரின் பெருமைக்கு இடுக்கு நேராத சீரிய மொழிநடையில் விபரிக்கிறது. அவர்கள் இருவருமிடையேயான காதலும் திருமண பந்தமும் பல பிறப்புகள் ஊடாக தொடர்ந்து வந்திருப்பதை சர்வமித்ர மகரிஷி ஊடாக அறிகிறோம்.

சித்தார்த்தர் சாக்கிய வம்சத்தை சேர்ந்த இளவரசர். யசோதரா கோலிய வம்சத்தை சேர்ந்த இளவரசி. இரண்டு வம்சத்தினரும் திருமண வழியே மிக நெருக்கமான சொந்தம் கொண்ட வர்கள் என்ற போதும் அந்த இராச்சியங்களின் இடையே ஓடும் ரோஹினி நதி நீரை பங்கு போடுவதில் பல பிரச்சனைகள் இருக்கி;ன்றன. இந்த உள்ளார்ந்த பகமைiயும் தாண்டியயே அவரால் யசோதராவைக் கைப்பிடிக்க முடியும். அதற்கு மேலாக போட்டிக் களத்தில் ஏனைய இராச குமார்களுடன் மோதி வென்றவருக்கே தனது மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என அவளின் தந்தையாகிய சுப்ரபுத்தர் மன்னன் தீர்மானிக்கிறார்.

போர்க்கலை பயின்று அதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவரான போதும் அஹிம்சை வாதியான சித்தார்த்தர் எவ்வாறு ஆயுதம் ஏந்தி தனது பகைவர்களுடன் சண்டையிடுவது என்ற சிக்கல் இருக்கிறது. அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது வாசகர்களாகிய எங்களை ஆர்வத்தோடு நூலை வாசிக்க வைக்கிறது.

சித்தார்த்தர் மிருகபலி கொடுப்பது புலால் உண்பது மது அருந்துவது யாகங்கள் செய்வது போன்றவற்றை அடியோடு வெறுப்பவர். சாஸ்திரம் பார்ப்பதில் நம்பிக்கை அற்றவர் போன்றவற்றை நூலாசிரியார் பல சுவார்ஸமான சம்பவங்கள் ஊடாக நாவலில் சொல்லிச் செல்கிறார்.

‘ஆகாயத்தில் மின்னும் நட்சத்தரங்களால் என்னதான் செய்ய முடியும் என்று அவர் தர்க்கம் பண்ணுவார். மனிதன் தன்னுடைய மனதை வெல்ல வேண்டுமே ஒழிய இந்த பூமியையோ, கிரகங்களையோ நட்சத்தரங்களையோ அல்ல என்பதை சித்தார்த்தர் உறுதியாக நம்பினார்’

இந்த நிலையில் தேர்தல் வைப்பதற்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பிப்பதற்கும் சோதிடர்களை நாடும் பௌத்த தலைவர்களைக் கொண்ட நாடாக இலங்கை இருப்பது விசனிக்க வைக்கிறது.

சித்தார்த்தரின் ஜீவகருணையை பல இடங்களில் அற்புதமாக வடித்திருக்கிறார் நூலசிரியர். காட்டில் உள்ள முயல்குட்டி ஒன்று அவரது காலடியில் வந்து இளைப்பாறுவது, கிளிகள் சிட்டுக் குருவிகள் புறாக்கள் அவரது உள்ளங்கையில் வந்து உணவு உண்ணுவது போன்வை உதாரணங்கள். ஒரு முறை இவரது நண்பர் ஒருவர் ஒரு பறவையை கொலல் அம்பு எய்தபோது இவர் தனது அம்பை எய்து நண்பரின் அம்பை வானில் சரித்து வீழ்த்தினார்.

வயோதிபரையும் மரணம் அடைந்தவரையும் கண்டு விசனித்து அவர் துறவறம் பூண்டார் என்பது பொதுவாகச் சொல்லப்படும் கதை. உண்மையில் அவர் அத்தகையவர்களை காண்பதை அவரது தந்தையாரான சுத்தோதன மன்னன் சோதிடர்கள் சொற்கேட்டு தடுக்க முனைந்தார். ஆனால் சித்தார்த்தர் சோதிடர்களின் தீர்க்கதரிசனங்களை கேட்டு அனுதாபத்துடன் சிரிப்பார் என்று இந்த நாவல் சொல்கிறது.

சித்தார்த்தர் வாழ்ந்த காலத்து வடஇந்திய வாழ்க்கை முறைகள,; சமுதாய நிலவரங்கள், அரசாட்சிகள், அவற்றின் இயங்கு முறைகள், அக்கால மக்களின் மதநம்பிக்கைள், மதச் சடங்குகள், மதம் சார்ந்த புதிய சிந்தனைகள் போன்றவற்றை தர்சிக்க முடிகிறது.

இந்த நூலுக்கான தகவல்களை தேரவாம் மகாயானம் ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் புனையப்பட்டதாக முன்னுரை ஊடாக அறிய முடிகிறது.

இந்த நாவலைப் படிக்கும் போது வாசகர்களான எங்கள் மனத்திலும் அன்பும் சாந்தமும் அமைதியும் உறைகின்றன.

இந்த நாவலை படைத்தவர் சிங்கள மொழியில் மிகவும் பிரபலமான எழுத்தாளரான சோமா ஜெயக்கொடி. சுமார் 250 நூல்களுக்கு மேல் தந்திருக்கிறார். பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த காத்திரமான நூலை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் திருமதி சரோஜினி அருணாசலம். மிகவும் அற்புதமான மொழிபெயர்ப்பு. உண்மையில் இதை வாசிக்கும்போது இது மொழிபெர்ப்பு நூல் என்ற எண்ணம் ஒருகணமேனும்; எழவில்லை. அந்தளவிந்கு மிகவும் இயல்பான சரள நடையில் மொழிபெயர்த்திருக்கிறார்.

குமரன் புத்தக இல்லம் வெளியிட்ட இந்த நூலின் விலை ரூபா 600 மட்டுமே. பக்கங்கள் 246.

இந்த நூலை எனக்குத் தந்த நண்பர் சு.சற்குணராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

 

Read Full Post »