Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2014

பொய்யறியும் சாதனங்களின் மறைமுகங்கள்
பாலியல் குற்றவாளிகள் மறைத்த சங்கதிகளை வெளிவர வைக்குமா?

‘பொய் சொல்லக் கூடாது பாப்பா..’

பாப்பாவாக நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் வெறும் பாடங்களாக மனதின் ஓரங்களில் ஒழிந்து கிடக்க நிதமும் பொய்மைப் பூக்களை உதிர்த்துக் கொண்டேயிருக்கிறோம். இவற்றில் பல பொய்கள் தீவிரமானவையல்ல. மற்றவர்களுக்கு எந்தவித தீங்குகளையும் செய்யாதவை.

ஆனால் எல்லாப் பொய்களும் அவ்வாறில்லை. மற்றவர்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படுபவையும் இதில் அடங்கும். தாம் செய்த குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்புவதற்காhகச் சொல்லப்படுபவை இன்னமும் பல.

இந்தப் பொய்களை மற்றவர்களால் கண்டறிய முடியுமா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல பொய் சொல்பவர்களின் அகத்தின் அழுக்கும் முகத்தில் தெரியவே செய்யும். நுண்ணுணர்வுள்ளவர்; அதைச் சுலபமாக உணர்ந்து அறிந்து கொள்வார்கள்.

morality-of-lying1
ஆனால் மனப் பதிவுகள் ஊடாக அடையப்படும் முடிவுகள் சரியானவை என உறுதியாகச் சொல்லக் கூடியவை அல்லவே.

அவை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கக் கூடியவையும் அல்ல.
பொய்களை அல்லது பொய் பேசுகிறார்கள் என்பதைக் கண்டறிய விஞ்ஞான ரீதியான பரிசோதனைகள் உள்ளனவா? இருந்தால், சமகாலச் சம்பவங்கள் அவற்றிக்கான தேவையை அதிகரிக்கவே செய்கின்றன.

பாலியல் பலாத்காரங்கள்

5 வயதேயான பச்சிளங் குழந்தைகள் முதல் 70 வயதான பாட்டிகள் மீதான  பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த வருடத்தின் முதல் 6 காலத்திற்குள் மாத்திரம் 900 பாலியல் வல்வுறவுகள் நிகழ்ந்திருப்பதாகவும் அதில் 600 குழந்தைகள் மீதானவை எனவும் இலங்கைப் பொலிஸ் திணைக்களமே அறிவித்திருக்கிறது. அரசியல்வாதிகள், பாடசாலை அதிபர்கள், மதகுருமார்கள், நெருங்கிய உறவினர்கள் எனச் சமூகத்தில் மதிப்புடைய பலரும் கூட இத்தகைய குற்றச்செய்கைகளில் ஈடுபடுவதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.

I-can-t-STOP-IT-stop-child-abuse-31299494-500-440

இவர்களில் பலர் சத்தமின்றித் தப்பிவிடுகிறார்கள். அகப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள், அவர்களிலும் பலர் போதிய சாட்சியங்கள் இன்றி; விடுதலை ஆகிறார்கள். தண்டிக்கப்பட்டவர்களும் சற்றுக் காலத்தின் பின் விடுதலையாகி சமூகத்தில் இணைகிறார்கள். இவர்கள் மீண்டும் தப்புச் செய்யமாட்டார்கள் என்பது நிச்சயமில்லையே.

பொலிகிராவ் டெஸ்ட்

இந்த விடயத்தில் பொலிகிராவ் டெஸ்ட் polygraph test பற்றி மேலை நாடுகளில் விவாதிக்கப்படுகிறது.

‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யர்கள்..’ அரசில்வாதிகளாவும் சட்டம் இயற்றுபவர்களாகவும் இருக்கும் எம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இது பற்றிய மூச்சே எழவில்லை. தங்களது கபட வாழ்விற்கு குழிபறிக்க இவர்கள் இடம் தருவார்களா?

polygraph-004
உண்மைகளை வெளிக்கொணர பொலிகிராவ் டெஸ்ட் என்ற இப் பரிசோதனை உதவும் என நம்பப்படுகிறது.

பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் தருணத்தில் அவர்களுக்கு இந்தப் பரிசோதனையை கட்டாயமாக்கச் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனை பிரித்தானிய அரசால் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.

இதன் உதவியுடன் உண்மைகள் வெளிப்பட்டால் குற்றவாளிகள்; மீண்டும் பாலியல் குற்றங்களைச் செய்யும் விகிதம் குறையும், அதன் மூலம் அப்பாவிப் பொதுமக்களுக்கு கூடிய பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறார்கள்.

நம்பிக்கை தரும் ஆய்வுகள்

இதற்கு அடிப்படையாக இருப்பது East and West Midlands  ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு ஆகும். பொலிகிராவ் டெஸ்ட் செய்யப்பட்ட குற்றவாளிகள் அவ்வாறு செய்யப்படாதவர்களை விட இரு மடங்கு அதிகமாக மருத்துவ ரீதியாக கணக்கில் எடுக்கக்கூடிய மறைவெளியீடுகளைத் (clinically significant disclosures – CSD ) தந்தார்கள் என அறியப்பட்டது.
அவ்வாறு மறைவெளியீடுகளால் கிடைக்கும் புதிய தகவல்கள் அவர்களை

 • எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்,
 • சமூகத்தில் அவர்களை கண்காணிப்பது எப்படி?,
 • அவர்களால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்துகளை மதிப்பீடு செய்வது,
 • அல்லது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் எவ்வாறான மாற்றங்களைச் செய்ய வேண்டும்

போன்ற விடயங்களைத் தீர்மானிப்பதற்கு நிறைய உதவும்.

உதாரணத்திற்கு வேறு பாலியல் குற்றவாளிகளுடன் உள்ள தொடர்புகள், குழந்தைகளை அணுகுவதற்கு அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் போன்ற தகவல்கள் புதிய குற்றங்கள் இழைக்கப்படுவதைத் தடுக்க உதவும்.

பொய்யறியும் சாதனமா?

இவ்வாறு மறைத்த தகவல்களை வெளிக்கொணர்வதற்கு பொலிகிராவ்

டெஸ்ட் எவ்வாறு உதவுகிறது?

ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இவர் பொய் சொல்கிறார் என்பதைத் கண்டுபிடிக்கும் திறன் இப் பரிசோதனைக்கு உள்ளது என்பதைவிட, தான் சொல்லும் பொய்களை இது கண்டறிந்துவிடும் என்ற குற்றவாளியின் நம்பிக்கையே கண்டறியப்படுவதற்குக் காரணமாகிறது.

இருந்தபோதும், பொய்யறியும் சாதனங்கள்; (lie detectors)என்ற பதம் பொலிகிராவ் டெஸ்ட்ற்கு வழங்கப்படுவது தவறு எனலாம்.
அப்படியானால் இப் பரிசோதனை எதைச் செய்கிறது?
உள உடலியல் ரீதியாகத் தூண்டப்படுதல், சருமத்தில் கடத்தப்படுதல், சுவாசம், இரத்த அழுத்தம் போன்ற உடல் உளவியல் குறியீடுகளை (Psychophysiological indices)அளவிடுகிறது. அவ்வளவேதான்.

அப்படியானால் தீர்மானத்திற்கு வருவது எப்படி?

நாம் பொய் சொல்லும்போது உணர்வு ரீதியாக அதிகம் தூண்டப்படுகிறோம் என நம்பப்படுகிறது. உணர்வு ரீதியாகச் தூண்டப்படும்போது (arousal) வெளிப்படும் அறிகுறிகளை கண்டறியும் ஆற்றல் உள்ள பொலிகிராவ் டெஸ்ட் இயக்குனர்கள், அதனை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் பொய் சொல்கிறாரா இல்லையா எனத் தீர்மானிக்கிறார்கள்.

எனவே இதுவும் மனப்பதிவில் தங்கியுள்ள தீர்மானம்தான். அதாவது டெஸ்ட் இயக்குனர்களினது.

பல மாறுபாடான நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். குற்றத்தின் தொடர்புடைய விடயம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும்போது தான் கண்டுபிடிக்கப்படலாம் என்ற பயத்தில் அதிகளவு அதிகம் தூண்டப்படுகிறார். ஆனால் அது சம்பந்தமில்லாத பொதுப்படையான கேள்விகளால் பாதிப்படைவது குறைவு. இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது.
85% மான குற்றவாளிகளை பொலிகிராவ் டெஸ்ட் சரியாக அடையாளம் காணுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதற்பார்வையில் இந்த முடிவுகள் மிகவும் நம்பிக்கையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.

மறை முடிவுகள்

இப்பரிசோதனையின் மற்றொரு பக்கம் அவநம்பிக்கையளிக்கிறது. 12% முதல் 47% வரையான குற்றமற்றவர்களையும் இப் பரிசோதனையானது பொய்யர்கள் என முடிவுகட்டியது. இது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. அநீதியானது.
குற்றமற்றவர்கள் தூண்டுதலுக்கு ஆளாகி பொய்யர்கள் என முடிவு கட்டப்பட்டது ஏன்;. இதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தொடர்புடைய கேள்விகளால் குற்றமற்றவர்கள் சலனமடைவது ஏன்?
•    உதாரணமாக குற்றம் நடந்த தருணத்தில், அவர் வேறு நடவடிக்கைகளுக்காக அவ்விடத்தில் இருந்திருக்கலாம். அது சட்ட ரீதியாக பிரச்சனையற்றது என்ற போதும் அதனால் வெட்கப்பட்டிருக்கலாம்.
•    எதுவித பிரச்சனையும் இல்லாத ஒரு அப்பாவி என்ற போதும் தன்னை இவர்கள் நம்பப் போவதில்லை என்ற பயமும் காரணமாயிருக்கலாம்.
இவற்றிலிருந்து தெரிவது என்ன? தான் பொய் சொல்வதைக் பொலிகிராவ் டெஸ்ட் கண்டுபிடித்துவிடும் என்ற அடிப்படை நம்பிக்கையே அவர்களைச் சலனப்படுத்துகிறது.
இதில் மற்றொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பரிசோதனைக்கு செய்வதற்கு முதல் அது பற்றிய விடயங்களை விளக்கும் நேரத்திலேயே மறைத்து வைத்த பல உண்மைகள் வெளிவந்தன என்பதேயாகும்.

பொய்யான சாதனம்

சூட்டிகையான ஆய்வாளர் மற்றொரு பரிசோதனையும் செய்தார். பொலிகிராவ் டெஸ்ட்ற்கான மெஷின் போன்ற போலியான உபகரணத்தைப் பொருத்திவிட்டு கேள்விகளைத் தொடுத்தார். மறைத்து வைத்த உண்மைகள் கிடுகிடுவென வெளிவந்தன. உண்மையான மெஷினைத் தொடுத்தவர்களைவிட அதிகமாக உண்மைகளை வெளியிட்டனராம்.

இணையத்தில் இவை பற்றிய தகவல்கள் ஏற்கனவே நிறைய இருக்கின்றன. பாலியல் குற்றவாளிகளுக்கு பொலிகிராவ் டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டால் இன்னும் பல தகவல்கள் வெளியாகும். குற்றவாளிகள் இணையத்திற்குள் நுழைந்தால்போதும், இப் பரிசோதனை எத்தகையது, அதன் போதாமைகள் என்ன என்பது போன்றவை வெட்ட வெளிச்சமாகிவிடும். அந்த டெஸ்ட் பற்றிய பீதி மறைந்துவிடும். துணிவோடு டெஸ்ட்ற்குச் செல்வார்கள். பயமின்றிப் பொய் சொல்லும் துணிவு வந்துவிடும். அகப்பட மாட்டார்கள்.

ஓரம்போ

இந்த டெஸ்டை ஓரங்கட்டி வெல்வதற்கான வழிமுறைகளும் உண்டு. இப் பரீட்சை எந்த அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்த கில்லாடிகள் பரீட்சித்துப் பார்த்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய விடயம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும்போது தமது உள உடலியல் பிரதிபலிப்புகளை அடக்கி வாசிக்கவும், பொதுப்படையான கேள்விகளுக்கு மிகைப்படுத்தியும் காட்டவும் தமக்குப் பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தலாம்.
•    தனக்குத்தானே ஏற்படுத்தக் கூடிய உடல் உள வலிகள் மிகைப்படுத்த உதவும்.
•    அதே நேரம் தியானம் யோகாசனம் போன்ற பயிற்சிகள் அமைதிகாக்க உதவலாம்.

ஆன்மீக வழிமுறைகள் என நாம் நம்பும் தியானம் யோகாசனம் போன்றவை குற்றவாளிகள் தங்களைத்தாமே காப்பாற்ற உதவுகிறது என்பது பலருக்கும் ஜீரணிக்க முடியாத உண்மையான போதும், அதுதான் யதார்த்தத்தில் நடக்கிறது. குற்றவாளிகள் பொலீஸ்காரனிடம் நல்ல பெயர் வாங்க அவற்றைச் செய்கிறார்கள். ஆன்மீகவாதிகள்  இறைவனிடம் நல்ல பெயர் வாங்கச் செய்கிறார்கள். அவ்வளவுதான்!

ஆனால் உளஅமைதிக்கும், மனநோய்கள் தீரவும் அவை உதவுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.

ஒரு உதாரணம். Floyd என்பவர் பொலிகிராவ் டெஸ்டின் அடிப்படையில் தவறுதலாகக் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனால் சினமடைந்த அவர் சிறையில் இருந்த நேரத்தில் தன்னால் முடிந்தளவிற்கு இப்பரிசோதனை பற்றிய தகவல்களை தேடிக் கண்டுபிடித்து, தான் பெற்ற அறிவின் அடிப்படையில் அதை வெல்ல முயன்றார். தன்னோடு இருந்த பல கைதிகளுக்கு அந்த அறிவைக் கொண்டு பயிற்சியளித்தார். வெறும் 15 நிமிடநேர பயிற்சி மட்டுமே கொடுத்தபோதும் 23 பேரால் அப்பரீட்சையில் வெல்ல முடிந்தது. 4 பேரால் மட்டுமே முடியவில்லை.

இத்தகைய அறிவைப் பயன்படுத்தி குற்றவாளிகளும், பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரும் பரிசோதனையில் தப்பி அப்பாவி முகம் பூண்டு மறைவில் குற்றமிழைக்க முடியும். இதனால்தான் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

‘பொய்களைக் கண்டு பிடிக்கும்’; என நம்பப்படும் இந்தப் பரிசோதனை எதிர்காலத்தில் ‘அகப்படாமல் பொய் சொல்லக் கற்றுக் கொள்ளவும் உதவலாம்’ என்பதையிட்டு கவனம் எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

‘பொய் சொல்லப் போறேன். பொய் சொல்லப் போறேன்….’

அவ்வாறு சிரித்துப் பாடி சந்தேகம் எழாதபடி திட்டமிட்டுப் பொய் சொல்பவர்களைக் கண்டு பிடிக்கும் சாதனங்கள் ஏதாவது புதிதாக வரும்வரை காத்திருப்போம்.

எனது ஹாய் நலமா புளக்கில்  (1st February 2013) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

ஓரு கல்விமானைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

“தயவுசெய்து பத்து நிமிடங்கள் பொறுத்திருங்கள். அவர் வந்திடுவார்” என்றார் அவரது மனைவி.

napping+in+a+monet+landscape+detail

வாசலைப் பார்த்தபடி காத்திருந்தோம்.

‘மன்னிக்கவும்’ என்ற குரல் சற்று நேரத்தில் எழுந்தது. இப்பொழுது அவரது குரல்.
ஆனால் நாம் விழி வைத்திருந்த வாசற்புறமிருந்து குரல் வரவில்லை. உள்ளேயிருந்து வந்தது. மிக உற்சாகமாக வந்தார். மதியத்திற்குப் பின்னான தனது வழமையான குட்டித் தூக்கத்திலிருந்ததாக சொன்னார்.

“எனக்கு இந்தக் குட்டித்தூக்கம் மிகவும் அவசியமானது. இதனால் இரவு நெடுநேரம் வரை என்னால் மிகுந்த உற்சாகமாக வேலை செய்ய முடிகிறது” என்றார்.

how-to-draw-cartoons-102
கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. நானும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதத்துடன் உற்கார்ந்து கொண்டேன்.
தவறான எண்ணம்
ஆனால் பகல் தூக்கம் கூடாது என்ற நம்பிக்கை எமது சமூகத்தினருக்கு பெருமளவு இருக்கிறது. குட்டித் தூக்கத்தைக் கோழித் தூக்கம் என்றும் சொல்வார்கள்.

 • பகல் தூக்கமானது சோம்பேறித்தனத்தைக் குறிக்கும். குறிக்கோளற்ற வாழ்க்கைப் பயணத்தையும் குறிப்பதாகவும் பலரும் நம்புகிறார்கள்.
 • பகலில் குட்டித் தூக்கங்களானது குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கே ஆனது. ஆரோக்கியமானவர்களுக்கு அல்ல என்பது வேறு சிலரது எண்ணம்.

அதனால்தான் பலருக்கு இது கெட்ட பழக்கமாகத் தெரிகிறது. ஆனால் அது தவறான நம்பிக்கை. பகலில் கொள்ளும் குட்டித் தூக்கங்கள் நன்மையளிக்க வல்லது என்பதே மருத்துவ உண்மையாகும்.

பாலுட்டிகளின் தூக்க முறைகள்

மனிதன் ஒரு பாலூட்டி. அவன் பகல் முழவதும் வேலை செய்கிறான். இரவில் மட்டும் தூங்குகிறான்.

napping_cat

ஆனால் 85 சதவிகிதத்திற்குக்கு மேலான பாலூட்டி இனங்கள் அவ்வாறு இல்லை.இடையிடையே குறுகிய காலங்களுக்கு பகல் முழுவதும் தூங்கி விழிக்கின்றன. இதனை Polyphasic sleepers என்பார்கள்.

ஆனால் மனிதனானவன் குறைந்தளவாக உள்ள மிகுதிப் பாலூட்கள் போல Monophasic sleepers ஆக இருக்கிறான்.

ஆனால் இது மனிதனுக்கு இயற்கையாக விதிக்கபட்டதாகத் தெரியவில்லை. உதாரணத்திற்கு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறும் தூக்ஙகள் கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

i-611afb39137858d7f83e123f14957518-napping

இயற்கை எவ்வாறு இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் நீண்ட நேரம் இரவில் விழித்திருக்க வேண்டிய தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால் பகலில் குட்டித் தூக்கம் போடுவது உடலுக்கு உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கிறது.

வாழ்க்கையில் உச்சங்களை எட்டிய பலர் பகலில் குட்டித் தூக்கம் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நெப்போலியன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் எடிசன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் போன்றவர்களைக் குறிப்பிடுவார்கள்.

குட்டித் தூக்கத்தின் நன்மைகள்

Napping
குட்டித் தூக்கங்களால் என்ன பயன்கள் கிடைக்கின்றன?

 • குட்டித் தூக்கத்தால் அவதானிப்பும் விழிப்புணர்வும், வினைத்திறனும், அதிகரிக்கிறன. அதனால் தவறுகளைத் தவிர்க்கவும், விபத்துகளிலிருந்து தப்பிக்கவும் முடியும். அமெரிக்காவின் நாசாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது 40 நிமிடங்கள் கொள்ளும் குட்டித் தூக்கமானது ஒருவது செயற்திறனை 34 சதவிகிதத்தால் அதிகரிக்கிறது என்கிறது. ஆனால் அதேநேரம் விழிப்புணர்வானது 34 சதவிகிதத்தால் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
 • குட்டித் தூக்கத்திற்கு பின்னர் கொஞ்ச நேரத்திற்கு மாத்திரமின்றி மேலும் பல மணிநேரங்களுக்கும் விழிப்புணர்வு சிறப்பாக இருக்கும்.
 • அதீத பகல் தூக்கமும் உடல் தளரச்சியும் காரணம் தெரியாமல் ஏற்படுபவர்களுக்கு (யெசஉழடநிளல) நேரஒழுங்கு வரையறை செய்யப்பட்ட குட்டித் தூக்கங்கள் உற்சாகமாகச் செயற்படக் கைகொடுக்கும்.
 • உளவியல் ரீதியான அனுகூலங்கள் அதிகம் கிட்டும். குட்டி விடுமுறை கிட்டிய மகிழ்ச்சி ஏற்படும். சொகுசுணர்வும் கிட்டலாம். சிறிய ஓய்வும், புத்துயிர்ப்பும் பெற உதவும்.

அவதானிக்க வேண்டியவை
எந்தளவு நேரம் கொள்ள வேண்டும், எவ்வாறு கொள்ள வேண்டும், எத்தகைய இடம் உசிதமானது போன்ற பல விடயங்கள் சரியாக இருந்தால்தான் இந்தத் குட்டித் தூக்கம் விரும்பிய பலனைக் கொடுக்கும்.

 • குட்டித் தூக்கமானது 30 நிமிடங்களுக்கு மேற்படாதிருப்பது அவசியம். நீண்ட நேரம் தூங்குவதானது சோம்பல் உணர்வை விதைத்துவிடும். அத்துடன் இரவுத் தூக்கத்தையும் கெடுத்துவிடும்.
 • தூங்குவதற்கு அமைதியான, சப்தங்களற்ற, காற்றறோட்டமும் வெக்கையுமற்ற வசதியான இடம் முக்கியமானது. மங்கலான ஒளியுள்ள இடமும் விரும்பத்தக்கது.
 • குட்டித் தூக்கத்திற்கான சரியான நேரத்தைத் தேரந்தெடுங்கள். மாலையில் இரவை அண்டிய நேரம் நல்லதல்ல. இரவுத் தூக்கத்தைக் குழப்பிவிடும். அதேபோல காலையில் நேரத்தோடு தூங்க முயன்றால் உங்கள் உடலானது தூக்கத்திற்குத் தயாராக இருக்காது.
 • உங்கள் உடல்தான் உங்கள் பகல் தூக்கத்திற்கான நேரத்தைச் சரியாகக் காட்ட முடியும். வழமையாக நீங்கள் எந்த நேரத்தில் சோர்ந்து உற்சாகமிழக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து குட்டித் தூக்கத்திற்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

குட்டித் தூக்கங்களை நாம் வகைப்படுத்தவும் முடியும்.

 1.  திட்டமிட்ட முறையில் செய்யப்படும் குட்டித் தூக்கம் — உதாரணமாக நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும் எனக் கருதினால் அவ் வேளையில் தூக்கம் வருவதைத் தடுக்குமுகமாக முற்கூட்டியே குட்டித் தூக்கம் போடுவது. ஷிப்ட் முறையில் வேலை செய்வதால் தினசரி ஒரே நேரத்தில் தூங்க முடியாவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கலாம்.
 2. அவசரத் தூக்கம் — சடுதிதியாகக் களைப்புற்று ஒருவர்தான் செய்து கொண்டிருக்கும் வேலையைத் தொடர முடியாதிருந்தால் அவ்வேளையில் சிறுதூக்கம் போடுவது. பொதுவாக நீண்ட தூரம் வாகனம் செலுத்துவோர் தூக்கம் கண்ணைச் சுழற்றுவதால் பாதையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று நேரம் தூங்குவதை இதற்கு உதாரணம் காட்டலாம். இயற்றையின் தூக்க அழைப்பை மறுத்து தொடர்ச்சியாக வாகனத்தைச் செலுத்தும் நீண்ட தூர பஸ் சாரதிகள் தம் உயிரையும் பயணிகளில் உயிரையும் காவு கொள்ளும் பரிதாபங்களுக்கு இலங்கையில் குறைவில்லை. நெருப்பு, எஜ்சின், உயரம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோருக்கு இது நிச்சயம் உதவும்.
 3. பழக்கதோசத் தூக்கம் — முற்கூறிய பேராசிரியரின் தூக்கத்தை இதற்கு உதாரணம் காட்டலாம். பொதுவாக மதிய உணவின் பின்னர் பலரும் இவ்வாறு குட்டித் தூக்கம் போடுவதுண்டு.

water cooler nap

 

அனைவருக்கும் வேண்டியதுமில்லை
இருந்தபோதும் குட்டித் தூக்கங்கள் அனைவருக்கும் அவசியம் என்பதில்லை. இரவில் போதிய தூக்கமும் பகலில் வேலை நெருக்கடியினறி ஓய்வாக இருப்பவர்களுக்கு தேவைப்படாது. அத்தகையவர்களுக்கு குட்டித் தூக்கமானது இரவுத் தூக்கத்தைக் கெடுத்துவிடும்.

poll_workplace-naps3_results2_0
தனது வீட்டில், தனது அறையில் அதுவும் தனது கட்டிலில் படுத்தால்தான் சிலருக்கு தூக்கம் வரும். வேறு எங்கு படுத்தாலும் தூங்கவே முடியாது.

அவர்களுக்கு இது தோதுப்படாது. இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் களைப்பு ஏற்பட்டாலும் பகலில் தூக்கம் வரவே வராது. அவர்களும் குட்டித் தூக்கம் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

இவற்றைத் தவிர இருதய வழுவல் நோய் (Heart failure) வரக் கூடிய சாத்தியம் உள்ளவர்களுக்கு குட்டித் தூக்கம் நல்லதல்ல என ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதற்கான சாத்தியத்தை குட்டித் தூக்கம் அதிகரிக்கலாம் என்கிறார்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் (3rd March 2013) எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (Col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

மூட்டு வலிகளால் தொல்லையா

வலிகள் என்றுமே துயர் தருவன. விரல்கள், முழங்கால், கழுத்து, இடும்பு, தோள் மூட்டு என எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளனவோ அங்கெல்லாம் வலி வரலாம். சிலர் ஓரிரு மூட்டு வலிகளுடன் தப்பிவிடுவர்.

எவ்வாறாயினும் நீங்கள் அவற்றில் அக்கறை எடுத்து பராமரித்து வருவதன் மூலம்

 • உங்கள் வேதனைகளைத் தணிக்க முடியும்.
 • அவற்றின் செயலாற்றும் திறன் குன்றாமல் தடுக்கவும் முடியும்.
 • அத்துடன் உங்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்கவும் முடியும். செலவைக் குறைப்பது என்பது நீங்களாக மருந்தை நிறுத்துவது என அர்த்தம் அல்ல. மருத்துவ ஆலோசனையுடன் சில மருந்துகளின் அளவைக் குறைக்கவோ மாற்றவோ முடியும் என்பதேயாகும்.

தினமும் ஏதாவது உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சி செய்வதன் மூலம் மூட்டுகளின் செயற்பாட்டை குறையவிடாமல் தடுங்கள். தினமும் 30 நிமிடங்கள் செய்வது நல்லது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 30 நிமிடங்கள் இயலாததாயின் 10 நிமிடங்கள் செய்யுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள்.

உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்றதாக அளவாக வைத்திருங்கள். உடலுக்கு ஏற்ற எடையை, உடற் திணிவுக் குறியீடு (Body mass Index – BMI)  என்பதாக கணக்கிடுவர். இது பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரையோ இணையத்தையோ நாடுங்கள்.

அதீத உடை மற்றும் உடற் திணிவுக் குறியீடு பற்றி மேலும் வாசிக்க  பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

எடை அதிகமாக இருந்தால் அது மூட்டுகளுக்கான வேலைப் பழுவை அதிகரித்து அவற்றை மேலும் சேதமாக்கும். எடைக் குறைப்பிற்கு ஏற்றதாக கொழுப்பு இனிப்பு மாப்பொருள் குறைந்த போசாக்கான உணவு முறையைக் கடைப்பிடியு;கள். உடற் பயிற்சி மூலமும் குறைக்க நடவடிக்கை எடுங்கள்.

உங்களது தொழில் அல்லது நீங்கள் செய்யும் உடற் பயிற்சியானது ஓரு சில மூட்டுகளுக்கு மட்டும் தொடர்ந்து வேலை கொடுப்பதாக இருந்தால் அதற்கு ஊறு ஏற்படலாம்.அவ்வாறின்றி மாற்றி மாற்றி வேலை அல்லது பயிற்சி கொடுப்பது உதவும்.

பெரும்பாலன மூட்டு நோய்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனை தேவை. அது மாதம் ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஓரு தடவையோ என நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். மருத்துவர் சொல்லும் காலக்கெடுவில் அவரை தவறாது சந்தியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0.0.0

Read Full Post »

அந்தக் குழந்தைக்கு சில நாட்களாகப் பசியில்லை, உற்சாகமில்லை, விளையாடுவதில்லை. எதையோ பறிகொடுத்ததான சோகத்தில் மாய்ந்து கிடந்தது.

இரவில் கண்விழித்தெழுந்து ‘ரெமி ரெமி’ கத்துகிறது. பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எவ்வாறு தமது குழந்தையை அமைதிப்படுத்துவது, தூங்க வைப்பது எப்படி, உண்ண வைப்பது எவ்வாறு எனப் புரியாது அல்லலுறுகிறார்கள்.

 skd256383sdc

ஆம் ரெமி அவர்களது வளர்ப்பு நாய். நாய் என்று சொன்னால் கோபிப்பார்கள். தமது இரண்டாவது குழந்தை போல வளர்த்தார்கள். திடீரென நோய்வாய்ப்பட்டது. மிருக வைத்திய நிபுணர் வந்து ஊசி போட்டு, சேலைன் ஏற்றி முழு முயற்சி செய்தார். முடியவில்லை. அவர்களது இரண்டாவது குழந்தையும், அந்தப் பிள்ளையின் சகோதரமும் ஆன ரெமி இப்பொழுது இல்லை.

பிரிவுத் துயரில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் குழந்தைக்கு அதே ரெமியை மீண்டெடுத்துக் கொடுக்க முடியுமா?

ஒரு இலட்சம் அமெரிக்க டொலரைத் தாருங்கள் (சுமார் 66,000 பவுண்ட்ஸ்) தாருங்கள். நாய்குட்டியைத் தருகிறேன் என்கிறார் Insung Hwang  என்பவர். நாய் மரணிப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்பாகக் கொடுக்க வேண்டும்.

யார் இவர்? தென் கொரியாவைச் சார்ந்த ஒரு விஞ்ஞானி. அங்குள்ள Sooam Foundation  என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்த நிறுவனம் மற்றொரு விஞ்ஞானியான Hwang Woo-Suk  என்பவரால் நடாத்தப்படுகிறது. 2006ம் ஆண்டின் மனித குளோனிங் பிரச்சனையோடு தொடர்புடையவர்.

 Cloned Pups

ஒரு கோடி ரூபாய் என்பது எங்களில் பலருக்கு மிகப் பெரிய தொகை. விஜய் ரிவீயின் வெல்லுங்கள் ஒரு கோடி நிகழ்ச்சியில் மட்டும் அந்தத் தொகையைக் காணக் கிடைத்திருக்கும்.

ஆனால் கோடிகளில் தவளும் பல அமெரிக்கர்களுக்கு அது சுளுவான காசு. சென்ற வருடம் அதாவது 2012ல் 12 நாய்க் குட்டிகளை இவரது அமெரிக்க நிறுவனமான Insung Hwang’s laboratory  தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இவை யாவும் இறக்கவிருந்;த அவர்களது நாய்களின் திசுக்களைக் கொண்டு குளோனிங் முறையில் பிறந்த நாய்க் குட்டிகளாகும்.

ஜல்லிக் கட்டு நாம் எல்லோரும் அறிந்த விளையாட்டு. காளைச் சண்டையில் பிரசித்தமான மற்றொரு நாடு ஸ்பெயின் ஆகும். அங்குள்ள 16 வயதான Alcalde என்ற காளை பல காளைகளை வென்று பெரும் புகழ் பெற்றதாகும். அதன் உரிமையாளரான Victoriano del Río  சுமார் 400 காளைகளை தனது பண்ணையில் வளர்த்து போட்டிக்கு விடுபவர். இருந்தபோதும் Alcalde யின் ஆற்றலில் அவருக்கு அபார நம்பிக்கை உள்ளது. வயதாகும் அதன் ஆற்றலை என்றென்றைக்கும் பேணுவதற்காக குளோனிங் செயன்முறையை இப்பொழுது நாடியுள்ளார்.

 Alcalde

ஆம் பண்பாடு, ஆன்மிகம், தொழில் நெறி போன்றவற்றின் அடிப்படையிலான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்தபோதும் மிருகங்களை குளோனிங் முறை மூலம் உருவாக்கம் செய்கின்ற விஞ்ஞான தொழில் முறை ஆர்ப்பாட்டமில்லாமல் எமது வாழ்வில் நுழைந்துவிட்டது.

குளோனிங்

குளோனிங் என்பது என்னவென அறியாதவர்கள் இப்பொழுது இருக்க முடியாது. டொலி என்ற ஸ்கொட்லன்ட் ஆட்டுக் குட்டியின் வரவிற்குப் பின்னர் அது உலகளாவிய ரீதியில் பிரபலமாகிவிட்டது.

ஆனால் குளோனிங் என்பது ஒரு மிருகத்தின் அல்லது உயிரனத்தின் அச்சுப் போன்ற பிரதியை உருவாக்குகிற உயிரியல் விஞ்ஞான தொழில் நுட்பம் என்றே பலரும் கருதுகிறார்கள். அதாவது மரபியில் ரீதியாக மூல உயிரினத்தின் பிரதிமையை ஏற்படுத்துவதாகும்.

சற்று விரிவான தளத்தில் குளோனிங் என்பதை உயிரியல் நகலெடுத்தல் எனச் சொல்லலாம். இதில் மூன்று முக்கிய வகைகள் உண்டு.

Cloning_diagram_english

 • மரபணு குளோனிங் – ஒரு உயிரினத்தின் ஒரு மரபணுவை மட்டும் அல்லது டிஎன்ஏ(DNA) யின் ஒரு பகுதியை மட்டும் பிரதிகள் எடுப்பதாகும்.
 • இனப் பெருக்கத்திற்கான குளோனிங் இது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு மிருகத்தை அல்லது வேறு உயிரினத்தின் முழுமையான பிரதிமையை உருவாக்கல்.
 • சிகிச்சை முறையான குளோனிங் – இது உடலிலுள்ள மூலக் கலங்களான ஸ்டெம் செல்ஸ் மூலம் ஒருவரது உடலிலுள்ள பழுதடைந்த கலங்களுக்குப் பதிலாக அதேபோன்ற அச்சொட்டான ஆரோக்கியமான கலங்களை உருவாக்குவதாகும். உதாரணமாக நீரிழிவு நோயாளரில் பீட்டா செல்சை உருவாக்கும் முயற்சியைச் சொல்லலாம்.

இனப் பெருக்கத்திற்கான குளோனிங் 

இது எவ்வாறு செய்யப்படுகிறது?

குறிப்பிட்ட நாய் இறப்பதற்கு முன்னரான 5 நாட்களுக்குள் அந்த நாயிலிருந்து திசு மாதிரிகளை எடுத்து உறைய வைக்கிறார்கள். ஆய்வுகூட சேமிப்பறையில் ஏற்கனவே இருக்கும் இதனோடு எந்தவித தொடர்புமற்ற வேறொரு பெண் நாயிடமிருந்து பெறப்பட்ட முட்டையில் இணைக்கிறார்கள்.

அதனது டிஎன்ஏ யை முழுமையாக அப்புறப்படுத்திய பின்னர் வளர்ப்பு நாயின் டிஎன்ஏ யை மாற்றீடு செய்கின்றனர். இவ்வாறு பெறப்பட்ட கருமுளையை பின்னர் ஒரு வாடகை நாய்த் தாயின் கருப்பையில் வைத்து இயற்கையாக வளரச் செய்வார்கள். காலகதியில்  நாய்க்குட்டி பிறக்கும். ஒரு மாதமாகும் வரை குட்டியானது வாடகைத் தாயின் பாலைக் குடித்து வளரும்.

குளோனிங் செய்யப்பட்ட கருவைச் சுமக்கும் தாய் நாயானது அதே இனத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமல்ல. இருந்தபோதும் ஒத்த அளவுள்ள இனங்களிலிருந்து தேர்வு செய்தார்கள். பொதுவாக ஒரு குட்டி கிடைக்கும். ஆனால் சில தருணங்களில் அதே மாதிரியான  இரண்டு மூன்று குட்டிகள் கிடைப்பதுண்டு. அவ்வாறு கிடைத்தால் ஓடர் கொடுத்த வாடிக்கையாளர் அவை அனைத்தையும் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று விடுவார்கள் என ஐளெரபெ ர்றயபெ மகிழ்வோடு சொல்கிறார்.

குளோனிங் சவால்கள்

“..பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல்
காத்து வளர்த்தார்..”

எனப் படிக்காத மேதையில் ஒரு பாடல் வருகிறது. ஆம் பலர் தமது பிள்ளையை விடத் தமது வளர்ப்பு மிருகத்திலேயே அதிக பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்பு மிருகங்கள் அவற்றை வளர்ப்போரின் உணர்வோடு ஒன்றியவை.

தமயந்தியின் அன்னம், சீதையின் மான் போன்ற ஒரு சில குறிப்புகள் தவிர தமிழ் இலக்கியத்தில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான உறவு பற்றி அதிகம் பேசப்பட்டதாக தெரியவில்லை.

ஆனால் மேலை நாட்டு இலக்கியங்களில் குதிரைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவு பற்றிய அருமையான படைப்புகள் உள்ளன. ஐத்மதேவ் குல்சாரியில் மிக அற்புதமாக அந்த உறவின் ஆழத்தைச் சொல்லியிருக்கிறார். மகனுடன் இருக்கப் பிரியப்படாது தனது கிராமத்திற்கு தனது குதிரையுடன் பயணப்படுகிறார் ஒரு வயோதிபர். வழியில் அது நோய்வாய்ப்படுகிறது. இறந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஏங்குகிறார். அதற்கும் தனக்கும் இடையேயான உறவின் நினைவுகளில் மூழ்குகிறார்.

இன்று மேலை நாடுகளில் நாய் பூனை போன்றவற்றிக்கு அப்பால் முதலை ஈறான மிருகங்களையும் நேசத்தோடு வளர்க்கிறார்கள். குடும்ப உறவுகள் முறிந்து தனிமையில் வாழும் அவர்களுக்கு அதற்கான தேவை எம்மைவிட அதிகமாகவே இருக்கிறது எனத் தோன்றுகிறது. அவற்றில் அதீத பாசம் வைத்திருக்கிறார்கள்.

அவ்வாறு பாசம் வைத்திருப்பவர்களிடம் தமது பாசத்திற்கு உரிய மிருகம் மரணத்தை நெருங்கும்போது குளோனிங் குட்டியை நாட முடியும். போதிய பண வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அவர்களது எதிர்பார்புகள் எவ்வாறு இருக்கும்?

குளோனிங் முறையில் கிடைப்பது தமது ஒரிஜினல் வளர்ப்பு மிருகம் போலவே நிறத்திலும் பார்வையிலும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். உணவு விருப்பங்கள், தங்களுடனான உறவு நெருக்கம் போன்ற அதனுடைய பழக்க வழங்கங்களும் அசலானதைப் போலவே இருக்க வேண்டும் என அவாவுவார்கள். அத்தோடு அதைப் போன்ற குணநலங்களும் உள்ளதாக இருப்பதையே நாடுவார்கள்.

ஒத்த இரட்டையர் போன்றது

குளோனிங் குட்டி முற்று முழுதாக அசலை ஒத்ததாகவே இருக்குமா?

 Identical twins
 • “அது ஒருபோதும் உங்களது அசலான வளர்ப்பு மிருகமாகவோ அதன் அச்சொட்டாக இருக்க முடியாது. 100% அவ்வாறு இருப்பது சாத்தியமல்ல. குளோனிங்கில் கிடைப்பது ஒத்த இரட்டையர் போலவே இருக்கும்” என்கிறார் Hwang.  ஆனால் வெள்ளையில் கரும் புள்ளிகள் உள்ள டல்மேசியன் இனத்தில் புள்ளிகள் அச்சொட்டாக இருப்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அத்தகைய தெளிவான அடையாளங்கள் இல்லாத ஏனைய இனங்களில் வேறுபாடுகளை இனங் காண்பது சிரமம் என்கிறார்.

‘வாடிக்கையாளர்களும் அவ்வாறான தூய இனங்களை விட கலப்பு இன நாய்களில் குளோனிங் இனங்களையே வேண்டுகிறார்கள்’ என்றார். காரணம் தெளிவாகவில்லை.

 • “அவற்றின் இயல்பான பண்பு உளப் பாங்கு அசலானது போல இருக்காது” என்பதையும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் சில வாடிக்கையாளர்கள் அவை ஒத்த குணமுள்ளதாக இருந்ததாகச் சொல்லி மகிழ்ந்தார்களாம். உதாரணமான உணவைக் கோப்பையில் போட்டால் அவை இரண்டுமே உணவை கோப்பையிலிருந்து எடுத்துச் சென்று சில மீற்றர் தூரத்தில் வைத்தே உண்டதாகச் சொன்னார்களாம்.

வெற்றி விகிதம்

தாங்கள் 2005ல் இந்த குளோனிங்  முறையை ஆரம்பித்தபோது 2 சதவிகித வெற்றி மட்டுமே கிடைத்ததாம். இப்பொழுது அது 30 சதவிகிதமளவற்கு அதிகரித்துள்ளதாம். இற்றை வரை IVU (டெஸ் டியூப் குழந்தை) முறையில் குழந்தை பெறுவதில் கூட இந்தளவு வெற்றி இல்லையே என ஆச்சரியப்பட்டேன்.

அவர்களது அறிக்கையை நுணுகி ஆய்ந்தபோது விடை கிட்டியது. இவர் சொன்ன வெற்றி வீதம் என்பது குட்டிகள் கிடைப்பது பற்றியது அல்ல. அது கர்ப்ப விகிதம் (pregnancy rate)  அதாவது கருமுளையத்தை கருப்பையில் வைத்தபோது அது கர்ப்பமாக உருவெடுத்தமை பற்றியது. கருவான பின் எத்தனை கருச் சிதைவுகள் ஏற்பட்டன. காலத்திற்கு முந்திப் பிறந்து அழிந்தவை எத்தனை. நோயோடு பிறந்து இறந்தவை எத்தனை போன்றவை பற்றி அவை பேசவில்லை.

உலகளாவிய ரீதியில் குளோனிங் முறையின் வெற்றிவிகிதம் 0.1 முதல் 3 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக பரவலான அறிக்கைகள் கூறுகின்றன. இதை சற்றுத் தெளிவாக இவ்வாறு கூறலாம். ஆயிரம் தடவைகள் முயற்சி செய்தால் 1 முதல் 30 குளோனிங் குட்டி உருவாகவாம். மீதி 970 முதல் 999 வரை அழிந்து போகின்றன.

தோல்வி விகிதம் ஏன் அதிகம்

தோல்வி விகிதம் குளோனிங்கில் இவ்வாறு அதிகமாக இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.

 • இச் சிகிச்சை முறையின் முதற்படியானது சேமிப்பிலிருந்து முட்டையின் டிஎன்ஏ யை முழுமையாக அப்புறப்படுத்தி மரணிக்க இருக்கும் மிருகத்தின் டிஎன்ஏ யை வைப்பதாகும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஏற்புடையதாக இல்லாதவிடத்து அது முட்டைக் கலத்தால் நிராகரிகப்பட்டு அழிந்து விடும். புதிதாக மாற்றப்பட்ட கருவானது ஏற்புடையதாக இருந்தாலும் அம் முட்டை பிரிந்து பல கலங்களாக வளர்வதில் சிக்கல் ஏற்பட்டு அழிந்து போகலாம்.
 • அதை மீறி வளர்ந்தாலும் கருமுளையை வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கும்போது அது பொருந்தி வளர மறுத்துச் சிதைந்துவிடலாம்.
 • இவை யாவும் சரியானாலும் தெரியாத காரணங்களால் கர்ப்பம் சிதையலாம்.

பிறந்த பின்னும் பிரச்சனைகள்

 • பிறந்தாலும் சில தருணங்களிள் குட்டிகள் வழமையை விட மிக பெரிய அளவில் பிறக்கின்றன. இதை விஞ்ஞானிகள் Large Offspring Syndrome  என்பார்கள்.
 • உருவத்தில மாத்திரமின்றி உள்ளுறுப்புகளும் பெரிய அளவில் இருக்கலாம்.
 • இதனால் அவற்றிற்கு சுவாசப் பிரச்சனை, குருதி ஓட்டத்தில் பிரச்சைனை போன்றவை ஏற்பட்டு இறந்து போகின்றன.
 • வேறு சிலவற்றிக்கு மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் குறைபாடு இருப்பதுண்டு. இன்னும் சிலவற்றிற்கு நோயெதிர்பு வலு குறைவாக இருந்து வாழ முடியாது இறந்து போகின்றன.

இக் காரணங்களால்தான் குளோனிங் முறையை இன்னமும் விவசாயத் துறையிலோ மிருக வளர்ப்புத் துறையிலோ பெரிய அளவில் செயற்படுத்த முடியவில்லை.

மேற் கூறிய தனியார் நிறுவனம் போன்ற அமைப்புகள் இறந்த வளர்ப்பு மிருகங்களை ஒத்த குளோனிங் குட்டிகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் உள்ளதே பெரிதாகப் பேசப்படுகிறது.

குளோனிங்கின் எதிர்காலம்

உண்மையில் குளோனிங் என்பது ஒரு பெரிய அற்புதமான விஞ்ஞான முன்னேற்றமாகவே தெரிகிறது இருந்தாலும், அதை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த தெளிவான வெற்றிகரமான நடைமுறைகள் இன்னமும் தென்பட இல்லை.

குளோனிங் முறையில் முழு விலங்குகளை உற்பத்தி செய்வது அதீத விளம்பரங்களையும் புகழையும் திடீரெனக் கொண்டுவரலாம், ஆனால் அதுவும் 100 விகிதம் சாத்தியமல்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒரிரு வெற்றிகள் பேசப்படும்போது ஆயிரக்கணக்கான அழிவுகள் கண்டு கொள்ளப்படுவதில்லை.

ஆனால் மற்றொரு கிளை வழியில் அது பெரு வெற்றி தரக் கூடும். இப்போது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் நம்பிக்கைக் கூறுகள் தென்படுகின்றன. குளோனிங் முறையில் நோயால் சிதைந்த உடல் பாகங்களுக்கு பதிலாக புதிதானவற்றை  ஸ்டெம் செல் ஊடாக உருவாக்குவதில் அக்கறை காண்பிக்கப்படுகிறது.

குளோனிங் அறிவியலானது இப்போது ஸ்டெம் செல் ஆய்வுகள் நோக்கி விரைவது அதன் செயலாற்றலை மேம்படுத்தி மானிடத்தின் செழுமைக்கு கைகொடுக்கும் என நம்பலாம்.

சமகாலம் சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரை

எனது ஹாய் நலமா புளக்கில் (18th July 2013 ) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »

கண் நோய்கள் பலவாகும். இருந்தாலும் எமது பகுதியில் கண்நோய் என்றால் கண்சிவந்து பீளை வடிகிற தொற்று நோயையே கண்நேய் என்பர்கள்.

Thanks:- commons.wikimedia.org

தமிழகத்தில் மட்ராஸ் அய் என்பார்கள்.

இது கண்ணின் வெளிப் புறத்தில் உள்ள கொன்ஜன்ராவில் ஏற்படுகின்ற ஒரு தொற்று நோயே ஆகும். ஆங்கிலத்தில் (conjunctivitis) என்பார்கள். அதாவது கண்ணின் வெண்மடலில் ஏற்படுகிற நோயாகும்.

வெயிலும் வெக்கையும் தீவிரமாக இருக்கும் இந்தக் காலம் இந்நோய் தொற்றுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.

அறிகுறிகள் எவை?

 • கண் சிவந்திருக்கும்
 • கண்ணால் அதிகம் நீர் வடியலாம்.
 • கண்ணிற்குள் எதோ விழுந்து அராத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
 • கண்மடல்கள் வீங்கியிருக்கும்.
 • பீளை வடிவதுடன்,
 • சற்று அரிப்பும் இருக்கும்.
 • காலையில் கண்வழிக்கும்போது கண்மடல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கலாம்

இது பொதுவாக வைரஸ் கிருமியால் தொற்றுவதாகும். ஆனால் பக்றீரியா கிருமியாரல் தொற்றுகின்ற கண்நோய்களும் உண்டு. தூசி மகரந்தம் போன்றவற்றிற்கு ஒவ்வாமையால் ஏற்படுகின்றவையும் உண்டு.

பொதுவாக இது ஆபத்தானது அல்ல. தானாகவே சில நாட்களில் குணமாகிவிடும்.

மருத்துவரை எப்பொழுது காண வேண்டும்?

ஆயினும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியமாகும்.

 • ஒரு கண்ணில் அல்லது இரு கண்களிலும் ஓரளவு அல்லது தீவிரமான வலி இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியமாகும்.
 • வெளிச்சத்தைப் பார்க்க முடியாதபடி கண் கூச்சம் இருந்தால் அவசியம் காண வேண்டும்.
 • அதே போல பார்வை மங்கலாக இருந்தாலும் மருத்துவரைக் காணுங்கள்.
 • சாதாரண கண்நோயின்போது கண்கள் கடுமையான சிவப்பாக இருப்பதில்லை. மங்கலான சிவப்பு அல்லது பிங்க் கலரிலேயே இருக்கும். எனவே கண் கடுமையான சிவப்பாக இருந்தால் மருத்துவரைக் காண வேண்டும்.
 • நோயெதிர்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அவசியம் காண வேண்டும். உதாரணமாக HIV தொற்றுள்ளவர்கள், பிரட்னிசொலோன் போன்ற ஸ்டீரொயிட் மருந்து பாவிப்பவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
 • நோயின் அறிகுறிகள் படிப்படியாகக் குறையாது வர வர தீவிரமாபவர்கள்.
 • வேறு கண் நோயுள்ளவர்களும்; அதற்கான மருந்துகளை கண்ணிற்கு இடுபவர்களும் உட்கொள்பவர்களும்.

தொற்றுவதைத் தடுப்பது

ஒவ்வாமையால் ஏற்படும் கண் நோயகள் தொற்றுவதில்லை

ஆனால் வைரஸ் மற்றும் பக்றீரியா கிருமிகளால் ஏற்படுபவை வேகமாகத் தொற்றும்.

சுகாதார முறைகளைக் கையாள்வதன் மூலம் தொற்றுவதைத் தடுக்கலாம்.

ரிசூ உபயோகித்தால்  அதனை உடனடியாக கழித்து அகற்றிவிட வேண்டும்.

Thanks www.pharmacytimes.com

கண்ணிற்குள கை வைக்காதிருத்தல், கண்ணைத் தொட்டால் கைகளையும், துணியால் துடைத்தால் அதையும் உடனடியாகக் கழுவிடுதல் முக்கியமாகும்.

Thanks – www.sophisticatededge.com

கண் மருந்துகள் விடும்போது அவை கண்ணில் முட்டாதபடி சற்று உணரத்தில் பிடித்து விட வேண்டும்.

Thanks :- www.doctortipster.com

கண்நோய்கள் பற்றிய எனது முன்னைய பதிவுகள்

கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி? 

கண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை

கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0

Read Full Post »

வாழ்க்கை என்பது என்றென்றும் தெளிந்த நீரோடை போல சலசலப்பின்றி ஒடுவதல்ல. சங்கடங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் வெறுங்காலில் சுள்ளெனக் குத்தும் நெருமுட்கள் போல திடீரென மனதைத் தைத்து சோர வைக்கும்.

IMG_0005_NEW-001

வாழ்க்கைத் துணையின்; மறைவு, பாசத்தைக் கொட்டி வளர்த்த பிள்ளைகளின் பிரிவு, தொழில் இழப்பு, உயிருக்கு உயிராகக் காதலித்தவரின் கைவிரிப்பு, தொழிலில் பெருநட்டம், பெருநோயின் எதிர்பாராத் தாக்கம், இப்படி எத்தனை எத்தனை ஆழ்துயர்கள் மனித வாழ்வில் சோர்வூட்டுகின்றன?

இவ்வாறு ஆகும்போது உடுக்கை இழந்தவன் கை போல மனம் சோரும், ஆற்றாமை மூழ்கடிக்கும், மனப் பதற்றம் ஏற்படும். எதுவுமே இயலாமற் போனது போன்ற உணர்வு ஏற்படும். இத்தகைய உணர்வுகள் எல்லாமே ஒரே நேரத்தில் ஏற்படும் என்றில்லை. அவற்றில் ஒரு சிலவே மனதைத் துயரில் ஆழ்த்தி வாழ்வில் பற்றின்மையை ஏற்படுத்திவிடலாம்.

S.Bluyer-Deep-sorrow

அதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்? எவை ஆகாது?

 • முக்கியமானது மது, போதைப் பொருள் போன்றவற்றை நாடக் கூடாது. தற்காலிகமாக மறக்க வைத்து உங்கள் வாழ்வையே அழித்துவிடும்.
 • தனிமையை நாடாதீர்கள். தனிமையும் உள்ளுக்குள்  மனங் குமைதலும் கூடாது. நண்பர்களுடனும் நெருங்கிய உறவினர்களுடனும் பொழுதுகளைச் செலவழியுங்கள்.
 • உணவைத் தவிர்க்காதீர்கள். நேரத்திற்கு நேரம் போசாக்கான உணவை உண்ணுங்கள். மனம் வேண்டாம் என்று சொன்னாலும் உணவை மறுக்காதீர்கள்.
 • காலாற நடவுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். போதியளவு தூங்குங்கள்.
 • யோகாசனம், சாந்தியாசனம் போன்ற பயிற்சிகள் நல்லது. அல்லது உடலைத் தளரச் செய்யும் பயிற்சிகளை அதற்கான வழிகாட்டலுடன் செய்யுங்கள்.
 • வேலைக்குப் போதல், கடைத்தெருவிற்கு செல்லல், வணக்கத் தலங்களில் வழிபடுதல், கூட்டங்களில் பங்கு பற்றல், நண்பர்களைச் சந்தித்தல் போன்ற உங்களது வழமையான செயற்பாடுகள் எதையும் தவிர்க்க வேண்டாம்.
 • வேலை எதுவும் இல்லையென்றால் சமூகசேவைகளில் இறங்குங்கள்.
 • நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் ஆலோசனைகளைப் பெறத் தயங்காதீர்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.
 • அவசியமானால் மருத்துவரைக் கலந்து ஆலாசியுங்கள். அல்லது உங்கள் ஆன்மீக வழிகாட்டியுடன் பேசுங்கள்.

நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
DSC04603
மீண்டும் வசந்தங்கள் வீசும்.

தினக்குரல் பத்திரிகையின் மருத்துவக் குறுந்தகவல் பத்தியில் அக்டோபர் 3, 2013ல் நான் எழுதிய குறிப்பு

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

Read Full Post »