Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2010

>வலி நிவாரணிகள் பற்றி நிறையத் தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கடுமையான  இடுப்புவலியால் துன்பப் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தனக்கு Pain Killer மருந்து வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார்.

அதே வேளை முழங்கால் வலியுள்ள ஒரு அம்மா Diclofenac Sodium  என்ற வலிநிவாரணி மாத்திரையை எந்த மருத்துவரின் சிபார்சுமின்றி மாதக்கணக்கில் தானாகவே உபயோகித்துக் கொண்டிருந்தார்.

இருவரும் தவற்றையே செய்கிறார்கள்.

வலிநிவாரணிகள் (Pain Killers)  எனப் பொதுவாக அழைத்தாலும் இவை ஆங்கிலத்தில் Non-steroidal anti-inflammatory drugs  என்றே மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது.

சுருக்கமாக  NSAID என்பார்கள். ஸ்டிரொயிட் அல்லாத வலிநிவாரணிகள் எனலாம்.

பொதுவாக வலிநிவாரணி என அழைத்தாலும் இவை முக்கியமாக மூன்று வகைகளில் பயன் தருகின்றன.

இவை வாயினால் உட்கொள்ளக் கூடிய மாத்திரைகளாகவும், சிரப் மருந்துகளாகவும், கூட்டுக் குளிசைகளாகவும் (Capsules) கிடைக்கின்றன. அதேவேளை மலவாயிலில் உட்செலுத்தும் மருந்துகளாக (suppository) மற்றும் ஊசி மருந்துகளாகவும் (Injections)  அவசியமானபோது மருத்துவர்களால் உபயோகிக்கப்படுகின்றன.

மருத்துவப் பயன்கள்

இவை பலவகையான மருத்துவப் பிரச்சனைகளுக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

•    வலி – குத்து, வலி, உழைவு, நோ எனப் பலவாறு அழைக்கப்படும் எல்லா வலி சார்ந்த அசௌகரியங்களையும் குறைக்கினறன. தசைப்பிடிப்புகள், தலைவலி, உடல்வலி, மாதவிடாய்க் குத்து, வயிற்று வலி, சிறுநீரகக் குத்து போன்ற அனைத்தையும் நீக்கும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு.

•    காய்ச்சலைத் தணிக்வும் இவை பயன்படுத்தப்படுகிறன.
•    அழற்சியைத் தணிக்க உதவும். உதாரணமாக மூட்டு வாதங்களின் (Rhematoid Arthritis)  போது அவை அழற்சியுற்று வீங்கிச், சிவந்து, வலியைக் கொடுக்கும். இந்த அழற்சியைத் (inflammation) தணிக்கும் ஆற்றல் வலிநிவாரணிகளுக்கு உண்டு.
•    மாதவிடாயின் போது கடுமையான குருதிப் பெருக்கு இருந்தால் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இவைக்கு இருக்கிறது.
எனவே இவை மிகுந்த பயனுள்ள மருந்துகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் அவற்றை எழுந்தமானத்திற்கு உபயோகிக்கக் கூடாது. அவற்றிற்கு பல பக்க விளைவுகள் உள்ளன.

அதிகம் ஏற்படும் பக்க விளைவுகள்

•    நெஞ்செரிப்பு
•    இரைப்பைப் புண்

சிலவேளைகளில் ஏற்படும் பக்க விளைவுகளாவன

இரைப்பையில் ஏற்படும் புண்கள் மோசமாகி பின்வரும்  விளைவுகள் ஏற்படலாம்.
•    இரைப்பைப் புண்ணிலிருந்து இரத்தம் கசிதல்
•    இரத்தசோகை – அவ்வாறு தொடர்ந்து இரத்தம் கசிவதால் ஏற்படும்
•    இரைப்பையில் அல்லது உணவுக் கால்வாயில் துவாரம் விழுதல்.
மிகக் குறைவாக ஏற்படும் பக்க விளைவுகளாவன
•    உயர்இரத்த அழுத்தம்
•    இருதய வழுவல் (Heart Failure)
•    மாரடைப்பு

சிறுநீரக வழுவல், ஈரல் பாதிப்பு போன்ற மிக ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால் மிகக் குறைவாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக அல்லது ஈரல் நோய் இருப்பவர்களே அத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

எனவே இத்தகைய மருந்துகளை மருத்துவ ஆலொசனை இன்றி உபயோகிப்பது நல்லதல்ல. அவ்வாறு உபயோகிக்கும்போதும் சிபார்சு செய்ததை விட அதிக காலத்திற்கு உபயோகிக்கக் கூடாது.

அவதானம் தேவைப்படுவோர்

கீழ்க்கண்ட பாதிப்புள்ளவர்கள் வலிநிவாரணிகளை உபயோகிப்பதில் மேலதிக அவதானம் தேவை. இல்லையேல் இரப்பை புண் ஏற்படும் ஆபத்து அதிகமாகும்
•    ஏற்கனவே நெஞ்செரிப்பு, புகைச்சல், வயிற்று வலி போன்ற உணவுக் கால்வாய்ப் பிரச்சனை உள்ளவர்கள்
•    நீரிழிவு, உயர்இரத்த அழுத்த நோய், இருதய நோயுள்ளவர்கள்
•    65 வயதிற்கு மேற்பட்டவர்கள்
•    புகைத்தல், அதிக மது பாவனையாளர்கள்
•    அதிக அளவிலும், நீண்ட காலத்திற்கும் வலிநிவாரணி உபயோகிப்பவர்கள்

ஆஸ்த்மா நோயை சில தருணங்களில் தீவிரமாக்கலாம் என்பதால் அவர்கள் வலிநிவாரணிகளை அவதானத்துடன் உபயோகிக்க வேண்டும்.

கர்பமாயிருக்கும்போதும், கர்ப்பம் தரிப்பதை எதிர்நோக்கியிருக்கும் காலங்களிலும், பாலுட்டும் காலத்திலும் மருத்துவ ஆலோசனை இன்றி உபயோகிக்கக் கூடாது.

பல நாடுகளில் பின்வரும் வலிநிவாரணிகள் ibuprofen,  naproxen, and  aspirin.  மருத்துவ ஆலோசனையின்றி நோயாளிகள்  தாங்களே வாங்கி உபயோகிக்க முடியும்.

ஆயினும் diclofenac, indomethacin,  mefenamic acid, meloxicam, celecoxib, nabumetone போன்றவற்றை மருத்துவ ஆலோசனையின்றி உபயோகிக்க முடியாது.

வலிநிவாரணிகளை உபயோகிப்பதில் சிக்கல் உள்ளவர்கள் பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரைகளை பயமின்றி உபயோகிக்க முடியும்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் 14.09.2010 வெளியான கட்டுரையின் மீள்பதிவு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>வரவேற்புரை வழங்குபவர் ஆசிரியை அன்னராணி  சண்முகநாதன் ஆகும். இவர் எமது மதிப்பிற்குரிய முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து எமது மதிப்பிற்குரிய அதிபர் திரு.மு.கனகலிங்கம் அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார்.

பரிசளிப்பு விழாவின் போது மேடையில் அமர்ந்திருக்கும் பெரியார்கள் முறையே திரு செ.கணேசரத்தினம் (இளைப்பாறிய ஆசிரியர் காட்லிக் கல்லூரி, திரு.க.கதிரமலை (அதிபர் யாழ் கல்வியியல் கல்லூரி), திரு.ந.இரத்தினவடிவேல், டொக்டர்.எம்.கே.இரகுநாதன்(பொது மருத்துவ நிபுணர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை), திருமதி டொக்டர்.ரம்யா இரகுநாதன் (சருமநோய் நிபுணர் – பொது மருத்துவமனை காலி), திரு.சு.சற்குணராசா(உதவிக் கல்வி அதிகாரி யாழ்ப்பாணம்)

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன் அவர்களுக்கு உப அதிபர் திரு.ஆறுமுகம் கணநாதன் அவர்கள் மலர்மாலை சூட்டி கெளரவிக்கிறார்.

எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு குறுகிய காலத்தில் அளப்பரிய சேவை அளித்துவரும் அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களை கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் பாராட்டிபேசுகிறார் திரு.ந.இரத்தினவடிவேல் அவர்கள்.

அதிபருக்கு கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் சிறு அன்பளிப்பு அளித்துக் கெளரவிக்கிறார் திரு.ந.இரத்தினவடிவேல்.

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்உரையாற்றுகிறார்.

அதிபரின் சேவையைப் பாராட்டு முகமாக அவருக்கு கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பாக பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார் பிரதம விருந்தினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குகிறார் டொக்டர் திருமதி.ரம்யா இரகுநாதன்.

 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு கேடயம், இளஞானச் சுடர் விருது, பணப்பரிசு, பரிசு நூல்கள் ஆகியவற்றை வழங்குகிறார் பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்.

 நன்றியுரை வழங்குகிறார் ஆசிரியை திருமதி இந்துமதி பரமானந்தன்.

பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெற்றோர், பழைய மாணவர்கள், அபிமானிகள் மண்டபத்தில் அமர்திருக்கிறார்கள்.

மண்டபம் சிறியதாகையால் அது நிரம்பி வெளியே பலரும் நின்று பார்க்க வேண்டியநிலை ஏற்பட்டதால் அடுத்த பரிசளிப்பு விழாவை வெளியே விளையாட்டு அரங்கில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைய பலரும் எழுப்பியதாகத் தெரிகிறது.

பரிசளிப்பு நிகழ்வுகள் நிறைவுற்றதும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒரு பெண்ணின் அபிநயத் தோற்றம் மேலே.

தொடர்ந்து குழு நடனம்

 மற்றொரு கண்கொள்ளாக் காட்சி.

 குழு நடனத்தில் பங்கேற்ற குழந்தைகள் கீழே.

மற்றும் பல கலை நினழ்வுகளும் நடைபெற்றன.

Read Full Post »

>மிக வித்தியாசமான நூல் வெளியீடு அது. வெளியீட்டு விழா என்று கூட நான் சொல்லவில்லை. வெளியீடு என்றேன். விழாவாகக் கோலங் கொள்ளவில்லை.கனதியான கருத்தரங்கமாக உருக்கொண்டது.

போற்றலும் பொய்ப் புழுகும், மாலையும் மங்கல விளக்கும், விசேடப் பிரதியெனப் பேரிட்டு மேடையில் பணங் கறத்தலும், போட்டோவில் புன்சிரிக்கும் அதிதிகளுமாய் நாற்றமெடுக்கும் விழாவல்ல இது.

காலங்காலமாய் சடங்குச் சகதியில் சிக்கித் திணறும் விழாக்களுக்கு மாற்றாக தெளிவான நோக்கத்துடனானது. தீர்க்கமான கருத்துக்களுக்கு இடமளித்து, குற்றங் காண்பதை திரையிட்டு மேவாது சுதந்திரமாய் கருத்துரைக்க வைத்த காத்திரமான கூட்டம் இது.

கூடலில் ஆர்வலர்கள்.

கூடல் என்று கூறலாம் போலிருக்கிறது. ஏனெனில் தலை மேசையில் இருப்பவர்கள் மட்டுமின்றி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்வலர்களும் கருத்துரைக்க இடமளித்ததால் கூட்டம் கூடலாயிற்று.

இலக்கியத்தில் நாட்டமுடைய சிலரின் கூடல் எனலாம். முக்கியமாக சிறுகதைத் துறையில்.

மேலும் சிலர்

50 வருடங்கள் நீளும், நீண்ட படைப்புலகமெனும் காலவெள்ளத்தில் தளாராது நீந்திப் பயணிக்கும் ஒருவரது 9தாவது சிறுகதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா.

நூலாசிரியர் நீர்வை

பொன்னாடை, மலர் மாலைகள், பூச்செண்டு, நூல் திணித்தல் எதுவுமில்லை. வரவேற்புரை, நன்றியுரை போன்ற நித்தியச் சடங்குகளும் கிடையாது.

முக்கியமான கருத்துரைகளைச் செய்தவர்கள் மாணவர்களாகும்.

மாணவ ஊடகவியலாளர் ரவிவர்மன்

பள்ளி மாணவர்கள் அல்ல.

மாணவ ஊடகவியலாளர் எஸ்.சில்மியா

இலக்கியப் படைப்புகளோடும், செய்திகளோடும் உறவாடுபவர்கள். மற்றவர்களைச் சிந்திக்க வைக்க தமது பேனாவோடு எதிர்காலத்தில் உலா வரப் போகிறவர்கள்.

மாணவ ஊடகவியலாளர் ரகுவரன்

ஆம் ஊடகக் கல்வித்துறை மாணவர்கள்.

மாணவ ஊடகவியலாளர் வீ.முகிலன்

ஊடகத் துறைக் கல்லூரியின் விரிவுரையாளரான தேவகௌரியின் மாணவர்கள் அவர்கள்.

ஊடகக் கல்லூரி விரிவுரையாளர் தேவகெளரி

ஆசிரியரின் நெறியாள்கையானது யார் பேசுவது, எப்பொழுது பேசுவது எவ்வளவு நேரம் பேசுவது போன்ற பொதுவிடயங்கள் குறித்தேயன்றி எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது என அவர்கள் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்கவில்லை எனத் தெரிகிறது.

தலைமை ஏற்று காத்திரமான உரை ஆற்றியவர் பேராசிரியர் சபா ஜெயராசா ஆகும்.

தலைமையுரை பேராசிரியர் சபா ஜெயராசா

கூட்டத்தை ஆரம்பித்து வைத்து சில வார்த்தைகள் பேசியவர் தினகரன் பிரதம ஆசிரியரான திரு. சிவா சுப்பிரமணியம்.

தினகரன் ஆசிரியர் சிவா சுப்பிரமணியம்

மாணவர்களின் கருத்துரைகளை அடுத்து விரிவான கருத்துரை வழங்கியவர் பிரபல எழுத்தாளரான திக்குவல்லை கமால்.

கருத்துரை திக்குவல்லை கமால்

இதைத் தொடர்ந்து பார்வையாளர்களின் சுருக்கமான கருத்துரைகள் இடம் பெற்றன.

மற்றொரு பிரபல எழுத்தாளரான இக்பால் கருத்துரை வழங்கினார்.

கவிஞர் இக்பால்

கே.விஜயன், எம்.கே.முருகானந்தன் போன்ற சிலரும் கருத்துரைகள் வழங்கினர். அவர்கள் கமராவில் சிக்கவில்லை.

நூலாசிரியர்  நீர்வை பொன்னையன் சுருக்கமான பதிலுரை அளித்தார்.

நீர்வை பொன்னையன்

தலைமை ஏற்ற பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் முடிவுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு மையத்தில் (WERC) சென்ற ஞாயிறு 24.10.2010 மாலை 4.30 முதல் மாலை 6.45 வரை இக் கூட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் சபா ஜெயராசா

நூலில் அடங்கியுள்ள சிறுகதைகளும் பின்னுரையாக ‘நீர்வையின் படைப்புகளும் சமூக இயங்குதளமும்’ என்ற தலைப்பிலான எம்.கே.முருகானந்தனின் கட்டுரையும் பொருளடக்கம் பக்கத்தில் அடங்கியுள்ளன.

நூலின் பொருளடக்கம்

கூட்டத்தில் ஆற்றிய உரைகள் எங்கே என்ற கேள்வி எழுகிறதா? Voice Recording ஆக என்னிடம் உள்ளன. அவற்றைப் பதிவேற்றும் வழி எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அல்லது இலக்கியக் கூட்டங்கள் பற்றி மிகச் சிறப்பான தகவல் கட்டுரைகளை பத்திரிகைகளில் தரும் மா.பா.சி (மா.பாலசிங்கம்)  எனது அருகில் இருந்து விரிவான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். அதற்குக் காத்திருப்போம்.

ம.பாலசிங்கம்

மல்லிகை ஒக்ரோபர் இதழில் அவர்தான் அட்டைப் பட நாயகன். அவருக்கு வாழ்த்துக்களும், முற் கூட்டிய நன்றிகளும் உரித்தாகுக.

Read Full Post »

>மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தின் பரசிளிப்பு விழா அண்மையில் நடைபெற்றதை அறிவீர்கள்.

விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.

பரிசளிப்பு மேசையில் நூல்களும் கேடயங்களும்.

பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதனும், திருமதி ரம்யா இரகுநாதனும் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்படுகின்றனர்.

வாயிலிலிருந்து அழைத்துச் செல்லப்படுகையில்..

மாணவர்களிடையே பிரதம விருந்தினரும் பாரியாரும்

பிரதான மண்டபத்தினுள் ….

மேடையில் பரிசளிப்பு கேடயங்களுக்கு அருகில் ….

குத்து விளக்கு ஏற்றுகிறார் பிரதம விருந்தினரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன்.

இன்னும் பல புகைப்படங்கள் மற்றொரு பதிவில்.

Read Full Post »

>“இதுக்கு என்ன செய்யலாம் டொக்டர். பார்க்கவும் அசிங்கமாயிருக்கு. வலி சகிக்கேலாதாம். தொடர்ந்து தொல்லை தருகிறது”.

நான் அதிர்ச்சி அடையும் வண்ணம் சட்டென தனது மேல் சட்டையை பட்டெனக் கழற்றினார்.

அனுமான் நெஞ்சைக் கிழித்தபோது அங்கு இராமனும் சீதையும் இருந்தார்களாம். இவர் கழற்றிய போது கண்களை உறுத்தியது. வாளால் வெட்டி நெஞ்சைப் பிரித்தது போன்ற பாரிய மறு இருந்ததைக் கண்டேன்.

ஆம். அவர் இருதய பை பாஸ் சிகிச்சை செய்திருக்கிறார். ஒரிரு நாட்களில் மாரடைப்பால் இறைவனடி சேர வேண்டியவருக்கு 10 வருடமாவது லீஸ் கிடைத்திருக்கிறது. சந்தோசமான விடயம்தானே. அதை மறந்துவிட்டு வலியைத் தூக்கிப்பிடிக்கிறார்.

“உயிர் தப்பியதற்கு சந்தோசப்படாமல், இந்தச் சாதாரண வலிக்காகவும், மறுவின் அசிங்கத்திற்காகவும் கவலைப்படுகிறீரே” என என்னால் நக்கல் அடிக்க முடியவில்லை.

மனிதர்களின் மனஉணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது டொக்டர்களின் கடமை அல்லவா?

Dr.A.G.K.Gokhale

அண்மையில் இருதய சத்திரசிகிச்சை சம்பந்தமான கருத்தரங்குக் சென்றிருந்தேன். அங்கு மிகவும் தன்நம்பிக்கையோடும், ஆதாரங்கள், தரவுகளோடும் பேசிய இளம் இருதய சத்ரசிகிச்சை நிபுணர் Dr.A.G.K.Gokhale யின் பேச்சு எமக்கு நம்பிக்கை ஊட்டியது. Coronary bypass Surgery செய்வது இவர் போன்றவர்களின் கையில் சிக்கலற்றதென எண்ணத் தோன்றியது.

வழமையாக நெஞ்சுக்குக் குறுக்காக மார்பு எலும்புகளை சுமார் 20-25 செமீ நீளத்திற்கு வெட்டியே இந்த சத்திரசிகிச்சையை மேற் கொள்வார்கள். எலும்புகள் வெட்டுறுவதால் சத்திரசிகிச்சை செய்தவிடத்தில் நீண்ட நாட்களுக்கு வலி நீடிக்கும்.

ஆனால் இந்த முறையில் (Minimally invasive Coronary bypass Surgery)இடது பக்க மார்பில்; 5-6 செமீ அளவிற்கு மட்டுமே வெட்டுவார்கள். அத்துடன் நெஞ்சு எலும்புகள் வெட்டுப்படுவதில்லை. இதனால் வலி நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை.

வழமையான சத்திரசிகிச்சையில் மிக நீண்ட வெட்டுக்காயம் ஏற்படுவதால் பெரியதாக மறு ஏற்படும். இது சட்டைகளுக்கு வெளியே எட்டிப் பார்க்கவும் கூடும். இதனால் பலருக்கும் மனரீதியான பாதிப்பும் தாழ்வுணர்ச்சியும் ஏற்படுவதை அவதானிக்க முடியும். ஆனால் இந்த முறையில் சிறிய வடு, அதுவும் ஓரமாக இடதுபுறத்தில் இருப்பதால் வெளியே தெரியாது.

வலி குறைவாக இருப்பதும் சிறிய மறுவும் மட்டுமே இந்த முறையில் கிடைக்கக் கூடிய அனுகூலங்கள் என எண்ணிவிடாதீர்கள்.

வழமையான சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப நீண்ட நாட்கள் எடுக்கும். குறைந்தது 10 நாட்களுக்கு அங்கு தங்கியிருக்க வேண்டியிருக்கும். சில பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்தக் காலம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு.

ஆனால் நவீன சத்திர சிகிச்சை முறையின் பின் நோயாளி 4 நாட்களிலேயே வீடு திரும்பக் கூடியதாக இருக்கும்.

அத்துடன் 3 வாரங்களுக்குள் பூரண குணம் அடைந்துவிடுவார்.

எனவே விரைவில் வேலைக்குத் திரும்பவும் முடியும். ஆனால் வழமையான முறையில் ஒருவர் குணமடைய குறைந்தது 2—3 மாதங்களாவது எடுக்கும்.

பொதுவாக பாரிய சத்திர சிகிச்சைகளின் போது இழக்கப்படும் அதிகளவு குருதிக்காக, குருதி மாற்றீடு (Blood transfusion) செய்ய வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் நவீன முறையில் குருதி மாற்றீடு செய்வதற்கான தேவை மிக அரிதே. எனவே அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் இல்லை.

இவர் ஹைதரபாத் நகரில் உள்ள குளொபல் மருத்துவ மனையில் இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்கிறார். சென்னையிலும் பங்களுரிலும் கூட இவர்களது மிகப் பெரிய மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்சைகளைச் செய்கிறார்கள்.

குளொபல் மருத்துவ மனைகள் சாதாரண மருத்துவமனைகள் போன்றவை அல்ல. அதிவிசேட சிகிச்சை (Super Speciality Hospitals) மருத்துவமனைகளாகும். மேற் கூறிய இருதய பை பாஸ் சிகிச்சைகளுக்கு மேலாக இருதய மாற்றீடு, சுவாசப்பை மாற்றீடு, சிறுநீரக மாற்றீடு எனவும் சிறந்த சேவைகளை வழங்குவதாக அறிய முடிந்தது.

மேலும் விபரங்கள் அறிய :- Global Hospitals

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ஹாய்நலமா பத்தியில் 18.10.2010 ல் வெளிவந்த கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »

>அறுசுவை உணவைத் தயாரிப்பது மிகவும் சிரமமான பணி்யாகும்.  அனுபவமும் பல்வகை உணவுகள் பற்றிய ஆழ்ந்த அறிவும் அதன் தயாரிப்புக்கு அவசியம். ஆனால் அதனிலும் சிரமமான பணி அதனை சுவை கெடாதபடியும், மனம் நிறையுமாறு பரிமாறுவதுமாகும்.

அத்தகைய பணி ஒன்று அண்மையில் மிகவும் அற்புதமாக, அழகாகவும், செய்நேர்த்தியுடனும், மனநிறைவு அளிக்கும் வண்ணம் செய்து முடிக்கப்பட்டதைக் கண்டேன்.

இது ஒரு நூல். சரியாகச் சொல்வதாயின் மிக வித்தியாசமான மணிவிழா மலர் ஒன்றாகும்.

எம்மத்தியில் வாழும் பல்துறை ஆற்றல் நிறைந்த ஒருவரின் 60 ஆண்டு அகவை நிறைவைக் குறிக்குமாறு  அவர்  பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்ற சமூகத்தால் தயாரிக்கப்பட்ட  மலர் அது.

மணிவிழா மலர்கள் என்றால் பொதுவான வாசகர்களைக் கவர்வது அபூர்வம். ஏனெனில் அவை அந்த நபர் பற்றிய மிகை உணர்வுகளையும், உண்மைக்கு மீறிய அவரது சிறந்த செயற்பாடுகளையும் பங்களிப்புகளையும்  அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் போலியாகப் பாராட்டுவதாகவே இருக்கும்.

தெல்லிப்பழைக் கலை இலக்கியக்கள வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நூல்  ஏ4 பக்க அளவில் சுமார் 230 பக்கங்களுடைய பெரிய தயாரிப்பாக வந்துள்ளது.

முன் அட்டையில் கோகிலா

இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ள இந்த நூலின் முதற் பகுதியானது குயிலின் பார்வையில் சோலை. உளநிறைவோடு தான் வாழும் சோலையைப் பார்த்து மகிழும் குயிலான கோகிலா மகேந்திரன், தான் வாழும் சமூகமான சோலையைப் பார்த்து சொக்கி நின்று’ எழுப்பிய  நாத ஒலியின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இப்பகுதியில் அவரது சிறுகதை, அவர் மனதுக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான மு.வரதசனார் பற்றி 1987 ல் எழுதிய கட்டுரை, விஞ்ஞானக் கதை, மாணவருக்கான விஞ்ஞானக் கட்டுரை, உளவியல் கட்டுரை, சீர்மியக் கட்டுரை, குழந்தைக் கவிதை, உருவகம், பேரா.சு.வித்தியானந்தன் இறந்தபோது கண்ணீர் அஞ்சலி, கலாநிதி.நா.சுப்பிரமணியம் பற்றிய மல்லிகை அட்டைப்படக் கட்டுரை,தெருக் கூத்து விமர்சனம், சமயக் கட்டுரை எனப் பல இடம் பெறுகின்றன.

இவ்வாறான சுமார் 41 கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கோகிலாவின் இலக்கிய பங்களிப்பின் ஆரம்ப காலம் முதல் இற்றைவரை அவர் தனது சமூகத்தையும், அவர்களது படைப்புகளையும், வாழ்வின் கோலங்களையும் ரசித்து அனுபவித்து வெளிப்படுத்திய ஆவணங்களின் கோலம் எனலாம்.

இரண்டாம் பகுதி சோலையின் பார்வையில் குயில் என்பதாகும். எமது சமூகத்தில் பல்துறைகளில் மதிப்பு மிக்க 38 பேர் அவர் பற்றியும் அவரது படைப்புகள் மற்றும் பல்துறை ஆற்றல் பற்றி அவ்வப்போது எழுதி பத்திரிகை மற்றும் நூல்களில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்து எடுக்கப்பட்டவையாகும். நூல் முன்னுரையும் இடம் பெற்றுள்ளது.

உதாரணத்திற்கு சில பெயர்களைக் குறிப்பிடலாம். பேரா.தயா.சோமசுந்தரம், பேரா.சிவலிங்கராஜா, முரசொலி.சிவராஜா, பேரா.அ.சண்முகதாஸ், பேரா.சபா.ஜெயராசா, கே.எஸ்.சிவகுமாரன், செங்கை ஆழியான், உளநல மருத்துவர்.எஸ்.சிவதாஸ், புலோலியூர்.இரத்தினவேலோன், கவிஞர்.சோ.பா. போன்ற பலரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

கட்டுரைகள் முடிந்தவுடன் அப்பக்கத்தில் மீதமாகும் வெளியை நிரப்புவதற்காக இவர் பெற்ற கல்வித் தகமைகள், தொழில் தகமைகள், தொழில் அனுபவங்கள், படைப்புகள், பெற்ற பரிசுகள், விருதுகள், பாராட்டுகள், இவர் ஆற்றிய பேச்சுகள், நிகழ்த்திய கலை நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எழுத்தாளர், சீர்மியர், இலக்கிய கலாவித்தகர், நாடக கலாவித்தகர்,கலைச்சுடர் எனப் பலவாறு போற்றப்படும் திருமதி.கோகிலா மகேந்திரன் சமூகப் பங்களிப்பை முழுமையாக ஆவணப்படுத்தும் சிறந்த ஆவணமாக இந் நூல் அமைகிறது எனலாம்.

திரு.திருமதி.மகேந்திரன். மகன் பிரவீனன்

இதைத் தயாரித்து வெளியிட்ட தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களத்திற்கு பாராட்டுக்கள் உரியன.

 திருமதி.கோகிலா மகேந்திரன் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு கலை இலக்கிய சமூகப் பணி செய்து இனிது வாழ வாழ்த்துகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

எமது பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா எதிர் வரும் 23.10.2010 சனிக்கிழமை அன்று டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் நடைபெற இருக்கிறது.

பரிசில்களை திருமதி ரம்யா இரகுநாதன் அவர்கள் பரிசில்களை வழங்குவார்.

பரிசு பெறும் மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

Read Full Post »

Older Posts »