“அழகு தேமல் என்று நினைத்து பேசாமல் விட்டிட்டன். நாவூறு பட்டதுபோல இப்ப கூடக் கூடவா வருகிறது'”என்று அம்மா சொன்னாள்.
மாநிறமான அந்தப் பையனின் சொக்கைகளில் பவுடர் அப்பியது போல சில அடையாளங்கள். அம்மா சொன்னது உண்மைதான். அழகான அந்தப் பையனின் முகம் அழகு குலைந்து கிடந்தது.
ஆனால் இந்த அழகென்பதும் அழகு குலைந்தது என்பதும் எமது மன உணர்வுகள்தான்.
அழகு தேமல் Pityriasis alba
இந்த அழகு தேமலை Pityriasis alba என அழைப்பார்கள். தெளிவற்ற ஓரங்களையுடைய தேமல் அடையாளங்களாக இருக்கும். நல்ல வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தால் நுண்ணிய செதில்கள் போல சற்று சொரப்பாக இருக்கும். சற்று செம்மை படர்ந்த அடையாளங்களாக ஆரம்பிக்கும் இவை பின்னர் வெளிறியவையாக மாறிடும்.
எனவே இவை செம்மை படர்ந்தவையாகவோ, வெள்ளை நிறமாகவோ அல்லது சில வேளைகளில் சரும நிறத்தவையாகவோ இருக்கக் கூடும்.
முகத்தில் அதுவும் பெரும்பாலும் கன்னங்களிலேயே இது தோன்றும். இருந்த போதும் தோள் மூட்டு, கைகளின் மேற்பகுதி, கழுத்து போன்ற இடங்களிலும் வரக்கூடும். சில வேளைகளில் நெஞ்சு, முதுகுப் பகுதிகளிலும், தொடைகளிலும் கூட தோனன்றக் கூடும்.
மிகப் பெரிய அளவானவையாக இருப்பதில்லை. 1 முதல் 4 செமீ அளவில்தான் இருக்கும். பொதுவாக 4-5 அடையாளங்கள் இருக்கக் கூடும் என்ற போதும் அவற்றின் எண்ணிக்கை 20 வரை அதிகமாகவும் இருக்கலாம். குளிர் காலத்தை விட வெயில் காலத்தில் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தெரியும்.
இது ஏன் தோன்றுகிறது என்பது பற்றி தெளிவற்ற தன்மையே நிலவுகிறது. பொதுவாக இது ஒரு வகை சரும அழற்சி என்றே கருதப்படுகிறது. அதாவது ஒரு வகை எக்ஸிமா எனலாம் என்றபோதும் கடுமை அற்ற வகையானது என்றே சொல்ல வேண்டும்.
இது ஒரு ஆபத்தற்ற நோய். ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றுவதில்லை. அத்துடன் காலப்போக்கில் தானகவே குணமடைந்துவிடும். சருமத்தை ஊறுபடுத்தாது கவனமாகப் பேணி வந்தாலே போதுமானது. எந்தவித சிகிச்சையும் தேவைப்படாது.
சொரசொரப்பு அல்லது அரிப்பு தொல்லையாக இருந்தால் மருத்துவர்கள் சருமத்தை மிருதுவாக்கும் கிறீம் வகைகளைச்(Emollient cream) சிபார்சு செய்யலாம். அல்லது சற்று வீரியம் குறைந்த ஸ்டிரொயிட் (Steroid) வகை கிறீம்களையும் கொடுப்பதுண்டு. ஹைரோகோட்டிசோன் கிறீம் அத்தகையது. சற்று விலை உயர்ந்த Tacrolimus ointment ஓயின்மென்ட் உபயோகிப்பதும் உதவக் கூடும்.
அழுக்குத் தேமல் (Pityriasis versicolr)
அழகு தேமல் பற்றிப் பேசினோம். இனி அழுக்குத் தேமல் பற்றிப் பார்க்கலாமா?
இதுவும் ஏறத்தாள அழகு தேமல் போலவே பார்வைக்கு இருக்கும். இருந்தபோதும் இது தோல் அழற்சி நோயல்ல. கிருமியால் ஏற்படுகிறது. Pityrosporum என்ற ஈஸ்ட் வகைக் கிருமியால்தான் ஏற்படுகிறது.
பெரும்பாலானவர்களின் உடலில் இக் கிருமி இயற்கையாகவே இருக்கிறது. இருந்தபோதும் சிலரது உடலில் மட்டும் அவை பெருகி சரும நோயை ஏற்படுத்துகின்றன.
ஏன் சிலரில் மாத்திரம் பெருகுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாகச் தெரியவில்லை. இருந்தபோதும் கடுமையான வெக்கை, வியர்வை போன்றவை காரணமாக இருக்கலாம்.
அழகு தேமல் பெரும்பாலும் முகத்தில் தோன்றுவதாக இருக்க, இந்த அழுக்குத் தேமலானது நெஞ்சு, கழுத்து மற்றும் மேற் புஜங்களிலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது. வயிறு, முதுகு, தொடை போன்ற இடங்களுக்கும் சிலரில் இது பரவுவதுண்டு.
அருகருகே இருக்கும் தேமல் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிதாக வருவதுண்டு.
சரும நிறத்திலேயே சற்று வெளிறலாகவும் சொரசொரப்பாகவும் இருப்பதால் அழுக்குப் படர்ந்தது போல தோன்றலாம். எனவேதான் அழுக்குத் தேமல் என்றேன். வெண்மையான தோலுடையவர்களில் பிரவுன் நிறமாகத் தேமல் தூக்கலாகத் தெரியும்.
Ketoconazole அல்லது Selenium சேர்ந்த சம்பூக்களை வெளிப் பூச்சு மருந்தாக உபயோகிக்கலாம். தேமல் உள்ள இடங்களில் மட்டுமின்றி அருகில் உள்ள சருமத்திலும் பூசுவது அவசியம். 5 முதல் 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் உடலைக் கழுவுங்கள்.
வாரம் ஓரு முறையாக நான்கு வாரங்கள் வரை பாவிக்க நோய் மறைந்து விடும். ஒரு சிலரில் இது சில காலத்தின் பின்னர் மீண்டும் ஏற்படக் கூடும். அவ்வாறெனில் மீண்டும் இந்த சம்பூ வைத்தியத்தை செய்ய வேண்டியிருக்கும்.
பங்கசிற்கு எதிரான (Antifungal- பங்கஸ் கொல்லி) பூச்சு மருந்துகளும் நல்ல பலனைக் கொடுக்கினன்றன. Clotrimazole, Miconazole, Ketoconazole போன்றவை சில உதாரணங்களாகும். ஓயின்ட்மென்ட் அல்லது கிறீமாக ஆக உபயோகிக்கலாம். பொதுவாக காலை மாலை என இருவேளைகள் பூச வேண்டும். இரு வாரங்கள் வரை தொடர்ந்து உபயோகிக்க நேரிடும்.
உடலில் பல இடங்களில் பரவலாக இருந்தால் அல்லது சம்பூ மற்றும் பூச்சு மருந்துகளுக்கு போதிய பலன் கிட்டாவிட்டால் பங்கஸ் கொல்லி மருந்துகளை மாத்திரைகளாக உட்கொள்ளவும் நேரிலாம்.
வட்டக் கடி(Tinea Corporis)
இதுவும் ஒரு வகை பங்கஸ் தோல் நோய்தான். வட்டக் கடி (Ringworm) எனவும் சொல்லுவார்கள். பெரும்பாலும் வட்ட வடிவில் இருக்கலாம்.
ஆனால் இதன் முக்கிய குணமானது படர்ந்து செல்வதாகும். முதலில் சிறியதாக இருந்து ஓரங்களில் வெளிப் பரவிச் செல்லும். அவ்வாறு பரந்து செல்லும் போது, முதலில் ஆரம்பித்த நடுப்பகுதி குனமடைந்து விடும். அரிப்பும் பெரும்பாலும் ஓரங்களிலேயே இருக்கும்.
சிகிச்சையைப் பொறுத்த வரையில் மேலே கூறிய அதே பங்கஸ் கொல்லி பூச்சு மருந்துகள் பலன் அளிக்கும்.
Tinea rubrum என்ற கிருமியினாலேயே இந்த நோய் ஏற்படுகிறது. சருமத்தில் மாத்திரமின்றி நகங்களிலும் முடியிலும், கால் விரல் இருக்குகளிலும் கூட இக் கிருமியால் நோய்கள் ஏற்படுவதுண்டு.
சரும நோய்கள் பல. அவற்றியேயான வித்தியாசங்கள் நுணுக்கமானவை. உங்களால் கண்டு பிடிப்பது சிரமமானது. ஒரு சரும நோய்க்கு தந்த பூச்சு மருந்துகளை அதேபோன்ற நோயாகத்தான் இருக்கிறது என நினைத்து வேறு புதிய சரும நோய்களுக்கு உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.
பலவிதமான பழைய பூச்சு மருந்துகள் பலரிடம் சேர்ந்து கிடப்பதை அவதானித்து இருக்கிறேன். எதை எதற்கு போடுவது எனப் புரியாது திணறிக் கொண்டிருப்பார்கள். சில காலாவதியான மருந்துகளாகவும் இருப்பதுண்டு. மருந்துகளை மாறிப் பூசி துன்பப்பட்டவர்கள் பலர்.
பழைய மருந்துகளை ஒருபோதும் சேமித்து வைக்காதிருக்காதீர்கள். குணமாகியதும் வீசிவிடுங்கள். அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது.
எனது ஹாய் நலமா புளக்கில் (Dec 22, 2014) வெளியான கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0
Doctor, இந்த கட்டுரை பலருக்கு உதவும் என்று என்னுகிறேன்
குளிர் நாடுகளில் இவ்வகையான தொல்லை இல்லை. வேர்வை காரணமக இருக்கலமோ ?
அன்புள்ள திரு.டாக்ட்டருக்கு வணக்கம் ,
நான் பலமுறை தங்களுக்கு மின்அஞ்சல்கள் சரும நோயான எக்ஸீமா eczema குறித்தும்
அதற்குண்டான மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்தும் எனக்கு அறிவுரை
கூறுமாறு கேட்டுக்கொண்டிருந்தேன் ,ஏனென்றால் நான் இந்தியாவில் பெங்களூரில்
வசிக்கிறேன் அதனால்தான் மின் அஞ்சல் மூலம் கேட்கிறேன், ஆனால்
தாங்க்களிதுவரைபதில் அனுப்பவில்லை தயாவு செய்து இதற்காவதுபதில் அனுப்பவும் ,
வணக்கத்துடன்
தங்கள் உண்மையுள்ள
பி எம் ஜெயராமன்
2015-04-30 6:17 GMT+05:30 “முருகானந்தன் கிளினிக்” :
> Dr.M.K.Muruganandan posted: “”அழகு தேமல் என்று நினைத்து பேசாமல்
> விட்டிட்டன். நாவூறு பட்டதுபோல இப்ப கூடக் கூடவா வருகிறது'”என்று அம்மா
> சொன்னாள். மாநிறமான அந்தப் பையனின் சொக்கைகளில் பவுடர் அப்பியது போல சில
> அடையாளங்கள். அம்மா சொன்னது உண்மைதான். அழகான அந்தப் பையனின் முகம் அழகு
> குலைந்து”
மிகவும் வருந்துகிறேன்
ஆயினும் தினமும் பல கேள்விகள் வருகின்றன
இவற்றிற்கு தனித்னியே விடை அளிப்பதற்கான
நேர அவகாசம் முழுநேர மருத்துவரான எனக்குக் கிடையாது
அதனால்தான் பொதுவான பதிவுகளை
இடைஇடையே பதிவு ஏற்றுகிறேன்
விபரமான விளக்கங்களுக்கு
உங்கள் மருத்தவரையே அணுக வேண்டும்
அழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி – சில சரும நோய்கள் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Dr.M.K.Muruganandan
அழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி – சில சரும நோய்கள் = எனது
பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Dr.M.K.Muruganandan
2015-04-30 6:17 GMT+05:30 “முருகானந்தன் கிளினிக்” :
> Dr.M.K.Muruganandan posted: “”அழகு தேமல் என்று நினைத்து பேசாமல்
> விட்டிட்டன். நாவூறு பட்டதுபோல இப்ப கூடக் கூடவா வருகிறது'”என்று அம்மா
> சொன்னாள். மாநிறமான அந்தப் பையனின் சொக்கைகளில் பவுடர் அப்பியது போல சில
> அடையாளங்கள். அம்மா சொன்னது உண்மைதான். அழகான அந்தப் பையனின் முகம் அழகு
> குலைந்து”