Dheepanஐந்து வருடங்களுக்கு முன்னர் வந்த பிரான்ஸ் + தமிழ் படம்.
முன்பு பார்க்க முயன்றும் முடியவில்லை. கொரோனா தந்த கட்டாய ஓய்வில் இப்போது இணையத்தில் (Netflix) பார்க்க கிடைத்தது.
எமது எழுத்தாளர் Shoba Sakthi நடித்ததுடன், கதையமைப்பு மற்றும் உரையாடலில் உதவியதால் அதிகம் கவனம் பெற்றது.
அவயங்கள் சிதைந்து இறந்து கிடக்கும் பிணக் குவியல்களுடன் திரைப்படம் ஆரம்பமாகிறது. பனை ஓலைகளால் மூடப்பட்டு அவை எரிக்கப்படுகின்றன.
ஆனால் இது இறுதி யுத்தம் பற்றிய படம் அல்ல. யுத்த இறுதியில் நாட்டில் இருக்க முடியாது சட்ட விரோதமாக புலம் பெயர்பவர்கள் எதிர் கொள்ளும் நாளாந்த பிரச்சினைகள் பற்றியது.
சிவதாசன் ஒரு விடுதலை போராளி. அவன் தீபன் என்ற இறந்து போன ஒரு பிரெஞ்சுப் பிரஜை ஒருவரின் பாஸ்போட்டை பயன்படுத்தி, அதற்கு ஏற்ப சுற்றம் இழந்த ஒரு பெண்ணையும் வேறொரு எட்டு வயது பெண் குழந்தையையும் தனது மனைவி குழந்தை எனக் காட்டி பிரான்ஸ் போய் சேர்கிறார்கள்.
கணவன், மனைவி, குழந்தை அல்லாத அவர்கள் எவ்வாறு ஒரு குடும்பம் போல போலியாக இயங்குகிறார்கள், பொய்யான உறவுகளுடன் மெய்யாக வாழ்ந்து காட்ட வேண்டிய சூழல். தீபன், யாழினி, இளையாள் என்ற பெயர் களோடு இறங்குகிறார்கள்.
குடியுரிமை பெற படும் சிக்கல்கள், சாவிக்கொத்துகளையும், பென்ரோச்சுகளையும் வீதியில் திரிந்து இரண்டு யூரோ என கத்திக் கத்தி விற்று வயிறு நிறைக்கும் அவலம்.
பிறகு அவனுக்கு வீதி சுத்தம் செய்யும் வேலையும், அவளுக்கு மனநலம் குறைந்த முதியவரை பரிபாரிக்கும் வேலையும் கிடைக்கிறது.
போதைப் பொருள் இரு கோஷ்டிகளிடையே இவர்கள் சிக்கும் நிலை ஏற்பட, அதிலிருந்து தப்பிக்க துப்பாக்கியை மீண்டும் அவன் தூக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
முன்னாள் போராளியான அவன் தன் அகதி நிலை காரணமாகவும், தான் பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ‘தன் குடும்பத்திற்காக’ கோபப்படாமல் அமைதி காக்கிறான்.
ஆயினும் ‘பொய்யான’ தன் மனைவிக்கு அந்த போதைப் பொருள் கும்பலால் ஆபத்து வந்த போது அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமையே அவன் மீண்டும் துப்பாக்கி தூக்க வைக்கிறது.
ஷோபா சக்தி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யாழினியாக கைலேஸ்வரி சிறினிவாசனும், இளையாளாக குளோடின் வினாசித்தம்பியும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.
பிரபல இயக்குனர் Jacgues Audiard நெறியாள்கை. Rust and bone, A Prophet போன்ற படங்களை நெறியாள்கை செய்தவர். Cannes ல் Palme d’Or சிறந்த பட விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க வேண்டிய படம் என்பது நிச்சயம்.
மிக விரிவாக எழுத வேண்டிய படம், ஆயினும் எனது கைபேசியில் எழுதி கை உழைவதால் இவ்வளவு தான் முடிந்தது.
பின்னூட்டமொன்றை இடுக