Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

டாக்குத்தரின் தொணதொணப்புகள்

தனியே மருந்தெடுக்க வராதீர்கள்

பொலிந்த முகம், கனத்த மார்பு, உறுதியான கைகள், தடித்த உடல். நல்ல வலுவான உடலுள்ள பெண்தான்.

ஆனால் அவள் எனது அறைக்குள் நுழைந்த போதே முகம் சோர்ந்து நடை தளர்ந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. விழுந்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் மெதுமெதுவாகவே நடந்து வந்தாள். இருந்த போதும் அதை மீறிய உள்ளுறிய அவசரமும் அந்தரமும் இருப்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

அருகில் வந்தவள் திறப்புக் கோர்வையை வீசி எறிவதைப் போல மேசையில் போட்டுவிட்டு அப்படியே மேசையில் தலையைச் சாய்த்தாள்.

பக்கெனக் மணிக்கட்டைப் பற்றி அவளது நாடித்துடிப்பை கணி;த்தேன். சற்று வேகமாக துடித்துக் கொண்டிருந்தாலும் அதன் பருமானம் தளர்ந்திருக்கவில்லை என்பது திருப்தியளித்தது.

அதற்கிடையில் அவளது முகம் கை கால்களையும் அவதானிக்க முடிந்தது. சற்றுச் சிவந்து திட்டுத் திட்டான வீக்கங்கள் முகத்திலும் உடலிலும் பரந்து கிடந்தன.

‘சரியான சொறிவு. மேலெல்லாம் ஒரே கடி. பொறுக்க முடியவில்லை’ என்றாள். தொடர்ந்து ‘கோயிலுக்கு வந்தனான். கடி பொறுக்கேலாமல்தான் உங்களட்டை ஓடிவந்தனான்’

ஏதோ ஒவ்வாமை என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. ஆனால் காரணம் என்ன?

‘ஏன் என்ன நடந்தது’ என விசாரித்தேன்.

‘குளவி கடிச்சுப் போட்டுது. முகத்திலையும், முதுகிலையும் கையிலும் கடிச்சுப் போட்டுது’

‘எங்கை கடிச்சது கோயிலிலையோ’

வீட்டிலைதான் கடித்ததாம். அதன் பிறகு வெளிக்கிட்டு கோயிலுக்கு வந்த பிறகுதான் சொறி அரிப்பு தொடங்கியிருக்கிறது.

தலைச்சுத்து, சத்தி, மயக்கம் போல வருதல் போன்ற அறிகுறிகள் ஏதும் இருக்கோ என வினவியபோது அவை எதுவும் இல்லை என்று சொன்னாள். பிரஸரை அளந்து பார்த்தபோது அதுவும் சரியான அளவில் இருந்தது. நாடித்துடிப்பு அளவாக இருந்ததையும் மனதில் கொண்டு பார்த்த போது அவள் அபாய நிலையில் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. எனவே மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

அவளது ஒவ்வாமையைத் தணிப்பதற்கான ஊசி மருந்தை ஏற்றி மருந்துகளையும் கொடுத்து அனுப்பிடலாம் எனத் தீர்மானித்தேன்.

அப்பொழுதான் அவள் மேசையில் போட்ட திறப்புகள் ஞாபகம் வந்தது.

‘எப்படி வந்தனீங்கள் யாராவது கூட வந்தவையளா?’ என விசாரித்தேன்.

‘தனியத்தான் வந்தனான். ஸ்கூட்டியிலை’

திறப்பைக் கண்டதும் அதை ஏற்கனவே அனுமானித்திருந்த போதும். தனிய வந்ததின் சிக்கல்கள் மனதில் ஓட ஆரம்பித்தது.

குளவி கடித்தல் என்பது ஆபத்து நிறைந்தது. முகம், உதடு தொண்டை ஆகியன தடித்து வீங்கும். கை கால்கள் உடல் சொறியும். தலைச்சுற்றும் ஏற்படலாம்.

இரத்த அழுத்தம் திடீரெனக் குறைவது, தலை அம்மல் மயக்கம் ஆகியன ஆபத்தான அறிகுறிகளாகும். இவை தோன்றினால் மருத்துவமனையில் அனுமதித்தே சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவளுக்கு முகம், உதடு தொண்டை வீக்கம், உடற் சொறிவுடன் தலைச்சுற்றும் இருந்ததால்தான் எனது மேசையில் படுத்திருக்கிறாள்.

அந்தத் தலைச்சுற்றுடன் தான் ஸ்கூட்டி ஓட்டி வந்திருக்கிறாள். வரும்போது தலைச்சுற்று மோசமாகியிருந்தால் ஸ்கூட்டி விழுந்து ஆபத்தான நிலையாகியிருக்கும். உயிராபத்து கூட நிகழ்ந்திருக்கலாம்.

மருத்துவத்திற்கு செல்லும் போது தனியாக ஒருபோதும் செல்ல வேண்டாம். குளவி கடித்தல் போன்ற ஆபத்தான விசயங்களுக்குத்தான் இது பொருந்தும் என்றில்லை.

காய்ச்சல், தடிமன், பிரஸர், சீனி வருத்தம் போன்ற எதுவானாலும் உதவிக்கு யாரையாவது அழைத்துப் போவதே புத்திசாலித்தனமானது. அங்கு ஊசி போடக் கூடும், இரத்தம் எடுக்கக் கூடும், அல்லது வேறு பரிசோதனைகள் செய்யக் கூடும். சிலவேளை மருத்துவமனையில் அனுமதிக்கவும் கூடும்.

இத்தகைய நிலைகளை தனியே சமாளிக்க முடியாது. எனவே உதவி தேவை. யாரையாவது அழைத்துச் செல்லுங்கள்.

இந்தப் பெண்ணுக்கு ஊசி போட்டு சற்று நேரம் அவதானிக்க வேண்டி நேர்ந்தது. படுத்திருந்தாள். அவளது வீட்டிக்கு பல முறை போன் போட்டும் யாரும் எடுக்க வில்லை. நீண்ட நேரத்தின் பின்தான் தொடர்பு கிடைத்தது. வந்து அழைத்துச் சென்றார்கள்.

0.00.0

எனது புதிய மருத்துவ நூல் வெளிவந்திருக்கிறது.

குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு ஏற்படும் சில பிரச்சினைகள் பற்றியது

“உங்கள் குழந்தையின்

நலமான வளர்ச்சியும் சில பிரச்சினைகளும்”

இது என்னுடைய 14வது நூல்

நீண்ட நாட்களுக்கு பின்னர்தான் இந்த நூல் வெளிவருகிறது.

இந்த இடைவெளியில் நிறைய நலவியல் கட்டுரைகளை பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை நூலக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கவில்லை. இரண்டு காரணங்கள். முதலாவது காரணமானது இன்றைய வாசிப்பு முறைமை மாறிவிட்டது என்ற பொதுவான அபிப்பராயம்தான். இன்று அச்சுப் பிரதிகளை விட கணனியிலும் இணையத்திலுமே பெரும்பாலானவர்கள் படிக்கிறார்கள் என்பதுதான் எனது கணிப்பாக இருந்தது.

இதனால்தான் நீண்டகாலமாக நூல்களை வெளியிடவில்லை. ஆயினும் விரும்பியவர்கள் படித்துப் பயனுறும் வண்ணம் அவற்றை எனது புளக்கில் பதிவு ஏற்றம் செய்கிறேன். பேஸ்புக்கிலும் பதிவு செய்வது வழக்கம்.

ஆயினும் சில காலத்தின் முன் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் நடந்த புத்தக கண்காட்சிசாலைகளில் முதியவர்கள் மட்டுமின்றி இளைய சமுதாயத்தினரும் நூல்களைத் தேடும் ஆர்வத்தைக் கண்டதும் நானும் மீண்டும் நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது.

இதை வெளியிட வைப்பதில் எனது நண்பர் S.சற்குணராஜா வின் அக்கறையும் இடைவிடாத நினைவூட்டல்களும் முக்கிய காரணமாகின்றன.

வெளியிடும் ஸ்ரீலங்கா புத்தக நிலையத்தினருக்கும் எனது நன்றிகள்

உள்ளடக்கம்

1. குழந்தையின் வளர்ச்சிப் படிகள்

2. குழந்தையின் வளர்ச்சிப் படிகள் 2ம் வருடம்

3. பாலகர்களின் உணவு

4. பாலகர்களின் உணவு ஒவ்வாமை

5. குழந்தைக்கு குடிக்கக் கொடுப்பது என்ன

6. குழந்தைகளுக்கு கொழுப்பு உணவு

7. போதுமடா அம்மாவின் சாப்பாடு

8. மீன் அறிமுகப்படுத்தல்

9. பசிக்காத குழந்தை

10. பல்லுக் கொழுக்கட்டையும் அழும் பிள்ளையை தேற்றலும்

11. தத்தித் தத்தி நடை பயில்தல்

12. குழந்தை விடாது அழுகிறதா?

13. தொட்டில் மரணம்

14. குழந்தைகளில் பிட்டம் தொடைகளில் அரிப்பு நோய்

15. குழந்தைகளின் வயிற்று வலிகள்

16. அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்

17. இறங்காத விதைகள்

18. ஜிப்பில் மாட்டுப்படுதல்

19. தூக்கத்தில் சிறுநீர்கழித்தல்

20. ஓடி விளையாடு பாப்பா

21. கொப்பளத் தொற்று நோய்

22. கொப்பளிப்பான்

23. மலாவாயில் அரிப்பு

24. பேன் தொல்லை

25. இளநரை

26. காய்ச்சல் வலிப்பு

27. பேசாத குழந்தை

28. தூங்காத குழந்தை

29. தூங்காத குழந்தையுடன் அல்லாட்டமா

30. கண்களால் பூளை சிந்தும் பாலகன்

31. மூக்கிலிருந்து வடியம் குழந்தை

32. குழந்தைகளி;ன் ஒவ்வாமை மூக்கால் வடிதல்

33. தோற் கிரந்தை

34. பற்சொத்தை

35. நகம் கடித்தல

36. தூக்கத்தில் நடத்தல்

37. வெருட்டப்படும் குழந்தை

38. குழந்தைகளில்இருமல் மருந்து தேவையா

39. குறுநடை போடும் காலத்திலேயே வாசிக்க ஊக்குவியுங்கள்

40. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன்

விலை 300 ரூபா
லங்கா புத்தகசாலையிலும் எனது மருத்துவ மனையிலும் கிடைக்கும்
1. Lanka Book Depot
Tel 077 3911998, 0112 341942
F.L 1.14,Dias Place
Gunasingapura
Colombo 12
2. Muruganandan Clinic
Maruthaddy
Point Pedro
Tel 076 850 2696

பஞ்சம் பிழைக்க வந்த சீமை

மு.சிவலிஙகம் எழுதிய மலையக மக்களின் வரவாற்று நாவல்.

அண்மையில் வந்த மிக முக்கியமான ஒரு நூல் என நம்புகிறேன்.

ஏனெனில் அந்த மக்கள் இங்கு ஆரம்பத்தில் வந்த வரலாற்றையும் இங்கு அந்நேரத்தில் மலைகளை சுத்தம் செய்து ஆரம்பத்தில் கோப்பி தோட்டங்கள் அமைத்தது பற்றியும், பின்னர் தேயிலை தோட்டங்கள் ஆரம்பித்த போது அவற்றில் வேலை செய்தது பற்றியும் மிக விரிவாகப் பேசுகின்றது.

ஆனால் அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்ல முடியாதவை.

1820-30 காலப்பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக அவர்கள் எங்காவது போய் உழைத்து உயிரைக் காக்க முயல்கிறார்கள்.

திருச்சியிலிருந்து பாம்பனுக்கு காடுகள் வழியே நடையாகவே வருகிறார்.

வழியில் பசியாலும். களையாலும் இறந்து மடிகிறார்கள். பாம்பன் தலைமன்னார் கப்பல் பயணத்தில் கப்பலே தாண்டு மடிகிறார்கள். மன்னாரிலிருந்து மதவாச்சி வரை பாதை காட்டுப்பாதை. அங்கும் பசி பட்டினியாலும் சிநுத்தை போன்ற காட்டு மிருகங்களால் பலர் மடிகிறார்கள். நோய்வாய்ப்பட்டும் மடிகிறார்கள்

இங்கு வந்து அவர்கள் கங்காணிமார்களாலும் துரைமார்களாலும் அடக்கப்படுவது. அவர்களது உழைப்பு சுரண்டப்படுவது. பெண்கள பலாத்காரம் செய்யப்படுவத என மிகவும் விஸ்தாரமாகவும் மனதைத் தொடும்படி சொல்லியுள்ளார்.

உண்மையில் அவர்கள் இங்கு வந்த வரலாற்றை சொல்லும் முதல் படைப்பு என்று சொல்லலாம். அதனால் மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய நூலாக இருக்கிறது. இதற்கான பாரிய தேடல் செய்த அவரது உழைப்பு பாரட்டப்பட வேண்டியதாகும்.

துன்பத்தில் உழலும் மலையக தோட்ட தொழிலாளி மக்கள் பற்றி புதுமைப் பித்தன் தனது துன்பக்கேணியில் எழுதியுள்ளார் தூரத்துப் பச்சையையும் வாசித்திருக்கிறோம்.

ஆனால் இது அவற்றையெல்லாம் விட ஒரு பரந்த பார்வையைத் தருகிறது

கிட்டத்தட்ட 400 பக்கங்கள் நீளும் நூல் இது.

பேராசிரியர் செ.யோகராசா மிகவும் காத்திரமான முன்னுரை தந்திருக்கிறார்.

அதே போல பேராசிரியர்.சோ.சந்திரசேகரம் சிறந்த அணிந்துரையையும் தந்துள்ளார்.

இது ஒரு கொடகே வெளியீடு. விலை ருபா 1000/=
661, 665, 675, மருதானை வீதி கொழும்பு 10
Tel:- 011 2685369, 2686925

கவி மீனாவின் சிறுகதைத் தொகுப்பு

இது முடங்கல் காலம். கொரோனா தொற்று காரணமாக வெளியே திரிய முடியாது வீட்டுக்குள் முடங்க வேண்டிய காலமாயிற்று. சினிமா இல்லை. பூங்கா விஜயம் கிடையாது. உறவினர் வீடுகளுக்கும் போக முடியாது. வாசிப்பும், காணொளியும் மட்டுமே வாழ்வாயிற்று.

https://issuu.com/kavi.meena/docs/_________________

அதற்கு ஏற்றாற் போல, காலத்தின் தேவை போல கவி மீனா தனது முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.

கூட்டம் இல்லை, வெளியீட்டு விழா இல்லை: எந்த வித ஆரப்பாட்டமும் இல்லாமல் தனது நூலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதே போலத்தான் ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் சினிமாவும் கூட இணையத்தில்தான் வெளியாகியுள்ளது.

20 பக்கங்கள் நீளும் இந்த தொகுதியில் மொத்தம் 9 சிறுகதைகள் அடங்கியுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தாயக மண்ணின் மாந்தரின் வாழ்வைப் பேசும் அதே நேரம் புலம் பெயர் வாழ்வின் கோலங்களையும் வாசகர் பார்வைக்கு வைக்கின்றன.

முதல் கதை ஆத்ம திருப்தி என்பதாகும்.

பின் நோக்கிச் சொல்லப்படும் கதை இது.

வெளி நாட்டிற்கு சென்ற ஒருவன் (ரவி) அங்கு தங்கியிருக்க விரும்பாமல் மீண்டும் தாய் மண்ணுக்கு வந்து தந்தை உட்பட உறவுகள் நண்பர்களின் பேச்சுக்கும், ஏளனத்திக்கும் ஆளாகிறான்.

அவன் ஏன் திரும்பி வந்தான். அதைச் சொல்வதுதான் கதை. நிச்சயமாக சொல்லப்பட வேண்டிய கதை.

ஒரு பிரபல பாடசாலையில் மதிப்பு மிகு ஆசிரியராக இருந்த அவன் அங்கு, இங்கு செய்யவும் தயங்கும் பல வேலைகளை மனதைக் கடித்துக்கொண்டு செய்வதும், தங்குவுதற்கு ஆமான இடமின்றி துன்பப்படுவதும், இனத் துவேசத்திற்கு முகம் கொடுப்பதும்…. எத்தனை எத்தனை துன்பங்கள்.

யாழ் மண்ணில் தலைவிரித்தாடும் வெளிநாட்டு மோகத்திற்கு சாட்டை அடி கொடுக்கும் அவசியமான படைப்பு.

அடுத்த கதை ஏங்கித் தவிக்குது தாய் மனம் என்பதாகும். தலைப்பே பொருளை உணர்த்தி நிற்கிறது.

யாழ் மண்ணின் கட்டுப்பாடான பண்பாட்டு முறையில் வாழ்ந்த அவள் ஜேர்மனயில் இப்போது வாழும்போது வளர்ந்த தனது மகளும் அதே விதமான பாரம்பரிய முறையில் பண்பாக வாழ வைக்க வேண்டும் என விருப்புகிறாள்.
மகளும் அடங்கி நடக்கிறாள். ஆனால் திடீரென ஒருநாள் யாவும் தலைகீழாக மாறும் நிலைக்கு முகம் கொடுக்க நேர்கிறது.

வாழும் இடம்இ சூழல் போன்றவை எமது வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கின்றன. அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினர் அந்த மண்ணின் சூழலுக்கு ஏற்பவே வாழ்வார்கள். அதைக் கட்டுப்பாடுகள் விதித்து மாற்ற முயல்வது முடியாத காரியமாக ஆகிவிடும் என்பதைச் சொல்கிறது

யாழ் மண்ணின் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சி தருவதாக அமையக் கூடும் ஆயினும் யாதார்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது இக் கதை.

சித்திரையில் சிறுவன் என்பது அடுத்த கதை. சித்திரை மாசத்த்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது என்பது எமது மக்களின் நம்பிக்கை. இது போன்ற எத்தனையோ காலத்திற்கு ஒவ்வாத பல மூட நம்பிக்கைகளை எமது தமிழ் சமூகம்  இன்னமும் சுமந்து வருகிறது. சிறு வயது முதல் பலரும் பல தடவைகள் இவனது பிறப்பை ஒரு தோசமாகச் சொல்லி இவன் மனதைத் துன்ப்பப் படுத்துவதுடன் கோபத்திற்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாக்குவதை கதாசிரியை சம்பவங்கள் ஊடாக சொல்லிக் கதையை நகர்த்துகிறார்

கரு நாக்கு, நாகதோசம் என்ற பேச்சுக்களும் அவனைத் துன்புறுத்தியதை வாசிக்க மனது நோகிறது. இத்தகைய மூட நம்பிக்கைகளிலிருந்து என்றுதான் எமது சமூகம் விடுபடும் என்ற ஏக்கம் தொற்றுகிறது இக் கதையைப் படித்த போது.

ஒரு ஈழக் கறுப்பன் செய்த காதல் என்பது புகுந்து நாட்டில் வெளிறாட்டுப் பெண்ணை ஏமாற்றி வாழ்ந்து விட்டு கைகழுவிவிடும் நயவஞசகத்தை தோலுரித்துக் காட்டும் கதை.

இப்படியாக ஒவ்வொரு கதையும் எமது வாழ்வைப் பேசுகிறது. உன்னதங்களை மட்டும் பேசாமல் ஏமாற்றுகள் நயவஞ்சகங்களையும் பேசுகிறது.

யதார்த்தமான கதைகள். விழங்க முடியா முடிச்சுகள் கிடையாது. எம் மக்களின் மற்றுமொரு முகத்தைக் காட்டும் கதைகள் எனலாம்
நீங்களே படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தையும் பகிரலாமே

Dheepanஐந்து வருடங்களுக்கு முன்னர் வந்த பிரான்ஸ் + தமிழ் படம். 

முன்பு பார்க்க முயன்றும் முடியவில்லை.  கொரோனா தந்த கட்டாய ஓய்வில் இப்போது  இணையத்தில் (Netflix) பார்க்க கிடைத்தது. 


எமது எழுத்தாளர் Shoba Sakthi நடித்ததுடன், கதையமைப்பு மற்றும் உரையாடலில் உதவியதால் அதிகம் கவனம் பெற்றது.


அவயங்கள் சிதைந்து இறந்து கிடக்கும் பிணக் குவியல்களுடன் திரைப்படம் ஆரம்பமாகிறது. பனை ஓலைகளால் மூடப்பட்டு அவை எரிக்கப்படுகின்றன.
ஆனால் இது இறுதி யுத்தம் பற்றிய படம் அல்ல. யுத்த இறுதியில் நாட்டில் இருக்க முடியாது சட்ட விரோதமாக புலம் பெயர்பவர்கள் எதிர் கொள்ளும் நாளாந்த பிரச்சினைகள் பற்றியது.


சிவதாசன் ஒரு விடுதலை போராளி. அவன் தீபன் என்ற இறந்து போன ஒரு பிரெஞ்சுப் பிரஜை ஒருவரின் பாஸ்போட்டை பயன்படுத்தி, அதற்கு ஏற்ப சுற்றம் இழந்த ஒரு பெண்ணையும் வேறொரு எட்டு வயது  பெண் குழந்தையையும் தனது மனைவி குழந்தை எனக் காட்டி பிரான்ஸ் போய் சேர்கிறார்கள். 


கணவன், மனைவி, குழந்தை அல்லாத அவர்கள் எவ்வாறு ஒரு குடும்பம் போல போலியாக இயங்குகிறார்கள்,  பொய்யான உறவுகளுடன் மெய்யாக வாழ்ந்து காட்ட வேண்டிய சூழல். தீபன், யாழினி, இளையாள் என்ற பெயர் களோடு இறங்குகிறார்கள்.


குடியுரிமை பெற படும் சிக்கல்கள், சாவிக்கொத்துகளையும், பென்ரோச்சுகளையும் வீதியில் திரிந்து  இரண்டு யூரோ என கத்திக் கத்தி விற்று வயிறு நிறைக்கும் அவலம்.


பிறகு அவனுக்கு வீதி சுத்தம் செய்யும் வேலையும், அவளுக்கு மனநலம் குறைந்த முதியவரை பரிபாரிக்கும் வேலையும் கிடைக்கிறது.


போதைப் பொருள் இரு கோஷ்டிகளிடையே இவர்கள் சிக்கும் நிலை ஏற்பட, அதிலிருந்து தப்பிக்க துப்பாக்கியை மீண்டும் அவன் தூக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.


முன்னாள் போராளியான அவன் தன் அகதி நிலை காரணமாகவும், தான் பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ‘தன் குடும்பத்திற்காக’ கோபப்படாமல் அமைதி காக்கிறான். 


ஆயினும் ‘பொய்யான’ தன் மனைவிக்கு அந்த போதைப் பொருள் கும்பலால் ஆபத்து வந்த போது அவனால் பொறுத்துக் கொள்ள முடியாமையே அவன் மீண்டும் துப்பாக்கி தூக்க வைக்கிறது. 


ஷோபா சக்தி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யாழினியாக  கைலேஸ்வரி சிறினிவாசனும், இளையாளாக குளோடின்  வினாசித்தம்பியும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.


பிரபல இயக்குனர் Jacgues Audiard நெறியாள்கை. Rust and bone, A Prophet போன்ற படங்களை நெறியாள்கை செய்தவர். Cannes ல் Palme d’Or சிறந்த பட விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க வேண்டிய படம் என்பது நிச்சயம். 


மிக விரிவாக எழுத வேண்டிய படம், ஆயினும் எனது கைபேசியில் எழுதி கை உழைவதால் இவ்வளவு தான் முடிந்தது.

இது ஒரு உண்மை கதை. நாவல் வடிவில்.நதியா என்ற பெண், அதுவும் 15 வயது கூட நிரம்பிய அந்த சிறுமி தனது தந்தையாலேயே தங்கள் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். காரணம் உடலுறவு  அல்லாத பாலியல் செயல்பாட்டில் விளையாட்டு தனமாக ஈடுபட்டுள்ளாள் என்பதற்காக.

கணவனை எதிர்த்தாள் போன்ற குற்றங்களுக்காக பெண்ணை, கல் எறிந்து கொல்லப்படுவதும், வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருட்டறையில் பூட்டப்படுதும் அந்த சமுதாயத்தின் கேள்விக்கு உட்படுத்தப்படாத நடைமுறைகள், 


சுல்தானா என்ற ஒரு இளவரசி தனது வாழ்விலும் வேறு சவூதி அரேபிய பெண்களுக்கும், பெண்கள் என்ற ரீதியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், சந்தித்த ஓரவஞ்சகங்களையும் சொல்லுவதுடன அதற்கு எதிராக போராட முயல்வதுமே இந்த நூல். 
அதில் தோற்றுளா வென்றாளா என்பதை நூலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.  


சுல்தானாவின் சகோதரி பதினாறு வயது மட்டுமே. இத்தாலி சென்று ஓவியம் கற்க வேண்டும் என்றும், திரும்பி வந்து கலைக்கூடம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறாள். 


திடீரென அவளது தகப்பன் அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்; அவளது எதிர்ப்புக்கு மத்தியில். மணமகனுக்கு வயது 65. ஏற்கனவே இரண்டு மனைவிகள். இவள் மூன்றாவள் ஆகப்போகிறாள். அவளது தகப்பனைவிட மணமகன் முதியவர். 
மகளது எதிர்ப்புகளை மறுத்து அவரை மணமகனாக தேர்ந்தெடுத்தற்கு காரணம் அவர் தனது தொழில் வளர்ச்சிக்கு உதவுவார் என்பதேயாகும்.


மறுத்த அவளுக்கு ஊசி மருந்து ஏற்றி அரை மயக்க நிலையில் வைத்து திருமணம் செய்து வைக்கிறார்.


எட்டு வயதுதான் சிறுபெண்ணை இவளது தமையனும் அவனது நண்பனும் சேர்ந்து குருதி கொட்டக் கொட்ட பாலியல் வன்முறை செய்கிறார்கள். தகப்பனாருக்கு சொல்வோம் என்று இவள் சொல்ல அவர்கள் சிரிக்கிறார்கள். காரணம் தகப்பனார்தான் பணமும் விலாசமும் கொடுத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.  


ஆண் பிள்ளைகளை பாசத்துடன் வாரிசாக வளர்ப்பதும், பெண் பிள்ளைகள் வேண்டா வெறுப்பாக   வளர்ப்பதும் அங்கு வழமை.
ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் அவளை விவாகரத்து செய்துவிடுவது சாதாரணம்.
பெண்களுக்கு எதிரான, அவர்களை இரண்டாம் தரப்பு பிரஜைகளாகி நடத்துவதை அறியும் போது கோபமும், கவலையும் கொண்ட உணர்வு எழுகிறது இந்த நாவலைப் படிக்கும் போது.

பெண்களுக்கு எதிரான இவ்வளவு கொடுமையும் மதத்தின் பெயரால் செய்யப்படுகிறது. ஆனால் மதம் அவ்வாறு சொல்லவில்லை. தீவிர மதவாதிகளின் பிழையான புரிதல்களே காரணம் என்பதை நூலின் ஊடே புரிந்து கொள்கிறோம்.


1965 ற்கும் 1985 ற்கும் இடைப்பட்ட காலத்தில் சவூதி அரேபியாவின் மன்னராட்சி காலத்தின் உண்மை நிகழ்வுகள் மையமாக வைத்து, பெயர்களை மாற்றி எழுதப்பட்டுள்ளது. 
உண்மையான பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன. இல்லையேல் அவள் கண்டு பிடிக்கப்பட்டு கடுமையான தண்டனைக்கு  ஆளாக்கப்படுவாள்.


 1988 ல் முதல் முதலாக இது எழதப்பட்டது. நான் படித்தது இரவல் புத்தகம்தின். 1995 ல் வெளியான மலிவுப் பதிப்பு

Unda உண்ட மலையாளப் படம்

கொரோனா தந்த கட்டாய ஓய்வில் இணையத்தில் பார்த்த மற்றொரு படம் இது.

வட இந்திய சத்தீஸ்கரில் நடக்கும் தேர்தலின் போது மம்முட்டி தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று பாதுகாப்பு பணிக்காக கேரளாவில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் இருக்கும் காட்டுப் பகுதிக் கிராமம் ஒன்றிலுள்ள வாக்களிப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகி, இவர்கள் பணி செய்ய நேர்கிறது.

இவர்களிடம் போதிய ஆயுதங்கள் கிடையாது. மாவோயிஸ்ட் கள் எப்போது தாக்குவார்கள், ஆயுதங்கள் போதிய அளவு இல்லாததால் அதை எதிர்கொள்வது எப்படி என்ற மன உளைச்சல் இவர்களை ஆட்கொள்கிறது.

திருவிழாவில் வெடி வெடித்தால் கூட அதனை மாவோயிஸ்ட் தாக்குதல் என எண்ணிப் பயந்து, உள்ள துப்பாக்கி ரவைகளைக் கூட வீணடித்து விடுகிறார்கள்.

மொழி தெரியாத ஊர், நீருக்குக் கூட தட்டுப்பாடான பகுதி, வறிய மக்கள். அதற்கிடையே இந்த பொலிஸ் குழுவில் உள்ளவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள், முரண்பாடுகள். இவற்றை எதிர்கொள்ள மம்முட்டி எடுக்கும் முயற்சிகள் என ஒரு விரிந்த பரிமாணத்தை காட்சிப்படுத்து கிறார்கள்.

அவர்களது குடும்ப பிரச்சினை களின் மன உழைச்சல்களால் கடமையில் தாக்கத்தை ஏற்படுத்துவது மற்றொரு புறம்.

தேர்தல் அமைதியாக நடக்கிறது. ஆனால் அது தேர்தலைக் குழப்புவார்களோ என எதிர்பார்த்த மாவோயிஸ்டுகளால் அல்ல என்பது எதிர்பாராத திருப்பம்.

இது ஒரு அக்சன் ்படம் அல்ல. சாகச கதாநாயகனாக இன்றி, சராசரி மனிதனாக மம்முட்டி நடிக்கிறார். ஆரவாரமற்ற அமைதியான நடிப்பு.

கானகக் காட்சிகள், இரயில் பிரயாணம் என அனைத்தும் ரசிக்கும்படி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. சுஜித் புருஷன் ஒளிப்பதிவும் , பிரசாந்த் பிள்ளையின் இசையும் எங்கிருந்து, எப்போது மாவோயிஸ்ட் கள் தாக்குவார்கள் என்ற பயம் உணர்வை தொடர வைக்க உதவுகின்றன.

காலித் ரஹ்மானின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது.

காதல், சண்டை, திகில் என்ற வழமையான வாய்ப்பாடுகளில் இருந்து சற்று விலகி நின்று ரசிக்க வைக்கிறது.

வாழ்வின் நெருக்கடியான ஒரு தருணத்தின் கதை

இமையத்தின் ‘செல்லாத பணம்’

இரண்டு நாட்களாக அழுது தீர்க்க முடியாத துயரில் மூழ்கித் திணறிக் கொண்டிருந்தேன். ரேவதியின் தகப்பன் நடேசன், தாய் அமராவதி, அண்ணன் முருகன், அண்ணி அருள்மொழி இவர்களுடன் ஜிப்மர் மருத்துவமனையின் எரிகாயப் பிரிவின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வாசலில் பசியையும் தாகத்தையும் மறந்து நின்று, அவர்கள் துயரில் பங்காளியாக இருக்க நேர்ந்தது. அவர்களது கோபமும் ஆற்றாமையும் கூட என்னையும் ஆட்கொண்டிருந்தது. கணவன் ரவியை அவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைக்க வேண்டும் போலிருந்தது.

220 பக்கங்களைக் கொண்ட இமையத்தின் நாவல் செல்லாத பணம். பணம் வாழ்க்கைக்கு அவசியமாக இருந்த போதும் கூட அது எல்லாத் தருணங்களிலும் நித்திய வாழ்வில் பயன்படுவதில்லை என்பதையே நாவலின் தலைப்பு சுட்டுவதாக இருந்தபோதும் அந்த நாவல் எங்களுக்கு கடத்தும் வாசிப்பு அனுபவம் பரந்தது. உள்ளத்தை ஊடுருவி அதிலும் முக்கியமாக வாழ்வின் துயர் மிகு தருணங்களில் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளையே இலக்கியமாக்கியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

தமிழ் சமூகத்தில் பெண்கள் எவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தப்பகிறார்கள், குடும்ப வன்முறைக்கு ஆளாகுகிறார்கள். இருந்தபோதும் குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவற்றையெல்லாம் மூடி மறைத்து மௌனம் காக்கிறார்கள். மன்னித்து தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளையே காப்பாற்றியும் விடுகிறர்கள் என்பதை நித்தம் காணமுடிகிறது. ஆனால் இந்த நாவலானது அதற்கும் அப்பால், தீக்குளிப்பிற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை ஊடாக துயரத்தின் ஆழத்தை ஆணி அடித்தாற்போல காட்சிப் படுத்துகிறது.

எஜ்ஜினியரிங் படித்த வசதியான ஹெட்மாஸ்டரின் மகளான அவள் பர்மா பஜாரைச் சார்ந்த ஆட்டோ ஓட்டினரை காதலிப்பதும், பெற்றோர்கள் மறுப்பதும் அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதும், அதனால் வேறு வழியின்றி அவளை அவனுக்கு கட்டிக் கொடுப்பதுமான கதையின் முன்பகுதி 20 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிறது. மிச்சம் முழுவதும் அவள் மருத்துவமனையில் கிடக்கும் போது நடக்கும் கதைதான். அதுவும் பெரும்பாலும் உரையாடல் ஊடாக. அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல்கள்.

கதையில் திடீர் திருப்பங்கள் கிடையாது. ஆச்சரியங்கள் காத்திருக்கவி;ல்லை. ஆனால் ஒரு சிறிய கேள்வி கதை முழுவதும் தொக்கிக் கொண்டே நிற்கிறது. தீக்குளிப்பு தற்செயலாக நடந்ததா அல்லது கணவன் மூட்டிவிட்டானா என்பதே அது. இதற்கு எந்த முடிவையும் சுட்டிக்காட்டாமலே நாவல் முடிவடைகிறது. ஆனாலும் கூட ரேவதியினதும் அவளது குடும்பத்தினரதும் கண்ணீரோடு எங்களை கண்ணீரையும் கலக்க வைப்பது நாவலின் இறுதிவரை தொடர்கிறது. இதுவே அப் படைப்பின் வெற்றி எனலாம்.

மருத்துமனையின் தீக்காயப் பிரிவின் வேறு வேறு பகுதிகள், எத்தனை பேர்ச்சன்ட் தீக்காயப் பாதிப்பு, அதன் பாதகங்கள் எவ்வாறானவை போன்ற விபரங்கள். அவசரசிகிச்சை பிரிவு, அதன் செயற்பாடுகள். மருத்துவர்கள் தாதியரின் பணிகள்;, நோயாளிகளின் உறவுவினர்களடானான அவர்களது அணுகுமுறைகள் என அந்த மருத்துமனையின் இயக்கத்தை முழுமையாக அறிந்து கொள்கிறோம். அங்கு மரணங்கள் மலிந்து கிடக்கின்றன. அடிக்கடி தீக்குளிப்புக்கு ஆளானவர்களை அம்புலனஸ் வண்டிகள் ஏற்றி வருவது போலவே, இறந்த உடல்களை எடுத்துச் செல்ல பிரேத காவு வண்டிகள் வருகின்றன.

கண்ணீரும் கவலையும் ஆழ்ந்தகன்ற சமுத்திரம் போல நீக்கமற நிறைந்திருந்த போதும் கன்ரீனுக்கு சென்று வந்தே உறவினர்கள் தங்கள் உயிரைத் தக்கவைப்பதையும் உணர முடிகிறது.

நோயாளிகளைப் பார்ப்பதற்கு காத்திருக்கும் உறவினர்களின் உரையடல்கள் ஊடாக பலவித தகவல்கள் வருகின்றன. நோயால் துடிக்கும் பாத்திரங்களின் வாயிலாக அன்றி பார்த்திருப்பவர்களின் கூற்றாக உயிரின் வதை சொல்லப்படும்போது நெருப்பில் போட்ட நெய்யாக மனம் உருகிக் கரைகிறது. இமையத்தின் சொல்லாட்சியால் அந்தக் களத்தில் நாமும் ஒரு பாத்திரமாகவே மாறிவிடும் மாயவித்தை அரங்கேறுகிறது.

கணவனான ரவி, ரேவதியின் மச்சினியான அருள்மொழியுடன் பேசும் பகுதி முக்கியமானது. எல்லோராலும் திட்டப்பட்டு கெட்டவன் என ஒதுக்கப்படும் ரவியின் மனதில் என்ன இருந்தது என்பதைக் காட்டும் அருமையான பகுதி. கெட்டவன் எனத் தூற்றபடுபவன் மனதிலும் பல ஆதங்கங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இமையத்தின் கதை சொல்லும் ஆற்றல் நாம் அறியதது அல்ல. இருந்தபோதும் அதை இந்த நாவலை மிக அடர்த்தியாக அதே நேரம் உணர்வுகள் தோய்ந்ததாக சொல்லியிருப்பது வியக்க வைக்கிறது. காலப்பாய்ச்சல் ஊடாக ஒரு பெரிய களத்தை அங்கும் இங்கும் நகர்த்தி, உயிர்த்துடிப்புடன் வடித்திருப்பது நயக்க வைக்கிறது.

அண்மையில் பல நாவல்கள் மற்றும் சிறுகதை நூல்களைப் படிக்க முடிந்தது. ஆனால் இதற்கு இணையாக எதையும் சொல்ல முடியவில்லை.

நூல்:- செல்லாத பணம் (நாவல்)

நூலாசிரியர்:- இமையம்

வெளியீடு க்ரியா

CreA, No2,17th East Street, Kamaraj Nagar, Thiruvanmiyur,  Chennai 600 041,

Phone 7299905950

எம்.கே.முருகானந்தன்.

0.00.0

சாந்தியின் மறு உருவம் பாலா சேர்

 

வாழ்வின் வசந்தங்கள் சட்டெனக் கருகி விழுந்தது போலாயிற்று. எமது நண்பர்கள் குழுவினரிடையேயான குதூகலங்களும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான சந்திப்புகளும், பகிடிகளோடு இணைந்த அனுபவப் பகிர்வுகளும் திடீரென முற்றுப்புள்ளியிடப்பட்டு முற்றாக முடக்கப்பட்டன. ஒரு இனிமையான சகாப்தத்தின் முடிவு மூர்க்கத்தனமாக எம் மீது திணிக்கப்பட்டது. எமது நட்பு வட்டத்தில் மட்டுமின்றி இன்னும் பல பல நட்பு மற்றும் உறவு வட்டங்களும் அக் கணத்தில் அவ்வாறே நிர்க்கதியான நிலையை அடைந்ததாக உணர்ந்தார்கள்.

அதற்குக் காரணமானவரோ இவை எவை பற்றியும் அலட்டிக்கொள்ளாது தனது வழமையான புன்னகை மறையாத சாந்த வதனத்துடன் அமைதியாகக் கிடந்தார். ஆம். பாலா மாஸ்டர்தான்.

ஆம் மறக்க முடியாத துயர் தினம். ஜனவரி 31ம் திகதி மாலை அந்த துயர் செய்தி எங்களை அடைந்தது.

அது அதீத அதிர்ச்சி அளித்த சம்பவம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் அவரை அவரது வீட்டில் சந்தித்து பலதும் பத்தும் கதைத்து நிறைந்த மனதுடன் வந்திருந்தேன். எந்தவித உடல்நலக் கேட்டுக்கான அறிகுறிகளையும் மருத்துவனான என்னால் அவரில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

‘நேற்று மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததைக் கண்டேன். சிரித்து தலையசைத்து சென்றார். அது இறுதித் தலையசைப்பு ஏன்பதை என்னால் புரிந்துகொள்ளவில்லையே’ எனச் சொல்லி குமுறி அழுதார் நண்பர் ஒருவர்.

‘அன்று கூட வங்கிக்கு வந்திருந்தாரே’ என ஆச்சரியப்பட்டார் வங்கி ஊழியர் ஒருவர்.

மற்றவர்கள் மட்டுமின்றி பாலா சேர் கூட எதிர்பார்த்திருக்காத மரணம் அது. படுக்கை பாயில் கிடக்காமல், நோய் நொடியில் துடிக்காமல், மற்றவர்களுக்கு பாரமாகக் கிடக்காமல் மரணவேவன் அவரை அமைதியாக ஆட்கொண்டான். கள்ளமில்லாத வெள்ளை மனம் கொண்ட அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்றே சொல்ல வேண்டும். ஆனால் எங்களால்தான் அவரது பிரிவை ஜீரணிக்க முடியவில்லை.

பாலா சேர் நண்பர்களான எங்களுக்குத்தான் பிரியமானவர் என்றில்லை. மாணவர்களின் பேரன்பிற்கும், அபிமானத்திற்கும் மரியாதைக்கும் என்றுமே உரியவராக இருந்தார். பாலா சேரின் பாடம் எப்ப வரும் என்று மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். தமிழும் சமூகக் கல்வியும் அவரிடம் மண்டியிட்டு சேவகம் செய்யும். அவர் அவற்றை மாணவர்களுக்கு விளக்கும் முறையில் அவர்கள் வாயில் இலையான் புகுவது கூட தெரியாதவாறு லயித்துக் கிடப்பார்கள்.

கடுமையான தமிழில் இருக்கும் இலக்கியப் பாடல்களை அவர் விளக்கும் முறை அலாதியானது. அந்த நேரத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு சினிமாப் பாடலை உவமானம் வைத்து பாடலுக்கான கருத்தை விளக்கும் போது விளங்காதவை விளங்குவது மட்டுமின்றி வாழ்நாளில் மறக்க முடியாதவாறு ஊறிக் கிடக்கும்.

தான் படித்த, படிப்பித்த ஹாட்லிக் கல்லூரில் மிகுந்த பற்றுடையவர். இளைப்பாறிய பின்னரும் கூட அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு பற்றத் தவறுவதில்லை. அண்மையில் நடந்த சம்பவம் இது. நிகழ்வுகளுக்கு இடையில் உணவு வேளை. ஆனால் உணவு தயாராகவில்லை. ‘சேர் சாப்பாடு தயாராகும் வரை நீங்கள்தான் ஏதாவது பேசி கூட்டத்தை தாக்காட்ட வேண்டும்’ என்ற கோரிக்கை இவரிடம் முன்வைக்கப்பட்டது. ‘தாக்ககாட்ட வந்தவன்’ தான் என்பதையே சொல்லி நகைச்சுவையோடு கூட்டத்தை ஆரம்பித்து கலகலக்க வைத்து பசியை மறக்கடிக்க வைத்துவிட்டார்.

நேரத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பேசுவதில் வல்லவர் அவர். கூட்டம் வயிறு வெடிக்கச் சிரித்து மகிழ்ந்து நிற்கும். யுத்த காலத்தின் போது நண்பர்கள் நாம் இணைந்து நடத்திய அறிவோர் கூடல் நிகழ்வுகள் அவரில்லாவிட்டால் அவ்வளவு கலகலப்பாக இருந்திருக்காது.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவரே சாந்தியின் மறுஉருவம் அல்லவா?

எம்.கே.முருகானந்தன்.

எறி குண்டு வீசி
நீசர்களை அழிப்பதில்
ஏன் இன்னும் தயக்கம்
அரச யந்திரத்துடன்
வம்பு ஏனெனத் தயக்கமோ?

ஒடுக்கபட்டுக் கொண்டே
இருப்பவர்களின்
ஈனக் குரல் கேட்கவில்லையா
அன்றி
கேட்காதது போல
பாவனையோ !

சம்பந்தரும் சுந்தரரும்
பாடினர் பதிகம்
சரித்திர நாயகன் இராவணன்
துதித்த தலமும் அதன்
சூழலும்,
கிழக்கு மண்ணும்
கபளீகரமாகிறதே
மாற்று இனத்தவரிடம்..
அரச அனுசரணையுடன்..

மண்ணின் அரசியல்வாதிகளும்
கண் பொத்தி காதடைத்து
வாழா மடந்தையானரே
கடைசி மனிதனும்
ஓரடி நிலமும் பறிபோன பின்தான்
வாய் திறப்பாயோ.

பொறுத்து போதும்
வீசி எறி
கணைகளை
நீசர்களை அழி
மண்ணின் மைந்தர்களை
வாழ வை
தலை நிமிர்ந்து முன் செல்ல
பாதையைத் திற…
நீசர்களை அழித்து…..

( கோணேசர் கோவிலுக்கு செல்லும் வழியில் கோட்டை வாயிலில் எடுத்த படம்.)

எம்.கே.முருகானந்தன்